உயரங்களும் சிகரங்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2023
பார்வையிட்டோர்: 2,392 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராமு என்கிற ராமநாதனுக்கு வயது முப்பத்தி இரண்டு. ஆனால் அவனது உயரம் முப்பதுதான்.. என்ன குழப்புகிறேனா? முப்பது அங்குலமே அவனது உயரம். அவனைப் போன்றோர் ஒன்று சர்க்கஸில் இருக்க வேண்டும் அல்லது சினிமாவிலோ நாடகம் மற்றும் கூத்து போன்ற அமைப்பிலோ இருக்க வேண்டும் எனபது விதி. ஆனால் இதிலும் ராமுவின் வாழ்க்கையில் வித்தியாசம் உண்டு. ராமு எல்லோரையும் போல பள்ளிக்கூடம் போனான். ஆனால் ஆறாம் வகுப்பு தாண்டும் போதே அவனுக்கும் அவனைச் சுற்றி இருந்தோர்க்கும் தெரிந்து விட்டது அவன் வளர மாட்டான் என்று. ஆனாலும் ஏழ்மையிலிருந்த அவனது பெற்றோர் அவனை அரசு மருத்துவமனையில் இருக்கும் உடல் கூறு ஆய்வு நிபுணர்களிடம் தவறாமல் கொண்டு போய் காட்டினர். அவர்களும் சளைக்காமல் அவனுக்கு மருந்து மாத்திரை களை இலவசமாகக் கொடுத்தனர். இதனால் அவனது உடல் வலிமை பெற்றதே தவிர உடல் உயரமாகவில்லை. ஆரம்பத்தில் ராமுவுக்கு இது கொஞ்சம் மன வருத்தத்தைக் கொடுத்தது.. ஆனால் போகப் போக இதுவே தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டான். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அவனது ஆறாம் வகுப்பு ஆசிரியர் ஆனந்தராசன் அய்யா அவர்கள்.

“ராமு! உயரம் குறைவு என்பது ஊனமே இல்லை. ஆப்பிரிக்க கண்டத்தில் பிக்மி என்னும் இனத்தவர், இன்னும் குள்ள மனிதர்களாகவே தான் இருக்கின்றனர். ஆனால் விஷ அம்புகளைக் கொண்டு, குறி தவறாமல் எய்து வேட்டையாடுவதில் இன்னமும் அவர்களை மிஞ்ச எந்த வெள்ளைக்காரனாலும் முடியாது. அவர்கள் இனம் இன்னமும் உலகில் வாழ்வதற்கு, அந்த இனத்தின் தன்னம்பிக்கை கூட ஒரு காரணம். உடலால் உன்னால் எட்ட முடியாத உயரத்தை வேறு ஒன்றால் உன்னால் எட்ட முடியும்! “ ராமு அவரை வியப்புடன் பார்த்தான். எட்டுவது என்றாலே அது உடலும் உயரமும் சம்பந்தப்பட்ட விசயம்தானே. பின் வேறு எதால் உயரத்தை எட்டுவது?

“ராமு கல்வி என்பது, பல சிகரங்களை எட்ட, உனக்கு அறிவு பலத்தைக் கொடுக்கும். உடல் ஊனமுற்ற எத்தனையோ பேர் சிறந்த அறிவாளிகளாக இருந்திருக்கின்றனர் இந்த உலகில். அதனால் உன் உடல் உயரக் குறைவை ஒரு பொருட்டாக எண்ணாதே. படி நன்றாகப் படி. அதுவே உன் வாழ்க்கையை மாற்றிக் காட்டும் ராமு ஏழாம் வகுப்பு போனபோது, பள்ளியே அவனது திறமையைப் பார்த்து, அவனுக்குத் தேவையான புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் கொடுத்து உதவியது. அதற்குப் பின்னால் ஆசிரியர் ஆனந்தராசன் இருந்தார் என்பதை அவன் பின்னாளில் அறிய நேர்ந்தது.

சரியாகப் படிக்காத மாணவர்கள் முன்னிருக்கையில் அமரச் செய்து இன்னும் கூடுதலாக அவர்கள் பால் கவனம் செலுத்தி ஆசிரியர்கள் அவர்களையும் நல்ல மதிப்பெண்கள் வாங்க வைக்கும் முறை ஒன்று அந்தப் பள்ளியில் இருந்தது. அதன் படி பார்த்தால் ராமு முன் வரிசையில் அமரவே முடியாது. அவன்தான் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து விடும் திறமையான மாணவனாயிற்றே. ஆனால் அவனது உயரம் குறைவான காரணத்தால் பின் வரிசையிலிருந்து அவனால் கரும்பலகையில் எழுதப்படும் பாடங்களைச் சரியாக பார்க்க இயலாது. அதனால் ஆனந்தராசன் அய்யா அவர்கள் அவனுக்காக ஒரு மேசை நாற்காலியை ஆசிரியர் இருக்கைக்கு அருகில் போட்டு, அவன் அதில் அமருமாறு செய்தார். அதுவும் அவன் பள்ளிக் கல்வியில் வெற்றி பெறுவதற்கு உதவி செய்தது. பள்ளி இறுதி வகுப்பில் அவன் படிக்கும்போது ஆனந்தராசன் அய்யா ஓய்வு பெற்று விட்டார். அவரது சொந்த கிராமம் பள்ளி இருந்த ஊரிலிருந்து ஐம்பது மைல் தொலைவில் இருந்தது. கொஞ்சம் போல சுவாச பாதிப்பு நோய் அவருக்கு இருந்தது. அதனால் வெகு தொலைவு நடக்கவோ, பிரயாணம் செய்யவோ அவரால் இயலாது போயிற்று. பிரிவு உபசார விழாவில் ராமுவை அவர் அருகில் அழைத்து வைத்துக் கொண்டார். காதோரம் அவர் கிசுகிசுப்பான குரலில் அவனுடன் பேசிக் கொண்டிருந்தார். ‘ ராமு கவனத்தை எதிலும் சிதற விட்டுராதே. இது கவனத்தை சிதைக்கிற வயசு. எத்தனையோ வெளி மாயைகள் உன்னை தன் பால் ஈர்க்க முயற்சி பண்ணும். அதற்கெல்லாம் மயங்கி விடாதே. உன்னுடைய ஒரே குறிக்கோள் கல்வி ஒன்று தான். நான் இன்றிலிருந்து உன் அருகில் இருக்க மாட்டேன். ஆனால் இந்த பேனாவை வைத்துக் கொள். நான் அருகில் இருப்பதாக நினைத்துக் கொள். எப்போதாவது உன்னால் வர முடியுமென்றால் என் கிராமத்துக்கு வா. என் வீட்டில் தங்கு. உனக்கான சந்தேகங்களை தீர்த்துக் கொள். என்ன சரியா?

ராமு அந்தப் பேனாவை பயன்படுத்தவே இல்லை. தினமும் குளித்து புதிய உடை அணிந்து அந்தப் பேனாவை அதன் புது மெருகு கலையாத பெட்டியிலிருந்து எடுத்து பூசை அறையில் சாமி படங்களுக்கு அருகில் வைத்துக் கும்பிடுவான். அதற்கு பூ போடுவான். பிறகு பக்தியுடன் அதை மீண்டும் அதன் பெட்டியில் வைத்துப் பூட்டி விடுவான். அவனைப் பொறுத்த வரை அதுவே குரு பூசை!

ராமு நன்றாகப் படித்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. பள்ளியில் முதல் மாணாக்கனாக வந்தான் என்பது வரலாறு. வாரம் தவறாமல் ஞாயிறன்று தன்னுடைய இலவச அரசு சைக்கிளில் அவன் ஆனந்தராசன் அய்யா இருக்கும் கிராமத்துக்கு போய் விடுவான். அவனது சைக்கிளின் முன் கூடையில் அய்யாவுக்கு தன் வீட்டு தோட்டத்தில் விளைந்த காய், கனிகள் இருக்கும். தன் நண்பர்களின் பெற்றோர் வீட்டில் வேண்டாம் என்று ஒதுக்கப்படும் புத்தகங்கள் இருக்கும். அய்யா கண்ணாடி போடாமல் இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு புத்தகங்களே வகுப்பறை. சில சமயம் கையில் புத்தகமும் பிரம்புமாக அவர் படித்த ஏதோ ஒரு விசயத்தை விளக்கிக் கொண்டிருப்பார். ஆசிரியப்பணி அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று.

‘அய்யா! இன்னிக்கு சங்க காலப் பாடல்கள் பற்றி ஏதாவது சொல்லுங்களேன் “ என்பான் ராமு. அதுவரை தோய்ந்து உட்கார்ந்திருந்த அய்யாவின் உடலில் முறுக்கேறும். சாளரம் இல்லாத சுவரை பார்த்துக் கொண்டே அவர் வகுப்பெடுப்பார்.

அய்யாவுக்கு இப்போது பற்கள் உதிர்ந்து கொண்டே வருகின்றன. மொழியில் கொஞ்சம் தெளிவு குறைவாக இருக்கிறது. ஆனாலும் ராமுவின் காதுகளில் அவரது பழைய கணீர் குரல்தான் கேட்கும். அய்யாவுக்கு மனைவி இறந்து போய், கோகிலா என்று ஒரே மகள் இருக்கிறாள். அவளே அய்யாவைப் பார்த்துக் கொள்கிறாள். அய்யாவுக்கு சொந்த வீடு இருந்தாலும் நிலபுலன்கள் கிடையாது. ஓய்வூதியம் என்று சொற்ப தொகை வருகிறது. அதிலும் கொஞ்சம் தபால்கார்ர் எடுத்துக் கொள்வார். மீதத்தில் ஓடுகிறது வாழ்க்கை.

கோகிலா பெரிய பெண் ஆனவுடன் ஊர் வழக்கப்படி அவளை பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டார்கள். அய்யாவுக்கு அதில் உடன்பாடு இல்லைதான். ஆனாலும் மென்மையான அய்யாவால் ஊரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.

ராமு தன்னுடைய பழைய புத்தகங்களை கோகிலாவுக்கு கொடுப்பான். அவனே அவளுக்கு ஆசிரியராகவும் இருந்தான். அதனால் கோகிலாவுக்கு அவன் மேல் மரியாதை உண்டு. கையில் சான்றிதழ் இல்லாவிட்டாலும் கோகிலாவும் மெத்தப் படித்தவள் தான்.

கோகிலாவிடம் வேறு திறமைகள் இருந்தன. பெண்களெல்லாம் பூக்களை சரமாகக் கட்டத் தெரிந்தவர்கள். கோகிலா ஒரு படி மேலே போய் மாலைகளாக்க் கட்டுவாள். பிச்சி, செவ்வரளி, காட்டு மல்லி, சம்பங்கி என்று அவள் கட்டும் மாலைகள், ஆதவனின் கீற்றை வண்ணங்களாக தோன்றச் செய்யும் வானவில்லாக மாறும்.

ராமு அந்த மாலைகளை மாலை பக்கத்திலிருக்கும் சிவன் கோயிலுக்கு எடுத்துப் போவான். அழகும் வாசமும் மாலைகளை காசாக்கி விடும். அய்யாவின் குடும்பம் கொஞ்சம் நிமிர்ந்ததற்கு இந்த வருமானமும் ஒரு காரணம்.

ஒரு நாள் அய்யாவின் மரணம் நிகழ்ந்தது. கோகிலா திக்கற்று நின்றாள். ராமு தன் ஊரை விட்டு அய்யாவின் வீட்டிற்கு குடி பெயர்ந்தான். அவன் அருகில் நின்ற கோகிலாவின் கழுத்தில் புது மெருகோடு ராமு கட்டிய மஞ்சள் தாலி இருந்தது.

பத்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ராமு பள்ளி இறுதி ஆண்டை முடித்து கல்லூரியில் தேர்ச்சி பெற்று, சென்னை மாநகரத்தில் மிகப் பெரிய அயல்நாட்டு நிறுவனம் ஒன்றில் கணக்காளாராக இருக்கிறான். ஐந்து இலக்க ஊதியம். சொந்தமாக வீடு, வாகனம் என்று ஏக வசதி. அவனுடைய வீட்டுக் கூடத்தில், கோகிலாவின் கைகளால் கட்டப்பட்ட மாலையைப் போட்டுக் கொண்டு ஆனந்தராசன் அய்யா சிரித்துக் கொண்டிருக்கிறார் படத்தில்.

இப்போதெல்லாம் கோகிலாவுக்கு பல வேலைகள். கணிப்பொறி நுட்பத்தை அவள் சுலபமாக்க் கற்றுக் கொண்டு விட்டாள். வீட்டிலிருந்தே அவள் வேலை செய்கிறாள். அவளுக்கும் நல்ல ஊதியம். அயல்நாட்டவருடன் அவள் பேசுவதை கேட்டால், அவள் பாரத தேசத்தில் பிறந்தவளில்லை என்று சிலுவையிட்டு சத்தியம் செய்வார்கள்.

கோகிலாவுக்கும் ராமுவுக்கும் இரண்டு பிள்ளைகள். மூத்தவன் ஆனந்தன். இளையவன் ராசய்யா! ஆனால் கோகிலாவும் ராமுவும் அவர்களை பெயர் சொல்லிக் கூப்பிடமாட்டார்கள்.

“பெரிய அய்யா எங்கப்பா? சின்ன அய்யா எங்கே காணும்?” என்றே விளிப்பார்கள். ஆனந்தராசன் அய்யாவுக்கு அவர்கள் மனதில் தனி இடம். அதனால் பெயர்கள் உச்சரிக்கப்படாது.

மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் ராமு பல நாட்கள் வாசலிலேயே காத்திருப்பான். உள்ளே கோகிலா பிள்ளைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருப்பான். அதை கேட்டு ரசித்தபடியே இருப்பான் ராமு. மீண்டும் அய்யா பாடம் எடுப்பது போலவே இருக்கும் கோகிவாவின் அணுகுமுறை. காதல் உணர்வு மேலோங்கும் இரவுகளில் ராமு கோகிலாவிடம் ஏதாவது வகுப்பு எடுக்கும்படி கெஞ்சுவான். அவள் வெட்கத்துடன் மறுப்பாள். கடைசியில் அவனது வேண்டுகோளை பூர்த்தி செய்வாள். அதைக் கேட்டபடியே கிறக்கத்தில் தூங்கிப் போவான் ராமு. அவன் கனவில் அய்யா அந்தப் பாடத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பார்.

“கோகிலா அந்த உயர மேசையை எடுத்து வா.. அய்யா படத்துக்கு மாலை போடணும்.. நேத்து போட்ட மாலை வாடிச் சருகாப் போச்சே கோகிலா மெல்ல ஒரு காலை சாய்த்தபடியே வருகிறாள். அவள் பிறவியிலேயே இளம்பிள்ளை வாதம் வந்து கால் சூம்பிப் போனவள்.

“அம்மா இரு! நாங்க எடுத்தாறோம்” என்றபடியே ஆனந்தனும் ராசய்யாவும் மேசையை தூக்கி வருவார்கள். பள்ளிச் சீருடையில் அவர்களை பார்க்கும்போது ராமுவுக்கு பழைய ஞாபகங்கள் கரை புரண்டோடும். பல முறை பிள்ளைகள் ராமுவை தடுத்து தாங்களே அந்த மாலையை சூட்ட முயன்றிருக்கிறார்கள். ஆனால் ராமு என்றும் அதற்கு சம்மதிக்க மாட்டான். அவனே அய்யாவின் படத்திற்கு மாலை போட வேண்டும். அது ஒரு நித்திய பூசை.

ஒரு ஏணியைப் போல படிகள் கொண்ட அந்த பெரிய மேசையை கோகிலாவும் பிள்ளைகளும் மெல்ல இழுத்து வருகிறார்கள். ராமு அதன் மீது ஒரு தேர்ந்த சர்க்கஸ் வீரனைப் போல தாவி ஏறி கோகிலா கொடுக்கும் வண்ணப்பூக்கள் கொண்ட மாலையை அய்யா படத்துக்கு அணிவிக்கிறான். காய்ந்த மாலையை கோகிலா வாங்கிக் கொள்கிறாள். மேல் துண்டால் படத்தைத் துடைத்தவாறே கீழே நிற்கும் கோகிலாவைப் பார்க்கிறான்.

கோகிலா அவனைப் பார்த்து பரிவோடு சிரிக்கிறாள். அவனுக்கு அய்யா சிரிப்பது போலவே இருக்கிறது. அது சரி! அய்யா மகள் அய்யாவைப் போலத்தானே சிரிப்பாள்! “ என்று நினைத்துக் கொள்கிறான் ராமு என்கிற முப்பது அங்குல ராமநாதன்.

– மார்ச் 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *