கணவர் அலுவலகம் சென்றபின் வீட்டை பூட்டிக்கொண்டு,அவசரம் அவசரமாக நான்கு வீடுகள் தள்ளியிருந்த தனது தோழி நித்யா வீட்டுக்கு சென்றாள் மல்லிகா.
வாங்கக்கா,என வரவேற்றாள் நித்யா. உனக்கு சேதி தெரியுமா? அந்த கோவிந்தராசு வீட்ல சொத்து தகராறுல அடிதடி சண்டையாகி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டுதாமே? என ஊர்வம்பை ஆரம்பித்து வைத்தாள்.
ஆமாக்கா,நான் கூட கேள்விப்பட்டேன் என்றாள் நித்யா.
அக்கா உங்களுக்கு தெரியுமா? அந்த கல்யாணி அவளது மாமியாரை வீட்டைவிட்டு தொரத்திவிட்டுட்டாளாம். அவ புருஷன் பொண்டாட்டி பேச்சை கேட்டுக்கினு அம்மாவை கொண்டுபோய் முதியோர் இல்லத்துல விட்டுட்டானாம்., அந்த அம்மா பாவம் என்றாள்.
அவளுக்கு நல்லா வேணும், சரியான ராங்கிக்காரி என்றாள் மல்லிகா.
நித்யா உனக்கு தெரியுமா 3வது தெரு புஷ்பா புருஷன் தான் வேலை பாக்கற கம்பெனியில ஏதோ தப்பு பண்ணிட்டானாம், வேலைய விட்டு எடுத்துட்டாங்களாம், அந்த புஷ்பா கைபுள்ளய வச்சுக்கிட்டு என்ன பண்ண போவுதோ, பாவம் என்றாள்.
சரி, விடுங்கக்கா நமக்கு எதுக்கு ஊர் வம்பு என்றாள் நித்யா !
ஏன்கா, நைட் டூட்டி முடிந்து மலர் வீட்டுக்கு வந்துட்டாளா? -நித்யா
இல்ல, இன்னும் வரல என்னனு தெரியல, கவலையா இருக்கு -மல்லிகா.
கவலை படாதீங்க, வந்துடுவான்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, மல்லிகாவின் மொபைல் ஒலித்தது, போனை எடுத்து ஹலோ என்றவுடன், எதிர்முனையில் “அம்மா, நான் மலர் பேசுறேன்,என்னுடன் வேலைபார்க்கும் ஒருவரை நான் காதலித்தேன், அவர் மிகவும் நல்லவர், ஆனா, வேறு சாதிய சார்ந்தவர் – நீயும்,அப்பாவும் இந்த கல்யாணத்துக்கு கட்டாயம் ஒத்துக்க மாட்டிங்கனு தெரியும். அதனால, இன்னைக்கு காலைல நாங்க ரெண்டுபேரும் திருப்பதியில திருமணம் செஞ்சுக்கிட்டோம் எங்கள தேட வேண்டாம், அப்பாகிட்டயும் சொல்லிடு என சொல்லிவிட்டு, போனை துண்டித்தாள் -மலர்.
ஆங்… என்றபடியே மயங்கி சரிந்தாள். மல்லிகா! திடீர்னு மல்லிகா ஏன் மயக்கமானாள்? என புரியாமல் நித்யா அதிர்ச்சியானாள்.