உயர்ந்த உள்ளம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 3,673 
 

திருவல்லிக்கேணியில் உள்ள பிள்ளையார் கோவில் திருப்பத்தில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தார்கள். அந்த நிறுவனம் காலை பத்து மணிக்கு இயங்கி மாலை ஆறு மணிக்கெல்லாம் முடிந்து விடும். அந்த நிறுவனத்தில் சரியான நேரத்தில் பணியாளர்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து பணியாற்றவேண்டும்.

அந்த நிறுவனத்திற்கு வேளச்சேரியில் இருந்து தினமும் சத்தியமூர்த்தி என்பவன் பணிக்கு வந்து செல்கிறான். அவன் பத்து மணிக்கு வந்து இருக்கையில் அமர்ந்து, தனக்குரிய பணியினை ஆரம்பித்து விடுவான். அவன் தேவையில்லாமல் யாரிடமும் பேசுவதில்லை. ஆனால் தனது பணியின் நிமித்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மட்டும் சீனியர் எழுத்தர் சீதாவிடம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்வான். கணினியில் ஏதேனும் சந்தேகம் எனில் தன்னோட அருகில் இருக்கும் மணிவண்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான். அவன் புன்னகையுடன் நிறுவனத்தில் மன ஈடுபாட்டுடன் சுறுசுறுப்பாக பணியாற்றினான். அந்த தனியார் நிறுவனத்தின் விதிமுறைகளைத் தவறாமல் கடைபிடிப்பவன், சத்தியமூர்த்தி ஒருவனாகத்தான் இருப்பான். மற்ற பணியாளர்கள் எனில் ஏதாவது அவர்கள் வீட்டில் பிரச்சினைகள் எதுவும் இருந்தால் அதனை எண்ணிக்கொண்டு மனக்கவலையுடன் இடிந்து போய் இருக்கையில் உட்கார்ந்து சோர்ந்து காணப்படுவார்கள். சத்தியமூர்த்தி மட்டும் எப்போதும் புன்னகையுடன் காணப்படுவதால் அந்த நிறுவனத்தில் உள்ள பணியாளர்களுக்கு அவனைக்கண்டு வியப்பாக இருக்கும்.

அவன் இருக்கைக்கு முன்புறம் சீதா, லாவண்யா, ஜேம்ஸ், ரவி ஆகியோர் இருந்தனர். சீதாவும் லாவண்யாவும் அரைமணி நேரம் அவர்களது வீட்டுக்கதைகள், அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள் பற்றி சிரித்து பேசி விட்டுத்தான், அவர்களது இருக்கைக்குச் சென்று பணியினை ஆரம்பிப்பார்கள். சத்தியமூர்த்தி இருக்கைக்கு இடப்புறமுள்ள கோபாலும், சந்திரனும், தங்கள் இருக்கைக்கு வந்து லஞ்ச் பாக்ஸை வைத்து விட்டு, காபி அருந்த சென்று விட்டு, அரைமணி நேரம் கழித்துத்தான் தங்கள் பணியினை தொடங்குவார்கள்.

அலுவலகத்தில் சுவர்க்கடிகாரம் பத்து முப்பது காட்டிய பின்னும் நிறுவனத்தின் தலைமை உதவியாளர் இருக்கையானது காலியாகவே இருக்கும். அவர் எப்போதும், அங்கு லேட்டாகவே வருவார், லேட்டாகவே வீட்டுக்குப் போவார். அவர் லேட்டாக வந்தததற்கு மானேஜரிடம் தினமும் ஒரு காரணத்தைச் சொல்லி விடுவார். அதனால் அவரை லேட் லெட்சுமணன் என்று அலுவலகத்தில் தங்களுக்குள் கேலியாகப்பேசி சிரித்துக் கொள்வார்கள். இவர்களுடன்தான் சத்தியமூர்த்தி அந்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தான்.

அவன் பணிக்கு வந்த புதிதில் அவனைப்பற்றி அலுவலகத்தில் கிண்டலடித்துப் பேசிச் சிரிப்பார்கள். மற்றவர்கள்போல் அவன் அங்கு வீண் அரட்டை அடிப்பதில்லை. தனக்குக் கொடுக்கப்பட்ட பணியினை எவ்விதக் குறைபாடும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து விடுவதால், தலைமை உதவியாளருக்கு மானேஜரிடம் நல்லபெயர் கிடைத்துவிடும். தலைமைஉதவியாளருக்கு சத்தியமூர்த்தியை மிகவும் பிடிக்கும். அவர் அவனிடம் “சத்தியமூர்த்தி நீங்களும் மற்றவர்கள்போல் எல்லாரிடமும் சிரித்துப் பேசிப்பழக வேண்டியதுதானே, நீங்கள் மட்டும் இங்கு ஒரேயடியாக வேலை வேலையென்று கிடக்கிறீங்க “எனக் கேட்டால், சத்தியமூர்த்தியின் புன்னகையே அவருக்கு ஒரு பதிலாக இருக்கும்.

சாப்பாட்டு நேரத்தில், அலுவலகத்தில் அனைவரும் குரூப் குரூப்பாக சாப்பிடுவார்கள். ஆனால் வாசு மட்டும் தனியாகவே உட்கார்ந்து சாப்பிடுவான். அங்கு பணிக்கு வந்த புதிதில் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்துதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் தினமும் தயிர் சாதம் ஊறுகாய் அல்லது புளியோதரை, தேங்காய் துவையல், லெமன் சாதம் இப்படித்தான் அவன் கொண்டு வரும் உணவாக இருக்கும். மற்றவர்கள் விதவிதமாக சாப்பிடுவதைப் பார்த்து, அவன் எப்போதுமே பொறாமைப்படவோ, எதையும் மற்றவர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிடுவதுமில்லை.

சத்தியமூர்த்தி சாப்பிடும் உணவைப்பார்த்து கோபால் “என்ன சத்தியமூர்த்தி சார், உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதிலே. உங்களோட ஒய்ப் வேலை ஏதும் பார்க்கவில்லைன்னு வேற சொல்றீங்க. ஒய்ப் விதவிதமாக சமைத்து உங்களுக்குக் கொடுக்க வேண்டியதானே“ என்று கேட்டதற்கு, அவருக்கு அவன் பதில் ஒரு புன்னைகையாகவே இருக்கும்.

மற்றொரு நாள் மணிவண்ணன் “சத்தியமூர்த்தி சார்! இப்படி தினமும் தயிர்சாதம் ,புளியோதரை என்று கொண்டு வந்து சாப்பிடுவது, உங்களுக்கு போர் அடிக்கல்லே” என்று கேட்டதற்கு அவன் அமைதியாக “இல்லை சார்” என்று புன்னகையுடன் கூறினான். அவன் இதையெல்லாம் கேட்ட பிறகுதான் யோசனை செய்தான். இவர்கள் மத்தியில் தான் தயிர்சாதம் சாப்பிடுவது அவர்களுக்கு ஒரு மாதிரியாகக்கூட இருக்கலாம். இல்லையெனில் என் முன்னால் அவர்கள் விதவிதமாக சாப்பிடுவது அவர்களுக்கு ‘அன் ஈசியாகக்கூட’ இருக்கலாம் என நினைத்துக்கொண்டு, அதற்குப் பிறகு அவன் தனியாகவே தன்னோட இருக்கையிலேயே இருந்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

அன்று அலுவலகத்தில் வழக்கம்போல் மணிவண்ணன், கோபால், ரவி, லேட் லெட்சுமணன் உட்கார்ந்து அரட்டையடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது தலைமை உதவியாளர் லெட்சுமணன் “மணிவண்ணன் சார், எனக்கு ஒரு யோசனை தோணுது, ஒவ்வொரு மாதமும் செகண்ட் சன் டே அன்னிக்கி நம்மில் யாராவது ஒருவர் வீட்டிற்குச் சென்று, மதியம் சாப்பாட்டுக்குச் செல்ல வேண்டும். அப்போது அவர்கள் வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட்ட மாதிரியும் இருக்கும். நமக்கெல்லாம் அது ஒரு மாறுதலாகவும், அந்தக் குடும்பத்தினரின் இணக்கமான நட்பும் நமக்கு கிடைக்கும்னு நான் நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க“ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

“சரி சார் ! நீங்க சொல்றது எங்களுக்கெல்லாம் பிடித்திருக்கு சார். அப்படியே நீங்கள் சொல்றபடியே செய்வோம்” என்று மணிவண்ணன் கூறினான். மற்றவர்களும் அதற்கு சரியென்று ஒப்புக்கொண்டனர்.

“சார்! இதுபற்றி சர்க்குலர் ஆபிசிலிருந்து எதுவும் எங்களுகெல்லாம் விடுவீங்களா?” என சிரித்துக்கொண்டே கேட்டான் ரவி .

“போங்க சார். எது சொன்னாலும் ரவி சாருக்கு கிண்டல்தான். இது நமக்குள்ளேயே பேசிகொண்ட ஒரு ஒப்பந்தம்தான். வேறொன்றுமில்லை சார்.“ என்று விளக்கினார் தலைமை உதவியாளர்.

“ஹெட் கிளார்க் சார், நாளைதான் செகண்ட் சண்டே. அதனாலே, நாங்க எல்லாரும் உங்க வீட்டுக்குச் சாப்பிட வரலாமா சார். எத்தனை மணிக்கு வரணும் சார். சொல்லுங்க சார்” என்று கோபால், தலைமை உதவியாளர் லக்ஷ்மணனை வம்புக்கு இழுத்தான்.

“பேஷ் பேஷ் , செகண்ட் சண்டே அன்னிக்கி வீட்டிற்கு நாமநாம எல்லாரும் சாப்பிடவரும் இந்த திட்டத்தை என்னோட வீட்டிலிருந்தே முதலே ஸ்டார்ட் பண்ணுவோம். நீங்க எல்லாரும் மறக்காமல் நாளை மதியம் ஒரு மணிக்குள் வந்திருங்க. என் ஒய்ப்யிடம் கூறி லஞ்ச் தயார் செய்து விடுறேன். உங்க எல்லாருக்கும் சந்தோசம்தானே!” என்றார்.

“உங்க வீட்டுச் சாப்பாட்டிலே வடை பாயாசம் எல்லாம் உண்டுல்லே சார் “ என்று மணிவண்ணன் சிரித்துக்கொண்டே கேட்டான்.

“நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்து பாருங்க சார். தடபுடலாக உங்களை எல்லாம் கவனித்து விடுறேன் சார்“ என்றார் .

திங்கள்கிழமை காலை அலுவலகம் வந்தவுடன், தலைமை உதவியாளர் இருக்கையில் அமர்ந்தவுடன், மணிவண்ணனை அழைத்தார். அலுவலகம் சம்மந்தமாக அவசரமாக ரிப்போர்ட் எதுவும் அனுப்ப வேண்டியதாக இருக்குமோ என மணிவண்ணன் பயந்துகொண்டே அவர் அருகே வந்தான்.

லெட்சுமணன் “சார்! நீங்களெல்லாம் நேற்று எங்க வீட்டுக்கு வந்தீங்களே சாப்பாடு எப்படி இருந்தது “ என்று ஆவலுடன் கேட்டார்.

“சார், நீங்க உண்மையிலே கொடுத்து வைத்தவங்க சார், உங்களுக்கு நல்லா ருசியாகச் சமைத்துப்போடும் ஒய்ப் கிடைச்சிருக்காங்க சார் “ என்றான்

இவர்கள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ரவியும் கோபாலும் லெட்சுமணன் இருக்கைக்கு அருகில் வந்தவர்களைப் பார்த்து “நாம ஒரு தப்பு பண்ணி விட்டோம். நம்ம சத்தியமூர்த்தியை அழைக்க மறந்து விட்டோமே. நீங்களும் எனக்கு ஞாபகப்படுத்தாமல் இருந்துட்டீங்களே ! “ என்றார்.

“சத்தியமூர்த்தி சார்தான் கூட்டத்தோட சாப்பிடவே பிடிக்க மாட்டங்குதே ஹெட் கிளார்க் சார் “ என்றான் ரவி.

“சரி சார், அடுத்து வரும் செகண்ட் சன்டே அன்னிக்கி நாம் எல்லாரும் சத்தியமூர்த்தி சார், வீட்டுக்குப் போவோம். போனால் அவர் வீட்டைப் பற்றி தெரிந்து விடும் சார். தினமும் அவர் ஏன் தயிர்சாதம் கொண்டு வர்றார். இதற்கு என்ன காரணம் இருக்கும் என்றும் கண்டுபிடித்து விடலாம் சார்“ என யோசனை கூறினான் மணிவண்ணன்.

லெட்சுமணன் “ மணிவண்ணன் சார் கூறியபடி சத்தியமூர்த்தி வீட்டுக்கு போய் அவர் வீட்டு நிலைமையை அறிந்து, பொருளாதார ரீதியாக எதுவும் அவருக்குச் செய்ய முடிந்தால் நாம் உதவி செய்வோம்“என்று கூறினார்.

அவர்கள் பேசுவதையெல்லாம் எதையும் கண்டு கொள்ளாமல் சத்தியமூர்த்தி பணியில் எப்போதும்போல் கவனமாக இருந்தான். “அலுவலகத்தில் நாம் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறோம், சத்தியமூர்த்தி சார் மட்டும் எதையும் கண்டுக்காமல் இருக்கிறாரே! இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் இப்படிப்பட்ட ஒரு சின்சியரான வித்தியாசமான மனுசனை நான் பார்த்ததேயில்லே ஹெட் கிளார்க் சார் ” என்று ரவியும் மணிவண்ணனும் கூறினார்கள்.

“சார், ஒருவேளை சத்தியமூர்த்தி சாருக்கு மாரேஜ் ஆகியிருக்காதோ. நம்மகிட்ட மாரேஜ் ஆகி விட்டதுன்னு பொய் சொல்லியிருப்பாரோ“

மணிவண்ணன் .”சத்தியமூர்த்தி சார் அதனால்தான் தினமும் ஹோட்டலில் இருந்து தயிர்சாதம் வாங்கிக்கிட்டு வர்றாரோ என்னமோ” என்றார்.

அன்று சனிக்கிழமை அந்த அலுவலகமானது மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. சத்தியமூர்த்தி இருக்கைக்கு தலைமை உதவியாளர் லேட் லெட்சுமணன் சென்றார். சத்தியமூர்த்தி உடனே பதட்டத்துடன் எழுந்து நின்றான். “சத்தியமூர்த்தி பதட்டப்படாதீங்க, நான் உங்ககிட்ட பேச வந்தது நம்முடைய அலுவலக விசயமே இல்லை” என்று கூறிவிட்டு தங்களது இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைத் திட்டத்தை அவனுக்கு விளக்கினார்.

சத்தியமூர்த்தி அதனைக் கேட்டு “நல்ல திட்டம்தான் ஹெட் கிளார்க் சார். எல்லாருக்கும் ஒரு மாறுதலாக இருக்கும். அலுவலக நண்பர்களின் குடும்ப நட்பும் நமக்கு இணக்கமாக கிடைக்கும் “ என்று மகிழ்ச்சியுடன் கூறி வரவேற்றான்.

லெட்சுமணன் “சத்தியமூர்த்தி சார், எங்கள் திட்டத்தின்படி நாளைக்கு, நாங்க நால்வரும் உங்க வீட்டு சாப்பாடு எப்படி இருக்கும்னு நாங்க பார்க்க வர்றோம். உங்க ஒய்ப்-ஐ சாப்பாடு ரெடி பண்ணி வைக்கச் சொல்லுங்க. உங்களுக்கு ஏதும் இதில் சிரமம் இல்லயே” என்றார்.

சத்தியமூர்த்தி நீண்ட யோசனைக்குப் பிறகு அவரிடம் தயங்கித் தயங்கி “ சரி சார், நம்ம அலுவலக நண்பர்கள் என்னோட வீட்டுக்கு வருவது ரெம்ப சந்தோசம்தான் தாராளமாக வாங்க சார்“ என்றான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை அலுவலக நண்பர்கள் நான்கு பேரும் சத்தியமூர்த்தியின் வீட்டிற்கு மதியம் சென்றார்கள். சத்தியமூர்த்தி அனைவரையும் புன்னகையுடன் வரவேற்றான். சிறிதுநேரம் அவர்களுக்குள் சிரித்துப்பேசிக் கொண்டே இருந்தார்கள்.

சத்தியமூர்த்தி“ஹெட் கிளார்க் சார் டைம் ஆயிடுத்து சாப்பிடலாமா ? எல்லாரும் உட்காருங்கள் “ என்று கூறிக் கொண்டே நான்கு பேருக்கும் இலையைப் போட்டு அவனே பரிமாற ஆரம்பித்தான்.

“என்ன சத்தியமூர்த்தி சார்! நீங்களே பரிமாறுறீங்க நீங்களும் எங்களுடன் வந்து உட்காருங்கள் சார்“ என்று மணிவண்ணன் கூறினான்.

“மணிவண்ணன் சார்! நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு வந்த ‘கெஸ்ட்’ நான்தான் உங்களைக் கவனிக்கணும். எல்லாரும் சாப்பிடுங்கள்“ என்று சிரித்துக் கொண்டே சத்தியமூர்த்தி கூறினான்.

அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் “சத்தியமூர்த்தி சார், நீங்க சாப்பிடுங்க நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம்” என்று கோபால், அவனைச் சாப்பிடுவதற்கு ஞாபகப்படுத்தினான்.

“பரவாயில்லை சார், கொஞ்ச நேரம் நானும் உங்களோடு பேசி விட்டு அப்பறம் நான் சாப்பிடுறேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினான்.

ரவி மட்டும் எழுந்து நின்று சத்தியமூர்த்தி வீட்டுச்சுவரில் மாட்டப்பட்ட படங்களைப் பார்த்தான். ஒரு பக்கத்தில் பெரிய வள்ளலார் படம். மற்றொரு பக்கத்தில் அதே அளவில் சுவாமி விவேகானந்தர் ,ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி படம் என்று மகான்கள் படங்களாக அலங்கரித்து கொண்டிருந்தன. ரவி சத்தியமூர்த்தியிடம் “சத்தியமூர்த்தி சார்! நீங்க ஒரு ஆன்மீகவாதி என்பதை உங்க வீட்டில் மாட்டப்பட்டுள்ள படங்களே, நன்கு காட்டிக் கொண்டிருக்கிறது” என்றான். சத்தியமூர்த்தி எதுவும் கூறாமல் வழக்கம்போல் அவனது புன்னகைதான் பதிலாக இருந்தது.

லெட்சுமணன் “சரி சத்தியமூர்த்தி சார்! ரொம்ப சந்தோசம் நாங்க கிளம்பறோம். அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நம்ம திட்டப்படி ரவி சார் வீட்டு விருந்தில் , நீங்களும் எங்களைப்போல் இதுபோல் கலந்து கொள்ளணும்” என்று கூறிக் கொண்டிருக்குபோது, மணிவண்ணன் அவர் காதில் ஏதோ முணுமுணுத்தவுடன், லெட்சுமணன் “சத்தியமூர்த்தி சார் இவ்வளவு நேரம் உங்க ஒய்பை நாங்க பார்க்கவில்லையே, அவங்களை கூப்பிடுங்க. நாங்க அவங்களிடம் நன்றி சொல்லிட்டு போகவேண்டாமா..?“ என்றார்.

“ஸாரி சார்! இதோ அழைச்சிட்டு வர்றேன்” என்று கூறிக்கொண்டே பக்கத்துக்கு அறைக்குச் சென்றான். சென்றவன் அந்த அறையிலிருந்து தன்னோட மனைவியை வீல்சேரில் தள்ளிக் கொண்டு வந்தான். அதனைப் பார்த்து ,அனைவரும் திகைத்து நின்றனர்.

லெட்சுமணன் “சத்தியமூர்த்தி சார்! இவங்களா உங்க ஒய்ப். ஏன் இந்த நெலமை?ஒங்க ஒய்புக்கு எத்தனை வருசமாக இப்படி இருக்கு” என்று வருத்ததுடன் கேட்டார்.

“ஆமா சார். இவங்கதான் என் ஒய்ப். நான் மாரேஜ் செய்த ஒரு வருடத்திலே திடீரென்று என்னோட ஒய்புக்கு காலும் கையும் வரவில்லை. சரியாகப் பேசவும் முடியாது. நான்தான் இவங்களைக் குழந்தைபோல் கவனித்துக் கொள்றேன் ” என்று கூறினான். இயலாத தன் மனைவியை இப்படிக் கவனித்துக் கொள்வதில் அவனுக்கு எந்தவித சிரமமோ வெறுப்போ இல்லை என்பதை அவன் செயலிலிருந்தும் பேச்சில் இருந்தும் அனைவரும் புரிந்து கொண்டனர்.

“சத்தியமூர்த்தி சார்! இவ்வளவு பெரிய மனக்கஷ்டத்தையும் பாரத்தையும் தாங்கிக்கொண்டு அதனை வெளிக்காட்டாமல், எப்படி எங்களிடம் அலுவலகத்தில் இப்படி புன்னகை மாறாமல் உங்களால் எப்படி இருக்க முடியுது” என்றார் தலைமை உதவியாளர்.

சத்தியமூர்த்தி அமைதியாக அவர்களிடம் பதில் எதுவும் கூறாமல், மேலே சுவரில் மாட்டியிருந்த விவேகானந்தர் படத்தைப் பார்த்தான். உடனே ரவியும் மற்றவர்களும் அந்த விவேகானந்தர் படத்தக்கு கீழே என்ன எழுதியுள்ளது என்பதை அனைவரும் படித்துப் பார்த்தனர். அதில் ‘உனக்கு கவலையோ துக்கமோ இருந்தால், அதனை வெளியே எடுத்துச் செல்லாதீர்கள். உங்கள் கவலைகளையும் துன்பத்தையும், வெளியில் உள்ளவர்களிடம் காட்டி, அவர்களையும் துன்பப்படுத்துவதற்கு உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பதை உணருங்கள்!’ என்றிருந்தது.

அதைப் படித்துப் பார்த்து புரிந்துகொண்ட, லெட்சுமணன் சத்தியமூர்த்தியைப் பார்த்து உணர்ச்சி மிகுதியில் கண்ணில் நீர் ததும்ப “சத்தியமூர்த்தி சார்! ‘யூ ஆர் வெரி கிரேட்’ நீங்க என்னைவிட வயதில் சிறியவராக இருந்தாலும், உள்ளத்தில் எங்களை விட நீங்க ஒரு உயர்ந்த உள்ளம் படைத்தவர்தான்“ என்று கூறி விட்டு கனத்த இதயத்துடன் அனைவரும் சத்தியமூர்த்தியிடம் விடை பெற்றார்கள்.

– வானமே எல்லை டிசம்பர் 2019 மாத இதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *