இரண்டு பெண்களும் இன்னொருத்தியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 8,203 
 
 

அந்தப் பகுதியில் எல்லாமே பிஸ்கோத்துகளை அடுக்கி வைத்ததுபோல, ஒரே மாதிரியான சிறிய வீடுகள், ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி. இரு தெருக்களின் இடையே ஒரு சிறு சந்து. அதன் நடுவில் கோணல் மாணலாக சதுர வடிவிலான பாறாங்கற்கள், `எங்கள்மேல் காலை வைத்தால், பதம் பார்த்துவிடுவோம்` என்று மிரட்டுவதுபோல். இரு புறமும் புதர்கள், சிறு குன்றுகளைப்போல்.

வெவ்வேறு தெருக்களில் இருந்தாலும், பின்வீட்டிலிருந்து ஒரு ஆண் இரையும் சத்தமும், அதற்குப் பதிலாக ஒரு பெண் அழுகைக் குரலில் ஏதோ பதிலளிப்பதும், அவ்வப்போது அலறுவதும் கேட்காமல் போகவில்லை திலகாவுக்கு.

முதலில் அதிர்ச்சி. பின், சலிப்பு.

ஒரு நாளா, இரண்டு நாளா! கடந்த ஒரு வாரமாக நடந்துகொண்டிருந்த கதை அது.

என்ன பெண் இவள், இப்படியா எதிர்ப்பு காட்டாமல், எல்லா துறைகளிலும் முன்னேறி இருக்கும் இந்த நாகா¢கமான காலத்திலும் ஒருத்தி வதைபடுவாள்!

பள்ளி விடுமுறை ஆயிற்றே, ஏதாவது உருப்படியாக செய்யலாம் — தோட்டத்தை நன்றாகக் கொத்தி புதிய செடிகள் வாங்கிவந்து நடலாம், சமையலறைச் சுவற்றுக்கு ஏதாவது வெளிர் நிறத்தில் வண்ணம் பூசலாம் என்றெல்லாம் திட்டம் போட்டிருந்தாள் அவள். எல்லாம் பாழ்.

தான் இப்போது செய்ய வேண்டியது தன் வீட்டுக்கில்லை, சமூகத்துக்கு என்று தோன்ற, கார் சாவியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.

“எங்கே திலகா போறே?” தந்தையின் குரல் பலவீனமாக ஒலித்தது. அவள் பதில் கூறமாட்டாள் என்று தொ¢ந்தும் கேட்டார்.

`இவருடன் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது!` என்று நினைத்தவளாக, அவர் கேட்டது காதில் விழாததுபோல் திலகா வெளியே நடந்தாள்.

அவர் அம்மாவை நடத்திய லட்சணம் தெரியாதா! பிறரிடம் கணவரை விட்டுக் கொடுக்க விரும்பாது, எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தவள் அம்மா.

அப்போது, அக்கம்பக்கத்தில் யாராவது — இப்போது தான் செய்யத் துணிந்ததுபோல் — சமூக பிரக்ஞையோடு குறுக்கிட்டிருந்தால், அம்மா ஆண்டுக்கணக்கில் அடி, உதைகளையும், ஏச்சுப்பேச்சுகளையும் தாங்கி இருக்க வேண்டாமே!

பதின்மூன்று வயதிலிருந்தே ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்து விட்டு, விடுமுறைக்கு மட்டும் திலகா வீடு வருவது வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் மனைவியிடம் அன்பைப் பொழிந்தார் அப்பா . அவளைத் தூக்கிவைத்துப் பேசினார். தான் எது செய்தாலும், அதற்கு அவளுடைய

அபிப்ராயத்தைக் கேட்டார்.

`அப்பா ரொம்ப நல்லவரு, இல்லம்மா? நீங்க அதிர்ஷ்டசாலி!“ என்று திலகா பாராட்டவும், தாய் விழித்துக்கொண்டாள்.

யாரும் இல்லாவிட்டால், அவருடைய நடத்தை நேர்மாறாக மாறிப் போக அன்பு இருந்த இடத்தில் அடி, வசவு. முதுகில் வரிவரியாகிருந்ததைக் காட்டினாள். புகழ்ந்து பேசிய அதே வாய் அவள் எது செய்தாலும் குற்றம் கண்டுபிடித்து, ஏளனம் செய்தது என்று, தன் அவல வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டாள்.

`என்னை யார் கேட்பது! நான் ஆண்பிள்ளை!` என்று வெளிப்படையாக வதை செய்பவன் தேவலாம், ஆனால் அப்பா செய்தது ஏமாற்றுவித்தை என்று

ஆத்திரம் கொண்டாள் திலகா.

`அப்பா இந்தமாதிரின்னு ஏம்மா முன்னாலேயே எங்கிட்ட சொல்லல?’ என்று கறுவிய மகளிடம், `இப்பக்கூட சொல்லி இருக்க மாட்டேன். ஆனா, நீயும் எங்கேயாவது ஒங்கப்பாவைப்போல வெளியில இனிமையாப் பேசிட்டு, யாரும் பாக்காதப்போ கொடுமைப்படுத்தறவன் எவன்கிட்டேயாவது மயங்கிடப் போறியோன்னு பயந்துதான் சொல்றேன்,` என்றாள் அம்மா, நிதானமாக.

பெண்ணாய்ப் பிறந்ததே துன்பம் அனுபவிக்கத்தான் என்பதுபோல் அம்மாவை ஒத்த சிலர் எல்லாவிதக் கொடுமைகளையும் தாங்கியது அவநம்பிக்கையோடு, ஆத்திரத்தையும் அளித்தது திலகாவிற்கு.

சற்று யோசித்தபோது, பெண்கள் ஒவ்வொரு செலவுக்கும் கொண்டவனின் கையை எதிர்பார்த்து வந்திருப்பதால்தான் பலமிழந்து போய்விட்டார்கள் என்று புரிந்தது. அந்தப் பதினாறு வயதிலேயே ஒரு முடிவை எடுத்தாள்: தன் வாழ்க்கையைச் சுதந்திரமாக, எந்த ஆணுக்கும் அடிபணியாது கழிக்கவேண்டும்.

நிறையப் படித்து, சொந்தக் காலிலேயே நிற்க ஆரம்பித்தும்கூட அவள் உறுதி மாறவில்லை.

திலகாவிற்கு முப்பத்தைந்து வயதானபோது, அப்பா படுக்கையில் விழுந்தார். அப்போதும் தள்ளாமையுடன் அம்மா அவரைக் கரிசனத்துடன் கவனித்துக்கொண்டது எரிச்சலைத்தான் உண்டுபண்ணியது.

`நீங்க அவர்கூட சந்தோஷமா இருந்தது என்ன தட்டுக்கெட்டு போச்சு? இப்படி ராஜோபசாரம் செய்யணுமா?` என்று சிடுசிடுத்தாள். `ஏதாவது கிளினிக்கில கொண்டு சேர்த்துடலாம்மா. ராத்திரி பகலா கவனிச்சுப்பாங்க. செலவை நான் பாத்துக்கறேன்!` என்று ஒரு வழியும் காட்டினாள்.

தாய் ஏற்கவில்லை. `ஒரு மனைவியின் கடமை,` என்றாள் சுருக்கமாக. அவளது குடும்பத்திலிருந்த பெரியம்மா, அத்தை போன்ற `பெரிய பெண்டிர்` கூறிய அறிவுரைகள், பழைய தமிழ் படங்களின் தாக்கம், அவள் படித்திருந்த சிறுகதைகள் போன்ற பலவும் அவளுடைய எண்ணப்போக்கை செதுக்கி இருந்தன.

ஆனால், அம்மாவின் மனதிலிருந்த உறுதி உடலில் இருக்கவில்லை. வேலைப்பளு தாங்கமுடியாதுபோக, சில மாதங்களிலேயே அப்பாவிடமிருந்து அம்மாவுக்கு நிரந்தர விடுதலை கிடைத்தது.

திலகா ஒரு முடிவுக்கு வந்தாள். சற்றும் யோசியாது, அவரை யாழ்ப்பாண இளைஞர்கள் சிலர் இணைந்து நடத்திய இல்லத்தில் கொண்டுபோய் சேர்த்தாள். அப்போது அவர் கண்களில் தெரிந்த வேதனை அவளைப் பாதிக்கவில்லை.

`நானோ வேலைக்குப் போறவ. ஒங்களைப் பாத்துக்க ஆள் போட்டா, வீட்டில இருக்கிற எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டுப் போயிடுவாங்க!` எங்கோ பார்த்தபடி சொன்னாள்.

ஆனால் அப்பாவுக்கு உண்மை தொ¢ந்துதான் இருந்தது. பெற்றவளைத் தான் நடத்தியதற்கு மகள் வஞ்சம் தீர்த்துக் கொள்கிறாள்!

ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர், அப்பா சுயமாக நடக்க ஆரம்பித்ததும், வேறு வழியின்றி வீட்டுக்கு அழைத்துவந்தாள் திலகா.

அவளைக் கண்டிக்கும் விதமாக அவர் ஏதோ குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பிக்க, இவருக்கு இடம் கொடுத்தால், தானும் அடிமை வாழ்க்கைதான் வாழ வேண்டியிருக்கும் என்ற பயம் அவளிடம் தலைதூக்கியது. `நானும் அம்மா இல்ல,` என்று முரட்டுத்தனமாகக் கூறி, அவர் வாயை அடைத்தாள்.

அப்பா அடங்கிப் போனார். இந்தவரைக்கும் தங்க இடமும், வேளாவேளைக்கு சாப்பாடும் கிடைக்கிறதே என்று திருப்தி பட்டுக்கொண்டார். அவருக்கென்று இருந்த அறையிலேயே காலத்தைக் கழிக்கலானார்.

கடந்த சில நாட்களாக பின்வீட்டில் நடக்கும் நாடகம் அவருக்கும் தொ¢ந்துதான் இருந்தது. அந்த முகம் தொ¢யாத ஆடவனைப்போல் தானும் எப்படியெல்லாம் மனைவியை ஆட்டுவித்தோம் என்ற எண்ணம் எழுகையில், அந்த நாட்கள் இனிமையானவை, தனக்கு எவ்வளவு அதிகாரம் இருந்தது என்றெல்லாம் எண்ணி ஏக்கப் பெருமூச்சுவிடத்தான் அவரால் முடிந்தது.

விரைவிலேயே திலகா திரும்பிவந்தாள். கூடவே காவல்துறை அதிகாரிகள் இருவர்.

அவள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு, `இது அவங்க குடும்ப விவகாரம். நாங்க எப்படி தலையிடறது?` என்று தயங்கினார்கள்.

`இதைப்போய் பெரிசு பண்றீங்களே! ஒங்களை ஒங்க புருஷன் அடிச்சதில்லையா, என்ன!` என்று அவர்களில் இளைஞனாக இருந்தவன் கேட்டபோது, அவளுக்குப் பற்றிக்கொண்டுவந்தது.

அந்த அதிகப்பிரசங்கித்தனத்திற்குப் பதில் சொல்லாமல், `இப்படியே விட்டா, அவங்களை அடிச்சே கொன்னுடுவான் அந்த மனுசன்!` என்று அரற்றினாள்.

`அடிபட்ட காயங்களோட அந்தம்மாவை டாக்டரைப் பாக்கச் சொல்லுங்க. டாக்டர் போலீசில புகார் கொடுக்கட்டும்,` என்று ஒரு உபாயத்தைத் தெரிவித்துவிட்டு, அவர்கள் எழுந்தனர்.

அன்று சாயந்திரம், காலார உலாவப் போவதுபோல் பின்தெருவுக்குப் போனாள் திலகா. அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து எந்த அரவமும் இல்லை.

சற்று யோசித்துவிட்டு, வெளிச்சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த அழைப்பு மணியை அழுத்தினாள்.

கதவு திறக்கப்பட்டது. “யாரு?”

தலையை மட்டும் நீட்டிப் பார்த்த பெண்மணியை திலகாவுக்குப் பரிச்சயமில்லை. புதிதாகக் குடி வந்திருக்கவேண்டும்.

அவளிடம் என்ன சொல்வது? எப்படிச் சொல்வது?

சற்றே தயங்கிய திலகா, தன்னை சுதாரித்துக்கொண்டு, “சில நாளா.. இந்த வீட்டிலேருந்து ஏதோ.. யாரோ அடிக்கிறாங்க, ஒடனே ஒரு பொண்ணு கூவி அழறமாதிரி கேட்டுச்சு. அதான்.. விசாரிச்சிட்டுப் போகலாம்னு..,” என்று இழுத்தாள்.

“அதுவா?” அப்பெண் சிரித்தாள். வலிய வரவழைத்துக்கொண்ட, உயிரற்ற சிரிப்பு. “நான்தான் வீடியோ பாத்துக்கிட்டிருந்தேன். நீங்க, பாவம், அதைக் கேட்டுட்டு..! ஸாரி!” பேசியபடியே கதவை அதிகபட்ச சத்தத்துடன் சார்த்தினாள் அப்பெண்.

நாட்டில் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் போட்டு என்ன பயன்!

இந்தத் தலைமுறையிலும் அம்மாவைப் போன்ற பத்தாம்பசலிகள் இருக்கிறார்கள் என்ற நிதர்சனம் திலகாவுக்குள் கசப்பை விளைவித்தது. தளர்ந்த நடையுடன் வீடு திரும்பினாள்.

சிறிது நேரத்திற்குப்பின், “இப்ப வந்திட்டுப் போச்சே, அதுக்கு இன்னும் கல்யாணமே ஆகலியாம். அதான், பொழுது போகாம, எங்கடா வம்புன்னு கெடந்து அலையுது!” என்று சற்றுமுன் கேட்ட பெண்குரல் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தது நன்றாகவே கேட்டது. “ஒவ்வொருத்தர் வீட்டிலேயும் ஆயிரம் இருக்கும். அதைக் கேக்க இவ யாருங்கறேன்!”

(மக்கள் ஓசை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *