இனி எல்லாம் சுகமே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 3,228 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4

1

சரோஜா தூங்கிக் கொண்டே இருக்கும் இரட்டைக் குழந்தைகளான தன் பேத்திகளை மிகுந்த துயரத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள். சௌந்தர்யாவும் லாவண்யாவும் அழுது அழுது கன்னங்களில் கண்ணீர் கோடுகள் இருந்தது. ஆழ்ந்த தூக்கத்திலும் விம்மல் அவ்வப்போது வெடித்துக் கொண்டிருந்தது.

தாயை இழந்த குழந்தைகளை ப் பார்த்து வயிறு கலங்கி இரவு முழுவதும் தூங்காமல், தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

அந்த பெரிய பங்களாவின் கேட்டு பூட்ட படாமல் இருந்தது. வீட்டின் கதவுகளும் மூடப்படாமல் இருந்தன. ஓடிப்போன ஓடுகாலியான தன் மூத்த மகன் வேங்கடத்தை நினைத்து வயிறு எரிந்தது. பாவி மகன் எப்படி சந்தோஷமாக இருந்த குடும்பத்தை ஒரு நொடியில் பாதாளத்தில் தள்ளி விட்டான். மனம் ஆறவே இல்லை சரோஜாவுக்கு.

அந்த பெரிய ஹாலில் ஒரு புறத்தில் இறந்துபோன தன் மூத்த மருமகளின் அண்ணன் கோபால் உறக்கமின்றி அசையாமல் படுத்துக் கொண்டிருந்தான். அவனது இரண்டு பெண் குழந்தைகளும் அவன் மனைவி ரமாவிடம் அவளை அணைத்தபடி இருபக்கததிலும் படுத்து தூங்கி க கொண்டிருந்தனர்.

எப்படி இருந்த குடும்பம ? ஒரே வாரத்தில் அலங்கோலமாகி விட்டது. சின்னாபின்னமாகி விட்டது.

பெருமூச்சுடன் அவள் கணவர் பெரியசாமி என்ன செய்கிறார் என திரும்பிப்பார்த்தாள். பெரியசாமி பெரும் துக்கத்துடன் தூங்காமல் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். வெறுமையாக வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்து அவளுக்கு மிகவும் துக்கமாக போனது.

நன்றாக பொழுது விடிந்த பின்னர் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கவே திறப்பதற்கு எழுந்திருந்தாள். அதற்குள் யாரோ வெளியே இருந்து கேட்டை திறக்க வண்டி உள்ளே வந்தது. அதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஒருசேர வர ஆரம்பித்தனர்.

சரோஜாவின் இளைய மகன் குமரனும் அவனுடன் வேலை செய்யும் நண்பர்களான சுரேஷும் மிருதுளும் உள்ளே வந்தனர். ஆம்புலன்சில் இருந்து சரோஜாவின் மூத்த மருமகள் நந்தினியின் உடலை அந்த பெரிய ஹாலில் நடுவாக இறக்கி வைத்தனர்.

வீட்டில் கேட்ட துக்க ஒலிகளால் கண்விழித்த சௌந்தர்யாவும் லாவண்யாவும் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தனர். கோபாலன் ஓடிவந்து ஒரு குழந்தையை சௌந்தர்யாவை தூக்கி அணைக்க, பெரியசாமி, லாவண்யாவை தன் தோளில் தூக்கி தட்டிக்கொடுத்தார்..ஆக வேண்டிய காரியங்களை சீக்கிரமாக கவனிக்கலாயினர் குமரனும் அவனது நண்பர்களும்.

அன்று மாலையே நந்தினியின் காரியங்கள் யாவும் முடிந்தன. கோபாலன் தனது குடும்பத்தினருடன் வீடு செல்லும்போது தன் தங்கை குழந்தைகளை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்து விட்டு கிளம்பினான். சரோஜாவும் பெரியசாமியும் குமரனும் குழந்தைகள் சௌந்தர்யா லாவண்யாவும் மட்டும் இருந்தனர். வீடு காலி ஆகிவிட்டது சுரேஷும் மிருதுளும் கூட தத்தம் வீடு செல்ல கிளம்பும்போது அந்த பங்களாவின் வெளியே ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பிரகாஷம் சுபாவும் இறங்கி வீட்டிற்குள் வரவே குமரன் அவர்களை,” வாங்க அத்தை, வாங்க மாமா என்று முறைவைத்து அழைத்தான்.நண்பர்கள் சுரேஷ் மிருதுளையும் சிறிது நேரம் கழித்து வீடு செல்லலாம் என்று சைகை மூலம் உணர்த்தினான்.

குமரன் உறவுமுறையில் அழைத்ததனை அவர்கள் விரும்பாதது போல முகத்தை வைத்துக் கொண்டு இருந்தனர். வீட்டினுள் நுழைந்ததும் தாங்கள் கொண்டு வந்திருந்த பையை சரோஜாவிடம் ஒப்புக் கொடுத்தனர். பின்னர் தங்கள் “மகள் மேகலாவை குமரனுக்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பமாக இல்லை, அதனால் நிச்சயம் செய்த போது இவர்கள் அளித்த பட்டுப்புடவையும் 10 பவுன் காசு மாலை ஆரத்தையும் தாங்கள் திருப்பிக் கொடுக்க வந்தோம் “என்று கூறினர். சரோஜாவின் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பிப் பாராமல் சென்று காரில் ஏறி வெளியேறினார்கள்.

சரோஜா திக்பிரமை அடைந்து பேசவாய் இன்றி இருந்தாள். பெரியசாமி மட்டும் மெதுவாக பேசினார். “ பின்னே ! தகப்பன் ஓடுகாலி, தாய் தெய்வமாகி விட்டாள். தாய் தந்தையற்ற சிறு குழந்தைகள். அவர்களை கவனிக்க வேண்டும். திருமணம் ஆகி வரும் பொழுது இந்த சூழ்நிலையை எந்தப் பெண்தான் விரும்புவாள் ?

குமரனின் நண்பன் சுரேஷ் குறுக்கிட்டான். “பரவாயில்லை அப்பா ! அந்தப் பெண்ணுக்கு குமரனை கணவனாக அடைய கொடுத்து வைக்கவில்லை. இல்லையென்றால் நிச்சயதார்த்தம் நடந்து திருமணத்திற்கு மூன்று மாதங்கள் இருக்கும் போது நிறுத்துவார்களா ? திருமணம் ஒரு சவுபாக்கியம். அது அமைவது எவ்வளவு பெரிய விஷயம் ? அமைந்த திருமணத்தை நிறுத்துவார்களா ? குமரனுக்கு நல்ல குணவதியான பெண் கிடைப்பாள். இரட்டைக் குழந்தைகளையும் தன் குழந்தைகளாக பாவிக்கும் ஒரு நல்ல பெண் கிடைப்பாள் “ என்றான் ஆறுதலாக.

“சரி, அடுத்து என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டான் மிருதுள். குமரனும் “ஒரு பதினைந்து நாட்கள் லீவு எடுத்துக் கொள்கிறேன். அம்மாவும் அப்பாவும் வயதானவர்கள். வயதானவர்கள. அண்ணியின் இறப்பு ஒரு பெரிய இழப்பு. குழந்தைகளை சமாதான படுத்த வேண்டும். பிறகு பார்க்கலாம். எதுவும் நமது கையில் இல்லை கடவுள் விட்ட வழி “ என்றான்.

அதன் பின்னர் நண்பர்கள் இருவரும் தத்தம் வீடு சென்றனர். அந்த பெரிய வீடு அமைதியாக இருந்தது. குழந்தைகளுக்கு பால் காய்ச்சினாள் சரோஜா. குமரனும் அருகில் உள்ள ஓட்டலில் இரவு உணவு கொண்டு தரும்படி போன் செய்தான். இரவு உறக்கம் யாருக்கும் இல்லை. அழுத குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.

இரவு இரண்டு மணிக்கு களைத்துப்போய் சௌந்தர்யாவும் லாவண்யாவும் உறங்கலாயினர்.

ஹாலில் மாட்டி இருந்த வேங்கடவன் நந்தினியின் கல்யாண போட்டோவை பார்த்து பெரியசாமி “ அந்த படத்தை முதலில் கழட்டி எறி. எனக்கு அந்த ஓடுகாலியைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்றார்.

குமரன் ஒரு ஸ்டூலின் மேலேறி அந்தப் படத்தை கழற்றினான். அதில் ஒரு தேவதை போல் இருந்த அண்ணி நந்தினியை பார்த்து மனம் கலங்கினான். பின் பெரிய பேப்பரில் படத்தை நன்றாக சுற்றி பரண் மீது வைத்து பத்திரப்படுத்தனான். “குழந்தைகள் தூங்கும் போது நாமும் தூங்கி விடலாம் “ என்று கூறினான்.

பெரியசாமி ஹாலில் உள்ள கட்டிலில் படுத்தார். சரோஜா கட்டிலின் கீழ் பாய் விரித்து படுத்தாள். குமரனும் பெட் ரூமில் உள்ள கட்டிலில் குழந்தைகள் அருகில் படுத்தான். ஒருவார மன உளைச்சல் அலைச்சல் காரணமாக படுத்ததும் உறங்கிப் போனான்.

2

மார்பில் பூமாலை விழுந்தது போல தோன்ற கண்விழித்தான் குமரன். சௌந்தர்யா அவன் மார்பு மீது ஏறி தலையை வைத்து படுத்து திரும்பவும் உறங்கிப் போனாள். கண்விழித்த குமரன் தூங்கும் குழந்தைக்கு தொந்தரவு ஏற்படாதபடி அசையாமல் படுத்திருந்தான். அருகில் லாவண்யாவும் உறங்கிக்கொண்டிருந்தாள்.

மணியை பார்த்தால் எட்டு ஆகி இருந்தது.அம்மா சரோஜாவும் அப்போதுதான் எழுந்து குமரனை வந்து பார்த்தாள். “ குழந்தைக்கு பால் காய்ச்சிக் கொண்டு வருகிறேன் காப்பி போட்டுத் தருகிறேன் “ என்று கூறிச் சென்றார். படுத்து இருந்த அவனுக்கு போன வாரம் வரை நம் வீடு எத்தனை சந்தோஷமாக இருந்தது. இப்படி ஒரே வாரத்திலேயே வீடு கலகலத்துப் போனது என்ற நினைப்பாக இருந்தது.

சரோஜா, பெரியசாமி தம்பதியினருக்கு இரண்டு பையன்கள். பெரியவன் வேங்கடவன். இளையவன் குமரன்.

குமரன் குழந்தையிலிருந்தே படுசுட்டி. நன்றாக பாடம் படிப்பான். இன்ஜினியரிங் படித்து, கேம்பஸ் இன்டர்வியூவில் நல்ல கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து விட்டான். அதனால் தனி வீடு பெரிய பங்களாவை வாங்கி, பூர்வீக வீட்டில் குடியிருந்த அம்மா அப்பா அண்ணன் அண்ணி குழந்தைகள் புதிய வீட்டிற்கு குடி இருக்க வைத்தான்.

கீழே பெரிய ஹால் கிச்சன் ஒரு பெட் ரூம் இருந்தது மாடியில் பெரிய ஹால், 2 பெட் ரூம்கள் இருந்தன. வீட்டினுள்ளே இருந்தே மாடி செல்லும் படிகள் அமைந்திருந்தன.

அண்ணன் அண்ணியை மாடியிலும், குமரன் அப்பா அம்மா கீழ் வீட்டிலும் ஆக சந்தோஷமாக வாழ்ந்தனர். இவர்கள் மீது விருப்பம் கொண்டு பிரகாஷும் சுபாவும் தங்கள் பெண் மேகலாவை குமரனுக்கு திருமணம் செய்து கொடுக்க தானாக முன்வந்தனர். மிகவும் பணக்கார இடமாக இருந்ததால் குமரனுக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் நல்ல இடம் என்று பெற்றோர் கூறியதனால் சம்மதம் கூறினான்.

ஒரு மிகப்பெரிய சத்திரத்தில் மிகவும் ஆடம்பரமாக குமரனுக்கும் மேகலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் அனைவரும் பிரகாஷுக்கு பழக்கம். ஆதலால் மிகவும் சிறப்பாக நடந்தது.

இப்போது அவர்கள் திருமணத்தில் விருப்பம் இல்லை எனக் கூறி இவர்கள் மேகலாவுக்கு எடுத்துக் கொடுத்து இருந்த 50 ஆயிரம் ரூபாய் பெறுமான நிச்சயதார்த்த புடவையும் 10 பவுன் காசு மாலை ஆரத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டனர். குமரனுக்கு அண்ணனை நினைத்த போது மிகவும் வருத்தமாக இருந்தது. அவன் ஏன் இப்படி செய்தான் ? நிலையான புத்தி இல்லாமல் ஏன் இப்படி இருக்கிறான்? தன்னுடைய வாழ்க்கையை ஏன் இப்படிக் கெடுத்துக் கொண்டான் ? என்று பலவாறு சிந்தனை செய்தான்.

வேங்கடவனுக்கு சிறுவயது முதலே விளையாட்டு புத்தி தான். படிப்பில் அக்கறை சிறிதும் இல்லை. பிளஸ்-2 படித்து பாஸ் செய்யவே மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டான். அதன் பிறகு பத்தாவது மார்க் வைத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க பாலிடெக்னிக் சென்ற உடன் படித்த நந்தினி மீது காதல் வயப்பட்டான்.

நந்தினி சாதாரண குடும்பத்துப் பெண். தாய் தந்தை இல்லாததால் அண்ணனின் கவனிப்பில் வளர்ந்து வந்தாள். அவள் அண்ணன் கோபாலன் நல்ல குடும்ப உணர்வு உடையவன். அவனுக்கு ஏற்ற குணவதி ரமா. அவர்களுக்கு ஆறாவது படிக்கும் மற்றும் மூன்றாவது படிக்கும் 2 பெண் குழந்தைகள் இப்போது இருக்கிறார்கள்.

வேங்கடவன் நந்தினி யைப் படிக்க விடாமல் காதல் என்ற பெயரில் துரத்தினான். அதனால் அவள் அண்ணன் கோபாலன் இவர்கள் வீட்டுக்கு வந்து தங்கைக்கு உபத்திரவம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டான்.

பெரியசாமி வேங்கடவனை கண்டித்தார் ஆனால் அவனோ நந்தினியைத் தான் திருமணம் செய்வேன் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளவும் தயங்க மாட்டேன் என்றான்.

அவனுக்கு பிடித்த பெண்ணையே திருமணம் செய்து வைக்கலாம் என்று குமரன் கூறினான். பெரியசாமியும் சற்று மனம் தணிந்து கோபாலன் வீட்டுக்கு சென்று பெண் கேட்டார். கோபாலனுக்கு தங்கை படிக்கவேண்டும் மேலும் இப்போது திருமணம் செய்து வைக்கும் பணவசதி இல்லை என்று கூறினான்.

ஆனால் பெரியசாமியும் சரோஜாவும் தங்கள் செலவிலேயே மகன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற குல வழக்கப்படி திருமணச் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். 10 பவுன் நகைகள் போட்டு நந்தினியை திருமணம் செய்வித்தான் கோபாலன்.

குமரன் குடும்பத்தினர் திருமணச் செலவுகளை ஏற்றுக்கொண்டனர் 10 பவுன் நகைகள் போட்டு நந்தினியை திருமணம் செய்ய தாரை வார்த்துக் கொடுத்தனர் கோபாலனும் ரமாவும். நந்தினியை படிக்கவைக்க ஒப்புக்கொண்டனர் வேங்கடவனின் பெற்றோர்கள். ஆனால் அவள் குழந்தை உண்டாகவும் இரட்டைக் குழந்தைகள் என்று அறிந்து ஓய்வாக இருக்க வேண்டி வந்ததால் அவள் படிப்பும் நின்றது. அவள் படிக்க போகாததினால் வேங்கடவனுடைய படிப்பும் நின்றது.

அவனும் படிக்கப் போக வில்லை. பின் சும்மா இருக்காமல் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலைக்குச் சென்றான். நந்தினிக்கு ரோஜாப்பூ செண்டுகளைப் போல சௌந்தர்யாவும் லாவண்யாவும் பிறந்தனர். பெண் குழந்தை இல்லாத வீட்டில் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் குடும்பத்தினர் ஆனந்தமானார்கள்.

குழந்தைகள் வளர்ந்து இரண்டு வயது ஆனதும் குமரன் படித்து வேலைக்கு வந்தான். ஒரு வருடத்திலேயே புதிய வீடு வாங்கினான். புதிய வீட்டிற்கு குடிவந்ததும் தான் பூர்வீக வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தனர்.

ஆனால் வேங்கடவன் தனக்கு ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வைத்து தர வேண்டும் என்று அடம் செய்தான். தம்பி நல்ல உத்தியோகம் செல்வதும் அவன் மனதில் சற்று பொறாமையாக மாறியது. அதனால் பூர்வீக வீட்டில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்துக் கொடுத்தார்கள்.

அவனுக்கு உதவியாக துர்காவை வேலைக்கு வைத்துக் கொண்டான். துர்காவின் கணவன் நாகராஜன் ஆட்டோ ஓட்டுபவன். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். ஒரு பெண் எட்டாவது, அடுத்த பெண் ஆறாவதும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

துர்காவும் குடும்ப வருமானத்தை பெருக்க வேங்கடவன் உடன் சேர்ந்து பணியாற்ற வந்தாள். சரோஜா உடனும் பெரியசாமி உடனும் அம்மா அப்பா என நன்றாக பழகுவாள். வேங்கடவனை விட வயதில் மூத்தவள் எனவே இவர்களுக்கு வேறு விதமாக ஒன்றும் தெரியவில்லை.

குமரனுக்கும் பெண் அமைந்து நிச்சயமானது. அப்போது தம்பிக்கு பணக்கார இடம் சம்பந்தம் என்பது பொறாமையாக இருந்தது. ஒரு நாள் வேலை விஷயமாக பெங்களூர் போகிறேன் என்று கூறி போனான்.

துர்காவை தேடி அவள் கணவன் நாகராஜன் வீடு தேடி வந்த போது தான் இருவரும் சேர்ந்து ஊரை விட்டுப் போனது தெரிந்தது. பூர்வீக வீட்டிற்கு போய் பார்த்தால் கம்ப்யூட்டர் சென்டர் வழக்கம்போல நடந்துகொண்டிருந்தது விசாரித்தால் அதனை ஒரு கோடி ரூபாய்க்கு விற்று விட்ட விவரம் அறிந்தார்கள்.

நந்தினி மிகவும் உடைந்து போனாள். மயக்கமான அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அவள் மிகவும் பலவீனமாக இருப்பதாக டாக்டர் கூறினார். அதனால் ஐசியூவில் சேர்த்து நேற்று மதியம் தன் இறுதி மூச்சை விட்டாள். எல்லாவித பார்மாலிட்டியும் முடித்து பின்னர் வீட்டிற்கு உடலை கொண்டுவர மறுநாள் காலை ஆகிவிட்டது.

இப்போது பூர்வீக வீடு போய், வேங்கடவன் துர்கா உடன் ஓடிப்போன கெட்ட பெயரும் சேர்ந்து விட்டது. நந்தினியும் கணவன் பழக்கவழக்கம் மாறியதை உணர்ந்து இருந்திருப்பாள். மனதிலேயே வைத்துக் கொண்டு மருகி இருந்திருப்பாள். மாமியார் மாமனாரிடம் கூட கூறவில்லை. அண்ணி மீது பெரிய மதிப்பும் வைத்திருந்த குமரனிடம் கூட ஒரு வார்த்தை கூறி தெரியப்படுத்தவில்லை. உத்தமி தன் உயிரை விட்டு விட்டாள். குழந்தைகள் சௌந்தர்யாவும் லாவண்யாவும் ஒருசேர பெற்றோரின் அன்பினை இழந்துவிட்டார்கள். கண்ணில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டான் குமரன். அவனுக்கு அவனது திருமணம் நின்றது குறித்து வருத்தம் ஒன்றும் இல்லை. ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை இருந்தது.

3

அம்மா பால் காய்ச்சியதும் எழுந்து குழந்தைகளுக்கு பல் துலக்கி பால் கொடுத்தார்கள். பெரியசாமியும் குமரனும் காபி அருந்தியதும் சரோஜாவும் தனது காபியை குடித்தாள். குமரன் ஹோட்டலில் இட்லி க்கு போன் செய்தான். காலை உணவு, ஹோட்டல் உணவு ஒருவருக்கும் விருப்பமாக இல்லை.

மதியம் குழந்தைகளை குமரனும் பெரியசாமியும் பார்த்துக்கொள்ள, சரோஜா சாதம் பருப்பு ரசம் அப்பளம் ஊறுகாய் உடன் மதிய உணவு எளிமையாக இருந்தது. என்றாலும் வீட்டு உணவு பசிக்கு சாப்பிட முடிந்தது. ஆனால் இதுவரை நந்தினி குடும்பத்திற்கு தேவையான சமையலை கவனித்துக்கொண்டிருந்தாள். அதனால் சமையல் வேலை சரோஜாவுக்கு கிடையாது. ஆனால் இப்போது சரோஜா குடும்பத்திற்கு தேவையான சமையலை செய்வதற்கு சிரமப்பட்டாள். ஹோட்டல் உணவும் ஒத்துக்கொள்ளவில்லை.

இதனை கவனித்த குமரன் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம். காலை வந்து விட்டு மாலை வீட்டிற்கு போவது போல ஆள் பார்க்க சொன்னான். இந்த ஒரு வாரம் விடுமுறை அதற்குள் ஆள் பார்த்து விடலாம்.

சரோஜாவும் அடுத்தடுத்த வீடுகளில் சொல்லி வைத்தாள். இரண்டு நாட்களில் ஒரு பெண்ணை அடுத்த வீட்டில் வேலை பார்க்கும் பருவதம் அழைத்து வந்தாள். அந்தப் பெண்ணிற்கு இருபது வயது இருக்கும். நிறைய பவுடர் போட்டு கண்மை அடர்த்தியாக இட்டு இருந்தாள். பெயர் பானு. கருத்த நிறம். எலும்பும் தோலுமாக இருந்தாள்.

“நன்றாக சமைப்பாயா?” எனக் கேட்டாள் சரோஜா. பருவதம் “நீங்கள் சொல்லும் வேலைகளை நன்றாக செய்வாள் அம்மா” என்றாள்.

15000 சம்பளம் பேசி பானுவை வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை. அதன் பின்பு அவள் வீட்டிற்கு சென்று விடலாம். வேலைக்கு ஆள் அமைந்ததும் குமரனுக்கு ரொம்ப நிம்மதி அம்மாவும் அப்பாவும் குழந்தைகளை பார்த்துக் கொண்டாலும் வீட்டுவேலைகளை சமையலை பானு பார்த்துக் கொள்வாள் தானும் நிம்மதியாக வேலைக்கு போய் வரலாம் ஓரளவு சமாளித்து கொள்ளலாம் என்று நிம்மதி அடைந்தான்.

ஒரு வாரம் லீவு முடிந்து மறுநாள் வேலைக்கு செல்ல தயாரானான் சுரேஷும் மிருதுளும் அடிக்கடி போன் செய்து விவரங்களைக் கேட்டுக் கொண்டனர். மறுநாள் குமரனுக்கும் சேர்த்து நண்பர்கள் இருவரும் உணவு கொண்டு வந்திருந்தனர். குமரனுக்கு பழையபடி ஆபீஸ் வந்ததும் ரொம்ப நிம்மதியாக இருந்தது.

பானுவின் சமையல் திருப்தியாக இல்லை. நந்தினியின் ருசியான சமையல் சாப்பிட்ட நாவிற்கு பானுவின் சமையல் ரொம்ப மோசமாக இருந்தது. குழந்தைகள் தயிர்சாதம் மட்டுமே விரும்பி சாப்பிட்டனர்.

ஒருநாள் காலை 10 மணிக்கு பானு துணிகளைத் துவைப்பதற்காக மிஷினில் ஒவ்வொன்றாக போட்டுக் கொண்டு இருந்தாள். அப்போது குமரனின் சட்டையை எடுத்த போது அதனை வாசனை பார்த்து நுகர்ந்து நெஞ்சோடு அணைத்து அதன் பின்னர் மெஷினுக்குள் போட்டாள். இதனை பானு அறியாமல் சரோஜா பார்த்துவிட்டாள். அவளுக்கு அது பிடிக்கவில்லை.

குமரன் காலையில் ஆபீஸ் கிளம்பும் முன் சாப்பிட உட்காருவான். டைனிங் டேபிளில் அவன் அருகில் மிக நெருங்கி நின்று டிபன் பரிமாறினாள் பானு. அது குமரனுக்கு பிடிக்கவில்லை. அதனால் அம்மாவை அழைத்து “நீங்களே எனக்கு பரிமாறுங்கள் “ என்பான்.

பானுவின் சமையல் பிடிக்கவில்லை. ஹோட்டல் உணவும் ஒத்துக்கொள்ளவில்லை. சாப்பாடு பெரிய பிரச்சினையாகவே இருந்தது. எப்படியோ ஒரு வாரம் ஓடியது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் மாடியில் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் குமரன். கொடியில் காய்ந்த துணிகளை சேகரித்துக் கொண்டு இருந்தாள் பானு. கொய்யா மரத்தில் இருந்த பழம் ஒன்று கீழே விழுந்தது. மூன்று சக்கர சைக்கிளில் உட்கார்ந்து இருந்த சவுந்தர்யா ஓடிப் போய் எடுத்தாள். அப்போது பானு அவள் கையிலிருந்த பழத்தை பிடுங்கி சாப்பிடாள்.

கோபமான குழந்தை சௌந்தர்யா தன் பிஞ்சு கரத்தினால் பானுவை அடித்தாள். ஆத்திரமடைந்த பானு சௌந்தர்யாவை பிடித்துத் தள்ள, அவள் அருகில் நின்றிருந்த சைக்கிளின் மீது விழுந்தாள். அடிபட்டு வலியினால் உரக்க அழுதாள். இதனை பார்த்துக் கொண்டிருந்த குமரன் அவசரமாக படியிறங்கி கீழே சென்றான். அதற்குள் சரோஜா வந்து குழந்தையை தூக்கிக் கொண்டாள்.

அவளிடம் பானு குழந்தை சைக்கிள் ஓட்டும் போது தவறி கீழே விழுந்து விட்டாள் என்று கூறிக்கொண்டு இருந்தாள். வேகமாக கீழே இறங்கி வந்த குமரன் யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள டாக்டரிடம் ஓடினான். தாடையில் இரண்டு தையல் போடப்பட்டது. அழும் குழந்தையை தட்டிக் கொடுத்து தோளில் போட்டு அணைத்தபடி வீடு வந்து சேர்ந்தான்.

பானு இரவு சாப்பாட்டிற்கு சப்பாத்தி செய்து கொண்டிருந்தாள். வாசலிலேயே குமரனை எதிர்பார்த்தபடி சரோஜா நின்று இருந்தாள். குமரன் அம்மாவிடம் “பானுவை உடனடியாக நிறுத்தி விடுங்கள். என்ன பணம் என்று பார்த்து கொடுத்து அனுப்பி விடுங்கள்” என்றான்.

சரோஜா ஒன்றுமே பேசவில்லை அவளும் பானு குமரனின் சட்டையை முகர்ந்து பார்த்து முத்தம் கொடுத்ததை பார்த்ததிலிருந்து அவளுக்கும் பானு அங்கு தொடர்ந்து இருப்பது பிடிக்கவில்லை.

அதனால் பானுவிடம் ஊருக்கு செல்ல இருப்பதாகவும் அதனால் இப்போது வேண்டாம் என்று உடனே கணக்கை முடித்து அனுப்பி வைத்து விட்டாள்.

மாலை 6 மணி அளவில் கோபாலன் குடும்பத்துடன் வந்தான் குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிக் கொண்டு வந்தான் குழந்தைகளுடன் சந்தோஷமாக நேரத்தை கழித்தார்கள். குமரனும் அவர்கள் திரும்பி வீடு செல்லும் போது கொஞ்சம் இனிப்புகள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைத்தான். அதனால் உமாவிடம் “அக்கா நான் கொஞ்சம் வெளியே சென்று வருகிறேன் நான் வந்த பிறகு நீங்கள் வீட்டிற்கு செல்லலாம்” என்றபடி தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்..

அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள அடையார் ஆனந்த பவன் சென்று இனிப்புகளை வாங்கி கொண்டு திரும்பினான். அப்போது ஒருவர் இனிப்புகள் வாங்க ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார். ஆட்டோகாரர் வெயிட் செய்து கொண்டு இருந்தான். குமரனை பார்த்ததும் தன் தலையைத் திருப்பிக்கொண்டான் குமரனுக்கு புரிந்துவிட்டது.

அந்த ஆட்டோ டிரைவர் வேங்கடவன் உடன் ஓடிப்போன துர்காவின் கணவன் நாகராஜன். ஒரு நிமிஷம் அவனுக்கு திக்கென்று இருந்தது. என்றாலும் வலியப்போய் பேசினான். “சார் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் எங்களால் பாதிப்பு உங்களுக்கு ஏற்பட்டு விட்டது. தயவு செய்து எங்கள் குடும்பத்தை மன்னித்துவிடுங்கள் “என்றபடி மிகவும் ஆதரவாக நாகராஜன் இரு கைகளையும் பற்றிக்கொண்டான்.

நாகராஜனும் அந்த அன்பினை தாங்க இயலாமல் உடைந்து போனான் கண்களில் நீர் வழிந்தது.

“நீங்கள் என்ன செய்ய முடியும்? நான் என் மனைவி இறந்து போய்விட்டாள் என்று அனைவரிடமும் கூறி விட்டேன். பெரிய பெண் எட்டாவது படிக்கிறாள். அடுத்த பெண் ஆறாவது படிக்கிறாள். நான் எங்கள் ஊரில் உள்ள கணவனை இழந்த என் தங்கையையும் அவள் மகனையும் அழைத்து என்னுடன் வைத்துக் கொண்டேன்.

தங்கை மகன் மகேஷ் பத்தாவது படிக்கிறான் அவன் பெரியவனானதும் பெரிய பெண்ணை அவனுக்கே மணம் செய்து கொடுத்து விடலாம் என்று இருக்கிறேன். இரண்டு பெண்களையும் எனது தங்கை பத்திரமாக பார்த்துக் கொள்கிறாள். மூன்று குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டேன். ஏதோ கடவுள் கிருபையினால் பழசை மறந்து வாழ்கிறோம்” என்றான்.

முன்னர் பார்த்ததற்கு இப்போது அவன் மிகவும் பாதியாக இளைத்து இருந்தான். குமரனிடம் “நீங்களும் எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் அண்ணியும் தவறிப் போய் விட்டார்கள். இரண்டு சிறிய குழந்தைகளையும் நீங்கள் வளர்த்து ஆளாக்க வேண்டும். உங்கள் திருமணமும் நின்று போய்விட்டது என்று கேள்விப்பட்டேன். வருத்தமாக உள்ளது. இனிமேல் எல்லாம் நல்லதே நடக்கும், கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் கூறினான்.

குமரனும் தான் வாங்கிய இனிப்புகளை நாகராஜனிடம் கொடுத்து “குழந்தைகளுக்கு கொடுங்கள் “என்றான்.

ஆட்டோவில் வந்த அவர் திரும்பி வந்து ஏற நாகராஜனும் விடைபெற்றான். திரும்பவும் வேறு இனிப்புகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான்.

மாமாவை பார்த்ததும் சௌந்தர்யா அதன் வலிகளை மறந்து விளையாடிக் கொண்டிருந்தாள். குமரன் இனிப்புகளை கோபாலன் கையில் “குழந்தைகளுக்காக” எனக்கூறி கொடுத்தான்.

கோபாலனும் குமரனிடம்,” எங்களை மன்னித்துக் கொள் குமரா. தங்கை குழந்தைகளை என்னுடன் அழைத்துச் செல்ல ஆசையாக இருந்தாலும் எனது பொருளாதார நிலை ஒத்துக்கொள்ளவில்லை” என்றான். குமரனும் கண்கள் கலங்கி “குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதீர்கள் அவ்வப்போது வந்து பார்த்து செல்லுங்கள் எங்களை நீங்கள் தான் மன்னிக்கவேண்டும் பொக்கிஷமாக நீங்கள் வளர்த்த தங்கையை நாங்கள் தான் தவறவிட்டு விட்டோம்” என்றான்.

அருகில் இருந்த ரமா “இனிமேல் எல்லாம் நலமாகவே நடக்கும் இருவரும் கவலைப்படாதீர்கள்” என்றாள். அவள் கண்களில் நீர் வழிந்தது.

கோபாலன் குடும்பத்துடன் தன் வீடு சென்றதும் குமரன் தாயின் அருகில் சென்று அமர்ந்தான். நாகராஜனைப் பார்த்தது பற்றி க்கூறினான்.

தன்னிடம் ஒரு லட்சரூபாய் இருப்பதாகவும் அதனை நாகராஜனின் இரண்டு பெண் குழந்தைகள் பெயரிலும் 50,000 போட்டுவிடு ஏதோ நம்மால் ஆகிய பிராயச்சித்தம் என்றாள் சரோஜா.

மறுநாள் அம்மாவை அழைத்துக்கொண்டு நாகராஜன் வீடு சென்றான் குமரன்.

நாகராஜனின் பெண் குழந்தைகள் இருவர் பெயரிலும் 50 ஆயிரம் டெபாசிட் செய்தான் குமரன். குழந்தைகளின் படிப்பிற்கு உதவும். மேலும் உங்களுக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் வந்து கேளுங்கள்” என்றான்.

வீடு வந்த பிறகு அம்மாவின் கைகளைப் பிடித்தபடி கண்களில் நீர் வழிய “இப்போது கொஞ்சம் திருப்தியாக இருக்கிறது. உங்களால் தான் அவனுக்கு நம்மால் உதவ முடிந்தது. நாகராஜன் கண்களில் உள்ள நன்றி உணர்ச்சி இன்னும் என் கண்ணிலேயே நிற்கிறது “ என்றான்.

பானுவை வேலையிலிருந்து நிறுத்தி விட்டதால் திரும்பவும் ஒரு வாரம் லீவு எடுத்தான். அவனது நண்பர்கள் சுரேஷும் மிருதுளும் போன் பண்ணி விசாரித்தார்கள்.

முதல் பகுதி நிறைவடைந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *