கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 1,793 
 
 

சே… என்ன பிழைப்பு.

அலுத்துக் கொண்டாள் கீதா. நான் ரயிலில் ஏறிப் போனால் என் தரித்திரம் இஞ்சினில் ஏறி எனக்கு முன்னே போய் நிற்கிறது. அவள் தேடிவந்த தனியார் பள்ளி நிறுவனர் ஊரில் இல்லையாம். ஏதோ அவசர வேலையாம். அடுத்த வாரம் வரச்சொல் என்று கிளார்க்கிடம் கூறி சென்று விட்டாராம். அதுதான் கீதாவின் சலிப்புக்குக் காரணம். அவளுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை, வேதனை.

மனசுக்குள் குமைந்தபடி மீண்டும் பேருந்து நிலையம் வந்தாள். அவளுக்கான பஸ்ஸீக்கு இன்னும் அரை மணிநேரம் காத்திருக்க வேண்டும். கண்களை மூடியபடியே பேருந்து நிலைய இருக்கையில் சாய்ந்தாள். மூடிய கண்களின் உள்ளே அவளை அலைக்கழிக்கும் பழைய நினைவுகள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே முரளியைக் கைப்பிடித்து மண வாழ்வில் அடிஎடுத்து வைத்தாள். மாநிறம், ஆனாலும் ‘ப்ருதிவிராஜ்’ போன்ற எடுப்பான மிடுக்கான தோற்றம். சிரிக்கும் கண்கள், நல்ல படிப்பு நல்ல உத்தியோகம், ஒரே பிள்ளை, நல்ல வசதியான குடும்பம், அன்பான மாமியார், மாமனார், பக்கத்து ஊர். ஏற்கெனவே நல்ல அறிமுகம். வாழ்க்கை இனிமையாக ஓடியது. ஆனந்த வெள்ளத்தில் திளைத்தாள் கீதா. யார் கண்பட்டதோ முரளியின் நடவடிக்கைளில் மாற்றம். லீவு நாட்களிலும் வீடு தங்குவதில்லை. ஆபீசுக்கும் மட்டம் அடிக்க ஆரம்பித்தான். மெல்ல மெல்ல புரிந்தது காரணம். நண்பர்களின் சகவாசத்தில் குடிப் பழக்கம் ஆரம்பம். தட்டிக் கேட்ட கீதாவிடம் முதலில் சாரி சொன்னவன் பின்னர் எகிற ஆரம்பித்தான். ஒருநாள் நிலைமை ஓவராகப் போக எதிர்த்துக் கேட்டவளை ஓங்கி அறைந்து விட்டான், அதுவும் அண்ணன் ரவியின் முன்னிலையில். அப்புறம் என்ன, ரவியும், முரளியும் முட்டி மோத, பெரியவர்கள் ஏதும் புரியாமல் குழம்ப, அண்ணனுடன் பிறந்தகம் வந்து ஒருமாதம் ஓடிவிட்டது. அம்மாவும், அப்பாவும் சமாதானம் பேச முயல அண்ணன் ரவி மட்டும் கீதாவுக்கு சப்போட். ‘கைநீட்டி அடித்த அந்தக் குடிகாரனுடன் குடித்தனம் நடத்த வேண்டாம், மரியாதையா டைவர்ஸ் குடுக்கணும் அந்தப்பய, இல்லாட்டி வரதட்சணை கொடுமை, மகளிர் வன்கொடுமை யின்னு கேஸ் போடுவேன்’ என்று மிரட்ட கீதாவும் தலையை ஆட்டி வைத்தாள். மாமியார் மாமனார் ‘கேஸ் போட வேண்டாம். குடும்பமானம் போய்விடும், என்று கெஞ்ச, ‘அப்படியானால் அவனுக்குச் செய்த சீர் செனத்திகளைத் திருப்பித் தரணும். ஜீவனாம்சமாக டவுனை ஒட்டி இருக்கும் 10 ஏக்கர் நிலத்தைக் கொடுக்கணும்’ என்று கண்டிஷன் போட வேறுவழியின்றி ஒத்துக் கொண்டனர் பெரியவர்கள். முரளி எத்தனையோ முறை நேரிலும், போனிலும் கெஞ்ச விரட்டி அடித்தான் ரவி. வாய் பேசாது மௌனித்தாள் கீதா.

நேற்றுதான் சொன்னான் அண்ணன். ‘உன் நகையை எல்லாம் பாங்க் லாக்கரில் வைத்து விட்டேன். உனக்குப் பொழுது போகலைன்னா பக்கத்து ஊரில் என் நண்பன் தனியார் பள்ளி நடத்துகிறான். அதில் உனக்கு வேலை போட்டுத் தர்ரேன்னு சொல்லி இருக்கான். போய்ப்பார்’ என்று கூற காலையில் கிளம்பி சென்ற போதுதான் அடுத்தவாரம் வரச் சொல்லித் தகவல்.

அண்ணனுக்குத்தான் என்மேல் எவ்வளவு பாசம். அவன் மிரட்டவில்லை என்றால் அந்தக் கிழங்கள் சொத்து குடுக்குமா? எனக்கு தான் வேலை கிடைக்குமா? இது புரியாமல் குட்டையைக் குழப்பும் அம்மாவும், அப்பாவும். ‘எடுத்தோம் கவுத்தோம்னு இப்படி செய்யக் கூடாது. குடும்பம்னா அப்படி இப்படித் தான் இருக்கும். இப்ப நேரம், காலம் சரியில்லை. அதனாலதான் இந்தக் குழப்பம். மாப்பிள்ளை எவ்வளவு கெஞ்சுறார், இனிமே குடிக்க மாட்டேன்னு சத்யம் செய்யுறார். ஒருதடவை மறப்போம். மன்னிப்போம்’னு ஒரே அட்வைஸ். வேலை கிடைசுட்டா இந்த நச்சரிப்பில் இருந்து விடுதலைன்னு பார்த்தா இன்னும் ஒருவாரம் காத்து இருக்கணும். நானும் வேலைக்குப் போய் வாழ்ந்து காட்டணும். சம்பாதிக்கிற திமிர்லதானே கை நீளுது. கருவிக் கொண்டாள். அப்பாவும் அம்மாவும் கோயில் குளம்னு போய் இருக்காங்க. பொண்ணு புருஷனோட வாழணும்னு தலயாத்திரை; வர ஒருவாரம் ஆகும். எனவே புலம்பல் இருக்காது. நிம்மதியா டிவி பார்க்கலாம் என்று எண்ணியபடியே பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தாள். கதவு சாத்தி இருந்தது; திறக்கப் போனவள் தன் பெயர் அடிபடவே தயங்கியபடியே திண்ணையில் அமர்ந்தாள். உள்ளே அண்ணியிடம் ரவி பேசிக் கொண்டு இருந்தான். ‘ஏய் நாத்தனார் கிட்ட கொஞ்ச நாள் பாசமா நடிடி. அப்பத்தான் என் ஐடியா ஒர்க் அவுட் ஆகும்’.

‘என்ன பெரிய ஐடியா, வாழற பொண்ணை வாழாவெட்டியா ஊட்ல வச்சு அழகு பாக்குறதா, புள்ள பூச்சிய மடியில கட்டிக்கிட்டது மாதிரி’

‘ஏய், அவ புள்ள பூச்சி இல்லடி, பொன்முட்டை இடுற வாத்து. இன்னைக்கு அந்தப் பய முரளி சொத்துப் பத்திரத்தைக் கொண்டு வருவான். அதுக்குத் தான் அவளை அப்புறப்படுத்தினேன். நேர்ல புருஷனைப் பார்த்ததும் மனசு மாறிட்டான்னா. அதுக்குதான். அப்புறம் அவ நகைகளை லாக்கரில் வைக்கல. எல்லாத்தையும் வித்து எனக்கு இருந்த கடனையெல்லாம் அடைச்சுட்டேன். புருஷனோட போறேன்னா நகைகளைக் கொண்டான்னு கேட்பாளே. இந்தக் கிழங்களின் வாயை அடைக்க ஒரிஜினல் மாதிரி ஒரு செட் கவரிங்ல வாங்கி வச்சுட்டேன். அப்புறம் அவளுக்கு வர்ற நிலத்துக்கு ஒரு கோடி தர்றேன்னு ரியல் எஸ்டேட்காரன் சொல்லி இருக்கான். நம்ப சொத்துலேயும் பங்கு தர வேண்டாம். வேலைக்குப் போகச் சொன்னதற்குக் காரணம். கையை விட்டு சோறு போட வேண்டாம். அதோட ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்துட்டா நம்ம புள்ளை இரண்டையும் சைக்கிளில் அனுப்பி விடலாம். ஆட்டோ செலவு, ட்யூஷன் செலவு மிச்சம். அதோட வீட்டு வேலையிலும் ஒத்தாசையா இருப்பா. எனவே வர்ற மாசத்தில் இருந்து வேலைக்காரிய நிப்பாட்டப் போறேன். நல்ல வேளை புள்ளை எதுவும் பிறக்கல. எல்லா சொத்தும் நமக்குத்தான். நம்ம வீட்டுக் கிழங்கள் இரண்டும் வருவதற்குள் எல்லாத்தையும் செட்டில் செய்யணும். அதுகளுக்கு மூக்கு வேர்த்து விட்டால் முட்டுக்கட்டை போடுங்க. எப்படி நம்ம ஐடியா?’

‘அதனாலே எல்லாமே கைக்கு வரும்வரை நாத்தனாரை உள்ளங்கையில் வைத்துத் தாங்கு. இப்ப அந்தப்பய முரளி வந்துடுவான். அத்தோட இந்தப் பையில் பாரின் சரக்கு இரண்டு பாட்டில் இருக்கு. பத்திரமா எடுத்து வை. இந்த சந்தோஷத்தைக் கொண்டாடணும். போன வாரமே அது என்னன்னு இந்தப் பசங்க துளைத்து எடுத்துட்டாங்க. அதுக கண்ல படாம மறைவா வை. இப்ப அந்தப்பய முரளி வந்துடுவான்’ என்று ரவி கூறுவதைக் கேட்டதும் தலை சுற்றியது கீதாவுக்கு. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. வர்றது யாரு, முரளியேதான். வண்டி சத்தம் கேட்டதும் ரவி சட்டென வெளியில் வந்தான் கீதாவைக் கவனிக்கா மலேயே. ரவியிடம் முரளி நீட்டிய பத்திரத்தை இடைமறித்து வாங்கினாள் கீதா.’ குடுத்தாச்சுல புறப்படு’ என்று அதட்டியவனைக் கையமர்த்திய கீதா, பத்திரத்தை சுக்கல் சுக்கலாக கிழித்து எறிந்தாள்.’ஏய் என்ன பயித்தியமா’ என்ற ரவியிடம், ‘இல்ல இப்ப தெளிந்து விட்டது’ என்றாள் நமட்டு சிரிப்புடன்.

சட்டென்று முரளியின் வண்டியில் தொற்றி ஏறியவள் ‘நம்ம வீட்டுக்குப் போகலாம்’ என்று அவன் காதில் கிசுகிசுத்தாள். ‘ஏய், ஏய் எங்கேப் போறே, யாரைக் கேட்டுட்டு போறே’ என்று பின்னேயே ஓடி வந்தவனிடம் கீதா கூறினாள். ‘என் மகனை கேட்டுட்டுப் போறேன். இவ்வளவு கேவலமான மாமா வேண்டாம்னு சொல்றான். அதான்’.

சட்டென அவள் கைபற்றி ‘தேங்க் காட்’ என்று கண்ணீருடன் கூறிய முரளி வண்டியை ஸ்டார்ட் செய்தான். செய்வதறியாது முகம் வெளுத்துத் தலை குனிந்தான் ரவி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *