இனி எல்லாம் சுகமே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 3,308 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4

4

வீட்டைக் கவனிக்க இன்னொரு நல்ல ஆளை தேட வேண்டியிருந்தது. திரும்பவும் ஒரு வாரம் லீவு எடுத்துக்கொண்டு சரோஜாவுக்கு சமையலில் உதவினான் குமரன். வீட்டு சமையல் நன்றாக இருந்தது. ஹோட்டல் உணவு ஒத்துக்கொள்ளவில்லை. வேலைக்கு ஆள் வைத்தாலும் சமையல் திருப்தியாக இல்லை. என்ன செய்வது என்று திகைத்தனர்.

ஒரு வாரம் ஓடி விட்டது. அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டும். உதவிக்கு ஆளும் கிடைக்கவில்லை. இதுபற்றி சுரேஷிடம் தன் கவலையை கூறினான். குமரன்.

சுரேஷ் குமரனிடம் எதற்கும் கவலைப்படாதே. வேலைக்கு ஆள் கிடைக்கும் வரை நான் ஒரு ஏற்பாடு உனக்கு செய்து தருகிறேன். நாளைக்கு தவறாமல் வேலைக்கு வந்து விடு. உனது வண்டியை எடுக்க வேண்டாம். காலையில் நான் எனது காரில் உன் வீடு வந்து உன்னை பிக்கப் செய்து கொள்கிறேன். நீ ரெடியாக இரு “ என்றான்.

மறுநாள் காலை வேலைக்கு செல்ல தயாராக இருந்தான் குமரன். சுரேஷ் இரவு கூறியபடி தனது காரில் வந்து இறங்கினான். கூடவே தேவதை போன்ற ஒரு பெண் ஹாட் பாக்ஸ் சகிதம் வந்து இறங்கினாள்.

“இவள் என் தங்கை சுகுணா. அருகிலுள்ள மாண்டிசோரி பள்ளியில் டீச்சராக இருக்கிறாள். ஒரு வாரம் லீவு போடச் சொல்லி விட்டு அழைத்து வந்தேன். காலையில் என்னுடன் வருவாள். மாலையில் ஆபீஸ் முடிந்து உன்னை உன் வீட்டில் விட்டு விட்டு அவளை அழைத்துச் சென்று விடுவேன். பகல் முழுவதும் அவள் அம்மா அப்பாவையும் குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்வாள். இந்த ஒரு வாரத்தில் கட்டாயம் உனக்கு வீட்டு வேலைக்கு வேறு ஒரு நல்ல ஆள் கிடைத்து விடும் “ என்றான்.

சுகுணாவின் அம்மா சூடாக இட்லி சட்னி டிபன் சாம்பார் கொடுத்துவிட்டு இருந்தார். இட்லி சாப்பிட்டுவிட்டு சுரேஷுடன் வேலைக்கு கிளம்பி சென்றான். சுரேஷுக்கு நன்றி கூறினான். மாலை வீடு திரும்பினார்கள்.

சுகுணா தன் அண்ணனுடன் வீடு சென்றுவிட்டாள். குமரனுக்கு எல்லாம் அதிசயமாக இருந்தது. இதுவும் நம வீடா என்று சுத்தமாக பெருக்கி மெழுகி அந்தந்த பொருட்களை சரியான இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தோட்டம் கூட பெருக்கி பார்க்க அழகாக இருந்தது. நித்திய மல்லி பூக்கள் பறிக்கப்பட்டு தொடுத்து சுவாமி படங்களுக்கு போடப்பட்டிருந்தது. குழந்தைகளை குளிக்க வைத்து சுத்தமான ஆடைகள் அணிவிக்கப் பட்டு தலை வாரி பூ சூடி பொட்டு இட்டு அழகாக இருந்தனர்.

மேஜையில் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டது போக இவனுக்காகவே கொஞ்சம் கேசரியும் உளுந்த வடையும் தேங்காய் சட்னியும் சூடான காப்பி ஃபிளாஸ்கில் ஊற்றி வைக்கப்பட்டு இருந்தது. வீடு களையாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் தெளிவாக இருந்தனர். சரோஜா குமரனிடம் வந்து அந்தப் பெண் சுகுணா மிகவும் சுறுசுறுப்பு.

மதியம் மிகவும் சுவையாக சமைத்தாள். இட்லிக்கு மாவு அரைத்து வைத்து இட்லி பொடி 4 வகை செய்து வைத்தாள். குழந்தைகளையும் நன்றாக கவனித்துக்கொண்டாள். இப்படிப் பெண் உனக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்றாள்.

குமரன் “நான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை. நீங்கள் அனாவசியமாக ஏதாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள். மேலும் சுரேஷ் நமக்கு உதவுவதற்காகவே தங்கையை அழைத்து வந்தான். அவர்களை நாம் அவமதிப்பது கூடாது “என்றான் அம்மாவிடம்.

இவ்விதம் கூறினாலும் அவனுக்கு ஒரு பெண்ணால் வீட்டை இத்தனை பக்குவமாக கையாள முடியுமா ? என்று அதிசயமாக இருந்தது. அண்ணி நந்தினியின் நினைவு வந்தது. இப்படித்தானே நம் வீட்டை அழகாக நிர்வாகம் செய்தாள். நாம் அதனை அப்போது உணரவில்லையே ? மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டோம் “ என்று வருந்தினான்.

இரவு சாப்பாட்டிற்கு சப்பாத்தியும் உருளைக்கிழங்கு சப்ஜி செய்து ஹாட் பேக்கில் வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளை பார்க்கவே மனதில் சந்தோஷம் ஆக இருந்தது. பானு இருக்கும்போது இத்தனை தெளிவாக அவர்கள் இருந்ததில்லை. இப்போது நன்றாக சாப்பிட்டு நல்ல அலங்காரம் செய்யப்பட்டு பார்க்கவே லட்சணமாக இருந்தார்கள் சுகுணாவோடு நன்றாக ஒட்டிக் கொண்டார்கள்.

ஒரு வாரம் எந்த பிரச்சினையுமின்றி போனது. வீட்டு வேலைக்கு எவ்வளவு தேடியும் ஆள் கிடைக்கவே இல்லை. ஞாயிற்று கிழமை குமரன் வீட்டில் இருந்ததால் சுகுணா வரவில்லை. குழந்தைகள் அவளைத் தேடி தவித்தனர்.

சரோஜா மிகவும் மெதுவாக சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டாள்.

மாலை நேரம் சுரேஷ் மிருதுளும் வந்தார்கள். குமரனிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். பெரியசாமி சுரேஷை அழைத்து அருகில் உள்ள கோயில் கொண்டு விட்டுவிட்டு வரச் சொன்னார்.

சுரேஷும் பெரியசாமியை பைக்கில் அழைத்துக் கொண்டு பிள்ளையார் கோயிலில் கொண்டு விட்டான். பெரியசாமி , சுரேஷ் தன்னுடன் சிறிது நேரம் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். உன்னுடன் தனியாக பேசுவதற்காகவே இங்கு அழைத்து வரச் சொன்னேன் “ என்றார்.

சுரேஷ் அவர் அருகில் அமர்ந்தான். பெரியசாமி சுரேஷிடம் சுகுணாவை குமரனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாகக் கூறினார்.

சுரேஷ் பதில் ஒன்றும் கூறவில்லை. அவன் அமைதியாக இருப்பது கண்டு தயவு செய்து என்னை மன்னித்துக்கொள். எனக்கு ரொம்ப பேராசை. அதனால் கேட்டுவிட்டேன். உனக்கு விருப்பம் இல்லை. நான் தொந்தரவு செய்து விட்டேன். மன்னித்து கொள்.” என்றார்.

சுரேஷ் , “தயவுசெய்து அப்படி கூறாதீர்கள். நான் மவுனமாக இருந்ததன் காரணம் வேறு. எங்கள் தங்கச்சி பாப்பா எல்லா பெண்களையும் போல வயதுக்கு வரவில்லை. இந்த உண்மையை கூறி திருமணம் செய்ய வேண்டும் என்று இருந்த காரணத்தினால் இதுவரை யாரும் திருமணம் செய்ய முன்வரவில்லை இதனை எப்படிக் கூறுவது என்றே மௌனமாக இருந்தேன் மற்றபடி குமரனுக்கு கொடுக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் “ என்றான்.

இப்போது பெரியசாமி மௌனமாகினார். என்றாலும் கடவுளின் பிராப்தம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் எனக் கூறி அவனுடன் வீடு திரும்பினார்.

அன்று இரவு குமரனிடம் “நீ சுகுணாவை திருமணம் செய்து கொள்கிறாயா ?”என்று கேட்டார்.

அதற்கு குமரன் “நான் கல்யாணமே செய்து கொள்ளப்போவதில்லை எந்தப் பெண் நம் குழந்தைகளை தன் குழந்தைகளாக நேசிப்பாள் ? குழந்தைகள் நலன் கருதி திருமணம் செய்யப்போவதில்லை” என்றான்.

அதற்கு பெரியசாமி உண்மை நிலவரத்தை எடுத்துக்கூறி “ சுகுணா நம் குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வாள். குழந்தைகளுக்கும் நல்ல அம்மா அப்பாவாக நீங்கள் இருவரும் விளங்குவீர்கள். சுகுணாவும் உன்னை நன்றாக கவனித்துக் கொள்வாள். உன்னால் அவளுக்கும் ஒரு நல்ல வாழ்வு அமையும். வயதான எங்கள் காலத்திற்குப் பிறகு உனக்கும் நிம்மதியாக இருக்கும். உன் அண்ணன் மகாபாவியால் நீ இப்படி ஒரு தியாகம் செய்ய வேண்டி உள்ளது “ என்றார்.

அதுகேட்டு குமரன் சம்மதம் சொன்னான்.

மறுநாள் குமரனை அழைத்துக்கொண்டு சுரேஷ் ஆபீஸ் சென்றுவிட்டான். சுகுணா வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டாள்.

பெரியசாமி சுகுணாவின் வீட்டிற்கு சென்று அவள் அப்பாவிடம் நிலைமை யை விளக்கி சம்மதம் கேட்டார். அவரும் தன் மனைவி கண்மணி இடம் கலந்து பேசி மறுநாள் தனது முடிவினை கூறுவதாகத் தெரிவித்தார்.

அன்று மாலை சுரேஷம் சுகுணாவும் வீடு வந்து சேர்ந்தவுடன் குடும்பத்தினருடன் விவாதித்தார். குமரனுக்கு சரி என்றால் நமக்கும் சரிதான் என்று முடிவு எடுத்தனர்.

மறுநாள் காலை சுரேஷ் மட்டும் அப்பா ராஜனுடன் வந்தான். சுகுணாவை அழைத்து வரவில்லை அவர்கள் சம்மதத்தை தெரியப்படுத்தினார்கள்.

ஒரே பெண்ணாக இருப்பதால் நிறைய நகைகள் மற்றும் வீடு தருவதாக திருமணத்தை நடத்தித் தருகிறோம் என்றனர். திருமண மண்டபம் ஏற்பாடு செய்தார்கள்

முன்னால் செய்த நிச்சயதார்த்த சமயம் போட்ட 10 பவுன் காசு மாலையை பாதியாக பிரித்து இரண்டு காசுமாலை நெக்லஸ்களாக குழந்தைகளுக்கு மாற்றி செய்துவிடலாம். சுகுணாவுக்கு புதியதாக 10 பவுன் மாங்காய் மாலை ஆரம் செய்து விடலாம் என்றாள் சரோஜா.

சரோஜா குடும்பத்தினர் ஒரு நல்ல நாள் பார்த்து நகை கடைக்கு சந்தோஷமாக சென்றனர். அங்கு தற்செயலாக கடையில் பிரகாஷ் சுபாவும் நகைகள் வாங்க வந்து இருந்தனர். ஆனால் அவர்களை கண்டுகொள்ளாமல் குமரன் குடும்பத்தினர் இருந்துவிட்டனர்.

சுகுணா பேரழகாக இருந்தாள். குழந்தைகள் அவள் அருகே இருந்தனர்.திருமணம் மிகவும் அருமையாக நடந்தது.

துர்காவின் கணவன் நாகராஜனிடம் ஆட்டோவை திருமணத்திற்கு வருபவர்கள் உபயோகப்படுத்த குமரன் பேசி அமைத்துக் கொண்டான். தேவைக்கு அதிகமாகவே பணம் கொடுத்தான்.

“இனிமேல் சுரேஷுக்கு கல்யாணம் அமைந்துவிடும் அவன் தங்கை திருமணத்திற்காக தான் இது நாள் வரை காத்திருந்தான்” என்றான் மிருதுள்.

குமரனும் மிருதுளைப் பார்த்து “ ஏன் நீயும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியதுதானே? உனக்குத்தான் பெண் மாளவிகா காத்து கொண்டு இருக்கிறாளே ? “என்றான்.

மிருதுளும், “ஆமாம் நானும் அவளும் ஐந்து வருடங்களாக காதலித்துக் கொண்டி ருக்கிறோம். இருவர் வீட்டிலும் சம்மதம் தான். ஆனால் என் தங்கைக்கு திருமணம் ஆன பிறகுதான் எனக்கு கல்யாணம் என்று இருக்கிறேன் “ என்றான்

அதற்கு குமரன் “உன் தங்கை சித்ராவுக்கு என்ன ? நல்ல லட்சணமாக இருக்கிறாள். படிப்பு , வசதி எல்லாம் இருக்கிறது” என்றான்.

அதற்கு மிருதுள் “ அவள் மூல நட்சத்திரம் அதனால் திருமணம் தள்ளிப் போகிறது. ஆனால் குமரா நீ மனது வைத்தால் உன் மச்சினன் சுரேஷுக்கு முடிக்க ஏற்பாடு செய்யலாம் “என்றான்.

குமரனும் “ஆகட்டும் கேட்டுப் பார்க்கிறேன் “என்றான். குமரன் மறுவீடு செல்லும்போது இது பற்றி மாமனாரிடம் பேச அவர்களும் மனம் ஒப்பி சம்மதித்தனர்.

பின் ஒரு நல்ல நாளில் மிருதுளின் வீடு சென்று பெண் கேட்க அவர்களும் சந்தோஷமாக சம்மதம் தெரியப்படுத்தினர்.

அதிக சந்தோஷம் மாளவிகா விற்கும் அவள் அம்மா கோமளம் , அப்பா கௌதமிற்கும் தான்.

சித்ராவிற்கு மூல நட்சத்திரம் ஆனதால் கோயிலில் வைத்து கோயில் கொடி மரத்திற்கு முன்பாக சுவாமி சன்னதியில் திருமணம் நடத்த வேண்டும் என்று மிருதுளின் குடும்பத்தினர் கூறினார்கள்.

அதற்கு கண்மணியும் ரொம்ப நல்லதாக போயிற்று. எங்கள் குலசாமி கோமதி அம்மன் உடனுறை மகாலிங்க சுவாமி கோயிலில் வைத்துக் கொள்ளலாம் என்றார்கள்.

அடுத்த மாதமே சுரேஷுக்கும் சித்ராவுக்கும் அருமையாக திருமணம் அமைந்தது.

அதன் பின்னர் கௌதம் கோமளாவும் தங்கள் ஒரே மகள் மாளவிகாவை மலையாளிகள் வழக்கப்படி குருவாயூர் கோயிலில் வைத்து திருமணம் செய்வித்தனர்.

இவ்வாறு நண்பர்கள் மூவருக்கும் அடுத்தடுத்து விரைவாக திருமணம் நடைபெற்றது.

சித்ராவிற்கு நித்திய கல்யாண பெருமாள் கோவில் சென்று மாலை சாற்றி வேண்டுதலை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதனால் ஒரு சிறிய வால்வோ பஸ் ஏற்பாடு செய்தனர். பஸ்ஸில் மேலும் 4 பேர் சீட்கள் காலியாக உள்ளன எனவே தெரிந்தவர்கள் இன்னும் நான்கு பேரை அழைத்துச் செல்லலாம் என்று கூறியபோது குமரன் கோபாலன் ரமா குழந்தைகள் இருவரையும் உடன் அழைத்தான்.

அனைவரும் திருவிடந்தை சென்றனர். கோயில் முன் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் பூமாலைகள் மற்றும் பெண்கள் தலைக்கு வைக்க பூச்சரங்கள் நிறைய சரோஜா வாங்கினாள்.

அப்போது அந்த பூக்கார பெண்ணிடம் நின்று பேசிவிட்டு வந்தாள் சரோஜா. குமரன் அம்மாவிடம் “அந்த பூக்கார அம்மாவை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.

சரோஜா “ஆமாம். அவள் தான் பானு “என்றாள். அது கேட்டு குமரன் “எவ்வளவு குண்டாக இருக்கிறாள் “என்று கூறியபடி பானுவை திரும்பிப் பார்க்க அவள் கண்கள் பொறாமையால் மின்னியது போல தோன்றியது.

சரோஜாவும் “ஆமாம் அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டது. குண்டு பூசணிக்கா போல் ஆகி விட்டாள். எல்லோரும் நம்ம வீட்டு மருமகள் போல அப்சரஸ் ஆக இருக்க முடியுமா ? “ என்றாள்.

குமரன் சுகுணாவை நோக்க அவள் மெஜந்தா நிற பட்டுப்புடவையில் பேரழகியாக திகழ்ந்தாள். சித்ராவும் மாளவிகாவும் ரமாவும் கூட அழகில் குறை இல்லை.

அதை விட வயதான பெண்கள் ஆகிய சரோஜா கண்மணி, கோமளா, சித்ராவின் அம்மா செண்பகம் , அனைவரும் சர்வ லட்சணங்களோடு இருந்தனர்.

குமரன், “ஆமாம் நம் குடும்பத்துப் பெண்கள் அனைவரும் அப்சரஸ்கள் தான். அதிலும் நம் வீட்டுக் குழந்தைகள் சௌந்தர்யாவும் லாவண்யாவும் பேரழகிகள்” என்றான்.

சரோஜா மனம் நிறைந்து சிரித்தாள். இனிமேல் எல்லாம் சுகமே.

நிறைவு பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *