வீட்டின் பின் தோட்டத்தில் தான் விதைத்த மா விதைக்கு தவறாது தண்ணீர் விட்டு வந்தான் ராஜன். நாட்கள் பலவாகியும் விதை தளிர் வரவில்லை ஒரு வேலை விதையில் ஏதாவது தவறு உண்டோ. சிந்திக்க தொடங்கினான் ராஜன். பயிர்களை நட்டு வளர்ப்பது சிலருக்கு கை ராசியாக அமைவதுண்டு. அப்படிபட்டவர்களுக்கு பச்சை விரல்கள் (Green Fingers) உண்டு என்பார்கள ஆங்கிலத்தில்;. “ஒரு சமயம் எனது விரல்கள் கருமை விரல்களா? இல்லாவிட்டால் விதை ஏன் தளிர் விடவில்லை?
திருமணமாகி பத்து வருடங்களாகியும் ராஜன் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. இரு ஆண்டுகளுக்கு பின் மனைவி கருதரித்தும் மூன்று மாதங்களுக்கு ;மேல் உயிர் அவள் கருவில் தங்கவில்லை. அதே போல இரண்டாம் தடவையும் ஐந்து வருடஙகளுக்கு பின்னரும் நடந்தது. இரு தடவை கரு சிதைவு/ ராஜன் தம்பதிகளுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான். அதையிட்டு ராஜனின் மனைவி சரோஜா கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவளது கவனயீனத்தாலா இருதடவை கரு தங்வில்லை. அல்லது அவரகளு;குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதானா?.
அழகிய குணமான மனைவி. துடியிடையாள் . கை நிறைந்த சம்பளம் உள்ள உத்தியோகம். கார். பங்களா, தோட்டம். இவை இருந்தென்ன வீட்டில் கலகலப்போடு ஓடி விளையாடி குடும்பத்தை மகிழ்விக்க ஒரு உயிர் தாம்பத்திய உறவின் மூலம் குடும்பத்தில் தோன்றவில்லையே என்பது ராஜனின் தீராதக் கவலை. ஆனால் அவன் மனைவி சரோஜாவுக்கு அந்தக் கவலை இருந்ததாக அவனுக்குத் தோன்றவில்லை. இரு தடவை கரு அழிந்ததை அவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. வழக்கத்தில் பெண்களுக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை இருப்பது வழக்கம். சமூகம் தனக்கு மலடி என்று பட்டம் சூட்டக் கூடாது என்றே எந்தப் பெண்ணும் விரும்புவாள். சரோஜாவோ ஒரு புதுமையான போக்குடையவள். திருமணமான புதிதில் குடும்பக்கட்டுப்பாட்டை மனைவியின் வற்புறுத்தலின் பேரில் ராஜன் தம்பதிகள் கடைப்பிடித்தனர். ஆனால் இரண்டாம் வருடம் ஏதோ விபத்தாகவே சரோஜா கரு தரித்தாள். குடும்பகட்டுப்பாட்டில் ராஜனுக்கு; விருப்பமிருக்க வில்லை. கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு இயற்கைக்கு விரோதமாக செயல்படுவதால் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயம். “நாம் இருவர் நமக்கு இருவா”;; என்பது போல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தால் போதும். அதற்கு மேல் உன்னிடம் வேறு குழந்தைகள் பெற்றுத் தரச்சொல்லிக்; கேட்கமாட்டேன் என்று ராஜன் அடிக்கடி சரோஜாவுக்கு சொல்லுவான். அவள் அதற்கு இணங்க வேண்டுமே.
“இப்ப என்ன எங்களுக்கு வயது ஏறிவிட்டதா? ஏன் வீணாக கவலைப் படுகிறீர்;கள். குழந்தை கிடைக்கும் நேரம் கிடைக்கும். ஏன் சாஸ்திரிமார் இருவர் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்குது என்றுதானே சொன்னார்கள்;.”
“ சொன்னால் மட்டும் போதுமா இருவரும் இணங்க வேண்டுமே ஒரு உயிரை உருவாக்க. அது சரி சரோஜா, எங்களுக்கு வயது கூடிய பிறகு குழந்தை பிறந்;தால் அதன் தேகநலத்துக்கு நல்லதல்ல. ஆதனால் தான் சொல்லுகிறன்.” ராஜன் எவ்வளவோ கேட்டுப்பார்ததான். அவளோ மசியவில்லை. கவனமாக பாதுகாப்போடு கணவனோடு உடலுறவு வைத்தாள்.
“ அப்படி குழந்தை பிறக்காவிட்டால் என்ன? தற்காலத்தில் எத்தனையோ வழிகள் இருக்கிறது. ஒன்றை எடுத்து வளர்த்தால் போச்சு” சரோஜா சொன்ன விளக்கம் ராஜனுக்குப் பிடிக்க வில்லை.
“ என்னிலோ அல்லது உன்னிலோ குறைபாடு இருந்தால் நாம் வேறு வழிகளைப் பற்றி யோசிக்க வேண்டும். எமக்கு ஒரு வாரிசாவது அவசியம் தேவை. உன் அம்மாவைப் பார். ஐந்து பிள்ளைகள் பெற்று சந்தோஷமாய் வாழ்க்கை நடத்தினவள். ஏன் என் அம்மா கூட மூன்று பிள்ளைகளை பெற்றவள். உனக்கு ஒரு உதவி என்றாள் உன் சகோதரங்களைத் தேடி ஓடுகிறாய். எங்களது கடைசிகாலத்தில் எங்களுக்கு உதவியாக ஒரு ஜீவன் எமக்கு அவசியம். இதை நீ உணருவதாக யில்லை” ராஜன் சொல்லி கவலைப்பட்டான்
“ நீங்கள் ஒரு உயிர் எம் குலப் பெயர் சொல்ல தேவை என்று கவலைப்படுகிறீர்கள். உங்களுக்குத் தெரியும் எனது சினேகிதிள் வனஜாவும் தேவியும் திருமணமாகி ஒரு வருடத்துக்குள் ஒரு உயிரை வயிற்றில் சுமந்தாரகள். பாவம் குறைப் பிரசவத்தில் குழந்தைகளையும் இழநது இருவரும் மரணத்தை தழுவினாரகள். அது இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை. எவ்வளவுக்கு அவரகள் மரணம் என்னை பாதித்திருக்கிறது”. சரோஜாவின் கண்களில் வனஜாவையும் தேவியையும் நினைத்து நீர் முட்டிவிட்டது.
“குழந்தையை வயிற்றில் சுமக்கும் போது சற்று கவனமாயிருந்திருந்தால் அந்த நிலை அவளுக்கு ஏற்பட்டிருக்காது. தான் நிறை போடக் கூடாது அழகு கெட்டுவிடும் என்று உன்னைப்போல் அளவுக்கு அதிகமாக தேகப்பியாசங்கள் செய்தாள். கணவன் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை. முடிவை அவளே தேடிக் கொண்டாள்.”
“பெண்களுக்கு பிரசவம் மரணத்தின் விளிம்பிற்கு போய் வரும் அனுபவம்.” சரோஜா விடவில்லை.
“அப்படி என்றால் கர்ப்பிணிப் பெண்கள் எல்லோரும் தம் உயிரைப் பணயம் வைத்துத்தூன் குழந்தையை பெறுகிறார்களா? ஏதோ ஆயிரத்தில் ஒன்று கவனயீனத்தால் நடந்ததை உதாரணம் காட்டுவது தவறு சரோஜா.”
“ மெல்லிய, நிறை போடாத பெண்கள் மனைவியாக அமைய வேண்டும் என ஆண்கள் தேடி அலைகிறார்கள். ஏன் நீங்களும் கூடத்தான். எனது ஏடை எவ்வளவு என்று பார்க்காத ஒரு குறை.”
“ என்ன விசர் கதை சொல்லுறாய் சரோஜா.. அழகான> குணமான மனைவி தேவை என்று பார்த்தேனே தவிர நீ சொல்வது போல் என்மனைவி ஒரு மொடலாக வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உன் அக்கா திருமணமாகி ஏழுவருடங்களுக்குள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுவிட்டாள். அவள் உடல் அழகுக்கு என்ன குறை?
“ ஏனோ எனக்கு பிரசவம் என்றவுடன் ஒரு பயம். எங்கள் இனத்தவர்களில் இருவர் பிரசவத்தில் உயிர் இழந்தது எனக்கு அந்த பயத்தை உருவாக்கிவிட்டது”
“ சரோஜா தற்காலத்தில் வைத்திய முறைகள் எவ்வளவோ முன்னேறிவிட்டது. கருவின் நிலையை அடிக்கடி அவதானித்து ஆவன செய்கிறார்கள். நீ ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை.” ராஜன் மனைவிக்கு எவ்வளவு புத்திமதிகள் சொல்லியும் அவள் அதை ஏற்க தயாராகயில்லை. ஆனால் உண்மையில் தன் உடலமைப்பு பாதிப்படைந்து விடும் என்ற பயம் அவளுக்கு. அதோடு முதலில் ஒரு குழந்தை வேண்டும். சில காலத்துக்கு பின் அதற்கு துணையாக இன்னொரு குழந்தை தேவை என்பார். குடும்பம் பெருகிக் கொண்டு போகும். பிரசவங்களினால் என் உடம்பு பெருத்துக்கொண்டு போகும” இது அவள் சிந்தனை.. தனக்குத் தேவை குழந்தையா அல்லது உடல் அழகா என்ற மனப்போராட்டத்தில் சரோஜா சிக்கித்தவித்தாள். தாயும் சகோதரிகள் எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் அவள் ஏற்பதாகயில்லை. ஏதோ மேற்கத்திய பெண்ணைப் போல் அவள் சிந்தனை இருந்தது.
*******
மாதங்கள் மூன்று உருண்டோடின. ராஜன் தான் விதைத்த விதையை தோட்டத்தில் போய் பார்த்து விட்டு வீட்டுக்குள் மகிழ்ச்சியோடு வந்தான். அவன் எதிர்பார்க்காதவாறு விதை முளைவிட்டிருந்தது. அப்பாடா நல்ல சகுனம் என்று நினைத்தவாறு அறைக்குள் போகும் போது மனைவி வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. “ சரோஜாவின் குரலா அது. அவனால் அதை நம்பமுடியவில்லை; பார்த் ரூமுக்கள் போன அவன்¸ அவள் வாந்தி எடுப்பதை கண்டான். அதிர்ச்சியடைந்தான்.
“ என்ன சரோஜா வாந்தியெடுக்கிறாய்?. எதாவது சாப்பிடக் கூடாததைச் சாப்பிட்டுவிட்டாயா?. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொண்டு போய் அவளுக்கு கொடுத்தான். அவள் ஒன்றும் பேசாமல் வாயையும் முகத்தையும் கழுவிக் கொண்டு பாத்ரூமுக்கு வெளியே வந்தாள்.
“ எனக்கு தலை சுத்துது. என்னை கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க விடுங்கள்.” என்று கதிரையில் தலையைப் பிடித்தபடி அமர்ந்தாள்.
ராஜனுக்கு மனதுக்குள் சந்தோஷம். வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சரோஜா திரும்பவும் உண்டாகியிருக்கிறாளோ? ஆனால் அதை வெளியே காட்டி சரோஜாவுக்கு எரிச்சலை உண்டு பண்ணி வாக்குவாதத்தில் ஈடுபட ராஜன் விருப்பமில்லை. அவள் எக்கச்சக்கமா ஏதும் செய்துவிட்டாள் என்றால்;.? அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“ பித்தமாக இருக்கலாம். “ என்று காரணத்தை சொல்லி விளக்கினான்.
“ பித்தமும் இல்லை, வயிற்றுப் பிரட்டலும் இல்லை” என்றாள் சற்று கோபத்தோடு அவள்.
“ தேசிக்காய் பிழிந்து தேன் விட்டு கொண்டு வரவா” என்றான் ராஜன் கரிசனையோடு.
“தேவையில்லை. நீங்கள் செய்கிறதையும் செய்து விட்டு ஒன்றும் தெரியாதவன் போல் கதைக்கிறியள்.” என்றாள் சற்று கோபத்தோடு. அவளுக்குத் தெரியும் தினக் கணக்கில் தான் பிழைவிட்டது. தான் எவ்வளவு கவனமாக இருந்தும் தான் எதிர்பார்க்காதது நடந்துவிட்டதே.
“ நீ என்ன சொல்லுகிறாய். அப்படி என்ன கூடாததை செய்து விட்டேன் உனக்கு வாந்தி வர.” ஒன்றுமே தெரியாதவன் போல் பதில் அளித்தான் ராஜன்.
“ எதை நான் விரும்பவிலலையோ அதை என் உணர்ச்சிகளைத் தூண்டி சாதித்துவிடடீர்;கள்.”
“உன் சம்மதத்தொடு தானே நடந்தது? உனக்கு தெரியுமா நான் தோட்டத்தில் நட்ட மா விதை கூட தளிர் விட்டுவிட்டது.”
“என்ன நக்கல் அடிக்கிறியளா. அந்த தளிரை கூடவளர முன் பிடிங்கி எறிந்துவிடலாம்.”?
“என்ன கதைக்கிறாய். எனக்கு தெரியும் எனக்கு மறைவாக நீ இதற்கு முன்பு இரண்டு தடவை வாந்தியெடுத்திருக்கிறாய் என்று. இனியும் நாம் தாமதிக்க கூடாது. வா எங்கள் குடும்ப வைத்தியரிடம் போய் பரிசோதிப்போம்.”
சரோஜா முடியாது என்று சொல்லாமல் மௌனமாக இருந்தாள.; மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பதை அவனுக்கு தெரியாதா. சுணங்காமல் காரை போர்டிக்கோவுக்கு கொண்டுவந்து பவுத்திரமாக மனைவியைக் காரில் கைபிடித்து ஏற்றினான்.
******
பரிசோதனைகள் முடிந்ததும் குடும்ப வைத்தியர் வெளியே வந்தார்.
“சரோஜா ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீர் தாயாகப் போகிறீர். ராஜன் உங்கள் குடும்பத்துக்கு ஒரு வாரிசு வரப்போகிறது. அது சரி உங்களுக்கு திருமணமாகி எத்தனை வருடங்கள்? டாக்டர் கேட்ட கேள்வியில் அர்த்தம் இருந்தது.
“சுமார் பத்து வருஷங்கள் டாக்டர்.” ராஜன் மனைவிககு முன்பே ஏக்கத்துடன் பதில் அளித்தான்.
“இவ்வளவு காலமும் ஒரு குழந்தையும் பொறாமல் என்ன குடும்ப கட்டுப்பாடா செய்தீர்கள். என்ன மடைத்தனமான செயல். ஏன் உங்களுக்கு குழந்தைகள் மேல் விருப்பமில்லையா?
“அப்படியில்லை டாக்டர். திருமணமாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு என்மனைவி கருவுற்றாள். ஆனால் மனைவிக்கு மூன்று மாதத்தில் கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை பாக்கியம் கிட்டவிலலை. அதற்கு பிறகும இரண்டாம் தடவையும் கருச் சிதைவு. என் மனைவிக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசையிருக்கவில்லை. முக்கியமாக பிரசவத்தினால் ஒரு வேலை மரணம் ஏற்படுமோ என்று பயமே அவளுக்கு. அவளுக்குத் தெரிந்த சினேகிதிகள் இருவருக்கு நடந்துவிட்டதாம். . அவளின் வற்புருத்தளில் குடும்பகட்டுப்பாட்டை கடை பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு.”
“ என்ன சரோஜா ராஜன் சொல்வது உண்மையா?. இப்ப உமக்கு வயது முப்பத்தெட்டு. வயது ஏறிக் கொண்டு போகுது. ராஜனுக்கும் வயது கூடிகொண்டு போகுது. நீர் படித்தனீர் இப்படி சிந்திக்கலாமா?. ஆந்தக்காலத்தில் தான் பிள்ளை பெறுவதற்கு மருத்துவிச்சியை வீட்டுக்கு அழைப்பார்கள்’. இப்போ எல்லா வைத்திய வசதிகளும் உண்டு. ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை. அடிக்கடி பரிசோதனை நடத்தி குழந்தை கருப்பையில் வளர்வதை அவதானிக்கலாம்.”
சரோஜா பேசாமல் இருந்தாள்
“ உமது உடல் அழகை கவனிக்க முன்னர் கருப்பையில் புற்று நோய வருங்காலத்தில்; வராமல் பார்த்துக் கொள்ள வேண்டு;ம்” டாக்டர் எச்சரிககை செய்தார்.
புற்று நோய் என்ற வார்த்தையை கேட்டவுடன் சரோஜா ஆடிப்போனாள்.
“என்ன டாக்டர் சொல்லிறியள்.” குனிந்தபடி இருந்தவள் தலையை தூக்கி டாக்டரை பார்த்து அச்சத்துடன் கேட்டாள்.
.”வைத்திய ஆராயச்சியாளர்கள் கண்டு பிடித்த உண்மை. குழந்தைகளை பெறுவதினால் கருப்பையில் புற்று நோய் ஏற்படும் சந்தர்ப்பம் குறைகிறது. மூன்று குழந்தைகளை பெற்றால் புற்று நோய் கருப்பையில் மூன்றில் இரண்டு மடங்கு குறையும். ஒஸ்டுரஜன் அளவு தேகத்தில் கூடினால் புற்றுநோய் ஏற்படக்கூடிய நிலை அதிகரிக்கும். குழந்தைகள் அதிககாலம் பெறாமல் இருந்தால் புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புண்டு” டாக்டர் விளக்கம் கொடுத்தார்.
சரோஜா கணவனைப் பார்த்தாள். கடவுள் தந்த கொடையை வேண்டாம் என்று ஏன் மறுக்கிறாய் என்பது போல் இருந்தது ராஜனின் பார்வை.
“இனியாவது பிரசவத்துக்கு பயப்படாதே. நல்ல சத்துள்ள உணவை சாப்பிடு. அதிகமாக தேகப்பியாசத்தை செய்து உடல் பருமைனை குறைக்கலாம் என நினைக்காதே. எதையும் அளவோடு செய். குழந்தை கருவில் வளரும் போது உன் உடலும் சற்று பெருமனாவது சகஜம். அது இயற்கை. ராஜன் நீர் உமது மனைவியைக் கவனித்துக் கொள்ளும்.” டாக்டர் சொல்வதை கவனமாக இருவரும் கெட்டுக் கொண்டனர். தப்பான அபிப்பிராயங்கள் சரோஜா மனதை வீட்டு நீங்கத் தொடங்கின. அவள் கணவனின் கையை இறுக்கப்பற்றினாள். ராஜனுக்கு மனதுக்குள். சந்தோஷம்.
*****
இருநாட்களுக்குப் பிறகு ராஜனிடமிருந்து தொலைபேசிவரும் என்ற டாக்டர் எதிர்பார்க்கவில்லை.
“ டாக்டர்> நான் ராஜன் கதைக்கிறன். நீங்கள் செய்த உதவிக்கு மிகவும் நன்றி. சரோஜாவின் மனதை மாற்றிவிட்டீர்கள் என நினைக்கிறன். உங்களை பார்த்துவிட்டு வந்த பிறகு தன் தாயுக்கு தான் கரு தரித்திருப்பதை சந்தோஷத்தோடு சொன்னதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். குழந்தை வேண்டும் என்ற ஆசை அவளுக்கு வந்துவிட்டது .”
“நல்லது. உமது கவலையை உம் மனைவிக்குத் தெரியாமல் எனக்கு ஏற்கனவே சொல்லியிருந்தது நல்லதாய் போச்சு. நான் சரியான சந்தர்ப்;பத்தில் வைத்திய ரீதியான விளக்கத்தை அவளுக்கு கொடுத்தேன். பொய் சொல்லவில்லை. அவ்வளவுதான் மரணத்துக்குப் பயந்தவள் புற்று நோயுக்குப் பயப்படமாட்டாளா என்ன?” டாக்டரிடம் இருந்து சிரிப்போடு பதில் வந்தது.