அஞ்சுவது அறிவார் தொழில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 4,932 
 

என்னங்க.. இங்க வந்து பாருங்க..காலையிலேயே ஆரம்பிச்சிட்டாங்க..

புனிதாவின் அழைப்பை கேட்டு கிச்சன் போர்ட்டிகோவிற்கு வந்தான் சரவணன்.

என்ன ஆச்சு..என்று கேட்டவனிடம், பக்கத்திலிருந்த காலி மனையை நோக்கி கை காட்டினாள். அங்கு மூன்று மதுப்பிரியர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர்.

நீங்க ஆம்பளைங்க எல்லாம் சேர்ந்து போய் கேட்க கூடாதா.. என்று கேட்ட புனிதாவிடம் ஒன்றும் சொல்லாமல் போய் சோபாவில் அமர்ந்தான்.

இவர்கள் வசிக்கும் தெருவில் ஒரு பெரிய காலி மனை இருக்கிறது. அதை சுற்றி ‘ப’ வரிசையில் வீடுகள் இருக்கின்றன. காலி மனையில் மூன்றடி உயரத்திற்கு செடிகளும் புதர்களும் வளர்ந்திருந்தது. இது மதுப்பிரியர்களுக்கு வசதியாக போய் விட்டதால், தினமும் இங்கு அமர்ந்து குடித்து விட்டு அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர். அந்த இடத்தின் அருகில் இருக்கும் தெரு விளக்குகளையும் உடைத்து விட்டார்கள். எதிர்த்து கேள்வி கேட்டவர்களின் வீட்டு ஜன்னல்களும், சில கார் கண்ணாடிகளும் உடைந்தன. காவல் துறையிடம் புகார் செய்தும் பலனில்லை. போலீஸ் ஜீப் வரும்போது மட்டும் ஓடி விடுவார்கள், பிறகு அதே ‘பழைய குருடி கதவை திறடி’ கதை தான்.

“இங்க லேடீஸ், குழந்தைங்க எல்லாம் இருக்காங்க.. நீங்க வேற எங்கேயாவது போங்களேன் ப்ளீஸ்..” என்று சரவணனே ஒரு முறை அவர்களிடம் நாகரீகமாக பேசியிருக்கிறான். “உன் வீட்டுக்குள்ள வந்தா உட்காந்துகிட்டு இருக்கோம்.. மூடிக்கிட்டு போ..” என்றார்கள். உடலுக்கு கெடுதல் என்று தெரிந்தும், தன்னையே அழித்து கொள்கிறவர்களிடம் பேசி பலனில்லை என்று வந்து விட்டான். சரவணனும் புனிதாவும் திருமணமாகி மூன்று ஆண்டுகளாக இங்கு குடியிருக்கிறார்கள். சொந்த வீடு என்பதால் சட்டென்று காலி செய்யவும் முடியவில்லை.

மதுப்பிரியர்கள் அமரும் இடங்களில் மட்டும் மண் தரை தெரியும். மீதி இடம் முழுவதும் செடிகளும் முட்புதர்களும் மண்டி இருந்தன. அடுத்த வீட்டுக்காரருக்கு இந்த மனையின் உரிமையாளரை நன்றாக தெரியும். ஆக்கிரமிப்பிற்கு பயந்து அவர் இடத்தை சுத்தம் செய்வதில்லை என்று கூறினார். சமீப காலமாய் குப்பைகளை வேறு அனைவரும் இங்கு போடுகின்றனர். கேட்டால் “அப்படியாவது அவனுங்க இங்க தண்ணியடிப்பது நிக்குதான்னு பாப்போம்” என்றனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, அதற்கு மாறாக நாற்றம் தான் குடலை பிடுங்கியது. இதனால் பல வீடுகளில் ஜன்னல்களை திறப்பதே இல்லை.

மது விற்பதற்கு நேரம் ஒதுக்கியதை போல், மது அருந்தும் இடத்திற்கும் வரைமுறைகளை அரசாங்கம் வகுக்க வேண்டும் போல.. என்று புலம்பி கொண்டே போனாள் புனிதா.

சில நாட்களுக்கு பின், புனிதாவிற்கு ஜுரம் அடித்ததால் அவளை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருந்தான் சரவணன்.

“டேய் மச்சான்..சீக்கிரம் காலை பிடி.. டேய் சீக்கிரம் ஆட்டோவை எடு..” காலி மனையிலிருந்து ஒருவனை தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி கொண்டிருந்தார்கள். அவன் கண்கள் மேலே சொருகி, வாயில் நுரை வழிய பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.

என்னங்க ஆச்சு அவனுக்கு..

“தெரியலை புனிதா.. நீ மெதுவா பின் சீட்டுல உட்காரு.. ” என்று காரை ஸ்டார்ட் செய்தான். மருத்துவர் சரவணனின் நண்பர் என்பதால் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் அவரை பார்த்து விட்டார்கள். புனிதாவிற்கு லேசான ஜுரம் என்று சில மாத்திரைகளை கொடுக்க சொன்னார்.

இரண்டு நாள் கழித்து, காலை நடை பயிற்சிக்கு கிளம்பினான் சரவணன். வழக்கத்திற்கு மாறாக தெருவாசிகள் நிறைய பேர் வெளியில் நின்று கொண்டிருந்தார்கள்.

சரவணன் சார்.. என்று அழைத்த பக்கத்து வீட்டுக்காரரை திரும்பி பார்த்து “சொல்லுங்க..” என்றான்.

நீங்க தான் இந்த தெருவுல மொத ஆளா எழுந்திரிச்சு வாக்கிங் போறீங்க.. இனிமே கொஞ்சம் கவனமா போங்க..

ஏன் சார்..

கடைசி வீட்டம்மா காலையில ஒரு பாம்பை பார்த்திருக்காங்க. அங்க பாருங்க.. என்று காலி மனையில் இருந்த சற்று பெரிதான ஒரு முள் செடியை காட்டினார். அதன் மீது நீளமாக ஒரு பாம்பு சட்டை இருந்தது.

அடேங்கப்பா.. ஒரு ஐந்தடி இருக்கும் போலயே.. என்றான் சரவணன்.

ஆறடிக்கும் மேல இருந்திச்சின்னு அந்தம்மா சொன்னாங்க..

சரிங்க சார்.. நான் கொஞ்சம் கவனமாவே இருக்கிறேன்.. என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

நடை பயிற்சி முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவனிடம், “என்னங்க.. அன்னைக்கு ஒருத்தன மயக்கமா கூட்டிகிட்டு போனாங்களே.. அவன அன்னைக்கு இங்க தான் பாம்பு கடிச்சிடுச்சாம்.. பாவம் செத்து போயிட்டானாம்..” என்றாள் புனிதா.

அடப்பாவமே.. என்றான்.

ஆமாங்க.. இன்னொரு விஷயம்.. நாங்க எல்லாரும் மாடியில இருந்து பாத்தோம். மொத்தம் ரெண்டு பாம்பு சட்டை இருந்துச்சி.. இனிமே நீங்க கார் எடுக்கும் போது கொஞ்சம் கவனமா இருங்க..

சரிம்மா.. என்றான் சரவணன்.

அடுத்து வந்த நாட்களில் பல பேர் அந்த பாம்பை பார்த்து விட்டார்கள். மூன்றாவது வீட்டு அம்மா, காலையில் கோலம் போடும் போது தெரியாமல் மிதித்து விட்டதாகவும், மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் கூறினார்.

ஒரு சிலர் வனத்துறையிடம் புகார் தெரிவித்தார்கள். அவர்களும் வந்து தேடி பார்த்தார்கள், ஆனால் எதுவும் சிக்கவில்லை. “இப்படி நிறைய குப்பை இருந்தா.. எலிகள் வரும். எலிகளை பிடிக்க ராத்திரி நேரத்துல பாம்புங்க வரும்.. மொதல்ல குப்பை போடுறத நிறுத்துங்க.. திரும்ப யாரவது பாம்பை பார்த்தால் தகவல் சொல்லுங்க.. என்று கூறிவிட்டு போய் விட்டார்கள்.

பாம்புகளுக்கு பயந்து மதுப்பிரியர்களின் வருகை அடியோடு நின்று விட்டது. யாராவது குப்பை போட்டால், மற்றவர் சண்டைக்கு சென்றார்கள். ஒருவரையொருவர் கண்காணிக்க ஆரம்பித்ததால், குப்பை கொட்டுவதும் அடியோடு நின்றது. திடீரென்று ஒரு நாள் காலி மனையை ஒட்டி இருந்த தெரு விளக்குகள் சரி செய்யப்பட்டு, அதில் ஒரு அரசியல் கட்சியின் கொடி தொங்கி கொண்டிருந்தது.

அன்று இரவு அலுவலகத்திலிருந்து வந்த சரவணனிடம், “அந்த காலி இடத்தோட ஓனர் வந்திருந்தார்.. இன்னும் ரெண்டு வாரத்துல இடத்தை சுத்தம் பண்ணி காம்பவுண்ட் கேட் போட போறாராம்.. மாச வாடகைக்கு காரை அங்க பார்க் பண்ணிக்கலாம்னு சொன்னார்.. அதுக்கு மாசம் எழுநூறு ரூபாவாம்.. ஒரு வாட்சமேனும் வைக்க போறாராம்..” என்றாள் புனிதா..

நல்லது.. நம்ம காரும் தெருவுல தான நிக்குது. நாமளும் அங்கேயே நிறுத்திக்கலாம்.. என்றான் சரவணன்.

என்னமோங்க.. இப்பெல்லாம் தைரியமா தெருவுல நடமாட முடியுது. ஜன்னலை திறந்தா கெட்ட வாடை எதுவும் வர்றது இல்லை.. கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்.. என்றாள்.

சரவணன் தனக்குள் சிரித்து கொண்டான். சென்ற மாதம் நடை பயிற்சிக்கு செல்லும் வழியில் கிடந்த பாம்பு சட்டைகளை கொண்டு வந்து, இங்கு போட்டவன் இவன் தான். கலப்பட மதுவால் இறந்தவனை, பாம்பு கடித்து இறந்ததாக பக்கத்துக்கு தெருவில் இருக்கும் டீ கடையில் சொல்லி புரளியை கிளப்பியதும் இவன் தான். தெரு விளக்குகளை சரி செய்தது நகராட்சி தான், ஆனால் அதில் கட்சி கொடியை யாருக்கும் தெரியாமல் அதிகாலையில் வைத்தது இவன் தான்.

“உண்மையில் இங்கு யாரும் எந்த பாம்பையும் பார்க்கவில்லை, பாம்பை பார்த்ததாக சொன்ன கதைகள் எல்லாம் அவரவர் பயத்தின் வெளிப்பாடே.. பயம் தொற்று நோயை போல் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவி விட்டது” என்று மனதிற்குள் சிரித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *