உணர்ச்சி உறங்காது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2023
பார்வையிட்டோர்: 4,258 
 
 

“வேலை செய்தது போதும்; இப்படி வந்து உட்காரு!”

பாப்பம்மாவைக் கூப்பிட்டாள் பங்காரு.

“உங்களை எப்படி அம்மா நம்பறது? இப்ப இப்படிச் சொல்வீங்க; அப்புறமா ‘அது செய்யலை, இது செய்யலை’ னு அவரோட சேர்ந்துக்கிட்டு வீட்டுக்குப் போற நேரத்துலே வாட்டி எடுப்பீங்க!”

சிரித்தபடியே இதைக் கூறிய பாப்பம்மா, பங்காரு உட்கார்ந்திருந்த சோபாவுக்கு எதிர்த்தாற்போல் தரையில் உட்கார்ந்தாள். பங்காருவின் கையில் அன்று வந்த தபால் கவர் ஒன்று கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மனத்தில் ஏதோ ஒரு தயக்கம். தலை நீட்ட அவள் வாசற்பக்கம் பார்த்தாள்.பங்களாவின் காம்பவுண்டுக்குள் வளர்ந்திருந்த மலர்ச் செடிகள், தண்ணீர் விட்டு தங்களைப் பராமரிக்கும் மகிழ்ச்சிப் பூரிப்பில் வஞ்சனை இல்லாமல் பூக்களைச் சொரிந்து, தங்கள் நன்றியைத் தெரிவிப்பதுபோல் புன்னகையுடன் ஆடி அசைந்துகொண்டிருந்தன.

“என்னம்மா, கூப்பிட்டுவிட்டுப் பேசாம இருக்கீங்க?”

பாப்பம்மா கேட்டாள். அவள் அந்த வீட்டு வேலைக்காரி மட்டும் அல்ல; பங்காருவின் உடன் பிறந்த சகோதரியைப் போல் அன்பு செலுத்தப் பட்ட அதிர்ஷ்டத்தை உடையவளும் கூட. ஆனால் அதை இன்று வரை நல்ல முறையில் காப்பாற்றிக் கொண்ட பெருமை மட்டும் பாப்பம்மாவுக்கே தனியுரிமை.

“மனோகரி லெட்டர் போட்டிருக்குடீ! உனனை ரொம்ப ரொம்ப விசாரிச்சிருக்கு. பரீட்சை எழுதியாச்சாம். லீவு விட்டதும் வர முடியல்லை, புதுசா ஒரு அலுவல்லே இந்த வருஷம் தலை கொடுத்துட்டேன்னு எழுதியிருக்கு!”

இப்படிச் சொல்லிவிட்டு பாப்பம்மாவையே பார்த்தாள் பங்காரு.

“அப்படியாம்மா….அதைப் போயி இவ்வளவு தாமதமா சொல்றீங்களே?… எங்கே கடிதாசியைக் குடுங்க?… நான்தான் படிக்கல்லே ; அதன் எழுத்தையாவது பார்க்கறேன். முத்து முத்தா அதோட எழுத்து எவ்வளவு நல்லாருக்கும், தெரியுமா?”

குரலில் ஓர் ஆர்வம்; செயலில் ஓர் அவசரம் – உட்கார்ந்த இடத்திலிருந்து விறுட்டென்று எழுந்து பங்காருவின் கையிலிருந்த கவரைப் பிடுங்க வருவது போல் வர

“கொஞ்சம் பொறு. இந்தா….!” கவருக்குள்ளே மடித்து வைத்திருந்த காகிதத்தை மெதுவாய் உருவி அவளிடம் தந்தாள் பங்காரு. அதனோடு இணைந்து வந்த ஒரு சிறு படத்தை அவள் உள்ளே தள்ளியபடி, “எழுத்தை மட்டும் பார்த்து என்ன பண்ணப்போறே? என்ன எழுதியிருக்குன்னு படிக்கத் தெரியாதவளுக்கு வாய் மட்டும் குறைச்சலில்லை.” என்று செல்லக் குரலில் கேலி செய்தபடியே கவரை சோபாவின் மேல் வைத்தாள்.

“ஏதோ அந்தக் காலத்திலே படிக்க வைக்கல்லே; அப்படிப் படிச்சாலும் இந்தக் கோண எழுத்தெல்லாம் படிக்க அநதக் காலத்தலே அவ்வளவு வசதி ஏதுங்க?”

மனோகரியின் கடிதத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்த பங்காருவின் கண்களில் எவ்வளவு ஒளி! அவள் அதைத்தான் ரசித்தாளோ? அல்லது…

இருக்கலாம். அவள் பெற்ற மகள் அவள்; அவளது பெருமை அவளுக்கும் அவளுக்கும் பெருமைதானே?

“இந்தாங்க, இன்னம் என்ன இன்னும் என்ன எழுதியிருக்கு துங்க? உடம்பு சுகமா இருக்குதுங்களாமா? போன தடவை வந்தப்ப நான் காய்சலாய்ப் படுத்துட்டேன். நான்தான் வரலேன்னாலும் அதையாவது நம்ம வூட்டுக்கு அனுப்பியிருக்கலாம். ஏனோ உங்களுக்கு மனசு வரல்லே… இனி எப்பங்க வரும் அது?”

ஏதோ ஒரு பழைய சம்பவத்தை நினைவூட்டியவளாய், கண்களில் ஆசையைத் தேக்கியபடியே கேட்டாள் பாப்பம்மாள்.

அவள் அந்த வீட்டு வேலைக்காரி மட்டுமல்ல மனோவை வளர்த்த ‘தாய்’ அவள்!

பங்காருவும் அப்படியொன்றும் பிறவியிலேயே பணக்கார இடத்தைச் சேர்ந்தவளல்ல; நடுத்தரக் குடும்பபமான்றில் ஒரே மகளாய்ப் பிறந்து, கொஞ்சம் செல்வத்ததுடன் வளர்ந்தவள், அவ்வளவுதான். புகுந்த இடம் நல்லதாக அமைந்ததுதான் அவளுடைய அதிர்ஷ்ட்டம் தந்த செல்வம்.

அவன் கணவன் தியாகுதான் எப்பேர்ப்பட்டவன்! தியாகு மட்டுமல்ல; அந்த வீட்டில் பணிபுரியும் பாப்பம்மாளும்தான் எவ்வளவு தங்கமானவள்.

பங்காரு பழைசை எல்லாம் நினைத்தாள் போலும்! பாப்பு கேட்ட கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லவில்லை. அவள்தான் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாளே!…

பங்காருவுக்கு அது ஒன்பதாம் மாதம்; பாப்பம்மாவுக்கு அது நிறை மாதம். பிறக்கப் போகும் செல்வங்களைப் பற்றி ஒருவரை யொருவர் கேலி செய்தபடி நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்.

பிறந்தகம் நல்ல நிலைமையில் இருந்திருந்தால், ஏழாம் மாதமே அங்கு போயிருக்கலாம். அப்படியிருந்தாலும் தியாகு அவளை அங்கு அனப்பி வைக்கச் சம்மதித்திருக்க மாட்டான். ஏனெனில் ‘சகல வசதிகளும் இங்கே இருக்கு, ஒத்தாசைக்கு வேணுமானா உங்க அத்தையை வரவழைத்துவிடு’ என்று அவளுக்கு முன்னால் அவன் சொல்லிவிட்டான்.

முதல் பிரசவமே கணவன் வீட்டிலா?.. கொஞ்சம் என்னவோ போல்தான் இருந்தது…. இருந்து என்ன செய்ய?…. அப்பாவுக்கு அவள் கடிதம் போட்டுவிட்டாள்.

தன் சகோதரியைக் கொண்டு வந்து விட்ட அவள் அப்பாவிடம், “நீங்க என்னங்க, தயங்கித் தயங்கி நின்னுக்கிட்டு?….கவலைப் படாம போங்க. நானிருக்கேன் ஒத்தாசைக்கு!” என்று அபயமளித்தாள் பாப்பம்மாள்.

அதைப் பார்த்து புன்னகை பூத்தார் பங்காருவின் தந்தை விஸ்வநாதன். ‘நிறை மாதத்தில் இருக்கும் நீ ஒரு மாதம் குறைவாயிருக்கும் அவளுக்கு ஒத்தாசை செய்வியாக்கும்?’ என்று அவர் நினைத்திருப்பாரோ?

கடைசியில் பாப்பம்மாளின் வாக்கு எவ்வளவு விபரீதமாகப் பலித்துவிட்டது!

தான் பெற்றது அறையிலேயே போய்விடவும், பங்காரு பிழைப்பதே அரிதாய் மனோவைப் பெற்றுவிட்டுத் துடிக்கவும், இவள் பால் கட்டித் திணற, அவள் பாலில்லாமல் பதற, இறைவன்தான் எப்படியெல்லாம் விளையாடிவிட்டான்?…

மனோவைப் பெற்றவள் தானாயிருந்தாலும், அவளுக்குப் பாலூட்டி அவளை வளர்த்தது பாப்பம்மாள்தானே? அந்தப் பாப்பம்மாளுக்கு அவள் மேல் எப்படிப் பாசமும் நேசமும் இல்லாமல் போகும்?…

இப்படி நினைத்த பங்காரு, “இன்னும் ஒரு வாரத்துல வந்துருவாடி அவ…. அப்போ பாரு, அவளை! உங்க வீட்டிலேயே வேணுமானாலும் கொண்டுபோய் வெச்சுச் சீராட்டு; நானா வேண்டாங்கிறேன்?.. போன வருஷத்துக்கு இந்த வருஷம் அவ எப்படி வளர்ந்துட்டா, தெரியுமா?… இதோ பாரு, இந்தப் போட்டோவை!” என்று இவ்வளவு நேரம் எதற்கோ தயங்கியவள், கவரிலிருந்து மனோவின் படத்தை எடுத்துத் தந்தாள்.

அந்தப் படத்தைப் பார்த்த பாப்பம்மாவின் கண்கள் ஏன் வியப்பால் விரிய வேண்டும்? அதனால்தான் பங்காருவும் இவ்வளவு நேரம் தயங்கினாளோ?…

படத்தையும் எஜமானியையும் மாறி மாறிப் பார்த்த பாப்பம்மாளின் கண்களில் ஏன் இந்தக் கலக்கம்? அவளுக்கு ஒன்றுமே புரியவில்லையா?…அல்லது எல்லாமே புரிந்துவிட்டதா?…

மலங்க மலங்க விழித்த அவள் படத்தை பங்காருவிடம் திருப்பித் தந்துவிட்டு எழுந்திருக்கப் போனாள்.

“என்னடி வந்தது உனக்கு?… படத்தைப் பார்த்தவ எதுவும் சொல்லாம திருப்பித் தந்துட்டுக் கிளம்பிட்டியே?” என்றாள் பங்காரு, குரலில் வெறுமை தொனிக்க.

“போக வேண்டியதுதான்! இனி என்ன வேலை? பார்த்தாச்சு; கிளம்பிட்டேன்!”

நறுக்குத் தெறித்தாற் போல் இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு நடந்தாள் அவள்.

“வாடி இங்கே! வந்து உட்காரு!…. நீ ஏதாவது சொல்லுவேன்னுதான் அந்தப் படத்தை நான் முதல்லே உன் கிட்டே காட்டல்லே… இப்ப எதுவுமே சொல்லாமப் போனா என்ன அர்த்தம்?”

பங்காரு அவளை விடவில்லை.

“நான் என்னத்தை சொல்றதுங்க? என்ன இருந்தாலும் நீங்க பெத்தவங்க; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவங்க; நல்லது கெட்டது தெரிஞ்சவங்க; எல்லாத்துக்கும் மேலா படிச்சவங்க.!… உங்களுக்கே அது சம்மதமானா, நான் சொல்லியா நிறுத்தப் போறீங்க?…”

மொட்டையாய் நிறுத்தினாள் பாப்பம்மாள்.

அவள் சொன்வையனைத்தும் சுறுக் சுறுக்கெனத் தைக்கத்தான் செய்தன. அதில் பொய்யில்லை என்பதுடன், உண்மையுமல்லவா இருக்கிறது!

சென்ற தடவை ‘எஸ்கர்ஷன்’ என்ற பெயரில் வந்தபோதே அரையும் குரையுமாய் அந்த விஷயத்தைப் பெற்றோரிடம் சொல்லி யிருந்தாள் மனோகரி. பங்காரு ஆட்சேபிக்க, தியாகு அதைப் பொருட் படுத்தாமல், “குழதைதானேடீ?… ஏதோ ஆசைக்கு ஒரு தடவை கலந்து கொண்டா என்ன? இப்பல்லாம்தான் பெரிய பெரிய குடும்பங்களிலேயே இதெல்லாம் சகஜமாயிட்டுதே! மனசுலே விகல்பமில்லாம இருந்தா சரி!… இதையேவா தொழிலா வெச்சிக்கப் போறோம்?..” என்று அவளைச் சமாதானம் செய்து வைத்துவிட்டான்.

அவளுக்கு மட்டும் உறுத்தல் உறுத்தல்தான். எதையும் எட்ட இருந்து பார்ப்பது வேறு; தனக்கென்று வரும்போது உணர்வது என்பது வேறு. இந்த நிலையில் பங்காருவும் குழம்பித் தவித்துக் கொண்டிருந்தாள்.

போட்டோவில் பார்க்கும் மனோகரி, குழந்தையாவது! அந்த வயதில் தனக்குத் திருமணம் ஆகி, மனம் என்னென்னமோ கற்பனைக் கோட்டைகளை யெல்லாம் கட்டி, இன்ப நினைவுகளில் மூழ்கிக் கிடந்ததே?….

பங்காருவின் சிந்தனை எதிர் திசையில் சென்றாலும், ஊர் உலகத்தில் சகஜமாகி வரும் ஒன்றை – கணவனும் பொருட் படுத்தாமல் விட்டுவிட்ட ஒன்றை – ‘கலை’ என்ற போர்வையில் ஒப்புக் கொள்ளத் தயாராகி வந்த நிலையில் – அதைத் தொழிலாய்த் தொடரப் போவதில்லை என்ற அர்த்தமற்ற சமாதானத்தில் – தான் உணர்ந்ததை மறைத்து, உணர்ந்து கொள்ளக் கட்டாயப் படுத்தப்பட்ட கருத்தைச் சொல்லி, பாப்பம்மாளும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என வற்புறுத்த முயன்று கொண்டிருந்தாள்.

“என்ன இருந்தாலும் குடும்பத்துப் பெண்; வயது வந்த பெண். இப்படியெல்லாம்…?”

பாப்பம்மாவால் ஒத்துப் போக முடிந்தால்தானே? அவள் அதை மறுக்க ஆரம்பித்து விட்டாள்.

பங்காருவால் பதில் பேச முடிந்ததா? அதைத் துச்சமென ஒதுக்கி விடத்தான் முடிந்ததா?…

“நான் படிக்காதவ.. அதனாலதான் எனக்கு எதுவும் புரியல்லையோ, என்னமோ…?”

பாப்பம்மாள் சற்று நிறுத்தினாள்.

அவளா படிக்காதவள்?…

“என்னடீ சொல்றே நீ?”

பங்காரு அந்த இடைவெளியைப் பயன் படுத்திக் கொண்டாள்.

“சொல்றதென்னங்கம்மா, என்னாலே ஒத்துக்க முடியலீங்களே….”

“இது ‘கலை’ டீ…!”

“என்னமோ போங்க!… நானும்தான் அப்பப்ப சந்தியிலே வைக்கற படங்களைப் பார்க்கறேனுங்களே?…தோளுக்குத் தோள் கை வைச்சி எதிரெதிரே நிக்கறதும், மணல் தரையிலே அவ படுக்க, அவ மேலே அவன் சாஞ்சிக்கிட்டு… என்னைக் கேட்காதீங்கம்மா, எனக்கு உடம்பை எரியுது; மனசை என்னமோ பண்ணுது!”

பாப்பம்மாள் அசிங்கத்தை மிதித்த அருவெறுப்புடன் உடலைக் குலுக்கி, வாயைக் கோணினாள். இருந்தும் அவளுள் கிளம்பிய ஏதோ ஒன்று, அவள் பேச்சை தடுக்க முடியவில்லை என்பதை அவள் தொடர்ந்து பேசியதே காட்டியது.

அவளை ஒரு வேடிக்கைப் பொருளாக, கட்டுப் பெட்டி என்று இதுவரை ஒதுக்கிக் கேலி செய்த பங்காரு கூட அவள் தொடர்ந்து சொன்னதை மௌனமாகக் கேட்டாள். ஒரு வேளை அவளையும் அது சிந்திக்க வைத்திருக்குமோ?….

“அப்பல்லாம் ‘ஐயோ!… இந்த மாதிரிப் படங்களைக் கண்ணாலே பார்த்தாலே மனசு கெட்டுப் போகுதே, இப்படியெல்லாம் செய்யறவங்க எப்படிக் கெட்டுப் போகாம இருக்க முடியும்? னு நெனைப்பேன். கண்ணை மூடிக்கிட்டு அந்த ராமன் பேரை ஒர தடவை சொல்லிட்டு எங்களவரை நெனைச்சுக்குவேன். ஏதோ தப்பு செய்யத் துடிச்சாப்போல இருந்த மனசு கொஞ்சம் ஆறும்… கொஞ்சம் அழகா, தளதளப்பா இருந்து, உலகத்தில் நடனமாடினாலே உத்து உத்துப் பார்க்கிற ஆம்பளைங்க எந்தக் காலத்திலும் உண்டு. அது தப்புன்னு அவனுக்குத் தெரிஞ்சாலும் கட்டுப் படுத்த முடியாத வேகத்துல பார்வையோட நிறுத்திக்குவான். ஆம்பிளையா இருந்தாலும் சரி, பொம்பளையா இருந்தாலும் சரி எல்லாருமே கெட்டுப் போயிடறது இல்லே…இதையே நீங்க ‘இது’க்கும் சொல்லுவீங்க… அது எப்படிச் சரியாப் போகும்?”

பாப்பம்மாள் கேள்வி கேட்டு நிறுத்தினாற்போல் பங்காருவைப் பார்க்க, அவள் யோசனையில் ஆழ்ந்தாற் போல் தோற்றமளித்தாள்.

“அந்தந்த வயசுலே எவ்வளவுதான் வேஷம்னாலும், வேஷம் வேஷமாவே எவ்வளவு நாளைக்கு நிக்கும்? அந்தப் பருவத்திலே வளர்ற நியாயமான துடிப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமா தூண்டி விட்டா, அப்புறம் நடிப்புக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் ஏது? யாரோ ஆடறாங்க, யாரோ செய்யறாங்க,அப்பல்லாம் அது சரியா மனசுக்கு வந்ததில்லே. ஒரு காலத்திலே சதுராடியவங்களைத் தனியா ஒதுக்கி வைச்சி, அவங்களுக்குள்ளே, தனியா ஒரு தொழிலையும் பழக்கி வைச்சதையும் இந்தக் காலத்தில் தப்புன்னு சட்டம் போட்டாங்க. இப்ப இதுகளிலே தப்பு வரல்லையான்னு யார் நிச்சயமாச் சொல்ல முடியும்? தப்பு, சரிங்கிறதுக்கு எல்லையைக் கண்டு பிடிக்க யாரு இதிலே தீவிரமா இருக்காங்க? எப்படியோ பணம் கெடச்சுடறது. அதுக்காகத் தெரிஞ்சவங்க கூட அதை லேசா ஒதுக்கிட்டு, அதைப் பத்தி மனசோட நிறுத்திக்குவாங்க போல இருக்கு…!”

மூசு விடுவதற்காகக் கொஞ்சம் ஓய்வெடுத்த பாப்பம்மாள் மறுபடியும் ஆரம்பித்தாள்.

“பணம் என்னம்மா பணம்? நான் கேக்கறேன்; புரிஞ்சிக்க முடியாமத்தான் கேக்கறேன். எனக்கு அதைக் கொஞ்சம் சொல்லி விளக்க வையுங்க; ஒத்துக்கிறேன்…!”

பங்காருவைப் பார்த்து சவால் விடுவதைப் போல் அவள் கேட்டாள்.

அதே சிந்தனை தேங்கிய நிலையில அவள் கேள்வி பங்காருவுக்குச் சரியாகப் புரிந்ததோ, இல்லையோ, “கேளு, கேளு!” என்பது போல் தலையை அசைத்து, முகத்தில் ஒரு புன்னகையைப் படற விட்டாள்.

“நீங்களும் பொம்பளை; நானும் பொம்பளை. இரண்டு பேரும் குடும்பம் நடத்தறோம். நம்ம கண் மறைவிலே புருசன்மாரு தப்பா நடக்கிறதா வச்சிக்குங்க. பதிலுக்கு நாமும் தப்பா நடந்துக்குவோமா, அவங்க நடத்தையை நெனச்சி உள்ளூற வெந்து வாடித் தவிப்போமா?… அவங்க சந்தோசம் நமக்கு வந்த மாதிரின்னு எப்பவோ நளாயினி நெனச்சதா கதை சொல்லுவாங்களே, அது மாதிரி செய்வோமா?… அப்படிச் செய்தாலும் முழு மனசோட விட்டுக் கொடுத்துடுவோமா?…வேற வழியில்லே, தாலி தங்கினாப் போதும்னு திருத்த முடியாத கேசுகளிலே வேணும்னா நம்ம பலஹீனத்தை எண்ணி மறைவாவே அழுது அழுது ஆறி, வெளியிலே சிரிச்சிக்கிட்டு நிக்கலாம்…. தெரியாமத்தான் கேக்கிறேன்! நான் படிக்காதவ…!

‘தன் வீட்டு சமையற்காரி தனக்குச் சரி சமமாய் அமர்ந்து, தன் வீட்டுச் சொந்த விஷயங்களில் தலையிட்டுக் கேள்வி கேட்கம்படி ஆயிற்றே?’ என்று பங்காரு வருத்தப் படவில்லை. மனோ வளர்ந்தது பூராவும் பாப்பம்மாள் கையில். அந்த உரிமையை அவளுக்குத் தர பங்காரு பின் வாங்கவில்லை.

“ஒருத்தரோட ஒருத்தர் எதிரெதிரா இப்படி நிக்கிறாங்களே, இப்ப இதுக மனசுக்குள்ளே விகல்பம் வளராம இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க….?”

பங்காரு காட்டிய புகைப் படத்தில் மனோவும் யாரோ ஒரு வாலிபனும் சேர்ந்தாற்போல் நிற்கும் பாணியையும் மனோவின் பூரிந்த அங்கங்களின் நிலையையும், முகத்தின் மலர்ச்சியையும் கையால் சுட்டிக் காட்டியபடியே கேட்டாள் பாப்பம்மாள்.

“இதைப் பார்க்கிற நமக்கே நாம் இப்படியெல்லாம் இல்லையேன்னு ஏக்கத்தை வளர்க்கிற மாதிரி இந்தப் படம் இருக்கே, அவங்க அப்படி ஏங்க மாட்டாங்களா? அந்த ஏக்கம் நிஜமாகறதுக்கு எவ்வளவு நேரங்க வேணும்? இதை இப்படி அலங்காரம் பண்ணியிருக்காங்களே, அதைச் செய்ததும் இன்னொரு ஆம்பளைதானே? எத்தனை பேரை அவன் தொட்டுத் தொட்டுத….

பாப்பம்மாள் இதைத் தொடர்ந்து சொன்ன வேகத்தில் எழுதவே தயங்கும் படியான சில வார்த்தைகள் வந்து விழுந்தன.

அதைக் கேட்டுப் பங்காருவின் உடல் நடுங்க, “பாப்பா!” என்று அவள் கத்தியே விட்டாள்.

“நிஜம்தாம்மா இது!…” அதான் உங்க உடம்பு இப்படிப் பதறுது!… ‘கலை’ன்னு சொன்னீங்களே, ‘கற்பு’ ன்னு நாம் சொல்லி வந்த சம்பிரதாயம் இதிலே எங்கேம்மா இருக்குது? ஒரேயடியா அதை ஒதுக்கிட்டு, ‘எனக்குப் பணம் வேணும், நான் அப்படித்தான் இருப்பேன்’னு முன் மாதிரி தனியாவே ஒதுக்கி வச்சுடலாமே? ‘எலை மறைவு காய் மறைவா என்னென்னமோ நடக்கல்லைனு வாயாலே பேசலாமே தவிர, மனசாலே ஒத்துக்க முடியுங்களா? நூத்திலே ஒருத்தரோ ரெண்டு பேரோ சரியா யருப்பாங்களா? இருக்க முடியுமா?… படம் பிடிக்கறவங்க விடக்குக் காட்டறவங்க, அப்படிச் செய் இப்படிச் செய்னு சொல்லித் தர்றவங்க, வேடிக்கை பார்க்கறவங்க… இப்படிப் பல பேரும்தானே அங்கே இருப்பாங்க?… அவங்க எதிரிலே பரம்பரையா நாம் காத்து வந்த வெக்கம், பயம் எல்லாத்தையும் விட்டுட்டு ஆசை ஆசையாப் பேசினா, உணர்ச்சியே இருக்காதுன்னு… அதான், அந்த வீட்டுக் கலா சொல்லிச்சி…அது சொல்லத்தான் இதெல்லாம் எனக்குத் தெரியும். சரி, அதெல்லாம் இப்ப வேணாம்… அப்புறம் அதையே படம் பார்த்தப்பறம்… தனியறையிலே வேஷம் போட்டுக்கறப்ப அதைப் பத்தி நினைச்சு, அதிலே வர்ற பேச்சை உருப் போடறப்ப மனசு சபலமடையாதுன்னு நிச்சயமாச் சொல்ல முடியுங்களா உங்களாலே?…. சரி, சபலபடையாதுன்னே வெச்சிக்கிட்டுப் பேசலாம்… எத்தனை பேரை சபலப் படுத்திக் குழியிலே தள்ளி… இதெல்லாம் தப்பில்லாத காரியம்தான்னு நிச்சயமா நம்பப் பண்ணி விட்டுடறது? அதை இல்லேம்பீங்களா, நீங்க?… நூற்றுக் கணக்கான படத்திலே இப்படிப் பேசி, ஆடிப் பணம் பண்ணி பெரியவங்களானதா பேர் பண்ணி, காரும் பங்களாவுமா இருந்துட்டா அவங்க எதை வேணும்னாலும் பேசிடலாமா? அவங்க மனசிலே சுத்தம் இருக்கமோ மொதல்லே?… நீங்களே நினைச்சுப் பாருங்க, நிம்மதி இருக்குமா அவங்களுக்கு…?”

பங்காருவின் கண்ணின் ஓரத்தில் திரண்ட நீர்மணிகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து, அவளும் உணர்ச்சி வசப்பட்டதை அறிவித்தன.

“நாளைக்குக் கல்யாணம் ஆகப் போற பொண்ணு.. குடும்பத்துப் பொண்ணு. அதைப் போய் இப்படி ஆக அனுமதிச்சிட்டீங்களே! இந்தப் படத்தை நாளைக்கு அவ புருசனா வர்றவன் பார்த்தா அவன் மனசு என்ன பாடு படும்?… பூவைப் பறிக்கறப்பஅதன் வாசம் கூட நமக்கு வராம ஜாக்கரதையா மூச்சு விட்டுப் பறிச்சி, அந்தப் பூவை தெய்வத்துக்குப் போடணும்பாங்களே, அந்த மனசுக்கும் இந்த மனசுக்கும் வித்தியாசம் எவ்வளவுன்னு புரியுதுங்களா, உங்களுக்கு…?”

பேசப்பேச ஒரு தனியொளி அவள் கண்களில் உருவானதைக் கண்ட பங்காரு நிலை குலைந்து போனாள்.

பாப்பம்மாளா இவள்? ‘சினிமாவே பார்க்கமாட்டேன் என்று அவள் சொன்ன போதெல்லாம் கேலியும் கிண்டலுமாய் பரிகசித்து அவளைச் சீண்டுவோமே? மனத்தாலும் கொண்டவனுக்குத் தீங்கு செய்ய நினைக்காத அவளுடைய பெண்மைதான் எவ்வளவு மகத்தானது, பவித்திரமானது! அவள்தான் அதைப் பற்றி எவ்வளவு தீவிரமாகச் சிந்தித்திருக்கறாள்! படித்தவர்களெல்லாம் ‘கலை’ என்ற யெரில், அதன் அடியிலே உள்ள ‘குறை’ யைக் கண்டுங் கூட விமர்சிக்கப் பயந்தவராய், கூச்சப்பட்டவராய், கண்டும் காணாத அலட்சிய மனத்தை வளர்த்துக் கொண்டவர்களாய் விளங்கும்போது, இவள் அதை அக்கக்காகப் பிரிந்த வைக்கறாளே?…

பங்காரு ஒன்று சொல்லவில்லை. என்ன சொல்வாள்? அவள் ஒரு குடும்பப் பெண். ஏதோ புரிந்தும் புரியாத ஒரு மனநிலையில், சிந்திக்காத அசட்டுத் தனத்தினால் பெருமையாகத் தன் மகளைப் பற்றிச் சொல்லப் போக, இந்திய சமூகம் படிப்படியாய்த் தன்பிரத்தியேக நாகரிகங்களை இழந்து வருவதை உணர்ந்து வெட்கப் பட்டாற்போல் உட்கார்ந்திருந்தாள்.

“இப்ப அதுக்கும் வயசு பதினெட்டோ, பத்தொம்பதோ நடக்கும்… போனது போனது போகட்டும் ; இனி அதை ஊக்கப் படுத்தாதீங்க. அந்தப் படத்திலே இருக்கானே, அவனும் அவளோட காலேஜிலே படிக்கிறவன்னு சொன்னீங்க, அவனைப் பத்தித் தெரிஞ்சி அவனுக்கே அதைக் கட்டிக் கொடுத்து இங்கேயே கூட்டியாந்துடுங்க. இனி இந்த மாதிரி மத்தவங்க கிட்ட கொஞ்சிக் குலாவ விடவேணாம். அதையெல்லாம் நடிப்புனு நம்பி நம்மை நாமே ஏமாத்திக்கவும் வேணாம்…!”

மூச்சு விடுவதற்காகவோ, மேலே யோசிப்பதற்காகவோ, சற்று நிறுத்திய பாப்பம்மாள், மறுபடியும் தொடர்ந்தாள்:

பழங்காலம் மாதிரி அடுத்த பெண்ணோட பேசினாலே கெட்டுப் போச்சுன்னு கொலை பண்ற வெறியும் வேண்டாம்; இந்த மாதிரி ‘கலை கலை ன்னு இந்த அளவுக்கு எறங்கிடற தாராளமும் குடும்பப் பெண்களுக்கு வேண்டாம்…..மனோவுக்கு நல்ல குரலும், பாட்டுப் பாடணும்கிற ஆசையும் இருக்குது; அதை வளர்க்கப் பாடு படுங்க… நான் தப்பாய் சொல்லியிருந்தேன்னா என்னை மன்னிச்சிடுங்க; நான் படிக்காதவ…..அந்தக் குழந்தையை வளர்த்த பாசத்துல என் வீட்டுக் குழந்தை மாதிரி நினைச்சிப் பேசிட்டேன்… நான் வர்றேனுங்க” பாப்பம்மாள் விடை பெற்றாள்.

அவள் சொன்ன சொற்களைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்த பங்காரு, அவள் போனதைக் கூடக் கவனிக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அதிலிருந்து மீண்டு அவள் பாப்பம்மாளை அழைக்க நினைத்து வெளியே செல்வதற்குள், அவள் குரல் கேட்காத தொலைவில் நடந்து கொண்டிருந்தாள்.

‘சரி, சாயந்தரம் வராமல் போகப் போகிறாள்?’ என்று நினைத்தாள் பங்காரு.

அந்தப் படிக்காத பாப்பம்மாவும் ‘இனி அங்கே வருவதில்லை’ என உறுதியுடன் வெளியேறிவிட்டதை அவள் எப்படி அதற்குள் அறிந்திருக்க முடியும்?

– தினமணி கதிர் – 15–12–1967

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *