இத்தாலிய கம்பளிச் சட்டை

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 11,501 
 

பத்தாண்டுகளான அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை பொறாமை ஒருபோதும் பாதித்ததில்லை. அவர்களைச் சுற்றி இருந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி நடந்து கொண்டிருந்தது என்பதை கவனித்த அவர்கள், அடிக்கடி, அவர்களுடைய திருமண வாழ்க்கை ஒரு நல்ல திருமண வாழ்க்கை என்று சொல்லிக்கொள்வார்கள். “நம் வாழ்க்கை அப்படி ஒன்றும் மோசமில்லை” என்று அவன் சுருக்கமாக சொல்லிவிட்டு, அவள், (அவர்களுடைய திருமணத்துக்கு முன்பாக, அவள் பழகிக்கொண்ட)வேடிக்கையான `கிரீச்’ என்ற தன் சிரிப்பொலியினால் அதை உறுதி செய்யும்வரை காத்திருப்பான். அவள், “நாம் புத்திசாலிகள், நாம் புத்திசாலிகள். புத்திசாலி ஜேம்ஸ். புத்திசாலி ஜில்.” பிறகு அவன், “புத்திசாலி ஜில், புத்திசாலி ஜேம்ஸ்” என்பான். அப்புறம் ஒரு முத்தம். அல்லது பல.

ஒரு குழந்தையும் இருந்தது. திருப்திகரமான, ஆரோக்கியமான, நல்ல பெண் குழந்தை.

1991களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி அல்லது கொஞ்சம் அதிர்ச்சி தராத சொல்லாக கருதப்பட்ட பொருளாதாரப் பின்னடைவு – ஒரு நலவாழ்வு அழகு மையத்தில் வரவேற்பாளராக அவள் செய்து கொண்டிருந்த பணியைப் பறித்துவிட்டது. அது சட்டென்று போய்விட்டது. அவன் வருமானவரித் துறையில் ஓர் அதிகாரியாக இருந்ததால், அவன் தன் வேலையை இழக்கவில்லை. அவர்கள் கேலியாக சொல்லிக்கொள்வது போல, யாராவது ஒருவர் அதைச் செய்துதான் ஆகவேண்டியிருந்தது. என்றாலும் அவர்கள் தங்கள் வயிறுகளை சற்றே சுருக்கித்தான் கொண்டார்கள். மிக அசௌகரியமான அளவுக்கு என்றில்லை என்றாலும் விடுமுறைக்கு, அந்த முறை அவர்கள் எங்கும் செல்லவில்லை. அடுத்த ஆண்டும் அப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அவர்கள் தங்களுடைய காரை மாற்றவில்லை. அசைவ உணவு உண்பதைக் குறைத்துக்கொண்டார்கள். நுழைவுக் கட்டணம் வசூலித்த பொருட்காட்சி சாலைகளுக்கும், பூங்காக்களுக்கும் செல்வதைத் தவிர்த்தார்கள். எல்லோரையும் போலவே, அவர்களிடமும் துணிகள் திணிக்கப்பட்ட அலமாரிகள் இருந்தன. பொருளாதாரப் பின்னடைவைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் போதுமான அளவு மக்கள் தங்களுக்குத் தேவையில்லாத பொருள்களெல்லாம் வாங்கவேண்டும் என்ற எண்ணம் சில சமயங்களில், புதை குழியில் ஆழ்ந்து கொண்டிருக்கிற செயலை சாகசம் என்று அதற்குத் துணை போகிற ஒருவனுடைய எண்ணத்தைப் போல, ஒரு தவறான கருத்து என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

வேலைக்குப் போகாமலேயே தன்னை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள போதுமான பணிகள் தனக்கு இருப்பதாக அவள் சொன்னாள். குளியல் அறைக்கும் படுக்கை அறைக்கும் அவள் வண்ணம் பூசினாள். தோட்டத்தில் வேலை பார்த்தாள். வசதியான காலங்களில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது போல உணவு விடுதிகளில் சந்தித்துக் கொள்ளாமல், அவளும் அவளுடைய சினேகிதிகளும் அவரவருடைய வீடுகளில் சந்தித்துக்கொண்டார்கள்.

அன்றைய தினம் எப்படிக் கழிந்தது என்று ஜேம்ஸ் கேட்கும்பொழுது, அவள் அடிக்கடி தான் ஜோனையோ, பெட்டியையோ அல்லது ரெபக்காவையோ, நூலகத்திலோ அல்லது பூங்காவிலோ சந்தித்ததாகச் சொல்லுவாள். கணவன்மார்களோடு தம்பதிகளாக அவர்கள் சந்தித்துக்கொண்ட பொழுதுகளிலெல்லாம், பெண்மணிகள் தாங்கள் வேறு எங்கேயோ சந்தித்தது பற்றிப் பேசுவார்கள். ஒரு நாள் மாலை இரவு உணவுக்கு நண்பர்கள் வந்திருந்தார்கள். பெண்கள் எல்லோரும் நோராவின் வீட்டில் சந்தித்து காபியும் சிற்றுண்டிகளும் சாப்பிட்டதாக ஜில் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. அவன் அதைப் பற்றிக் குறிப்பிட்டபோது, நோரா ஒன்றும் புரியாமல் விழித்தாள். ஜில் கூச்சமுற்றவளாக பதைபதைத்தாள். அந்தச் சம்பவம் குடும்ப வாழ்வில் கோலோச்சிய நாகரிகமான நல்ல பழக்கங்களாலும், மகிழ்ச்சியாய் இருக்க வேண்டியிருந்தாலும் ஒருவாறு சரிசெய்யப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சி அவனுக்குள் எங்கேயோ ஒரு லேசான சந்தேக சிராய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பிறகு, ஒரு வாரம் இருக்கலாமோ என்னவோ அதற்குப் பின் ஒருநாள் மாலை நேரத்தில் ஜேம்ஸ் தன்னுடைய மனைவியை நைட்ஸ் பாலத்தில் கண்டான். அதை அவன் அவளிடம் சொன்னபொழுது, அவளுடைய முகம் விநோதமாகச் சுளித்துக்கொண்டது. அந்த உணர்வு, அது எது? பயம்.

அவனுக்கு முதலில் புரிபடாமல் இருந்த தன்னுடைய அந்த உணர்வை பொறாமை என்று அப்புறம் அவன் அடையாளம் கண்டுகொண்டான். அந்தப் பொறாமை உணர்வின் கடுமையான பிடியில் சிக்கி அவன் திணறினான். அது, தீப்பறக்கும் விழிகளின் செவ்வொளி வீசிய அச்சம் தரும் மிக நீண்ட நிழல் உருவங்களால் ஆகிய உலகம். உடனடியாக அவன் முகத்தில் ஒரு தந்திரமான, பொய்யான புன்னகை அரும்பியது. அவன், “அப்படியானால் ஒருவேளை அது உன்னைப் போலவே இருக்கிறவேறு யாராவதாகவோ இருக்கலாம். ஹெராட்ஸ் கடைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தது நீதானே?” என்றான்.

அவள் தன் புருவங்கள் இணைய நெற்றியைச் சுருக்கியபடி உதட்டைக் கடித்துக்கொண்டு புன்னகை செய்ய முயன்றவாறு, பின்னல் வேலையைத் தொடர்ந்தபோது அவர்கள் இருவருக்குமிடையே அந்தக் கேள்வி பதிலற்று நடுங்கி நின்றது. அதன்பிறகு அவன் மிகவும் சர்வ சாதாரணமாக பேச்சுக் கொடுப்பவன்போல, ஆனால் அவன் மனதுக்கு நன்றாகவே தெரியும் விதத்தில், அவள் பகல்பொழுதுகளை எப்படிக் கழித்தாள் என்று விசாரிக்க ஆரம்பித்தான். அவள் சூப்பர் மார்க்கெட்டுக்கோ, திரையரங்கத்துக்கோ சென்றிருந்தாள். அல்லது குழந்தையை வயலின் வகுப்புக்கு அழைத்துச் சென்றிருந்தாள். அல்லது தன்னுடைய நெருங்கிய சிநேகிதியை சந்திக்கச் சென்றிருந்தாள். அல்லது நீச்சல் குளத்துக்குப் போயிருந்தாள்.

ஆனால் ஒவ்வொரு நாளும் கணக்கில் வராத ஏராளமான நேரம் இருந்ததாக அவனுக்குப்பட்டது. அவன், “நீ மதிய உணவுக்கு என்ன செய்தாய்? நீ மூன்று நாற்பத்தைந்துவரை ஜாய்ஸை பள்ளியிலிருந்து அழைத்து வரவில்லையா?” என்றெல்லாம் விசாரித்தான். அல்லது இப்படி வெட்கக்கேடானவிதத்தில் ஏதாவது குறுக்கு விசாரணைகள் செய்தான். அவள் படபடப்பாகக் காணப்படுவாள். புன்னகை செய்வாள். அவளை அறியாமலேயே கெஞ்சுகின்ற பார்வையை அவன்மீது வீசி, அவனை அந்த இடத்திலிருந்து நகர்த்திவிடுவாள். அவன் அவற்றை பாவமன்னிப்புகளாக எடுத்துக்கொண்டான்.

அவன் அவளை வெறுத்தான். மீண்டும் அவளை அவன் நேசித்தான். ஒரு சகஜ அன்றாட நிகழ்வாக ஆகி, அலுப்புத் தட்டிப் போயிருந்த அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கை மீண்டும் அந்நிலைமை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததுபோல ஆனது. ஆரம்பத்தில் அவனுக்கு ஏதோ தன் எதிராளி ஒருவனிடத்தில் காதல் கொண்டிருந்த ஒருத்தி மீது அவன் தன்னை பலாத்காரமாகத் திணிப்பதுபோன்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டது என்றாலும் அதை அவன் எதிர்கொள்ளத் தயாராக இருந்தான். அவள் அவனிடமிருந்து கருங்கி விலகிப்போவதற்கு பதிலாக, அல்லது அவனை சகித்துக்கொள்வதான சமிக்ஞைகளைக் காட்டுவதற்கு பதிலாக, அவன் மறந்தே போய்விட்ட உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு அவனை எதிர்கொண்டாள்.

இரண்டாவது தேனிலவு! அது அப்படித்தான் இருந்தது என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள். ஆனால், அவளுடைய குற்ற உணர்வுடைய பார்வைகளும், புன்னகைகளும் அவர்களுடைய அதிஅற்புதமான தாம்பத்ய நெருக்கமும் அவனை சித்திரவதை செய்தன. எனினும் அவனால் அதை விட்டுவிட முடியவில்லை.

அவன் பகல் உணவு அருந்தச் சென்று கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத ஒரு சமயத்தில், மீண்டும் அவள் நைட்ஸ்பாலக் கடைவீதியிலிருந்த வேறொரு கடைக்குள் நுழைவதைக் கண்டான். அவன் உணவருந்தச் செல்வதைக் கை விட்டுவிட்டு ஒரு நகரத்தைப் போன்ற காட்சியளித்த அந்த மாபெரும் கடைக்குள் நுழைந்தான். கைப்பைகளும், தொப்பிகளும் தலையில் கட்டும் பட்டுத்துணிகளும் இருந்த பகுதியில் அலைந்து திரிந்தான். பிறகு அவள், அவன் இருந்த இடத்துக்கு மேல்புறத்தில் ஒரு நகரும் படிகளில் போய்க்கொண்டிருந்ததைக் கண்டான். ஜாக்கிரதையாக அவளைப் பின்தொடர்ந்து சென்றான். அவள் நகரும் படிகளிலிருந்து இறங்கியதும் அவனும் கீழே இறங்கினான். வாடிக்கையாளர்களுக்கு நடுவே அவன் கடைகளில் பொருட்களைக் களவாடுவான் என்று பிறர் நினைத்துக்கொள்ளும்படியான குறுகுறுத்த குற்றவுணர்வுடைய பார்வையோடு இங்கும் அங்கும் துழாவியபடி நடந்தான்.

அவன் அந்த மாடியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக தெய்வீகமான அழகுடைய பளிச்சென்ற ஒரு பெண், மிகவும் மெல்லிய, மொறுமொறுப்பான துணியால் ஆன குட்டையான ஆடையை அணிந்துகொண்டு அவனை நோக்கி வருவதைக் கண்டான்.

அது, அவன் மனைவி ஜில்.

அவள் சுழன்று திரும்பியபோது, அவளுடைய நீண்ட நளினமான கால்கள் வெள்ளிக் கத்தரிக்கோல்களாக மின்னின. கடையில் விற்பனை செய்துகொண்டிருந்த மூன்று பெண்களும் அவளைப் போன்ற அதே மன ஒருமையோடு, தன்னிலை மறந்தவர்களாக அவளைப் பார்த்தபடி நின்றார்கள். தற்காதல் உணர்வு அவளைச் சூழ்ந்துகொண்டதை அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அது அவர்களுடைய உடல் உறவின் உச்சகட்டத்தில் அவள் முகத்தில் அவன் காணும் தன்னிலை மறந்த மகிழ்ச்சி கலந்த ஓர் உணர்வு. அவனுடைய மனைவி அந்த லேசான, மெல்லிய, கறுப்பு ஆடையில் அவ்வளவு அழகாகத் தெரிந்ததும் விற்பனை புரியும் பெண்களும் தங்களை மறந்து போனார்கள். ஆனால், யார் அதற்கான விலையைக் கொடுப்பது? நிச்சயமாக அவளுடைய கணவனான அவன் அல்ல. அதுவும் ஒவ்வொரு காசுக்கும் கணக்குப் பார்க்கிற இந்தக் கட்டத்தில் அல்ல. அந்த ஆடை பெரிய பணக்காரப் பெண்களுக்கு உரியது. அவனால் ஒருபோதும் அதை வாங்கமுடியாது. அதுநூற்றுக்கணக்கான பவுண்டுகள் விலை பெறுமதியானது.

ஆனால், அவள் அதில் எவ்வளவு அழகாக இருந்தாள்! மேற்கூரைக்கு வண்ணம் பூசுகிற அல்லது லெட்டூஸ் கீரையை முறையாக எடுத்து வைக்கிற, உருளைக்கிழங்கை அவிக்கிற, அவனுடைய தெரு மூலையில் இருந்த மது விடுதிக்கு ஞாயிற்றுக்கிழமை காலைகளில் வருகிற சாதாரணப் பெண்ணிலிருந்து மிகவும் வேறுபட்டவளாக, வெகு தூரத்தில் இருப்பவளாக, அத்தனை நளினமாக இருந்தாள்.

அவன் முன்பிருந்ததைவிட அதிகப்படியான பொறாமை உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டான். அவன் இதயத்தில் வேறொரு உணர்வும் தோன்றியது. அது என்ன? கருணை. ஆமாம். தன்னைக் கடந்து சென்ற அந்தப் பெண்ணின் அழகு பற்றி அவன் முதல் முறையாக நினைத்தான். அதை உடைமையாகக் கொண்டவளுக்கு அது எப்படி இருக்கும் என்று அவன் சிந்தித்தான். சில அவுன்ஸ்கள் கனத்திலிருந்த ஒரு ஆடையை அணிந்து கொண்டவுடன் அதி அற்புதமாக, கத்தாழை மலரைப் போல அபூர்வமான அழகு கொண்டவளாக ஆவதும், ஒரு நொடியில் அவற்றை எல்லாம் இழந்துவிடுவதும்…

ஆனால் நிச்சயமாக அவளுக்கு அப்போது குழந்தையை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துக்கொண்டு வருவதற்கான நேரம் ஆகிவிட்டது. அவள் நிச்சயமாக அங்கிருந்து புறப்பட்டாக வேண்டும். அவன் யார் கண்ணிலும் படாமல், நகரும் மாடிப்படியில் கீழே இறங்கி வந்து, சாலையின் ஓரத்தில், அவள் வருகிறவரை நின்று கொண்டிருந்தான்.அவள் அவனைப் பார்க்கவில்லை. தன்னுடைய நீலநிற மழை அங்கியிலும் தலைக்கு மேல் கட்டியிருந்த துணியிலும் அவள் மீண்டும் பழைய ஆளாக ஆகியிருந்தாள். அவள் தாவி ஒரு பேருந்துக்குள் ஏறினாள். குழந்தையைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துவரச் சென்றுவிட்டாள். அவள் கையில் புதுத்துணிக் கட்டு எதுவுமில்லை. ஆக, அவள் அந்த உடையை வாங்கவில்லை. இப்போது, நிம்மதியுணர்வு ஒருபுறம் இருந்தாலும், அவள் அந்த ஆடையை வாங்கமுடியாமல் போய்விட்ட அநியாயத்திற்காக அவன் ஆத்திரமும் பட்டான். அது அவளுக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது.

ஒருவேளை அவள் அதை வாங்கியிருந்தால், அதை அணிந்துகொண்டு எங்கே போவாள்? அவளுக்கு அத்தகைய ஆடைகளை அணிந்துகொண்டு போகக்கூடிய இடங்கள் இருந்தன என்பது அதன் பொருளா? அப்படியானால் அவள் யாரோடு அங்கெல்லாம் போனாள்? அவன் மனதில் மீண்டும் சந்தேகம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அவள் இல்லாதபோது, அவன் அவளுடைய ஆடைகள் வைக்கும் அலமாரியை ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஆனால் எப்படி? அவர்கள் ஒருவரையொருவர் உளவு பார்த்துக்கொள்பவர்கள் அல்ல.

அன்று மாலை குடும்பத்தினர் மூலம், நன்கு புழங்கப்பட்டு, லேசான அழுக்கடைந்திருந்த, இனிமையான சமையலறையில் இரவு உணவை அருந்துவதற்காக உட்கார்ந்தார்கள். அவர்கள் பச்சைக் காய்கறிகளையும், வேகவைத்த உருளைக் கிழங்கையும், பாலாடைக் கட்டிகளையும் சாப்பிட்டார்கள். குழந்தைக்கு பிட்ஸா.

குழந்தை சீக்கிரமாக அங்கிருந்து குதித்து எழுந்து, பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடுவதற்காகப் போய்விட்டாள். பெற்றோர் எதுவும் பேசாமல் காபி கோப்பையைக் கையில் வைத்துக்கொண்டு, தோழமை உணர்வோடு, காபி அருந்தியபடி உட்கார்ந்திருந்தார்கள்.

அவள் சமையல் செய்வதனால் களிப்பும், பிசுக்கும், அழுக்கும் ஏறிப்போன தன்னுடைய மெலிந்த கையின் மேல் தலையைச் சாய்த்தாள். அவள் ஏதோ கனவுலகில் இருப்பவளைப் போலக் காட்சியளித்தாள். அவள் பார்வைக்குப் புலப்பட்டுக் கொண்டிருப்பது எது என்பதை அவன் அறிவான். முப்பதுகளின் பிற்பகுதியில் இருந்த மிகவும் மெலிந்த ஒரு பெண்மணியைத்தான் அவன் கண்டான். அவள் வெளுத்துப்போய் இருந்தாள். சற்று ரத்த சோகையாக இருக்கலாம். நீலப்பச்சை நிறத்துடன் கூடிய அவளுடைய பெரிய கண்கள், அவள் அழகின் மிக முக்கியமான அம்சமாக இருந்தது. நளினமாக வார்க்கப்பட்ட இமைகளுக்குள், சில சமயங்களில் அவளால் அதற்குக் கறுப்பு வண்ணம் பூசப்பட்ட அல்லது பூசாமல் விடப்படும் தங்க நிறமான இமை முடிகளால் வரம்பு கட்டப்பட்டிருந்தன. இப்போது கறுப்பு வண்ணத்தில் இருந்த அவை கனவு கண்டு கொண்டிருக்கும் அவள் முகத்துக்கு பண்டைய எகிப்திய குருமார்களுடைய ஒரு தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவள் வெளுத்துப்போன ஒரு நீல நிற டீ சர்ட்டையும், வண்ணச் சிதறல்களுடன் கூடிய ஜீன்ஸையும் அணிந்திருந்தாள். அவளுடைய தலைமுடி… அந்த மென்மையான, பொன்னிதழ்களைப் போன்ற அவளுடைய முடி மிகப் பிரமாதமாக வெட்டப்பட்டிருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. தலைமுடியை அப்படி வெட்டுவதற்கு மிக அதிகம் செலவாகியிருக்கும். சாலை ஓரத்தில் இருந்த முடி திருத்துபவரிடமும் இந்த பாணியைப் பார்க்கமுடியாது. அவனை, சந்தேகம் ஏதோ ஒரு கொடிய விஷயத்தைப் போல மென்று அரைவாசியாகக் குலைத்துக்கொண்டிருந்தது.

அவன் அவளுடைய துணிமணிகளை ஆராய்ந்தாக வேண்டும். எப்பொழுது? அவள் என்ன செய்தாள் என்பதை அவன் அறிந்து கொண்டிருந்ததைப் போலவே, வீட்டில் அவன் என்னவெல்லாம் செய்தான் என்பதை அவளும் அறிந்திருந்தாள். தொலைபேசி ஒலித்தது. ஏதோ ஒரு பொதுவான பிரச்னையைப் பற்றி விவாதிப்பதற்காக அண்டை வீட்டுக்காரி அவளை அழைத்தாள். இதோ, ஒரே நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என்றவாறு அவள் உடனே அங்கு போனாள். குழந்தைவேறு எந்த நேரமும் சுலபமாக வீட்டுக்குள் ஓடி வந்து அவனைப் பார்த்துவிடக்கூடும்…

அவன் வேகமாக அவர்களுடைய படுக்கை அறைக்குள் பாய்ந்தான். அலமாரியின் கதவுகளை நகர்த்தித் தள்ளினான். உடனடியாக, கதகதப்பான மசாலா ரொட்டியின் வாடையும், தலைமுடியிலிருந்து கிளம்பும் வெனிலா மனமும் அவனை ஒரு போர்வை போல சூழ்ந்து கொண்டன. தோலும், உடலும், கைகளும் எல்லாம் சேர்ந்து நம்பிக்கை கொண்ட அந்த மணத்தை உடையவளான அவளைப் பற்றி அவன் கொண்டிருந்த பைத்தியக்காரத்தனமான, மோசமான கற்பனைகள் எல்லாம் அர்த்தமற்றவை என்று அவனைக் கண்டித்தன. ஆனால் அவன், ஸ்வெட்டர், பழைய ஆடை என்று ஒவ்வொரு ஆடை மேல் ஆடையாக வெளியே இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். அவன் அவை ஒவ்வொன்றையும் அறிவான். அவை உரித்துப் போடப்பட்ட பாம்புத் தோல்களைப் போல, வளர்ந்த மரத்தின் வளர்ச்சியைக் காட்டும் உள் வளையங்களைப் போல, அவளுடையதும் அவனுடையதுமான ஞாபகத்தின் தோல்கள் போல இருந்தன.

இந்தத் தருணத்தில், அவனுடைய அந்தப் பரிதாபத்துக்குரிய, பிணிகொண்ட மூளையின் ஓரத்தில் சம்மட்டியாக அடித்துக்கொண்டிருந்த உண்மையை அவன் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டு விட்டான். ஆனால் ஒருவேளை அவனுடைய இந்தப் பிணியுற்ற நிலையில்கூட, இனிமையான ஏதோ ஒன்று இருக்கலாமல்லவா? ஏனெனில் அவன் மிகவும் அமைதியான வாழ்க்கையை நடத்தினான். நல்லவிதத்திலோ, தீய விதத்திலோ, உணர்வுகள், எல்லை மீறிய தீவிரத்துடன் அவனுடைய வாழ்நாட்களை ஒருபொழுதும் அலைக்கழித்தது கிடையாது. அவனுடைய இரவுகளும் அப்படித்தான். அவர்கள் சீக்கிரத்திலேயே படுக்கப் போய்விடுவார்கள். அவளை நோக்கி அவன் கைகளை நீட்டும் அதே வேகத்தில் அவள் ஆவலோடு அவன் கைகளுக்குள் புகுந்துகொள்வாள். அவன் அந்தப் பெரிய கடையில் கண்ட அதிஅற்புதமான அந்த உயிரைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டிருந்தான். வெண்ணிறமான, மென்மையான, காதலே வியர்வையாகப் படர்ந்து பளபளத்த அவளுடைய அந்த சருமத்தையும், உடலையும் ஒரு நாரை அல்லது கொக்கைப் போன்ற மிக மெலிந்த அவளுடைய அந்த உடலையும் அவன் மிகவும் கொண்டாடினான். அவனுடைய பொறாமை, அவளை இளமை உள்ளவளாகவும், காயப்பட்டுக் கொள்ளக்கூடியவளாகவும் ஆக்கியிருந்தது.

அவள் தன்னுடைய பழைய ஜீன்ஸிலும், ஸ்வெட்டருக்குள்ளும் தன்னை விரைந்து திணித்துக் கொள்வதை மறுநாள் காலை அவன் கண்டபோது, அவளிடம்தான் எவ்வளவு பெரிய வித்தியாசம்? பேருந்து நிறுத்தத்தில் நின்றால் யாரும் அவளை திரும்பிக்கூட கவனித்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். இத்தகைய ஒரு சாதாரணமான பெண்தான் ஒரு கணத்தில் அவன் நேற்றுப் பார்த்தது போன்ற அப்படியானவளாக ஆகிறாள் என்று அவன் எண்ணினான்.

இரண்டு மணி நேரங்கள் ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடும்படியான தன் அலுவலக வேலையை விட்டுவிடுவது சுலபமான வேலையல்ல அவனுடையது. அவன் மிகவும் கடினமாக உழைத்தான். பெரும்பாலான நேரங்களில் அவன் நண்பகலில் நல்ல உணவை அருந்துவதில்லை. சீக்கிரமாக சாப்பிடக்கூடிய இரண்டு ரொட்டித் துண்டுகளை உண்பான். காலை முழுவதும் அவன் பணிபுரிந்தான். மதிய வேளைகளில் அவனுடைய மனம் அவன் மனைவி என்ன செய்துகொண்டிருப்பாள் யாருடன் இருப்பாள் என்பதைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்துவிடும். பிறகு மனசாட்சிக்கேற்றபடி அதுவரை வாழ்ந்துவந்த அவன் முதல் முறையாக தன் குடும்பத்தில் கற்பனையான ஒரு பிரச்னையைக் கண்டுபிடித்து, அதற்காகத் தனக்கு ஒருவார விடுமுறை வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அவனுடைய லீவு கணக்கிலேயே நிறைய நாட்கள் விடுமுறை இருந்தது. முதல் முறையாக அவன் அதை ஜில்லிடமும் சொல்லாமல் மறைத்துவிட்டான்.

அன்று மாலை, அவள் பளபளப்பாக ஒளி வீசி மின்னுவது போல அவனுக்குத் தோன்றியது. அவள், அவனிடமிருந்தும் அவளுடைய மகளாகிய அந்தச் சின்னப் பெண்ணிடமிருந்து மிகவும் விலகித் தள்ளியிருந்தாள். யாருடன் இருந்தாள்?

மறுநாள் காலை எப்பொழுதும் போல அவன் வேலைக்குப் போவது போல பாசாங்கு செய்தான். தன்னுடைய மறு பகுதியான, எல்லாவற்றிலும் தன்னுடைய பங்காளியான அவளை ஏமாற்றுவதில் அவன் குறைந்தபட்ச குற்ற உணர்வைக்கூட உணரவில்லை என்பது, தான் செல்லும் வழி தீயது என்பதை அவனுக்கு எடுத்துச் சொல்லியது. அவனுடைய சொந்த வீட்டையே உளவு பார்ப்பது என்பது சாத்தியமில்லாதது. அது அந்தப் பகுதியில் உள்ள விழிப்புக் குழுவின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டது. பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் ஒரு பூங்கா இருந்தது. அபாயகரமானது என்றாலும் அவன் அங்கே சென்றான். “உன் கணவரை இன்று காலை பதினோரு மணிக்குப் பார்த்தேன்” என்று யாராவது ஒருவர் ஜில்லிடம் சொன்னால் என்ன ஆகும்?

சீக்கிரத்தில் அவள் சின்னப் பெண்ணைப் போல நடைபாதைக்கு ஓடிவந்தாள். லாவகமாக பேருந்துக்குள் ஏறி, கீழே செல்லும் படிக்கட்டுகளில் இறங்கி, முன்னோக்கி நகர்ந்தாள். வேறெதையும் கவனிக்காமல் அவள் புன்னகை செய்தபடி இருந்தாள். அவன் அந்த மாடி பஸ்ஸின் மேல் பகுதிக்குச் சென்றான். அவள் இந்த முறை நைட்ஸ் பாலத்தில் இறங்காமல், பாண்ட் தெருவில் இறங்கினாள். அவனும் அவ்வாறே செய்தான்.

அது ஒரு பெரிய வணிக மையமல்ல, சிறிய கடை. அதனால் அவளை உளவு பார்ப்பது மேலும் கடினமாக இருந்தது. அவன் ஜாக்கிரதையாக உட்புறம் பார்த்துக்கொண்டே, நடைபாதையில் இப்படியும் அப்படியுமாக நடந்தபடி இருந்தான். அதோ அவள்! இந்த முறை அவள் கடற்கரைக்குச் செல்லும்போது அணிந்துகொள்ளும் ஓர் ஆடையை அணிந்திருந்தாள். அவர்கள் இந்த ஆண்டு அங்கெல்லாம் போகப்போவதாக இல்லை. எந்த ஆண்டும்தான். இந்த ஆடைகளுக்குப் பொருத்தமாக இருக்கக்கூடிய கடற்கரைக்கு அவர்கள் எந்த ஆண்டும் போகப்போவதில்லை.

அவள், முப்பதுகளில் புழக்கத்திலிருந்த ஒரு வெளிர் வண்ணப் பட்டினாலான கடற்கரைக்கான பைஜாமாவையும், மெல்லிய வைக்கோலால் செய்யப்பட்ட சரிவான தொப்பியையும் அணிந்திருந்தாள். விற்பனையாளப் பெண்மணி அவளைக் கவனித்தாள். ஒருத்தி அவளுடைய மணிக்கட்டில் கட்டுவதற்காகக் கைக்குட்டையைக் கொண்டு வந்தாள். இன்னொருத்தி பளிச்சென்ற கைப்பையைக் கொண்டு வந்தாள். மூன்றாமவள் வண்ண மணிமாலையை எடுத்து வந்தாள். அவனுடைய மனைவியின் தோற்றத்திலும், அவள் அங்கு இருப்பதிலும் அந்தப் பெண்கள் மிகக் கூர்மையான மனஒருமையுடன் கவனம் செலுத்துவதை அவன் மீண்டும் கண்டான். உலகின் தலைசிறந்த டிசைனர் ஒருவருக்குச் சொந்தமான அந்தக் கடையில் அவள் நன்கு அறிமுகமானவளாக இருந்தாள். அவள் துணிகளை வாங்கவில்லையென்றால், பிறகு எதற்கு…

ஆனால்…. அவள் அவ்வளவு அழகாக இருந்தாள்! விற்பனை செய்கிற பெண்கள், நாள் முழுவதும் பருத்த பெண்மணிகளுக்கும், அழகற்ற பெண்மணிகளுக்கும், அல்லது சாதாரணமாக தோற்றமளிப்பவர்களுக்கும் துணிகளை விற்று அதனால் மனம் பொருந்தாத விருந்தோம்பலுக்கு ஏற்பத் தங்களை மாற்றியமைத்துக்கொண்ட வீட்டில் வாழும் ஜென்மங்களைப் போல் களையிழந்துபோய் இருப்பார்கள். ஆனால் இங்கே ஒவ்வொரு ஆடைகளையும் எப்படி அணிய வேண்டுமோ அப்படி அணிந்திருந்த அழகிய, மாயப் பிறவி இருந்தது. அதுதான்… அவள் யாருக்காக இந்த ஆடைகளை ஒரு மாடல் போல அணிந்து காட்டினாள்? இப்போது அவன் ஒத்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது. அவளுக்காகவே. அவை உள்ளீடு கொண்ட அவளுடைய பகல் கனவுகள். அவள் பகட்டுக்காகவும், விலையுயர்ந்த கடற்கரைப் பயணங்களுக்காகவும்,அவளுடைய நளினமான அழகை அவள் காட்டிக் கொள்ளக்கூடிய பார்ட்டிகளுக்காகவும் ஏங்கினாள் என்பது அவனுக்குத் தெரியாது. அல்லது ஒருவேளை உண்மையாகவே அப்படி இல்லாமலும் இருக்கலாம். அவளில், அவள் முக்கியமற்றது என்று எண்ணிய ஒரு பகுதி மட்டும் அப்படி இருக்கலாம். அது அப்படித்தான் இருக்கவேண்டும் என்று அவன் இறுதியில் நம்பிக்கை கொண்டான்.

அவள் கடையைவிட்டு வெளியேறினாள். அவன் மறுபடியும் பின்தொடர்ந்தான். அவள் அதற்கருகேயிருந்த இன்னொரு தெருவில் நுழைந்தாள். பிறகு மீண்டும் நூற்றுக்கணக்கான பவுண்டுகள் விலை மதிக்கக்கூடிய ஆடைகளை அணிந்து, அங்கு அவள் ஒரு அணிவகுப்பையே நடத்தினாள். இந்தமுறை வாடிக்கையாளர்கள் அவளை ஒரு மாடல் என்று எண்ணிக்கொண்டார்கள். விற்பனைப் பணியில் இருந்தவர்கள், அந்த ரகசியத்தைக் காப்பாற்றினார்கள். ஜில் தன்னுடைய பங்கை நடத்திக் காட்டினாள். அவளுடைய கணவனின் இதயம் அவளுக்காக அழுதது. அவள் எப்படி மகிழ்ந்தாள் என்பதையும் அதை எவ்வளவு அருமையாகச் செய்தாள் என்பதையும் பார்க்கும்போது அவளுடைய கணவனுக்கு இதயம் வலித்தது. அவளுடைய உடலின் பளிங்கினாலான விரிவாக்கம் போலக் காட்சியளித்த அந்த ஆடையும், அவளுடைய பாலே நடனக்காரி போன்ற அசைவுகளும், வெளுத்த பீச் வண்ணத்தில் முக்கியமாக நடன நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்ளத்தக்கதான அந்த ஆடையை, அதை விலை கொடுத்து வாங்கிய அரேபிய சீமாட்டி அணிந்தபோது அருவறுப்பான தோற்றம் காட்டியது. அதைப் பற்றிக் கவலை இல்லை. விற்பனை செய்கிறவர்கள், அவனுடையமனைவியாகிய அவளும், அவனைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை, அந்த ஆடையும் எப்படிக் காட்சி அளிக்கவேண்டுமோ அப்படியாக அதைப் பார்த்துவிட்டார்கள். அதற்குப் பிறகு அது சாமானிய நிலையை அடைந்து வீழ்ச்சி அடைவதைப் பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லை.

அவள் ஐந்து கண்டங்களிலும் அறியப்பட்ட புகழ் பெற்ற முடிதிருத்தும் நபரிடம் செல்லுவதை அவன் கவனித்தான். அவன் அதைப் பற்றி வருத்தப்படவில்லை’ முணுமுணுக்கவில்லை. வீட்டுச் செலவுகளுக்குக் கொடுக்கும் பணத்தில் அவள் இங்கேயும், அங்கேயுமாகக் கொஞ்சம் சேமித்திருக்கக்கூடும். அவளுக்குள் இருந்த தேனினும் இனிய தும்பி மனத்திற்கு அது உரித்தானதுதான். அவன் இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் இருப்பதுகூட வேடிக்கை விளையாட்டின் ஒரு பகுதிதான் என்பதுகூட அவனுக்குப் புரிந்தது.

அவன், சுரங்கப்பாதை வழியாகக் கொஞ்ச நேரம் பயணித்து, அவர்கள் இருவரும் சந்தித்து, சாண்ட்விச்சை சாப்பிட்டபடி ஏதாவதொரு உணவு விடுதியில் ஒரு மணி நேரத்தைக் கழிக்கும்படி ஆகிவிடக்கூடாது என்பதை உறுதி செய்துகொண்டான். ஒரு ஆழமான குளத்திற்கு அருகிலே முழந்தாளிட்டு அமர்ந்து, குளத்திற்குள்ளே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பவனாகவும், அடியாழத்தில் அவனுடைய மனைவி, அவனுக்கே உரிய ஜில், அவனுடைய ஒரு பாதியான, ஆனால் ஒரு பரிமாணத்தில் அவனிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டவளாகவும் உணர்ந்தான். அவனைப் பிடித்தாட்டிய அவனுக்குத் தெரியவில்லை. என்றாலும் கடுமையான பொறாமையைப் போன்றே சக்தி வாய்ந்த ஒரு நேயமும், அன்பும் பொங்க, அவன் சிரித்தான்.

வழக்கமான நேரத்திற்கு அவனால் வீட்டிற்குப் போக முடியவில்லை. நிறைய நேரம் மிச்சமிருந்தது. அப்போது அவன் ஒருபொழுதும் செய்யத்தூண்டப்பட்டிராத ஒரு செயலைச் செய்தான். ஆண்களுக்கான மிக உயர்ந்த தரத்துப் பொருட்களை விற்கும் பெரிய கடைக்குள் நுழைந்து, தன்னுடைய வாழ்க்கையிலேயே அவன் அணிந்திராத மாதிரியான ஆடைகளை உடுத்திப் பார்த்து அவற்றை அணிந்துகொண்டு அவன் எங்கே போகமுடியும்? இந்த சூட்டுகளும், ஜாக்கெட்டுகளும் அவன் பார்க்கும் வேலைக்குப் பொருத்தமில்லாதவையாக இருக்கும். அவனுடைய குடும்ப வாழ்வில் இவற்றுக்கு இடமே இல்லை. அவனுடைய இந்த ஆடை வாங்கும் விஷயமென்பது அவன் மிகவும் தற்செயலாக எடுத்த முடிவு என்றும், இதே ரகத்தில் சூட்டுகளையும், ஜாக்கெட்டுகளையும், கோட்டுகளையும்விற்கும் கடைகள் நகரில் ஏராளமாக இருந்தன என்பது தனக்குத் தெரியாது என்றும் சொல்லிக்கொண்டே அவன் அந்தப் பெரிய கடையைவிட்டு வெளியே வந்தான்.

அன்று காலை அவன் ஜில்லைக் கண்ட கடைக்கு ஈடான ஒரு கடைக்குள் மீண்டும் அவன் நுழைந்தான். விலைகளோ – நல்லது. மக்கள் அவர்களுடைய கனவை நினைவாக்குவதற்காக விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். அவனால் அதைப் பார்க்கமுடிந்தது. ஒரு பார்வையிலேயே அவன் அந்த இடத்தில் சௌகரியமாக உணரவில்லை என்பதைப் புரிந்துகொண்ட ஓர் இளைஞன் அவன் உதவிக்கு வந்தான். அவன் பல கம்பளிச் சட்டைகளைப் போட்டுப் பார்த்தான். இறுதியாக, பழங்குடியினரின் ஓவியங்களைப் போன்ற ஓவியம் தீட்டப்பட்ட, நீலமும், பச்சையுமான வரைபடம் கொண்ட ஒன்றையும், லேசான மஞ்சளும், செங்காவி வண்ணமும் கலந்திருந்த ஒரு இத்தாலிய கம்பளிச் சட்டையைத் தேர்ந்தெடுத்தான். அது மென்மையான பதனிடப்படாத, வெள்ளாட்டுக் குட்டித் தோலினால் செய்யப்பட்டது போல, அல்லது கனமான பட்டினால் செய்யப்பட்டதுபோல இருந்தது. அந்த கனமான கம்பளிச் சட்டை உண்மையிலேயே சட்டம் போடப்பட்டு, அரும்பொருட்காட்சியகத்தில் மாட்டப்பட்டிருக்க வேண்டும். மிக மோசமானவை எல்லாம் அங்கே மாட்டப்பட்டிருந்தன.

ஜேம்ஸ் அப்படி ஒன்றும் மோசமான தோற்றத்தை உடைய மனிதனல்ல. ஒல்லியான, உயரமான ரகத்தைச் சேர்ந்தவன். சமீபத்தில் இல்லையென்றாலும், பொதுவாக ஒரு புன்னகையை அணிந்திருப்பவன். தலை நரைக்கத் தொடங்கியிருந்ததால் கறுப்பாக இல்லை. ஆனால், அவன் அந்தக் கம்பளிச் சட்டையில் மிக அற்புதமாகத் தோற்றமளித்தான். அதை வேறு எந்த வார்த்தைகளாலும் விளக்கமுடியாது. நம்பமுடியாமல், தன்னைத்தானே பார்த்துக்கொண்ட அவன் மனது, ஆனால் அதன் விலை… தன்னை மறந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான். “இது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. நான் விலையை வேண்டுமானால் குறைக்கிறேன்” என்று அவனாகவே முன்வந்து சொன்னான். ஆயினும் அது அவனுடைய குடும்பத்தால் செலவிடக்கூடிய தொகை அல்ல.

“விலை மிகவும் அதிகம்” என்றான் ஜேம்ஸ்.

அழகியல் காரணங்களுக்காகவும் இன்னும் வேறு சில காரணங்களுக்காகவும் அவன் அதை வாங்கவேண்டும் என்று அந்த விற்பனையாளன் விரும்பினான். சோர்வுற்று மெலிந்துபோனவனாயிருந்த அந்த இளைஞன் அவனை மிகவும் ரசித்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஜேம்ஸ் அதுவரை அறியாதிருந்த பல்வேறு விதமான கட்டாயங்களினால், அவனுக்குள் இருந்த கண்ணுக்குத் தெரியாத மதிப்பீடுகள் புரண்டன. பேரழிவை ஏற்றுக்கொள்வது போன்ற உணர்வோடு அவன் அதை வாங்கினான். அந்த இளைஞனின் பார்வை தன்னைத் தொடர்ந்து வந்தது என்பதை அறிந்தவனாக, அவன் அந்தக் கடையை விட்டு வெளியேறினான்.

இப்போது அவன் அதை என்ன செய்வது? அவனால் அதை வீட்டுக்குக் கொண்டுபோக முடியாது. ஜில் திகைத்துப் போவாள். அது குடும்பத்தினுடைய இரண்டு மாதச் செலவுக்கு ஈடான விலையுள்ளதாக இருந்தது. அவனை அவன் குடும்பம் சொந்தம் கொண்டாடியதைப் போலவே, சொந்தம் கொண்டாடிய அவனுடைய அலுவலகத்திற்கு அதை அவன் எடுத்துச் சென்றால், உடனே அந்த கம்பளிச் சட்டை விரித்து வைக்கப்பட்டு, எல்லோராலும் வியக்கப்படும், ரசிக்கப்படும். “ஏதாவது குறுக்கெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்றீர்களா? அல்லது ஏதாவது லாட்டரி அடித்ததா?” என்பது போன்ற ஏராளமான கேள்விகள் எழும். அவனுக்கு அது தெரியும். அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவர்கள் நினைப்பார்கள். அவனால் அதை எங்கே வைக்கமுடியும்? அவன் அதை பத்திரமாகச் சுற்றி, தன்னுடைய மேசையின் இழுப்பறைகளின் அடியில் இருந்த ஒரு அறைக்குள் வைத்தான்.

அன்று இரவு, அவன் தன் மனைவியின் பொன்வண்ணமான தலைமுடியைத் தடவிக் கொடுத்தவாறு, அவளுடைய மென்மையான கன்னங்களை ஸ்பரிசித்தபடி, “நான் உன்னை நேசிக்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன்” என்றான். அவள் கலகலவென்று சிரிப்படி, “அது சரி, உங்களுக்கு என்ன ஆயிற்று, எனக்கு அது தெரிந்தாக வேண்டும்” என்றாள்.

அவனுக்குள் உணர்வுகள் தீவிரமாகக் கொதித்தெழுந்து அலைமோதியதும், அவன் கைகளை விரித்தவாறு படுக்கையில் புரண்டு சத்தம் போட்டுச் சிரித்தான். ஜில்லின் அதிர்ச்சியில் சிவந்த முகம் அவனை நோக்கிக் குனிவதைக் கண்டதும் அவர்கள், இருவரும் அந்த பயங்கர விலையுள்ள ஆடைகளை ஒன்றாக அணிந்துகொண்டு சென்றால், எப்பேர்ப்பட்ட தம்பதிகளாகக் காட்சியளிப்பார்கள் என்று எண்ணினான்… சரி, எங்கே போவது?

அவனுக்கு இன்னமும் நான்கு நாட்கள் விடுமுறை மீதமிருந்தது. அவனுக்கு அவை வேண்டியதில்லை. அந்த நாட்களில் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.

மறுநாள் உணவு இடைவேளையின்போது, அவன் திருடனைப் போல அவனுடைய அலுவலகத்துக்குள் சென்றான். அவனுக்குத் தேவைப்பட்ட ஏதோ ஒன்றை மறந்துவிட்டதாகச் சொல்லிக்கொண்ட, அந்த கம்பளிச் சட்டையை எடுத்தான். ஒரு குற்றவாளியைப் போன்று ஒளிந்துகொண்டு ஆண்களுக்கான ஒப்பனை அறைக்குள் சென்று, அதை அணிந்துகொண்டு, அலுவலகத்திலிருந்து புறப்பட்டான். அவனால் எங்கே போகமுடியும்?

ரிடஸூக்குப் போனான். அங்கே அவனைப் பிறர் பார்த்தது, கவனித்தது போக அவன் மற்றவர்களை கவனித்தபடி தேநீர் வேண்டுமென்று சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்தான். இங்கு அவனுடைய கம்பளிச் சட்டை குறிப்பிடத்தக்க கவனத்தோடு பார்க்கப்படாவிட்டால் அவனைப் பற்றிய பல விஷயங்களும் தவறானவை, அவனுடைய ஷூக்கள், அவனுடைய காற்சட்டை, அவனுடைய தலைமுடியை வெட்டியிருந்த பாணி என்று உடனடியாக, அவனுக்குப் பட்டது. அவன் மேலே அணிந்திருந்த அந்த இத்தாலிய கம்பளிச் சட்டை மட்டும்தான் அந்த இடத்திற்குச் சற்றுப் பொருத்தமானதாக இருந்தது.

அதுவேறு எங்கு அணியப்பட வேண்டும்? ஒருவேளை நண்பர்களுடன் ஆடம்பரமான உல்லாசப் படகில் பயணம் செய்யும்போது… கதகதப்பான ஒரு கடற்கரையில்… அந்தி மாலை நேரம் வளர்ந்து, சிலுசிலுப்பான காற்று வீசும்போது… ஒரு ஆடம்பர பங்களாவில் இருக்கிற தருணத்தில்… முக்கியமான விஷயம் என்னவென்றால், என்ன உடுத்துகிறார்கள் என்பதை கவனிக்கிற கூட்டத்தில் அடுத்தவர்கள் இதைப் பார்த்துப் பாராட்டக்கூடிய இடத்தில் அது அணியப்பட வேண்டும். ஏற்கெனவே அவன் அதைத் தவறான இடத்துக்கு, தவறான முறையில் அணிந்துகொண்டு வந்துவிட்டான் என்பதைப் போல உணர்ந்தான். அறை நிறைந்திருந்தது. அங்கிருந்தவர்கள் தேநீர் அருந்துவதிலும் கேக்குகளை உண்பதிலும் மும்முரமாக இருந்தார்கள். யாரும் அவனை கவனிக்கவில்லை. ஆமாம். ஒருவரும் அவனை கவனிக்கவில்லை. ஓர் இளைஞன், அந்தக் கடையிலிருந்த விற்பனையாளர் இளைஞனைப்போல அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். ஜேம்ஸ் இப்போது பார்க்கப்பட்டான். எடை போடப்பட்டான். விலை நிர்ணயிக்கப்பட்டான். அந்த இளைஞனோடு இன்னொருவனும் சேர்ந்துகொண்டான். இரண்டு பேரும் ஜேம்ஸ் அங்கு இருப்பதைக் குறிப்பாகப் பார்த்தார்கள். அவனுடைய கம்பளிச் சட்டையைப் பார்த்தார்கள். பிறகு அவனைப் பார்த்தார்கள். அவர்கள் இருவரும் ஃபேஷன் தொழிலில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்று எண்ணிக்கொள்வது சுலபமாக இருந்தது. ஜேம்ஸ் தான் அருந்திய தேநீருக்குப் பணம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான். ஏதோ ஒரு கடையில் நுழைந்து திருடிவிட்டதைப் போலவோ, அல்லது அவனுடைய துறையிலேயே ஏதோ திருட்டை செய்துவிட்டதைப் போலவோ அவன் ஒருவிதமான குற்றவுணர்வுக்கு ஆளானான்.

அந்தக் கடை இருந்த தெருவுக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறிப்போய், கடைக்குள் நுழைந்தான். வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. அது பணச்சுழற்சி மந்தமாக இருந்த காலம். சோர்வு மிக்க அந்த மெலிந்த இளைஞன். தான் அப்படி எரிச்சலோடு இருப்பதற்குத் தக்க காரணம் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புவது வெளிப்படையாகத் தெரியுமாறு, தெருவை உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். ஜேம்ஸ் அங்கு ஏன் வந்திருக்கிறான் என்பதை அவன் உடனடியாகப் புரிந்துகொண்டுவிட்டான். இருவரும் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்தபடி நின்றார்கள். ஜேம்ஸின் முகம் மன்னிப்புக் கேட்பது போலவும், கோரிக்கை விடுப்பது போலவும் இருந்தது. இளைஞன் முதலில் குற்றம் சாட்டுவதற்குத் தயாராக இருப்பவனைப் போல, ஒரு தகராறுக்குத் தயாராக இருப்பவனைப் போலக் காட்சியளித்தான்.

“என்னால் இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்க முடியாது. எனக்குப் பைத்தியம் பிடித்திருந்திருக்கவேண்டும்” என்றான் ஜேம்ஸ்.

இளைஞனுடைய முரட்டுத்தனம் அவனைவிட்டு விலகியது. அவன் இந்த உலகத்தின் தவறான போக்கைப் பற்றி சற்றே கவலையோடு சிந்திப்பவனைப் போலத் தோற்றமளித்தான். பிறகு தலையை அசைத்தபடி, மிக இனிமையாக, “நல்லது… நான் அப்பொழுது என்ன நினைத்தேனென்றால்…” என்றபடி அவன் அந்த கம்பளிச் சட்டையை வாங்கிக்கொண்டான். அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. ஒரு மக்கிய காவி வர்ணத் தாளில் அவன் அதைச் சுருட்டிக்கொண்டான். பிறகு அது ஏற்கெனவே இழுப்பறைக்குள் இருந்த இடத்தில் வைத்தான். பிறகு ஜேம்ஸ் கொடுத்துவிட்டுப் போயிருந்த செக்கைத் தேடினான். அது இன்னமும் அங்கேயேதான் இருந்தது. அதை எடுத்துக் கிழித்துப் போட்டான். பொறுமையாக பல்வேறு ஆவணங்களை அடுக்கினான்.

“நான் சொல்வதை நீங்கள் நம்பவேண்டும். நான் உண்மையாகவே உங்களுக்கு மிகவும் நன்றி பாராட்டுகிறேன்” என்றான் ஜேம்ஸ்.

“இப்படி நடப்பது உண்டுதான். நல்லது. என்றைக்காவது நீங்கள் இதையே எனக்குச் செய்யலாம் என்றான்” அந்த இளைஞன்.

இந்த சற்றும் பொருந்தாத, வேறு ஏதோ ஒரு விகல்பமான எண்ணத்தை உள்ளடக்கிய அந்த வார்த்தைகளை சொல்லிக்கொண்டு, அவன் கண்களை உருட்டியதும் ஜேம்ஸும், அவனும் சேர்ந்து சிரித்தார்கள்.

பிறகு சிரித்தபடியே ஜேம்ஸ் கடையைவிட்டு தன்னுடைய அலுவலகம் நோக்கிச் சென்றான். அவன் அலுவலகத்தில் தன்னுடைய வீட்டுப் பிரச்னை தீர்ந்துவிட்டதாகத் தெரிவித்தான். அவர்கள் விரும்பினால் தான் மறுநாளே வேலைக்கு வரத் தயாராக இருப்பதாகச் சொன்னான். அவர்கள் அதைத்தான் விரும்பினார்கள். வருமானவரித்துறை எப்பொழுதுமே ஆள் பற்றாக்குறையினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த துறை. அவன் இரண்டே நாட்களுக்கான விடுமுறையை மட்டும்தான் எடுத்திருந்தான்.

இனிமேல் அந்த இரண்டு தினங்களைப் பற்றி நினைக்கும்போது அவனை ஒரேயடியாக அழித்து விட்டிருக்கக்கூடிய ஓர் அபாயகரமான தேசத்திற்கு அவன் சென்று மீண்டு வந்ததாகவே எண்ணுவான்.

நெசவு செய்யப்பட்டு, வண்ணம் தோய்க்கப்பட்டு யாரோ ஒரு புத்திசாலியின் மூளையில் உதித்திருக்கக்கூடியதான ஒரு கம்பளிச் சட்டை இப்படிப்பட்ட கதவுகளை அவனுக்குள் திறந்துவிடும் என்று எண்ணும்போது…

அவனுடைய ஜில் அணிந்த அந்த அழகிய ஆடைகளும் இப்படியான கதவுகளைத் திறந்துவிடக்கூடும் என்றால்…

ஆனால் தன்னுடைய கனவுருப் புனைவாக்கத்திற்குள் சென்றுவர அவள் மேற்கொண்ட உல்லாசப் பயணங்கள் நீண்ட நாட்களுக்குத் தொடரவில்லை. மயக்கும் அழகு வாய்ந்த ஜில்லைப் போன்ற ஒருத்தியாக இருந்தாலும்கூட அவள் கடைகளுக்குள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருப்பதற்கும் ஒரு எல்லை இருந்தது. விற்பனையாளர்களின் கனவுருப் புனைவாக்கத்திற்கும் ஒரு எல்லை இருந்தது. அந்த எல்லையை எட்டியபின் அங்கேயிருந்து, அவள் மேலும் எங்கே போய்விட முடியும்? அதுதான் விஷயம். அவளும் ஜேம்ஸைப் போல அபாயங்களும் பணக்காய்ச்சலும் கொண்ட உலகத்தில், தன்னை இழந்தவளாக “சரி, அடுத்து இங்கிருந்து நான் வேறு எங்கே செல்வது?” என் று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட தருணம் ஒன்று வந்திருக்கும்.

அவனுடைய இதயம் புண்ணாகிப் போயிருந்தது. அது அவளுக்காக வருந்தியது. என்றைக்கும் நிறைவுறாமல் இருக்கப்போகிற அவளுடைய இன்னொரு பக்க ஆளுமைக்காக அது வருந்தியது. அவள் தொடர்ந்த அவனுடைய நேசம்பொழியும் நல்ல அன்பு மனைவியாக இருப்பாள். அவனும் தொடர்ந்து நேசம் மிகுந்த நல்ல கணவனாக இருப்பான். அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டிருக்கும் பொழுதுகளில் எங்கேயோ கண்ணுக்குத் தெரியாத ஓர் இடத்தில் அவளுடைய அந்த இன்னொரு ஆளுமை நடனமாடிக் கொண்டிருப்பதையும், அது ஒரு வண்ணத்துப் பூச்சியைவிட, மென்மையானதாக இருப்பதையும், அவளால் அந்த ஆளுமையைக் காணமுடியும் என்பதையும், ஆனால் அதை அவனும் பார்க்கிறான் என்பதை ஒருபொழுதும் அவளால் அறியமுடியாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். தான் அவளை உளவு பார்த்ததை அவளிடம் அவன் தெரிவிப்பது என்பது ஒருபோதும் சாத்தியமேயில்லை. திருமண வாழ்க்கையை தழைக்கச் செய்து வைத்திருக்கக்கூடியதான உயிருடன் புத்தம்புதிய தூய காற்றினால் அத்தகைய ஒரு ரகசியத்தை தாங்கிக்கொள்ள முடியாது.

அவனுடைய மனைவியாகிய அவள், தோட்ட வேலை மற்றும் சமையல் செய்தல், குழந்தையைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லுதல் என்ற ஒரு ஆளுமையும், யாரும் கண்டுவிட்டால் கண்டவர்கள் ரசிக்கவும், கௌரவிக்கவும், ஏங்கவுமான ஒரு தோற்றத்தை தனது இன்னொரு ஆளுமையாகவும் கொண்டிருந்தாள் என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். ஆனால், இத்தாலிய கம்பளிச் சட்டையை அணிந்த அவனோ என்றால் நல்லது… அவனால் கௌரவக் குறைச்சலான இடங்களைத் தவிர அந்தத் தோற்றத்துக்குப் பொருத்தமான வேறு இடம் எதையும் யோசிக்க முடியவில்லை. இது எதனால்? இதில் எங்கேயோ ஓர் இடத்தில் நிச்சயமாக ஒரு அசமத்துவம் இருக்கிறது அல்லவா?

– டோரிஸ் லெஸ்ஸிங் – தமிழில் திலகவதி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *