உயிர்ச் சிக்கல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 7,093 
 
 

இன்றோ நாளையோ. .. அணையப் போகும் விளக்காய் அறுபத்தி எட்டு வயது கன்னியப்பன் வீட்டுக் கூடத்தில் நீண்டு படுத்திருந்தார்.

ஆறடிக்கும் அதிகமான உயரம். நல்ல வாட்ட சாட்டமான உடல்வாகு. சிறு வயதிலிருந்தே ஸ்பானரும் கையுமாய் மெக்கானிக் வேளையில் ஈடுபட்டு வந்ததால் கை விரல்கள் நல்ல நீளமாய், காய்ப்பேறி இப்போதும் இரும்பாக இருந்தது. ஒரு மலையே சாய்ந்தது போல படுத்திருந்தார்.

விரைவில் அழியப்போகும் பூ, பொட்டு என்பதினாலோ என்னவோ அவரது மனைவி விசாலாட்சி முகம் நிறைய மஞ்சள் பூசி, திருத்தமாக முடி வாரி, பூவும் போட்டும் துலங்க அவரருகில் அமர்ந்திருந்தாள். தலைமாட்டில்…. அவரையே அச்சு அசலாக உரித்துள்ள அவர் மகன் மருதவாணன் அமர்ந்திருந்தான். அவனின் புது மனைவி மைதிலி அடுப்படியில் வேலையாய் இருந்தாள்.

நான்கைந்து நாட்களுக்கு முன்பே கும்பகோணம், தஞ்சாவூர், அணைக்கரையிலிருந்தெல்லாம் இவரது நான்கு மகள்களும் கணவன்மார்களை விட்டுவிட்டு குழந்தை குட்டிகளுடன் வந்துவிட்டார்கள். எல்லோரும் தகப்பனைச் சுற்றி அமர்ந்து. ..

” அப்பா ! என்னைத் தெரியுதா பாருங்க. .” உரக்கக் கேட்டார்கள்.

கன்னியப்பனுக்கு நிறைய விசயங்கள் மறந்து விட்டது. முதல் பெண் குரல்தான் அவர் காதில் கேட்டது போல சுதாரித்து, வெகு நேரம் கழித்து. ..

” க. ..கலா. ..” ரொம்ப குழறலாக சொன்னார்.

” ஆ. .. அப்பாவுக்கு என்னை நெனைப்பிருக்கு. .! ” சின்னக் குழந்தையாய்ச் சொல்லி மகிழ்ந்தாள். முகத்தில் பரவசம் வழிந்தது.

அடுத்தவளுக்கும் அப்பாவிற்குத் தன்னை நினைவிருக்கிறதா என்று அறிய ஆசை.

” அப்பா ! என்னைத் தெரியுதா. .? ” குனிந்து அவர் காதில் உரக்கக் கேட்டாள்.

கன்னியப்பன் யோசிக்கும் விளைவாய் வலது கையை மெதுவாய் தலைக்கு கொண்டு போனார். அப்படியே நெற்றிப் பொட்டிற்கு கொண்டுவந்து ஆள்காட்டி விரலால் அதை மெல்ல தட்டி மூளையைக் கசக்கினார். வெகு நேரம் அப்படியே சிந்தனையிலிருந்தார்.

அவருக்கு அவளைப் பற்றிய நினைவில்லை என்பது புரிந்த விசாலாட்சி. .

” தாலி கட்டின பொண்டாட்டியையாவது ஞாபகமிருக்கா. .? ” கணவர் நெஞ்சைத் தொட்டு சத்தம் போட்டு விசாரித்தாள்.

” இருக்கு ..! ” கன்னியப்பன் இதை மட்டும் தெளிவாக அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார்.

முகத்தில் அவர் நிலையை யும் மீறி புன்னகை.

” அப்ப்பா. .! பொழைச்சேன் ! ” என்று நிம்மதி மூச்சு விட்ட அவள். ..

”உங்களை யார் பார்க்க வந்திருக்கா பாருங்க. .” அருகில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்த என்னைச் சுட்டிக் காட்டி கேட்டாள்.

கன்னியப்பன் மெல்ல திரும்பி என் பக்கம் பார்வையை வீசினார்.

மகளையே மறந்த அவருக்கு என்னைத் தெரிய நியாயமில்லை.

‘ தெரியல. .’ என்பதற்கு அடையாளமாக தலையை இப்படியும் அப்படியும் அசைத்து உதட்டைப் பிதுக்கினார்.

காலம் ரொம்ப விசித்திரமானது. கடவுள் மிகவும் பிரமிப்பானவர். மனித வாழ்க்கையைத் தொடங்கிய இடத்திலிருந்து முடிக்க அவரால்தான் முடியும். குழந்தையாய்ப் பிறந்தவனை தள்ளாடும் வயதில் மண்டியிட வைத்து, படுத்தப் படுக்கையாய்க் குழந்தையாகித்தானே கொண்டு செல்கிறான்.!

இந்த கன்னியப்பனுடனான உறவு எனக்கு ஆறு வயதிலிருந்தே தொடக்கம்.

அப்போது நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ‘ அரி நமோத்து சித்தம் ! ‘ என்று தொடக்கி….. அ, ஆவன்னா முடித்து,, ஒன்றாம் வகுப்பில் அரசு பள்ளிக்கூடத்தில் சேரும்போது என் அண்ணன் அங்கே ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பள்ளிக்கூடம் எங்கள் கிராமத்திலிருந்து மூன்றரை கிலோமீட்டர். சரியான மண் சாலை. அண்ணன் என்னைச் சைக்கிளில்தான் அழைத்துச் செல்வான்.

கன்னியப்பன் வீடு பள்ளிக்கு அருகில். அண்ணன் அவரை எப்படிச் சிநேகம் பிடித்தானென்று எனக்குத் தெரியாது.

ஒருநாள் எங்கள் மத்தியான சாப்பாடு வாளியைத் தூக்கிக்கொண்டு அவர் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றான். அவர் வீட்டு வாசலில் முருங்கை மரம். தெற்குப் பார்த்த கூரை வீடு.

கன்னியப்பனுக்கு அப்போது வயது இருபது, இருபத்தைந்து இருக்கும். அம்மாவுடன் வாழ்ந்து வந்தார்.

எங்களைக் கண்டதும் தாயுள்ளம் பிள்ளையும் … ” வாங்க வாங்க. ..” என்று வரவேற்றார்கள்.

நாங்கள் உள்ளே நுழைந்தபோது சுவரில் ஒரு பெண்ணின் புகைப்பத்திற்கு மாலை போட்டிருந்தது. பத்தி புகைந்தது.

” சிவா ! அந்த படத்துல இருக்கிறது இவரோட மனைவி. போன மாசம் செத்துப் போச்சு. ” அண்ணன் என் காதில் குசுகுசுத்தான்.

அண்ணன்…. கன்னியப்பனை அண்ணனென்றான்.

அவர் எங்களைத் தம்பியென்று அழைத்து உறவு கொண்டாடினார்.

அடுத்து எங்கள் வீட்டிற்கு வந்தார்.

விசாலாச்சியை மூன்றே மாதத்தில் திருமணம் முடித்தார்.

விசாலாட்சி எங்களுக்கு அத்தை மகள். அப்பாவின் சொந்த தங்கை மகள். ஒருகால் சூம்பி இழுத்து இழுத்து நடக்கும் உடல் ஊனமுற்றவள். அப்பாவிற்கு அவள்மீது வாஞ்சை. ஆகையால் அத்தையிடம் வாங்கி வளர்த்தார். எனக்கு விபரம் தெரியும்போது விசாலாட் சிக்குப் பதினெட்டு, இருபது வயது.

எங்கள் அப்பா கன்னியப்பன் தலையில் அவளை வலுக்கட்டாயமாக கட்டி வைக்கவில்லை. அவர் ஒப்புதல் பெற்று விரும்பியே கட்டி வைத்தார்.

இவளுக்கும் மாப்பிள்ளை வருவானா, திருமணம் முடியுமா என்று கலங்கிப்போன மனங்களுக்கெல்லாம் கன்னியப்பன் அவளை விரும்பி திருமணம் முடித்துச் சென்றது எல்லோருக்கும் ஆச்சரியம், ஆறுதலான விசயம்.

திருமணம் முடித்து மறாவது மாதமே அவள் கரு தரித்து தலைப்பிள்ளை வயிற்றிலிருக்கும்போது இவள் பிழைப்பாளா, மாட்டாளா என்று.. அம்மா, அத்தை, எல்லோருக்குமே வயிற்றில் நெருப்பு.

கொஞ்சம் கஷ்டம், சுகமாகப் பெற்று எடுத்ததும் நிம்மதி மூச்சு விட்டார்கள்.

அதற்கு அடுத்து அவள் ஐந்து பெற்றதெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரண விஷயம்.

ஆனால் கன்னியப்பனும் விசாலாட்சியும் அடுத்தடுத்துப் பெற்றதால் வாழ்க்கையில் ரொம்ப கஷ்ட்டப்பட்டார்கள்.

அப்போது கன்னியப்பன் ஒரு மெக்கானிக் பட்டறையில் கையாளாக இருந்தார். சொற்ப வருமானம். தினம் அரிசி வாங்கி சோறு ஆக்கினாலும் மனைவி மக்களைப் பட்டினி போடாமல் காத்தார்.

எல்லா பிள்ளைகளையும் பெற்ற பிறகுதான் மெக்கானிக் கடை வைத்தார். மளமளவென்று முன்னேற்றம்.

பத்து சதுரத்தில் ஒரு வீடு. கொஞ்சம் சொத்து, பத்து நிலம்.

மகள்களையெல்லாம் நல்ல இடத்தில் முடித்து பேரன் பேத்திகள் எடுத்து இப்போது மகனுக்கும் முடித்து…. படுத்தப் படுக்கை.!

சென்ற வாரம் இதோ அதோவென்று இழுக்க. .. எல்லா மகள்களும் வருகை.

‘ ஏறக்குறைய பார்வை மங்கி, எல்லாம் மறந்து விட்டது. போன உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு மனிதர் எதற்காக உழல்கிறார். .?’ – எழுந்து வெளியில் வந்தேன்.

பின்னாலேயே பெரிய மகளும் அடுத்த மகளும் வந்தார்கள்.

” சேதி வந்த உடனே முடிஞ்சி போச்சுன்னு நெனைச்சி போட்டது போட்டபடி புருசன் பொண்டாட்டி வந்தோம். இங்கே வந்து பார்த்துட்டுத் திரும்பிப் போன மனுசன் அங்கே சோத்துக்கு என்ன பாடுபடுறாரோ. .? ” மூத்தவள் வருத்தப்பட்டாள்.

” எனக்கு அந்த கவலையோடு இந்த புள்ளைங்க படிப்பு வேற நாலைஞ்சு நாளாய் வீணாப் போறதை நெனைச்சு வருத்தமா இருக்குக்கா. துணிஞ்சு கிளம்பிடலாம். பின்னாலேயே முடிஞ்சு போச்சுன்னு சேதி வந்தா திரும்பி ஓடி வரனும். இப்போ முடியும் அப்போ முடியும்ன்னு பார்த்தா. .. முடியறதா தெரியல. ..” அடுத்தவள் சோகம், கவலையாக சொன்னாள்.

” மனுசன் நம்ம கஷ்டமெல்லாம் தெரியாம என்னத்தை நினைச்சு உசுரைப் புடிச்சு வைச்சிருக்கார்ன்னு தெரியல. இனிமே வாழ்ந்துதான் என்ன ஆகப்போகுது. அதுக்கும் கஷ்டம். நமக்கும் கஷ்டம். வீட்டுக்கு வந்த மருமகளும் சலிச்சிடுவாள்ன்னு நெனைச்சுப் பார்க்க பயமா இருக்கு. ”

” என்னைப் பொறுத்தவரைக்கும் பொட்டுன்னு போறதெல்லாம் நல்ல சாவுக்கா. இப்படி இழுத்துப் பறிச்சிக்கிட்டு கிடக்கிறதெல்லாம் கெட்ட சாவுக்கா. ..” என்று அடுத்தவள் சொல்ல. ..

” என்னடா ! ஆள் போய்ட்டாரா. .? ” கேட்டுக்கொண்டே என் அண்ணன் சைக்கிளில் வந்தார்.

” அதைப்பத்திதான் இவுங்க வருத்தப்பட்டுக்கிட்டு வர்றாங்க. .” பின்னால் பேசிக்கொண்டு வந்த கலா கீதாவைக் கை காட்டினேன்.

” ஏன். .அப்பா போற மாதிரி தெரியலையா. .? ” அண்ணன் அவர்களைக் கேட்டான்.

” தெரியல சித்தப்பா. ..” கலா சொன்னாள்.

” மனுசன் இஷ்டப்பட்ட பொண்ணோட வாழ்ந்தார், கஷ்டப்பட்டார், நிமிர்ந்தார். இன்னும் என்ன ஆசை.?”

” இந்த கேள்விக்குத்தான் நானும் பதில் தேடிக்கிட்டிருக்கேன் ! ” பதில் சொன்னேன்.

” சரி வா பார்க்கலாம். ” அண்ணன் என்னை அழைத்தான்.

” இப்போதான் பார்த்து வர்றேன். ” என்றேன்.

” வாடா. .” என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

கன்னியப்பன் அப்படியேதானிருந்தார்.!

உற்றுப் பார்த்த அண்ணன்…

” இன்னும் முகத்துல சாவுக்களை வரலையே. .” முணுமுணுத்தான்.

புரியாமல் பார்த்தேன்.

” சாவுக்களைன்னா அ ணையப்போற விளக்கு மாதிரி முகம் பிரகாசமா இருக்கும் ! ” என்றான்.

‘ சாவு நுணுக்கம் தெரிந்த அண்ணன் எத்தனை இறப்புகளைப் பார்த்தானோ. .?! ‘ எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அண்ணன் கொஞ்ச நேரம் யோசித்து வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்தான். பின் மூளைக்குள் ஏதோ பளிச்சிட. .

” இரு வர்றேன் ! ” என்று என்னிடம் சொல்லிவிட்டு எங்கோ போனான்.

சாமி அறைக்குள் நுழைந்தான்.

‘ஆண்டவனிடம் வேண்டி திருநீர் எடுத்து வந்து பூசி ஆளைச் சாகடிக்கப்போகிறானா. .!?’ – நான் யோசிக்கும்போதே கையில் ஒரு பழைய போட்டோவுடன் திரும்பி வந்தான்.

அவன் புகைப்படத்தை மறைத்து எடுத்து வந்ததால் எனக்கு என்ன படம் என்று தெரியவில்லை.

வந்து கன்னியப்பன் அருகில் அமர்ந்து அவர் கண்ணுக்கு முன் காட்டி. ..

” இது யார் தெரியுதா. .?” அவர் காதில் குனிந்து சத்தமாகச் சொன்னான்.

கன்னியப்பன், நடுங்கும் கரங்களால் அதை பற்றி…… தன் கண்ணுக்குள் கொண்டு செல்வது போல் வெகு அருகில் உற்றுப் பார்த்தார்.

பார்த்தார் ! பார்த்துக்கொண்டே இருந்தார்.

கொஞ்ச நேரத்தில் அந்த படம் குப்புற விழுந்து அவர் முகத்தை மூடியது.

அண்ணன் அதை எடுத்து மல்லாத்தினான்

கன்னியப்பன் மூத்தாள் படம்.!!

அடுத்த வினாடி. …

” ஐயோ ! போய்ட்டீங்களே. .! ” விசாலாட்சி ஓங்கி குரல் கொடுத்து அழுதாள்.

அண்ணன், திறந்திருந்த கன்னியப்பன் கண்களைத் தன் கைகளால் மூடினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *