கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 2,653 
 
 

“மணி இங்க வாப்பா சாமி. இன்னைக்கு கம்பெனிக்கு போக வேண்டாம். என் கூடவே இரு” பழனிச்சாமி என்கிற அப்பாவின் பேச்சைத்தட்ட முடியவில்லை. வயது தொன்னூரைக்கடந்து விட்டார். அப்பாவுக்கு நான்கு குழந்தைகள். நான் தான் கடைசி. நான் பிறந்த பின் தான் வறுமை போய் வசதி வந்தது என்பார். 

ஒரு பெண், மூன்று ஆண்கள். நான் இருக்கும் வீட்டில் இருக்கவே பிடித்திருந்ததால் மற்றவர்களை மாதம் ஒரு முறை வர வைத்து பார்த்து அனுப்பி விடுவார். அவர்களுக்கு வேண்டிய சொத்துக்களை பிரித்துக்கொடுத்து விட்டார்.

“ஆயுசுக்கும் நம்ம பேருக்கே சொத்த வெச்சிருந்தோம்னா ஆயுசுக்கப்புறம் வித்து தொலைச்சிருவாங்க. சின்ன வயசுலயே கொடுத்துட்டா பொறுப்போட போட்டி போட்டுட்டு காப்பாத்திப்போடுவாங்க. அப்பத்தான் சம்பாறிக்கோணும்னு ஆச வரும். சொந்தக்கால்ல நிக்கத்தோணும்” என்பார்.

எங்களுக்கு திருமணமானவுடன் சொத்துக்களைக்கொடுத்தவர், அவருக்கென்று திருமண மண்டப வாடகை வருமானத்தை மட்டும் வைத்துக்கொண்டு தன் செலவு போக தான, தருமம் செய்வதற்கும், கோவில் செலவுகளுக்கும் பயன் படுத்திக்கொண்டார்.

சிறு வயதில் ஒரு முறை கிராமத்திலிருந்து நகரத்திலிருக்கும் அத்தை வீட்டிற்கு திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர், திரும்ப ஊருக்கு போகப்பிடிக்காமல் இங்கேயே தங்கி விட, அவரது கள்ளம், கபடமில்லாத பழக்கம் பிடித்துப்போனதாலும், அத்தைக்கு ஆண் வாரிசு இல்லையென்பதாலும் தங்களுடனேயே தங்கவைத்துக்கொண்டனர்.

படிக்கப்பிடிக்காமல் மாமாவுடன் கிரைண்டர் கம்பெனிக்கு வேலைக்குப்போனவர், வாங்கிய சம்பளத்தை சேமித்து வாடகை இடத்தில் கடன் வாங்கி சொந்தமாக இருபது வயதில் கம்பெனி ஆரம்பித்து நடத்தியுள்ளார். அப்பாவின் முயற்ச்சியைப்பார்த்த அத்தை தன்னுடைய ஒரே பெண் அருக்காணியை மனைவியாக்கி வீட்டோடு மாப்பிள்ளையாக்கியதில் அம்மா அருக்காணியும் கம்பெனி வேலையில் உதவ, படிப்படியாக மேலுக்கு வந்தாலும் என்னுடைய பிறப்புக்கு பின் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்க நான்கு பேர் வேலை செய்த கம்பெனி நானூறு பேருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்தது. 

நான்கு இடத்தில் நடத்தியவர் குழந்தைகள் நான்கு பேருக்கும் ஆளுக்கொரு கம்பெனியை ஒப்படைத்து விட்டார். பத்து வருடங்களுக்கு முன் அம்மா போன பின் மனமுடைந்து, உடல் தளர்ந்து போய் விட்டார். உணவே மூன்று வேளை, இரண்டு வேளையாக மாறி விட்டது. எங்கும் போக விருப்பமில்லாமல் வீடு, பக்கத்திலிருக்கும் பரமசிவன் கோவில், பெருமாள் கோவில் என காலத்தைக்கழித்தவருக்கு சமீப காலமாக குழந்தைத்தனம் அதிகமாகி விட்டது.

இன்று முக்கியமான கம்பெனி ஆர்டர் சம்மந்தமான மீட்டிங் எனக்கு இருந்தது. கொரோனா காலத்தில் விற்பனை குறைந்து, சம்பளம் கொடுத்தது போக வங்கி கடன் கட்ட முடியாத நிலையில் இப்போது தான் மறுபடியும் சகஜமான நிலை வந்திருக்கிறது. நான்கு கார்களும் ஓட்டுனர்களும் வீட்டிலேயே இருக்கின்றனர். எங்கு போக வேண்டுமானாலும் அழைத்துச்செல்வார்கள். எந்த வேலை கிடந்தாலும் கம்பெனி வேலை தான் முக்கியம் என்பவர், இன்று நானே அவரை வெளியில் அழைத்துச்செல்ல வேண்டுமென அடம்பிடிக்கிறார். 

எனக்கும் அறுபதாகி விட்டது. என்னுடைய மகனும், மகளும் திருமணமாகி குழந்தைகளுடன் அவர்களுக்கென தனியாக தொழில் நடத்துகின்றனர். அப்பாவை விட எனக்கு தொழில் லாபம் முக்கியமில்லை. இன்று கிடைக்காத ஆர்டர் நாளைக்கு கிடைக்கும். அப்பா… அவரது விருப்பத்தை நிறைவேற்ற கம்பெனிக்கு போவதை கேன்சல் செய்து மேனேஜருக்கு செய்தியை சொல்லி விட்டேன்.

என் மனைவியின் சமையல் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். அது போல அன்னபூர்ணா நெய் ரோஸ்டுக்கும், பில்டர் காபிக்கும் அடிமை. ஒரு முறை அமெரிக்கா சுற்றுலா அழைத்துப்போயிருந்த போது கூட அங்கு ஹோட்டலில் சாப்பிடும் போது இந்த நெய் ரோஸ்ட் பற்றிப்பேசினார்.

‘நம்ம ஊரு சாப்பாடு மாதிரி எங்கேயும் கிடைக்காது . சுத்திப்பார்க்கத்தான் இங்கே வரோணும். இங்கேயே செட்டில் ஆகக்கூடாது’ என்பார்.

இன்னைக்கும் நெய் ரோஸ்ட் சாப்பிட ஆசைப்பட்டார். எழுந்து நடக்கவே மிகவும் சிரமமான நிலையில் ‘பார்சல் வாங்கிட்டு வரட்டுமா?’ என்று கேட்டேன்.

“உனக்கென்ன புத்திகித்தி கெட்டுக்கிட்டுப்போயிருச்சா? நெய் ரோஸ்ட் பார்சல்ல ஒடைஞ்சு போயிரும். அங்கதான் போயி சாப்புடோனும். காரை எடு” என்றார்.

அவருக்கு சிடான் வகை காரில் பயணம் செய்யவே பிடிக்கும். நின்றபடி உட்காரலாம். எஸ். யூ.வி ரக கார்கள் ஏறி அமர வேண்டும் என்பதால் வேண்டாம் என்பார். முதன் முதலாக வாங்கிய ஹோண்டா சிட்டி காரை செண்டிமெண்ட்டாக விற்க்காமல் வைத்திருந்தார். அந்தக்காரில் தான் செல்ல வேண்டுமென சொல்ல நானே ஓட்டினேன். அந்தக்காரில் சென்றாலே அப்பாதான் போகிறார் என்பது ஊருக்கே தெரியும். அப்பாவை விட கார் பிரபலமாகியிருந்தது. ஹோட்டலுக்கு போவதற்குள் குறைந்தது ஐம்பது பேரிடம் காரை நிறுத்தச்சொல்லிப்பேசியிருப்பார். 

கோவையில் பல இடத்தில் ஹோட்டலின் கிளைகள் இருந்தாலும் முதலில் ஆரம்பித்த ஹோம்சைன்ஸ் எதிரில் உள்ள ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமென்றார். காரிலிருந்து இறங்கியவர் எனது தோளில் கை போட்டபடி நடந்தார். தடுமாறினார். மிகவும் தளர்ந்து விட்டதை புரிய முடிந்தது. 

முன்பெல்லாம் ஐந்து நிமிடத்தில் சாப்பிடும் ரோஸ்டை இன்று சாப்பிட ஐம்பது நிடங்களுக்கு மேல் ஆனதோடு முழுவதுமாக சாப்பிடவில்லை. காபி வாங்கியவர் இரண்டு மொடக்கு குடித்து விட்டு வேண்டாமென்றார். எனக்கு சிறுவயதாக இருக்கும்போது சைக்கிளில் இதே ஹோட்டலுக்கு அழைத்து வந்து ரோஸ்ட் வாங்கித்தந்த போதெல்லாம் நான் எவ்வாறு மெதுவாக சாப்பிடுவேனோ, சாப்பிட முடியாமல் மீதம் வைப்பேனோ அதே போல் அவரது இன்றைய செயல் இருந்தது. அன்று நான் வைத்த மீதத்தை அவர் சாப்பிட்டு முடிப்பார். இன்று அவர் வைத்த மீதத்தை நான் சாப்பிட்ட போது எனது கண்களில் கண்ணீர் கரை புரண்டது.

காலையிலிருந்து காரிலேயே அவர் போகச்சொன்ன வழிகளிலெல்லாம், இடங்களுக்கெல்லாம் காரை ஓட்டினேன். கடைசியாக கோணியம்மனை கும்பிட வேண்டு மென்றார். வழிபட்ட பின் வீட்டிற்கு சென்றோம். காரிலிருந்து கீழே காலெடுத்து வைக்க அவரால் முடியவில்லை. ஒரு குழந்தையைப்போல் தோளில் சாய்த்து வீட்டிற்குள் தூக்கிச்சென்று படுக்க வைத்தேன். குழந்தையாக இருந்த போது எத்தனை நாட்கள் அவரது தோளில் என்னைச்சுமந்திருப்பார். பல வருடங்கள் எனக்கு தந்தையாக இருந்தவருக்கு இன்று ஒரு நாள் முழுவதும் தந்தையாகவே மாறியிருந்தேன்.

அப்பா எப்பொழுதுமே மனம்போன போக்கில் போக மாட்டார். அதிகம் படிக்காவிட்டாலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவார். ஆனால் அவரது தொன்னூறு வயது வாழ்வில் இன்று மட்டும் தான் மனதுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். மனதின் விருப்பத்தை மறுக்காமல் செயல்படுத்தினார்.

அவரது அறையிலிருந்த பெட்டில் படுக்க வைத்தேன். உளறலான பேச்சில் அருகில் உள்ள பெருமாள் கோவிலில் துளசித்தீர்த்தம் எனது கையாலேயே வாங்கி வரச்சொன்னார். வாங்கி வந்து பார்த்த போது பேச்சு முற்றிலுமாக விழுந்திருந்தது. எனது மனைவி நெஞ்சில் அடித்தபடி கதறி அழுது கொண்டிருந்தாள். அப்பாவுக்கு மூச்சு மேலும் கீழும் இழுத்தது. வாயைத்திறந்து ஜாடையில் தீர்த்தம் கேட்டார். சொட்டு சொட்டாக ஊற்றினேன் . அமைதியாகி விட்டார். ஆமாம், அப்பா நிரந்தரமாகவே அமைதியாகி விட்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *