இலக்கணத்தில் வாழு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 8,569 
 
 

கோவிலைச் சுற்றி இரைந்து கிடந்த நந்தியாவட்டைப் பூக்களை கண்களிலேயே சேகரித்துக் கொண்டிருந்தாள் ராதா. வெண்மையும், காவியும் கலந்த கோவில் சுவர்கள் இவளிடம் மவுனமாய் பேசாமல் பேசின. ஒருமுறை கிருஷ்ணனிடம் கோவில் சுவரைப் பற்றி விவாதித்த நினைவு வந்து போனது.

ஏன்… எப்பவும் கோவில் சுவர்ல மட்டும் வெள்ளையும், காவியும் கலந்து அடிக்கிறாங்க. அதுக்கு ஏதாவது காரணம் இருக்குமோ…’ சுவரில் படர்ந்து இருந்த காவி நிறத்தை நகக்கண்ணில் சுரண்டியபடி இவள் கேட்ட போது, கிருஷ்ணனுக்கு கோபம் தான் வந்தது.

மதுரையில் பொறந்து, வளர்ந்துட்டு, இப்படி யெல்லாம் கேட்கறது உனக்கே அபத்தமா தெரிய லியா ராதா. கோவில் சுவர்ல அடிக்கிற வெள்ளை நிறம் தூய்மைக்கும், காவி நிறம் புலனடக்கத்திற்கும் மறைமுகப் பொருளாய் குறிக்கப்படுது. கோவிலுக்குள்ள போறதுக்கு முன்னாடி உடலும், மனசும், சுத்தப்படணும், புலன்களை அடக்கி ஆளணும்ன்னு அந்த நிறங்கள் சொல்லுது.

இதை, கோவிலுக்குள் வந்தா, மக்களுடைய உள்ளம் தூய்மையாகுது, புலன்கள் கட்டுக்குள்ள அடங்குதுன்னு இன்னொரு வகையாகவும் எடுத்துக்கலாம்…’ கிருஷ்ணன் சொன்ன போது, ராதாவின் உள்ளங்கால்கள் சில்லிட்டுப் போனது அன்று.

இன்றும் கூட கால்கள் சில்லிட்டுத்தான் போனது. அவள் ஒன்றரை மணி நேரமாய் ஒரே இடத்தில் அமர்ந்து இருக்கிறாள் என்றால், கால் சில்லிடாமல் என்ன செய்யும். பின்பக்கம் முதுகுதண்டில் அமானுஷ்ய வலி பரவியது. காத்திருப்பின் வலி வேதனையானது.

வீட்டில் பொய் சொல்லிவிட்டு கிளம்பி வந்திருக்கிறாள்… ஒருவேளை அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்ற விவரம் அவர்களுக்கு தெரிந்தால், எவ்வளவு அசிங்கமாக போய்விடும். நினைக்கவே வெட்கமாய் இருந்தது.

என்ன இன்னும் அவர் வரலியா?” பூக்காரப் பெண் கற்பகம் அருகில் வந்து அனுசரணையாய் விசாரித்தாள். காலையில் இருந்து இந்த கேள்வியை நாலாவது முறையாக கேட்டாள். இந்த முறையும் சிரிப்பைத்தான் பதிலாய் தந்தாள் ராதா. அடிக்கடி இங்கு வந்து சந்தித்துக் கொள்வதால், கற்பகம் இவர்களுக்கு நல்ல சினேகிதி ஆகிவிட்டாள்.

ஏன் இன்னும் வரவில்லை… வீட்டில் ஏதும் பிரச்னையோ. ஒருவேளை உடம்புக்கு ஏதும் முடியவில்லையோ!’ நினைக்கயிலேயே மனசுக்குள் நடுக்கமாய் இருந்தது. சட்டென்று முகம் திருப்பி கருவறைக்குள் இருந்த சாமியை சேவித்துக் கொண்டாள். கண்களை மூடி பளிங்குத் தூணில் தலை சாய்த்து அமர்ந்திருந்தவளின் தோளில், ஸ்பரிசம் பட அவசரமாய் கண்விழித்து பார்த்தவள், தன்னையே மறந்து போனாள்.

கிருஷ்ணன் தான். அவளுடைய ரெண்டு மணி நேரம் தவம் கலைந்தது. ஏக்கம், சோகம், காதல், ஆனந்தம், பாசம், பரிதவிப்பு அத்தனையும் ஒன்றாய், சேர்ந்து, கண்ணீராய் திரண்டு கடைவிழியில் தேங்கியது. கண்ணாடியை கழற்றி முந்தானையில் ஒற்றி துடைத்துக் கொண்டாள்.

“ரொம்ப நேரமா வெயிட் பண்றியா ராதா?” கிருஷ்ணன் அருகில் அமர்ந்து பாந்தமாய் கேட்ட போது, ராதாவிற்கு அழுதே விடுவோம் எனத் தோன்றியது.

ரெண்டு மணி நேரமா காத்திருக்கேன்… உங்களுக்கு என்னோட சூழ்நிலை தெரியாதா? ஆனா, உங்களைச் சொல்லியும் பாதகமில்லை. என்னுடைய நிலைமைதான் உங்களுக்கும்.” கேள்வியும், பதிலும் தானேவாகி, பதில் சொல்கிற சிரமம் கூட கிருஷ்ணனுக்கு தராமல் காத்துக் கொண்டாள் ராதா.

வண்டியில ஓடம் ஏறுன காலம் போய், ஓடத்துல வண்டி ஏறுகிற காலம் ஆகிடுச்சு! பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரிச்ச மாதிரி, பிள்ளைங்களைப் பெத்து, படிக்க வச்சு, உயர வச்ச பெரியவங்க ரெண்டு பேரும், புள்ளைங்க பாகப்பிரிவினை பண்ணதாலே பிரிஞ்சு போய், அறியாப் புள்ளைங்க வீட்டுக்கு தெரியாம வந்து பாத்துகிட்ட மாதிரி, மக, மருமகளுக்கு தெரியாம வந்து பாக்கறதும், பேசுறதும் என்ன கொடுமை இது… அது, அந்த சாமிக்கே அடுக்காது.” கற்பகம் வேதனையாய் சொல்ல, ராதாவும், கிருஷ்ணனும் தலையாட்டினர்.

உங்களை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு, எனக்கு கல்யாணத்துல எந்தக் கனவும் இல்லை. ஏன்னா எனக்கு கல்யாணம் நடக்கிறதே கனவு மாதிரி தோணுது… எங்க அம்மா பாவம்… ரொம்ப கஷ்டபட்ட மனுஷி. அவங்களை எனக்கு வர்றவ, தன் மனுஷியா பாக்கணும்ன்னு விரும்பறேன். நீங்க அப்படி இருப்பீங்களா மிஸ் ராதா!’

எழுபதுகளின் ஆரம்பம் என்று ஞாபகம். பெண் பார்க்கும் சடங்கு முடிந்து மறுநாள், ராதா வேலை செய்யும் டைப் இன்ஸ்டிடியூட் வாசலில், போகன்வில்லா மரத்தில் சாய்ந்து நின்றபடி கிருஷ்ணன் கேட்டான். இன்ஸ்டிடியூட்டிற்கு வந்து போனவர்கள், இவர்களை ஒரு மாதிரியாய் பார்த்தபடி கடந்து போயினர்.

கண்டிப்பாய் பார்த்துப்பேன்… ஏன்னா எனக்கு தாய் இல்லை. எனக்கு தாயுடைய அருமை தெரியும்…’ என ராதா பெருவிரலால் நிலம் சுரண்டியபடி சொன்னாள்.

தாங்ஸ் ராதா… நானும் உன்னை நல்லா பாத்துப்பேன். ஏன்னா எனக்கு மனைவி இல்லை. மனைவியோட அருமை எனக்குத் தெரியும்…’ என கொஞ்சமும் சிரிக்காமல் ஹாஸ்யரசம் பொங்க கிருஷ்ணன் அடித்த முதல் ஜோக்கிலேயே ராதா, தன்னை மறந்து போனாள்.

திருமணம் ஒரு மனிதனுக்கு வாழ்வாதாரமா… இல்லை, திருமணத்திற்கு பிறகு தான் மனித வாழ்க்கையே ஆதாரம் பெறுகிறதா… தெரியவில்லை. திருமணத்தை வெறுத்தும், பழித்தும், பேசிய எல்லாருடைய வாழ்க்கையும், திருமணங்களால் நிரப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

ராதாவுடைய வாழ்க்கையை கிருஷ்ணனும், கிருஷ்ணனுடைய எதிர்காலத்தை ராதாவும், திருமணங்களால் நிறைத்தனர். அவர்கள் திருமணத்திற்கு பிறகு, இருபது ஆண்டுகள் கிருஷ்ணனின் அம்மா இவர்களோடு வாழ்ந்தார். அத்தனை காலமும், சீ’யென்ற கடுஞ் சொல்லை கூட, அவர்கள் முன் சொல்லியே அறியாதவள், இன்று தன்னுடைய பிள்ளைகளால் அலைக்கழிக் கப்படுகிறாள்.

பிள்ளைகள் திருமணத்திற்கு முன்பு வரை வாழ்க்கை அழகான கணக்குகளாய் தான் இருந்தது. இருவருக்கும் திருமணம் முடிந்ததும் அவர்கள் வாழுகிற இடங்களிலேயே வீடு வாங்க பிரியபட்டனர்.
ராதா… இதுல வருத்தப்பட எதுவுமில்லை… ஒரு நல்ல தகப்பனுக்கு அடையாளம், தன்னுடைய பிள்ளைங்ககிட்ட தோத்துப் போறதுதான். நாமும் அவங்ககிட்ட தோத்துப் போகணும் ராதா. இத்தனை நாள் நம்ம பிள்ளைங்க நம்ம கூட இருந்தது பெருமை. ஒரு கால கட்டத்திற்கு பிறகு, நாம அவங்க கூட இருக்கறது தான் பெருமை…’ வெள்ளந்தியாய் சொன்னார்.

அண்ணாநகரில் அவர்களுக்கு சொந்தமாய் இருந்த ப்ளாட்டை விற்று, பிள்ளைகளை செட்டிலாக்கினர். மகள் தீபா வண்டலூரிலும், மகன் ஹரி அமைந்தகரையிலும் வீடு வாங்கிக் கொண்டனர்.
வாழ்க்கை ஒரே கணப் பரிமாணத்தில் பயணப்பட்டால், வாழ்க்கையின் நீட்சி, மாட்சிகள் யாருக்கும் புரியாமலே போய்விடும் என்பதுதானே நியதி. தன் பெற்றோரை பேணிப் பாதுகாக்கும் பிள்ளைகளுடைய அந்திம காலத்தில், அவர்கள் பிள்ளைகள் பேணிப் பாதுகாப்பர் என்று சொல்வதெல்லாம் பொய் யாய்த்தான் போனது இந்த நாளில். வீட்டை விற்றுவிட்டு ஹரியுடன் போனபோதுதான், முதுமை காலத்தில் எத்தனை சிக்கல்கள் இருக்கிறது என புரிய ஆரம்பித்தது.

புறாக்கூண்டாட்டம் ஒரு ப்ளாட்… வயசான வங்க ஒரு பெட்ரூமை எடுத்துக்கிட்டா, வயது வந்த பிள்ளைங்க வச்சிருக்கோம், அதுங்க எங்க போகும்… உங்க தங்கச்சி தான் சொந்தமா இடம் வாங்கி, வீடு கட்டி இருக்காளே… அவகிட்ட போனா என்ன?’ காதில் விழட்டும் என்று தான் பேசினாள் ஹரியின் மனைவி உமா.

தீபா வீட்டிலோ விஷயம் வேறு மாதிரி நடந்தது.

அவர் நல்லவர்தான்பா, உங்களை கூட வச்சுக் கறதுல எந்தப் ப்ராபளமும் இல்லை. ஆனா, அவர் கூடப் பிறந்தவங்க ஒரு மாதிரி. அவருக்கு ஏடாகூடமா சொல்லி தந்துருவாங்கன்னு பயமா இருக்கு…’ என்று தட்டிக் கழித்தாள்.

இதப்பாரு தீபா… நான் வெளிப்படையாவே சொல்லிடறேன். நான் வேலைக்கு போறவ, ரெண்டு பெண்களும் ஸ்கூலுக்கு போகுதுங்க, வீட்டை பாத்துக்க ஆள் வேணும்! அத்தை என் கூட இருக்கட்டும்; பெரியவரை நீ வச்சுக்க… உனக்கும் பெத்தவங்களை பாக்குற கடமை இருக்குல்ல…’ எந்த தாட்சண்யமும் காட்டாமல் கேட்டாள் உமா.

தீபா மறுப்பு சொல்லவில்லை… குழந்தைகளை ஸ்கூலுக்கு அழைத்துப் போக வும், டியூஷன் கொண்டு விடவும், அவளுக்கு அப்பா துணை தேவைப்படும் என்று தோன்றியது.

நாற்பது ஆண்டு கால தாம்பத்யம், தாம்பத்யத்தின் தாத்பர்யமே இணைந்து வாழ்வது தான். வேலைக்கு தான் ரிட்டயர்மென்ட் பருவம் உண்டு. திருமண பந்தத்திற்குமா? அவர்களால் பிள்ளைகளின் முடிவை எதிர்த்து போராட முடிய வில்லை. காலக்கண்ணாடியில் இதுவும் ஒரு கட்டாய பிம்பமென்று எண்ணியபடி பயணப்பட தங்களை தயார்படுத்திக் கொண்டனர்.

வாரத்தில் ஒருமுறை அமைந்தகரை வந்து போயினார் கிருஷ்ணன். அதையும் கூட மருமகள் காது கூசும்படி பேசினாள் ஒருமுறை.

‘ச்சே… வயசுப் பொண்ணுங்க இருக்கற வீடு இது. வயசானவங்க அடக்க ஒடுக்கமா நடந்துக் கணும். அதை விட்டுட்டு, இப்படியா நடந்துக்கறது. எங்கம்மா செத்து இருபது வருஷமாச்சு; எங்கப்பா தனியா வாழல? இப்படியா அலஞ்சாரு…’

வார்த்தைக்கு ஆயுள் அதிகம். ஒரு ஆயுட்கால பந்தத்தையே அறுத்து வீசுகிற சக்தியை அது தனக்குள்ளே உள்ளடக்கியது என்றே கூறலாம். இந்த அவமானத்திற்கு பிறகு, அவர் அங்கு வருவதே இல்லை. மாதம் ஒருமுறை வந்து போனாலே அதிசயம்! வீட்டில் மருமகள் இல்லாத சமயங்களில் போன் செய்து பேசிக் கொள்வார்.

‘ராதா… உன் கையால சாப்பிட்டு பழகிட்டனா… இங்க உப்பு, புளி கூட இருக்கு, சாப்பிட்டா உடம்புக்கு ஒத்துக்கல…’ என ஒருமுறை அவர் போனில் சொல்லியதைக் கேட்டு, இரவெல்லாம் தூங்காமல் அழுதாள் ராதா.

ஒரு வயதுக்கு பிறகு, திருமண பந்தத்திற்கு கூட அர்த்தமின்றி போய் விடுமா என்ன? எத்தனை அன்யோன்யமான தம்பதிகள் இவர்கள். மகனும், மகளும் சொந்த வீடுகளில் வாழ வேண்டும் என்பதற்காக, தனக்கு சொந்தமாய் இருந்த ஒற்றை வீட்டை விற்றிருக்க கூடாதோ என்று கூட அடிக்கடி தோன்றும். மரணத்திற்கு முன்பே, மகனும், மகளும் தங்களை பிரித்ததை எண்ணி இருவரும் வெதும்பாத நாளில்லை.

கோவிலுக்கு போகிறேன், பேங்குக்கு, கதாகாலட்சபம் கேட்க, உறவு முறை வீட்டுக்கு என்று ஏதாவது காரணம் சொல்லி, இருவரும் வெளியில் சந்திக்க ஆரம்பித்தனர்.

கல்யாணத்திற்கு பிறகு காதலிக்கணும்ன்னு சொல்றது இதுதானா ராதா?’ கிருஷ்ணன் வாய்விட்டு சிரிப்பார். ஆனால், மனசு அவமானத்தில் கருகும். வெளியில் சொல்லத் தகுந்ததா இந்த நிலை.
என்ன ராதா… மருமக உன்னை கஷ்டபடுத்தறாளா?” மனைவியின் கைகளை பற்றிக்கொண்டு அன்பாய் கேட்டார். கோவில் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், இவர்களை சுற்றி வந்து தொட்டு விளையாடின.

‘கஷ்டமா? உமாவுடைய குணம் இன்னைக்கு, நேத்திக்கா நமக்கு பழக்கம். எனக்கு அவளுக்கு வேலை செய்றதுல எந்த கஷ்டமும் இல்லைங்க. நம்ப பிள்ளைகளுக்கு நாமதான் செய்யணும். சில சமயத்தில் அவ பேசறதுதான் வேதனையா இருக்கு. அது கிடக்கட்டும், தீபா உங்களை நல்லா பாத்துக்கறாளா?’

சிரித்தார் கிருஷ்ணன்.

‘பாத்தியா உன்னோட கேள்வி அபத்தமா படலயா? அவங்க நம்ம குழந்தைங்க ராதா… அவங்களை பாதுகாக்கறதும், அவங்களுக்கு நல்லது, கெட்டது சொல்லித்தரதும் நம்மோட வேலை. அதவிட்டுட்டு அவங்க நம்பளை பாத்துக் கலைன்னு சொல்லிட்டு திரியறது நல்லாவா இருக்கு.’

இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட கற்பகம், வாய் விட்டுச் சிரித்தாள். உரலுக்கு ஏத்த உலக்கைதான் ரெண்டு பேரும். மாத்தி மாத்தி, புள்ளையையும், பொண்ணையும் விட்டுக் குடுக்காம பேசுறீங்க. ஆனா, அதுக உங்களை விட்டு விலகி போயே போயிடுச்சு. உங்க புள்ளைகளுக்கு நீங்க அவசியம்கறதை விட, உங்களுக்கு நீங்கதான் அவசியம்ன்னு எப்போ புரிஞ்சுப் பீங்களோ தெரியல…” கற்பகம் பூச்சுருணையை பந்தாய் சுற்றியபடியே அங்கலாய்த்தாள்.

ஒழுங்கா சாப்பிடுறீங்களா? பின்ன ஏன் உடம்பெல்லாம் இப்படி இளைச்சு கெடக்கு.” வரிசையாய் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் ராதா.

எனக்கொண்ணும் இல்ல… அப்புறம் ஏதும் வந்தாலும், நான் சமாளிச்சுப்பேன் ராதா… உனக்கு அப்படியா? உனக்கு ஒரு வார்த்தை கூட பொறுக்க முடியாது. இந்தா இதுல பி.பி., மாத்திரை இருக்கு, எடுத்து வச்சுக்க. அப்புறம், ஏன் இப்படி வெளுத்துப் போன ரவிக்கை துணியை போட்டிருக்க… நான் வேணா அடுத்தமுறை நாலஞ்சு ரவிக்கை துணி வாங்கிட்டு வரட்டா?’

கற்பகத்திற்கு அவர்களின் அன்னியோன்யத்தை பார்க்கையில் நெஞ்சே அடைத்தது. இவர்களையா பிள்ளைகள் பிரித்து வைத்தனர் என நினைக்கையில், அந்த பிள்ளைகள் மீது வெறுப்பு வந்தது.
அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்தனர். நேரம் ஆக, ஆக வீட்டிற்கு போக வேண்டிய கவலை வந்து ஆட்கொள்ளவே, இருவரும் எழுந்து கற்பகத்திடம் விடைபெற்று, பத்து அடி நடந்து இருப்பர். லேசான தலைசுற்றல், கண்கள் கிறங்க தலையை கையில் பிடித்தபடி அப்படியே மல்லாந்து விழுந்தார் கிருஷ்ணன். பூக்கூடையை தரையில் விசிறிவிட்டு, அவர்களை நோக்கி ஓடினாள் கற்பகம்.

சலைன் மணம் நிரம்பி வழிந்தது அங்கே. நீண்ட பெஞ்சில் ஒரு முனையில் அமர்ந்து ராதா அழுது கொண்டிருக்க, அவருடைய பிள்ளைகள், ஆளுக்கொரு புறமாய் நின்றனர். கற்பகம் எல்லாரையும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

டாக்டர் வெளியில் வந்து வழக்கம் போல கண்ணாடியை கழட்ட, பதறிப் போனாள் ராதா.

‘டாக்டர்… அவருக்கு எப்படி இருக்கு?’

‘நத்திங் டு வொரி. சுகர் பேஷன்ட், காலையில இருந்து சாப்பிடாம இருந்திருக்கார். அதனால, பி.பி., திடீர்னு டவுன் ஆயிடுச்சு. இப்போ இன்ஜக்ஷன் போட்டிருக்கோம். நைட் ரெஸ்ட் எடுக்கட்டும். காலையில் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்…” அவருடைய வார்த்தைகள் ராதாவிற்கு நிம்மதியை தந்தாலும், சாப்பிடலை என்று அவர் சொன்ன வார்த்தை மட்டும் நெஞ்சில் அறைந்தது.

‘அப்பா காலையில இருந்து சாப்பிடலயா தீபா… இதுதான் நீ அவர பார்த்துக்கற லட்சணமா?’ என்றாள் கோபமாக.

‘அதெல்லாம் இருக்கட்டும்… நங்கநல்லூர் ஆஞ்சநேயரப் பாக்கப் போறதால சொல்லிட்டு போனார்… அவர் எப்படிம்மா இங்க… அதுவும் உங்க கூட…’

‘கர்மம்… கர்மம்… வீட்டில நடந்த கூத்து, இப்போ வீதிக்கே வந்தாச்சு… காலையில் சினேகிதி வீட்ல கிரகபிரவேசம்ன்னு சொல்லிட்டு தான் இவங்க கிளம்பி போனாங்க. பெரியவங்க இவ்வளவு பொய் பேசி பாத்ததில்லை நான்… என் பொண்ணுங்க இதக் கேள்விபட்டா என்ன நினைப்பாங்க…’

உமா முகம் போன போக்கை பார்க்கையில், ஆறடி உடம்பு ஈரடியானது.

உடம்பே கூசியது ராதாவிற்கு. அவளுடைய ஆத்மார்த்தமான கேள்வி, அர்த்தமில்லாமல் போய்க் கொண்டிருந்தது அவர்களின் வார்த்தை களால்…

‘அது… அது வந்து…’

‘அம்மா… நினைக்கவே அசிங்கமா இருக்கு… வீடு வாசல் பத்தலைன்னு தானே உங்களை நாங்க தனியா வச்சிக்கிட்டோம்… நீங்க நாற்பது வருஷம் வாழ்ந்த வாழ்க்கை தானே… இதுல என்ன தேடல் இருக்கப் போறதுன்னு நினைச்சோம்… ஆனால், எங்களால அப்படி இருக்க முடியாதுன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நாங்க கஷ்டப்பட்டாவது உங்களை சேர்த்தே வச்சிருப்போம். இப்படி, ரகசியமா காதலர்கள் மாதிரி சந்திச்சுட்டு… நினைக்கவே கூசுதும்மா…” அதுவொரு பொது இடம் என்றும் பாராமல், ஹரி பேசிய வார்த்தையில் செத்தே போனாள் ராதா.

அதுவரை அமைதியாய் அமர்ந்திருந்த கற்பகம் ஆவேசமாய் எழுந்து வந்தாள். அவிழ்ந்த கூந்தலை கோடாலி முடிச்சிட்டு கொண்டே வெறுப்பாய் சொன்னாள்…

‘த… நீயெல்லாம் ஒரு புள்ளையா? அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்ததால தானே நீயே பொறந்த… நீ பொறந்து, அவுங்களை பிரிச்சு வைக்கற… நான் படிக்காத பாதகத்தி… பூக்காரி… எனக்கே அவுகளை பாத்து நெஞ்சு கலங்குது. ஏதோ தப்புக் காரியம் பண்றதா நினைச்சு அவுக பட்ட வேதனை எனக்குத் தான் தெரியும்’.

‘அம்பத்தெட்டு வயசுல ஓய்வு எடுத்துக்க இதென்ன அரசாங்க வேலையா… ஆயுள் முழுக்க அனுசரிக்க வேண்டிய பந்தம்யா… தனக்காக வாழ்ற இன்னொரு உசுரு இருக்குங்கற நினைப்பே பெரிய நம்பிக்கை. அதப்போய் அசிங்கமா பேசுறீங்களே…’ என்றாள் கோபமாக.

‘யூ ஷிட்… நீ யாரு இதுல தலையிட…’

‘சக மனுஷி… உங்கப்பா மயக்கமாகி விழுந்தப்போ இங்க தூக்கிட்டு ஓடியாந்த சக மனுஷி.’

கற்பகத்தை முறைத்துவிட்டு நேராய் ராதாவிடம் வந்தனர். வெறுப்பான பார்வையை வேறொங்கோ செலுத்தியபடி ஹரி சொன்னான்…

‘இதப்பாரும்மா… உன்னோட நடவடிக்கையில மட்டுமல்ல, நட்புலயும் தகுதி தராதரம் இல்லாம போயிட்டது. எனக்கு எரிச்சலா வருது. உன்னால நான் கண்டவங்ககிட்ட பேச்சு வாங்கறேன். ஒ.கே., நாங்க கிளம்பறோம். காலையில வந்து டிஸ்சார்ஜ் பண்றோம். அப்புறம் நீங்க சேர்ந்தே இருங்க! இப்படி ஊரெல்லாம் போய் அசிங்கமா சொல்லிட்டு திரியாதீங்க… எனக்கு அவமானமா இருக்கு… இடம் இல்லாட்டி, என் பொண்ணுங்களை ஹாஸ்டல்ல கூட சேர்த்துடறேன். ஆனா, உங்கள பிரிக்கல…’ அவன் விடுவிடுவென நடக்க, மற்றவர்கள் அவனை பின் தொடர, அறை வெறிச்சோடியது.

அவமானத்தில் கதறி அழ ஆரம்பித்தாள் ராதா.

‘கற்பகம் நீ வீட்டுக்கு போகலயா… உன்னை தேட மாட்டாங்களா…’ சூடான காப்பியை டம்ளர்களில் ஊற்றி, கணவனுக்கு ஒன்றும், கற்பகத்திற்கு ஒன்றும் தந்தபடி மென்மையாய் கேட்டாள் ராதா.
அட… அதெல்லாம் அப்பவே என் புருஷனுக்கு போன் போட்டு சொல்லிட்டேன். நீ வொரி பண்ணிக்காத…’ காப்பியை உறிஞ்சத் தொடங்கினாள் கற்பகம். அதன்பின் அங்கு மவுனமே நிரம்பியிருந்தது.
ரெண்டு பேரும் அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்?’

கற்பகம் தான் அவர்கள் மவுனத்தை, வார்த்தை சுத்தியால் உடைத்தாள்.

‘நான் ஒண்ணு சொல்லட்டா… நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகி நேரா என் வூட்டுக்கு வந்திடுங்க… அது குடிசை தான்… ஆனா, அங்குள்ள மனசெல்லாம் பங்களா மாதிரி பெரிசு. ஐயா படிச்சவரு… பென்ஷன் எல்லாம் வாங்குறாரு… இன்னும் சம்பாதிக்க புத்தி இருக்கு. நான் உங்களுக்கு எதையும் சொல்லிட போறதில்ல புதுசா…’

‘என் வீட்டுல ஒரு வாரம் இருங்க… பக்கத்துலயே ஒரு வூட்டை குடக்கூலிக்கு புடுச்சுட்டு குடி வந்திருங்க… என்னடா இப்படி சொல்றனேன்னு நினைக்கிறீங்களா? அன்பு இந்த உலகத்துல பெரிய விஷயம். அதுவும் புருஷன் – பொண்டாட்டி அன்புக்கு இணையே இல்லை. ஆயிரம் சண்டை வரும் எனக்கும், என் புருஷனுக்கும். ஆனா, ஒரு நாள் கொஞ்ச லேட்டானாலும், உசுரே போற மாதிரி இருக்கும். அது தான் அன்பு. அதனாலதான் என்னால உங்களை புரிஞ்சுக்க முடியுது.’

கற்பகம் பேசுவதைக் கேட்டு உயிரே கரைந்தது இவர்களுக்கு.

‘அவங்க எங்களை காதலர்ன்னு சொன்னாங்க. நீ எங்களை வீட்டை விட்டு ஓடிப்போகவே சொல்றியா,’ பெருங் குரலெடுத்து சிரித்தார் கிருஷ்ணன். வெட்கமாய் நெளித்தாள் கற்பகம்.

‘அவங்க என்னமோ சொல்லட்டுங்க… நமக்கு, நாம என்ன செய்யணும்கற கவலை மட்டும்தான் இருக்கணும். இதுக்கு மேல இந்த படிக்காத ஜென்மத்துக்கு என்ன தெரியும்?’

சிலிர்த்துப் போனார் கிருஷ்ணன்.

‘தெரியும் கற்பகம்… உனக்கு எல்லாமே தெரியும். நீ என்ன செய்ய வேண்டும் என்பதே உன் கவலையாக இருக்கட்டும். பிறர் என்ன சொல்கின்றனர் என்று யோசிப்பதல்ல…’ன்னு அம்பேத்கார் சொன்ன உயர்ந்த தத்துவத்தையும், இக்கணத்தில் வாழு…’னு புத்தர் கண்டு அறிவித்த மெய்ஞானத்தையும், உனக்கு தெரிஞ்ச எளிய வார்த்தையில் எத்தனை அழகா சொல்லிருக்க தெரியுமா… இதுக்கு எதுக்குமா படிப்பு,’ கிருஷ்ணன் சொல்ல, கற்பகம் கூச்சமாய் தலை சொறிந்தாள்.

வயதான காலத்துல பெத்தவங்களை முதியோர் இல்லத்துல விடறது ஒரு வகை தப்புன்னா, இதுவும் அதுக்கு நிகரான தப்புதான். இனிமேல் நாம அவங்களை எதிர்க்க முடியாது. ஆனா, கட்டாயம் நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்யணும். அப்படியொரு தெளிவை நமக்கு குடுத்தது இந்த கற்பகம் தான்.

‘எனக்கு பிள்ளைங்ககிட்ட கோபமுமில்லை; வருத்தமுமில்லை. இந்த ஆரோக்கியமான இடை வெளி இப்போ அவசியம்ன்னு தோணுது…’

‘சரி… நாம குடிபோனதும் முதல்ல அந்த சிறுபருப்பு பாயசம் வை… ரொம்ப நாளாச்சு குடிச்சு… நம்மோட பழைய ரேஷன் கார்டு உங்கிட்ட தான இருக்கு… அதை ரினீவல் பண்ண முடியுமான்னு கேட்கணும்…’

அவர் பேசிக் கொண்டே இருந்தார். ஒரு புதியவாசல் இவர்களை வரவேற்க காத்திருந்தது.

– அக் 09,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *