பிரபஞ்சன் மிகவும் வித்தியாசமானவன். யாரிடமும் தானாகச்சென்று பேச கூச்சப்படுவான். சிறுவயதிருக்கும்போது வீட்டிற்கு வரும் உறவினர்கள் தனக்கு வருங்காலத்தில் நடக்கப்போகும் திருமணம் பற்றியோ, மாமன் மகள் சிவகாமியை தன்னுடன் இணைத்தோ பேசினால் வெட்கப்பட்டு தனது அறைக்குள் சென்று அடைந்து கொள்ளுமளவுக்கு குழந்தமை அவனிடம் குடிகொண்டிருந்தது.
ஐம்பது வயதைக்கடந்தவர்களில் சிலரே வெள்ளந்தியாக இருக்கும் போது ஐந்து வயதில் தான் அவ்வாறு நடந்து கொண்டதில் தவறேதுமில்லை. அது வயதின் வெளிப்பாடு என தற்போது இருபத்தைந்து வயதில் புரிந்து நியாயப்படுத்திக்கொண்டான்.
‘வாழ்க்கை என்பது நாம் தற்போது வாழும் முறையினைச்சேர்ந்ததா? வேறு முறைகள் உள்ளனவா?’ என அடிக்கடி யோசிக்கலானான்.
‘மற்றவர்களைப்போல் இயல்பாக தன்னால் இருக்கமுடியாமல் போனதற்கு என்ன காரணம்? வளர்ப்பு முறையா? வளர்ப்பு முறையென்றால் பெற்றோர் தன்னைப்போல் சிந்திக்காமல், மற்றவர்களைப்போல் தானே வாழ்ந்தார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்’ என பல வகையில் யோசித்துப்பார்த்தான்.
பள்ளியில் படிக்கும் போது கூட தன்னை யாரும் தவறாக நினைத்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினான். ஆசிரியர் சொல்லித்தரும் பாடத்தை முழுவதுமாக கவனித்து , உள் வாங்கி புரியாத பாடத்தில் கேள்வி கேட்டுத்தெரிந்து தேர்வு எழுதி, முழு மதிப்பெண் பெற்று மதிப்புடன் வலம் வந்தான்.
கல்லூரியிலும் சக மாணவ, மாணவிகள் வலிய வந்து பேசினாலும் அளவாக பேசி விட்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி, தேர்ச்சி பெற்றதால் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
எதிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்க்காக முயற்சி எடுத்துப்பழகியதால் அதற்க்காகவே மெனக்கெட்டு மற்ற விசயங்களிலும், மற்றவர்களுடன் பேசிப்பழகுவதிலும் நாட்டமில்லாமல் ஒருவித தனித்த சூழ்நிலை கொண்ட வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டான்.
வேலைக்குச்சென்றாலும் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதையோ, உணவு விடுதிகளுக்கு செல்வதையோ தவிர்த்து தனது அறையிலேயே தனிமையில் நேரத்தைக்கழித்தான்.
உடன் பணி புரிகின்றவர்களுடன் நட்பாகப்பழகினாலும் நெருங்கிய நட்பெனும் வட்டத்துக்குள் செல்லாமல் பார்த்துக்கொண்டதால் நெருங்கிய நண்பர்கள் யாருமில்லை. பள்ளி, கல்லூரியில் உடன் படித்தவர்கள் கூட வேலைக்கு வந்த பின்பு தொடர்பில் இல்லை.
‘சம்பளம் மூலமாக பணம் தேவைக்கு வருகிறது. பெற்றோரும் சம்பாதிப்பதால் தங்களுக்கு தேவையானது தவிர தனக்குத்தேவையானவற்றையும் உருவாக்கி வைத்துள்ளனர். வீடு, கார், தோட்டம், வங்கி சேமிப்பு என குறையில்லாமல் வைத்துள்ளனர். தனக்கிருக்கும் இந்த வசதி மற்ற சிலருக்கு இருந்தால் பெருமையாகப்பேசிக்கொள்வதோடு, மகிழ்ச்சியாகவும் வாழ்ந்திடுவர். ஆனால் தனக்கு இவையேதுமில்லாத மன நிலையை யார் கொடுத்தது? கல்வி, வேலை, பணம், திருமணம், குழந்தைகள், பேரப்பிள்ளைகள், மூப்பு, முடிவில் இறப்பு போன்ற நிலையே உறதியென்றால் பேராசை கொண்டு பணத்தை, சொத்துக்களை எதற்காக சேர்க்க வேண்டும்? பிடிக்காத, புரியாத பாடங்களை ஏன் கற்க வேண்டும்? நம்மைப்பற்றி நாமே சிந்திக்க இயலாத , இடைவிடாது பிறருக்கான வேலைகளை ஏன் செய்து காலத்தை வீணாக்க வேண்டும்? நமக்குப்பிடித்ததைச்செய்யாமல் சிறுவயதில் பெற்றோர் சொல்வதையும், பள்ளி கல்லூரியில் ஆசிரியர் சொல்வதையும், கம்பெனியில் மேலதிகாரி சொல்வதையும் செய்து மடிவதென்றால் என் மனது, எனதறிவு சொல்வதை நான் எப்போது கேட்பது? ‘ யோசித்து, யோசித்து உடல் சோர்வுற உறங்கிப்போனான்.
‘இயல்பான சிந்தனைக்கு மாற்றான சிந்தனை அவ்வப்போது தன்னை மிகவும் அச்சுறுத்துவதால் மற்றவர்களை விட்டு முற்றிலுமாக தனித்து வாழ வேண்டிய நிலை வந்து விடுமோ?’ என பயந்தவன் ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து புத்தகம், படிப்பு என இருந்து பின் வேலை என சென்றதால் கூட இந்த நிலையில் தனது மனம் மாறி இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவித்தால் ஒரு வேளை தற்போதைய நிலை மாறலாம் என நினைத்ததாலேயே நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டான். மொத்தமாக வேலையை விட்டால் திருமணம் செய்யும் வயதில் யாரும் பெண் தர முன் வர மாட்டார்கள். பேருக்காவது வேலை இருக்க வேண்டும் என தந்தையின் அறிவுறுத்தல் படி இந்த முடிவை எடுத்திருந்தான்.
தினந்தோறும் அறிவு கட்டளையிடும் வேலையை செய்து கொண்டிருக்காமல் தோட்டத்திற்கு சென்று உடலுக்கு வேலை கொடுத்தான். விவசாய நிலம் சிறந்த உடற்பயிற்ச்சிக்கான களம் என்பதை சில நாட்களிலேயே புரிந்து கொண்டான். நல்ல ஆரோக்யமான காற்று கிடைத்தது. நல்ல சுத்தமான தண்ணீர் கிடைத்தது. பழங்களை மரத்திலிருந்து பறித்தவுடன் சாப்பிட முடிந்தது.
ஆடுகள், மாடுகள், கோழிகள், நாய், பூனை என கள்ளம் கபடமில்லாத, சூழ்ச்சிகளில்லாத ஜீவராசிகளோடு பழகியதில் இது வரை தனக்கு எதிராக செயல்பட்ட, இறுக்கமான நிலையை கொண்டிருந்த மனம் தற்போது லேசானது. மனம் லேசானதால் உடல் சோர்வின்றி உற்சாகமாகச்செயல்பட்டது.
உறவுகளுடன் பேசியதில் மகிழ்ச்சியாக இருந்தது. மாமன் மகள் சிவகாமி தன்னைக்காண தன் வீட்டிற்கு வந்த போது அவளுடன் கூச்சமில்லாமல் பேச முடிந்தது. நிறைய பேசினார்கள். உணவை மறந்து பேசினார்கள். இருப்பிடம் மறந்து பேசினார்கள். இது கூட ஒரு வித தியான நிலைக்கு ஒப்பாக இருப்பதாகப்பட்டது. அவள் தனக்குச்சமமான பெரிய அறிவாளியில்லை. அவளது நிலைக்கு இறங்கி பேசியது பிடித்திருந்தது. அறிவு சார்ந்த விசயங்களோ, ஆதாயம் தரும் விசயங்களோ ஏதுமின்றி மரம், செடி, கொடி, பறவைகள், உணவு வகைகள், சிறு வயது விளையாட்டு என புரிந்தும் புரியாமலும், தெரிந்தும் தெரியாமலும் பேசியதில் நேரம் போதவில்லை, நேரம் போவதும் தெரியவில்லை, நேரத்தைப்பற்றிய கவலையுமில்லை.
பத்து நாட்கள் பேசியவன் பரிசம் போட ஒத்துக்கொண்டான். ஒத்த கருத்துள்ளவர்களுடன், ஒத்துப்போகிறவர்களுடன் சேர்ந்து வாழ்வதும் பெறும் பேறுதான். ஆண், பெண் நட்பெனும் போது உடல் தேவைகளும் பூர்த்தியாவதோடு, வாரிசுகளை பெறுவதில் தடையிருக்காது என்பது கூடுதல் சிறப்பு. படிப்பு என்பதும், வேலை என்பதும், வசதி என்பதும் தாண்டி நட்பு என்பது மனிதனின் வாழ்க்கைப் பயணத்துக்கு மிகவும் முக்கியமானது என்பது தற்போது தான் புரிந்தது. மனிதர்கள் எதற்காக நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்? மனதுக்குப்பிடித்தவர்களோடு எதற்காக திருமணம் செய்து கொள்கின்றனர்? என்பது தனக்கென அனுபவம் வரும் போது தான் புரிகிறது என்பதையறிந்தபோது முன்பிருந்த சராசரிக்கு மேலான, யாரோடும் சேர்ந்து வாழப்பிடிக்காத வெறுப்பான மன நிலை முற்றிலும் மாறியிருந்ததை உணர்ந்து கொண்டான்.
மனதின் விருப்பத்தை முற்றிலுமாக ஏற்க மறுக்கும் அறிவின் செயலாலும், அறிவிற்கும் மனதிற்கும் ஏற்படும் போராட்டத்தாலும் உடல் பலவீனமடையக்கூடும். உடல் பலவீனமடைந்து விட்டால் மனதின் செயல்களோ, அறிவின் செயல்களோ முற்றிலும் முடங்கி விடும். எனவே மனதின் செயல்களுக்கும், அறிவின் செயல்களுக்கும் சமமான செயல்பாட்டுக்கான உரிமைகள் கொடுக்கப்படும் போது உடல் சீராகி வாழ்க்கைப்பயணத்தை தொடர இயலும். அதாவது நூறு சதவீத அறிவாளியும், நூறு சதவீத முட்டாளும் இயல்பாக வாழ முடியாது. ஆத்மார்த்தமான நட்பிற்கு அறிவு தேவைப்படாது. அறிவற்ற , முற்றிலும் எதிர் நிலை கொண்ட அன்பு தேவைப்படும். அன்பின் செயல்பாடுகள் உடலை சிதைப்பதில்லை. அறிவின் செயல்பாடுகள் அது தவறு, இது தவறு என கூறியே அதிர்ச்சியைக்கொடுத்து உயிரணுக்களை சிறிது, சிறிதாக அழித்து விடுகிறது.
முழுமையான அறிவின்றி முட்டாள் தனம் கலந்த அறிவு தான் மனித வாழ்வை ஏற்கிறது, சக மனிதர்களுடன் பழக அனுமதிக்கிறது என்பதையறிந்து பதவி உயர்வையும், வெளிநாட்டு வாய்ப்பையும் தவிர்த்து, வாரத்தில் ஐந்து நாட்கள் முழு அறிவின் செயலுக்காகவும், இரண்டு நாட்கள் முழு மனதின் விருப்பத்திற்காகவும் வாழும் நிலையை ஏற்படுத்தியதால் மற்றவர்களைப்போல இயல்பு வாழ்க்கைக்குள் பிரபஞ்சனால் நுழைய முடிந்தது.