இனி நல்ல அப்பா!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,214 
 
இனி நல்ல அப்பா!

“இன்னும் அக்காவை காணோமே?’ என, வாசலைப் பார்த்துக் கொண்டிருக்கும் நரேனை பார்க்க, பார்க்க, கோபம் பற்றிக் கொண்டு வந்தது சுதாவுக்கு.

“லீவு நாள் தானே… ஸ்மிதாவைக் கொஞ்சிக்கிட்டே சந்தோஷமா நேரத்தை ஓட்டுறதை விட்டுட்டு, அக்காவோட அழுக்கு பிள்ளைகளை நெனைச்சுக்கிட்டே கெடக்காரே… தீனியிலயே குறியாயிருக்கற ஜன்மங்க. அடுப்பு வேலைக்குப் பயந்து, சரியான நேரத்துக்கு வந்து சேர்ற கறி வலிச்சதுக!’

மனதில் எரிச்சலும், புகைச்சலும் கலந்த வார்த்தைகள் சீறி எழ, அவற்றை அப்படியே கொட்ட இயலாததால், குரலைச் சற்று உயர்த்துவதன் மூலம் மட்டுமே, கனன்று கொண்டிருக்கும் தன் ஆதங்கத்தைச் சூசகமாக வெளிப்படுத்தினாள் சுதா.

“ஏங்க… அவங்க வர, 1:00 மணிக்கு மேல் ஆகும். அதுவரைக்கும், நீங்க நம்ம குழந்தையோட பந்து விளையாடுங்க.”

குழந்தையை முத்தமிட்டு, அவன் முன் இறக்கி விட்டதும், அவனும், பாசத்துடன் தூக்கிக் கொஞ்சுவான் என எதிர்பார்த்தாள் சுதா; ஆனால், பந்தை தேடிப் போனான் நரேன். அவளின் மனக் கதகதப்பு அதிகரித்தது.

குழந்தை ஸ்மிதா, இப்போதுதான் நடக்கப் பழகி இருக்கிறாள். பெரிய பலூன் பந்தைக் கீழே உருட்டினால், அதைக் காலால் எற்றுவதுதான், அவளுக்குப் பிடித்தமான விளையாட்டு. பிஞ்சுக் காலால், ஸ்மிதா, பந்தை எற்றுவதைப் பார்த்து பூரிப்பதற்காகவே, அடிக்கடி விளையாடுவாள் சுதா.

தன்னைப் போல், நரேனும் விளையாடி, குழந்தையைக் குதூகலப்படுத்தப் போகிறான் என அவள் எதிர்பார்க்கையில், “”அங்கிள்… நாம அன்னைக்கு மாதிரி பந்தைக் கேட்ச் பிடிச்சு விளையாடலாமா?” என்று, எதிர் வீட்டிலுள்ள எல்.கே.ஜி., படிக்கும் ரகு, தெரு அதிரக் கூவினான்.

“போடா… நான் எங்க ஸ்மிதாவோட விளை யாடணும்…’ என்று கூறி, நரேன், அவனைத் தவிர்க்கப் போகிறான் என்று நினைத்தாள் சுதா. ஆனால், ஸ்மிதாவை உடனேயே ஓரங்கட்டி, “”வாடா… வா,” என்று பந்தை தூக்கிக் கொண்டு, வாசலை நோக்கி ஓடினான் நரேன்; சுதாவின் முகம் சுருண்டது.

ஓடிச்சென்று குழந்தையை அள்ளி வந்து, பொருமலுடன் கிச்சன் வேலைகளை கவனித்தாள் சுதா.

வெறுப்பு, எரிச்சல், சிடுசிடுப்பு இவற்றினூடே ஒருவழியாக மணி, 1:30 ஆனது.

“அப்பப்பா… என்ன வெயில்…” என்று, ஒரு கையால் பெரியவனை இழுத்துக் கொண்டும், மறு கையில் ஒரு வயதுக் குழந்தையை இடுப்பில் அணைத்துக் கொண்டும், “உஸ்…’ என, அனல் சுவாசத்தை வெளிவிட்டபடி வரும் சித்ராவை, “”வாக்கா… வா!” என, வாயெல்லாம் பல்லாக வரவேற்றான் நரேன்.

தொடர்ந்து, “வாடா… இப்ப நாலாவது படிக்கிறியா?” என, பெரியவனின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினான். பின், “வாடி… என் செல்லமே!” என, அக்காவின் இடுப்பில் இருக்கும் குழந்தையை வாங்கியபடி, உள்ளே வந்தான் நரேன்.

குழந்தையின் ஜட்டி சொத, சொதவென நனைந்திருந்தது. அதன் கையில் ஈரத்தில் ஊறிப் போயிருக்கும் அரை பிஸ்கட்!

“பஸ்ல இவளோட பெரிய பாடாப் போச்சுடா… என் சேலையைத் தெப்பமா நனைச்சுட்டா!” என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குழந்தை தன் கையிலிருந்த அரை பிஸ்கட்டை நரேனின் வாயில் திணித்தது.

சுதாவுக்கு அருவருப்பாக இருந்தது; குமட்டவும் செய்தது. “எழவு, எதனால ஊறிக் கெடக்கோ? இந்த மனுஷர் வேணாம்ன்னு வாயை இறுக மூடிக்காம, சப்புக் கொட்டீல திங்கிறார்!’

ஈரச் சேலைக்காரி, “விர்’ரெனப் போய் டைனிங் டேபிளில் அமரவும், அவளருகே ஊறிக் கொண்டிருக்கும் குழந்தையை மடியில் வைத்தபடி அமர்ந்து, அதன் அழுக்குப் பரட்டைத் தலையில் முத்தமிட்டுக் கொஞ்சும் நரேனைப் பார்க்க பிடிக்காமல், அரைக் கண்ணை மூடியபடி, இடுப்புக் குழந்தையை முத்தமிட்டபடியே பரிமாறினாள் சுதா.
பந்தி முடிந்ததும், ஸ்மிதாவுக்கு ஊட்டிக் கொண்டே சுதாவும் சாப்பிட்டாள்.

ஹாலில், இரு அசுத்தங்களையும் கொஞ்சிக் கொண்டே, உற்சாகமாக அக்காவுடன் கதை பேசிக் கொண்டிருக்கும் நரேனின் குரல், சுதாவுக்கு நாராசமாக இருந்தது.

மணி, 4:00 – ஐ நெருங்கியும், அரட்டையும், கொஞ்சலும் ஓய்வதாக இல்லை.

“ஸ்மிதா நெனைப்பே இல்லாம, அதுகளையில்ல கொஞ்சிக்கிட்டுக் கெடக்கார்…’ என்ற கோபத்தில், “”நீயும் போய் அப்பாவோட விளையாடு கண்ணு. அம்மா காபி போட்டுட்டு வர்றேன்,” என்று ஸ்மிதாவை, நரேன் அருகே போய் இறக்கி விட்டாள் சுதா.

கிச்சனுக்குள் புகுந்து விட்ட போதிலும், அவள் பார்வை ஸ்மிதா மீதே இருந்தது.

“என்ன இவர், ஸ்மிதா பக்கமே திரும்பக் காணோம்…’

சித்ரா மட்டும் ஒரு தடவை, “என்ன ஸ்மிதா… அத்தையைத் தெரியுதா?” என அவள் கன்னத்தில், லேசாக தட்டுவதைக் கவனித்தாள் சுதா. அதோடு சரி… அதன் பின் ஸ்மிதாவை கவனிக் கவில்லை.

காபியைக் குடித்து, ஏப்பம் விட்டதும், “சரிடா நரேன்… நான் கௌம்புறேன்…” என்று சித்ரா எழுவதைக் கவனித்து, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த சுதா, விரைந்து வந்தாள்.

முதல் வேலையாய், “உம்’மென நின்று கொண்டிருந்த ஸ்மிதாவைத் தூக்கி, ஆசைத் தீரக் கொஞ்சி, பின் முகத்தில் புன்னகையை மலரவிட்டு, “அத்தைக்கு, “பை’ சொல்லுடா கண்ணு!” என்றாள்.

சித்ரா போனதுமே, சுதாவின் முகத்தில் புன்னகை ஓடி ஒளிய, கோபமும், வெறியும் குடியேறியது. வார்த்தைகளை அனலாய் வீசினாள்…

“நானும் ரொம்ப நாளாக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். உங்களுக்கு ஸ்மிதா மேல கொஞ்சமும் பாசமில்லே, பிரியமில்லே. நம்ம குழந்தைங்கிற ஒரு, “இதே’ இல்லே… ஆசையா, பிரியமா நீங்க அவளைக் கொஞ்சி நான் பார்த்ததேயில்லை. ஏங்க… இது நம்ம குழந்தை. அடுத்த வீட்டுப் பிள்ளைககிட்டக் காட்டுற பிரியத்தில, பாதியையாச்சும் நம்ம குழந்தை மேல காட்டுங்க!”

நரேனுக்கு, “சுருக்’கென்றது. அவனது நெற்றிச் சுருக்கங்கள், சற்று யோசிக்கிறான் என்பதை வெளிப்படுத்தின. “நல்லா உறைக்கட்டும்…’ என்று கணைகளை எய்தாள் சுதா…

“அப்ப என்னடான்னா… நம்ம குழந்தையைத் தவிக்க விட்டுட்டு, எதிர்வீட்டுப் பயலோட பந்து விளையாடப் போய்ட்டீங்க. உள்ளயே விளையாடலாம்ன்னு அவனுக்கு ஒரு கேட்ச் போட்டா, இவளுக்கு ஒரு தடவை பந்தை உருட்டி விடலாம்ல… அப்படியென்ன, நம்ம குழந்தையை விட, அடுத்த வீட்டுப் பிள்ளை பெருசாப் போச்சு உங்களுக்கு…

“அக்கா மகளைத் தூக்கி, எறக்க வேண்டியதுதான். அதுக்காக அது திணிக்கிற நனைஞ்ச பிஸ்கட்டைத் திங்கணுமா… சொத, சொதன்னு இருக்க அவளை மடியில வச்சுக்கிட்டுத்தான் சாப்பிடணுமா… தன் மடியில குழந்தையை வச்சு ஊட்டாம, தாய்க்காரி கையை நீட்டி, நீட்டி ஊட்ட, உங்க வேட்டிதானே கறையாகுதுங்கிற நெனைப்புக் கூடவா உங்களுக்கில்லே?”

இப்போது, தான் நடந்து கொண்டது சரியில்லை என புரிந்த போதிலும், “இவ கிட்ட என்ன அதை ஒத்துக்கிறது?’ என்ற எதிர்வினை மனதில் எழ, என்ன காரணம் சொல்லலாம் என, வேக, வேகமாக சிந்தித்தான் நரேன்.

தொடர்ந்து சீறினாள் சுதா…

“முந்தி இருந்தீங்க… குழந்தை ஏக்கத்தில் அக்கா பிள்ளைக, அக்கம், பக்க எதிர்வீட்டுக் குழந்தைகன்னு… இனியும் அப்படியே இருந்தா எப்படி? ஸ்மிதா வந்தப்புறம், உங்க பிரியம் மத்ததுக மேல போகலாமா? இந்த உலகத்தில நமக்குன்னு இருக்கற ஒரே செல்வம், சந்தோஷம் நம்ம குழந்தைதானேங்க… நம்ம குழந்தை மேல பாசமா இருக்க வேணாமா? நம்ம குழந்தை மலங்க, மலங்க முழிச்சுக்கிட்டிருக்கறதைக் கொஞ்சமும் சட்டை பண்ணாம, நீங்க அடுத்ததுகளைக் கொஞ்சுறதும், விளையாடுறதும் உங்களுக்கே நல்லா இருக்கா?”

“கூல் சுதா… கூல்!” என்று நெளிந்தான் நரேன். எனக்கு ஸ்மிதா மேல பாசம் இல்லேன்னு ஒரே போடாப் போட்டுட்டியே… நான் ஸ்மிதாவைக் கொஞ்சுறதை நீ கவனிக்கலேன்னு இதிலிருந்து தெரியுது. இன்னைக்கு ரகு கூட விளையாடினேன்னா, அது நாகரிகம் கருதித்தான். ஆசையாய் விளையாட வந்தவன் கூட, சரியா விளையாடலேன்னு அவனோட அப்பா, அம்மா என்ன தப்பா நெனைச்சுக்குவாங்க.

“சித்ராவோட குழந்தைகளைக் கொஞ்சலேன்னா, அவ என்னைப் பற்றி என்ன நெனைச்சுக்குவா…”தம்பி இப்ப முன்ன மாதிரி இல்லே… ஸ்மிதா வந்ததும் மாறிட்டான்…’ன்னு, நாலு பேர் கிட்டச் சொல்ல மாட்டாளா… அதான், அதுகளைக் கொஞ்சினேன். அவ கூட நம்ம ஸ்மிதா கன்னத்தைத் தட்டி குடுத்தாளே… நீ கவனிக்கல. அதே நாகரிகத்தை நாமளும் காட்ட வேணாமா?”

“பொல்லாத நாகரிகம்!” என்று இறைந்தாள் சுதா.

“அவுக ஒரு தடவை கன்னத்தைத் தட்டினாங்களாம்… இவர், மூணு மணி நேரம் அதுக கூடவே உருண்டாராம்… தெரிஞ்சுக்கங்க, எந்த அப்பாவும், தன் குழந்தை ஏங்கிக் கெடக்கட்டும்ன்னு விட்டுட்டு அடுத்ததுங்களைக் கொஞ்சிக்கிட்டு இருக்க மாட்டாங்க… தன் குழந்தையை அணைச்சபடியேதான் அடுத்ததுகளை ஒப்புக்காக லேசுபாசாக் கொஞ்சுவாங்க!”

அவளது பேச்சில் இருக்கும் நியாயம், அவனை ஊசி போல் குத்திய போதும், அதை வெளிப்படுத்தாது, புரியாதவளுக்கு விளக்கும் பாவனையில் அறிவுறை போல் சொன்னான் நரேன்…

“எல்லாக் குழந்தைகளும் ஒண்ணுதான்னு நாம நெனைக்கணும் சுதா. நம்ம குழந்தைக்காக அடுத்ததுகளை ஒதுக்கக் கூடாது; குழந்தைகளில் எல்லாம் பேதம் பாக்கக் கூடாது!”

உடனேயே அனல் பறந்தது…

“என்ன… எல்லாக் குழந்தைகளும் ஒண்ணா… அப்படின்னா, நீங்க ஒரு அப்பாவே இல்லே; குழந்தைகள் காப்பக, “கிரைச்’ மேனேஜர்… அனாதை இல்ல உரிமையாளர். அவங்களுக்குத்தான் அவங்க கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒண்ணு. ஆனால், ஒரு அப்பாவுக்கு, தன் குழந்தைதான் எல்லாக் குழந்தைகளையும் விட ஒசத்தி!”

தன் வாதங்கள் ஒன்றன் பின், ஒன்றாய் அடிபட்டுச் சிதைந்து போவதைக் கண்டு, வெட்கத்திலும், தாழ்வுணர்ச்சியிலும் ஒரு நிமிடம் குமைந்து, பின் எப்படியேனும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில், துருப்புச் சீட்டை எடுத்தான் நரேன்…

“அக்கா குழந்தையும், நம்ம குழந்தையும் எனக்கு ஒண்ணுதான் சுதா. நீயும் அப்படியே நெனைச்சு, அக்கா குழந்தையைக் கொஞ்சிருக்கணும்… ஈரமுன்னு அசூயைப்படாம, தூக்கி இருக்கணும்… நெனைச்சுப் பார்… அக்கா அன்னைக்குச் சம்மதிச்சிருந்தா, நாம அவளோட இந்தக் குழந்தையைத்தானே தத்து எடுத்திருப்போம்; அனாதை விடுதிகளுக்கு அலைஞ்சு, இந்த ஸ்மிதாவைக் கொண்டாந்திருக்க மாட்டோம்ல?”
அவ்வளவு தான் —

“அம்மா…” என வீரிட்டபடி, நெஞ்சைப் பிடித்து, அப்படியே குழந்தையுடன் சாய்ந்தாள் சுதா.

துருப்புச் சீட்டு, அம்பாய்ச் சீறி, அவள் நெஞ்சைக் கிழித்து விட்டது பாவம்!

“சாய்ந்து விட்டாளே…’ என்ற பதற்றம் இருந்த போதும், அதை வெளிக்காட்டாது, நஞ்சையும் உமிழ்ந்தான் நரேன்…

“அதான், எனக்கும் எல்லா குழந்தைகள் மேலயும் பிரியம். அதுகளையும் நாம தத்தெடுத்திருக்க வாய்ப்பிருந்துச்சுல்ல?”

குழந்தை ஸ்மிதா கண்களில் பயம் கவ்வி, விழுந்து கிடக்கும் அம்மாவின் கன்னத்தை தொட்டு, தொட்டு, “”ம்மா… ம்மா…” என, மழலையில் அழைத்தாள்; குழந்தையின் குரலில் பதற்றம் படபடத்தது.

கண்கள் மேலேற, கிறங்கியபடி முணுமுணுத்தாள் சுதா. “”என்னைக்கு தத்தெடுத்தமோ, அன்னைக்கிலிருந்தே இது நம்ம குழந்தைதான்… நாம பெத்த குழந்தைதான்… ஆனா, உங்க மனசில அப்படி ஒரு பாச நெனைப்பு இல்லேங்கிறது புரிஞ்சு போச்சு. இவ தத்துக் குழந்தைதானேங்கிற இழிவான நெனைப்புதான், உங்க உடம்பு பூரா இருக்கு. இந்த கேவலமான நெனைப்பு இருக்கிற வரை, நீங்க ஒரு அப்பாவே இல்லை… என் தலை சுத்துது… நெஞ்சு வெடிச்சுக்கிட்டே இருக்கு. நான் இப்படியே செத்துட்டா, தயவு செஞ்சு நீங்க இவளை வளர்க்க வேணாம். மறுபடியும் அதே அனாதை இல்லத்திலேயே சேத்துடுங்க. பாவம், அங்கயாவது கொஞ்சத்துக்குக் கொஞ்சம் சந்தோஷமா இருப்பா எங்கண்ணு!”

“நான் இப்படியே செத்துட்டா…’ என்ற சுதாவின் வார்த்தைகள், நரேனை மூர்க்கமாய் தாக்கின; அவனது கை, கால்கள் நடுங்கின. நிலைமையின் கடுமை, அப்போதுதான் அவனுக்கு புரிந்தது.

தத்து எடுத்த போது இருந்த ஆர்வமும், பாசமும் நாளாக, நாளாகத் தேய்ந்து விட்ட கேவல நிலையை எண்ணித் திகைத்தான்; வெட்கப்பட்டான்.

தண்ணீருக்குள் அமிழ்த்தப்பட்டவன், உயிருக்காக எப்படி திமிறி முயல்வானோ, அதே அவசர கதியில், தன் மன மாசைத் துடைக்க முயன்றான் நரேன்.

தான் ஒரு நல்ல அப்பா இல்லைதானோ என்ற உறுத்தல், அவன் மனதை மலையாய் அழுத்த, அருகே பரிதாபமாகக் கலங்கி நிற்கும் ஸ்மிதாவைக் கண்கள் பனிக்கப் பார்த்தான் நரேன். குழந்தையின் ஏக்கப் பார்வை, அவன் உடல் முழுவதையும் அப்படியே உலுக்கியது.

வெறி கொண்டவன் போல், ஸ்மிதாவை அள்ளி எடுத்து, அவள் கன்னங்களில் முத்தங்களைப் பதித்தான்…

“இது, என் குழந்தைதான்… என் உசுருதான். முக ஜாடையும், கலரும் ஒத்து வர்றாப்புல தேடி, தேடி தேர்ந்தெடுத்த இந்த ஸ்மிதா, என் குழந்தைதான். சுதா, என் கண்ணைத் திறந்துட்டா. இனி, எப்பவும் எனக்கு என் குழந்தை ஸ்மிதாதான் ஒசத்தி; மத்ததுகல்லாம் அடுத்தபட்சம்தான்.”

மயங்கிக் கொண்டிருக்கும் தன்னைக் கவனியாது, குழந்தையின் கன்னங்களில் மாறி, மாறி முத்தங்களை பதிக்கும் நரேனை, முனைந்து விழிகளைக் கீழிறக்கி அதிசயத்துடன் பார்த்தாள் சுதா. அந்த அதிசயம், அவள் உடலில் புது ரத்தத்தைப் பாய்ச்சியது.

“அப்பாடா… நல்ல அப்பாவாயிட்டார்!” என்று புன்னகை ததும்ப முணுமுணுத்தவாறே மெல்ல எழுந்தாள் சுதா.

“நல்ல அப்பா’ பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில், மீண்டும், மீண்டும் பாசத்துடன் முத்தங்களைப் பதித்து, குழந்தையைத் திக்குமுக்காட வைத்தான் நரேன்!

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *