கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,975 
 
 

பச்சைப்பசேலென்று செழித்துவளர்ந்த கொடிகளுக்குள் மறைந்துவிட்ட கணவனைப் பெரும் பீதியோடு பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போதே அவன் உடலில் அங்குமிங்கும் சிறிய பச்சை இலைகள் தென்பட்டன, நாள்முழுக்க உடலைச்சுற்றி வளர்ந்த கொடிகளின் மிச்சங்களா அவை, அல்லது புதிய கொடியொன்று வளர்வதற்கான அடையாளமா என்று அவள் வழக்கம்போல் குழம்பிக்கொண்டிருக்கும்போது அவன் அவள் தந்த காப்பியைக் குடித்துவிட்டு அவனது வாசிக்கும் அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டான், அன்றைய செய்தித்தாளை முதல் பக்கத்திலிருந்து விரிவான அலசல் செய்தபோதும்கூட அவன் சாதாரணமாகவே இருந்தான், அங்கங்கே முளைத்திருந்த இலைகளும் உதிர்ந்து விழுந்துவிடுவனவாய்த் தென்பட்டன, பேப்பரை மடித்து ஓரமாயிருந்த ஸ்டூலின்மேல் வைத்துவிட்டு, அவன் தன் கணினியை முடுக்கிவிட்டுக்கொண்டு அமர்ந்தபிறகு, இன்னும் அதிக இலைகள் ஒவ்வொன்றாய்த் தோன்ற ஆரம்பித்து, சற்று நேரத்துக்குள் அவனை ஒரு பச்சைப் பொதியலென முழுக்க மூடிமறைத்துவிட்டன.

அவள் கையிலிருந்த முறத்தை சமையலறை மேடைமேல் வைத்துவிட்டு கூடத்திற்கு வந்தாள், டிவியில் தொலைத்துவிட்ட எதையோ தேடுவதைப்போல சேனல்களை மும்முரமாய் மாற்றினபடி ஓரக்கண்ணால் அவனை கவனித்தாள், அடர்ந்து வளர்ந்த ஒரு மூங்கில் காட்டைப்போல அவன் அசைவின்றி அமர்ந்திருக்க, அவனது கால்கள், கைகள், தொட்டுக்கொண்டிருந்த கணினி என்று எல்லாம் பச்சைப்பசேல் இலைகளால் மூடப்பட்டிருந்தது. சிறிதும் இடைவெளியின்றி கொசகொசவென்று சுருள்சுருளாய் இலைத்த பெரும் கொடியாகத் தோன்றினான் அவன், கிளைகள் தெரியவில்லை, பூ, காய், கனி ஏதுமில்லை, இலைகள், இலைகள், எங்குபார்த்தாலும் பெரியபெரியதான இலைகள்மட்டுமே.

மொய்த்துக்கொண்டிருந்த இலைகளுக்கு நடுவே அவளுக்கு அவன் தெரியாததுபோலவே அவனுக்கும் அவளைத் தெரியப்போவதில்லை என்றாலும், பக்கத்தில் சென்று பார்க்க அவளுக்குத் தயக்கமாயிருந்தது. சில சமயங்களில் அவள் பயத்தோடு அந்த அறை வாசலில் சென்று நிற்கும்போது அவன் ஏதோ உள்ளுணர்வில் அவளைத் தெரிந்துகொண்டு இலைகளுக்கு நடுவிலிருந்து தன் முகத்தைமட்டும் வெளியே நீட்டி, ‘என்ன விஷயம் ?’ என்று மிரட்டல்தொனியில் வினவுவான். ஆதிகாலத்துத் தாவர மனிதன்போன்ற அந்தக் கோலத்தில் அவனைப் பார்க்கப் பயந்துகொண்டு அவள் இப்போதெல்லாம் அப்படி நிற்பதில்லை, ஆனாலும் அவன் இலைகளால் மூடப்பட்டு மறைந்துபோகிறபோதெல்லாம் எப்போது திரும்பி வருவான், ஒருவேளை வராமலே அப்படியே மறைந்துவிடுவானோ என்றெல்லாம் உள்ளுக்குள் கலவரம் பிடுங்கித் தின்ன, சமையலறையினுள் வேலையே ஓடாது அவளுக்கு. அரிசி புடைப்பதுபோலவோ, ஆனந்தவிகடம் வாசிப்பதுபோலவோ ஹாலில் அமர்ந்தபடி அவனை உன்னித்துக்கொண்டிருப்பாள், இதோ, இந்த விநாடியில் இலைகளைக் கிழித்துக்கொண்டு அவன் எழுந்து வரப்போகிறான் என்று அவள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோதும், அவன் சில மணி நேரங்களாவது அந்த மோனத் தவத்தில் ஆழ்ந்திராது வெளிவருவதில்லை.

பெரும்பாலும் அவன் அப்படி எழுந்துவருகிறபோது சாப்பாட்டு நேரமாகியிருக்கும், நேராய் உணவு மேஜையில் வந்தமர்வான், தட்டில் பரிமாறப்படுவது எதுவானாலும் மறுபேச்சில்லாமல் சாப்பிடுவான், உணவுப் பண்டங்களை நன்கு மென்று உண்பது அவனது பழக்கம், ஆகவே அவன் சாப்பிட்டுமுடிக்க இருபத்தைந்து நிமிடங்களாவது ஆகும், அப்போது அவள் அவனது எதிர் நாற்காலியில் அமர்ந்தபடி அவனது முகத்தையும், கைகளையும் ஆவலோடு உற்றுப்பார்ப்பாள், அங்கே இன்னும் சிற்சில இலைகள் மீதமிருக்குமானால், சாப்பிட்டபிறகும் அவனுக்கு வேலை இருக்கிறது என்று அர்த்தம், அவனுக்குப்பின் அவள் சாப்பிட்டுமுடித்து, பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்திவிட்டு படுக்கையறையினுள் நுழையும்போது பக்கத்து அறையில் அவன் மீண்டும் பச்சைக் குவியலாய் அமர்ந்திருப்பான், அவள் சில நிமிடங்களுக்குப் படுக்கையில் புரண்டு படுத்தபின்னும் தூக்கம் வராமல், நிலையில்லாத மனதோடு ஹாலில் அமர்ந்துகொண்டு ஏதேனும் ஒரு புத்தகத்தைப் பாதிக் கண்களுக்குப் புரட்டினபடி அவனுக்காகக் காத்திருப்பாள்.

அவன் தூங்கவரும்போது பெரும்பாலும் மணி பத்தரை அல்லது பதினொன்றைத் தொட்டிருக்கும். ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் களைத்ததுபோன்ற முகபாவத்தோடுதான் படுக்கையை அணுகுவான் அவன், கண்களின்மேல் இரண்டு பெரிய இலைகள் இன்னமும் மீதமிருக்க, படுத்த பத்தாவது நிமிடத்தில் தூங்கிப்போய்விடுவான், அதன்பிறகும் இரவு விளக்கின் மிதமான நீல வண்ணத்தில் அவள் அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு விழித்திருப்பாள், அவனது கண்களை மூடியிருக்கும் இரு இலைகளும் மெதுவாகச் சுருங்கி மறைந்தபின்தான் தூங்குவதற்கான நிம்மதி அவளுக்கு சாத்தியப்படும், இனம்தெரியாத ஒரு வியாதியிலிருந்து கணவனைக் காப்பாற்றிவிட்ட நிறைவும், களைப்பும் அவளை ஒரே நேரத்தில் தாக்க, கனவுகளின்றி நிம்மதியாய்த் தூங்கிப்போவாள் அவள்.

மறுநாள் காலை எழும்போது அவன் நம்மெல்லோரையும்போல் சாதாரணமானவனாகவே தெரிவான், அலட்சியமாய் செய்தித்தாள் புரட்டுவான், பால் காய்ச்சிக்கொண்டிருக்கிற மனைவியை முதுகுப்புறமாய் அணுகி, அணைத்து, கழுத்தில் முத்தம்தந்து கூசவைப்பான், ஒரு கையில் கா·பியும் மறுகையில் ரிமோட்டுமாய் காலை நேர வர்த்தக செய்திகளையும், அவனுக்கு ஆர்வமிருக்கிற நிறுவனங்களின் பங்கு மார்க்கெட் நிலவரத்தையும் ஆவலோடு பார்ப்பான், குளித்து, சாப்பிட்டுவிட்டு, கையில் மடிக்கணினியோடு அலுவலகம் புறப்படும்போது அவளுக்கு விடைபெறு முத்தம் தரவும் தவறுவதில்லை – நேற்று இரவு பார்த்தவன்தானா இவன் என்று அவள் வியந்து முடிப்பதற்குள் அவன் காரில் ஏறி அமர்ந்து எ·ப். எம். ரேடியோவைத் தட்டிவிட, அந்த வாகனம் அவர்களது வாசல் கேட்டைத் தாண்டுவதற்குள் அவனது கழுத்தில் சிறிதாய் முளைவிடுகிற பசிய இலைகள் அவள் கண்ணில் பட்டுவிடும், கேன்சர் செல்களின் வேகத்தில் அந்த இலைகள் பரபரப்பாய் நிறைந்துபரவ, தெருமுனைக்குள் அவன் பசுங்கொடியொன்றினுள் மூழ்கிவிடுவதைக் கண்நீரோடு பார்ப்பாள் அவள். எந்த விபத்துமின்றி அவன் அலுவலகம் சென்று சேரவேண்டுமே என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்ளாமல் அவள் காலை உணவு உண்டதில்லை.

சற்றும் எதிர்பார்த்திராத இந்தப் பிரச்சனையை அவள் ஓரிரு மாதங்களுக்குப் பொறுமையோடு நன்றாகவே சமாளித்தாள் என்றுதான் சொல்லவேண்டும், அதன்பின்னும் பொறுக்கமுடியாமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் அவனிடம் இதைப்பற்றிப் பேசினாள்.
அவள் சொல்வதையெல்லாம் பொறுமையோடு கேட்டவன், ‘என்ன பைத்தியக்காரத்தனமா பேசறே ?’ என்றான் முதல் எதிர்வினையாய், ‘இலையாவது, கொடியாவது, ரிடிகுலஸ், சுத்த பேத்தலா இருக்கு’ என்று மேலும் சொன்னவன், ‘பேய், பிசாசு கதையெல்லாம் நிறைய படிப்பியோ நீ ?’ என்றான் அவளிடம்.

அவனது கோபத்தைக்கண்டு அவளுக்கு அழுகையே வந்துவிட்டது, ‘இல்லைங்க, நான் நிஜமாதான் சொல்றேன்’ என்று விசும்பலினூடே சொன்னவள், ‘இதை யார்கிட்டயும் சொல்லமுடியாம, என்ன பண்றதுன்னும் தெரியாம ஒவ்வொரு நாளும் நான் எத்தனை அவஸ்தைப்படறேன்னு உங்களுக்கு என்ன தெரியும் ?’

சில விநாடிகளுக்கு இருவரும் பேசாமலிருக்க, அவன் கழுத்தைத் தேய்த்தபடி யோசித்து, ‘இப்ப என்னதான் பண்ணலாம்ங்கறே ?’ என்றான் கடைசியாய்.
அவள் தயங்கித் தயங்கி, ‘ஒரு டாக்டரைப் பார்க்கலாங்க’ என்றாள்.

அவன் சோ·பாவிலிருந்து அத்தனை வேகமாய் எழுந்திருப்பான் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை, அவனது சிவந்த கண்களைப் பார்த்தபடி அவளும் நடுக்கத்தோடு எழுந்து நின்றாள், அவன் அவளை ஆத்திரத்தோடு பார்த்து, ‘எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு சொல்றியா ?’ என்றான் கண்களை உருட்டி.

அவள் ஏதோ சொல்லமுயன்றதையும் அவனது ஆங்காரம் அனுமதிக்கவில்லை, ‘உனக்குதான் பைத்தியம் பிடிச்சிருக்கு, மனுஷனைச்சுத்தி செடி முளைக்குது, தானா மறைஞ்சுபோகுது-ன்னு ஏதேதோ சொல்றே, நல்ல சுயநினைவோடு இருக்கிற யாராவது இப்படியெல்லாம் பேசுவாங்களா ?’, அவனது அதட்டல்தொனி தாளாமல் அவள் நிஜமாகவே அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவளது அழுகையைக் கண்டதும் அவனுக்குள் ஏதோ நெகிழ்ந்திருக்கவேண்டும். சில நிமிடங்களுக்குப் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், கையிலிருந்த சிகரெட்டை சாம்பல் கிண்ணத்தில் தேய்த்து அழித்துவிட்டு அவளது இரண்டு தோள்களையும் அழுத்தமாய் பற்றிக்கொண்டான், ‘ஏய், என்னைக் கொஞ்சம் நிமிர்ந்து பாரு’
அவள் இன்னும் குறையாத கண்நீரோடு அவனை ஒருமுறை பார்த்துவிட்டு சட்டென்று தலைகுனிந்துகொண்டாள், அவன் அவளது தாடையைத் தொட்டு நிமிர்த்தினான், ‘நீ இந்த வீட்ல சந்தோஷமா இருக்கியா இல்லையா ?’ என்றான் நேரடியாய், ‘உண்மை எதுவானாலும் அதைத் தயங்காம சொல்லு, நான் உன்னை நல்லா வெச்சுகிட்டிருக்கேனா இல்லையா ?’

அவள் ஆமோதிப்பாய்த் தலையாட்டினாள், தொடர்ந்து, ‘நான் அதில எந்த குறையும் சொல்லலைங்க’ என்று அவள் ஏதோ சொல்லவர, அவன் முகத்தில் பரவிய சிரிப்பு அதைப் பாதியில் நிறுத்திவைத்தது, உணர்ச்சி மேலீட்டில் ‘தேங்க் காட்’ என்று மேலே பார்த்துச் சொன்னவன், ‘அது போதும் எனக்கு’ என்றான் மீண்டும் சிரித்து. அவள் மேலும் பேசுவதற்குள் சரசரவென்று உள்ளறைக்குள் மறைந்துவிட்டான் அவன்.

அவள் சோ·பாவில் தளர்ந்து விழுந்தாள், தன்னுடைய தரப்பிலான நியாயத்தையோ, குற்றச்சாட்டையோ முழுக்கக் கேட்காமல், அதைப் புரிந்துகொள்வதற்கான சிறு முனைப்பும் காட்டாமல் அவன் அலட்சியமாய்ப் போய்விட்டது அவளுக்குப் பெரும் வேதனையாய் இருந்தது. அதைக்காட்டிலும் பெரிய பயம், மீண்டும் இந்தப் பச்சை இலைகளின் பிரச்சனையை அவளே தனியாய்ச் சமாளித்தாகவேண்டும், எப்படி ?

நடுக்கத்தோடு அவள் உள்ளறையை எட்டிப்பார்த்தபோது அவன் புதியதொரு பச்சைப் புதரினிடையே அமர்ந்திருந்தான், அவளது காலடிச் சப்தத்தில் கலைந்து திரும்பி, சில இலைகளைக் கிழித்துக்கொண்டு திடுமென்று வெளியே எட்டிப்பார்த்தவன், ‘என்ன டியர், இப்பவும் என்னைச்சுத்தி இலைங்க முளைச்சிருக்கா ? உன் கண்ணுக்குத் தெரியுதா ?’ என்று கேலியாய்ச் சிரித்தான், அவனது அமானுஷ்யமான பார்வை அவளுக்குள் பெரிய பூகம்பத்தை உண்டுபண்ண, அவள் சப்தமின்றி ஓலமிட்டபடி படுக்கைக்குச் சென்று போர்வையைப் போர்த்திக்கொண்டாள், அதன்பின் வெகுநேரத்துக்கு அவளது அழுகை அடங்கவில்லை.

ooOoo

அடுத்த மாத இறுதியில் அவர்கள் மும்பைக்கு விமானத்தில் சென்று, அருகிலிருந்த ஒரு மலைப் பிரதேசத்திற்கு உல்லாசப் பயணமாய்ப் போனார்கள், அவள் இந்தப் பிரச்சனைகளையெல்லாம் மறந்து சிரித்திருந்த நாட்கள் அவை, புத்தம்புதிதாய்த் திருமணமானவர்களைப்போல அந்தச் சிறிய நகரத்தின் மூலைமுடுக்குகளெங்கும் கைகோர்த்து சுற்றித் திரிந்தார்கள் அவர்கள், தெருவோரக் கடைகளில் எலுமிச்சை மணக்கிற பாவ்பாஜியும், முந்திரிப் பருப்பு பர்பிகளும் வாங்கித்தின்று, மான்களுக்கு இலை, தழை ஊட்டினபடி புகைப்படமெடுத்துக்கொண்டு, செயற்கை ஏரியில் பெடல்-மிதி படகுச் சவாரி செய்து, ஒரு பழையகாலத்து அரண்மனையுள் ஓடிப்பிடித்து விளையாடி, தூசும், மாசும் இல்லாத காற்றில் கமழ்கிற தேயிலை மணத்தை நுரையீரலின் அடிவரைக்கும் சுவாசித்தபடி பேசிக் களைத்தார்கள்.

இரண்டாம்நாள் இரவு ரிசார்ட் அறைக்குத் திரும்பியபின்னர் இரவு உணவுக்கு வேண்டியவற்றை ஆர்டர் கொடுத்துவிட்டு அவள் குளிக்கப்போனாள், பதினைந்து நிமிடங்களுக்குப்பின்னும் இதமான வெந்நீர்க் குளியலிலிருந்து விலக மனமில்லாமல் அவள் வெளியே வந்தபோது அவன் படுக்கையில் உட்கார்ந்த நிலையில் கண்மூடியிருந்தான், அவன் எதிர்பாராத கணத்தில் ஒரு முத்தம் தர உத்தேசித்து அவள் முன்நகர்ந்தபோது அவனது செல்லிடத் தொலைபேசி சிணுங்கலாய் ஒலித்தது.

அவன் சட்டென கண்களைத் திறந்து உட்கார்ந்த நிலையில் சற்றே சிரமத்துடன் கைகளை நீட்டி அதை எடுத்துக்கொண்டதும், அவள் தலையைத் துவட்டின துண்டின் இயக்கத்தைப் பாதியில் நிறுத்திப் பின்னே நகர்ந்துகொண்டாள், ‘ஹலோ, தினேஷ், ஹவ் ஆர் யூ ?’, ஏற்கெனவே எதிர்பார்த்ததுபோன்ற விசாரிப்புடன் அவன் பேச ஆரம்பிக்க, அப்போதுதான் அந்த செல்·போனின் பின்பக்கம் ஒட்டியிருந்த சிறிய பச்சை இலையைக் கவனித்தாள் அவள்.

தினேஷ் அவனது அலுவலக மேலதிகாரி, பகல், இரவு எந்நேரமானாலும் இருவரும் பேச ஆரம்பித்தால் சீக்கிரத்தில் பேச்சை நிறுத்துகிற வழக்கமே இல்லை என்பதால் அவள் சலிப்புடன் சூட்கேஸைத் திறந்து ஒரு சுரிதார் தேர்ந்தெடுத்துக்கொண்டு நிமிர்ந்தபோது அவன் தனது மடிக்கணினியைத் திறந்தபடி, ‘கொஞ்சம் பொறு தினேஷ், என் லேப்-டாப் இப்பதான் பூட் ஆகுது’ என்று சிரித்தான், அறையில் இன்னொருத்தி இருக்கிறாள் என்பதை அறவே மறந்துவிட்ட முகபாவம். மடிக்கணினியின் கறுப்பான முதுகுப்புறத்தில் இன்னும் ஏராளமான இலைகள் புழுக்கள்போல் நெளிநெளிந்துகொண்டிருந்ததை அவளால் தெளிவாய்ப் பார்க்கமுடிந்தது.

அவள் முழுக்க உடுத்திக்கொண்டு நிலைக்கண்ணாடிக்கு நகர்ந்தபோது அதில் பிரதிபலித்திருந்த அவனது உருவம், அவளுக்கு நன்கு பழகிவிட்ட பச்சை இலைகளால் முழுவதுமாய்ப் போர்த்தப்பட்டிருந்தது.

ooOoo

ஊருக்குத் திரும்பின மறுதினம் இரவு, அவன் தனது வழக்கமான இலைத்த கோலத்தில் தியானித்திருக்க, அவள் அவனது அம்மா – தன் மாமியாருக்குத் தொலைபேசி, தன்னுடைய சிரமத்தைப் பகிர்ந்துகொள்ள எண்ணினாள். அவரிடமாவது தனக்கான ஆறுதல் கிடைக்கும் என்று அவள் எதிர்பார்த்திருக்க, பேச ஆரம்பித்த சில விநாடிகளுக்குள் அந்த நினைப்பில் ஒரு கூடை மண் விழுந்தது. அவள் சொல்வதையெல்லாம் ஏற்கெனவே அறிந்திருந்தவர்போல் அவர் அலட்சியமாய்ப் பேசினார், ‘அது ஒண்ணும் பெரிய விஷயமில்லைம்மா, சும்மா வரும், போகும், அவ்ளோதான், அவனை ஒண்ணும் பண்ணிடாது, விஷத் தாவரமில்லை அது !’

அவள் அதிர்ச்சியும், திகைப்புமாய் பேச்சுமறந்து நின்றிருக்க, அவர் தொடர்ந்து சொன்னார், ‘ரொம்ப நாளாவே அவனுக்கு இந்த பிரச்சனை உண்டும்மா, முன்னாடியெல்லாம் சின்னச்சின்ன இலையா கழுத்திலயும், காதிலயும், கண்ணிலயும் முளைக்கும், இப்போ அவனை முழுக்க மூடிடுது-ன்னா சொல்றே ?’
‘ஆ – ஆமாம் அத்தே’, அவள் சுதாரித்துக்கொண்டு சொல்ல, அவர் பெரிதாய் உச்சுக்கொட்டினார், ‘என்னம்மா இது ? கல்யாணமானா இதெல்லாம் சரியாப்போயிடும்ன்னு எல்லாரும் சொன்னாங்களே’ – இதற்கு என்ன பதில் சொல்வது ?

அவர் ·போனை வைக்குமுன், ‘இதைப்பத்தி ஒண்ணும் பெரிசா கவலைப்படாதேம்மா, நீ அவனை நல்லா கவனிச்சுக்கோ, அதுதான் முக்கியம், இதெல்லாம் தானா சரியாயிடும், உடனடியா இல்லைன்னாலும், கொஞ்ச நாள்ல மெல்லமெல்ல அவன் அதிலிருந்து வெளிய வந்துடுவான், எல்லாம் உன் கையிலதான் இருக்கு’, அவள்மேல் குற்றம் சாட்டுவதுபோல் அவர் பேசினது அவளுக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலோடு ரிசீவரை லொட்டென்று அறைந்து சாத்தினாள். அந்த சத்தத்திற்கும் நிமிராமல் மோனத்தவம் கொண்டிருந்தது பச்சைக்கொடி அல்லது புதர்.

ooOoo

அன்று அவன் அலுவலகத்திலிருந்து சீக்கிரமே திரும்பியிருந்தான், அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும் என்று அவளிடம் பேருக்குச் சொல்லிவிட்டு டெலி·போனையும் தூக்கிக்கொண்டு அவனது வழக்கமான அறைக்குப் போயிருந்தான். வெகுநேரத்துக்குப்பின்னும் அந்த அழைப்பு வந்ததாகத் தெரியவில்லை.

ராத்திரிக்கு எலுமிச்சை மற்றும் தேங்காய்ச் சேவை செய்வதாய் முடிவெடுத்திருந்தவள், ஏனோ மனம் அதில் ஈடுபடாமல் சேவை நாழியின்முன்பே வெகுநேரம் யோசனையோடு அமர்ந்திருந்தாள், அதன் கரிய, சிறு துளைகளில் அவளது நினைவுகள் புகுந்து, வெளியேறி, அதேவேகத்தில் மறுதுளையில் நுழைந்து சிக்கலாகிக்கொண்டிருக்க, ஏதும் முடிவுசெய்யமுடியாதபடி நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

எட்டு மணியளவில் அவள் எழுந்து அவனது அறைக்குள் நுழைந்தாள். தயக்கமில்லாத நடையில் தீர்மானமான வேகம்.

‘நான் வேலைக்குப் போகலாம்-ன்னு யோசிக்கறேன்’, அவளது குரலைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தான் அவன், அந்த வேகத்தில் அவனது கழுத்துப் பகுதியில் முளைத்திருந்த சில இலைகள் திணறிக் கீழே சரிய, அவன் தனது சுழல்நாற்காலியில் ஒருமுறை நாடகத்தனமாய்ச் சுற்றி மீண்டும் பழைய இடத்துக்கு வந்தபோது இன்னும் பல இலைகள் உதிர்ந்து விழுந்தன.

‘என்னது ?’, அவன் புரியாததுபோல் விசாரித்தான்.
‘நான் வேலைக்குப் போகணும்’, பொறுமையான குரலில் அவள் வலியுறுத்திச் சொன்னதும், வேடிக்கையான சிரிப்பொன்று அவனிடமிருந்து உடனடியாய் வெளிப்பட்டது, அதை மறைத்துக்கொண்டு, ‘எதுக்கு ?’ என்றான் குழப்ப முகபாவத்தில்.

அவள் ஒருமுறை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டாள், ஒரு நாளைக்கு சமையல் மற்றும் இதர வேலைகளைச் செய்ததுபோக மீதமிருக்கும் நேரத்தைத் தன்னால் கொல்லமுடியவில்லை என்றும், படித்த படிப்பு வீணாகிப்போவது கவலையாய் இருக்கிறது என்றும் சொன்னாள், ‘நீங்க வீட்ல இருக்கும்போதும் சரி, இல்லாதபோதும் சரி, என்னைக் கவனிக்கறதே இல்லை’ என்று இறுதியாய்ச் சொல்லிவிட்டு, அதைச் சொல்லாமலிருந்திருக்கலாமோ என்று பின்னர் யோசித்தாள். அதேநேரத்தில் தழையாடைபோல் அவனைப் போர்த்தியிருந்த இலைகளை அர்த்தத்துடன் பார்த்தபோது அதில் தவறில்லை என்றும் தோன்றியது, அவனது கண்களைச் சுற்றிலும் பொத்திப் பாதுகாத்திருந்த இலைகள் குதிரைச் சேணம்போல் தோன்றின அவளுக்கு. ஆவேசமாய் அவன்மேல் பாய்ந்து அந்த இலைகள் அனைத்தையும் பிய்த்தெறிகிற ஆங்காரம் உள்ளே ஊழிக்கூத்தாய் எழுந்தாடியது.

அவன் இன்னும் யோசனையில் இருந்தான், அவளது குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லியாகவேண்டுமா என்று சிந்திக்கிற தற்காப்பு மனோபாவம் அவனிடத்தில் தென்பட்டது, கடைசியில் அது வேண்டாம் என்று முடிவுசெய்தவன்போல், ‘நீ வேலைக்குப் போறது அவசியம்-ன்னு எனக்குத் தோணலை’ என்றான்.
‘எனக்குத் தோணுது’ என்றாள் அவள் பட்டென்று. குரலில் அசாத்திய உறுதி.

‘வெல்’, அவன் தோள்களைக் குலுக்கிக்கொண்டான், ‘அப்புறம் உன் இஷ்டம்’, என்றவன், அப்போதுதான் நினைத்துக்கொண்டாற்போல், ‘என்ன வேலைக்குப் போவே ?’ என்றான், ‘வேலைக்கும் போய்கிட்டு, வீட்டு விவகாரங்களையும் கவனிக்க உன்னால முடியுமா ?’ என்று கேட்டவன் முகத்தைத் தீவீரமாக்கிக்கொண்டு, ‘நான் உனக்கு அந்த ரெட்டைக் கஷ்டத்தைக் கொடுக்க விரும்பலை’ என்றான்.

அவள் கொஞ்சம் யோசித்தாள், பின்னர் அவனது எல்லாக் கேள்விகளுக்கும் ஒருங்கே பதில்சொன்னாள், ‘நம்ம கல்யாணத்துக்கு முன்னாலயே நான் வேலைக்குப் போய்ட்டிருந்தேன், அது உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கறேன், அதேமாதிரி ஒரு டீச்சர் வேலையைத்தான் தேடணும், நான் தேடிக்கறேன், எனக்கு நம்பிக்கை இருக்கு’, கொஞ்சம் யோசித்தவள், ‘நாள்ல பெரும்பகுதி கவனிப்பில்லாம சும்மா உட்கார்ந்திருக்கிறதுதான், ரெட்டை வேலை பண்றதைவிட கஷ்டமான விஷயம்’ என்றாள்.

அவன் அவளை ஆச்சரியமாய்ப் பார்த்துவிட்டு தலையைத் திருப்பிக்கொண்டான், ‘ஓக்கே’ என்றவன் தொடர்ந்து, ‘நீ சொன்னமாதிரி ஒரு வேலையைத் தேட முயற்சி பண்ணு, நானும் தெரிஞ்சவங்ககிட்டே சொல்றேன்’, அதற்குமேல் ஏதும் பேசுவதற்கில்லை என்பதுபோல் கணினியின்பக்கம் நகர்ந்துகொண்டான். அவள் தீர்க்கமான பார்வையுடன் அவனை வெறித்துவிட்டு அலட்சியமாய் வெளியேறி நடந்தாள்.

சமையலறையை நெருங்கும்போதுதான் அவன்மேலிருந்து விழுந்த இரண்டு இலைகள் தனது காலில் நன்கு ஒட்டிக்கொண்டிருப்பதை கவனித்தாள் அவள். தாளமுடியாத அருவருப்போடு அவசரமாய்க் குனிந்து அவற்றைப் பிடுங்கி எறிய முற்பட்டபோது அவை அவளது கையில் பிடிவாதமாய் ஒட்டிக்கொண்டன, மறு கையால் அந்த இலைகளைப் பிடுங்க முயன்றதில் இரண்டு இலைகளும் இன்னொரு கைக்குப் போய்விட்டன.

அவள் செய்வதறியாத திகைப்புடன் நிமிர்ந்தபோது அறைவாசலில் அவளது கணவன் நின்றிருந்தான். கண்களில் அளவற்றுப் பொங்கும் திகிலுடன் அவனது பார்வை அவள் கையில் அழுத்தமாய் ஊன்றியிருந்த பச்சை இலைகளின்மேல் விழுந்திருந்தது.

நன்றி: ‘காலம்’ காலாண்டு இதழ்

– என். சொக்கன் [nchokkan@gmail.com]

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *