(1969 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாலைப்பொழுது நெருங்கி வரும் வேளை – கல்கிசைக் கடற்கரையில் இன்பக் கொள்ளை போயா நாள். – பொங்கி எழுந்து கொண்டிருந்தது. சனக்கூட்டம் எதைப் பார்ப்பது எதை ரசிப்பது அழகிற்கு அழகு செய்யும் அப்ஸராஸ்கள். கட்டை கவுன். பெல். சாரி… ஒசரி… விதவிதமான சினிமா நடிகைகளை விட அரைகுறை ஆடைகளில் காளையரை மயக்கும் பார்வையில் நடை பயின்றனர் – நாரீகள். இளைஞர்களின் சினிமா பாணி சேஷ்டைகள்….. ரசனைக்கு மிஞ்சிய வர்ணனைகள். இரு அர்த்த வசனங்கள்… பாடல்கள்… வயோதிபர்களின் ஏக்கப் பார்வைகள். பா இவைகளை பார்த்த வண்ணம் ப நடந்து கொண்டிருந்தேன். இந்த பக்த கோடிகளின் மகிழ்ச்சியில் நாமும் பங்குகொள்வோம் என்பதைப் போல பேரலைகள் ஒன்றன் பின் ஒன்றாக என் கால்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. தென்றலின் ஜிலு ஜிலு அணைப்பு என்னை மெய்ம்மறக்கச் செய்தது. இந்த நேரம்…
“ஹலோ ! மிஸ்டர்…”
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். எளிமையின் அழகும், இயற்கையின் வனப்பும் சங்கமமாகும் ஓர் இளம் சிட்டு என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். பழுப்பு நிற, ஔவையார் சாரி அணிந்து கொண்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அவள். நானும் முறுவலுடன் “ஹலோ! மெடம்…….” என்றேன்.
கபோலே – “நீங்கள் மட்டும் தானா வந்தீர்கள்….. – என்றாள் அவள். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. முன்பின் அவளை நான் கண்டதில்லை. நீண்ட நாள் அறிமுகமானவள் போல பேசுகிறாளே! வாய்க்கு வந்த எச்சிலை விழுங்கிக் கொண்டே “நீங்கள் யார்?” என்றேன்.
“உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். உங்கள் பெயர் மணிமாறன்தானே? நான் டைப்பிஸ்ட் மேரியின் பெஸ்ட் பிரண்ட். பல முறை உங்களுடன் அவளைப் பார்த்திருக்கிறேன். என் பெயர் சரஸா…” –
“ஓ…. ஐஸி…” “ஆமா…. மேரி வரவில்லையா?”
எனக்கு எண்ணமோ போல் இருந்தது. தொழில் விடயங்களில் நானும் மேரியும் ஒன்றாகப் பழகுவோமே தவிர சேர்ந்து எங்கும் சென்றதில்லை. அவள் அப்படியான பெண்ணுமல்ல. என்றாலும்… பெண்களுடன் சுற்றுவது நாகரிகம் அல்லவா; அதனால்…. “இன்று அவள் வரவில்லை ” என்றேன்.
“ஓ… மைகோட்… நான் முக்கியமாக ஒரு செய்தி சொல்ல வந்தேன். இப்பொழுது எங்கே சந்திக்க முடியும்?” அவள் பேச்சில் அவசரம் தொனித்தது.
“பெரும்பான்மை போயா நாட்களில் மேரி வீட்டுக்குப் போய்விடுவாள். நாளைக்கு டிப்பார்ட்மென்டில் சந்திக்கலாம்……” நிதானமாகக் கூறினேன்.
“அப்படியா… நாளைக்கு முக்கியமான வேலை இருக்கிறது. இன்று தப்பினால் ஒரு கிழமைக்கு என்னால் அவளைக் காண முடியாது. அவசிய செய்தி ஒன்று அவளிடம் கூற வேண்டும்….. நீங்கள்…” என்றவாறே என்னைப் பார்த்தாள்.
“பரவாயில்லை , நீங்கள் விரும்பினால் கூறுங்கள். நான் சொல்லிவிடுகிறேன்” என்றேன்.
“ரொம்ப தாங்ஸ்…. இந்த இடத்தில் நெரிசல் அதிகம். முழுசாக இந்த இடத்தில் பேசுவது சரியல்ல. அங்கே தெரியும் அந்த நிழலுக்குப் போவோம்
என்றவாறே என் கைகளைப் பிடித்தாள். நான் திடுக்கிட்டேன். என் உடல் பதறியது. ஒருவாறு அடக்கிக்கொண்டேன். நாகரிக காலத்தில் பெஷனாக நடக்க வேண்டும். இல்லாவிட்டால் பட்டிக்காட்டானாக நினைத்து விடுவாள் எனப் பயந்து அவள் காட்டிய திசையை நோக்கினேன்.
சிறு தென்னஞ்சோலை சற்று தூரத்தில் இருந்தது. அடுத்தவர்கள் பார்க்க முடியாதவாறு ஒரே அடர்த்தி. இளங்கதிர்கள், சுருக்கமாகச் சொல்வதாய் இருந்தால் நவீன காதல் பூங்கா! அவ்விடம் போவதில் எல்லை யில்லா இன்பம் கண்டேன். எதிரே உவப்பு நீர். பக்கத்தே இளம் உடலழகி என் உள்ளத்தில் இன்ப வாரிதி. நானும் அவள் கைகளைப் பற்றிய படியே நடந்தேன். பார்ப்பவர்கள் இளம் தம்பதியர் என நினைப்பார்கள். அவ்வளவு நெருக்கம் எங்களிடம் இருந்தது…
சோலையை அடைந்தோம். அங்கே கடற்கரை மணல் இதமளித்தது. அவள் உட்கார்ந்து கொண்டாள். நானும் பக்கத்தே இருந்து கொண்டேன். குறிப்பிட்டுச் சொல்ல வந்த செய்தியை அவள் சொல்லவில்லை. என்னைப் பற்றி பலமாக விசாரித்தாள். அவளைப் பற்றிய செய்திகளையும் என்னிடம் கூறினாள். அந்த சூழ்நிலையில் என் மனோநிலை அவளுடன் பேசுவதில் இன்பம் கண்டது.
மாலை மயங்கி இருள் வேகமாக சூழ்ந்து கொண்டிருந்தது. வசந்தம் பவனி வரும் மாருதம். நீல வானத்தில் பதினான்காம் பிறை மோகனப் புன்னகையுடன் கிளம்பிக் கொண்டிருந்தது. இந்நேரம் அவள் என் மடியில் சாய்ந்தாள். என் உள்ளம் மின்னலாகியது. ஒரு நொடிதான். என் மனம் சிலந்தி வலையைப் பின்னிவிட்டது, கவர்ச்சி! சபல புத்தி! அவள் வெளி உடலில் சிதறிக் கிடந்த இளமைப் பொலிவின் கவர்ச்சியால் என் உள்ளமதில் தோன்றிய வேட்கையைத் தணித்துக் கொண்டிருந்தேன். அவள் அரவணைப்பு மலரில் தூங்குவது போன்ற உணர்ச்சியைத் தந்தது. இன்ப லாகிரி. உணர்வை இழந்தேன்.
இந்நேரம்….
“அடேய் ராஸ்கல்…” இடிபோன்ற இரும்புக் கரம் ஒன்று என் முதுகைப் பதம் பார்த்தது.
மயக்கம் தெளிந்தேன். திரும்பிப் பார்த்தேன். அங்கே கிருதா மீசையுடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவள் “அப்பா” என்றவாறே அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
“சேர்…நான் வந்து…உங்கள்…மகளை…நடுங்கிக் கொண்டே கூறினேன்.
“என்ன, கதையா அளக்கிறாய்? தனியாக ஒரு பெண் அகப்பட்டால் போதும். அவளிடம் வாலாட்டுவது உங்கள் தொழில்” பல்லை நற நற என்று கடித்தவாறே முஷ்டியால் ஒரு குத்து விட்டான் என் மூஞ்சியில் நான் தலைகுப்புற மணலில் வீழ்ந்தேன். அடியா அது… கராட்டே அடி.. நாலைந்து பேர் அவ்விடத்தில் கூடிவிட்டனர். அவமான உணர்ச்சியுடன் கீழே சாய்ந்து கொண்டேன்.
“பாருங்க ஐயா, தனியாக ஒரு பெண்ணுக்கு வர முடியாது. காடையர்களின் தொல்லை. பாருங்க….. என்னுடன் வந்த என் மகளின் கையைப் பிடித்து இழுத்தான். இந்த அயோக்கியனை பொலிஸாரிடம் பாரம் கொடுக்க வேண்டும் என்றவாறே மீண்டும் முஷ்டியை உயர்த்திக் கொண்டு என்னை நெருங்கி வந்தான். ஒருவன் அவனை தடுத்துப் பிடித்துக் கொண்டான். கூட்டத்தில் இருந்த இன்னொரு ஆள் என்னை நெருங்கி வந்து காதோடு காதாக “தம்பி, பெரிய கேஸ். பொலிஸ் என்று போனால் வில்லங்கத்தில் மாட்டிக் கொள்வாய். எனக்கு இவனை நன்றாகத் தெரியும். பேசாமல் ஏதாவது இருந்தால் கொடுத்துவிடு! நான் சமாதானம் பண்ணிவிடுகிறேன்” என்றான்.
எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. வயிற்றை வளர்க்க விபரீதம் புரியும் நவீன கொள்ளைக் கூட்டம். ஒருவனைப் பற்றி முழு விபரங்களையும் அறிந்துகொண்டு பெண்களை ஏவிக் கொள்ளையடிப்பது இவர்கள் தொழில், சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது வீடுகளையும் உடைப்பார்கள். விதவிதமாக நாளுக்கு நாள் நகரில் தோன்றும் இவர்களிடம் நானும் வகையாக மாட்டிக் கொண்டேன். என்ன செய்ய உரலுக்குள் தலையைப் போட்ட பிறகு உலக்கை இடி விழத்தானே செய்யும்? – எனக்கு மயக்கம் வரும் போலிருந்தது.
சிறிது நேரத்தில் கண் விழித்துப் பார்த்தேன். என் பக்கத்தில் யாரும் இல்லை. கையிலிருந்த நானூறு ரூபா பெறுமதிவாய்ந்த பேவர் லூபா ரிஸ்லட், பார்க்கர் பேனா, சன் கிளாஸ், மணிபேர்ஸ் ஒன்றுமே இருக்கவில்லை. டயரி மட்டும் பக்கத்தில் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. வெள்ளி நிலா ஒளியூட்டிக் கொண்டிருந்தது. தென்றலாக வீசிய காற்று சற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது, கடலின் ஓ…என்ற சப்தம் என்னைப் பார்த்து பரிதாபக் குரல் எழுப்புவது போல் இருந்தது. பேசாமல் எழுந்து நின்றேன். நாகரிக உலகமே! இதுவா உன் நாகரிகம்? என் கண்களில் முத்தாக கண்ணீர் துளிர்த்தது.
– ராதா – 1969 – பெப்ரவரி, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.