இருட்டிலே விளையாடுங்க…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 6,122 
 
 

இரவு மணி 10 .10.

‘ பதினொன்றாம் வகுப்புப் படிப்பு. வயசுப் பிள்ளை. ஆளைக் காணோம்.! ‘ – செந்தமிழ்செல்வனுக்குள் திடீரென்று கலக்கம் வந்தது.

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை தோழன். வீண் கட்டுப்பாடுகளால் ஆர்வத்தைக் கெடுக்கக் கூடாது. அது அவன் முன்னேற்றத்தைப் பாதிக்கும் ! – என்று நினைத்து விட்டது தப்போ..? – அவனுக்குள் யோசனை ஓடியது.

‘ பிள்ளை இவ்வளவு நேரம் வீடு வராமல்… எங்கு, என்ன செய்கிறான்..? ” மனசுக்குள் கேள்வி எழும்ப…

“வத்சு ! நிர்மல் எங்கே…? “தொலைக்காட்சியில் தொடர் பார்த்துக்கொண்டிருந்த மனைவியைக் கேட்டான்.

“விளையாடப் போயிருக்கான்ப்பா..! “அவனைவிட மூன்று வயது குறைவு. தாயுடன் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த விமல் சொன்னான்.

“இந்த நேரத்துலேயா..? என்ன விளையாட்டு..? ”

“கிரிக்கெட்! பசங்களெல்லாம் சேர்ந்து சொந்தமா காசு போட்டு, வசூலிச்சு லைட்டு போட்டு விளையாடுறானுங்கப்பா. ”

“ஏன் வத்சு. உண்மையா…? ”

“ஆமாம் ! “என்றவள் சும்மா இருக்காமல்….

“கொஞ்ச காலமா அவன் போக்கே சரி இல்லே. ராப்பகலா விளையாட்டு, விளையாட்டு.! வீட்ல தங்குறதே இல்லே. விளையாடப் போறேன், விளையாடப் போறேன்னு வயசுப் புள்ள எங்கே, என்ன வினை வச்சுட்டு வருதோ தெரியல. தகப்பன் நீங்க கண்டுக்கிறதுமில்லே. கண்டிக்கிறதுமில்லே. “வத்சலா கணவனைக் கடுமையாகக் குற்றம் சாட்டினாள்.

செந்தமிழ்செல்வனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

இவள் சொல்லவது உண்மை. ஹார்மோன் சமாச்சாரம். கைப்பேசிகளில் வேறு கன்னாபின்னா படங்கள். ஏதாவது தவறிழைத்துவிட்டால்..? வளர்ப்பு. படிப்பெல்லாம் பாழ். எதிர்காலம் வீண். ! – இவனுக்கு…குலை நடுங்கியது.

மகன் கவனிக்கப் பட வேண்டியவன் ! – மனசுக்குள் முடிச்சுப் போட்டான். உடன்….

‘நம் பிள்ளை அப்படியெல்லாமாப் போகும்…?! – முரண்டிய மனதை ஒதுக்கினான்.

அடுத்து…

“விமல் ! “- அழைத்தான்.

“என்னப்பா..? ”

“அண்ணன் விளையாடுற இடம் தெரியுமா..? ”

“ஏன்ப்பா..? ”

“பார்க்கனும்..”

“தெரியாதுப்பா ! ”

“வா போய் பார்க்கலாம்..! கிளம்பு “- செந்தமிழ்செல்வன் நாற்காலியை விட்டு எழுந்து சட்டையை மாட்டினான்.

விமல் உற்சாகமாக தகப்பனுக்கு முன் வந்து வாசலில் நின்றான்.

இருவரும் இருசக்கர வாகனத்தில் ஏறினார்கள்.

இரவின் குளிர்காற்று உடல்களை வருடியது.

வீதியில்… தெரு விளக்கு வெளிச்சங்களைத் தவிர…மருந்துக்கும் ஈ.. காக்கைகள் இல்லை.

மணி 1.05.

‘ என்ன..! தேடிப் போன தகப்பன் பிள்ளையைக் காணோம்..?! ‘ – கட்டிலில் படுத்திருந்த வத்சலாவிற்குத் தூக்கம் பிடிக்கவில்லை.

‘ நிர்மல் எனக்கும் விளையாடவில்லை. பொய் சொல்லி எங்கேயாவது கம்பி நீட்டிவிட்டானா ..? சினிமா, அரட்டை என்று எங்காவது கூத்தடிக்கின்றானா..? விசயம் தெரிந்தால் இவர் கோபக்காரர் அங்கேயே இழுத்துப் போட்டு அடிப்பார். இல்லை வீட்டில் வைத்துப் பின்னுவார் ! இருவரும் தேடி கிடைக்காமல் கோபமாக வருகிறார்களோ..!’ – வத்சலாவிற்கு அடி வயிற்றி அமிலம் சுரந்தது.

‘ சினிமா, நாடகம்… என்று நிர்மல் உண்மையைச் சொல்லிவிட்டுப் போனாலாவது கோபப்படும் கணவனிடம் எதையாவது சொல்லி சமாளித்துப் பிள்ளையைக் காப்பாற்றி.. ஆள் இல்லா சமயம் பார்த்து கண்டிக்கலாம். சொல்லாமல் போய்…..??!…..- கலக்கம் இன்னும் அதிகமாகியது. நெஞ்சுக்குள் பந்து விளையாடியது.

வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

செந்தமிழ்செல்வன் மட்டும் மலர்ச்சியாய் உள்ளே வந்தான்.

“நிர்மலா கிடைச்சானா…? ”

“கிடைச்சான். விமல் சொன்னமாதிரி ஊர் கோடியில் உள்ள பெரிய திடலில் மின்னொளி ஆட்டம் விளையாடுறானுங்க. வயசுப்பிள்ளைகளெல்லாம்…உற்சாகக் குளியலில் ஒரே கொண்டாட்டம். எனக்கும் விளையாடனும்ன்ன்னு ஆசை. சேர்த்துக்க மாட்டானுங்க. சரின்னு நமக்குத் தெரிஞ்ச விளையாட்டை விளையாடலாம்ன்னு திரும்பிட்டேன்.!”சொல்லி ஒரு மார்க்கமாய் மனைவி அருகில் அமர்ந்தான்.

“ச்ச்சூ ! தள்ளிப் போங்க. “நகர்ந்தாள்.

” விமல்..? “- கேட்டாள்.

“அவனுக்கு…அங்கே அவன் சோட்டுப் பசங்க, ஆட்டம் , வெளிச்சம், கொண்டாட்டத்தைப் பார்த்ததும் உற்சாகம். அண்ணனோட வர்றேன்னு சொல்லி தன் பசங்களோட கலந்துட்டான்.”- தொட்டான்.

“ச்சு..! “தொட்ட கையைத் தட்டிவிட்டாள்.

“வத்சு ! வத்சு !… பசங்க இருக்கிறதுனால நாம சேர்ந்து படுத்து நாளாச்சுடி. படுத்தாதேடி….. “கெஞ்சி விளக்கையும் அவளையும் சேர்த்து அணைத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *