உறவு, பந்தம், பாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2022
பார்வையிட்டோர்: 2,335 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும் கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்ட போது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ண முடியாதபடி எதிரே தன்னூர்ப் பெயர்ப்பலகை தன்னை வெறித்து நிற்பதைக் கண்டான். சமீபத்தில் பெரிய அளவில் நிர்மாணித்துக் கட்டப்பட்டிருந்ததால், தான் முன்பு பார்த்ததான எண்ணமே கொள்ள முடியாது தோன்றியதை ஜடமென வெகு நேரம் அவன் கண்டு நிற்கவில்லை. புறக்காட்சியில் மனது ஒருமையில் அனுபவம் கொள்ள, அனுமானம் கொண்டு, திகைப்பு நீங்கச் சிறிதுநேரம் ஆகியது போலும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே, ஊரை விட்டகன்றவன்; வெளியூர் வாசம் செய்து, வசதியில் திரும்பியவன், வசீகரமெனத் தோன்றிய, தன்னூர்ப் பாலிய கால வாழ்க்கையை நினைத்து, தன்னுடைய பிற்கால வாழ்க்கையையும் அங்கே கழிக்கத் திரும்பியவன். வீட்டை அடையும் வழிநெடுக ஒரு புதிய ஊர்ப்பிரவேசம் எனத்தான் அடிக்கடி தோன்ற இருந்தது. பழைய இடங்களில் புது வீடுகள் தோற்றமும், அங்காங்கே வெற்றிடங்களில் சிறுசிறு குடிசைகளும், மேலும் ஒரு பெரிய சினிமாக் கொட்டகை, அநேக ஹோட்டல்கள் எல்லாம் முன்பே இவனுக்கு அறிமுகமானதென, மௌனமாக வரவேற்க நின்றிருந்தன போலும். தன் வீட்டை அடைந்தான். வீட்டின் முன் அறை ஒன்றை மட்டும் தன் உபயோகத்திற்கென வைத்திருந்து, ஏனைய பாகங்களை வாடகைக்கு விட்டிருந்தான்.

வெகு நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த அறையைச் சுத்தம் செய்வித்து, குடியிருக்க வசதி செய்து, காலைக் காரியங்களை முடித்துக் கொண்டிருக்கும்போது, இவன் வருகையை அறிந்த இரண்டு நண்பர்கள் இவனைப் பார்க்க வந்தனர். திண்ணையில் அவர்களோடு அமர்ந்து கொண்டு தெருவையும் கவனித்தப்படிப் பேசிக் கொண்டிருந்தான். தான் இல்லாத கால, ஊர் நடப்புகள் என அநேக விஷயங்களை அவர்கள் சொல்லியும் இவன் கேட்டும் தெரிந்து கொண்டான். தன் தெருவே மாறியிருப்பதையும், ஜன நடமாட்டம் பெருகி இருப்பதையும் கண்டு கொண்டிருந்தான். மனது ஏதோ ஒரு வகையில் சஞ்சலம் அடைந்து கொண்டிருந்தது. இரண்டொரு நாள் வாழ்க்கையில், பழக்கத்தில், எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்பில் பேசிக்கொண்டிருந்தான். முக்கியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை மறந்தும், ஏதேதோ அது இதை விசாரித்துக் கொண் டிருந்தான். ஒரு நண்பனைப் பார்த்து ‘… அந்தக் கிழவி சௌக்கியமாக இருக்கிறாளா?’ என்று கேட்டபோது அவர்கள் சிரிக்கலாயினர், எதிரே தெருவில் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண், இடுப்பில் ஒரு குழந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். கையைப் பிடித்து நடத்தி அழைத்துப்போன மற்றொரு குழந்தையுடன், தன் வயிற்றிலும் ஒரு சிசுவைச் சுமந்தாளென ஒரு பூரண கர்ப்பிணி என அவள் தோன்றினாள்.

‘அதோ போகிறாள் பார் நீ கேட்ட கிழவி…’ என்று இவன் நண்பன் மேலும் சிரித்தான். இவன் திடுக்கிட்டு என்னவென்றதற்கு ‘நீ கேட்ட பாட்டியின் பேத்தி அவள் இறக்கும்போது இவள் பிறக்கவில்லை என நினைக் கிறேன்…’ என்றான். மேலும் ‘நீ ஊரைவிட்டுச் சென்று எவ்வளவு நாளாகிறது, ஏதோ மறந்து போனதுபோல விசாரிக்கிறாயே, வந்த அசதி போலும்’ என்று சொன்னான். பிறகு வந்து பார்ப்பதாக அவர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

சாப்பிட்டு, களைப்பு தீர உறங்கி, இவன் எழும்போது, மாலை நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. காபி சாப்பிட்டு வெளியே சென்று சுற்றி வரலாமென வீட்டை விட்டுப் புறப்பட்டான். கடைவீதியாகச் சென்று மற்றுமொரு வீதியையும் கடந்து மேற்குச் சந்நிதியை அடையலாம். அதையும் கடந்து கோயில் குறுக்காக ரயிலடியை அடைந்து, சிறிது உட்கார்ந்து, வீடு திரும்பினால், சாப்பிட்டுப் படுக்க நேரம் ஆகிவிடும் என்று எண்ணிக் கிளம்பினான். கடைவீதிக் கூட்டத்தைச் சாவதானமாக நடந்து கடந்துவிட்டான். மற்றொரு வீதியைக் கடக்கும் போது ஜன நடமாட்டம் குறைந்து விட்டது தெரிந்தது. இவன் மனதில் பழைய காலஞாபகங்கள் சிறிது சிறிதாகத் தோன்றலாயின. சந்நிதித் தெருவை அடைந்து, ஒரு வீட்டைக் கடக்கும் போது, இவன் மனதில் ஒரு பரபரப்புக் கண்டது. அவ்வீட்டிற்கு இவன் அநேகதரம் தன்னுடைய மிக நெருங்கிய நண்பனுடன் சென்று இருக்கிறான். அவனை ஊரில் சந்திக்கும் ஆர்வமும், அவனோடு சேர்ந்து இப்போது வாழ்க்கை கொள்ளலாம் என்ற எண்ணமும்தான் இவன் ஊர் திரும்ப ஒருவிதக் காரணம். காலையில் அவனைக் காணாததும், ஏனையோரிடம் அவனைப்பற்றி விசாரிக்காததும், வெகு உணர்ச்சியில், தன் தவறென இவனுக்குத் தோன்றியது…

அவ்வூர்க் கோவில் மிகப்பெரியது. சரித்திரப் பிரசித்தி பெற்றது. மகோன்னத தசையில் ஆண்ட சோழன் மன்னன் ஒருவனால், வெகு காலம் முன்பு கட்டப்பட்டது.

ஒரு காலத்தில் அவ்வூரே அந்தக் கோவிலைப் பொருத்து நிர்மாணம் ஆனது. ஆனால் இப்போது அகலமான தேரோடும் வீதிகளையும், சந்நிதிகளையும், தெற்கே ஒதுக்குப் புறமாகப் பாழ்படும் ஒரு அமைதியில் விட்டு, தற்போதைய நகரமென்பது வடக்கே வெகுதூரம் வியாபகம் கொண்டிருந்தது. மேற்கு வீதிக்கப்பால் மேற்கே நெடுந்தூரம் அத்துவான வெளியென, தொடுவானம் வரையில் கண்டவெளி வீதியை மறைக்க ஒன்றுமில்லை. மேற்கே சூரியன் மறைய இருந்தான். மறையும் சூரிய ஒளி சந்நிதித் தெருமுழுதும் படர்ந்து கோபுர வாயிலையும் கடந்து கொடிமரம் வரையில் சென்று தெரிந்தது. மாலையில் கோவிலுக்குச் செல்லுபவர்கள் நிழல்கள், அவர்களை முந்திக்கொண்டு கர்ப்பக் கிருஹ இருளில் மறைந்து ஒன்றாவது, ஒரு உன்னதக் காட்சியென மனதில் கொள்ள இருக்கும்.

மேற்கு கோபுரத்தை தாண்டி உட்சென்றவன், பக்கத்தில் இருந்த ஒருசிறு மண்டபத்தில் உட்கார்ந்தான். ஒருபுறம் கோபுரமும், மறுபுறம் ஈசுவர சந்நிதியும் தெரியும். முன்னும் பின்னும், இடிந்துகொண்டிருக்கும் பிரும்மாண்ட மதில் சுவர்களின் பாழ்படும் தோற்றம். கர்ப்பக்கிருஹம் இப்போதே இருள் கொண்டுவிட்டது. சர விளக்குகள் ஏற்றப்பட்டுத் தெரிந்தன. அந்த ஆழ்ந்த மௌன இருள் ஒளி அமைதியில் அருஉரு என எட்டிய லிங்கம் சோபையில் புலனாகித் தெரிந்தது. மதில்சுவர் இடிபாட்டிற்கிடையில் முளைத்து இருக்கும் புற்பூண்டுகளை, காலம் தவறி மேய்ந்து கொண்டிருந்தன, இரண்டொரு ஆடு மாடுகள்; மற்றும் சில, மூடிய கண்களுடன் அசைபோட்டுப் படுத்துக்கிடந்தன. ஒரு அமானுஷ்ய மயான வெளி அமைதி, அறிவிற்கப்பால் உணரும் வகை, ஒரு சங்கேத மௌனப் புதிரென, புறக்காட்சித் தோற்றம் கொடுத்தது.

எதிரே, ஒளிபடர்ந்த தரையில் நீண்டு வளர்ந்து வரும் நிழல்கள், ஒன்றுகூடிப் பிரிந்து சலிக்கும் ஒரு விநோதக் காட்சியில், உட்கார்ந்திருந்த இவன் லயித்திருந்தான் போலும். யாரோ சிலர் கோவிலுள் நுழைகிறார்கள் போலும். நான்கைந்து பெண்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவள், சிறிது தூரத்திலிருந்தே இவனைக் கவனித்து வந்ததில், இவனைத் தெரிந்து கொண்டவள் போன்று, இவனைக் கடக்கும்போது பார்த்து, ஒரு புன்சிரிப்பில் நின்றாள். இவன் தன்னைப் புரிந்து கொள்ள வில்லை என்பதை உடனே உணர்ந்து, நடந்து, ஏனையோருடன் கூடிக் கோவிலுள் சென்றாள். அவள் தோற்றம், வசீகரம், புன்னகை எல்லாம் கொஞ்சம் தாமதித்தே இவன் மனது கண்டது போன்று அவளைத் தெரிந்துகொள்ள, அவள் போவதையே கவனித்திருந்தான். அவள் ஒருதரம் திரும்பி இவனைப் பார்த்தாள். மாலை ஒளி அவள் முகத்தில் விழ அவள் வெகு வசீகரமாகத் தோன்றினாள். அவளை யாரென இவன் தெரிந்துகொள்ள முடியவில்லை. கோவிலுள் சென்று அவர்கள் மறைந்து விட்டனர். ஞாபகம் காண, மறதியைத் தேடுவதில் ஜடமென இவன் அவ்விடத்திலேயே வீற்றிருந்தான். எவ்வளவு நேரமென்பது இவனுக்கு நிதானம் இல்லை. உலகு இருள் கொண்டுவிட்டது. உள்ளே சர விளக்குகள் வெகு சோபையில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. திடீரென மணி ஓசை அதிரக் கேட்டது. கோயில் மாலை பூஜை ஆரம்பமாகியது….

அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். எல்லோருமே நாற்பது வயதைக் கடந்தவர்கள். இவனைக் கடக்கும்போது, அவள் இவனுக்கு வெகு சமீபமாக வந்து நின்று …..யோஜனைகள் இன்னும் முடியவில்லையா… கோவிலுள்ளாவது வந்து இருக்கலாமே….’ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். இவனுக்கு அவளைத் தெரிய வில்லை. மேலும் அவனுக்கு சஞ்சலம் கொடுக்கா வகைக்கு எண்ணியவள் போன்று ‘…..ஏன் தனியாக? உங்கள் நண்பர் கூட வரவில்லையா?’ என்றதும், மனதில் ஒரு ஒளி பாய்ந்ததென அவள் யாரெனக் கண்டு கொண்டான். ‘…என்ன கௌரி, உன் மாதிரித் தோன்றியும் நீயென நினைத்துப் பெண்களோடு பேச முடிகிறதா?….’ என்று சொன்னவன், ஏனையவர்கள் எட்டிக் காத்து நின்று இருப்பதைப் பார்த்து, எழுந்து அவளுடன் நடக்கலானான். ‘….அங்கே அந்த வீட்டிலே தானே…. நான் இன்று காலையில் தான் வந்தேன்… சாப்பிட்டு இரவு வருகிறேன். உன்னிடம் சில விஷயங்கள் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும்…’ என்றவன் கோபுர வாயிலைத் தாண்டி அவர்களைப் பிரிந்து சென்றான். அவன் பேச்சுகளுக்குக் கௌரி பதில் பேசவில்லை. இருவரும் தத்தம் பழைய வாழ்க்கைச் சிந்தனைகளில் சென்றுகொண்டிருந்தனர்.

இவன் வீட்டிற்குப் போகும் வழியில் இரண்டொரு சிநேகிதர்களைச் சந்தித்தான். வெகு அவசரத்திலும் – காலையில் மறந்தது எனத் தோன்றியதை – தன்னுடைய பாலிய நண்பனைப் பற்றி விஜாரித்தான். அவர்கள் சொன்னது இவனுக்கு ஆச்சரியம் கொடுக்க இருந்தது. சில வருஷங்களுக்கு முன்னால் அவன் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு ஊரை விட்டுப்போய்விட்டதாயும் எக்காரணம் என ஒருவருக்கும் தெரியாதெனவும் அவர்கள் சொன்னார்கள்.

சாப்பிட்டு, சீக்கிரமாகவே கௌரி வீட்டிற்குச் செல்லுவதில் தான் ஆர்வம் கொள்ளுகிறது என்பதை, இவன் கண்டுகொள்ளாமலில்லை. பழைய நினைவுகள் வசீகர மெனப்படுவதிலும், சோகமும் கலந்ததென இவனுக்குத் தோன்றியது. ஊரை விட்டோடிய தன் நண்பனுடன் வெகு காலம் ஒன்றென வாழ்ந்தவள் கௌரி. எவ்வளவோ நாட்கள் அவனுடன் கூடிக்கொண்டு இவன், அவள் வீட்டிற்குப் போய்ப் பேசியிருக்கிறான். அவனை இப்போது பார்க்கமுடியாதது வெகுவாக வருத்தமெனத் தோன்றுகிறது.

இவன் கௌரி இருந்த மேல சந்நிதித் தெருவை அடையும் போது, ஊர் அரவம் அடங்கி, அரை இருளில் தெருவே ஒரு தூக்கத்தில் ஆழ்ந்ததெனத் தோற்றம் கொடுத்தது. ஒரு காலத்தில் அத்தெரு முழுவதிலும் தேவதாஸிகள் இருந்தனர். வழி வழியாக வாழ்ந்து வந்த ஒவ்வொரு குடும்பப் பிரபல தாஸிகள், அவர்களின் இசை நாட்டிய கலைத் தேர்ச்சி, பழைய பெரிய மனிதர்களுடைய ஈடுபாடு… என அநேக ஞாபகங்களைக் கொண்ட தெரு அது. ஒரு வசீகரம் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் காட்சியை அது இப்போது அளித்துக் கொண்டிருந்தது. யார் யார் இப்போது அங்கு வசிக்கிறார்கள் என்பதற்கில்லை. பழைய வீடுகள் நடுநடுவே பெரிய புது வீடுகளும் இருந்தன. திடுக்கிட எங்கிருந்தோ கேட்ட ஒரு நாயின் குரைப்பு, இவனைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சுவான லக்ஷியம் எட்டிய இருளிலும் உருவாகியது போலும்…

கௌரி, தன் வீட்டுச் சிறு திண்ணைத் தூணில் சாய்ந்து நின்றிருந்தாள். பாலிய கால தன் வாழ்க்கை நினைவுகளை எதிர் மாடத்தில் தெரிந்த விளக்கொளியில் கண்டு நின்றாள் போலும்.

அவள் நிழல் பாதிக்குமேல் பக்கவாட்டில் கீழ் குறட்டுச் சுவரில் ஆடிக்கொண்டிருந்தது. வீட்டு வாயிலை அடைந்தவன் அவளைப் பார்க்காது அவள் நிழலைத்தான் முதலில் கண்டான்போலும். ஒரு பயங்கரம், இனிமையைத் தூண்டி இழுக்கும் பிரமையை அடைந்தான். இவனை, இவன் வந்ததை, கௌரி கவனிக்கவில்லை . ‘…என்ன கௌரி….! என்ற சப்தம் கேட்டு இவனைப் பார்த்தாள். எதிரே தீபத்தின் சுடரொளியில் தன் நிருத்தியம் கலைவுபட்ட தென, ஒரு இனிய கனவு கலைய இந்த நினைவா என்பதில் இவள் மனம் வருத்தமடைந்தது… ‘உள்ளே போகலாம்’ எனச் சொல்லி இவன் தொடர அவள் உட்சென்றாள். கூடத்தில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இவனை உட்காரச் சொல்லி அவளும் சிறிது தூரத்தில் உட்கார்ந்துகொண்டாள். வாயிற் கதவு திறந்தபடியே இருந்தது. சாத்தவில்லை. வாயிற் புரைக்கை விளக்கையும் உள்ளே எடுத்து வரவில்லை.

தன் நண்பனுடன், இவன் அநேகந்தரம் இந்த வீட்டிற்கு வந்து இருக்கிறான். கடந்த காலம் பிளவு கொண்டது எனத் தோன்றாவகைக்கு, நேற்றுக்கூடத்தான் இங்கு வந்ததான எண்ணம் கொடுக்கும் வகைக்கு, அவ்வீடு பழைய நிலைமையிலேயே தோன்ற இருந்தது. ஒரு வகையில், காலையிலிருந்து தன் மனம் கொண்ட சஞ்சலம் சிறிது குறைந்ததென இவனுக்குத் தோன்றியது.

அநேக குடும்ப நினைவு ஞாபகங்களுக்கு வசீகரம் கொடுக்க நின்ற இந்த வீட்டில்தான் கௌரி, வழி வழியாக வந்த ஒரு கௌரவ தாஸி குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்தவள். தன் வழிக்குப் பின் வாரிசு இல்லாது தன் குடும்பமும் தன்னுடன் முடிவு பெறாது இருக்க, அதன் லக்ஷியத்தின் சாசுவதத்தை இப்போது வாழ்வில் கடைப்பிடிக்கிறாள் போலும். பெண்மையின் சக்தி தோன்ற, அவள், பார்ப்பவர்களுக்கு ஒரு இனிமை, கவர்ச்சி, ஒரு பயங்கரம் தோன்ற இருப்பவள் போல ஒருவரிடமும் ஒட்டாது, வெகு சகஜமாக யாரிடமும் பழகுபவள். சிற்சில சமயங்களில் அவள் நடையுடை பாவனைகளிலும் பேச்சிலும், ஒரு நிச்சயம் தோன்றா பிரமிப்புத் தெரிய இருக்கும்.

உட்கார்ந்து கொண்டவன் சிறிது நேர மௌனத் திற்குப் பின், ‘இன்று காலையில் தான் வந்தேன்… உன்னைக் கோவிலில் சந்தித்த பிறகுசிறிது நேரம் சென்று கேள்விப்பட்டேன்….’ என்றான். அவள் குறுக்கிட்டு ….என்ன …’ என்றாள்…. உன் சிநேகிதன்… நம் நண்பன் ஊரை விட்டுப் போனதை உன்னை விட்டு…’ எனச்சொல்ல அவளும் சிரிக்கலானாள் …. இல்லை நீங்கள் அதற்கு முன்பே ஊரைவிட்டுப் போய் விட்டீர்கள்…’ அவள் பேசியது சிரிப்பது இவனுக்கு ஒரு வகையில் திருப்தி அளிப்பதாக இருந்தும் ஏன் என்பது புரியவில்லை.

இவன் ‘…உன்னைக் கேட்கலாம் என வந்தேன்… உன்னைவிட்டு ஊரைவிட்டுப்போன காரணம்? வெகு வருத்தமாகத் தோன்றுகிறது. சொத்தை எல்லாம் விற்று ஊரை விட்டுப்போனது…’ இவன் பேசுவது இவனுக்கே பொருத்தம் காணாது தட்டுத் தடுமாறியது போன்று இருந்தது. இவன் உதவிக்கென கெளரி பேச்சை ஆரம்பித்தாள். ‘…எனக்கும் காரணம் தெரியவில்லை . அதைத் தெரிந்து கொள்ள நீங்கள் வந்த காரணமும் தெரியவில்லை … எதை, எப்படி நான் சொல்லமுடிகிறது?…!’ என்று சொல்லி அவன் வருத்தத்தை, இவள் தன் சிரிப்பில் கலந்து கொண்டாள். தன் வீட்டை ஒரு தரம் மௌனமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு இவனையும் பார்த்தாள். அவள் அலக்ஷிய பாவத்தை இவனால் ஏற்கமுடியாது. ‘என்ன இருந்தாலும் – தாஸி என இவன் மனம் எண்ணியது.

சிரித்துக்கொண்டே மேலும் கௌரி பேசலானாள். ‘பழைய கதையை, கனவெனக் கண்ணெதிரில் மடிவதைக் கண்டும், அதில் ஒரு வசீகரம் உங்களுக்குக் காண முடிகிறது. நடந்தது எல்லாம் கண்முன் அர்த்தம் மாறி இசைவு கொள்ள முடியவில்லை? நடப்பில் என்ன முழுமைகாண இருக்கிறது? நடந்ததின் சாயையும் நடக்கப் போவதின் நிச்சயமின்மையும் கலந்து புதிராகப்பட வில்லையா?

‘என்ன கௌரி உன் வேதாந்தம், வேடிக்கையாக இருக்கிறதே…’ என்றான்.

‘ஆமாம், நான் ஒரு தாஸிதானே… ஒரு பெண் தானே உங்களுக்கெல்லாம்..’ என்றவள், “நீங்கள் சாய்ந்து கொண் டிருக்கும் தூணைக் கேட்டுப் பாருங்கள் சொல்லும்… உங்கள் நண்பர் போன காரணம்…? இவன் நண்பன் இந்தத் தூணடியில் தான் உட்கார்ந்து பேசுவது இவனுக்கு ஞாபகம் வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகமடையும் வசீகரம், அவள் வயதைக் குறைத்துக் கொண்டிருந்தது.

அவள் பேச்சுகளும் பாவமும், பாலியக் குறுகுறுப்பை அளிப்பதாக இருந்தன.

‘உங்கள் நண்பரைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் இப்போது என்னிடம் வந்து கேட்பதில் உங்களைக் கண்டு கொள்ளமுடியாதா? காரணம், நம்பிக்கை கொடுக்காவிடின் என்ன பிரயோஜனம்… அவர் சொத்து சுதந்திரம் எல்லாம் விட்டுப் போய்விட்டார். ஏன், என்னையும் உங்களையும் கூட விட்டுவிட்டுச் சிலர் க்ஷேத்திராடனம் போய் இருக்கிறார் என்று சொல்லவில்லை? அல்லது எங்கேயோ தாங்கள் க்ஷேத்திராடத்தின் போது, அவரை, அவரைப் போன்ற ஒருவரைச் சாமியாராகக் கண்டு பேசுமுன் மறைந்த மர்ம மகிமையைக் கூறவில்லையா? சில நாட்களில் நீங்கள் கேள்விப்படலாம்… அல்லது ஜீவன் முக்தனெனத் தோன்ற, தாடி வளர்த்துக் கொண்டு தமுக்குடன், எட்டிய அடிவானத்தையும், யாராவது தன்னுடன் பேச வருகிறர்களா என்ற ஆசையில் திருட்டுப் பின்னோட்டம் விட்டுக் கொண்டு, கடற்கரையில் அவரைக் கண்டதாகச் சொல்லவில்லையா? கைகட்டி வாய்புதைத்து வரும் கதாசிரியர்களுக்கு ஞானோபதேசம் செய்ய – பூர்வாசிரமம் – கருகிய காதல் – சாதல் இவைகளைக் கதாநாயகனாகத் தன்னைக் காணத் தமுக்கடிக்கவில்லை? அப்படியாக நீங்கள் அவரைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நானும் ஒரு வகையில் கதாநாயகியாயிருப்பேன் அல்லவா…? அவருக்குச் சாமி பூதத்தில் நம்பிக்கை இல்லை. நான் எப்போவாவது அவரைத் திடுக்கிடச் சாமி என்று அழைப்பது உண்டு. ரொம்பப் படித்த அறிவாளிதான். கூப்பிட்ட தோஷம் அவரே சாமியாராக ஓடிவிட்டார் போலும்…! என்னெதிரில் ஆக முடியவில்லையே என்ற வெட்கம் கொண்டு, பார்க்க முடியாது, சாமியாராகத்தான் ஓடியிருக்க வேண்டும்…’ எனச்சொல்லி ‘… நான் சொல்லுவது சரிதானே…’ என்று சிரித்தாள்.

அவள் பேசுவது ஒரு சமயம் வேடிக்கையாகவும், பின்பு பரிகாசமாகவும் இவனுக்குத் தோன்றியது. மேலும் அப்போதைக்குப் புரியாது பின்பு புரியவிருக்க ஏதோ உளதாகியதாகவும்பட்டது. ஆதிநாளிலிருந்து தனக்கு அவளைப் பற்றித் தெரிந்த விதம், எப்படி என எண்ண முடியவில்லை . அவளை அவன் நேராகப் பார்க்காது, அடிக்கடி வீட்டைச் சுற்றிப் பார்வை கொண்டிருந்தான். ஆங்காங்கே ஒளிபடராத இருள் மூலை முடுக்குகளில் பழைய நினைவுகள் ஒன்றுகூடிப் புரிந்துகொள்ள முடியா வகையில், சதி ஆலோசனை செய்து கொண்டிருந்தன போலும். முற்றத்தில் ஒரு முல்லைக்கொடி, பகலில் சூரிய வெப்பம் காட்டாது, பந்தலின் மேலே படர்ந்து இருந்தது. இந்த இரவில், பார்வையில் படாது, மலர்ந்த மலர்களினின்றும் பிரிந்து வரும் மணம் வீடு நிரம்பக் கணிசம் கொள்ளுகிறது. வானின்று நுகர ஊர்ந்துவரும், ஒரு கனிவு இவன் மனதில் படுவது என இது இல்லை.

பேசிய பிறகு ஏன் பேசினோம் என்ற மனக்குறை ஏற்படுவது எல்லோருக்கும் உண்டு. ஆனால் கௌரிக்கு அது மாதிரி தோன்றவே முடியாது. அவள் பேசியது அவள் பேசினதாகவே தோன்றாது சப்தம் கொள்ளுகிறது. பேசும் போது அவள் சரீர ஒரு சிறு நெளிப்பில், தான் பேசியதையே தன்னின்றும் எப்படி உதறிவிடுகிறாள்? தான் பேசியதைத் தானே கேட்பவள் போன்று இருக்கிறது அவள் முகபாவம், எவ்வகையில், காரியத்தில், எவ்விதப் பொறுப்பையும் சுமக்காமல் உதறி, அவளால் வாழ்க்கை காணமுடிகிறது?

….அல்லது தன்னை விட்டுப் போன தன் மனைவியை தேடிக்காண ஓடியிருப்பாரோ என்னவோ, யாருக்குத் தெரியும்?’ என்று அவள் சொல்லி முடித்தது இவனை யோஜனையினின்றும் கலைத்துத் திடுக்கிட வைத்தது. அவள் அறியாமையை நினைக்க, ஒருபுறம் வேடிக்கை யாகவும் இருந்தது. தன்னைப் போலவே தன் நண்பனும் கலியாணம் ஆகாதவனென்பது இவளுக்குத் தெரிய வில்லை போலும்!

திறந்து இருந்த வாயிற்படியைத் தாண்டி, வெகு சமீபம் வரை வந்தவளை இவன் கவனிக்கவில்லை . ‘..பேச்சுச் சத்தம் கேட்டுப் பார்க்க வந்தேனக்கா’ என்று சிரித்துக் கொண்டே, ஒருவள் வெகு நிதானமாக வந்து கூடத்தில் ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டாள். அவளைத் தொடர்ந்து வந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் கௌரி, ‘தம்பி, ஐயாவுக்குக் காபி, வெற்றிலைபாக்கு வாங்கி வா..’ என்றவளை ஒன்றும் வேண்டாமென இவன் தடுத்தும் சோடாவாவது வாங்கி வரச் சொன்னாள். மேலும் இவன் பணம் எடுத்துக்கொடுப்பதைத் தடுத்து ‘…என்ன ஐயா செய்வது? அவமானப் படுத்தவா? விருந்தாளியாக வந்தவரின் அபேக்ஷைகளை நாங்கள் திருப்தி செய்ய வேண்டாமா…. என்ன அனசூயா நான் சொல்லுவது என்று வந்தவளைப் பார்த்துக் கேட்டாள். ‘ஆமாம்… இவர் நம்ப சாஸ்திர புராணம் படித்ததில்லையோ என்னவோ…’ என்று ஒரு அசட்டுச் சிரிப்புத் தோன்றச் சொன்னாள்.

அன்று இரவு இவன், அவர்களுடன் பேசிவிட்டு வீடு திரும்பும்போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டது.

மறுநாள் காலையிலிருந்தே இவனுக்குக் கௌரி வீடு செல்லும் ஆவல் தோன்ற ஆரம்பித்தது… அன்று மாலை சீக்கிரமாகவே அவள் வீட்டிற்குச் சென்றான். நேராக உள் சென்றவன், இரண்டொரு பெண்களுடன் அவள் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தான். இவனையும் கூப்பிட்டு உட்காரச் சொன்னாள். நேற்றுக் கோவிலில் பார்த்தவர்கள் எனவும், அவர்களும் தாஸிகளெனவும் கண்டு கொண்டான். சிறிது நேரம் ஊர் உலகம் பேச்சுகளெனப் பேசினர்.

கௌரி இவனைப் பார்த்துக் கேட்டாள், ‘…நேற்றுத் தானே வந்தது… மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுதானே…’ அவள் வசீகரம் மிகக் கடுமையாக இவனைத் தாக்கியது. மனது ஒருவகையில் குதூகலமும் கொண்டது….

‘நீ நினைப்பது எல்லாம் இப்படித் தவறாக இருக்கிறதே! நானும், அவனும் கல்யாணமே செய்து கொள்ளாதவர்கள் – என்னைப் பற்றித் தெரியாதது இருக்கட்டும். அவனைப்பற்றிக்கூட அவ்வளவு பழகியும் உனக்குத் தெரியாதது சிரிப்பாகத்தான் இருக்கிறது..’ என்று நெருங்கிப் பேசும் வகையில் கூறினான். ஏனையோரின் ஒருமித்த சிரிப்பில், இவள் கலந்து கொள்ளவில்லை. அதன் எதிரொலி என சிறிது சென்று இவள் முகத்தில் புன்சிரிப்புத் தோன்ற, அதிலும் ஒரு கடுமை தொனித்தது போலும். ஆண்களின் தன்மை ஒருவரிடமும் ஒருவிதத்திலும் சரியெனப்படவில்லை. ஆண் பெண் பாகுபாட்டை, உலகே தவறாகக் கண்டு கொண்டிருக்கிறது. உறவு, பந்தம், பாசம், எல்லாமே வியர்த்தமாகத் தோன்றும் வகைக்கு, தர்மமும் சீர்குலைந்து, ஒத்துப் போவதாகக் காண்கின்றனர் போலும். இவள் மனம், யாரை எதற்காக நொந்து கொள்ளுவது என்பதும் புரியாது தவித்தது.

….எவ்வளவு தவறு. தெரிந்து கொள்ளாதது எவ்வளவு சரியாகவும் இருக்கிறது…’ என்று ஆரம்பித்த கௌரியைத் தடுத்து…. ‘சரி தவறு எல்லாம் தவறாகவே உனக்கு ஒன்றுதான்…’ என்றான். எல்லோரும் சிரித்தனர். கௌரியின் சிரிப்பு, மேலும் தன்னைப் பற்றிய அவர்கள் எண்ணம் என்னவென்பதும் புரியவில்லை. மேலே யோசிக்க முடியாது கௌரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பைத்தியக்காரச் சதியில் சிக்கித் தவிப்பதான லேசான ஒரு எண்ணம். தன்னை விடுவித்துக் கொள்ள கௌரியைவிட்டு வெளிச் செல்லுவதும் மனதுக்குப் பிடித்தமாக இல்லை.

…ஐயா..’ என்று இவனைக் கூப்பிட்டு அவள் பேச ஆரம்பித்தது ஒரு ஆறுதலாக இருந்தது…. “ஐயா நான் ஒரு பெண் – அதுவும் ஒரு தாஸிப்பெண். தாஸிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்து இருந்தாலும் பெண்களையும் பற்றித் தெரியுமோ..? நீங்கள் கல்யாணம் ஆகாதவர்கள்.

செய்து கொள்ளாதது ஒரு வகையில் சரி. யாரோ, ஒருவன் மனைவி என உங்களிடம் கற்பிழந்துகொண்டு நிற்க முடியாத வகைக்கு..’ என்று சொல்லிச் சிறிது பேச்சை நிறுத்தினது, இவனுக்குத் திடுக்கிட இருந்தது. சிறிது கோபத்தில் ‘என்ன… என்ன சொல்லுகிறாய் – தனக்குப் புரியாது, பிறருக்கும் புரியாத வகைக்கு…’ என்றான் இவன். இவன் பேசுவதையே கவனிக்காதவள் போன்று, ‘நாங்கள் பெண்கள் – அதுவும் தாஸிப் பெண்கள். ஒருவிதத்தில் கல்யாணமானவர்கள், மனைவிகள் எனவும் கொள்ள முடியும். கல்யாணமான ஒருவள், மறதியில் தன் கணவனை எங்கேயோவிட்டு, எங்கும் தேடுவதான பாவனையை என் மனது அடிக்கடி கொள்ளுகிறது ஐயா. ஆண்களால் கலியாணமின்றி வாழமுடியும், பெண்களால் முடிகிறதில்லை . இந்து தர்மம் அப்படித்தானே… கன்னி யென வாழவும் கூடாது… முடியாது. குமரிக் கன்னியும் ஒருவனை அடைய ஏங்கி, சாசுவதத்தில் தானே, கன்னியெனவாகிறாள்… மனைவி எனக் கணவனிடம் வாழ்க்கைப்படுவதில், தன் மனத் தூய்மையை, அவனால் எப்போதும் இழக்காமல் இருக்க முடியும் என்று எந்த மனைவியால் நம்பமுடியும்? தன் புனிதம் தன் கணவனால் பறிபோக, கற்பிழந்தவளாகத் தன்னை அவள் அப்போது கருதமுடியாதா? ஒருக்கால் உங்களைப் போன்றவர்களால் அவ்வகையில், கணவனாக முடியும் போலும்… ஆனால் கல்யாணம் செய்துகொள்ளாமல் நிற்கிறீர்களே… பெண்ணைப் படைத்த ‘அவன்’ பெண்மையையும் மறக்க வில்லை …’ என்று சொல்லியவள் ‘என்ன அனசூயா நான் சொல்லுவது’ என்று அவள் அசட்டு ஆமோதிப்பைப் பெறநினைத்து அவனைப் பார்த்துச் சிரித்தாள். ‘உங்கள் நண்பரை அவசியம் கண்டு கொள்ளுங்கள்… அவர் புரிந்து கொண்டவர் போலும்!

ஒருவள் ‘நாழிகை ஆகவில்லையா அக்கா!’ என்று கேட்டாள். ஆமாம்’ என்றவள் இவனைப் பார்த்து நீங்களும் வாருங்கள் கோவிலுக்கு… நாழிகை ஆகிவிட்டது’ என்றாள் கௌரி.

மாலை சூரியன் மறைய இருக்கிறான். சந்நிதித் தெரு முழுவதும் சூரிய ஒளி பரவி இருந்தது. கோபுரம் தாண்டியும், கொடி மரம் வரையிலும்கூட இவனும் அவர்களுடன் கூடச்சென்றான். முன் நீண்டு சென்ற நிழல்கள் சலித்து ஒன்றைச் சென்று கலந்தும் விலகியும் தெரு வழியே சென்று கொண்டிருந்தன. முன் சென்ற அவர்கள் உட்சென்று மறையும் வரையில் பார்த்து நின்று இருந்தான். அப்பால் கர்ப்பக்கிருஹ சரவிளக்குகள் ஏற்றப்பட்டுத் தெரிந்தன… உட்சென்று மறைந்தவர்களை இவனால் பார்க்க முடியவில்லை … விளக்குகள் கலைந்து, மறைந்து, தெரிந்து கொண்டிருந்தன.

– குருக்ஷேத்திரம் 1968

Print Friendly, PDF & Email

நெகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

கற்பனைக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *