“சாரூ..சாரு..எங்க போயிட்டம்மா நீ..இங்க வா..உன் வீட்டுக்காரன் ஏலம் விடாத குறையா கத்திக்கிட்டு இருக்கான்..போயி என்னன்னு கேளு “ என்றார் மரகதம்.
சாருவின் மாமியார் தான் இந்த மரகதம். அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட சாரூ, “ இதோ போறேன் அத்தை..உங்க பையனுக்கு வேற வேலை என்ன..அதை காணோம் இதை காணோம்னு சொல்ல போறார்.அவ்ளோதான்.அடுப்பிலே பால் வச்சிருக்கேன்.கொஞ்சம் பொங்கிடாம பாத்துகோங்க..இப்ப வந்தர்றேன்” என்றவள் தனது எட்டுமாத வயிறை தூக்கிகொண்டு கணவனை தேடி சென்றாள்.
அறை முழுவதும் குப்பையாக்கி வைத்திருந்தான் கேசவன்..
“ என்னங்க..என்னத்த தேடறீங்க இப்படி எல்லா பேப்பரூம் குப்ப மாதிரி ஆக்கி..என்னங்க ஆச்சு உங்களுக்கு..”
“ அது..நீ இவ்வளவு நேரம் கழிச்சு வந்தா குப்பயாதான் இருக்கும்..கூப்ட உடனே வந்தா இவ்ளோ குப்பை சேந்திருக்காது இல்ல..சரி சரி இங்க வா..இதுல ரெண்டு நாள் முந்தி வந்த பேப்பர் ல ஒரு விளம்பரம் வந்துருக்காம்.ஒரு பொருள் வாங்கினா இன்னொரு பொருள் இலவசமா தர்றாங்களாம்..அந்த விளம்பரம் வந்த பேப்பர் கட்டிங்க கொண்டு போனுமம்..அத தான் தேடறேன்..வா வா நீயும் வந்து தேடு” என்றான் கேசவன்
“இதுக்குதான் என்னைய ஏலம் போட்டு கூப்டிங்களா..நீங்களே தேடி எடுங்க..இலவசமாம் இலவசம்..ஏங்க எத்தன வாட்டி சொல்லிட்டேன்..இப்படி இனாமா குடுக்கறதுல நெறையா பால்ட் வரும்..டாமேஜ் இருக்கும்னு..இத மாத்திக்கவே மாட்டிங்களா..நீங்களாச்சு..உங்க இலவசமாச்சு எனக்கு வேலை இருக்கு நான் போறேன்” என்று அந்த இடத்தை விட்டு முணுமுணுத்து கொண்டே நகர்ந்தாள் சாரு.
கேசவன்..தனியார் கம்பெனி ஒன்றில் நல்ல சம்பளம் வாங்கும் போஸ்டில் இருக்கிறான்.வேலையில் அவனை யாரும் குறை கூற இயலாது..ஆனாலும் அவனுக்கு ஆபீசில் உள்ள பெயர் என்ன தெரியுமா? கஞ்சா கேசவன்.
ஏனென்றால், இவனின் கஞ்சத்தனம் அலுவலகமெங்கும் பிரபலம்..கஞ்ச கேசவன் என்பது மருவி, நக்கல் பண்ணுவதற்காக கஞ்சா கேசவன் ஆக்கி விட்டார்கள்.இதில் காமெடி என்னவென்றால், அவனுக்கே இது தெரியாது.அவன் கோபம் அப்படி..தனியார் கம்பனி என்பதால் சீட்டு கிழியும் அபாயம் இருப்பதால் யாரும் கேசவன் முன்பு அப்படி பேசுவதில்லை.அதற்காக கேசவனும் வருத்தப்பட மாட்டான்.
வீட்டில், அவன் அம்மாவும் மனைவியும் , இவனின் கஞ்சத்தனத்தையும், இலவசம் என்றால் வாய் பிளக்கும் எண்ணத்தையும் மாற்ற எவளவோ போராடி தோல்வி அடைந்து விட்டார்கள். திருமணமாகி ஒரு வருடம் ஆகியும், குழந்தை வந்தால் செலவு பிடிக்கும், அதற்கு சேமித்து வைத்து விட்டுதான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தள்ளி வைத்திருந்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.இப்போதுதான், மற்றவர்கள் ஒருமாதிரி பேசுகிறார்கள் என்று சம்மதித்து, சாரூவிற்கு இது எட்டாம் மாதம் நடக்கிறது.ஆனால் மாமியும் மருமகளும் சேர்ந்து ஒரு விஷயத்தை கேசவனிடம் மறைத்து விட்டார்கள். அது தெரிந்தால்…?
ஒருவழியாக பேப்பேரை தேடி எடுத்த கேசவன், “சாரு,இங்க வாயேன்..ஒரு led டிவி வாங்கினா ஒரு மிக்சி இலவசமாம்.வா..கெளம்பும்மா,,நாமளும் led டிவி வாங்கனும்னு பிளான் பண்ணினோம் தானே..” என்றான்
“ இத பாருங்க..இதுக்கு முன்னாடியும் ஒரு கிரைண்டர் வாங்கினா அயன் பாக்ஸ் ப்ரீன்னு சொன்னாங்கன்னு வாங்கி குடுத்தீங்க..பாருங்க..கிரைண்டர் “சுத்துதே சுத்துதே மாவுன்னு” சுத்திக்கிட்டே இருக்கு.ஒருதடவ ஆன் பண்ணினா அது பேச்ச அதே கேட்கமாட்டக்கு தெரியுமா..அத ஆப் பண்றதுக்குள்ள நான் படர பாடு இருக்கே..அட ச்சே.. இந்த சந்தானம் டைலாக் வேற அப்பப்ப வாயில வந்து தொலைக்குது..”
“ அது சரி சாரு, அயன் பாக்ஸ் நல்லாதானே இருக்கு..”
“ஆமா ரொம்ப நல்லாருக்கு..கொதிக்கிற எண்ணைய்குள்ள போட்டா கூட சூடு ஏறாது..அயன் பாக்சாம்..பாக்ஸ்..சும்மா என்னைய எரிச்சல் படுத்தாதிங்க..சொல்லிட்டேன்”
“இல்ல சாரு..என்று கேசவன் ஆரம்பிக்க, வேணாம்.. என்ன விட்டுடுங்க ப்ளீஸ்..நானும் எத்தனையோ வாட்டி சொல்லிட்டேன்..கஞ்சத்தனத்த விட்டுடுங்க..நல்ல தரமான பொருளா கூட விலை கொடுத்துன்னாலும் வாங்கிக்கலாம்னு..கேக்க மாட்டேங்கறீங்க..”
“ அப்படி இல்ல சாரு ,இப்பவே நமக்கு இவ்வளவு செலவு..இனி பாப்பா வந்திட்டா எவ்வளவு ஆகும்..அதான் இப்படி குறைந்த விலைல வரும்போது வாங்கிக்கலாமேன்னு பண்றேன்.நீ குறை சொல்லிக்கிட்டே இரு.”
“யாரு..நான் உங்கள குறை சொல்றேனா..உங்களுக்கு உங்க ஆபீஸ்ல என்ன பேரு தெரியுமா..கஞ்சன்னு பேரு..அத கேக்க எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா..ஏங்க..நீங்க நல்லாதானே சம்பாதிக்கிங்க..அப்புறம் எதுக்கு இப்படி கணக்கு பாக்கீங்க..”
“கணக்கு பாக்காம தாம் தூம்னு செலவழிச்சு என்ன ஓட்டாண்டி ஆக சொல்றியா இன்னும் ஒரு வாரத்துல வளகாப்பு அது இதுன்னு ஏகப்பட்ட செலவு இருக்கு..இதுல மாத்திரை மருந்து வேற ” என்று கேசவன் கத்தினான்.
“அப்படி சொல்லல..கணக்கு எதுல பாக்கறதுன்னு ஒரு அளவு இருக்கு..மலிவு சரக்கு அதுக்கேத்த மாதிரிதான் இருக்கும்னு உங்களுக்கு புரியவே மாட்டேங்குதே..அத தான் சொல்றேன்..போன தடவ ஆடி கழிவுல வாங்கின புடவை இலட்சணத்த பாத்தீங்கள்ள..வெளுத்து கிழிஞ்சும் போய்டுச்சு..அதுக்கு கூடுதலா விலை கொடுத்து ரெண்டுக்கு பதிலா ஒன்னே வாங்கிருக்கலாம்னு சொல்றேன்..இப்படி எல்லாத்துக்கும் கணக்கு பாக்கற உங்களுக்கு எந்த கணக்குலயும் வரவு வைக்க முடியாம போக போகுது பாருங்க ” என்றவள் பின்னால் இருந்த பாத்திரத்தில் கால் தடுக்கி கீழே விழுந்தாள்.
விழுந்த வேகத்தில், வலி ஏற்பட்டு விட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கே டாக்டரிடம் விளக்கம் சொல்லி நன்றாக கேசவன் வாங்கி கட்டி கொண்டான்.
ஏற்கனவே மரகதம் அவனை போட்டு வாட்டி எடுக்க ஆரம்பித்திருந்தார்..ஆனாலும் அவர் உள்ளுக்குள் பயந்தும் கொண்டிருந்தார்.ஏனென்றால் மாமியாரும் மருமகளும் சேர்ந்து மருத்துவர் ஆரம்பத்திலேயே சொன்ன ஒரு விஷயத்தை கேசவனிடம் மறைத்திருந்தனர்.
டாக்டரும் குடும்ப டாக்டராக, கேசவனின் குணம் தெரிந்து அவனிடம் விஷயத்தை கூறவில்லை.
பிரசவத்திற்கு நாள் இருப்பதாலும், குழந்தையின் தலை திரும்பாததாலும் உடனடியாக சிசேரியன் பண்ண வேண்டுமென்று கூறி கேசவனிடம் கையெழுத்து வாங்கினார் டாக்டர்.என்னதான் கஞ்சன் என்றாலும், மனைவி என்று வரும்போது கொஞ்சம் ஆடிதான் விட்டான்.எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை..சாருவை காப்பாற்றுங்கள் என்று கலங்கிய குரலில் கேட்டான்.
“ ஒன்றும் பயமில்லை கேசவா..ஆனால்.. என்று ஆரம்பித்தவர் உன் விருப்பம் போல தானப்பா எல்லாம் நடக்கும்” என்று அவன் முதுகில் தட்டிவிட்டு உள்ளே சென்று விட்டார்.
கேசவனுக்கோ மண்டை காய்ந்தது..என்ன என் விருப்பம் என்று குமைந்தான்..நீண்ட நேரத்திற்கு பிறகு குழந்தை பிறந்து விட்டதாக நர்ஸ் வந்து கூறினார்..சந்தோஷமாக அம்மாவிடம் கூற திரும்பியவன் திகைத்தான்..
ஏனெனில் அங்கே இரண்டு நர்சுகள் கைகளில் குழந்தைகளோடு நின்றிருந்தார்கள். வெளியே வந்த டாக்டர் சிரித்தவாறே கேசவா உனக்கு இரட்டை குழந்தைகள்..ஒன்றுக்கு ஒன்று இலவசம்..உன் விருப்பம் போலவே..முந்தி பிறந்தாலும் ஆரோக்கியமாவே இருக்காங்க, என்ன மரகதம்மா சந்தோஷம்தானே”என்று கூறி விட்டு சிரித்தார்..
கேசவனின் முழியை பார்த்த மரகதமும் சிரித்தவாறே , பேரப்பிள்ளைகளை பார்த்த சந்தோஷத்தில், அவர்களை கைகளில் வாங்கி கொண்டு “ஆமா டாக்டர்..இனியாவது இவன் ஓவரா கணக்கு பாக்காம பிள்ளைகள வளர்க்கணும்.. எல்லாத்துலயும் இலவசத்த விரும்பின இவனுக்கு கடவுளா பாத்து ஒன்னுக்கு ரெண்டா குடுத்திட்டார்..இத சொன்ன இவன் ஒப்புக்க மாட்டான்னுதான் மறைசிட்டோம்..ரொம்ப நன்றி டாக்டர்” என்றவர் மீண்டும் கேசவனை பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தார்.
அப்போதும் கேசவனின் முழி மாறவே இல்லை..பாவம் கேசவன்..எதிபாராத இலவசத்தினால் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
– 03-12-2012