உண்மைக் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 2,415 
 
 

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வேணாம், வேணாம்.. சிலிண்டரத் தூக்காத ஆனந்தி. நான் ஸ்டவ்வ எடுத்துக்கிட்டு முன்னாலப் போறேன். நீ பின்னாடியே உருட்டிகிட்டே வா… என்ன? நேத்துதான் புதுக் கேஸ் சிலிண்டர் போட்டேன் கனமா இருக்கும், பார்த்து உருட்டு”, என்றால் அகிலா. 

“சரிங்கம்மா” என்று எரிவாயு சிலிண்டரை உருட்டியவாறு அடுப்பை எடுத்து முன் செல்லும் அகிலாவைத் தொடர்ந்தாள் ஆனந்தி. வயது ஐம்பதைத் தாண்டிய அவளால் முடியவில்லை என்பது அவள் படும் சிரமத்தில் இருந்து புரிந்தது அகிலாவிற்கு. வேலையை மாற்றிக்கொள்ளலாம் என நினைத்து அடுப்பைக் கீழே வைக்கப் போனவளுக்கு மகனை உதவிக்குக் கூப்பிடலாமே எனத் தோன்றியது. 

“கொஞ்சம் பொறு ஆனந்தி” என்று சொல்லிவிட்டு, “அசோக், இங்க கொஞ்சம் வாயேன்” என்று கூவினாள். 

என்னம்மா? இதோ இந்த வீட்டுப்பாடம் முடிசிட்டேன்னா நான் விளையாடப் போகலாமில்ல”, என்று அவன் சலித்துக் கொள்ளும் குரல் கேட்டது. 

“கொஞ்சம் வாடா ராஜா, உடனே போய்டுவியாம், வந்து ஆனந்திக்கு உதவி பண்ணு” என்றாள். 

“தொம் தொம்” என்று சத்தமாக அடி எடுத்து வைத்து, முணுமுணுத்தவாறு வந்ததில் அசோக்கின் கோபமும் எரிச்சலும் தெரிந்தது

“அசோக், நீ சிலிண்டர் அடியப் புடி, ஆனந்தி நீ மேல் வலயத்தப் புடிச்சிக்கோ, பார்த்துக் கால்ல போட்டுக்காத” என்று அடுக்கடுக்காக ஆனந்தி போட்ட கட்டளைகளுக்கேற்றவாறு செயல்பட்டு அகிலா, ஆனந்தி, அசோக் மூவரும் கேஸ் அடுப்பை ஊர்வலமாகச் சாப்பாட்டு அறைக்குக் கொண்டு வந்து தரையில் வைத்தார்கள்

அசோக் மீண்டும் ஓடிப் போய் வீட்டுப் பாடத்தைத் தொடர்ந்தான். சாப்பாட்டு அறை மேஜை மேல் புத்தகங்களையும், நோட்டுக்களையும் கடை பரப்பியிருந்தான் அவன். அவனது தங்கை, அவனுக்கும் இளையவளான பப்பி என அழைக்கப்படும் பத்மினி மேஜை மேலேயே ஏறி உட்கார்ந்து கொண்டு அவளும் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தாள். 

அடுத்தச் சில நாட்களில் வரும் தீபாவளிக்காக முறுக்கு சுடும் படலம் தொடங்கியிருந்தது. ஆனந்தி உதவிக்கு வந்திருந்தாள். அவள்தான் முதலில் அகிலாவின் வீட்டில் வேலை செய்தாள். பிறகு தனது மகள் சுகந்தி பள்ளிப் படிப்பை முடித்ததும் அவளைத் துணைக்கு அழைத்து வந்து, பழக்கிவிட்ட பின்னர் அவள் வேறு இடத்திற்கு வேலைக்குச் சேர்ந்துவிட்டாள். ஆனந்தி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள். அவளுக்கும் அவள் கணவருக்கும் வசந்தி, சுகந்தி, ஜெயந்தி என மூன்று பெண்கள்தான். அம்மாவும் பெண்களும் அவர்களது பெயர்கள்,பூ பொட்டு, உடை உடுத்துவது என எதிலும் வேறுபாடு காட்டாததால் முதலில் பார்ப்போருக்கு அவர்களைக் கிறிஸ்துவர்கள் எனப் புரிந்துகொள்ள முடியாது. 

அந்த ஊருக்கு மாற்றலாகி வந்தவுடன் அகிலா வேலைக்கு ஆள் தேடிய பொழுது, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ரிக்க்ஷாக்காரர் அழைத்து வந்தவள் ஆனந்தி. வேலை, சம்பளம் எல்லாம் பேசி முடிக்கும் பொழுது, ஞாயிறு காலை மட்டும் சர்ச்சுக்குப் போவதால் பத்து மணி போலத்தான் வேலைக்குத் தாமதமாக வரமுடியும் என்று ஆனந்தி சொன்ன பொழுதுதான் அவள் கிறிஸ்டியன் என அகிலாவிற்குத் தெரிந்தது. அவளும் ஞாயிறு அன்று தாமதமாக எழுபவள் என்பதால் அதைப் பொருட்படுத்தியதில்லை. 

ஆனந்தியின் பெண்கள் அனைவருமே படிப்பில் கெட்டிக்காரிகள். பெரியவள் வசந்தி பட்டம் வாங்கிய பின்பு ஆசிரியை வேலைக்குப் பயிற்சிக்குச் சென்றாள். அங்கு உடன் பயிற்சிக்கு வந்த ஒருவனுடன் காதல் ஏற்பட்டு அவனைத்தான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றாள். ஆனந்திக்கு ஏனோ அந்தப் பையனின் மூஞ்சும், முழியும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. வேண்டாம் என்று சொன்னாள். ஆனால், வசந்தி அவனது குழந்தைக்குத் தான் தாயாகப் போவதால் உடனே திருமணம் நடத்த வேண்டும் என்றவுடன் அரண்டு போனவளாகக் கன்னா பின்னா என்று மகளைத் திட்டிவிட்டு “எப்படியோ நாசமாப் போ, ஒழி” என்று ஆசீர்வாதம் செய்து ஒத்துக் கொண்டாள்திருமணமாகிச் சில நாட்கள் ஆனதும்தான் தெரிந்தது தனது பெற்றோர்களை ஒத்துக்கொள்ள வைப்பதற்கு வசந்தி அவ்வாறு பொய் சொல்லித் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டது

அடுத்தவள் சுகந்தி, இவள் ஒரு செவிட்டுமை. ஆனந்தியின் சோகமே இவள்தான். சிறு வயதில் துறு துறுவென்று ஓடி விளையாடியவளுக்கு ஏதோ காய்ச்சல் வந்து ஒரு வாரம் படுக்கையில் கிடந்து எழுந்த பின்னர், காது கேட்பதும், வாய் பேசமுடிவதும் இயலாது போய்விட்டதாக ஆனந்தி புலம்புவாள். ஆனாலும் அவளும் பள்ளி இறுதி வரை படித்து வந்து விட்டாள். சுகந்தி அந்த ஊனங்களையும் கடந்த மிக மிகப் புத்திசாலி என்பது அவளுடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் தனக்குப் பதிலாக ஆனந்தி தனது மகள் சுகந்தியை வேலைக்கு விட்ட பொழுது அகிலா ஒன்றும் மறுப்புச் சொல்லவில்லை. 

தனது வீட்டைப் போன்ற ஒரு பாதுகாப்பான வீடு அந்தச் செவிட்டுமைப் பெண்ணுக்குக் கிடைக்காது என்பதால் ஏற்படும் இடையூறுகளைச் சமாளித்துக் கொள்ள முடிவு செய்திருந்தாள். சுகந்தியும் எந்த வேலையையும் நறுவிசாகச் செய்து விடுபவள். அதனால் அவளை வேலைக்கு வைத்திருப்பதில் பிரச்சனை வந்தது இல்லை. ஆனந்தியின் கடைசி மகள் ஜெயந்தி இப்பொழுதான் பிளஸ் டூ சேர்ந்திருக்கிறாள். அவளும் படிப்பில் சூட்டிகை

அகிலாவின் வீட்டில் சுகந்தியுடன் அதிகம் உரையாடுவது பப்பிதான். சிறுவயது பிள்ளைகளுக்கே உரிய பிறர் குறைகளைப் பொருட்படுத்தாதது, சலிக்காமல் பேசுவது போன்ற குணங்களினால் பப்பி சுகந்தியின் தோழியாகி விட்டாள். சுகந்தி ஏதாவது திரைப்படம் பார்த்துவிட்டு வந்தால் அந்தக் கதையைக் கூட அபிநயத்துடன், விசித்திரமான ஒலியுள்ள ஊமை மொழியில் பப்பிக்குச் சொல்லுவாள். பப்பியும் மேலும் சொல்லு, சொல்லு என்று சைகை செய்து உற்சாகப்படுத்துவாள். அவள் சொல்லும் கதையைக் கேட்டு விழுந்து விழுந்தும் சிரிப்பாள். ஆனால் சுற்றி உள்ளவர்களுக்குத்தான் அவர்களது உரையாடல் ஒன்றுமே புரியாது. அகிலா ஓரளவிற்கு மேலே அவளால் சைகையால் விளக்க முடியாமல் போனால், பேசாமல் சுகந்தியிடம் எழுதிக் காண்பித்துவிடுவாள். நேற்று பப்பியின் துணை கொண்டு சுகந்தியிடம் பேசி, முறுக்குச் சுற்ற உதவியாக ஆனந்தியை இன்று வரவழைத்திருக்கிறாள். 

சமையலறையில் இடம் போதாமல், இது போலச் சாப்பாட்டு அறைக்கு அனைத்தையும் எடுத்து வந்து பலகாரம் செய்வது அகிலாவின் வழக்கம். அடுப்புக்கு எதிர் எதிராக இரண்டு பலவாக்கட்டைகள் போடப்பட்டு, இருப்புச்சட்டி, ஜல்லிக்கரண்டி, முறுக்குக்கம்பி, முறுக்கு அச்சு, எண்ணையை உறிஞ்ச பழைய செய்தித்தாள் பரப்பிய பெரிய தாம்பாளம், பெரிய பித்தளைச் செம்படங்கள், எண்ணெய்த் தூக்கு, பிசைந்த மாவு உள்ள பாத்திரம் இவைகளும் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அகிலாவும் ஆனந்தியும் எதிர் எதிராக உட்கார்ந்து கொண்டார்கள்இருப்புச்சட்டிக்குப் பின் அமர்ந்து ஜல்லிக் கரண்டியின் மேல் அச்சால் பிழிந்து முறுக்குச் சுற்றி எண்ணெயில் போட வேண்டியது ஆனந்தியின் வேலை, அடுப்பின் முன்இருந்து சுட்ட முறுக்கைக் கம்பியால் எண்ணெயில் இருந்து எடுத்து, தாம்பாளத்தில் எண்ணெயை வடியவிட்ட பின்பு, செம்படத்தில் அடுக்க வேண்டியது அகிலாவின் பொறுப்பு. 

இருவரும் ஊர்க்கதைகளைப் பேசியபடி முறுக்குச் சுட்டுக் கொண்டிருந்தார்கள். அசோக் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டுத் தெருவில் மற்றப் பசங்களுடன் கிரிக்கெட் விளையாட ஓடிவிட்டான்பப்பி இன்னமும் வீட்டுப்பாடத்தை முடித்தபாடில்லை. சுகந்தி வீடு கூட்ட விளக்குமாறுடன் வந்து முன்னறையில் இருந்து கூட்டத் துவங்கினாள். ஆனந்தியுடன் பேசிக்கொண்டிருந்த அகிலாவை இடைமறித்துக் கணக்குப் பாடத்தில் உதவச் சொன்னாள் பப்பி. 

“அம்மா வேலையா இருக்கேன் பப்பிம்மா, அசோக் வந்ததும் கேளு, சொல்லிக் கொடுப்பான்” 

“நீங்க எங்கவேலையா இருக்கீங்க? பேசிக்கிட்டுத்தானே இருக்கீங்க? சுகந்தி அம்மாவப் பார்த்துக்கச் சொல்லிட்டு இங்க வந்து எனக்குச் சொல்லிக் கொடுங்க” 

“பப்பிம்மா, சொல்றதக் கேளுடா” என்று அகிலா சொல்லிக்கொண்டிருந்த பொழுது அசோக் தட தட வென உள்ளே ஓடிவந்தான்.”அசோக், பப்பிக்குக் கொஞ்சம் கணக்குச் சொல்லிக் கொடுப்பா” என்றாள் அகிலா. 

வேகமாகத் தனது அறைக்கு ஓடி ஒரு பந்தை எடுத்து வந்த அசோக், “போங்கம்மா, இப்ப முடியாது. பந்து காணாப்போச்சுன்னு வேற பந்து எடுக்க வந்தேன், விளையாடி முடிச்சிட்டு வந்து சொல்லித்தரேன்” என்று சொல்லியவாறே பதிலுக்குக் காத்திராமல் ஓடி விட்டான். பப்பிக்குக் கோபம் வந்து தனது அருகில் இருந்த பென்சில் டப்பாவை எடுத்து அவன் போன திசையைப் பார்த்து விட்டெறிந்தாள்

வர வர இந்தப் பொண்ணு அதோட அப்பா கொடுக்கிற செல்லத்தில ஆட்டமா ஆடுது, அடி கொடுக்க வேண்டிய 

நேரம் வந்தாச்சு. என்ன பழக்கம் இது பத்மினி”, என்று சீறினாள் அகிலா. 

பப்பி ‘உர்” என்று முகத்தை வைத்துக் கொண்டாள். இதுவரை நடந்தது எதுவும் காதில் விழாததால் விச்சிராந்தியாகத் தரையைக் கூட்டிக் கொண்டிருந்த சுகந்தி, பென்சில் டப்பா அவள் முன் வந்து விழவும், துடைப்பத்தைக் கீழே போட்டுவிட்டு, டப்பாவில் இருந்து சிதறியவற்றை மீண்டும் பெட்டியில் போட்டுக் கொண்டு வந்து பப்பியிடம் கொடுத்தாள். பப்பியின் கோபத்திற்குச் சைகையால் காரணம் கேட்டாள்

பப்பி வீட்டுப் பாடத்தைக் காட்டி விளக்கினாள். சுகந்தி பப்பியிடம் ஒரு தாளும் பென்சிலும் சைகையால் கேட்டாள். பப்பிக் கிழித்தது தெரியாது இருக்குமாறு, நோட்டுப் புத்தகத்தின் நடுப்பக்கத்தை ஒரு குயர் நோட்டில் இருந்து கிழித்துக் கொடுக்க, சுகந்தி அதில் எழுதிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள். 

“எதுவானாலும் சுகந்திய நீ படிக்க வச்சிட்ட ஆனந்தி, இல்லாட்டி…” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவாறே திரும்பிய அகிலா, ஆனந்தி கண்களில் வழிந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்வதைப் பார்த்ததும் நிறுத்தினாள். 

என்னாம்மா செய்யிறது. ரொம்பப் புத்திசாலிப் பொண்ணும்மா. மேலே படிக்க வச்சாலும் நல்லாப் படிக்கும். இந்தக் குறை இல்லாட்டி டியூஷன் வேலையப் பாத்தே பொழச்சிக்கும். படிச்சிருந்தும் இப்பப் படிக்காத என்ன மாதிரி வீட்டு வேலைய செய்யுது. எங்களுக்கு அப்புறம் இதுக்கு யார் துணை? நினச்சாலே அடிவயிறு கலங்குது. இந்தக் குறையோட இதுக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு நெனச்சிக் கூடப் பாக்க முடியுமா? இது சபிக்கப்பட்ட பொண்ணும்மா” என்ற ஆனந்தியின் குரல் தழுதழுத்திருந்தது. 

ஆனால் யாரும் எதிர்பாராததும் நடந்தது. அது காலத்தின் கோலம். ஒருநாள் பப்பியும் சுகந்தியும் பேசிக் கொண்டிருந்தார்கள். பப்பி உற்சாகத்தில் கூச்சலிட்டாள். 

‘அம்மா, அம்மா சுகந்திக்குக் கல்யாணமாம்!‘ 

“நல்லாக் கேளு, அவளுக்குக் கல்யாணமா? இல்லை ஏதாவது கல்யாணத்திற்குப் போக லீவு வேணும்கிறாளா?” 

“இல்லம்மா, சுகந்திக்குத்தான் கல்யாணமாம்” 

“என்னது? உண்மையாவா!” என்று கேட்டவாறு வந்த அகிலா “உன் மாப்பிள்ளையின் பேர் என்ன?” என்று கழுத்தில் தாலி கட்டுவது போலச் சைகை செய்து கேட்டாள். 

சுகந்தி ஒரு தாளில் எழுதினாள், “சண்முக சுந்தரம்.” 

இது என்ன இந்துப் பெயரா இருக்கு? பப்பிம்மா இந்தச் சுகந்தி ஏதோ உளறுதுன்னு நினைக்கிறேன். அவங்க அம்மாவச் சாயங்காலம் அழச்சிட்டு வரச் சொல்லு நான் பேசிக்கிறேன்.’ 

சாயங்காலம் வந்த ஆனந்தியின் வாயெல்லாம் பல். “கடவுளுக்குச் சோஸ்திரம் அம்மா, இந்தப் பொண்ணு அதிர்ஷ்டக்காரிதான் போல. இவளையும் கட்டிக்கிடணும்னு ஒருத்தன் துடியாத் துடிக்கிறான், என்னால நம்பவே முடியல்ல” 

“விவரமாச் சொல்லு, மாப்பிள்ளை பேரு சண்முக சுந்தரம்னு சொல்லிச்சு, என்ன நடக்குது. ஏதாவது கிழவனா? ரெண்டாம் தாரமா கட்டிக் குடுக்கிறியா?” 

“இல்லம்மா, பையன் சின்ன வயசுதான். ஹைஸ்கூல் முடிச்சிருக்காப்ல, ஏதோ ஏஜென்சில வேலையாம். அநாதைப் பையன். சொந்த பந்தம் இல்லையாம். தனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்மின்னு வீட்டோட மாப்பிள்ளையா இருக்கவும் விருப்பமாம்.” 

“எங்க புடிச்ச இந்த மாப்பிள்ளைய?” 

“அட நீங்க வேறம்மா, நான் எங்கன புடிச்சேன்? காதல் கல்யாணம் அம்மா” 

“இரு, இரு என்ன சொல்ற நீ? சுகந்தி காதலிச்சுதா? என்னென்னு பேசி அந்த ஆளுக்கு இது மனசப் புரிய வச்சிது? பதினைஞ்சு வருஷமாவுது கல்யாணமாகி, இன்னமும் பப்பி அப்பாவுக்கு நான் சொல்றது எதுவும் புரியற மாதிரித் தெரியல்லியே? நம்பவே முடியல்ல ஆனந்தி” 

“ஆமாம்மா, எங்களாலேயும் நம்ப முடியல்ல, ஒரு நாள் தெருவில அந்தப் பையன் சைக்கிள ஒரு கையில் புடிச்சிகிட்டு சுகந்தி கூடப் பேசினதைப் பார்த்தேன். இதுவும் கையைக் கையை ஆட்டி ஏதோ சொல்லிச்சு. யாரோ ஏதோ அட்ரெஸ் கேக்கிறாங்களோ? பேச முடியாத இவளப் போய்க் கேக்கிறாங்களே? கேலி செய்யறாங்களான்னு நெனச்சி எனக்குக் கோவம் கூட வந்திச்சு. அப்புறம் அந்தப் பையனே வீட்டுக்கு வந்து விவரமாப் பேசிக் கல்யாணம் செய்து தரச் சொல்லிச்சு அம்மா”

“ஆமா, எப்ப கல்யாணம்? எதுக்கும் கவனமாப் பையனப் பத்தி நிறைய விசாரிச்சிடு ஆனந்தி, நாளை தள்ளிப் போடாத பொறாமையில் அடுத்தவங்க அந்தப் பையன் மனச மாத்துறதுக்கு முன்னால கல்யாணத்தச் சுருக்க முடிச்சிடு” 

“சரிங்கம்மா” 

அடுத்தச் சில நாட்களில் பப்பியின் விருப்பப்படி, வெள்ளைப் பட்டில் சிவப்பு சரிகைக்கரை போட்ட கல்யாணப் புடவையைப் பரிசாகச் சுகந்திக்கு வாங்கிக் கொடுத்து, சர்ச்சில் கல்யாணத்திற்கும் சென்று வந்தார்கள். சண்முக சுந்தரம் மதம் மாறி, அருள் பிரகாசம் என்ற புதுப் பெயருடன் சுகந்தியை மணந்து கொண்டான். பார்க்க வாட்ட சாட்டமாக, களையாக இருந்தான். நல்ல சம்பளத்துடன் வேலை பார்க்கும், நல்ல களையுடன் இருக்கும் ஒருவன், சல்லிக்காசு வாங்காமல், அவளுக்காக மதம் மாறி, செவிட்டுமையான சுகந்தியைக் கைப்பிடித்ததுடன், காதல் மனைவியின் வீட்டிலேயே மகன் இல்லாத குறை நீங்க வீட்டோடு மருமகனாக இருக்கச் சம்மதித்தான் என்ற செய்தியே அனைவருக்கும் வியப்பாக இருந்தது. சிலர் உண்மைக்காதல் இதுவல்லவா என்றார்கள். சிலர் இவன் சரியான கிறுக்கன் போலிருக்கிறது என்றார்கள். ஆனால் அனைவரும் வியந்து பாராட்டியது இப்படி ஒரு மாப்பிள்ளையைப் பிடித்த சுகந்தியையும், அவளது அதிர்ஷ்டத்தையும்தான். போதாக்குறைக்கு அவள் கர்ப்பமானவுடன், வேலை செய்தது போதும் எனச் சொல்லி அவளை வேலையில் இருந்து நிறுத்திவிட்டு, ஒரு தையல் கடையும் ஆரம்பித்துக் கொடுத்தான். ஆனந்தி புது ஆளை அகிலாவின் வீட்டுவேலைக்குப் பேசிச் சேர்த்து விட்டாள். 

ஒரு நாள் அகிலா வாசலில் பூ வாங்கிக் கொண்டிருந்தாள். “சவுக்கியமா இருக்கீங்களா அம்மா?” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். ஆனந்தி நின்று கொண்டிருந்தாள். 

“அடடே! ஆனந்தியா? வா… வா… வா…. பூக்காரரே இன்னும் ரெண்டு முழம் மல்லிப்பூ கொடுங்க” என்று வாங்கி அதை ஆனந்தியின் கையில் கொடுத்து, “சுகந்திட்ட நான் கொடுத்தேன்னு சொல்லிக் கொடு, உன் மாப்பிளை எப்படி இருக்கார்? சுகந்திக்கு எப்போ பிரசவம்? நீ எப்படி இருக்க? நீ வீட்டு வேலைய நிறுத்திட்டு ஸ்கூல் புள்ளைங்களுக்குச் சாப்பாடு கொண்டு போற பிசினஸ் பண்றதா இப்போ இங்க வீட்டில வேலை பாக்கிற அம்மா சொன்னிச்சு, எப்படி இருக்கு பிசினெஸ்?” 

“ஆமாம் அம்மா, அதுக்குதான் நானும் வந்தேன், நம்ம பப்பிம்மாவுக்கும், அசோக்குக்கும் நானு சாப்பாடு கொண்டு போய்க் குடுக்கட்டுங்களா?” 

“நல்ல யோசனைதான், நாளைக்கு வாயேன், புள்ளைங்களையும் அவரையும் கேட்டுட்டு சொல்றேன். கடைசிப் பொண்ணு ஜெயந்தி எப்படி இருக்கு? எப்படிப் படிக்குது? அதுக்கும் நீதான் சாப்பாடு கொண்டு போறியா?” 

இல்லம்மா, ஜெயந்தி ஊரில இல்ல, நாகர்கோயில்ல என் அக்கா வீட்டில தங்கிப் படிக்குது?” 

ஏன்? என்னாச்சு? எதுக்கு அங்க விட்டு வச்சிருக்க?‘ 

“மாப்பிள்ளை, அந்த நாசமாப் போற சுகந்தி புருஷன், ஜெயந்தியையும் எனக்கே கட்டி வைங்க, உங்க செவிட்டுமைப் பொண்ணுக்கு வாழ்வு கொடுத்திருக்கேன்ல? உங்க சின்னப் பொண்ணையும் எனக்குக் கட்டி வச்சா என்ன கேடு? அப்படின்னு தெனம் தெனமும் ஒரே ரப்ச்சரும்மா. வயசு வந்த பொண்ண அந்தப் படுபாவிக் கண்ணில இருந்து காப்பாத்துரத்துக்கோசரம் ஊர்ல அவ பெரியம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல, போய் ஒத்தாசை செய்யப் போறான்னு சொல்லி அனுப்பி வச்சிட்டேன்.”

– அனிச்ச மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2013, கௌதம் பதிப்பகம், சென்னை.

நன்றி: http://www.FreeTamilEbooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *