“என்ன பார்வதி உன்னோட இரண்டாவது மருமகள் கூடவும் சண்டையாமே! நீ இப்படி எல்லாம் பண்ண மாட்டியே! இப்ப பாரு அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு உன்னை வெளியில் அனுப்பிட்டாங்க!’
கடைத்தெருவில் பார்த்துக் கேட்டாள் கோமதி!
“அதுக்குதான் பார்வதி சண்டை போட்டேன்!’
“எதுக்கு?’ புரியாமல் கேட்டாள் கோமதி!
“என்னோட மூத்த மருமகள் நல்ல பணக்காரி! இரண்டாவது மருமகள் கொஞ்சம் இல்லாத குடும்பம். அதனால் பெரியவள் சின்னவளை ரொம்பவே அலட்சியப்படுத்தினா! இதனால் பசங்களுக்குள்ள மனஸ்தாபம் வந்துருச்சு! இவங்களை ஒண்ணு சேர்க்க எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தேன். முடியலை!
அதுதான் ரெண்டு பேருக்கும் பொது எதிரியா ஆயிட்டேன்.
இப்போ அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டாங்க! பசங்களும் சந்தோசமா இருக்காங்க! என்ன தனியா இருக்குறது கஷ்டமாதான் இருக்கு!
ஆனா, பசங்க சந்தோசமா இபுருக்குறதைப் பார்க்குறப்போ மனசு நிறைஞ்சுருது!’
சொல்லிவிட்டு போகும் பார்வதியை ஆச்சரியமாக பார்த்து நின்றாள் கோமதி!
– ப.உமாமகேஸ்வரி (அக்டோபர் 2011)