கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 13,218 
 

கண்ணாடித் தடுப்பு வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே தெரியாதவாறும் உள்ளிருந்து பார்த்தால் வெளியில் நடப்பது அனைத்தும் தெரிவதாயும் அமைக்கப்பட்டிருந்தது.

மணி மூன்றைத் தாண்டி நாற்பது நிமிடங்கள் ஓடியிருந்தது. இன்னும் இருபது பேருக்கு மேல் காத்துக் கொண்டிருந்தார்கள். இன்று வெள்ளிக்கிழமையாதலால் இன்னும் வருவார்கள். நான் தரும் பணம் இவர்கள் கையிலிருந்து மாறி இவர்களின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் வீடுகளுக்கு அரிசியாகவும், பாமாயிலாகவும், அவர்களின் இடுப்பு வேட்டிக்குள் ரகசியமாகப் பயணிக்கும் டாஸ்மாக் பாட்டில்களாகவும், அவர்களின் பிள்ளைகளுக்கு நோட்டுகளாகவும், பென்சில்களாகவும், இருமல் மருந்தாகவும்…

நண்பன்

சிந்தனை நீண்டுகொண்டே போனது. மனம், பணம் தவிர்த்து மற்றதை சிந்திக்க முயன்று தோற்றது.

“”ஒரு பத்து நிமிஷம். யாரையும் உள்ள அனுப்பாத… நீயும் வெளிய நில்லு…”

என்னால் “நீ’ என்று சொல்லப்பட்டவருக்கு என்னுடைய அப்பாவின் வயது இருக்கும். அவர் “”சரிங்கய்யா…” என்றபடி வெளியே காவல் நின்றார்.

இவர்களை இப்படித்தான் சுழற்ற வேண்டும் என்பது எனக்கு சிறுவயது முதலான பாடம். ஒவ்வொரு முறையும் என்னையும் அறியாது வெளிப்படும் வார்த்தைகள் பிறகு என்னை யோசிக்க வைத்து… இறுதியில் அந்த வார்த்தைகளே வென்று முன் நிற்கும். என்னைத் தலைகுனிய வைக்கும்.

செல்பேசி பாட்டுப்பாடி அழைத்தது. விலை உயர்ந்த பேசி. சென்ற முறை வெளிநாடு சென்றபோது வாங்கியது. அதன் திரையில் செல்வியின் முகம் வந்து வந்து மறைந்தது. எடுத்துப் பேச…

“”என்னங்க… இவ்வளவு நேரம் கழிச்சு எடுக்கறீங்க…” மெல்ல சிரித்தேன்.

“”சாப்பிட்டீங்களா? இன்னிக்கு பருப்பரிசி சாதமும், புளிகுழம்பும் வச்சிருந்தேன்…”

“”இன்னும் இல்ல… நீ சாப்பிட்டாச்சா… இரும்புச் சத்து கம்மியாயிருக்குன்னு டாக்டர் தந்த மாத்திரை சாப்பிட்டியா?” செல்வியின் மின்னி மறையும் சிறுகண்களும், சுருள் சுருளான முடியும் நினைவில் வந்தது. இன்னும் நான்கு மாதத்தில் என்னை அப்பாவாக்கப் போகிறவள்.

“”மாத்திரை சாப்பிட்டேன்… டாக்டர் தூங்க வேண்டாம்னு சொன்னதால மெதுவா நடந்துகிட்டிருக்கேன்… அப்புறம்… நம்ம ஊர்ல இருந்து ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்திருந்தார்… உங்க கூட படிச்சவர்னு சொன்னார்… பேர் மறந்துடுச்சிங்க… மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவீங்கன்னு நெனச்சி இங்க வந்தாராம்… எனக்கு உங்க “செல்’ நம்பர் தர கொஞ்சம் யோசனையா இருந்துச்சு… சரின்னு… நம்ம ஃபேக்டரி இருக்கற இடத்தைச் சொல்லி அனுப்பி வெச்சுட்டேன்…”

செல்விக்கு எதையும் சுருக்கமாகச் சொல்லத் தெரியாது. ஏற்றத்துடனும் இறக்கத்துடனும் நடந்ததை நாடகம்போல சொல்லிக் கொண்டே இருப்பாள்.

“”சரி… வந்தா பார்த்துக்கறேன்… வச்சுறவா?”

அதற்குள் அடுத்த எண் “செல்’-லில் காத்துக் கொண்டிருந்தது. நிலம் வாங்கி விற்கும் புரோக்கருடையது.

“”என்னப்பா… சொல்லு…..”

“”ஜீ… பார்ட்டி இப்ப பேசலாம்னு சொல்றாங்க… கொஞ்சம் பணப்பிரச்னை இருக்கும்போல… உடனடி கிரயம்னா உடனே பேசி முடிச்சுரலாம்… முன்பணம் கொஞ்சம் அதிகமா எதிர்பார்க்கறாங்க…”

“”சரி… பத்து “எல்’ தந்துறலாம்…. ஆனா சதுர அடி அறுநூறுக்கு கீழே..ன்னா பேசலாம்… என் நேரத்தை வீண் பண்ணாதே…”

“”ஜீ… அங்க… பக்கத்து இடம்… தொள்ளாயிரத்துக்கு…”

“”பாருப்பா… எனக்கு வேண்டாம்…”

பேசியைத் துண்டித்தேன். அந்த இடம் சதுர அடி தொள்ளாயிரம் போகும். ஆனால் சுற்றி சில பிரச்னை இருக்கிறது. அதேபோல விற்பவருக்கும் நிறைய பிரச்னை இருக்கிறது. உடனடியாக முப்பது எல் இரண்டு நாட்களுக்குள் அவர்களுக்குத் தேவை. மனதுக்குள் கணக்கு ஓடிற்று.

நான் எதிர்பார்த்தது போலவே மீண்டும் பேசி அழைத்தது.

“”சொல்லுய்யா…”

“”ஜீ பேசலாம்… வாங்க… ஆனா முன்பணம் முப்பது “எல்’ கேட்கறாங்க…”

கொஞ்ச நேரம் யோசிப்பதுபோல் இருந்தேன்.

“”ஜீ… வெச்சுறாதீங்க… வாங்க… பேசி முடிச்சுறலாம்…”

சற்று முன் மனசுக்குள் ஓடிய கணக்கின் விடை சரியாக இருந்தது.

“”சரி… எங்க வர்றது…”

“”ஹோட்டல் கேஸில் தாண்டி இடது பக்கம் திரும்பினா மூணாவது கட்டிடம்…. வாங்க ஜீ….”

அடுத்த ஒரு மணி நேரத்தில் முப்பது லட்சம் ஐநூறு ரூபாய் நோட்டுகளாக ஒரு அட்டைப் பெட்டியில் தயாராக இருந்தது. கண்ணாடித் தடுப்புக்கு வெளியே இன்னும் பத்து பேர் கூடியிருந்தார்கள்.

“”இந்த பார்சலைக் கொண்டு போய் கார்ல வை…” பத்து நிமிடத்தில் வந்துவிடுவதாக காத்திருந்தவர்களிடம் சொல்லிவிட்டு காரை நோக்கி நடந்தேன்.

மீண்டும் “செல்’ அழைக்க…

“”ஜீ… வேற ஒரு பார்ட்டியும் அதே இடத்துக்கு மோதுது…” எனக்குள் “சர்’ரென்று எரிச்சல் கிளம்பிற்று.

“”உன் வேலைய காட்டற பாத்தியா… அப்ப என்னா எழவுக்குய்யா என்ன வர சொன்ன?”

என் கோபத்தில் “ஜீ’ அரண்டிருக்க வேண்டும்.

“”ஜீ… அய்யோ… தப்பா நெனக்காதீங்க… நீங்க கார்ல வர வேண்டாம்… “ஸ்கூட்டி’ல வாங்க… ஹோட்டல் பக்கத்துல நான் வெளியவே நின்னுகிட்டிருக்கேன்…”

காரிலிருந்த பார்சலை ஸ்கூட்டியில் வைக்கச் சொல்லிவிட்டு ஸ்கூட்டியை உதைக்க… தோளில் விழுந்தது ஒரு கை… கவனம் முழுவதும் எனக்கு பார்சலின் மீதே இருக்க… காலிடுக்கில் இறுக்கிப் பிடித்தபடி திரும்பினேன்.

“”அட.. சீனி.. எப்படா வந்த?… வீட்டுக்கு வந்தது நீதானா? இப்பதான் செல்வி பேசினா…”

அதற்கு மேல் சீனி ஏதோ சொல்ல… அதில் பாதியை கடந்து சென்ற பேருந்தின் ஓசை விழுங்கிவிட… மனம் சீனியின் மேலில்லாது முப்பது லட்சம் மீதே இருந்தது.

“”சரி… பத்து நிமிஷம் இரு… வந்துடறேன்… ஒரு முக்கியமான வேலை…”

ஸ்கூட்டியின் பக்கக் கண்ணாடியில் சீனி மெல்ல பின்னோக்கி மறைய பணப்பெட்டியை இடுக்கியபடி விரைந்தேன்.

அதன் பின்னர் பேசி முடித்து, முன்பணம் தந்து, பத்திரம் எழுதி… வயிற்றுக்குள் பசி கனன்றது. தண்ணீர் தாகம் தொண்டையைப் பிடுங்க… “கேஸில்’ தண்ணீர் பனிக்கட்டி மாதிரி இருந்தது. இறங்க மறுத்தது.

“”சாதாரண தண்ணி கொடுப்பா…” என்றேன் சர்வரிடம். அவன் எப்படிப் புரிந்து கொண்டானோ அதிலேயே சுடு தண்ணீர் கலந்து தர தொண்டை தீயாய் எரிந்தது.

அதன் பிறகு வாங்கியவர் சார்பாக… நான் மதிய உணவு என்ற பெயரில் மாலை உணவு வாங்கித் தர… ஏதேதோ வண்ணங்களில் எண்ணெயில் பொரித்தும், வறுத்தும், அவித்தும் வந்தவற்றில் எதை வாயில் வைத்தாலும் எனக்குத் தொண்டை தீயாய் எரிந்தது.

மொத்தம் மூவாயிரத்துக்கு மேல் பில் வந்தது. ஒரு காஃபி எழுபத்தெட்டு ரூபாய் என்று கடைசியில் இருந்ததை அதற்கு மேல் படித்தால் சர்வர் கேவலமாக நினைப்பான் என்றெண்ணி, சில ஆயிரங்களை வைத்துவிட்டு மீண்டும் தொழிற்சாலைக்கு திரும்பினேன்.

காத்திருந்த அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்து முடிக்கையில்… மணி ஏழுக்கு மேல் இருக்கும். கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே வெளிச்சப் பூக்களில் நகரம் அழகாக இருந்தது. சீனியின் நினைவு வந்தது. தடுப்புக்கு அந்தப் பகுதியில் கம்ப்யூட்டரில் கணக்கு எழுதிக் கொண்டிருந்தவனைக் கேட்டேன்.

“”ஆமாங்க… சார்… அவரு உங்கள உடனே பாக்கணும்னு சொன்னார்… நம்ம கஸ்டமர் இல்ல சார் அவரு… அதான் நான் கடைசியா உட்கார வெச்சேன்… அதுக்கப்புறம் பார்த்தா அவரைக் காணல… சார்…”

எனக்கு கணக்கெழுதுபவன் மீது கோபமேதும் வரவில்லை. தேவையில்லாமல் வருபவர்களை… நாசூக்காகத் தவிர்க்க வேண்டும் என்று அவனுக்குச் சொல்லி வைத்தது… சரியாகவே…

“”நடுவுல வந்து இந்த கவரை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னாரு சார்… அதுக்குப் பிறகுதான் அவரைக் காணல சார்…”

“”சரி… இனிமேல் யாரையும் உள்ள விடாத…” சுழலும் நாற்காலிக்குப் பின்னிருந்த சிறிய அறைக்குள் நுழைந்து தொலைக்காட்சியைப் போட்டேன். செல்வி கொடுத்திருந்த சாப்பாட்டுப் பாத்திர அடுக்கைப் பிரிக்க பருப்பரிசி சாதமும், புளிக்குழம்பும் அமுதமாய் இனித்தது.

சீனி கொடுத்துவிட்டுப் போன கவரைப் பிரிக்க… பள்ளியில் படித்தபோது பக்கத்தில் அமர்ந்து அவன் எழுதிய இடதுபக்கம் சாய்ந்த மாதிரியான கையெழுத்தில்…

அன்புத் தோழனுக்கு,

உன்னிடம் தந்துவிட்டுப்போக என்னிடம் ஏதுமில்லை. வாங்கி போகவும் நான் வரவில்லை. என்னுடைய வீட்டின் புதுமனை புகு விழாவுக்கு உன்னை அழைக்கவே வந்தேன். அழைப்பிதழ் போடுமளவுக்கு பெரிய வீடு ஏதும் நான் கட்டவில்லை. வரும் வியாழனன்று காலை 6 மணிக்கு அவசியம் வரவும்.

– அக்டோபர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *