கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 3,591 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சற்று வித்தியாசமாக இருந்தது அந்த பெண்மணியின் நடவடிக்கை. ரசியா வந்து சொல்லும் வரை கவனிக்கப்போக நேரமே இருக்க வில்லை. ஆனாலும் அப்படியும் பொழுதுபோக்க ரேவதிக்கு நேரமொன்றும் கைக்குள் இருக்கவில்லை. காலை பத்து முதல் மாலை 4 மணிவரை நிற்க, நிமிர, நேரமில்லாமல் கழுத்துப்பிசாசாய் வேலை அவளை அமுக்கிக்கொண்டிருக்கும் என்பதுதான் நியதி . வாலண்டியராக விரும்பி ஏற்றுக்கொண்ட பொறுப்பு என்பதால், யாரிடமும் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமுமில்லை.

மருத்துவர் மிஸ்டர் சுவாவின் அண்மைய ரிப்போர்ட்படி பார்த்தால், பாதிக்குமேல் பெண்மணிகளுக்கு மறதி நோய்தான் இப்போதைய பெரும் பிரச்சினையாக இருந்தது. அது குறித்த நிவாரணத்துக்கு என்ன தீர்வு எனும் கவலையில் இருக்கும் போதுதான் இந்தச் செய்தி. மறுநாள் உணவுவேளையில் இவளே கவனித்தாள். ஒவ்வொருவரும் தட்டும் பூங்கிளாசுமாய் ஏந்தி வந்து உணவு எடுத்துச்சென்றனர். சிலருக்கு படுக்கையிலேயே உணவு கொண்டு கொடுக்கப்பட்டது. ஒருசிலர் கொண்டு வரச்சொல்லி கேட்டு உணவுண்டு கொண்டிருந்தனர்.

புதிதாக வந்த அந்தப் பெண்மணி மட்டும் அசையவில்லை. பேசினால் எங்கே முத்துக் கொட்டிவிடுமோ என்பதுபோல் அப்படி மௌனமாகவே இருந்தார். வார்டின் மூலையில் எங்கோ பார்த்தபடி நின்றுகொண்டிருந்த அந்த பெண்மணியின் அலட்சியம் ரேவதிக்குப் புரியவில்லை .

அதைவிட ஆச்சரியம், வயதானவர்கள் என்றாலே பசி பொறுக்கமாட்டார்களே. இவரென்ன காயகல்பம் உண்ட திருமேனியா–? அணுகவா வேண்டாமா என்று இவள் யோசிப்பதைப்பார்த்து காப்பகத் தாதி தடுத்தார்.

“கிட்டேபோகவேண்டாம் மேடம்! எப்பவயலண்டாவாங்கன்னு தெரியாது. திடீர் திடீர்னு கத்திடறாங்க.”

அப்படியா?

ஆம், அப்படியேதான் நடந்தது.

கிட்டத்தட்ட எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில்தான் அந்தப் பெண்மணி அசைந்தார். விடுவிடு வென்று நடக்காமல், தட்டும் கையுமாக கோட்டித்தாற்போல், நேராக நடந்து சென்றார். தானே தனக்கு வேண்டிய கொஞ்சம் சாதமும், அதைவிடக் கொஞ்சம் காய்கறிகளும் எடுத்துக்கொண்டு, திரும்பியும் பாராமல் படுக்கையை நோக்கிச்சென்றார்.

“இனிமேதான் இருக்குது சேதி மேடம்! சாப்பாடு கொண்டு போனாங்களே, சாப்பிடுவாங்கன்னா நினைக்கிறீங்க?

பின்னே ?

நீங்களே பாருங்க! கொண்டு சென்ற உணவை அப்படியே மூடி வைத்துவிட்டு, சட்டென்று கட்டிலில் ஏறி ஒருக்களித்துப் படுத்துக்கொண்டார்.

அரைமணி நேரத்துக்குப்பிறகு அத்தனை அம்மாக்களும் மருந்தின் மயக்கத்தில் உறக்கத்திலாழ்ந்த பிறகுதான் மெல்ல அசைந்தார்.

மூடிவைத்த சாதத்தை எடுத்து நிசப்தத்திலும் நிசப்தமாக சாப்பிடத்தொடங்கினார். ஆனால் இரண்டு வாய் கூட சாப்பிடவில்லை. முகம் சுளுக்கி விதியே என்பதுபோல் சோற்றையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். டக்கென்று எழுந்து போய் தட்டைக் கழுவி வைத்து விட்டு, கிளாஸ் நிறைய தண்ணீர் பிடித்துக் குடித்தார்.

அப்படியே கட்டிலில் சாய்ந்தவாறு உட்கார்ந்துவிட்டார்.

“இப்படித்தான் மேடம், தினமும் எல்லோரும் தூங்கின பிறகுதான் சாப்பிடுவாங்க! அதுவும் ரெண்டோ மூணோ வாய்தான். யார்கிட்டேயும் பேசறதில்லே, பழகறதில்லே, ராத்திரியும் தூங்க மாட்டேங்கறாங்க, விடிய விடிய நடக்கறாங்க மேடம்!ஆரம்பத்தில் கோபப்பட்டோம்! பிறகு அவுங்களாலே யாருக்குமே எந்த தொந்தரவுமே இல்லேன்னு தெரிஞ்சப்புறம், நாங்களும் அவுங்களை ஒண்ணும் சொல்றதில்லே, ஆனா பாவம் மேடம் இவுங்க!”

ரேவதிக்கு ஏனோ மனதைப் பிசைந்து கொண்டு வந்தது. மனநோயின் தொடக்க அறிகுறிகள் இவை. உடனே மனநல மருத்துவர் சலீமை அழைக்கலாம்தான்.

ஆனால் மருத்துவர் சலீம் கூட வாலண்டியராக உதவ வருபவர்தான். அதனாலேயே தலைபோகும் அவசரம் என்றால் மட்டுமே அவரை உடனடித் தேவைக்கு தொடர்பு கொள்வது வழக்கம். இல்லையென்றால் அடுத்த வாரம் புதன்கிழமை அவர் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.

ஏனோ புதிர் அம்மாவை கவனித்துப் பார்க்கத் தோன்றியது. கழுத்தில் கெட்டிச்சங்கிலி, இரண்டு கைகளிலும் இரண்டிரண்டு வளையல்கள், ஒருபக்கம் ஒளிர்ந்த மூக்குத்தி, காதில் தேன்கூடு கம்மல், என எல்லாமே தங்கம்தான். இவரா நோயாளி? இவர் நோயாளி தானா?

ஆனால் இவரைப் பற்றிய முழுத்தகவலும் தெரியாமல், எப்படி குணப்படுத்துவது? எங்கே எப்படித் தொடங்குவது?

சிராங்கூன் சாலையிலுள்ள கோயில் வாசலில், நள்ளிரவிலும் நடைபாதையில் படுத்துக்கிடக்கும் இவரை தன்னார்வத் தொண்டர்கள், இங்கு காப்பகத்தில் கொண்டு வந்து சேர்த்ததிருந்தார்கள். தகவல் கோப்பில் வேறு விவரங்கள் இல்லை.

கரு கருவென்று சாயம் அடித்த தலைமுடியும், சிடுக்கென்று கறுப்புக்கொத்தாய் விடைத்து நிற்கும் மீசையுமாய், நாச்சிமுத்து பசாருக்குப்போகும் ஸ்டைலைக் கண்டால், கிழவனுக்கு எழுபத்து நாலு வயசு என்று சின்னப்பையன் கூட நம்பமாட்டான். இளைஞர்களைப் போல் பெமுடாஸும் ப்ராண்டட் டீஷர்ட்டும் அணிந்து காலையிலேயே கிளம்பினால், இறாலும், கோழியும், துண்டு மீனும், ப்ரோக்கோலியும் பீட்ரூட்டுமாக, படு அமர்க்களமாக வாங்குவார். வாயெல்லாம் பல்லாகவழியெல்லாம் சிரித்துப்பேசிக் கொண்டேதான் வருவார். , வீட்டுக்குள் நுழைந்ததும் மட்டும் முகம் என்னமோ மூலக் கடுப்புக்காரனின் மூஞ்சி போல் அப்படி கடுகடுவென்று ஆகிவிடும்.

சுடுகாட்டுக்குள் நுழைந்தாற்போல் அப்படி ஒரு சூன்யம் முகமெங்கும் அப்பிவிடும்.

வாங்கிவந்த வெஞ்சனத்தை எடுத்து சுத்தப்படுத்தி, மாங்கு மாங்கென்று எழுபது வயசு பாட்டி சமைக்கத் தொடங்குவார்.

அதற்குள்

“ஜன்னல் கம்பி சுத்தமாயில்லை, குசினியில் கால் வைக்க முடியலை, நேற்று கழற்றிப் போட்ட துவாலையை இன்னும் துவைக்கப் போடவில்லை, சோம்பேறி, சோம்பேறி” என்று சகட்டுமேனிக்கு வையத் தொடங்கி விடுவார். அரைத்து கரைத்து, வறுத்து வகை தொகையாய் ஆக்கிப்போட பாட்டிக்கு ஆசைதான்.

ஆனால் நாச்சிமுத்துவுக்கு இனிப்புநீரும் ரத்தக்கொதிப்பும் உச்சத்தை எட்டிய நிலையில், இனியும் நீ வாயைக் கட்டாவிட்டால் ஒரு காலையே எடுக்க வேண்டி வரும், என்று மருத்துவர் எச்சரித்த பிறகுதான் வறுவல், பொரியல், எல்லாமே குறைந்துபோனது. ஏற்கனவே கோட்டி. அந்த கோட்டியின் காலில் இரும்புச்சங்கிலியையும் மாட்டிவிட்டால் என்னாகும்? சிவசைலமே ஆடாத குறைதான்.

உப்பு, உறைப்பு, காரம் எல்லாமே மட்டாக சமையலை வாயில் வைத்த மறு நிமிடம் வண்டை வண்டையாக அவள் வம்சத்தையே திட்டத் தொடங்குவார். தாங்கமுடியாமல் எதிர்த்துப் பேசினால் வஞ்சகமே இல்லாமல் மூஞ்சி, முகரை, வயிறு, தொடை, எனப் போட்டு மிதித்து பின்னி பெடலெடுத்துவிடுவார்.

கொஞ்சநேரம் உட்கார்ந்து அழுது ஓய்ந்து, சரியாக மாலை நான்கு மணிக்கெல்லாம் ரோஷம் மானமே இல்லாமல், மாலை சமையலுக்கு பாட்டி தயாராகிவிடுவார்.

பார்த்துப்பார்த்து சமைப்பார். பத்தியத்தை தூக்கிப்போட்டுவிட்டு, மீன் துண்டத்தைப் பொரித்தோ, இறாலைக்குழம்பிட்டோ, சமைத்து, சுடச்சுட சாதமும் மேங்கறிகளுமாக பரிமாறினால் ஏதோ போனால் போகிறது என்பதுபோல் கெத்தாக சாப்பிட்டு விட்டுப்போவார்.

வீட்டுக்குள்தான் இப்படி என்றால் வெளியில் போகும்போதுள்ள வேடிக்கை இன்னும் வேடிக்கை. நாச்சிமுத்துவுக்கு வெளியில் தெருவில் எங்குமே பாட்டியோடு சேர்ந்து போகப்பிடிக்காது. உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டே போவார். எங்கே வெடிக்கணுமோ அங்கே வெடிக்கும். போகும் வீட்டில் சாப்பிட கடையில் வாங்கிய ஏப்போ ஏப்போவை கொண்டு வைத்தால் கூட போதும். அப்படியே பொங்கிவிடுவார்.

“என்னா ருசி என்னா ருசி!ஹூம் ஒரு நாளாவது வீட்டில, இப்படி நான் சாப்பிட்டிருக்கேனா? வயசான காலத்திலெ வாய்க்கு ருசியா சாப்பிடக்கூட கொடுத்து வைக்கலை எனக்கு.”

ஏன் மாமா? அத்தை நல்லாத்தானே சமைப்பாங்க?

“நீதான் மெச்சிக்கணும். அவ சமையலைப்பாத்தா நாய் கூட மூஞ்சியைத் திருப்பிக்கிட்டு ஓடிப்போகும்? குழியில் வைக்கிற வயசாச்சு, ஆனா இன்னும் கைக்கு சொறி பிடிச்ச பக்குவம்தான். எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கே? பசிக்கு விதியேன்னு சாப்பிட்டு தொலைக்கிறேன். வேற கதி?”

பாட்டியே உறைந்து போவார். வக்கணையாய் ஒட்ட ஒட்ட சாப்பிட்டுவிட்டு எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது?

என்னதான் கிழவர் உழப்படித்தாலும், கல்லாய் ஓய்ந்திருக்கும் பாட்டியின் முகத்திலிருந்து எந்த சேதியையும் கண்டுபிடிக்க முடியாது அந்த வீட்டு மனிதர்களுக்கு. அண்டம் உறைந்த ராக்காச்சி அம்மனாக பாட்டி கிழவனோடு வாழ்ந்து கொண்டிருந்தாள்.

ஒன்றை மட்டும் பாட்டியால் இன்றுவரை மறக்க முடியாது. முதல் பையனை சுமந்து கொண்டிருக்கும் வேளையில், நண்பரொருவர் மனைவியோடு எதிர்ப்பட, “இப்ப எங்களைப்பாத்தா அம்மாவும் மகனும் மாதிரி தோணலை? என்று நாச்சிமுத்து கண்சிமிட்ட, நண்பரே திகைத்து போனார். நிறை கர்ப்பிணியாக இருந்த அன்றைய நாச்சிமுத்துவின் மனைவிக்கு அந்த வில்லங்கம் புரியவில்லை. ஆனால் அந்த நண்பரின் பார்வையிலிருந்த அனுதாபம் ரொம்பநாட்களுக்கு கண்ணிலிருந்து மறையவில்லை

தன்னை என்னவோ மம்முத ராசாகவாகவும், மனைவியை ஏதோ செங்கோயான் பொம்பளையாகவும் அவர் பேசுவது ஆரம்பத்தில் அருவருப்பாய்க் கூட இருந்தது.

ஆனாலும் காலதேவன் கற்பித்த சாட்டைவிளாறில் ஒரு தாவரமாக வாழக் கற்றுக் கொண்டாள்.

திடீரென்று ஒருநாள் பாட்டி மயங்கி விழுந்தாள். அப்பொழுதுதான் பாட்டிக்கும் உடம்புக்கு வருமென்றே கிழவருக்கு தெரிந்தது. மருத்துவமனையில் கர்ப்பப்பையை எடுத்த பிறகு, பாட்டி மிகவும் வலுவிழந்து போனாள். பாட்டி நாலு பெற்றவள் இல்லையா? பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து முடிவெடுக்க ஒரு பணிப்பெண் வீட்டுவேலைக்கு வந்து சேர்ந்தாள்.

ஆரம்பத்தில் பாட்டிக்கு எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால் வழக்கமான திட்டுதல் இன்னும் கூடிப்போனதுதான் பெரும் சோகம். பொழுதன்னிக்கும் வீட்டு வேலை செய்யும்போதே அந்த பேச்சு பேசும் கிழவனுக்கு, புதுசா ஒரு பெண் வீட்டுக்கு வந்ததும், மாட்டுக்கு கொம்பு சீவிவிடாத குறைதான்.

அன்று பாட்டி கோயிலிலிருந்து வீட்டுக்குள் நுழைந்ததும் பணிப்பெண் முறைத்தாள்,

“அங்கே உட்காராதீங்க. அய்யா சாப்பிடணும். பாட்டிக்கு புரியவில்லை .

ஆமா. நீங்க குளிச்சீங்களா? அய்யா, குளிக்காம யாரும் இந்த ரூமுக்குள்ளார வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறாருல்லே, ஏன் இங்கே வறீங்க?

பணிப்பெண்ணின் அலட்டல் இதோடு நிற்கவில்லை.

அந்த மூவறை வீட்டுக்குள் எங்கு போவது? மருந்தின் மயக்கத்தில் படுத்திருந்த பாட்டி அடிவயிறு கனக்க எழுந்து பாத்ரூமுக்கு போகும்போதுதான் கவனித்தாள். கிழவரும் பணிப்பெண்ணும் அருகருகே அமர்ந்து பொரித்த இறாலை மிட்டாய் சாப்பிடுவதுபோல் ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

தொங்கத்தொங்க தாலி கட்டிக்கொண்டுவந்த பெண்டாட்டி போல், கிழவனுக்கு அவள் எடுத்து வைப்பதும், இந்தா! நீயும் கொஞ்சம் சாப்பிடு, என்று ஊட்டாத குறையாக, கிழவன் அவளிடம் காட்டும் ரஞ்சிப்பும் சகிக்க முடியவில்லை?

வாங்கும் மீன், இறைச்சி, இறால், என எல்லாமே தின்று தின்று பணிப்பெண்ணின் மதமும் கூடிப்போனது. பாட்டியை ஒருநாளாவது அந்த விளி விளிக்காமல் பேசத்தெரியாத நாச்சிமுத்து, வேலைக்காரக்குட்டியை என்னங்க, என்னங்க, என்று குழைவதை பாட்டி வெறித்துப்பார்த்தாள்.

வீட்டில் அடிக்கடி காசு காணாமல் போனது. கிழவன் அவசரத்துக்கு தேங்காயோ, புளியோ, வாங்க கொடுக்கும் பணம் பாட்டி வைத்த இடத்தில் மாயமாகிப்போனது.

பாட்டி பார்த்துக் கொண்டிருக்கும்போதே , வீட்டு தொலைபேசியை எடுத்து, வேலைக்காரி, ஊருக்கு அவள் வீட்டாருக்கு தொலைபேசினாள். கண்டும் காணாமலும் கிழவரின் கைப்பையிலும் காசு மறைந்து போகத்தொடங்கிய போதாவது, வேலைக்காரியை அவர் திட்டுவார் என்று எதிர்பார்த்தால் அங்கும் மிகப்பெரிய ஏமாற்றம்.

கிழவனின் பெமுடாஸை கடையில் கொடுத்து சிறுசாக்கி, வேலைக்காரிக்கு போட்டு அழகு பார்த்தார். கேட்கும் போதெல்லாம் வேலைக்காரிக்கு மகிழ்ந்து மகிழ்ந்து காசு கொடுக்கலானார்.

பாட்டியை செருப்பை விடக் கேவலமாகப் பார்த்த பார்வையையும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாட்டியைப்பற்றி கோள்மூட்டுவதுமாய் வேலைக்காரியின் கொட்டம் எதுவுமே உடல் உபாதையில் பாட்டிக்கு உறைக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் சிகரமாய், பாட்டி ஒருநாள் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, “டெலிபோன் பில் ரொம்ப வருதுன்னு அய்யா கோவப்படறாரு. சட்டுபுட்டுன்னு போன் பேசிட்டு வையுங்க, என்றாளே பார்க்கலாம்.

ஒருநாள் வீடு துடைத்தது சுத்தமாக இல்லையே என்று பாட்டி குறைப்பட்டதுக்கு உர்ரென்று முறைத்தாள். “ஏன், நீங்களே செய்யறதுதானே? பாவம் அவருக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப்போடக்கூடத் துப்பில்லை, என்னைய குறை சொல்ல வந்துட்டீங்களா?” என்று கேட்டதும் அதிர்ந்துபோனாள் பாட்டி.

“என்னடி பேசறே, நான் சமைக்காமதான் அவர் இவ்வளவு நாளும் வாழ்ந்தாராமா?”

“ஆமாம், பெரிசா , சமைச்சுட்டீங்க? நாக்கு செத்துப்போயி கிடந்த மனுஷன் இப்ப நான் சமைக்கறதை சாப்பிட்ட பிறகுதான் உசிரே வந்துச்சின்னு அழுவறார்?”

வந்ததே சண்டாளம் பாட்டிக்கு. “சீ, வாயை மூட்டி கழுதை,” என்று பாட்டி சீறிய அடுத்த கணம் கிழவியின் கன்னம் அதிர்ந்தது. பளாரென்று இடமும் வலதுமாய் ஓங்கி ஓங்கி அறைந்தார் கிழவர்.

அவளை கழுதைன்னா சொல்றே, அவளைச் சொல்ல நீ யாருடி, தே———-, பாட்டியின் தலைமுடியைப் பிடித்திழுத்து கிழவன் மானாவரிக்கு அடிக்கத்தொடங்கினார். இரண்டு கைகளாலும் போட்டு துவைத்தெடுத்தும் கிழவரின் ஆவேசம் அடங்கவில்லை.

திரும்பத்திரும்ப தே——, என்ற வார்த்தையையே சொல்லிச்சொல்லி அடித்தார். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.”டேய்,” என்று கிழவரின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு எழுந்த பாட்டி, ” டேய், நான் உத்தமிடா, என்னையாடா தே —– ன்னு சொல்றே, நீ அழிஞ்சு போயிடுவேடா”? ” என்று அருகிலிருந்த நாற்காலியை எடுத்து கிழவரின் மண்டையைப்பார்த்து வீச, உடனே விலகிய கிழவருக்கு, கண்மண் தெரியவில்லை .

“தே——–நாயே, என்னையா அடிக்க கை ஓங்கறே “?

அதற்குள் வேலைக்காரி பாய்ந்துவந்து வாகாய் கிழவியைப் பிடித்துக்கொடுக்க, நாச்சிமுத்து தூமகேதுவாய் பாய்ந்து பாய்ந்து அடித்தார். கிழவி மூர்ச்சையடைந்து விழும் வரை அடித்து நொறுக்கியபிறகே, கிழவரின் இடுப்பு நிமிர்ந்தது.

இன்று ரசியா வந்து கூறிய தகவல் ஆச்சரியமாக இருந்தது. காப்பகத்தில் உள்ள “சௌ பெங் ” எனும் மூதாட்டிக்கு வழக்கமாக வரும் கடும் தலைவலிக்கு பத்தே நிமிஷத்தில் புதிர் அம்மா குணப்படுத்தி விட்டாராம். தோள், கழுத்து, தலை, என இதம் பதமாய் மசாஜ் செய்து, வெந்நீரில் டவலைப்பிழிந்து நெற்றிப்பொட்டில் ஒத்தடம் கொடுத்திருக்கிறார். தலைவலி அப்படியே மட்டுப்பட்டுவிட்டதாம். நேற்றிரவு சந்திரா அண்டிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு திடீரென்று வாந்தி எடுக்கத்தொடங்கிவிட்டாராம். உடனே இஞ்சியை இடித்து சாறு பிழிந்து குடிக்கவைத்து, தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில் ஐஸ் கட்டியை வைத்து அமுக்கி அமுக்கிப் பிடித்துவிட்டதில் தசைப்பிடிப்பு போன இடம் தெரியவில்லை.

ரேவதிக்கு கேட்கக் கேட்க அப்படி வியப்பு. யாரிடமுமே அதிகம் பேசாமல், காப்பக உணவைக்கூட சரியாகச் சாப்பிடாமல் கஷ்டப்படும் இவருக்கு கனிவு எம்மாத்திரம் சுரந்திருந்தால் இப்படியெல்லாம் சேவை செய்யத் தோன்றும்?

அதைவிட ஆச்சரியம், அந்த ஞாயிறு தொண்டூழியர்கள் கொண்டு வந்த கோழித்துண்டங்களை, அடுக்களைப்பெண்ணை விட்டு உள்ளி, பூண்டு, இஞ்சி, மசாலா, எல்லாம் திட்டம் சொல்லிக் கொடுத்து அரைக்கச்செய்து பக்குவமாய் பக்கத்தில் நின்று அவரே சமைத்திருக்கிறார். கோழிவேகும் வாசம் வாசல் வரை வந்து வாயூற வைத்தது. அன்று புதிரம்மா சமைத்த கோழிக்குழம்பும், கிச்சாப்பில் துவட்டிய கங்கோங்கீரையும், எலுமிச்சை ரசமும், தீமூன் நானாஸ் கலவையும், சாப்பிட்ட காப்பக பெண்மணிகளின் நாக்கிலிருந்து ரொம்ப நேரத்துக்கு அந்த சுவை போவேனா என்றது. மறுநாளிலிருந்து யாரும் சொல்லாமலேயே உரிமையோடு அடுக்களை உள்ளில் புகுந்து சமைக்கத் தொடங்கினார் புதிரம்மா. அவருக்கு காய்கறி வெட்டிக்கொடுக்க நான் முந்தி, நீ முந்தி, என்று மற்றவர்கள் போட்டி போடுவது சகஜமாகிப்போன வேளையில்தான் எஸ்தர் உள்ளே நுழைந்தார்.

வயதான பெண்மணிகளுக்கு கைலிகள், பாஜுக்கள், நீண்ட ஹவுஸ்கோட், என தைத்துக்கொண்டுவந்து உதவும் எஸ்தரும் காப்பகத்தின் முக்கிய தொண்டூழியரே.

எஸ்தரைக் கண்ட புதிரம்மாவின் முகம் வெளிறிப் போனது. அடுத்தகணம் எஸ்தர்கிரீச்சிட்டார். “மகேஸ் அண்டீ, நீங்க இங்கேயா இருக்கீங்க? உங்களைக்காணாம் அங்கே வீடே தவிச்சிட்டிருக்கு, அங்கிள்தான் வேலைக்காரிய விரட்டிவிட்டுட்டாரே? நீங்க எப்படி இங்கே?” என்று ஓடிவந்து கட்டிக்கொள்ள, புதிர் அம்மாவின் குனிந்த தலை நிமிரவில்லை. மெல்ல நடுங்கிக்கொண்டே அங்கிருந்து விலகிப்போனார். எல்லோரும் போனபிறகு, மகேசுவரி அம்மாவை அருகில் அழைத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, “அம்மா ” என்று ரேவதி அழைத்தகணம் பாட்டி விசித்து விசித்து அழுதார். ஏங்கி ஏங்கி அழுதார். இப்படிக்கூட கண்ணீர்விடமுடியுமா என்பதுபோல் அப்படிக் கண்ணீர் விட்டு அழுதார்.

எப்படி ஆற்றுப்படுத்துவது என்று ரேவதி யோசித்துக் கொண்டிருக்கும்போதே, “சீ! போ!” என்று ரேவதியின் கையைத் தட்டிவிட்டார்.

திடீரென்று “டேய், நான் உத்தமிடா? நான் உத்தமிடா! என்னையாடா, சொன்னே? நீ அழிஞ்சு போயிடுவேடா? டேய் நான் உத்தமிடா! என்று மேஜையில் ஓங்கி ஓங்கி குத்த, ரேவதி அவரைக் கட்டியணைத்துக்கொண்டு, படுக்கைக்குக் கொண்டு சென்றார்.

ரேவதி மருத்துவர் சலீமுக்கு தொலைபேசினாள். நண்பர் சலீம் மறுநாளே வருவதாக உறுதி கூறினாலும் மனசு கனத்துப் போயிருந்தது. வாக்கு கொடுத்தபடியே நண்பர் சலீம் காப்பகத்துள் நுழைந்தபோது ரேவதி பொறி கலங்கிப்போய் நின்றாள். மகேசுவரி அம்மா காப்பகத்தில் இல்லை. முதல் நாளிரவே வெளியேறியிருக்கவேண்டும் என்பது கணிப்பு. இனி இங்கே திரும்பிவருவாரா என்பதும் சம்சயமே. மனநிலை பேதலித்த நிலையில் மகேசுவரி அம்மா எங்கே போனீர்கள்?

அன்பர்களே! நண்பர்களே! தகைமைசால் கோயில் நிர்வாகிகளே!இருகரம் கூப்பி கசிந்து மல்கி ரேவதி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!

எந்த கோயில் வாசலிலாவது அல்லது பேருந்து நிலைய வெளி இருக்கைகளிலாவது சுருண்டு கிடக்கும் ஒரு வயதான எழுபதுவயது மூதாட்டியைக் கண்டால் அன்பு கூர்ந்து ஒருநேர உணவு வாங்கிக்கொடுங்கள். அல்லது பரிவோடு ஒரு தேநீராவது வாங்கிக்கொடுங்கள், அல்லது, சிரமம் பாராது கீழ்க்காணும் இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவாவது செய்யுங்கள். இந்த உதவியை எஞ்ஞான்றும் ரேவதி மறவேன்.

பின் குறிப்பு: நாச்சிமுத்து பெரியவர் அப்படி என்னதான் சொல்லிவிட்டாரென்று வாசகர்கள் விக்கித்துப் போய்க் கேட்டால் பதில் இதுதான். செந்தமிழ்த் தேன்மொழியில், சங்கம் வளர்த்த நற்றமிழில், அது ஒரு அழகுச் சொல். ஆனால் காலப்போக்கில் இழிமைச்சொல்லாக, விலைமகளுக்கு மறுபெயராக, சொல் திரிபு மாறி, மருவிய வழக்குசொல்லாகிப் போன விளிதான் “தேவருக்கு அடியாள்”. எந்த குடும்பப்பெண்ணும், அதை தாங்கிக்கொள்ள மாட்டாள்.

குலமகள் மகேஸுவரி அம்மா கொதித்துப்போனதில் என்ன தப்பு ?

– சூரிய கிரஹணத்தெரு, முதற் பதிப்பு: 2012, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

கமலாதேவி அரவிந்தன் பிறப்பால் மலையாளி, எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர். மிக இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்து இ்ன்று வரை எழுதி வருபவர். தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி என தமிழவேள் கோ. சாரங்கபணியால் பாராட்டப்பெற்றவர். தன் தாய்மொழியான மலையாளத்திலும் தமிழிலும், ஏறக்குறைய 120 சிறுகதைகள், 18 தொடர்கதைகள், 142 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட இலக்கியக்கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் 22 மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *