கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 7,073 
 
 

டாடா நகர், பெங்களூர்.

இரவு பத்து மணி. உடம்பை வருடும் குளிருடன் மழை தூறிக் கொண்டிருந்தது.

அரைகுறை இருட்டில் வாசலில் வந்து யாரோ “சார்” என்று அழைப்பது போன்றிருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று அவன் திகைத்தான். வாசற்கதவை திறந்து எட்டிப் பார்த்து, சற்று அதட்டலாக “யாரது?” என்றான். .

அங்கு ஒரு வயதானவர் நின்று கொண்டிருந்தார்.

மெயின் கேட்டையடைந்து அவரை அருகில் போய்ப் பார்த்தான்.

கசங்கிய சாதாரண வேட்டி சட்டை; முகத்தில் நான்கு நாட்கள் வெள்ளைத் தாடி; கையில் போத்தீஸ் விளம்பர ரெக்ஸின் பையுடன் பரிதாபமாக அவர் நின்றிருந்தார்.

“நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு?”

“நம்பர் இருபது, டாடா நகர் இதுதானே?”

“ஆமாம்… உள்ளே வாருங்கள்.” கேட்டைத் திறந்தான்.

அந்தப் பெரியவரை மரியாதையுடன் வீட்டினுள் அழைத்துச் சென்று அமர வைத்தான். ஈரத் தலையை துவட்டிக்கொள்ள துண்டு எடுத்துக் கொடுத்தான்.

“சேலத்திலிருந்து வருகிறேன். நான் உங்களின் அப்பாவின் நண்பர். முந்தா நாள்தான் உங்களிடம் மொபைலில் பேசி விவரங்களைச் சொன்னதாகச் சொன்னார். அப்பாதான் என்னை இன்று காலை சேலத்தில் பஸ் ஏத்திவிட்டார். மூன்று மணிக்கே வந்திருக்க வேண்டிய பஸ், வழியில் பழுதானதால் வந்துசேர இரவாகிவிட்டது.”

“………………………”

“அப்பா உங்களுக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்.” ரெக்ஸின் பையிலிருந்து, நான்காக மடிக்கப்பட்ட ஒரு வெள்ளைத் தாளை எடுத்து அவனிடம் நீட்டினார். பிரித்துப் படித்தான்.

“அன்புள்ள ஜெயராமனுக்கு, நான் மொபைலில் சொன்ன கோதண்டராமன் இவர்தான்; என் நண்பர். இவரது ஒரே மகன் பெங்களூரில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான். சமீபத்தில் ஒரு கோரமான சாலை விபத்தில் இறந்துவிட்டான். விபத்துக்கான இழப்பீடு கிடைத்தால் என் நண்பரும் அவர் மனைவியும் எஞ்சிய நாட்களை கடந்து செல்ல உதவியாக இருக்கும். தற்போது கோர்ட் விசாரணைகள் முடிந்துவிட்டன. விபத்து சம்பந்தமான சகல விவரங்களையும் சேகரித்து ஒரு பைலில் போட்டு அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன். விபத்து ஏற்படுத்திய டிராவல்ஸ் வேன் உரிமையாளர், கோர்ட் முடிவுசெய்த இழப்பீட்டை உடனே தரத் தயாராக இருக்கிறார். பெங்களூர் தலைமை இன்ஷூரன்ஸ் அலுவலகத்தில் இழப்பீட்டுக்கான காசோலை சீக்கிரம் தயாராகி விடுமாம். பெங்களூர், என் நண்பருக்கு முற்றிலும் புதிது. தவிர கன்னடம் வேறு தெரியாது.

நீ அவருடன் இன்ஷூரன்ஸ் அலுவலகம் சென்று, அவருடைய பணம் கிடைத்திட உதவி செய்தால் நல்லது. செய்வாய் என்று நம்புகிறேன். மற்றபடி உடம்பைப் பார்த்துக்கொள்.

அன்புள்ள அப்பா.

கடிதத்தை மடித்து சட்டைப்பையில் வைத்தான்.

“சாப்பிட்டீங்களா?”

“இல்லை… வழியில் இரண்டு வாழைப் பழங்கள் சாப்பிட்டேன். உங்களை இந்த நேரத்தில வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்….”

“அதனாலென்ன பரவாயில்லை.”

பிரிட்ஜை திறந்து பார்த்தான்.

தோசை மாவு இருந்தது. உடனே நான்கு தோசைகள் வார்த்து; மிளகாய் பொடி; எண்ணை கொடுத்து அவரை சாப்பிடச் செய்தான். குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு, “நீங்க சாப்பிடுங்க, இதோ வர்றேன்” என்றவன் வாசல் பக்கம் மொபைலுடன் சென்றான்.

திரும்பி வந்தபோது, அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு, அந்தப் பைலை தன் கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தார்.

அவன் நிதானமாக கோதண்டராமன் எதிரில் அமர்ந்து பைலை வாங்கிப் பார்த்தான். விபத்தில் இறந்த அவருடையை பையன் போட்டோ; ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் பையன் ரத்தக் களரியில் இறந்து கிடந்த மூன்று விதமான புகைப்படங்கள்; இன்ஷூரன்ஸ் டாக்குமென்ட்ஸ்; கோர்ட் ஆர்டர்கள் இருந்தன.

அவன் கண்கள் கலங்கின.

“ரொம்பவும் சோகமான விஷயம்.”

“என்னோட ஒரே பையன். கஷ்டப்பட்டு பிஈ படிக்க வச்சேன். பொறுப்பான பிள்ளை. ஸ்காலர்ஷிப்லேயே பீஈ படிச்சு முடிச்சான். எனக்கு வேலை கிடைச்சுட்டா நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்னு வாய்க்கு வாய் சொல்லுவான்…. ஒரு நல்ல வேலையும் கிடைச்சு சந்தோஷப்பட்டான். ஆனா அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை….”

முகத்தை கைகளால் மூடிக்கொண்டு குலுங்கி அழுதார்.

சோகமாக அவரையே பார்த்தபடி அவன் அமர்ந்திருந்தான். அவரே தொடர்ந்தார்…

“அந்த வேன் சொந்தர்க்காரர் உடனே நஷ்ட ஈடு தர ஒத்துகிட்டார். ஒரே பிள்ளையை பறி கொடுத்துட்டு, அந்த நஷ்ட ஈட்டை வாங்கி நாங்கள் சாபபிடறதான்னு ஒரே வெறுப்பாக இருந்தது. உங்கப்பாதான் எனக்கு ஆறுதல் சொல்லி இதை வாங்கிக்கச் சொல்லி வற்புறுத்தினார். எனக்கு நிரந்தரமா ஒரு வேலையும் கிடையாது. அவளும் பிள்ளையை இழந்த சோகத்துல படுத்த படுக்கையாயிட்டா. எங்களை பகவான் அழைச்சுக்கற வரை, வீட்டு வாடகை கொடுத்து, சாப்பிட்டுத் தொலைக்கணுமே… அதனால கடைசியா நஷ்ட ஈடு வாங்கிக்க சம்மதிச்சேன். அப்பாதான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து, இந்தக் கடிதத்தை கொடுத்து, என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்.”

“செய்யறேன். கண்டிப்பா உதவி செய்யறேன். நீங்கள் இப்போது தூங்குங்கள்…”

எழுந்து சென்று அவர் படுத்துக்கொள்ள பாயும்; தலையணையும்; போர்வையும் கொடுத்தான்.

மறுநாள் காலையில் அவருக்கு காபி போட்டுக் கொடுத்தான். குளித்துவிட்டு இருவரும் கிளம்பத் தயாரானார்கள்.

“பெங்களூரில் நிருபதங்கா ரோடு இருக்காமே…அங்கதான் ஹெட் ஆபீஸாம்.”

“ஆமாம்…. கவலைப் படாதீர்கள், நானே உங்ககூட வருகிறேன்.”

போகும் வழியில் அடையாறு ஆனந்த பவனில் அவருக்கு டிபன் வாங்கிக் கொடுத்து தானும் சாப்பிட்டான்.

இன்ஷூரன்ஸ் ஆபீஸுக்கு அந்த டிராவல்ஸ் உரிமையாளரும் வந்திருந்தார்.

பார்மாலிடீஸ் எல்லாம் முடிந்து ‘செக்’ கோதண்டராமன் கைக்கு வந்துசேர மதியம் ஒன்றரை ஆகிவிட்டது.

கோதண்டராமன் கண்கள் கலங்க அவனிடம், “ரொம்ப நன்றிப்பா. எனக்காக ரொம்பவே சிரமப்பட்டுட்டே… நான் இப்படியே சேலம் கிளம்புகிறேன். இப்ப பஸ் ஏறினா ராத்திரிக்குள்ள வீட்டுக்கு போயிடலாம். என் மனைவிவேற தனியா இருக்கா.” என்றார்.

“நானே மெஜஸ்டிக்கில் பஸ் ஏத்திவிடறேன்….”

அவரை பைக்கில் அமரச்செய்து, பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று, அவர் மறுத்தும் கேளாமல், அவரை சாப்பிட வைத்து தானும் சாப்பிட்டான்.

மெஜஸ்டிக் சென்று சேலம் பஸ்ஸில் அவரை ஏற்றி ஜன்னல் ஓர இருக்கையில் அமர வைத்தான். டிக்கட் வாங்க என்று அவர் கையில் ஒரு இருநூறு ரூபாய்த் தாளை அவர் சட்டைப்பையில் வலுக்கட்டாயமாக திணித்தான்.

“ஒரு நிமிஷம், இதோ வரேன்…” என்று எங்கோ சென்றான்.

கையில் ஒரு பையுடன் வந்தான். “வீடு போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகுமோ, வழியில இத சாப்பிடுங்க…” தண்ணீர் பாட்டில், டிபன் பொட்டலம் அடங்கிய பையை அவரிடம் வெளியே நின்றபடியே கொடுத்தான்.

கோதண்டராமன் கண்கள் கலங்க நெகிழ்ந்து போனார்.

“என்னால உனக்கு ரொம்ப சிரமம்பா. லீவு வேற போட்டுட்டு எனக்காக இன்னிக்கி என்னோடவே இருந்திருக்கே. ஊருக்கு போனதும் முதல் வேலையா உங்கப்பாவைப் பார்த்து நன்றி சொல்லணும்.”

அவன் பஸ்ஸினுள் ஏறி அமைதியாக அவர் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

“நீங்க தேடி வந்த ஜெயராமன் நான் இல்லே… உங்க நண்பர் மகன் ஜெயராமன் நான் இல்லை.”

கோதண்டராமன் திடுக்கிட்டார்.

“என்னப்பா சொல்ற?”

“ஆமாம். என் பெயர் குமார். நேத்து நைட்டு நீங்க அட்ரஸ் தப்பா வந்துட்டீங்க. நான் இருக்கிறது டாடா நகர். நீங்க போக வேண்டிய முகவரி டாடா நகர் எக்ஸ்டன்ஷன். அது இன்னும் தூரம் அதிகம்…”

கோதண்டராமனுக்கு வியர்த்தது.

“அடடா… நான் ரொம்பத் தப்பு பண்ணிட்டேனே. நான் அட்ரஸ் கேட்டு வந்தவுடனேயே என்னிடம் சொல்லியிருக்கலாமே குமார்… அனாவசியமா எனக்காக எதுக்கு இவ்வளவு மெனக்கிட்டு..”

குமார் அவரை அமைதிப் படுத்தினான்.

“நீங்க வந்தது ராத்திரி பத்து மணிக்கு; மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. பெங்களூர்ல இருக்கிறவங்களுக்கே அட்ரஸ் தேடிக் கண்டுபிடிக்கிறது கஷ்டம். நீங்க பெங்களூருக்கு புதுசு வேற… அதிலும் நீங்க வந்த காரியத்தைப் பத்தி தெரிஞ்சதுல, எனக்கும் மனசு ரொம்ப சங்கடமா போயிட்டது… அதான் நேத்து ராத்திரி உங்களை தோசை சாப்பிடச் சொல்லிவிட்டு, அந்த லெட்டர்ல இருந்த சேலம் நம்பருக்கு பேசினேன். நீங்க அட்ரஸ் மாறி வந்த விஷயம் தெரிஞ்சு, உங்க நண்பர், அதான் அந்த ஜெயராமனோட அப்பா, ரொம்பவே வருத்தப்பட்டார். அவர்கிட்ட அவர் பையன் ஜெயராமன் நம்பரை கேட்டு வாங்கினேன்.”

“……………………………”

“அந்த ஜெயராமனுடன் பேசிவிட்டு, உங்களை பொழுது விடிந்ததும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அவரிடம் அனுப்பிவிடலாம் என்று நினைத்து போன் பண்ணினேன். ஆனால் போனில் பேசியது அவருடைய மனைவி. அன்று காலைதான் அவசர அலுவலக விஷயமாக டெல்லி போனாராம்… திரும்பி வர ஒருவாரம் ஆகுமாம்… அப்பதான் நான் முடிவு செய்தேன். நேரடியா நானே உங்களுக்கு உதவி செய்திடலாம்னு. ஜெயராமன் இல்லைன்னா என்ன சார்? நஷ்ட ஈடு உங்களுக்குக் கிடைக்க இந்தக் குமார் உதவக் கூடாதா? இப்ப என்னாலையும் ஒருத்தருக்கு உதவ முடியும்கிற நிம்மதி என் மனசுல நிறைஞ்சிருக்கு, அது போதும் சார்….”

கோதண்டராமன் குரல் தழுதழுக்க, “நல்லா இருப்பா, நல்லா இரு…” குமாரின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

பத்து வருடங்களுக்கு முன் இறந்துபோன தன் அப்பாவை நினைத்துக் கொண்டான் குமார். ‘அப்பா… நீங்க உயிரோட இருந்து, இது மாதிரி லெட்டர் கொடுத்தனுப்பி இருந்தாலும் கண்டிப்பா உதவி செஞ்சிருப்பேன். என் வளர்ச்சியை பார்க்காமலே போயிட்டீங்களே அப்பா. யாரோ ஒருத்தருக்கு பிள்ளையா இருந்து, அவர் நண்பருக்கு உதவி செய்திருக்கேன் அப்பா… உங்களுக்கு திருப்திதானே?”

டிரைவரும், கண்டக்டரும் பஸ்ஸில் ஏறினர்.

கனத்த மனதுடன் பஸ்ஸை விட்டு கீழே இறங்கினான் குமார்.

Print Friendly, PDF & Email
என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

1 thought on “உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *