வாரமெல்லாம் ஆபிஸூக்கு அலைந்து மனசு வெறுத்துப் போச்சுடி. எங்காவது வெளியில் ஜாலியா போயிடு வரலாமா?’’ கேட்ட என் வாயை
அவசரமாகப் பொத்தினாள் தோழி பிரதீஷா.
‘’ஏய்! சத்தம் போட்டுப் பேசாதே. வினோத்தோட காதில் விழுந்துச்சுன்னா அவ்வளவுதான். நம்மளோடு அவனும் வரேன்னு அடம் பிடிப்பான்.
கூட்டிப் போனால் போயிற்று. அதுக்காக இப்படி ஏன் பயந்து சாகறே?
அவனை வெளியில் கூட்டிப் போனால் கடையில் எந்தப் பொருளைப் பார்த்தாலும் வாங்கிக் கொடுக்கச் சொல்லி ரகளை பண்ணுவான். அந்த வம்பே வேண்டாம்டி.
பிரதீஷாவின் மகன் வினோத்துக்கு நான்கு வயதுதான் ஆகிறது. படு சுட்டி. வயதுக்கு மீறிய அறிவு. எந்த விஷயத்திலும் அவனை ஏமாற்றிவிட்டுச் செய்வது சற்று கடினமான விஷயம்தான்.
‘’கதை சொன்னால் தூங்கி விடுவான். நீ ஒரு மணி நேரம் கழிச்சு வா,. நாம கிளம்பிடலாம்’’
பிரதீஷா சொன்னது போலவே ஒரு மணிநேரம் கழித்துச் சென்றேன்.
வீட்டுக்கு முன்னால் வினோத் விளையாடிக் கொண்டிருந்தான்
‘’வினோத்! என்ன தனியா விளையாடிட்டு இருக்கே? எங்கே உன் அம்மா?
என்னப் படுக்க வச்சு கதை சொல்லிட்டு இருந்தா….எனக்கு தூக்கம் வரலை. ஆனா, டயர்டுல அம்மா தூங்கிட்டா..!
– ஒக்ரோபர் 2013