அவள் அறிந்திராத துருவ மறை பொருள் உண்மைகளுடன், ஒளி கொண்டு விசுபரூபமெடுத்து நிற்கும் ஒரு சத்திய தேவதை போலச் சந்தியா அவளருகே வந்து சற்றுத் தள்ளி அமரும் போது கல்யாண முகூர்த்தம் வெகு அமர்க்களமாகக் களை கட்டி நடக்கத் தொடங்கிற்று பொதுவாக இப்படியான கல்யாணம் காட்சி நாடகங்களுக்கு அவள் வருவது அடியோடு நின்று போய் வரண்ட அந்தக் காலக் கணக்கு ஒரு யுகம் போலாகிறது.
கல்யாணமாகிக் கழுத்தில் விழுந்த தாலியே விலங்கான பின் அவளுக்கு இப்படியான மங்களகரமான வாழ்க்கையனுபவங்கள் வெறும் பகற்கனவுகள்தாம் என்பதை என்றைக்குமே அவள் மறந்ததில்லை அதற்கு முன் பருவத்துக்கு வராத பாவாடை கட்டித் திரிந்த மிகச் சின்ன வயதில் ஊரிலே அவள் எத்தனை கல்யாண வீடுகளுக்கெல்லாம் போயிருப்பாள் ஊர்க் கல்யாணமென்றால் அதுவே உயிர்க் களைகட்டி நடைபெறும் ஒரு சகாப்த காவிய விழா மாதிரி, இப்போது நினைத்தாலும் மனம் சில்லிட்டுப் போகிறது.
பருவத்துக்கு வந்து, வீடே சிறையான பின் அது கூட இல்லை. கல்யாணமானால் இந்தச் சிறை உடையுமென்று ஒரு வாழ்க்கை நியதி இருந்த போதிலும், அவள் வாழ்வில் அது நடக்காமல் போனது அவள் கொண்டு வந்த பாவக் கணக்கின் துருப்பிடித்த ஒரு நிழல் சம்பவமாகவே அவள் அதை எதிர் கொண்டு மனம் சரிய நேர்ந்திருக்கிறது இப்படி மனம் சரிந்த பாதையே பழகிப் போனாலும் அதற்கு எதிர் நீச்சல் போட்டு ஆன்மீக விழிப்பு நிலையில் ஒளி தரிசனமாக உள்ளூரக் கருகி ஒழிந்து போகாம;ல் கம்பீரமாக எழுந்து நிற்கவே பழக்கப்பட்ட ஓரு சத்திய தேவதை அவள். அவள் புருஷனுக்கென்னவோ அவளை உயிருடனேயே காவு கொள்ள விரும்பும் ஒரு குரூர மனம்.. இப்படி வக்கிர புத்தி கொண்ட ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு நடைமுறை வாழ்க்கை சார்ந்த மேலோட்டமான இன்ப அனுபவங்கள் அடியோடு கருகித் தீப்பற்றியெரிய நேர்ந்தாலும், , தனது உயிர் கறைப்பட்டுப் போகாத சத்தியத்தை நம்பி அவள் இன்னும் உயிர் வாழ்வது வெறும் வரட்டுச் சங்கதியல்ல
இப்படி வரண்ட வாழ்க்கையையே வேள்வியாக்கியவள், கண் முன்னாலேயே இப்போது அந்தத் துருப்பிடித்த நிழல் மாதிரி அவள்.. சந்தியா வந்து சேர்ந்த வாழ்க்கைச் சதுக்கத்தில் அவள் போல் இன்னொருத்தி.. . யார் அவள்? வெளிப்படையாகச் சொல்வதானால் சந்தியாவின் சகலி…. அப்படியென்றால் என்ன உறவு அவர்களிக்கிடையில்? சந்தியாவின் கணவன் சசிதரனும் அவள் கணவன் சந்துருவும் சொந்தச் சகோதரர்கள். இருந்தாலுமென்ன முகமே மறந்து போன இப்படியான உறவை, உறவென்று சொல்லிக் கொச்சைபடுத்துவது பாவமென்றுபட்டது.
சந்தியாவின் சகலியான அவள் ஒரு சாதாரண பெண்ணல்ல. மருத்துவத்துறையில் பேர் போன ஒரு டாக்டர்.. சந்துருவும் ஒரு டாக்டர் தான் காதலித்து அவளைக் கல்யாணம் செய்தவன். அவள் பெயர் கூட ஞாபகமில்லை. கல்யாணத்தன்று ஒரேயொரு முறை தான் பார்த்ததாக ஞாபகம்.. நல்லூரிலே நடந்த கல்யாணம்.. அது பல வருடங்களுக்கு முன்னால்.. அதன் பிறகு சம்பிரதாயம் கருதிக் கூட சந்துரு அவளோடு சந்தியா வீட்டிற்கு வரவேயில்லை. .பிறகு அவர்கள் அமெரிக்கா போன கையோடு அந்த உறவுப் பாலம் அடியோடு சரிந்து போனது. சசிதரன் இதைப் பெரிதுபடுத்தாமல் விட்டது சந்தியாவுக்குத் தீராத பெரும் மனக் குறை.. அவன் பெரிதுபடுத்திச் சண்டை போடுவதெல்லாம் அவளோடு மட்டும் தான்.
சகோதரங்களென்றால் அவனுக்கு உயிர் அவர்களுக்காக அவன் ஒரு தியாக தெய்வம்.. ஆனால் அவளைப் பொறுத்தவரை அவன் எப்பவுமே ஒரு தெய்வ சரித்திரம் படைத்ததில்லை. மாறாக ஒரு எமன் மனுஷ சுபாவம். அவனோடு சார்ந்த அனைவருமே அப்படித்தான். அவளுக்கும் மட்டுமே தெரியும் அந்தப் பெரிய உண்மை. அது ஒரு நெருப்பு பூமி. சசிதரனின் தாய் வீடு . பாவ விளைச்சல்களையே கொள்வனவு செய்யும் அக்கினிக் குண்டம். மாதிரி அதில் ஒரு காலத்தில் அகப்பட்டுத் தப்பிப் பிழைத்து உயிர் வாழ்கிற பெருமை சந்தியாவுக்கு மட்டுமே உரித்தானது. இந்தப் படுமோசமான பாவ விழுக்காடு சந்துருவின் மனைவிக்கு நேரவில்லை அவள் இதையெல்லாம் அறிந்து கொள்ள முடியாமல் போன மறு துருவத்திலே கொடி கட்டிப் பறக்கிற கசப்பான உண்மையே போதும் சந்தியாவுக்கு இன்னுமொரு நெருப்புக் குழி பறிக்க. எனினும் அதைப் பெரிதுபடுத்தாத மேலான அன்பு மனம் அவளுக்கு. .
அந்த டாக்டர் பெண் கண்களில் ஒளி காட்டி மின்னும் மிகவும் அழகான ஒரு காட்சி தேவதையென்று கல்யாணத்தின் போது எல்லோரும் சிலாகித்துப் பேசியது சந்தியாவின் காதிலும் யதேச்சையாக விழுந்தது. இந்தப் புறம்போக்கு வெளியழகையும் தாண்டி அவளின் உள் மனம் அன்பு நதி வரண்டு போன ஒரு காட்டு நிலமாகவே வெறிச்சோடி இருள் மூடிக் கிடப்பது அவளை எதிர்கொள்ள நேர்ந்த அன்றைய நாளில் சந்தியாவுக்கு நன்றாகவே உறைத்தது இது அவளுக்கு முன்னரே தெரியும் உறவு மனிதர்களுக்கு மட்டுமல்ல சகல உயிர்களுக்குமே பரந்த அளவில் அன்பு காட்டி நேசிக்கத் தெரிந்த மேலான மனத்தை அவள் கொண்டிருக்கவில்லை என்பதை, அவர்களின் கல்யாணத்தன்றே சந்தியா மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள நேர்ந்தது.
அன்றைக்கு. உறவுகளைப் பெரிதுபடுத்துகிற மாதிரி அவள் நடந்து கொள்ளவில்லையே அப்படி நினைத்திருந்தால் சந்தியா வீட்டிற்குச் சந்துருவுடன் தானாகவே கிளம்பி வந்திருக்க மாட்டாளா? சந்துருவிற்கும் அந்த நினைப்பு வரவில்லை. போயும் போயும் இந்த அண்ணியிடமா என்று கூட அவன் இழிவாக நினைத்திருக்கலாம் பாவங்களையே சுமக்கும் ஓர் ஈனப்பிறவியல்லவா இந்த அண்ணி என்று அவனுக்குப்பட்டிருக்கும் அவளை அப்படிப் பெருமையிழக்க வைத்தவன் தனது அண்ணன் சசிதரன் தானென்பதை அவன் அறிந்திருப்பானோ என்னவோ?
அவனை இப்படி ஒரு டாக்டராகக் கை தூக்கி விடச் சசிதரன் எப்படியெல்லாம் உயிரைக் கொடுத்து உழைத்திருப்பான். அவன் மட்டுமா? சந்தியா கூட எவ்வளவு தியாகங்கள் செய்திருப்பாள். இப்படி அவள் ஒன்றுமே இல்லாமல் போன மொட்டை மரமாகக் கருகி நிற்பதற்கு யார் காரணம்? சந்துருவின் படிப்புக்காகத்தானே எல்லா நகைகளும் போயின அதற்குப் பரிகாரமாகவல்ல ஒரு மாற்றுத் தீட்டாக இந்த ஒரு நடத்தைக் கோளாறு மட்டுமில்லை இன்னும் எத்தனையோ சொல்லலாம்.
அதெல்லாம் பழங்கதை. எனினும் இப்படி எத்தனையோ அடிகள்பட்டு, இழப்புகள் சுமந்து சந்தியா சிலுவையில் தொங்க நேர்ந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ள விரும்பாத மிகவும் பெருந்தன்மையான ஓர் இலட்சிய தேவதை அவள் கொழும்பு நகரில் மிகவும் நாகரீக எடுப்புகளுடன் அரங்கேறும் ஓர் அமர்க்களமான கல்யாண வைபவம் அது பேருக்குத் தான் அது ஒரு தமிழ் கல்யாணம் மண்டபம் நிறைய வெளிநாட்டுத் தமிழ் சனங்கள்தாம். அரை வேக்காட்டு வெள்ளைக்காரத்தனத்தோடு அவர்கள் பேசிய தமிழே உயிர் விட்ட தமிழ் போல ஓர் ஆங்கிலக் கலப்பு மொழி நடையாக நெஞ்சில் நிற்க மறுத்தது.. இதில் சந்துருவின் மனைவி வேறு அசல் வெள்ளைக்காரதனத்தோடு கிராப் தலைமுடியும் ஆளுமாக சந்தியாவின் அருகே விருந்து மேசைக்கு முன்னால், நிலை மயங்கி அமர்ந் ந்திருந்தாள். தானென்ற ஆளுமைச் செருக்குடன். சந்தியாவை அவள் இனம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு உறவு திரிந்து போன நிழல் சங்கதிகளிலேயே திசை திரும்பிய கவனத்துடன் அவள் இருக்கும் போது சந்துரு வந்தான்.. அவள் முகத்தருகே குனிந்து மெல்லக் கேட்டான்.
“இவ ஆர் தெரியுமே?”
அவள் தெரியாது என்பது போல் தலை ஆட்டினாள்
அப்போது இடையில் குறுக்கிட்டுச் சந்தியா குரலை உயர்த்திச் சொன்னாள்
“இப்போது இவ்வளவு காலத்திற்குப் பிறகு இது முக்கியமென்று எனக்குப் படேலை நான் உறவு முகம் மறந்து போன ஓர் ஆளாகவே இருந்திட்டுப் போறன் எனக்கென்ன வந்தது விடுங்கோ சந்துரு”
இதை அவள் சொல்லி முடிக்கவில்லை எங்கிருந்தோ அதைப் பார்த்து விட்டுச் சசிதரன் உயிர்போகிற அவஸ்தையுடன் அவளருகே ஓடி வந்தான்
“எழும்பு சந்தியா நீ ஒன்றும் இவையளுக்குக்குக் கதை சொல்ல வேண்டாம்”
“நீங்கள் என்ன சொல்லுறியள்? நானா ஒரு கதை சொல்லி?” சொல்லுங்கோ”
“வேறு எப்படி நீ”
“இதுக்கு என்னைப் புடம் போட்டல்லோ காட்ட வேணும்”
அவள் என்ன என்ன சொல்கிளென்று அவனுக்குப் பிடிபட மறுத்தது எனினும் அவள் மீது அவனுக்கு ஓர் அந்தரங்கமான பயம் இருக்கத்தான் செய்தது. அவளுக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய அந்தக் கசப்பான உண்மை அவனைப் பற்றியது மட்டுமல்ல அவன் குடும்பம் சார்பான அத்தனை உண்மைகளையுமே அவள் நன்கு அறிவாள் அப்படி அவர்களுடன் வாழ்ந்து தீர்த்த அந்தப் பாவக்கணக்கு உயிரைத் தீமூட்டிக் கொளுத்துகின்ற ஒரு சோக வரலாறு போல் இன்னும் அவளை உணர்வுபூர்வமாய் எரித்து வருகிறது.. சசிதரனின் தகப்பன் சிவகுரு பஞ்சமாபாதகங்ளுக்கும் அஞ்சாத ஒரு பெரிய கிரிமினல்வாதி.. அவனை மணம் முடிக்க நேர்ந்த பாவத்தினால் அவரை எதிர் கொண்டு உயிருடன் சமாதியாக வேண்டிய நிலைமையில் சந்தியா உயிருடன் மட்டுமல்ல அறிவு கூட மழுங்கிப் போகாமல் மனச் சதுக்கத்தில் கம்பீரமாக எழுந்து ஓர் ஒளித் தரிசன தேவதையாய் நிற்பது ஊனப் பார்வைக்குத் தென்படாத ஒரு காட்சி மயக்கமாகவே இருந்து விட்டுப் போகட்டும்..
காட்சி மயக்கமே வாழ்வாக வாழ்பவர்களுக்குக், குறிப்பாக அவளது உறவு வட்டத்தினுள் ஒரு நிழலாக வந்து சேர்ந்த சந்துருவின் மனைவிக்குச் சந்தியாவின் இந்த நிலை அவள் அறிவுக்கு எட்டாத ஒரு காட்சி தரிசனம் தான் காட்சிகளையல்ல உயிர் தரிசனத்தையே ஆத்ம விழிப்பாகக் கண்டறிந்து நிற்கிற சந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு கானல் செய்தியாகவே அவளுக்குப்பட்டது. இப்படியான கானல் சங்கதிகளுக்காக என்றைக்குமே அவள் தன் வசம் இழந்ததில்லை இந்தப் பெருமையை நினைவு கூர்ந்தபடியே சசிதரனருகே வந்து இரகசியக் குரலில் அவனுக்கு மட்டுமே கேட்கும்படியாக அவள் சொன்னாள்.
“என்ன சொல்லுறியள்? நீங்கள் நினைச்சுப் பயப்படுகிற இந்த விடயங்கள் பற்றி நான் மூடு மந்திரமாகவே இருந்திட்டுப் போறன். நீங்கள் பயப்பிடுகிறதைப் பார்க்க எனக்கு வேடிக்கையாய் இருக்கு உங்களுக்கு ஒரு புதினம் தெரியுமோ? அப்படித்தான் நான் வாய் திறந்து சொன்னாலும் புரிகிற நிலைமையா இவளுக்கு? ஏன் தெரியுமோ? இவள் தமிழை மறந்து கனகாலமாச்சு . நான் பேசுறது வெறும் கிரந்தமாய்த் தான் இருக்கும்” இவளுக்கு”
அதைக் கேட்டு விட்டு ஆவேசமாய்க் கண்களில் கனல் தெறிìக்க அவன் கேட்டான்.
“அப்ப தமிழ் தெரிஞ்சிருந்தால் நீ சொல்லிப் போடுவியே?”
உயிரே போனாலும் நான் சொல்ல மாட்டன் இப்படித் தவறான வார்த்தைகளை விட்டுக் கதை சொல்லிப் பிறருக்குக் குழி பறிக்க நானா? சொல்லுங்கோ
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவனுக்குப் புரியாத மயக்கமாக இருந்தது மாறாக அப்படியொரு கதை சொல்லியாகவே அவளை நினைத்துப் பார்த்து அவசரமாக அவளையும் கூட்டிக் கொண்டு அவர்களை விட்டு அவன் வெளியேறித் தூர விலகிப்போவதையே ஒரு வேடிக்கை போலப் பார்த்த வண்ணம் சந்துரு நிலை மயங்கி நின்று கொண்டிருந்தான். அவன் மனைவி அது கூட இல்லாமல் தனிமையில் சிறைப்பட்டுப் போன ஒரு புறம் போக்கு நிழலாக அங்கு நிலை கொண்டு இருப்பது உயிர் வரண்டு போன ஓரு வரட்டுக் காட்சியாகக் கண்களில் இடறியது சந்தியாவுக்கு மட்டும் தான். அதைப் பார்க்கப் பிடிக்காமல் அவள் முகம் திருப்பி வாழ்வைத் தரிசனம் காண்பது போல எங்கோ இலக்கு வைத்துப் பார்க்கலானாள். .அவர்களுடைய உறவின் உயிர் மறந்து போன கனவுலகில் ஒரு கலங்கரை விளக்கம் போல இப்போது அவள்.. என்றைக்குமே அவள் அப்படித் தான்.