உள்ளம் உன் வசமானதடி

3
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2023
பார்வையிட்டோர்: 11,084 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

காரில் வந்து வீட்டு வாசலில் இறங்கியவளை, அந்தத் தெருவே வியப்புடன் கவனிக்க, தர்மசங்கடத்துடன் உள்ளே வந்தாள் மிருணாளினி.

“நீ ஏன் அவங்க காரிலே வந்தே? ஒரு ஃபோன் பண்ணியிருந்தா நான் வந்து உன்னை அழைச்சிட்டு வந்திருப்பேன் இல்லை?”

சினத்துடன் கேட்டபடி வாசலுக்கு வந்த தங்கவேலுவை சிறு கோபத்துடன் ஏறிட்டவள், பதிலொன்றும் கூறாமல் வேகமாக உள்ளே சென்றாள்..

டிரைவர் காசி, உள்ளே வந்து லிங்கத்திடம் விபரத்தைக் கூறிச் செல்ல, தங்கவேலுவின் முகம் சுருங்கியது.

தொடர்ந்து வந்த நாட்கள், சோகங்களையும், வேதனைகளையும் மெல்ல மெல்லத் தன்னுடன் எடுத்துச் செல்ல, வீடு மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தது.


மிருணாவிற்குத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தன.

கடைசிநாள் பரிட்சை முடிந்து, கனத்த இதயத்துடன் அவள் வீட்டிற்கு வந்த போதுதான், பெரியவர் சுந்தர பாண்டியனும், அவர் மனைவி தமிழரசியும் அங்கு வந்திருப்பது தெரிந்தது.

அவள் அவர்களை வரவேற்று வணங்கிவிட்டு உள்ளே சென்றாள்.

திருமணத்திற்குத் தேதி குறிக்கவும், அதைப்பற்றிக் கலந்து முடிவெடுக்கவும், அவர்கள் வந்திருப்பதாக மீனா கூறினாள்.

முகிலனைக் கணவனாக ஒப்புக்கொள்ள மனம் மறுத்தாலும், குடும்பத்தின் நிம்மதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், அமைதியாக இருந்தாள் அவள்.

இன்று அனைவரும் உடைந்து போயிருக்கின்ற நிலையில், தன்னால் அவர்களுக்கு இந்தக் கல்யாணத்தின் மூலம் சிறு சந்தோஷத்தையாவது தர முடிந்தால் அதுவே போது மென்று தோன்றியது.

ஆனால், திருமணத்திற்கான வேலைகள் வேகமாக நடக்க. ஆரம்பித்தபோது, அவளறியாமல் அடிவயிற்றில் ஆயிரம் பயத்தும்பிகள் சிறகடிக்க ஆரம்பித்தன.

ஒரு வேலையிலிருக்கும் தங்கவேலுவே பெண்கள் விஷயத்தில் இப்படியென்றால், பெரிய பண்ணையாரின் மகன் எப்படியிருப்பானோ என்ற ஒருவித பயம் நெஞ்சிற்குள் எட்டிப் பார்த்து, அவளை அலைக்கழிப்பதாய்!

சொக்கலிங்கத்தின் சோகம் புரிந்து, திருமணம் சம்பந்தப்பட்ட வேலைகளை எல்லாம் முகிலனுடைய வீட்டினரே ஏற்றுச் செய்தனர்.

சீர், நகைகள் மற்ற விஷயங்களை, அவரால் முடிந்த அளவு செய்யும்படிக் கூறிவிட்டார்கள்.

திருமண நாள் நெருங்க நெருங்க மிருணாவை ஒருவித பதட்டம் தொற்றிக் கொண்டது.

எதிலும் பிடிப்பின்றி இருந்தாலும், தங்கையின் திருமணம் மீனாவின் மனதை மாற்றி, சிறு உற்சாகத்தை மீட்டுத் தந்திருந்தது.


அன்று மணமேடையில் முகிலனுக்கு அருகில் அமர்ந்து, அவன் அணிவித்த திருமாங்கல்யத்தை ஏற்றுக்கொண்ட போதும், வண்ணக் கனவுகள் எதுவும் தீண்டாத மௌனத்தின் பிடியில் உறைந்திருந்தாள் அவள்.

முதலிரவுக்கான சடங்குகள் முடிந்தன.

பளிங்குச் சிற்பமாய் பூமிக்கும் வலிக்காமல் மென்மையாகப் பாதம் பதித்து மிருணாளினி அவனுடைய அறைக்குள் வந்தபோது, முகிலனுக்கோ அவளுடைய கால் தடங்கள் ஓவியங்களாய்!

ஒரு பூஞ்சோலையே புடவையணிந்து எதிரே வந்ததைப் போல் ஒரு சிலிர்ப்பு அவனுக்குள்!

விழிகள் அவளை விட்டு அகல மனமின்றி குறுகுறுப்புடன் அவளையே அளவிட்டன.

மெல்ல நிமிர்ந்த மிருணாவிற்கோ அவன் பார்வை, பெரும் மிரட்சியை வரவழைப்பதாய்!

அவளை விட்டு நொடியும் விலகாத, ‘என் உரிமை நீ’ என்ற ஆளுமையுடன் அவளைச் சிறைப்படுத்திய பார்வை, மனதை குலுங்கச் செய்தது.

அவள் சட்டென்று விழிகளைத் தழைக்க, ஒரு நொடி அவற்றில் பிரதிபலித்த பயமும் மிரட்சியும் முகிலனிடம் பெரும் யோசனையை வரவழைத்தன.

மெதுவாக அவளருகில் சென்றவன், “வா… வந்து உக்காரு” என்றான் மிருதுவான குரலில்,

அவள் தயக்கத்துடன் வந்து கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள்.

“பாத்து… கீழே விழுந்துடப் போறே!” என்றபடி, சிறு நடுக்கம் இழையோடிய அவளுடைய விரல்களிலிருந்து பால் சொம்பை வாங்கி, அருகிலிருந்த டீப்பாயில் வைத்தான் அவன்.

“என்ன… மேல படிக்கணும்னு சொன்னியாமே? எம்.எஸ்ஸி கெமிஸ்ட்ரிதானே… கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸில படிக்கலாம். ஏன்… என்னை நிமிர்ந்து பாக்க மாட்டியா? வெக்கமா…?”

அவன் மென்மையாகக் கேட்க – மிருணா இல்லையெனத் தலையசைத்தாள்.

“பின்னே…?” அவன் கேட்டவுடனே நிமிர்ந்தவளின் விழிகள் கண்ணீரை சுமந்திருந்தன.

“எனக்கு இதெல்லாம் பிடிக்கலை… பயமா இருக்கு!” என்றபோது மனதில் இனம் புரியாத ஒரு வலியெழத் துடித்துப் போனான் முகிலன்.

யோசனையுடன், “மிருணி… நான் உன்னை எந்த விஷயத்துலயும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன், இதை உன்னோட வீடா நினைச்சிக்க…. எதுவா இருந்தாலும் என்கிட்டே நீ தைரியமாக் கேக்கலாம்” ஆழ்ந்த குரவில் கூறினான்.

அதற்கும் அவளிடமிருந்து பதில் வராமல் போனது.

“சரி…நீ ரொம்ப டயர்டா இருப்பே… காலையிலிருந்து சடங்கு அது இதுன்னு ரொம்ப அலைக்கழிச்சட்டாங்க இல்லை படுத்துத் தூங்கு” என்றவுடனே சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

இந்த மென்மையான அனுகுமுறையை அவனிடமிருந்து தான் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளுடைய வியந்த விழிகள் கூறின.

“தேங்க்ஸ்!” என்றபடி கட்டிலின் ஓரத்தில் தன்னைக் குறுக்கிக் கொண்டு அவள் படுத்துக் கொண்டாள்.

மனதிற்குள் பெரும் ஏமாற்றம் வந்தாலும், ‘அவள் சிறு பெண்தானே.. மெதுவாகத்தான் அவளை மாற்ற வேண்டும்’ என்ற எண்ணம் வந்தது முகிலனுக்கு!

இருவருக்கும் நடுவில் சீனச்சுவராய் உணர்வுகள் எழும்ப, கட்டிலின் மறுபக்கம் படுத்து ஒரு பெருமூச்சுடன் கண் முடினான் முகிலன்.

உறக்கம் வராத அந்த இரவில், மனதிற்குள் பெரும் சல சலப்பாய், எண்ணங்களின் அலையடிப்புகள்.


மறுநாள் அவளுடைய வீட்டிலேயே வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

எல்லோரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டாலும், தங்கவேலு மட்டும் வன்மத்துடன் இருந்தான்.

அவன் கணக்கு வேறாக இருக்க, தங்கச்சிலையாக இருந்த மைத்துனியைக் கைநழுவவிட்டு விட்ட ஆத்திரம், மனதில் தீயாய் கனன்று கொண்டிருந்தது.

மூன்றாவது நாள், இருவரும் முகிலனின் வீட்டிற்கு வந்து விட்டனர்.

பழைய அமைப்புடன் அரண்மனை போன்ற அந்த வீடும், அதன் பிரம்மாண்டமும் அவளை வெகுவாய் பாதித்தன.

தங்கக் கூண்டிற்குள் அகப்பட்ட சிறு பறவையாய் மனம் தத்தளித்தது.

அங்கு வீட்டிலிருக்கும் நான்கு பேருக்கு. ஏழு வேலையாட்கள் இருந்தனர்.

மாமனாரிடம் ஒருவித பயமும் மரியாதையுமே எழ, மாமியாரும் ஏனோ அவளிடம் அதிகப் பேச்சின்றி ஒதுக்கமாகவே இருக்க, எவரிடமும் இயல்பாகப் பழக முடியவில்லை.

மறுநாள் காலையில் அவளை அழைத்தார் தமிழரசி.

“இங்கே எல்லா வேலைக்கும் ஆளுங்க இருக்காங்க…. உங்க வீடு மாதிரி எதுவும் வேலை செய்யத் தேவையில்லை.. முகிலனுக்கு எத்தனையோ பேர் பொண்ணு தரேன்னு நிறைய சீர் செனத்தியோட வந்தாங்க! ஆனா, இவன் தான் என்னவோ காணாததைக் கண்ட மாதிரி, நீதான் பொண்டாட்டியா வரணும்னு ஆசைப்பட்டான்.

“அவன் சந்தோஷத்துக்குத் தடையா இருக்க வேண்டா மேன்னுதான் நான் இதுக்கு ஒத்துக்கிட்டேன். அவனை நல்லா கவனிச்சுக்கணும். புரியுதா?”

உயர்த்திய குரலில் அவர் கூறியபோது “சரி அத்தை!” என்றபடி மௌனமாக அங்கிருந்து சென்றாள் மிருணா.

”என்ன… எங்கே போறே? போய் சமையல்காரம்மா கிட்டே காபி போட்டு வாங்கி, தம்பிக்கு எடுத்துட்டுப் போ!” என்று அதட்டி விட்டுத் தன் அறைக்குள் சென்றார் தமிழரசி

வீட்டில் இருக்கும் போதே கழுத்து நிறைய நகைகளுடன் அம்மன் வீதியுலா வருவதைப் போல் காட்சியளித்தவரைப் பார்த்தால் பயம் கலந்த வியப்பு வந்தது.

முதல் நாளே மனம் எதிலும் ஒட்டாமல் தவித்தது.

காபியுடன் மாடிக்குச் சென்றபோது. முகிலன் விழித்தெழுந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.

“காபி…” என்றவுடன் வாங்கிக் கொண்டு அதை மெதுவாகப் பருகியபடி, “உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

“பிடிக்கலைன்னா மாத்திடுவீங்களா?”

மனதில் மாயியார் விதைத்திருந்த கோபம், சட்டென்று வார்த்தைகளாய் அறுவடையாகிவிட பயத்துடன் உதட்டைக் கடித்தாள்.

“ஊஹூம்… வீட்டை மாத்த முடியாது! அதை விரும்பற மாதிரி, உன்னை மாத்திடுவேன்” ஆழ்ந்த குரலில் கூறினான் அவன்.

“ஓ… உங்க மேல அவ்வளவு நம்பிக்கையா?”

கேலியாகக் கேட்டவளிடம் “ஆமாம்.- வாழ்க்கையே நம்பிக்கையில்தானே இருக்கு. ‘நம்பிக்கைங்கறது மெல்லிய மலரைப் போல, வாடி விடக் கூடியதில்லை. அது இமய மலையைப் போன்றது. எவரும் அசைக்க முடியாது.’ அப்படின்னு மகாத்மா காந்தி சொன்ன அந்த வரிகள், எனக்கு ரொம்பப் பிடிக்கும்…

“அதனால, எனக்கு எந்த விஷயத்துலயுமே, என்னால முடியும்கிற நம்பிக்கை அதிகம்!” – என்றான் உறுதியான குரலில்.

சட்டென்று விழிகள் கூர்மை பெற, இவனுக்குக்கூட இப்படியெல்லாம் பேசத் தெரியுமாவென்ற பிரமிப்பு வந்தது. அவளுக்குள்!

அவளுடைய முகத்திலிருந்த எண்ணங்களை வாசித்து அறிந்தவன் “என்ன யோசனை? இவனுக்கு இதெல்லாம் கூடத் தெரியுமான்னு ஆச்சர்யமா இருக்கா? நான் நிறையப் படிப்டேன். உனக்கு போரடிக்கதுன்னா அதோ அந்த பீரோவைத் திறந்து பாரு! என் கலெக்ஷன்ஸ் அதிலே நிறைய இருக்கு. எடுத்துப் படிக்கலாம்” என்றபடி குளிக்கச் சென்றான்.

அவன் கூறியதை உடனே செய்ய விருப்பமின்றி கீழே இறங்கிச் சென்று சமையலறையில் உதவி செய்து கொண்டிருந்தபோது தமிழரசி அங்கு வந்தாள்.

“இங்கே என்ன செய்யறே? அங்கே முகிலன் தயாராகி வந்தாச்சு பாரு, அவனைக் கவனி! பெரிய இடத்திலிருந்து பொண்ணு எடுத்திருந்தா அதெல்லாம் தானே தெரிஞ்சிருக்கும். ஒண்ணுமில்லாத வீட்டில இருந்து வந்தா, இப்படித்தான்… சமையல் கட்டும் கையுமா நிக்க வேண்டியது தான்!” சுரீரென்று தைத்தன. வார்த்தை அம்புகள்!

மனம் கசங்கிவிடத் திரும்பியபோது, சமையல்காரம்மாவின் பரிதாபப் பார்வை இதயத்தைத் தைத்தது.

மௌனமாக ஹாலுக்கு வந்தபோது, வேதனையில் விழிக்குளம் ததும்பியது.

அப்போது எதிரில் வந்த முகிலனிடம் அந்தக் கோபமெல்லாம் திரும்பிவிட – இதற்கெல்லாம் அவன்தானே காரணம் என்று தோன்றியது.

“உங்களுக்கு ஏதாவது வேணுமா? உங்க அம்மா கேக்கச் சொன்னாங்க! அவங்க ஆசைப்பட்ட மாதிரி, பணக்கார இடத்துல பொண்ணு பாத்துக் கல்யாணம் பண்ணிட்டுருக்க வேண்டியதுதானே… நானா உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன்…? நீங்க தானே.” பட படவெனப் பொரித்தவளைக் கை மறித்து அடக்கினான்.

“உஷ் கொஞ்சம் அமைதியாப் பேசறியா? இது உங்க வீடு மாதிரிக் கிடையாது… சுத்தி நிறைய வேலைக்காரங்க இருப்பாங்க கவனமாய்ப் பேசணும்! எதுவாயிருந்தாலும் மாடியில போய்த் தனியாப் பேசலாம்.”

தணிந்த குரலில், ”அதைத்தான் சொல்றேன்… எங்க வீட்டு நிலைமை தெரிஞ்சும், ஏன் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க…நாங்க மிடில் கிளாஸ்தான்! சின்ன வீடுதான், ஆனா, அங்கே அன்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே நிறைஞ்சிருந்தது” என்றாள்.

“அப்போ இங்கே அப்படி இல்லைங்கிறியா…?”

அடிக்குரலில் கேட்டாலும், பெரும் சீற்றம் தெரிந்தது அவனிடம்!.

அவனுடைய முதல் கோபம் அவளை மிகவும் பாதித்து, இதயம் கசிந்ததால், இமைகளின் ஓரம் நீர்த்துளிகள் இனித்தன.

பதிலாக ஏதும் கூறாமல் வேகமாக மாடிக்குச் சென்று விட்டாள் அவள்.

யோசனையுடன் தன் தாயிடம் சென்றவன், ”அம்மா! ஒரு நிமிஷம் என் கூட வாங்க” என்று அவரை அறைக்குள் அழைத்துச் சென்றான்.

“என்னப்பா.?” என்று புரியாமல் கேட்டவரிடம், “மிருணாளினி சின்னப் பொண்ணும்மா… அவளுக்கு நம்ம வீட்டுப் பழக்கமெல்லாம் தெரியாது! எதுவா இருந்தாலும், மெதுவா சொல்லிக் குடுத்தாக் கத்துப்பா. நீங்கதான் அவளுக்கு எல்லாம் பழக்கி விடணும். புதுசு இல்லையா? அதான் மிரண்டு போயிருக்கா.”

முன்பு எதற்கெடுத்தாலும் கோபப்படுபவனின் இயல்பு இப்போது மாறி இருப்பது ஆச்சர்யத்தை அளித்தாலும், அது அவன் விரும்பி ஏற்றுக் கொண்ட மனைவியால் வந்ததோ என்ற கோபமும் எழுந்தது.

“ஏன்… உள்கிட்ட அவ என்னைப் பத்தி குறை சொன்னாளா?” எரிச்சலுடன் கேட்டார்.

“பாத்தீங்களா, அவ எதுவுமே சொல்லலை. நானாதான் கேக்கறேன். எந்தக் காலத்திலயும், நீங்க அவளுக்கு ஒரு அம்மாவா இருக்கணும். மாமியாரா இருக்கக் கூடாதுங்கறது. தான் என்னோட விருப்பம். அதான் முதல்லயே சொல்றேன்” – தாழ்ந்த குரலில் கூறினான் முகிலன்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

3 thoughts on “உள்ளம் உன் வசமானதடி

  1. இப்போ தான் முதல்முறையாக கதை படிக்கிறேன், நன்றாக இருக்கிறது இதன் அடுத்த பாகம் எப்பொழுது வரும்? அதை எங்கு வாசிப்பது?

    1. எங்களுடைய Facebook, Twitter, WhatsApp, Telegram வழியாக தொடர்பில் இருங்கள். அடுத்த அத்தியாயம் வெளியாகும் போது தெரிவிக்கப்படும். பொதுவாக 2 நாட்களில் வெளிவரும். மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *