“என்னங்க எனக்கொரு சந்தேகம்” தடதடக்கும் ரயிலில் ஜன்னல் வழியே இயற்கை ரசிக்கும் தன் கணவனிடம் மெதுவான குரலில் கேட்டாள் செண்பகம்.
முகத்தில் கேள்விக்குறியுடன் திரும்பி “என்ன?” என்றார் ராதாகிருஷ்ணன்.
“நம்மள வழி அனுப்ப வந்த இரண்டு பசங்களுக்கும் நீங்க பணம் கொடுத்தீங்க இல்ல”
“ஆமா அதுக்கென்ன?”
“மூத்த பையன் வேலையில சேர்ந்து இரண்டு மாசமாச்சு அவனுக்கு 500 ரூபா கொடுத்தீங்க, ஆனா வேலை தேடிகிட்டு இருக்கற நம்ம சின்னவனுக்கு 100 ரூபாதான் கொடுத்தீங்க, எனக்கு புரியலங்க ஏன் அப்படி செஞ்சீங்க?” தன் சந்தேகத்தை கேட்டாள் செண்பகம்.
“செண்பகம், மூத்தவன் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாசமாச்சுல்ல அவனுக்கு பணத்தோட அருமை புரிஞ்சிருக்கும். 500 ரூபா கொடுத்தாலும் அளவாதான் செலவு செய்வான்.ஆனா இளையவனுக்கு இது முக்கியமான பருவம். வேலை தேடும்போது அதிகமா பணம் கொடுத்தா,அப்பாதான் பணம் தர இருக்காரேங்கற எண்ணம் வந்துடும். அதுக்குதான் அவனுக்கு கம்மியா கொடுத்தேன்” தீர்க்கமான குரலில் சொல்லும் தன் கணவனை கண்டு வியந்தாள் செண்பகம்.
– Friday, March 21, 2008