இரு கடிதங்கள் !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 5,908 
 

பிள்ளையார் படத்தினருகில் இருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை ஐந்து மணியைக் காட்டியது அலுவலகத்திலிருந்து விவேக் வீட்டிற்கு வருவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. நான் வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டேன். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து குப்பை மாதிரி எல்லாத் துணியெல்லாம் பீரோவில் கலைந்து கிடக்கிறது சரி ! பீரோவை ஒதுங்க வைக்கலாம் என்று நினைத்து பீரோவைத் திறந்தேன்.

விவேக் மனம்போல், பீரோ முழுவதும் துணிமணிகள் நகைகள், புடவைகளால் நிறைந்திருந்தது. ஆகா ! எனக்கு கிடைத்தக் கணவன்போல் யாருக்குமே கிடைத்திருக்காது. அவர் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார். அந்த அன்பை எடுத்துக் காட்டுவது போல், எனக்கு விருப்பமான பட்டுப்புடவை நகைகள் என்று வாங்கி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டாரே !

விவேக் ஒருநாள் திடீரென வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக வீட்டிற்கு வந்தார். அவர் கையில் ஒரு பார்சல் வைத்திருந்ததை பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து புன்னகையுடன் “ லதா ! இதைத் திறந்து பார் “ என்று தான் கொண்டு வந்த பார்சலை என்னிடம் கொடுத்தார். நான் பார்சலைத் திறந்து பார்த்தால், எனக்குப் பிடித்தமான அழகான பட்டுப்புடவை ஒன்று அதில் இருந்தது.

“ என்ன விவேக் இவ்வளவு வெலையிலே பட்டுப்புடவைக்கு இப்போது என்ன அவசியம்?” என்று நான் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே “ உன் பிறந்த நாளே உனக்கு மறந்து விட்டதா ? லதாக்கண்ணு ” என்று என்னை செல்லமாகக் கேட்டார். எனக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரை செல்லமாக கடிந்து கொண்டேன்.

எல்லாருடைய இதயமும் லப் டப் என்று துடித்துக் கொண்டிருந்தால், என்னோட இதயம் மட்டும் விவேக் விவேக் என்று துடிப்பதுபோல் கேட்கும். மேலும் ஏதோ நான் நினைக்க முற்படும்போது, வாசல் கதவு படபடவெனத் தட்டப்பட்டு என் நினைவலைகளைக் கலைத்தது. பீரோவை மூடி விட்டு வாசல் கதவைத் திறக்க விரைந்தேன்

திறந்தவள் திகைத்து நின்றேன். வாசலில் எனக்கு மாப்பிள்ளை வரன் தேடி விவேக்கை கல்யாணம் முடித்து வைத்த தரகர் மாமா தணிகாசலம் நின்று கொண்டிருந்தார்.

“என்னம்மா திகைத்து போய் நிற்கிறாய். . என்னைத் தெரியவில்லையா? உனக்கு கல்யாணமாகி வருஷங்கள் ஐந்தாகி விட்டது. எனவே என்னை மறந்திருப்பாய் “ என்று தணிகாசலம் சிரித்துக் கொண்டே கேட்டார்.

“ இல்லை தரகர் மாமா உங்களை நான் எப்படி மறக்க முடியும் ! “ வாஷ் பண்ணிட்டு நீங்கள் வாங்க .. நான் காபி டிபன் எடுத்திட்டு வர்றேன்..”

“ காபி டிபன் பிறகு சாப்பிடலாம்மா, நீயும் உன் வீட்டுக்காரர் விவேக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிங்களான்னு பார்த்து விட்டுப் போகலாம்ன்னு வந்தேன் “ என்று என்னோட முகத்தைப் பார்த்துக்கொண்டே பேசினார்.

“ நாங்கள் இருவரும் உங்க புண்ணியத்திலே, நானும் விவேக்கும் நல்லா இருக்கோம் மாமா ! “ என்று கூறி விட்டு சமையலறைக்குள் சென்றேன் காபி கலந்து கொண்டு வந்து அவருக்கு கொடுத்தேன். அதை அருந்தி விட்டு தரகர்மாமா வந்த விஷயத்தைப்பற்றி என்னிடம் கூற ஆரம்பித்தார். அவர் கூறும்போது தயக்கத்துடனும் தலையை சொரிந்து கொண்டே என்னிடம் பேசினார்.

“லதாம்மா, உன்கிட்ட ஓர் விஷயம் சொல்லணும். அதாவது அந்த துயரச்சம்பவம் இதுவரைக்கும் விவேக்குக்கு தெரியாதுன்னுதான் நான் நெனைக்கிறேன். அதாம்மா உன்னோட கல்யாணத்துக்கு முன்னாலே ஒருத்தன் உன்னை பெண்மையையும் அலங்கோலப்படுத்தியதை. விவேக்கிடம் இதுவரை நான் கூறவில்லை என்று விவரத்தை கூறுவதற்குத்தான் இப்போது வந்தேன்”.

“விவேக்கிடம் உனக்கு நிகழ்ந்த துயரச்சம்பவம் பற்றி நான் எதுவும் கூறவில்லை. விவேக் பெருந்தன்மையாக் உன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டார்ன்னு, உன்னோட அப்பாதான் என்னை உன்னிடம் அப்படி பொய்சொல்லச் சொன்னார். நானும் உன்னோட எதிர்கால வாழ்வை முன்னிட்டு அன்றைக்கு’ உனக்கு நிகழ்ந்த துயரச்சம்பவம் எல்லாம் விவேக்கு தெரியும்’ என்று உன்னிடம் பொய் சொல்லி விட்டேன்” என்று மேலும் தொடர்ந்தார் தரகர்மாமா தணிகாசலம்.

“ இப்போ நீங்க ரெண்டுபேரும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து எனக்கு சந்தோஷமாக இருக்கும்மா. உன் கணவர் விவேக்குக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டு, இனிமேல அவனிடம் உன்னைப்பற்றி எதையாவது நீ உளறி வைக்காதே. அதைக் கெட்டகனவாக நீ நெனைத்து மறந்து, எப்போதும்போல் சந்தோஷமாக இருங்க…” என்று கூறி விட்டு என்னோட பதிலுக்குக்கூட காத்திராமல் சென்று விட்டார்.

‘ ஐயோ விவேக் நான் உங்களுக்குத் துரோகம் பண்ணி விட்டேன் நான் எப்படிப்பட்டவள் என நீங்க அறிந்தால்… நான் உடல் அளவில் கெட்டுப் போனவள் என்பது உங்களுக்குத் தெரிந்தால்…ஐயோ நினைக்கவே பயமாக இருக்கிறதே. என்னைப்பற்றி உண்மை உங்களுக்குத் தெரிய வந்தால், பிறகு என் மீது அன்பு செலுத்துவீர்களா ! ?இல்லை நிச்சயம் இல்லை. என் மீது கோபப்பட்டு என் தலைமுடியைப் பிடித்து இழுத்து தரையில் தள்ளி என் முகத்தில் காறித் துப்புவீர்கள். என்னோட முகத்தில் இனிமேல் நீ முழிக்காதே’ என்று கூறியும் வீதியில் தள்ளி விட்டு வீட்டுக் கதவை மட்டுமா, உங்கள் மனக்கதவையும் பூட்டி விடுவீர்கள்.

தரகரும், அப்பாவும் சேர்ந்து எனக்கு ஏற்பட்ட அந்த துயரச்சம்பவம் பற்றி உங்களிடம் கூறி விட்டதாக என்னிடம் பொய் சொல்லி விட்டு, என்னையும் நம்பிக்கைத் துரோகியாக்கி விட்டார்களே. என் மனசாட்சி இனிமேல் எதையும் மறைக்க இடம் கொடுக்காதே. அவரிடம் இதை எப்படி நேரில் கூறுவேன் என்று கண்ணீர் விட்டாள் லதா.

மீண்டும் வாசல் கதவு தட்டப்பட்டது. எழுந்து ஜன்னலருகே வந்தவள் வெளியே யார் எனப் பார்த்தேன்.

“நான்தான் விவேக் கதவைத் திற “ விவேக் அன்பாகக் கூறிவிட்டு வெளியே நின்றார். புடவைத் தலைப்பினால் கண்களைத் துடைத்து கொண்டே வாசல் கதவைத் திறந்தேன்

“என்ன லதா சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்டேன்னு பார்க்கறயா என்னமோ இன்னிக்கி சீக்கிரம் வரணும்னு தோணித்து வந்துட்டேன்..” என்று கூறிக்கொண்டே என்னை எப்போதும்போல அவர் இறுகத் தழுவி என்னோட உதட்டில் தன்னோட இதழைப் பதித்தார்.

“ என்னங்க விடுங்க !” என்றேன்

விவேக் அவளை விட்டு விட்டான். அவள் கூறியதற்காக மட்டும் அல்ல. அவள் முகத்தில் ஏதோ குழப்பம் இருக்கிறது என்பதுபோல் அவள் செயலே காட்டியது. அவளுடைய ஒவ்வொரு செயலையும் அவளுக்குத் தெரியாமலே விவேக் கண்காணிக்க ஆரம்பித்தான்.

அன்றிரவு ..

என்னோட கணவர் அன்பான விவேக் எப்போது தூங்குவார் எனக் காத்துக்கொண்டிருந்தேன்.. அவர் தூங்கியபின் நான் மெதுவாக எழுந்து சென்று மேஜை விளக்கினடியில் உட்கார்ந்து , ஒரு கதைபோல் அவருக்கு கடிதம் எழுதினேன் என்பதை விட என் மனதில் உள்ளதையெல்லாம் அக்கடிதத்தில் கொட்டினேன் என்றுதான் கூறவேண்டும்.

அன்புள்ள விவேக்கிற்கு, உங்களது தூய்மையான அன்பிற்குத் தகுதியற்ற துர்பாக்கியசாலியான லதா எழுதுவது. நான் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது ஆம் நான் கல்லூரியை விட்டு வீட்டிற்கு வரும்போது நான் குடியிருக்கும் தெருவிற்கு வருவதற்கு வளைந்து செல்லும் குறுகலான சந்துக்குள் நுழைந்து வரும்போது, என்னை ஒரு முகமூடி அணிந்த வெறியன் ஒருவன் என் வாய்க்குள் துணியை திணித்து ,இழுத்துச் சென்று, அவன் வந்த காரின் உள்ளே போட்டு என்னை கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டான். அவன் வெறி அடங்கியவுடன் என்னை தெருவில் யாரும் இல்லாத நேரம் பார்த்து போட்டு விட்டுச் சென்று விட்டான் .

வீட்டிற்கு வந்து அம்மா அப்பாவிடம் கூறி அழுதேன்.. நான் கயிற்றில் தொங்க நினைத்தேன். அப்பா என்னைத் தடுத்து விட்டார். என்ன செய்வது என்று அப்பாவும் அம்மாவும் எனக்குத் தெரியாமலே அழுது புலம்பினார்கள் .

எனக்கு நடந்த இந்த கொடூரச் சம்பவத்தை யாரிடமும் கூற வேண்டாம் என எனது அப்பாவும் அம்மாவும் என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்கள். அதன் பிறகு கல்லூரிக்குச் செல்ல எனக்கு விருப்பமில்லை. கல்லூரிக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டேன். என்னைப் பொறுத்தவரை என்னோட வாழ்வு முடிந்து விட்டது. எனது வயதான அப்பா அம்மாவை நினைத்து என் உயிரை வைத்துககொண்டேன்.

இந்நிலையில் எனக்கு வரவேண்டிய அந்த மூன்று நாட்கள் என்னமோ சரியாக வந்து விட்டது. என் பெற்றோகள் அதை நினைத்து ஆறுதல் அடைந்தார்கள் என்றுதான் கூறவேண்டும் .எனக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்வதற்குஅப்பாவும் அம்மாவும் ஏற்பாடுகள் செய்தார்கள. . நான் முதலில் சம்மதிக்கவில்லை. ஏன் என்றால் என் நிலையை மறந்து மறைத்து நான் இன்னொருவருக்கு துரோகம் செய்ய என்க்கு மனம் இடம் தரவில்லை.

இந்நிலையில் எனக்கு தங்களை எனக்கு மாப்பிள்ளையாக நிச்சயம் செய்தார்கள். அவர்கள் என்னை மிகவும் வற்புறுத்தியதின் பேரில் என்னோட உள்ளத்தில் தோன்றியதை எனது அப்பா அம்மாவிடம் எடுத்துக் கூறினேன். அதாவது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு வெறியனால் கெடுக்கப்பட்டேன் என்ற துயரச்சம்பவம் பற்றி தங்களிடம் என்னைப்பற்றிய உண்மையைக் கூறவேண்டும், அதன்பிறகு நீங்கள் சம்மதித்தால்தான் நான் உங்களைத் திருமணம் செய்து கொள்வேன் என்று கண்டிப்புடன் அப்பாவிடம் கூறி விட்டேன்.

அப்பாவும் தரகர் மாமாவும் உங்களிடம் நான் கெடுக்கப்பட்டவள், என்பதை நடந்த எல்லா விபரங்களையும் உங்களிடம் கூறிவிட்டதாகவும், நீங்கள் பெருந்தன்மையாக என்னை திருமணம் செய்வதற்கு சம்மதித்தாகவும் நான் நேற்றுவரை நம்பியிருந்தேன். இன்று தரகர் மாமா வந்து போனவுடன் அந்த நம்பிக்கை தவிடு பொடியாகி விட்டது.

ஆனால் எனக்கு நிகழ்ந்த அந்த துயரச்சம்பவத்தை, தங்களிடம் தெரியப்படுத்தவில்லை என்று விபரத்தை தரகர் மாமா தணிகாசலம் மூலம் எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது. ஆம் இன்று நம் தரகர் மாமா நம் வீட்டிற்கு வந்தவர் என்னிடம் ‘ உன் மாப்பிள்ளை விவேக்கிடம் உனக்கு ஏற்பட்ட துயரச் சம்பவத்தை நானும் உனது அப்பாவும தெரியப்படுத்தவில்லை’ என்று என்னிடம் கூறியவுடன் எனக்கு உலகமே இருண்டு போய்விட்டது..

எனது அப்பா அம்மா தர்கர் மாமாவும் உங்களை ஏமாற்றி விட்டார்கள். தெரிந்தும் தெரியாமலும் அதில் எனக்கும் பங்கு உண்டு அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னை பற்றி தெரிந்தவுடன் என்னை நீங்கள் என்னை வெறுத்து விடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.. இனிமேல் உங்களிடம் சேர்ந்து கொண்டு பொய்யான வாழ்க்கை நடத்தவும் நானும் விரும்பவில்லை.

உங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டேன் என்று என் மனசாட்சி என்னை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும். எனவே எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகிறேன். நீங்கள் இக்கடிதத்தை எடுத்து படிக்கும்போது. நான் மீளத் தூக்கத்தில் ஆழ, தூக்க மாத்திரைகளை விழுங்கி இருப்பேன். உங்களை பிரிய எனக்கு மனம் இல்லை. இருந்தாலும் விதிதான் என் வாழ்வில் விளையாடி விட்டதே. என்னை மன்னித்து விடுங்கள் என்று நீண்ட கடிதத்தை விவேக்குக்கு எழுதி முடித்தேன்

எழுதிய கடிதத்தை அங்குள்ள மேஜை ட்ராயரில் உள்ளே வைத்து விட்டேன். . நாளைக் காலையில் விவேக் அலுவலகம் சென்ற பின், அவர் மாலை வந்து கடிதத்தினை பார்க்கும்படியான இடத்தில் வைத்து விட வேண்டும் என்று நினைத்து ,அன்றிரவு தூங்க நினைத்து , தூங்க முடியாமல் நீண்ட நேரம் கழித்து என்னையும் அறியாமல் தூங்கி விட்டேன். மறுநாள் கணவர் விவேக்கிடம் எப்போதும்போல் நடந்துகொள்ள வேண்டும் என்றும் மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்

விவேக் உண்மையில் தூங்கவில்லை. தூங்குவதுபோல் பாசாங்கு செய்து படுத்திருந்தான். லதா அசந்து தூங்கியவுடன் விவேக் மெதுவாக எழுந்து மேஜை ட்ராயரை திறந்து லதா எழுதிய கடிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான்

அவன் கடிதத்தைப் படிக்க படிக்க பலவித எண்ணங்கள் அவனைக் குழப்பின. முடிவிலே ஓர் எண்ணம் அவனுக்குப் பளிச்சிட்டது. அவள் கடித்ததைப் படித்த பிறகு விவேக் லதாவுக்கு தன் கைப்பட ஒரு கடிதம் எழுதினான். லதா வைத்திருந்த இடத்தில் தன் கடிதத்தை வைத்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டான்

மறுநாள் காலையில் வழக்கத்திற்கு மாறாக விரைவாக லதாவும் விவேக்கும் எழுந்தார்கள். விவேக் எழுந்தவுடன் லதா கண்ணில் தெரியும்படி தான் எழுதிய கடிதத்தை வைத்து விட்டு, அதன் மீது தூக்க மாத்திரைகள் அடங்கிய பாட்டிலையும் வைத்தான் . விவேக் லதாவிடம் “ லதா நான் வெளியே போய் விட்டு வர்றேன் டிபன் ரெடி பண்ணி வை “ என்று கூறிக்கொண்டே வெளியே சென்று விட்டான்.

அவன் சென்றவுடன் ட்ராயரின் மேல் உள்ள பாட்டிலையும் அதன் கீழே உள்ள கடிதத்தையும் நான் பார்த்தேன்.. “ சரி நான் எழுதிய கடிதத்தைப் படித்து விட்டுத்தான் ஒன்றும் என்னிடம் சொல்லமுடியாமல் விவேக் வெளியே சென்று இருக்கிறார் என்று நினைத்து , விவேக் எழுதிய கடிதத்தை நான் எழுதிய கடிதம் என்றுதான் நினைத்து பிரித்தேன். ஆனால் அக்கடிதம் விவேக் எனக்கு எழுதிய கடிதமாக் இருக்கக் கண்டு பரபரப்புடன் படிக்க ஆரம்பித்தேன்.

அன்புள்ள லதாவுக்கு, உன் கடிதத்தைப் படித்துப் பார்த்தேன். படித்த பின்பும் உன்னிடம் நான் இன்னும் அதிகமாக உன்மீது அன்பு செலுத்த வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. . என்றைக்கும் நீ என்னுடைய லதாதான் லதா நம் திருமணத்துக்கு முன்பே உண்மையை சொல்ல நினைத்த உன் உயர்ந்த குணத்தை எண்ணி நான் பெருமை கொள்கிறேன் ஒரு விபத்து போல் கற்பைப் பறிகொடுத்த உன்னை விட்டு விட்டு , வேறு ஒருத்தியை நான் திருமணம் செய்துகொண்டிருந்தால் அவள் பத்து பேரோடு தவறான முறையில் பழகி மோசமாக நடந்து கொண்டு, பத்தினி வேஷம் போடமாட்டாள் என்பது என்ன நிச்சயம்.

அதனால் உனக்கு நடந்ததையெல்லாம் நீ ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடு. இல்லை நான் உங்களை விட்டு சாகத்தான் போகிறேன் என்று நினைத்தால், நீ சாப்பிட வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கிறாயே தூக்க மாத்திரைகள், அதில் பாதி சாப்பிட்டு விட்டு மீதியை வைத்து விடு. ஏன் என்றால் அந்த பாதி தூக்க மாத்திரைகளை நான் வந்து சாப்பிட வேண்டும். லதா நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன் ? லதாகண்ணு நீயே கூறம்மா என்று என் மீது தன் அன்பை அவர் கடிதத்தின் முடிவில் காட்டியிருந்தான்.

கடிதத்தை படித்த முடித்தவுடன் .விவேக்கை நினைத்து , அவருடைய உயர்ந்த உள்ளத்தினை நினைத்து நான் ஆகாயத்தில் பறந்தேன் என்றுதான் கூற வேண்டும். அங்கு வைத்திருந்த தூக்க மாத்திரைகள் அடங்கிய பாட்டிலை எடுத்து ஜன்னலுக்கு வெளியே தூக்கி வீசி எறிந்து விட்டு, என்னோட அன்பான விவேக் வரவுக்காக நான் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *