“”எங்களுக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாவணும். விவகாரத்தை நீங்கள் முடிச்சு வைக்கிறீங்களா அல்லது நாங்களே பார்த்துக்கட்டுமா,” மூத்தார் பெரியசாமியின் முகத்தைப் பார்த்து கை நீட்டிக் கேட்டாள் கிருஷ்ணவேணி.
பெரியசாமி மட்டுமல்ல, அவர் மனைவி லலிதாவும் திகைத்து போயினர்.
அவர், தம்பியைப் பார்த்தார்; என்னடா இதெல்லாம் என்பதாக…
தம்பி துரையும், “”அவள் கேட்டதுல ஒண்ணும் தப்பிருக்கறதா தோணலை. ஒரு வாரத்துல முடிஞ்சிருக்க வேண்டிய விஷயம். மாசக்கணக்கா முடியாம கிடக்குன்னா என்ன செய்ய. வசந்தாவும் எத்தனை காலத்துக்கு வீட்டோடு கிடப்பாள். “ஆறின கஞ்சி பழங்கஞ்சி…’ன்னு ஆயிடாதா. அவளுக்கு எங்கேன்னு மாப்புள்ள தேடறது…” என்றார்.
“”இப்ப மட்டும் மாப்பிள்ளை தயாரா இருக்கானா?”
“”எப்பருந்தோ தயாராத்தான் இருக்கான் என் தம்பி,” என்றாள் கிருஷ்ணவேணி.
“”முதலயே அவனுக்கு கட்டிக் கொடுத்திருக்க வேண்டியதுதானே. அதைவிட்டு, ஏன் சென்னை பையனை புடிச்சிங்க?”
“”எங்க போதாத நேரம்தான்…”
“”போதாத நேரம் காரணமில்லை. உன் தம்பி லட்சணம் அப்படி. அவன் கேரக்டர் சரியில்லை. ஊர் மேயறான். அவனுக்கு பொண்ணை குடுக்கறதவிட, பாழுங்கிணத்துல தள்ளலாம்ன்னு இதே வாய்தான் சொல்லிச்சு. இன்னைக்கு நல்லவனா போய்ட்டானா?”
“”நல்லவனோ, கெட்டவனோ… கண் எதிர்ல இருக்கான். தப்பு பண்ணா தட்டிக் கேட்கலாம். நல்லவனா தேடி அனுபவிச்சது போதும். ஏன் இருக்குறதெல்லாம் விட்டு மெட்ராஸ்ல பார்த்தோம்? பெரியவர் நீங்க இங்க இருக்கீங்க. பையனும் இந்த பகுதில இருக்கான். கல்யாணத்துக்கு பிறகு பெரியப்பா பத்திரமா பார்த்துக்குவிங்கனுதான் செஞ்சோம்…”
“”அந்த நம்பிக்கைக்கு இப்ப என்ன குறை வந்திருச்சி…”
“”இன்னும் என்ன குறை வரணும். மாப்பிள்ளை படிச்சவன், யோக்கியமானவன், நல்ல குடும்பத்தை சேர்ந்தவன், பொண்ணை நல்லபடியா வச்சு காப்பாத்துவான்னு நம்பினோம்.
“”தாலிகட்டி ஒருவாரம் கூட ஆகலை… மகளை கொடுமை படுத்தியிருக்கான். நகைகளை பிடுங்கிகிட்டு வெளியில சொன்னால் கொன்னுடுவேன்னு மிரட்டியிருக்கான். உயிருக்கு பயந்து போன் பண்ணி அழுதாள். நாங்கள் உடனே உங்களுக்கு தகவல் கொடுத்தோம்.
“”அந்த நாய் மேல ஒரு ரிப்போர்ட் கொடுத்து உள்ள தள்ளுங்கன்னு சொன்னோம்; செய்திங்களா… என்னமோ தப்பை நாங்க செய்த மாதிரி எங்களுக்கு புத்திமதி சொல்லி, பெண்ணையும் எங்களோடு அனுப்பிட்டு ஹாயா இருக்கீங்க.
“”இதுவே உங்க சொந்த மகளாயிருந்தால் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பீங்களா? பெத்த வயிறு எரியுது…” என்று முந்தானையில் வாய் பொத்தி அழுதாள்.
“”இப்ப நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது. இன்னும் கொஞ்சம் நாள்… ஒரு மாசம் டயம் கொடுங்க. அதுக்குள்ள நல்லது நடக்கும். அப்படி நடக்கலைனா… நீங்க உங்க மனம் போல எதுவும் செய்துக்குங்க. குடும்பத்துல பெரியவர்ன்னு என்னை மதிக்கவும் வேணாம். என் காதில் எதையும் போடவும் வேணாம். சரியா…” என்று உறுதியாக சொன்னார்.
வந்தவர்கள் தண்ணீர் கூட குடிக்காமல் சென்றனர்.
கணவனை அனுதாபத்தோடு பார்த்தாள் லலிதா.
பதினைந்து வயதில் <ஊரை விட்டு சென்னை வந்தார். மெக்கானிக் கடையில் சேர்ந்து, தொழில் கற்று, தனியாக கடை போட்டு சம்பாதித்து, கொண்டுபோய் அம்மாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
தகப்பன் இல்லாத வீட்டில் தலைப்பிள்ளையாய் பிறந்த அவர் இரண்டு தங்கைகளுக்கு கல்யாணம் பண்ணி, இரண்டு தம்பிகளை கரையேற்றி, தாயை இறுதிகாலம் வரை தன் வீட்டில் வைத்து பாராமரித்து, பிறகு தான் தனக்கென்று கல்யாணம், வீடு, குழந்தைகள் என்று ஒவ்வொன்றாய் நிறைவேற்றிக் கொண்டார்.
தொழில், குடும்பம் எல்லாம் சென்னையில் இருந்தாலும், ஆத்மா ஊரையே சுற்றிவரும். விடுமுறை நாளில் கால்கள் வீடு தங்காது. தம்பிகளை பார்த்துட்டு வர்றேன்... தங்கைகள் வீட்டுக்கு போய்ட்டு வர்றேன் என்று செலவு பண்ணிக்கொண்டு போய்க் கொண்டிருப்பார்...
சகோதர, சகோதரிகளுக்கு மட்டுமல்லாது, ஊரிலிருந்து யார் வந்தாலும், வீட்டில் தங்க வைத்து, சோறு போட்டு அவர்கள் வந்த வேலையை முடித்து கொடுத்து, வழி அனுப்பிவிட்டுதான் மறு வேலை பார்ப்பார்.
தம்பி மகள் வசந்திக்கு, அவராகவே நல்ல இடமாக தேடிக் கொண்டிருந்த போதுதான், "வசந்திக்கு தரகர் மூலம் மாப்பிள்ளை பார்த்திருக்கேன். பையன் உங்கள் ஏரியா பக்கம்தான். எங்களுக்கெல்லாம் பிடிச்சு போச்சு. வர்ற ஆவணியில முகூர்த்தம் வச்சிக்கலாம் என்று முடிவு பண்ணி யிருக்கேன். நீங்கள் பையனை ஒரு எட்டுப் பார்த்துடுங்க...' என்று, தடாலடியாய் ஊரிலிருந்து தகவல்.
"இதென்ன மரியாதை இல்லாத தனம். பெரிய வர் நீங்க இருக்க, முன்கூட்டி ஒரு வார்த்தை சொல்லாமல், எல்லாம் முடிவு பண்ணிட்டு, கடைசி நேரத்துல ஒப்புக்கு தகவல் சொல்றாங்களே...' என்று வருத்தப்பட்டாள் லலிதா.
"எனக்கு தொல்லை கொடுக்கக் கூடாதுன்னு செய்திருப் பாங்க!' என்று சொல்லிவிட்டு, அவர்கள் கொடுத்த விலாசத்துக்கு போய் பார்த்தார்.
அப்போது அவருக்கு, சில விஷயம் தெரிய வந்தது. வீட்டை விட்டு பையன் கோபித்துக் கொண்டு தனியாக இருக்கிறான். அவர்கள் பார்த்த பெண்ணை பிடிக்கவில்லை என்று மறுத்ததால், தகராறு ஏற்பட்டிருந்தது. இப்போது, நடக்கவிருக்கும் திருமணத்தில் அவர்களுக்கு உடன்பாடு இல்லையென்றும்.
அங்கே திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. இங்கோ குடும்பத்துக்குள் பகையாக இருக்கிறது. நாளைக்கு ஏதாவது பிரச்னை என்றால், இந்தப் பக்கத்திலிருந்து பதில் சொல்ல ஆள் இருக்காது என்று சங்கடப்பட்டார்.
அது குறித்து வெளியில் ஏதும் சொல்லிக் கொள்ளாமல், தினந்தோறும் அந்த வீட்டுக்கு படை எடுத்து பெற்றோரிடமும், பிள்ளையிடமும் பேசி ஒற்றுமை ஏற்படுத்தினார்.
பையனுக்கு சொல்லிக் கொள்ளும்படி வருமானம் இல்லையென்றும், அதிகப்படி செலவால் கொஞ்சம் கடன் இருப்பதும் தெரிந்தது.
கல்யாணம் முடிந்ததும் அவனுக்கு வேறு வேலை தேடி வைக்க வேண்டுமென்று எண்ணியிருந்தார். பையன் அவரிடம் வெளிப்படையாக பேசியது அவருக்கு பிடித்திருந்தது. சின்ன, சின்ன பிரச்னைகளை சரிப்படுத்தி விடலாம் என்று நினைத்திருந்தார்.
திருமணம் நடைபெறும் வரை சமாதானமாக இருந்த பெற்றோர், முடிந்ததும் அவனை தனியாக போய்விடச் சொல்லிவிட்டனர். அவனும், பழைய இடத்தியேயே குடித்தனம் போட்டு விட்டான்.
அதனால் செலவு அதிகரித்தது. அதற்காக, மனைவியிடம் நகை கேட்கப் போய் இருவருக்கும் இடையில் கசப்பு. அதையும் தீர்த்து வைக்க அவர் முயற்சித்துக் கொண்டிருந்தபோதுதான் எதிர் தரப்பிலிருந்து, "ஆச்சா, போச்சா...' என்று ஆர்பாட்டம்.
விஷயத்தை ஊதி பெரிதாக்கி, தம்பதிகளை பிரித்து, எப்படியாவது வசந்தியை தான் கட்டிக் கொள்ள வேண்டுமென்று, கிருஷ்ணவேணியின் தம்பி நரித்தனம் பண்ணிக் கொண்டிருந்தான். அதற்கு இடம் தரக்கூடாது என்று தான், பெரியசாமி நிதானமாக காய் நகர்த்திக் கொண்டிருந்தார்.
இவ்வளவு இங்கு நடந்து கொண்டிருக்க, அவர்கள் வந்து பொறுமையில்லாமல் குதித்துவிட்டு போகின்றனர்.
""ஒரு மாதத்துக்கு பிறகு அவங்க ஒண்ணு சேரலைனா, என்னாகும்...'' என்று கவலையுடன் கேட்டாள் லலிதா.
அவர் சிரித்தார்.
""எங்கள் மெக்கானிக் தொழில்ல ஒரு வார்த்தை உண்டு. அது, "ஸ்டார்ட்டிங் ட்ரபிள்!' வண்டிகள் சில சமயம் எடுத்த உடனே ஸ்டார்ட் ஆகாது; மக்கர் பண்ணும். கொஞ்ச தூரம் போய் நின்னுடறதும் உண்டு. உடனே இந்த வண்டி சரிப்படாதுன்னு ஒதுக்கிட மாட்டோம். புதுசுல சில வண்டிகள் அப்படித் தான் இருக்கும். போகப்போக ரன்னிங்கில் சரியாயிடும்.
""அது மாதிரி, கல்யாணமானவுடனே, கணவனும், மனைவியும் ஒருத்தரை, ஒருத்தர் முழுமையாய் புரிஞ்சுக்குவாங்கன்னு சொல்ல முடியாது. கொஞ்ச காலம் போகணும். ஆரம்பத்துல கொஞ்சம் பிரச்னைகள் இருக்கும். அது பெருசா தோணும். கோபதாபம் உண்டாகும்.
""சாதாரணமாக பேசியே தீர்த்துடலாம். அதுக்கு பெரியவங்க கொஞ்சம் நிதானமாக நடந்துக்கணும். சின்னவங்களுக்கு சமமா அவங்களும் சேர்ந்துட்டு ஆச்சா போச்சான்னு குதிச்சா, ஒட்டறது கூட ஒட்டாம போயிடும். கிருஷ்ணவேணி இப்ப அந்த வேலையத்தான் செய்துகிட்டிருக்கு. அது ரொம்ப தப்பு...''
""அப்புறம் எந்த நம்பிக்கையில ஒரு மாசத்துல ஒண்ணு சேருவாங்கன்னு சொல்றீங்க...''
""பிரிஞ்சிருக்கும் போதுதான் உறவுகளையும், உண்மைகளையும் புரிஞ்சுக்க முடியும். தான் அவசரப்பட்டு போய்ட்டோம்ன்னு வசந்தா உணர்வாள். அவள் வயசு பெண்கள் எல்லாம், கணவனோடு வளைய வரும்போது, பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது அவளால்.
""ஊரில் நாலுக்கு மூணு ஆம்பளைங்க குடிகாரர்களாகவும், கோபக்காரர்களாகவும் தான் இருக்காங்க இன்னமும். பெண்களும் அடி, உதை பட்டுக்கிட்டும், ஏச்சு பேச்சு வாங்கிக்கிட்டும்தான் வாழ்ந்துகிட்டிருக் காங்க. அவர்களை பார்க்கும்போது, தன் புருஷன் செய்தது ஒண்ணும் கொலைக் குத்தமில்லேன்னு புரியும்.
""அதோடு மட்டுமல்லாது, வாழா வெட்டியாய் தாய் வீட்டில் வந்து உட்கார்ந்திருப்பது அவளை உறுத்தும். அதைக்கூட சகிப்பாள். இப்ப அவள் தாய்மாமனுக்கு கட்டிக் கொடுக்க நடக்கிற ஏற்பாட்டை, அவளால் ஏற்கவே முடியாது. அதிலிருந்து தப்பிக்கவாவது ஒரு நல்ல முடிவை எடுப்பாள்.
""இந்தப் பக்கம் மாப்பிள்ளையும், தப்பை உணர்ந்துட்டான். வசந்தி ஏத்துக்குவாளோ, மாட்டாளோன்னு தயங்கிகிட்டிருக்கான். அவள் கிட்டருந்து வாங்கின நகையை மீட்க முயற்சி பண்ணிகிட்டிருக்கான். ரெண்டு பேரும் ஒண்ணு சேர நிறைய வாய்ப்புகள் இருக்கு...'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, போன் வந்தது; எடுத்துப் பேசினார்.
மறுமுனையில் வசந்தி.
""பெரியப்பா... அப்பாவும், அம்மாவும் அங்கே வந்தாங்களா?''
""ஆமாம்மா, வந்து தண்ணி கூட குடிக்காம, சத்தம் போட்டுட்டு போறாங்க. அவங்க டைவர்சுக்கு ரொம்பவே அவசரப்படறாங்க. நீ என்னம்மா சொல்ற?''
""அதை விட முக்கியம், தாய் மாமன்கிட்டருந்து என்னை காப்பாத்தறதுதான் பெரியப்பா. அதுக்கு ஏதாவது யோசனை சொல்லுங்க... அவர்கிட்ட பேசினீங்களா... பார்த்தீங்களா?''
""உன் புருஷனை பத்தி கேட்கறியாம்மா... அவன், உன் கூட சேர்ந்து வாழறேன்னு சொல்றான். நடந்த தப்புக்கெல்லாம் மன்னிப்பு கேட்க தயாராயிருக்கான். உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியல... அதனால அவன்கிட்ட வாக்கு கொடுக்காம இருக்கேன்...''
""ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை. அதுக்கு, முதல் புருஷன் கூடவே வாழ்ந்து விடலாம் போலிருக்கு.''
""சொல்லிட்டேல்ல... ஒரு வாரத்துல அவனையே வந்து உன்னை கூட்டிகிட்டு வரச் சொல்றேன். அது வரைக்கும் அங்க நடக்கற அமளியை பொறுத்துக் கொள்,'' என்று சொல்லி போனை ஆப் பண்ணிவிட்டு, மனைவியை பார்த்து புன்னகைத்தார்.
கணவனை பெருமையுடன் பார்த்தாள் லலிதா .
- அக்டோபர் 2010
இன்னும் கொஞ்சம் அவகாசம்
கதையாசிரியர்: காசி சுப்ரமணியம்
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,227
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,227
தொடர்புள்ள சிறுகதைகள்
ராஜகுமாரனும் நானும்…
சுமதி ரூபன்September 16, 2024
பொண்ணு பொறந்த நேரம்
பாரதிமணியன்September 16, 2024
அப்பாவின் கைத்தடி
உதயசங்கர்September 16, 2024