உயர்ந்த உள்ளம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 2,493 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தாயின் சொல் கேட்டு வளர்ந்த ரவி பட்டப் படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் உதவி அதிகாரியாக பணி புரிந்து வந்தான். செல்லம்மாள் தன் மகன் ரவியை படிக்க வைக்க அரும்பாடு பட்டாள். ரவி தொலைக்காட்சியில் பகுதி நேரமாக பாடகனாகவும், அறிவிப்பாளனாகவும் தன் திறமையைக் காட்டி வந்தான்.

இளமையும், துடிப்பும் கொண்ட ரவிக்கு பெண் கொடுக்க பலர் முன் வந்தனர். பெரிய இடத்துப் பெண்ணை தன் மகன் ரவிக்கு கட்டி வைக்க செல்லம்மாள் மிகவும் தயங்கினாள்.

நல்ல நேரம் வந்தால் நிற்காது என்பார்கள். பத்து நாளில் பெண்ணைப் பார்த்து நிச்சயமும் செய்யப்பட்டது. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த, நன்கு படித்த அர்ச்சனாவை பார்த்தவுடன் ரவிக்கு பிடித்துவிட்டது.

படித்தவள், ஒரே பெண் என்ன குறை வந்துவிடப் போகிறது என ஆணித்தரமாக நம்பினான் ரவி. விரைவில் திருமணத்திற்கு நல்ல நேரம் பார்த்து ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ரவி, அர்ச்சனா இருவருமே இன்ப வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தனர்.

(பாடல் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்)

திடீரென்று ஒரு நாள் அர்ச்சனாவின் தந்தை சேகர், ரவியின் தாய் செல்லம்மாவிடம் வந்து,

“இதோ பாருங்க சம்மந்தியம்மா, எனக்கு அர்ச்சனா ஒரே மக, செல்லமா வளர்த்திட்டேன், எங்க வீடும் பெரிய வீடு, கல்யாணத்துக்குப் பிறகு ரவி எங்க வீட்டோட மாப்பிள்ளையா இருக்கனும் ” என உத்தரவிட்டார்.

செல்லம்மா கலங்கியே விட்டாள். “என்னங்க சொல்றீங்க, பெண்தானே புகுந்த வீட்டுக்கு வரனும் அதுதானே நம்ம பண்பாடு” என்றாள்.

“கல்யாணத்துக்குப் பிறகு கலாட்டா வேண்டாம்னுதான் நான் இப்பவே சொல்றேன், ரவிகிட்ட சொல்லுங்க, அவர் நிச்சயம் சம்மதிப்பார்” என கூறிவிட்டு சேகர் போய்விட்டார்.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய ரவியிடம், செல்லம்மாள் தேநீரை கொடுத்துவிட்டு மெதுவாக அர்ச்சனாவின் தந்தை சேகர் கூறியதைச் சொன்னாள்.

அதற்கு ரவி, “என்னம்மா கல்யாணத்துக்கு முந்தியே பிரச்சனய கிளப்பறாங்க, எனக்கு பிடிக்கலேம்மா பேசாம கல்யாணத்த நிறுத்திடுவோம் என்றான். பதற்றத்துடன் செல்லம்மாள் “டேய் ரவி, எல்லா ஏற்பாடும் பண்ணி கல்யாண பத்திரிக்கையும் எல்லாருக்கும் கொடுத்தாச்சு கல்யாணத்த நிறுத்த வேண்டாம், கல்யாணம் முடிஞ்ச பிறகு நீ அர்ச்சனாகிட்ட பக்குவமா பேசி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடு” என்றாள். நல்ல நாளில் ரவி-அர்ச்சனா திருமணம் நடந்தது. மணமக்கள் தேனிலவுக்கு சென்று உல்லாசப் பறவைகளாக பறந்து இன்பப் பண் பாடினர்.

(பாடல் : இதழில் கதை எழுதும் நேரமிது)

திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் அர்ச்சனா தன் கணவன் ரவியிடம், “என்னங்க இனிமே நீங்க டிவியிலே பாட வேண்டாம்” என்றாள். திடுகிட்ட ரவி “என்ன சொல்றே அர்ச்சனா?” என்றதும்,

நீங்க வேற பெண்களோட சேர்ந்து பாடறது எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கலே, நமக்கு என்ன குறை? எங்க அப்பாகிட்ட நிறைய பணம் இருக்கு, எல்லாம் நமக்குத்தானே? பாடி பணம் சம்பாதிக்கிற அவசியம் இல்லே” என்றாள்.

பதிலுக்கு ரவி, “இதோ பாரு நான் கடந்த பத்து வருஷமா டி.வி. மேடையிலே பாடிட்டு வரேன், இது என் மனசுக்கு ஆறுதல் தருது, எல்லாத்தையும் கலைக்கண்களோட பார்க்கனும்” என்றான்.

நாட்கள் சென்றன. அதன் பிறகு ரவி, அர்ச்சனா இருவரின் நெருக்கம் குறைந்து எந்திரமாக செயல்பட்டனர். அர்ச்சனாவிடம் மனம் விட்டுப் பேசி அவளை அழைத்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கு செல்ல நினைத்தான். ஆனால், அர்ச்சனா வீட்டிலேயே இருப்பதில்லை. ஞாயிற்றுக்கிழமையும் ஏதோ வேலை என்று கூறி வெளியே சென்று விடுவாள்.

வீட்டில் வேலைக்காரிதான் ரவிக்கு உணவு பரிமாறினாள். எல்லாம் வேலைக்காரி பார்த்துக் கொள்வாள் என்று அர்ச்சனா நினைத்தாளே தவிர, தன் கணவன் ரவியை அன்போடு உபசரித்து கவனிக்கத் தவறினாள்.

அர்ச்சனாவின் தந்தை சேகர் வியாபார விஷயமாக அடிக்கடி வெளிநாடு சென்று விடுவார். யாரிடம் சொல்லி வழி தேடுவது என ரவி மனம் கலங்கினான். அவனுக்கு அவன் தாய் செல்லம்மாவின் நினைவு வாட்டியது.

(பாடல் : நானாக நானில்லை தாயே! நல்வாழ்வு)

ரவி வழக்கம் போல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடி வந்தான். ஒரு நாள் ரவி தைரியத்துடன் அர்ச்சனாவிடம், “அர்ச்சனா, எனக்கு இங்க இருக்க பிடிக்கல. நாம ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு போயிடலாம்” என்றான் ரவி.

“உங்க வீட்டுக்கா? ஏன் இங்க என்ன குறையாம், வேலக்காரி நல்லாத்தானே எல்லாம் பார்த்துக்கறா, நமக்கும் செலவு குறைவு, எங்க அப்பாவும் பொறுப்பா கவனிக்கிறார்” என்றாள், அர்ச்சனா.

“நம்ம கல்யாணத்துக்கு முந்தி எல்லாம் கவனிக்கறது அவர் கடமைதான். ஆனா இப்ப நம்ம பொறுப்பை தட்டிக் கழிக்கறது பின்னால நமக்குத்தான் பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தும், கல்யாணத்துக்கு முந்தியே உங்கிட்ட பேசனும்தான் நினச்சேன்” என்று ரவி கூறியதும்,

பதிலுக்கு அர்ச்சனா, “எங்க அப்பாவுக்கு நான் ஒரே பொண்ணுன்னு தெரிஞ்சு எங்க பணத்துக்கு ஆசப்பட்டுதானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க” என்றதும், ரவி தீயை மிதித்தவன் போல் துடித்ததுடன் கோபத்தில் அர்ச்சனாவை அடித்துவிட்டான்.

“எங்க அம்மா சொன்னாங்கன்னுதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன், உன் பணம் அது யாருக்கு வேணும்? தூக்கி குப்பையிலே போடு” என்று கூறினான் ரவி.

பதிலுக்கு அர்ச்சனாவோ, “நான் உங்க வீட்டுக்கு வரமாட்டேன், அரண்மனை மாதிரி இருக்கற எங்க வீட்டுல உங்களுக்கு வாழத் தெரியல” என்றாள்.

மீன் என்று நினைத்து பாம்பைத் தொட்டவன் போல ஆனான் ரவி, அங்கு இருக்க பிடிக்காமல் வெளியேறி விட்டான் ரவி. ஆனால், அவன் மனம் தனிமையில் அமைதியைத் தேடியது.

(பாடல் : எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி, அங்கே)

மன உளைச்சலுடன் ரவி தன் தாயைத் தேடிச் சென்றான். செல்லம்மாள் அன்போடு தான் சமைத்த கத்திரிக்காய் கூட்டு, வெண்டைக்காய் பொறியல், தக்காளி சட்னியையும் கனிவோடு பரிமாறி ரவியை சாப்பிட வைத்தாள். பின்பு,

“ரவி, நான் எல்லாம் கேள்விப்பட்டேன், இதற்கெல்லாம் மனங்கலங்கக் கூடாது, வாழ்க்கையில மேடு, பள்ளம் வருவது சகஜம்” என்றாள்.

அதற்கு ரவி “பணக்காரப் பெண்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்படி பிரச்சனை வரும்னு தெரிஞ்சிருந்தா” என்று பேசத் தொடங்கியதும் செல்லம்மாள் இடைமறித்து,

“வாழ்க்கைங்கற வண்டி ஓட ரெண்டு சக்கரங்களும் சரியா இருக்கனும், விட்டுக் கொடுக்கறதுதான் வாழக்கை, கவலைப்படாதே ரவி, நீ உனக்கென்று ஒரு வீட்டை வாங்கி அங்கே அர்ச்சனாவ அழைச்சா அவ கண்டிப்பா வருவா.” “நான் நெடுநாளா இந்தியாவுக்குச் சென்று கோவில்களை தரிசிக்க ஆசப்பட்டுக்கிட்டு இருக்கேன். அங்க என் அக்கா இருக்காங்க உனக்கு தெரியுமில்லே, அவங்களோட ஒரு ஆறு மாசம் இருந்துட்டு வாரேன்’ என்றாள்.

ரவியோ “ஏன் மா இந்த திடீர் ஏற்பாடு” என்றான். செல்லம்மாள், “இல்லேப்பா இது என் பல நாள் கனவு அதற்கு இப்பத்தான் நேரம் வந்திருக்கு” என்றாள்.

இதற்கிடையில் சேகர் எல்லாம் அறிந்து தன் மகள் அர்ச்சனாவுக்கு நல்ல புத்திமதிகளை கூறி, ரவி வீட்டுக்கு அழைத்து வந்து செல்லம்மாவிடமும், ரவியிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன்,

“அர்ச்சனா மனம் பக்குவப்படாதவ, நான் அவளிடம் எல்லாம் பேசிட்டேன், இனிமே ரவி எடுக்கற முடிவுக்கு அர்ச்சனா கட்டுப்படுவா” என்றார் சேகர்.

அதோடு, “அர்ச்சனா ரவியின் பாடும் திறமையை மதிக்கிறா, அதனாலதான் ரவியை திருமணம் செஞ்சுகிட்டா, அளவுக்கு அதிகமான அன்பால தன் கணவன் தன்னோடு மட்டுமே நெருக்கமா இருக்கனும்னு நெனச்சு ரவியை வெறுக்கற மாதிரி இருந்தாளே தவிர அர்ச்சனாவும் ரவியோடு வாழனும்னுதான் ஆசைப்படறா” என்றார் சேகர்.

“இனிமேல் அர்ச்சனா பொறுப்புடன் நடந்து கொள்வாள்” என உத்தரவாதமும் கொடுத்தார் சேகர். ரவியும் மனம் மாறி மகிழ்ச்சியுடன் காணப்பட்டான்.

முத்துமாலையில் சேர்க்கப்பட்ட மாணிக்கம் போல ரவியும் அர்ச்சனாவும் ஒன்று சேர்ந்தனர்.

அவர்கள் வாழ்க்கை பண்பாடிச்செல்லும் நீரோடை போல காட்சி தர, நதிக்கரை மரங்களில் வாழ்ந்த பறவைகள் மங்கள கீதம் பாடின.

– சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8ல் நவம்பர் 2004ல் ஒலிபரப்பப்பட்டது, இசையும் கதையும், நவம்பர் 2004, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

1 thought on “உயர்ந்த உள்ளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *