கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 3,592 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

வீடு களைகட்டி விட்டது. 

கிழமை – ஞாயிறு 

நேரம் – காலை ஒன்பது.

ரேடியோவின் அசுருதி இல்லை. 

தூர்தர்ஷனை எப்போதோ நிறுத்தியாகிவிட்டது.. 

சாரதம் ஹாளை ஒரு தடவை நோட்டம் விட்டாள், நைந்து பிய்ந்து போன, தொள்ளாயிரத்து எழுபத்திரண்டில், ஐயபாரதம் கடையிலிருந்து வாங்கிய பிரம்பு நாற்காலியில், கோர்ட்டில் மஞ்சள் காகிதத்தைக் கொடுத்து விட்ட மானியைப் போல சாம்பசிவம் தலை குனிந்தவராய் உட்கார்ந்திருந்தார். கூடத்தை ஓட்டினாற் போன்ற அறையின் வாயிலில் ஒரு முக்காலியைத் தற்காலிக பீடமாகக் கொண்டு மூத்த பெண் வைதேகி அமர்த்திருந்தாள். எதிர்த் திசையில், பிள்ளை பாபு சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். இரண்டாவது பெண் சுபாவும், அப்போதுதான் ஆறு இட்லிகளைத் தின்று அரை லிட்டர் காப்பியையும் குடித்துவிட்டு வந்த இரண்டாவது பிள்ளை வீராவும் (வீரராகவன்) ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். 

“மறுபடியும் சொல்றேன். கேட்டுக்குங்க!”

சாரதம் தேர்தல் கூட்டத்தில் முழங்குவது போல முழங்கினான். 

”இன்னும் ரெண்டே நாள்ல, நம்பகூட சொந்த பந்தமே கொண்டாடாத, வைச்சுக்காத உங்க சித்தப்பா…” 

“காலம் சென்ற சித்தப்பா!” என்று வீரா இடைமறித்தான். 

“சரி லேட் சித்தப்பாவின் ஒரே பெண் ரேவதி இங்கே டேரா போட வர்றா, அப்புறம் இந்த வீடு வீடா இருக்காது”. 

“எல்லாரும் நன்னாக் கேட்டுக்குங்க… இந்த ரேவதி ரொம்ப நாளுக்கு இங்கே தங்கப்படாது. நாம தங்களிடப்படாது.. அவ உங்க சித்தப்பா பொண் தான், என் கொழுந்தன் பொண்தான், ஆனா ரெண்டு குடும்பத்துக்கும் பத்து வருஷமா போக்குவரத்தே கிடையாது. செத்துப் போனவங்களைப் பத்திக் குத்தமா, குறையாப் போறது சரியில்லைதான். பாவம் கூட. ஆனா சிலதைப் பற்றி இப்ப உங்கிட்டேயெல்லாம் பேசாம இருக்கக் கூடாது. உங்க சித்தி ஒரு நா கூட என்னை மதிச்சதில்லே, உங்க தாத்தாவும், பாட்டியும் அப்ப உசிரோட இருந்தாங்க. சித்தப்பா அவ கழுத்தின தாலி கட்டினார்…” 

“ஏன் சுபா. தாலியைக் கழுத்திலதானே கட்டணும்?” என்றான் வீரா. 

“எனக்குத் தெரியாதுப்பா. இடுப்பிலேயும் கட்டுவாங்களோ என்னவோ…?” 

“ரெண்டு பேரும் குறுக்கே குதறாதீங்க.” என்ற சாரதம் தொடர்ந்தாள். “தம்பதி சமேதரா அவங்க ஊருக்கெல்லாம் விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணினாங்க… அத்தை, சித்தி, மாமா, மாமின்னு..” 

“ஒன் மினிட் ப்ளீஸ்!”

திடிரென்று ஒரு புதுக்குரல் வரவே சாரதம் நிறுத்தினாள். மற்றவர்கள் குரல் வந்த திசையில் கண்களைச் செலுத்தினார்கள். சத்யா என்கிற சத்திய மூர்த்தி. 

“என்னடா சத்யா?” – வைதேகி. 

“நீ ஏன் குறுக்கே குதர்றே?” – வீரா 

“நீ பாத்ரூம்ல பாடிட்டிருந்தியே?” – சுபா

“ஈரத் தலையைத் துவட்டிக்கடா சத்யா?” என்றார் சாம்பசிவம். 

பாபு மட்டும் பேசவில்லை. 

“என்னடா!” 

“என் மாமி கலியாணத்தின் போது எனக்கு வயசு நாலோ அஞ்சோ.. நான் இந்த நமஸ்காரங்களையெல்லாம். பாராம மண்டபம் பூரா ஓடி விளையாடிட்டிருந்தேன்… என் அம்மாவை, அதான் உங்க சின்ன நாத்தனாரையும் என் அப்பாவையும் இவங்களோட சித்தி. அதான் உங்க ஓர்ப்படி. நமஸ்காரம் பண்ணினாளா?” என்றான் சத்யா. 

“உன் அம்மா, அப்பாவைக் கூட பண்ணினாள்டா. ஆனா என்னை – இல்லே- எங்களைப் பண்ணலே ஏன்? ஏன்? நான் ஒரு சாதாரண எலிமென்டரி ஸ்கூல் வாத்தியார் பொண்தானே? அப்ப இளப்பம் காட்டிவை கண்ணை மூடற வரை நிறுத்தலே.” 

”ஓ, ஓநாய் ஆடு கதை!” என்றான் வீரா.

சாரதம் லட்சியம் செய்யாமல் தொடர்ந்தாள்.

”என் கேவலம் அதோட நின்னுதா? இல்லியே? என் புருஷன் யார்?. மன்னார்த் தெருவில ஒண்ணே கால் கிரவுண்ட் இருக்கு சார். சீப்பா முடிச்சுடலாம்… அபிராமபுரத்தில தெக்கு பார்த்த வீடு. மெட்ராஸ் டெரஸ்… சுத்தி பத்து தென்னை மரம் இருக்கு. அஞ்சு லட்சத்துக்கு அவங்க ரெடி… இப்படியெல்லாம் பேசி முடிக்கிற ப்ரோக்கர் பெண்டாட்டிதானே…” 

“இதுக்காகக் குறைப்பட்டு அழாதேம்மா!” என்ற வைதேகி, “நான் எம்.ஏ. பியெட்” என்றாள். “நான் எம்.ஏ. லிட்ரெச்சர், எம்ஃபில் படிக்கிறவள்”என்றாள் சுபா. 

“அண்ணா ஏ.ஜி. ஆபிஸ்ல செக்ஷன் ஆபிசர். என்னைப் பத்தி நானே சொல்லிக்கக் கூச்சமா இருக்கு…” இழுத்தான், 

‘அப்படீன்னா நான் சொல்லிடறேன்… நம்ப வீரராகவன் காலேஜ் அஸிஸ்டண்ட் புரொபசர்!” 

“நாங்க இவ்வளவு பேர் இவ்வளவு படிச்சிருக்கறப்ப நீ எலிமென்ட்ரி ஸ்கூல் டீச்சர் பொண்ணா இருந்தா என்ன, ஹவுஸ் புரோக்கரின் மனைவியா இருந்தா என்ன அம்மா?” என்றாள் சுபா. 

“மணி பத்து அடிக்கப் போறது நாம வம்பு பேசிட்டே போறாம். உருப்படியா இன்னும் ஒண்ணு சொல்லலை அம்மா!”- வைதேகி.

“எங்க விட்டேன்?” 

“நமஸ்காரத்தில்…” என்றான் சத்யா. 

“இப்படியெல்லாம் அவ என்னை ஏனனம். காட்டினாலும் நான் எதையும் மனசில வைச்சுக்கலே. அவ அமெரிக்கா போறப்ப முறுக்கு சுத்திக் குடுத்தேன். வடாம் இட்டுக் குடுத்தேன். மாகாளி ஊறுகா போட்டுக் குடுத்தேன்… எல்லாத்தையும் கூட்டிட்டு பிளேன் ஏறினவ ஒரு தாங்ஸ் கூட சொல்லலே”. 

“இது தப்பு. மகா தப்பு. அறியாயம்?” என்றான் வீரா.

“கரெக்ட் வீரா. சித்தி அம்மாவுக்கு தாங்க்ஸ் சொல்லியிருக்கணும். அம்மா ஒரு டம்ளர் வாட்டர் தந்தாக் கூட, நாமெல்லாம் அவளுக்கு தாங்க்ஸ் மம்மிங்கறோம்!”என்றாள் சுபா. 

“கேளுங்க எல்லாரும்… இப்பவே இந்த வீடு நம்ம எல்லார்க்கும் போதலே. கீழே இந்த ஹாலும் அந்த ஒரு ரூமும்தான். மாடியில் இதே மாதிரி ஒரு ஹால், சொப்பு சொப்பா ரெண்டு ரூம். கிராதி போட்ட திண்ணையில் ஒரு பக்கம் ஒரு பெஞ்ச்ல உங்க அப்பா படுத்துக்கறார். இன்னொரு பக்கம் தரையில் சத்யா தூங்கறான். மாடியில நீங்க மூணு பேரும் இருக்கீங்க. நம்ப பாபுவுக்கும் அவன் பெண்டாட்டிக்கும் கீழே இந்த ரூம்ல இருக்கவே பிடிக்கலே. நான் ஹால்ல ஒரு கோடியில் முடங்கறேன். நிலைமை இப்படி இருக்கிறப்ப இந்த ரேவதிப் பொண்ணு வர்றா?”

“ஒரு நிமிஷம், அம்மா!”

“என்னடீ சுபா?” 

“பெரிய அண்ணா சம்பாதிக்கிறான். மன்னி சம்பாதிக்கிறா, ரெண்டு பேருமா நிகரமா வீட்டுக்குச் கொண்டு வர்ற பணம் மாசம் ஐயாயிரத்து எண்ணூறு. இதில வீட்டுக்கு எவ்வளவு போடறாங்க? ரேஷன் வாங்கறாங்க. ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி எலக்ட்ரிக் பில் கட்டறாங்க. ஆவின் பால் வாங்கறாங்க. எல்லாமா ஆயிரம் – மிஞ்சிப் போனா இருநூறு அதிகம் இருக்கட்டும் – தர்றாங்க. அண்ணாவும் மன்னியும் ஏன் தனி வீடு பார்த்துட்டுப் போகப்படாது? இங்கே இருந்துக்கிட்டு குறைப்பட்டுப்பானேன்…? மன்னி டயரியில் குறிச்சு வைச்சுட்டு உங்கிட்ட தினசரி வார்த்தை யுத்தம் நடத்தறா. இப்ப பிறந்த வீட்டுக்கும் போயிட்டா. எப்ப வருவாளோ?” 

”ஏண்டி சபா, அந்த ரேவதிக்காக உன் அண்ணா தனிக் குடித்தனமே போகணுமா?” என்றாள் சாரதம். 

“நான் ரெடி அம்மா!” என்றான் பாபு.

“அப்ப நல்ல வீடாப் பாரு அண்ணா…” – வீரா. 

“ரேவதிக்காகச் சொல்லலே அண்ணா..நீயும் மன்னியும் கசல சௌகரிய சௌபாக்கியத்தோடு தனியா இருக்கறது நல்லதுதானே…? எனக்கு வயசு முப்பது ஆகப் போறது. ஆனா கலியாண வேளையோ யோகமோ இன்னும் வரலே. அது வந்தப்புறம்தான் என்னால இந்த வீட்டை விட்டுப் போக முடியும். நீ தனிக்குடித்தனம் போனா நான் இந்த ரூமுக்கு வந்துருவேன்.”

பாபு பதில் சொல்லவில்லை. 

“இப்ப இவனோட தனிக்குடித்தனமா பிரசினை?” என்றாள். சாரதம். பிறகு தொடர்ந்து, “இத்தனை வருஷமா நாம இந்த வீட்ல ஏதோ நிம்மதியா இருக்கோம். இப்ப நம்மை அண்டி ஒரு பொண்ணு வர்றா. ஒரு மரியாதை காரணமா, உங்க அப்பாவோட தம்பி பொண் என்கிற ஒரு அபிமானம் காரணமா அவளை இந்த வீட்ல இருக்க இடம் கொடுப்போம்?” என்றாள். பிறகு, “கொஞ்ச நாளுக்கு!” என்றாள். 

“அப்புறம் என்ன செய்யறது சாரதம்?” 

அப்பா வாய் திறந்து நான்கு வார்த்தைகள் பேசி, அதை ஒரு கேள்வியாகவும் கேட்டு விட்டாரே! எல்லாருமே வியப்புடன் அவரைப் பார்த்தார்கள். 

ஆனால் சாரதம் ஆச்சரியப்படவில்லை. 

“என்ன செய்யறதுன்னு எனக்குத் தெரியும்.”

“உன்னால் எதுவும் செய்ய முடியாது, சாரதம்?” என்றார். சாம்பசிவம். கூடவே ஒரு நிமிடம் மௌனத்தில் உறைந்தது. 

– தொடரும்…

– இன்பமான பூகம்பம் (நாவல்), வெளியானது: ஜூலை 1995, மாலைமதி மாத இதழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *