கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 3,647 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜகதா லந்துட்டா. வேறே அத்தாட்சியே வேண்டாம். இன்னிக்குக் காலையிலிருந்து வீடு நிர்த்தூளியாறதே. போதாதா? கபாலி டப்பா மாதிரி வீட்டையே தலைகீழாக் கொட்டித்தட்டியாறது. ஈசல்மாதிரி மூலைக்கு மூலைக்கு. அதுக்குள்ளே புகார் . வென்னீருள்ளே ஸோப்பைக் காணோம். ஸோப்பு எனக்கென்னத்துக்கு? பொண்ணாப் பொறந்து குப்பை கொட்ட ஆரம்பிச்சதே மொதக் கொண்டு கடலைமாப் பொடிதான், ஆனால் அவருக்கு வேணுமே? வெச்சது வெச்ச இடத்தில் இல்லேன்னா வீட்டை ரெண்டு பண்ணுவாரே! வாய் கொப்பளிக்கறப்போ ‘ஜகதாவே, என்னடி! தண்ணு ஸோப்பு நாத்தம் அடிக்கிறதே’ன்னப் போத்தான் பார்த்தேன். பாத்தா, அண்டா அடிலே சோப்புவில்லை கிடக்கு. தாவாரத்து மூலையிலே தொடைப் பம் அவுந்து விசிறியா சரிஞ்சு விழுந்திருக்கு. கையோட்டிப் புள்ளைக்கு முதப் புள்ளை, கொப்புளம் ஊதி ஊதிக் காலாக்கரைச்சிருக்கு.

இதெல்லாம் சரிப்படுத்திட்டு அப்பாடான்னு இடுப்பு நிமிர்ரத்துக்குள்ளே முன் மாதிரி இருக்கா? கூடத்துலே பக்கத்தாத்துக் குழந்தை வீல் வீல்னு கத்தறது . என்னைக் கண்டதும் ‘ககே-கபே -பாகே – லாப்ளீகா-ன்னு ஏதோ உளறிக் கொட்டிண்டு ரமேஷைக் காமிச்சு காமிச்சு விக்கி அழறது. வயிறு தொப்பையெல்லாம் வாயெச்சில் தொப்பமா வழிஞ்சிருக்கு.

“என்னடா பண்ணே கொழந்தையே?”

“ஒண்ணுமில்லே பாட்டீ! ஆசையாயிருந்தது. தொட் டாலே ஏன் பாட்டி இதுக்குத் தொட்ட இடம் திட்டா செவக்கறது? அடித்தொடை சதை ரொட்டி மாதிரி மெத்து மெத்துனு சொகம்மாயிருக்கு –அப்ப்பா-“

“அடப் பாவி!” கொழந்தையை அப்படியே வாரிண்டேன். அதுக்கு என் மேலே தனி ஆசைதான். கிருஷ்ண விக்ரஹம் மாதிரி கொழு கொழுன்னு. அதன் அம்மாவுக்கு அது போடற கத்தல் காது கேக்காமல் இருக்கணுமேன்னு நேக்குக் கவலை. ஏற்கெனவே கொழந்தை அவள் இடுப்பிலே ருந்து எங்கிட்டே தாவறதே அவளுக்கு ஒரு சமயம் போல் ஒரு சமயம் வேண்டியில்லே. ஆனால் அவள் கை வேலையா யிருக்கப்பவும் ஆம்படையானோடே கை கோத்துண்டு சினிமாவுக்குப் போறப்பவும் குழந்தையைப் பார்த்துக்க அகிலா மாமி வேண்டி இருக்கே ஒழிய; குழந்தை தானே கால்சறுக்கு விழுந்தாலும் மாமி தள்ளிவிட்டாளா?” ன்னு கேக்கறதுக்குக் கூசறதில்லை .

இப்போக்கூடப் பயமாயிருக்கு. தோட்டத்துலே விளை யாடிண்டிருக்குகள். போடற கத்தல் காதைப் பொளியறது. என்னத்தைப் பண்றதுகளோ? எந்தச் செடியைப் புடுங்கி எறியறதுகளோ? எந்தப் பாத்தியைத் திமிதிமின்னு மிதிக் கறதுகளோ? ஆசையாப் போட்டேன். அவரும் சேர்ந்து தோண்டி, நட்டு, தண்ணி பாய்ச்சி இருக்கார். கொஞ்சம் நலுங்கினாலும் எனக்குமேல் அவருக்குக் கண்ணுலே ரத்தம் சொட்டும். அதை நெனைச்சுண்டா பயமாயிருக்கு. ஜகதா ஓரோரு தடவையும் வந்து தங்கிட்டுப் போறவரைக்கும் ஓரோரு நாளையும் இன்னிப் பொழுது போச்சா இன்னிப் பொழுது ஆச்சான்னு எண்ணி எண்ணி மூச்சுவிட வேண்டி தாயிருக்கு .

இன்னிக்கு வரப்பவே அவளுக்கும் அவள் அப்பாவுக்கும் சின்ன தர்க்கம் வந்தூடுத்து.

அப்போத்தான் அவர் எங்கோ கிளம்பிண்டிருந்தார். “பாண்ட்'” (அது என்ன பாஷையோ – குழாய் மாதிரியிருக்கே) அதை மாட்டிண்டிருந்தார். வாசல்லே கார் வந்து நிக்கற சத்தம் கேட்டது. நான் அடுப்பங்கரையிலே வேலை யாயிருந்தேன். வந்தால் என்ன, அவரைப் பார்க்க யார் யாரோ வரா. ஜகதான்னு கண்டேனா? அவளை நான் எதிர்பார்க்கவுமில்லை.

“அப்பா வந்தூட்டேன் போங்கோ. நீங்களும் கிளம்பிண்டிருக்கேள். நானும் வந்துண்டிருக்கேன். உங்களுக்கு நல்ல சகுனம் தான் போங்கோ -?”

“அட ஜகதாவா?”

“நானே தான், வேறென்னவா உங்களுக்குத் தோணறது?”

“எப்போ வந்தே ?”

“அதான் வந்துண்டேயிருக்கேனே தெரியல்லியா?”

“தெரியறது தெரியறது”

“என்னப்பா ஒரு மாதிரியா பேசறேள்?”

அதுக்குள்ளே நல்ல வேளையா நான் போயிட்டேன். ஈரக்கையை முந்தானையிலே துடைச்சுண்டு.

என்னைக் கண்டதும் அத்தனை குழந்தைகளும் “பாட்டி பாட்டீ”ன்னு ஓடி வந்து மொச்சுண்டுடுத்துக்கள். குழந்தைகளை எனக்குப் பிடிக்கலையா என்ன? அதுகளின் துஷ்டத்தனத்தைக் கண்டாத்தான் கதி கலங்குகிறது!

“அட வாங்கோடா என் கண்களா! வாம்மா ஜகதா, எப்போ வந்தே? சௌக்கியமா? வரப் போறதா ஒரு வரி போடக் கூடாதா?”

ஜகதா என்னை ஏன் இப்படி ஏற இறங்கக் கண்ணால் அளந்து பாக்கறா?

ஒரு காலை வாசற்படி மேல் வெச்சுண்டு ஜகதா நின்னாள்.

“அப்பாவுக்கு நான் வந்தது அவ்வளவா பிடிக்கல்லை போலிருக்கு அம்மா, ஒரு தினுஸாப் பேசறார்!”

“நான் ஒண்ணுமே சொல்லலையே!” என்கிறார், அவர் திருதிருன்னு முழிச்சுண்டு. அவர் போடறது வேஷமா நிஜ மான்னு எப்பவுமே தெரியாது.

“அப்பா என்னை இன்னும் வான்னு சொல்லல்லேம்மா”

“நான் தான் சொல்றேனே; உன் அப்பா சுபாவம் உனக்குத் தெரியாதா ஜகா?”

“நீ சொன்னால் போதுமா அம்மா? பெத்தவாளும் பொண்ணுமானாலும் கோத்ரம் மாறிப்போச்சு. இடம் மாறிப் போச்சுங்கறது எல்லாம் இருக்கே! இன்னும் எவ்வளவோ இருக்கே!”

“நீங்கதான் வாயைத் திறந்து வான்னு சொல்லுங்களேன்! வாய் முத்து உதிர்ந்து போயிடுமா?”

“ஜகதா வா வா வா வா வா-“

அப்புறம்தான் ஜகதா காலை யெடுத்து வீட்டுக்குள் வெச்சாள். அடேயப்பா, ஜகதா ரொம்ப ரோசக்காரி. இவ்வளவு முன் கோபத்தை வெச்சுண்டு ஒரு பொம்மனாட்டி குடித்தனம் பண்றான்னா, மாப்பிள்ளை சாதுவாய் வாய்ச்சது அவளுடைய – நம்முடைய பூர்வ பூஜாபலன்னு தான் சொல்லணும்.

ஆனால் அப்புறம் கூட அவள் அப்பா அவளை சும்மா , விடல்லே, அவர் நாக்கு சும்மாயிருக்காது. அதுலே தான் பாம்பு விளையாடிண்டேயிருக்குமே!

“ஜகதா நீ காப்பி எல்லாம் குடிச்சாச்சு. ராத்தூக்கம் கெட்ட கோபம், ரயில் பிரயாண அசதி எல்லாம் இப்போ தணிஞ்சிருக்கும், நீ சௌக்கியமா? உன் குழந்தைகள் சௌக் கியமான்னு நான் கேட்க வேண்டியதில்லை, இனிமேல் என் சௌக்கியத்தை நான் பாத்துக்கணும். இருந்தாலும் அது களும் சௌக்கியமா? உன் ஆம்படையான் பாவம், அவர் சௌக்கியமா? இதெல்லாம் பத்ததிக் கேள்விகள் இருக்கே, கேட்டாகணுமே!”

“கேளுங்கோ கேளுங்கோ. நன்னாக் கேட்டாகணும். எப்போத்தான் நீங்க தெரிஞ்சுக்கறது? உங்களுக்குக் பொண் ணானாலும் உலக அனுபவத்தில் உங்களைவிட நான் மூத்தவள் என்கிறதை நீங்கள் ஒப்புக்கொள்ளணும். நான் ஆறு குழந்தைகளுக்குத் தாயார்”

அவள் அப்பா அனுமார் மாதிரி கைகட்டி வாய் புதைச்சுண்டார்.

“இதென்ன நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா என்ன? இருந்தாலும் இப்போ வந்த விஷயம் என்னன்னு நான் கேக்கலாமோ?”

அதுக்குள்ளே நான் இடைமறிச்சேன். “இதென்ன தத்துப் பித்துன்னு கேட்டுண்டு?–“

“அதுக்கில்லே அகிலா, இப்போத்தானே ஆறு மாஸத் துக்கு முன்னாலே இவளை இங்கே பார்த்தாப்போலே இருக்கு. அதுக்குள்ளேயும்? என் பெண் தான் வந்திருக்காள் இல்லேன்னு சொல்லல்லே. ஒருவேளை மாப்பிள்ளையைத் தனியாச் சமைக்கவிட்டு அவரை சமையல்லே ‘எக்ஸ் பெர்ட் டா ஆக்கறதா உத்தேசமா? இல்லாட்டா அவன் சமையல் இவள் நாக்குக்கு ஒத்துக்கல்லையா?”

அவர் இப்படிப் பேசறப்போல்லாம் எனக்கு அடி வயத்தை பகீர் பகீர்ங்கறது . இந்த மனுஷனுக்கு இதே சுபாவமாப் போச்சு. ஆகாயத்துலே கயத்தைக் கட்டி அதன் மேலே கண்ணைக் கட்டி நடந்து நடந்து.

ஆனால் ஜகதாவுக்கு என்னவோ கோபம் வல்லே.

“இந்தக் குழந்தைகளை வெச்சுண்டு, இந்தத் தடவை எப்படி சமாளிக்கறதுன்னு வந்துட்டேன். அவாளும் பெரிய காம்பிலே போறா, திரும்பி வரதுக்கு நாலு அஞ்சு மாஸ மாவது ஆகுமாம்.”

“அதற்காக?”

ஜகதாவின் முகத்திலே கோடி அசதி கொடி படர்ந்தது.

“நான் என்னப்பா பண்றது?”

“அப்படின்னா?” அவர் நிஜமாவே திகைச்சு நின்றார்.

எதையோ தேடறாப் போலே சுற்றுமுற்றும் பார்த் துட்டு ஜகதா எழுந்திருந்து விருக்குனு தோட்டத்துக்குள் போனாள். அப்பா, புளியங்கொட்டை மாதிரியிருந்தவள் எப்படிப் பூசணிக்காயா மாறிட்டா! கூடத்திலிருந்தே தோட்டத்தில் ஒவ்வொரு செடி கொடி மரமும் நன்னாத் தெரியும். ஜகதா சரசரன்னு நேரே போய் பவழமல்லி மரத்தைப் பிடிச்சு உலுக்கினாள். பொலபொலன்னு பூக்கள் அவள் மேலும் கீழேயும் உதிர்ந்தன. ஜகதா நேரே திரும்பி வந்து நடுக்கூடத்தில் எங்களைப் பார்த்துண்டு புன்னகை பூத்துண்டு பேசாமே நின்னா. அவள் தலையிலும் தோளி லும் புடவை மேலும் பூக்கள் ஒட்டிண்டிருந்ததுகள். அவள் முகத்திலே சிவப்பும் வெளுப்பும் வர்ணச் சாந்தாக் குழைஞ்சு “டால்” அடிச்சது. அந்த முகத்திலே வெட்கமும் அர்த்தமும் சந்தனம் மாதிரி கம்முனு கமாளிக்சுது. எப்படியிருந்தாலும் என் ஜகதீசுவரி அழகு அழகுதான். அழகை என்ன தான் அழிச்சாலும் அழிச்சூட முடியுமோ?

சே!

நான் வந்திருக்கப்படாதோ?

எனக்கென்னவோ அடிக்கடி இப்படித் தோன்றுகிறது, ஒரு தடவை, ஒண்ணில்லாட்டா ஒண்ணு அப்பாவுக்கும் எனக்கும் தர்க்கம் வந்துடறது. அம்மாவுக்கும் கூடத்தான். சம்சாரம் பெருத்துப் போச்சு . யாருக்கு? எனக்குத்தான் , அவாளுக்கில்லை. அப்போ ஆசைக்கு ஒரு பொண்ணா முன் னால் நான் பொறந்துட்டேன் , ராஜகுமாரியாத்தான் வளர்ந்தேன். இன்னும் ராணியாத்தான் இருக்கேன். என்றாலும் –

ஆஸ்திக்கு ஒரு அம்பியிருந்தான். இன்னிக்கி அவன் நாள். இன்னிக்கு அந்தப் பிரம்மச்சாரி பையன் வந்து சாப்பிட் டான். எல்லாம் பஞ்சபட்ச பரமான்னமாத்தான் பண்ணி யிருந்தது. அந்தப் பயல் புது வேஷ்டியைக் கட்டிண்டு கையிலே ஒரு வெள்ளிக் காசையும் வாங்கிண்டு போயிட்டு வரேன் மாமின்னு போயிட்டான். அம்மா ஈஸிசேரிலே சாஞ்சுண்டு செவுத்தைப் பார்த்துண்டு இருந்தவள், மணி ஒண்ணாச்சு, ரெண்டாச்சு, முணாச்சு ஏந்திருக்கவேயில்லை, அவள் கண்ணுலே தண்ணு விடல்லே. அழுதாத்தேவலாமே!

“அம்மா மணியாச்சே! சாப்பிடவா”ன்னு கூப்பிட பயமாயிருக்கு.

இன்னிக்கு மோர் குழம்பையும் சிவக்க எடுத்த வடை யையும் பாக்கறப்பவே நாக்குலே தண்ணி அப்படி ஊறித்து. என்ன பிரயோசனம்? அம்மா மோரிலே பருக்கையைப் போட்டுக் கரைச்சு பிழிஞ்சு எறிஞ்சுட்டுக் குடிச்சா, எனக்கு எல்லாமே ஆறிப்போயிடுத்து. அப்புறம் என்ன வேண்டி இருக்கு?

அப்பா ஆத்துக்கே வல்லே.

இருந்தாலும் எது விடறது? இருந்தாலும் இந்த நாளும் வந்து தானே ஆகணும். அந்தந்த நாள் அதன தன் வேளைக்கு. இப்படியே தான் ஒரு ஒருநாள் வாஸமும் வருஷ மாப் போயிண்டிருக்கு.

கொல்லைப்புறத்துலே பவழமல்லி மரம் இருக்கே, நான் பாவாடையும் சட்டையும் போட்டிருந்த நாள் முதல் இப்படியே தானிருக்கு. நாம் தான் மாறிண்டிருக்கோம் விடியறத்துலே நான் நாள் தவறாமே முழிப்பு வந்ததும் எழுந்து போய் பார்ப்பேன். அதனடியிலே மெத்தையை விரிச்சாப் போல் புஷ்பங்கள் நெருக்கமா உதிர்ந்து கிடக்கும். அணில் மாதிரி ஒருமுறை அதில் பிரண்டுட்டு வருவேன், என்மேல் மெத்து மெத்துன்னு ஒட்டிண்டிருக்கும்..

கவியாணத்தின் போது கூட ஊஞ்சல் ஜோடிச்சபோது பார்த்தவா அத்தனை பேரும் அதிசயப்பட்டுப் போனா. என்ன ஜ்வலிப்பு! என்ன ஜ்வலிப்புடீ! ஒண்ணொண்ணும் ஒரு ஒரு நட்சத்திரமா உயிர்விட்டு மின்னித்து. அஞ்சு நாளைக்குமா அப்படியே வாடாமல் இருக்கும்!

எப்படித்தான் ஒருநாள் கூட அலுக்காமே, ஒருநாள் தவறாமே அன்னியிலிருந்து இன்னிவரைக்கும் பூக்கறதோ?

ஆனால் எனக்கு அலுத்துப் போச்சு. இந்தத் தடவை நிச்சயமா அலுத்துப் போச்சு. என்ன வேண்டியிருக்கு?

‘சே!

மாஸத்துக்கு முப்பது நாள் அவர் காம்ப் காம்புன்னு போயிடறார். இதுகளைக் கட்டி மேய்க்கப்படல்லே . ஆண் கட்டுப்பாடு இல்லாமல், பறக்கற பட்சிவாயிலிருந்து உதிர்ந்த விதை மாதிரி அது அது அதன தன் இஷ்டப்படி வளந்திண்டிருக்கு. நான் அடிச்சால் என் கை வலிக்கிறது, அதுகளுக்கு நெஞ்சுலே எங்கே பயமிருக்கு?

பண்ணற துஷ்டத்தனமோ ஸஹிக்க முடியல்லே . அழ அடிக்கறதுக்கள், பண்றதைப் பண்ணிட்டு என்னைக் கண்டதும் சிட்டாப் பறக்கறதுகள். ஓடிப் பிடிக்கறதுன்னா உடம்பு முன் மாதிரியிருக்கா? என் உடம்பே என்னைச் சுமையா அழுத்தறது. போறாத்துக்கு சுமைதாங்கியாவுமா ஆயிட் டேன்.

“டே மரியாதையா என்கிட்டே பிடிபட்டூடு. ஒரு அடி யாவது பட்டுக்கோ, என்னைக் கொட்டிக்கற வயத்தெரிச்சல் தீர”-ன்னு என் குழந்தைகளை வரம்கேக்கவேண்டி இருக்கு.

ஆத்திரம் கண் விளும்பிலே விண்விண்ணு தெறிச்சு வலிக்கிறது.

குமார் உடம்பை ஒடுக்கிண்டு அடிமேல் அடிவெச்சு நகந்து நகந்து கிட்ட வரான்.

அடிக்குத்தான் பயமோ, என்னைக் கண்டு தான் பரிதாபமோ! ரெண்டும் சேர்ந்து குழந்தை முகம் குழம்பறப்போ எனக்கும் தான் வயத்தை சங்கடம் பண்றது.

“வா வந்தூடு …”

“ஒரு அடிதான் – “னு பேரம் பேசறான்.

“மரியாதையா வந்தூடு!”

“சொன்னாத்தான். ஒரே அடிதான். இல்லாட்டா வர மாட்டேன்”

“சரி வா”

ஆனால் அவன் கையிலே அகப்பட்டுண்டதும், இதுவரை பண்ணின குத்தம், பண்ணாத குத்தம். இனிமேல் பண்ணப் போற குத்தம், அவன் மேல் ஆத்திரம் – இன்னும் கைக்கு அகப் படாதவா மேலே ஆத்திரம், காம்பிலே இருக்கறவா மேலே ஆத்திரம் எல்லாமா ஒண்ணாச் சேர்ந்து பொங்கிவர வேகத் திலே பல்லைக் கடிச்சுண்டு ஒண்ணுக்கு நாலா இழுத்து வாங் கிடறேன். ‘வீல்’ னு குழந்தை அலர்றான். அந்த அபயக்குரல் என்மேல் வீறினதும் எனக்கு மண்டை ‘வீர்ர்ர்’ ராகி கண்ணை இருட்டறது. அவனை அப்படியே வாரிக்கறேன். என் விரலின் தடிப்பை அவன் விலாவில் பார்க்கறப்போ – அவனே சேப்பு – எனக்குத் துக்கம் பீறிண்டு வரது. அவன் என் கழுத்தை இறுகக் கட்டிக்கறான். ‘ஏம்மா அழறே? ஏம்மா அழறே?” நான் ஊளையிடறேன் ; ஒத்தரையொத்தர் கட்டிண்டு ஆத்திரம் கரைய அழுது களிச்சு அடங்கறப்போ ப்ளாட்பாரத்தில் ரயில் குமுறி, இருமி, கக்கித் துப்பி, பெரு மூச்சு விட்டுண்டு நிக்கற ஞாபகம் வரது. மெதுவ்வா, என் கழுத்தைக் கட்டிண்டபடியே, கன்னத்து சதையை வாய் நிறைய அள்ளிக் கவ்வி வெடுக்குனு கடிக்கறான். “விடு சனியனே”ன்னு உதறி எறியறேன். கன்னத்துலே இன்னும் கண்ணீர் காயல்லே கண்ணோரத்தில் போக்கடாச் சிரிப்பு துளும்பறது, பனியிலே குளிச்ச ரோஜா மாதிரி.

ஆனால் அத்தோட அது அவ்வளவுதான். அடுத்த நிமி ஷம் ஆம்புலேறித் தோம்பிலே விழுந்து அதைக் கிளறி இதை நோண்டி, பூஜைப் பெட்டியிலேருந்து ஸாலிக் கிராமத்தையெடுத்து ‘அட. பாதாம்பருப்புப் புட்டு மாதிரி வயவயன்னு ருக்கே நான் விளையாட எடுத்துக்கட்டுமாம்மா”ன்னு கேக்கறது. என்னத்தைப்பண்ண?

இதுகளின் இம்சை நம்மாத்துலே, நம்மாலேயே சமாளிக்க முடியல்லியே, பிறத்தியார் வீட்டிலே பிறத்தியார் ஸகிச்சுக்கணும்னு எந்த ரூல்’லே எழுதியிருக்கு? ஆமாம் என் குழந்தைகள் விஷயத்துலே என்னைப் பெத்தவாகூட பிறத்தியார்தான்.

இன்னிக்கு அப்பாவுக்கும் எனக்கும் சண்டை. சண்டைக்குக் காரணம் என்ன? குழந்தைகள் தான் ; என் குழந்தைகளும் எனக்கு வாயும் இருக்கற வரைக்கும் சண் டைக்கு என்ன குறைச்சல்? தப்பு என் குழந்தைகள் மேல் தான் இருக்குன்னு எனக்கு நன்னாத் தெரியறது. ஆனால் நியாயம்னு தீர்க்கவரப்போ, சமயத்திலே கண்ணை மத்தியான்னம் ரெண்டு, மூணு மணியிருக்கும். நம்மாத் துக் குழந்தைகளுக்கு விஷமம் பண்ண சொல்லித் தரணுமா? பக்கத்தாத்து செல்வங்களும் சேர்ந்தூடுத்து. எல்லாம் சேர்ந்து கூடத்திலே கட்டில்லே சுருட்டிப் போட்ட படுக்கை எல்லாத்தையும் கலைச்சு கீழே உருட்டித் தள்ளியிழுத்து கூடாரம் போடறேன்னு விரிச்ச மெத்தையை தலைமேலே போட்டுண்டு, அதன் அடியிலே மறைஞ்சுண்டபடியே தவழ்ந்துண்டு, ஒண்ணு மேலே ஒண்ணு இடிச்சு விழுந்து பிரண்டு கத்தலும் சிரிப்புமா ஒரே அமக்களம் தமுக்கடி. எனக்கே பொறுக்க முடியல்லே.

ஆனால் என் கத்தல் அதுகளின் இரைச்சலில் அமுங்கிப் போச்சு.

அப்பா பாவம் வாசல் ரூமிலே தூங்கிண்டிருந்தா. அப்பாக்குத் தூக்கம் கலைஞ்சு போயிடுத்து. விடுவிடுன்னு வந்தா. முகம் ஒரே ருத்ராகாரம். கைக்கு எந்த மெத்தை முதல்லே அகப்பட்டுதோ அதை அப்படியே தூக்கி எறிஞ்சா. அதன் அடியே இருந்ததின் முதுகிலே ஒரு அறை அறைஞ்சா. மத்தது அத்தனையும் சிட்டாப் பறந்தூடுத்துக்கள். திடீர்னு அடிபட்ட பயத்துலே ஸீமாக்கு அரையோடே ஊத்திடுத்து. எனக்கு அப்படியே வயத்தை ஒட்டிண்டது.

“என்னப்பா என் குழந்தையை பேய் மாதிரி அறைய றேள்?” எனக்கே நான் என்ன வார்த்தை சொன்னேன்னு சொன்னப்புறம் தான் தெரிஞ்சது. வார்த்தை நாக்குலே ருந்து வந்தா தெரிஞ்சிருக்கும், அடி வயத்துலேருந்து வரப்போ ?….

அப்பாவையே நான் அறைஞ்சுட்ட மாதிரி ஒரு வினாடி திக்கு முக்காடி அப்படியே நின்னூட்டா. அப்புறம் மெதுவா திரும்பினா என் பக்கம், சிலை திரும்பற மாதிரி. நேக்குப் பயமாயிருந்தது. ஆனால் துணிச்சல் ஒண்ணு தனியா எங்கிருந்தோ வந்துடுத்து.

“குழந்தைகளா இது? ஒண்ணெண்ணும் ஓரொரு வானரம்னா -”

“வானரம்னு சொல்லாதேங்கோ என் குழந்தைகளை” ன்னு சீறினேன்.

“வானரம்னு சொல்லல்லே கிஷ்கிந்தாக்கள்ன்னு அழைக்கட்டுமா?”

நேக்கு ஒரேயடியா அமுகை வந்தூடுத்து.”வாடி கண்ணே ஸீமா”ன்னு அவளை இழுத்து அணைச்சுண்டு விக்கி விக்கி அழுதேன். (அதென்னமோ தெரியலை. அழற துக்கு மாத்திரம் கூட ஒரு ஆள் வேண்டியிருக்கு!)

அப்பாக்கு மூஞ்சி கிளிஞ்சல் சுண்ணாம்பு மாதிரி தளைச்சுது.

இத்தனை நாழி இதெல்லாம் அம்மா வேடிக்கை பார்த் துண்டிருந்தவ. கிஷ்ணிச்சுண்டு ஏதோ தினுஸ்ஸா குரலைப் பாகுமாதிரி ஸன்னமா இழுத்துண்டு :

“ஏண்டிம்மா ஜகதா, உன் குழந்தைகளை எடுத்துக் கொஞ்சவும் சீராட்டவும் உரிமையுண்டு – துஷ்டத் தனம் பண்ணா ஒரு தட்டுத்தட்ட பெரியவாளுக்கு சுதந்திரம் கிடையாதா?”

‘கிடையாது” சுண்டைக்காய்த் தோசை கடிபடறாப் போல வெடுக்குன்னேன். அம்மாக்கு ஆத்திரம் புட்டூண்டுடுத்து .

‘ என்னடீ சுயபுத்தியோடேதானிருக்கையா இல்லே -“

“நீ சும்மாயிரு” அப்பா அம்மாவை அடக்கினார். “ஜகதா -” அப்பா குரல் நிதானத்திலிருந்தே, நெஞ்சுலே எவ்வளவு அடக்கிண்டிருந்தார்ன்னு தெரிஞ்சுது. “ஜகதா. நாம் சின்ன விஷயத்தைப் பெரிசு பண்ண வேண்டாம். என் வீட்டிலே உன்னை நான் பேசி அவமானப் படுத்தக்கூடாது. அதனாலே நான் இத்தோடே நிறுத்திண்டுடறேன். இப்போ உன் மனசைப் புண்படுத்தின துக்கு என்னை மன்னிச்சுடு.”

அப்பா விர்ர்ன்னு தன் ரூமுக்குப் போய்க் கதவைச் சாத் திண்டுட்டார். எனக்கு வாயடைச்சுப் போச்சு.

“ரொம்-ம் -ம் -ப சமத்துத்தான் போன்”னு அம்மா மொண மொணன்னு ஆசீர்வாதம் பண்ணிண்டே அடுக்களைக்குப் போனாள்.

சுவத்துலே சாஞ்சுண்டு முழங்காலைக் கட்டிண்டு நான் பாட்டுக்கு மணிக்கணக்கிலே உட்காந்துண்டிருந்தேன். என்னைச் சுத்தி மறுபடியும் உலகம் இயங்க ஆரம்பிச் சுடுத்து. குழந்தைகள் சத்தம் போட்டிண்டிருந்ததுகள்.

அப்பா ஜோரா தலையை சீவிண்டு . வண்ணான் மடிப்பி லிருந்து புதுசா ஜரிகை வேஷ்டியும் சந்தனக்கலர் ஜிப்பாவும் உடுத்திண்டு (அப்பா ஜிப்பா போட்டுண்டா என்ன வாட்ட சாட்டமாகக் காட்டறது!) ஸீமாவைத் தூக்கிக் கொஞ் சிண்டு வெளியிலே போயிட்டா. அம்மா கீழே அலங் கோலமா கிடக்கிற படுக்கையெல்லாம் சுருட்டி கட்டில்லே வெச்சுட்டு ஸ்னானம் பண்ணிட்டு வந்தாள். (விழுப்புப் பட்டுண்டாளே!)

“பால்மா!” பளிச்சுனு தேச்ச வெண்கலச் சொம்பை அம்மா கொண்டு வந்து ஊஞ்சல் பலகை மேல் வெச்சா.

தோள் மேல் அணை கயிறு தொங்க பால்காரன், பால் குவளையோடு சொம்பு மேல் குனியறான்.

“நுரையை அடக்கி ஊத்தேண்டா!”

“அடக்கித் தானே ஊத்துறேன், பாத்துட்டுதானே இருக்கிங்க!”

பால் ஒரு தினுசா படபடத்துண்டு குவளையிலிருந்து சொம்புலே யிறங்கி, சொம்பு நிறைஞ்சு நுரை வழியறப்போ அதுக்கு ஒரு உசிரு இருக்கு. எப்படியும் அது பசுவின் ரத்தம் தானே!

அம்மா கூடத்தைப் பெருக்கினாள். என்கிட்ட வந்ததும் என்னை சுத்திப் பெருக்கிண்டு போனாள். நான் உக்காந்திண்டேயிருக்கேன்.

அம்மா தோட்டத்துக்கு போய் கொஞ்ச நேரத்துக் கெல்லாம் வந்து, மடியிலிருந்து ஊஞ்சல்லே பூவைக் கொட் டறாள். புலுபுலுன்னு சின்னப்போரா குவிஞ்சு நிக்கறதுகள். ஒருவேளை நான் தொடுப்பேன்னு எண்ணமோ என்னவோ!

ஆனால் நான் உக்காந்த இடத்தை விட்டு அசையல்லே.

அம்மா மறுபடியும் அதையெல்லாம் வாரி எடுத்து மடிலே போட்டுண்டு சமையலறைக்குப் போயிட்டா.

வெத்தல் குழம்பு சுண்டக் காயற வாசனை கம்முனு சமையலுள்ளேருந்து கிளம்பறது. (என்ன தான் நீ ஆயிரம் சாம்பார், கறி பண்ணு, அந்த வெத்தக் குழம்புக்கும் சுட்ட அப்பளாத்துக்கும் இருக்கிற ஏர்வைக்கு மிஞ்சித்தான் எல்லாம்!)

அம்மா பூச்சரத்தோடு வந்து ஒண்ணுமே பேசாமே எனக்கு சூட்டிட்டுப் போனா, அவளும் வெச்சிண்டிருக்கா. ஆனால் எனக்குத்தான் நிறைய.

கொல்லைப்புறத்திலேருந்து கொஞ்சம் கொஞ்சம் வானத்தின் வர்ணம் தெரிகிறது. வெளுப்பு நீலமாகி, நீலம் பச்சையாகி, பச்சை சேப்பாகி, சேப்பு இப்போ மசிக்கறுப்பா ஆயிண்டேயிருக்கு.

அம்மா சுவாமி விளக்கை நமஸ்காரம் பண்ணறாள். மனஸுக்குள்ளே ஸ்தோத்திரத்தின் உச்சரிப்பில் அவள் உதடு மாத்திரம் அசையறது. அம்மா முகத்தில் லக்ஷ்மி களை அப்படி சோபிக்கிறது. அம்மா திடீர்னு சின்னப் பொண்ணாத் தோணறா, நான் பெத்துப் பெத்துக் கட்டுத் தளர்ந்து கிழவியாயிட்டேன். என் மனஸுலே என்னென்னெல்லாமோ படறது.

கிழக்கு மேற்காகி, இடம் வலமாகி. நடக்கக் கூடாத தெல்லாம் நடக்கக் கூடிய – ஏன், நடந்துண்டேயிருக்கிற ஒரு எல்லைக் கோட்டிலே நான் நிக்கற மாதிரி தோணறது. சே! என்ன இதெல்லாம்! நம் வாழ்க்கையிலே எவ்வளவோ அழகான நிமிஷங்கள் எத்தனை இருக்கு! அப்பவே மொக்கு கட்டி அப்பவே மலர்ந்து, அலரி, நெஞ்சின் நினைப்பிலே பட்ட மாத்திரத்திலேயே தீஞ்சு கருகிப்போற எத்தனையோ நிமிஷங்கள்! இப்படி நினைச்சுண்ட அந்த நிமிஷத்திலேயே நெஞ்சுக்குள்ளேயே ஒரு அழகான எண்ணம் பூக்கற மாதிரி யிருக்கு. அந்த உணர்ச்சியிலே உடல் பரபரக்கிறது. ஆனந்தமாயிருக்கு! ஒரே பயமாயிருக்கு . தாங்க முடிய வில்லை. ஆவி, உடம்பிலேருந்து பறந்துடறாப் போலே சிட்டுக்குருவியா ரக்கையை அடிச்சுக்கறது.

ரெண்டு கையாலும் மார்பையழுத்திப் பிடிச்சுக்கறேன். கொஞ்சங் கொஞ்சமா என் பரபரப்பு அடங்கறது. புண்ணுலே தைலம் தடவினமாதிரி நெஞ்சுக்கு இதமாயிருக்கு. மனஸுகு திடீர்னு ஒரு காரணமுமில்லாமே உலகத்தோடே சமாதானமாயிருக்கணும்னு ஆசைப்படறது.

குழந்தைகள் விளையாடிட்டு திரும்பிவர சப்தம் வாசல்லே கேக்கறது.

ஸீமா குடுகுடுன்னு ஓடிவந்து மடியிலே விழறா. ”அம்மா இதோ பாரு” ன்னு வாயைக் குதப்பிண்டே என்னத்தையோ மூக்குக்கு நேரே நீட்டி நீட்டிக் காண்பிக் கிறாள். உதட்டோரத்தில் சாக்கலேட் பாகு வழியறது.

“யார் வாங்கிக் குடுத்தா?”

“தாத்தா -“

“சை கழுதை!” அப்பா குரல் பின்னாலேருந்து கேக்கறது. “என்னைத் தாத்தான்னு கூப்பிடக் கூடாதுன்னு சொன்னேனா?”

‘மறந்து போச்சு தாத்தா -“

“இங்கே வாங்கோளேன் -” அம்மா சமையலறையி லிருந்து கூப்பிடறா. அப்பா போகிறார். ஆம்படையான் பெண்டாட்டி ரெண்டு பேரும் என்னவோ ரகஸியமா பேசிக்கறா.

எனக்கு அவர் நினைவு வரது. இப்போ என்ன பண்ணிண்டிருக்காரோ?

ஒரு வேளை நிஜமாவே அவர் சௌகரியத்தை நான் சரியாய்க் கவனிக்கல்லையோ!

போற இடத்திலெல்லாம் அவருக்கு சாப்பாடும் தண்ணி யும் சௌகரியமா அகப்படறதுன்னு நிச்சயமாச் சொல்ல முடியுமா? கண்ட இடத்திலே அகப்பட்டதைப் பொங்கித் தின்னுண்டு. அதுவும் இல்லாத இடத்தில், ரெண்டு வாழைப் பழத்தையோ கிழங்கையோ முறிச்சுப் போட்டுண்டு அவர் காலத்தைத் தள்ள வேண்டியது தானே! நல்லவயசு காலத் தில், இஷ்டப்படி தின்னு அனுபவிக்கிற. நாளில் அவர் தலை யிலே மாத்திரம் அப்படி எழுதியிருக்கணுமா? கேட்டால் அதுக்கும் தான் பதில் சொல்றார். ‘ .எல்லாம் நம் குழந்தை களுக்காகத் தான். எல்லாம் ஓடறகாலத்தில் ஓடி சம்பாதிச் சால்தானே, திண்ணையோடு விழுந்து கிடக்கற நாளுலே நம் குழந்தைகள் வாயிலே புகுந்து புறப்படாமயிருக்கலாம்!” அவர் அப்படி சொல்ற சமயத்திலேயே நான் குடும்பத்தைப் பெருக்கிண்டிருக்கேன்.

புரியாத ஒரு ஆத்திரம் திடீர்னு எனக்கு; என் வயத்துலே யிருக்கறத்துக்கு மேலே இன்னமும் நான் எத்தனை குழந்தை களுக்கு தாயாராக – என் தலைவிதியும் எனக்கு சக்தியுமிருக்கோ அத்தனை குழந்தைகள் மேலேயும் பள்ளம் மேடு தெரியாத மூடாந்தமான ஒரு கோபம் ஜ்வாலை மாதிரி கிளம்பித்து. அதிலேருந்து ஒரு தீர்மானமும் உருவாகிப் புறப்பட்டது.

சட்டுனு எழுந்திருந்தேன். சுவாமி பிறையில் சூட டப்பாவிலேயிருந்து எலுமிச்சம்பழம் பெரிசுக்கு ஒரு கற்பூரக் கட்டியை எடுத்துண்டேன். இங்கே இருந்தால் கூட தெரிஞ் சுடும்னு கையுள்ளே மடக்கிண்டு தோட்டத்துக்குப் போனேன். கடையக் கடைய வெண்ணெய் கெட்டியாற மாதிரி நெஞ்சில் தீர்மானம் திடமாயிண்டிருக்கறது எனக்கே தெரியறது.

அப்போ என் மேல் ஏதோ உதிர்ந்து தோள் மேல் தங்கித்து. எடுத்து உன்னிப் பார்க்கிறேன். நட்சத்திர வெளிச்சத்துலே, உள்ளங்கையில் ஒரு பவழ மல்லியின் வெளுப்பு பளீர் என்கிறது. எனக்கு ஒரே அதிர்ச்சியா இருந்தது.

அது ஏதோ ஒரு எச்சரிக்கையின் அடையாளமாயிருந்தது.

என் கையில் அது தங்கி என்னையே விசனத்தோடு பாக்கற மாதிரி இருந்தது.

“அடி ஜகதா. முட்டாள்! என்ன காயம் செய்யத் துணிஞ்சுட்டே? நீ பிறக்கறத்துக்கு முன்னாலேருந்து நான் இங்கே நின்னுண்டு என் வேலையை செஞ்சுண்டிருக்கேன், நீ இன்னும் முளைச்சு மூனு இலை விடல்லை. என்ன அலுப்புடி உனக்கு வந்துடுத்து? என்னத்தடி கண்டுட்டே அதுக்குள்ளேயும் நீ?”

“அம்மா அம்மா!” எனக்குத் திடீர்னு அழுகை வந்து டுத்து. பயங்கூட இல்லை. என்னையறியாமலே தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு மரத்தை அப்படியே கட்டிண்டுட்டேன். தேம்பித் தேம்பி வரும் அழுகையில் என் உடல் சருகா நடுங்கிற்று. ஆனால் என்மாரை யழுத்திண்டிருந்த நெஞ்சுச்சுமை குறைய ஆரம்பிக்கிறது.

“அம்மா மன்னிச்சுடு என்னை, எனக்கு ஒண்ணும் தெரியல்லே!”

“முட்டாள் முட்டாள்! பெத்திருக்கையே தவிர புத்தி எங்கே போச்சு? நீ பிறந்து வளர்ந்ததிலிருந்து என் பூக்களைச் சூடிண்டு, அப்புறம் எனக்கே பழியைத் தேடி வைக்கணும்னு பாக்கறையா?”

“ஜகதா! ஜகதா!”

அம்மாவின் மிரண்ட குரல் கொல்லைத் தாழ்வாரத்தி லிருந்து எங்களை எட்டித்து.

“சரி போ உன் அம்மா கூப்பிடறா! மூஞ்சியைத் துடைச்சுக்கோ! ஆ அப்படி! இனிமேலாவது சமத்தாயிரு. குழந்தையா லக்ஷணமாயிரு, மேதாவியா நினைச்சுண்டூடாதே”

நான் அடிமரத்தைத் தொட்டு கண்ணில் ஒத்திண்டேன். இந்த சமயம் நான் மறக்க முடியாத் சமயம். அது எனக்கே. சொந்தமான ரகஸ்ய சமயம் இல்லியா?

“என்னடி ஜகதா எங்கேடி போயிட்டே? இந்த இருட் டிலே தனியா இப்படிப் போவாளா? பூச்சி பொட்டு இருந்து பிடுங்கினா என்னடி பண்ணுவே? நாங்கள் யாருக்கு என்ன பதில் சொல்றது?”

அம்மாவின் குரலில் அழுகை நடுங்கித்து.

“என்னை எதுவும் ஒண்ணும் பண்ணாதம்மா!’ ,

“நீ என்ன அப்படி வரம் வாங்கிண்டு வந்திருக்கையா?”

நான் சிரிச்சேன். ‘உனக்கு எப்படித் தெரிஞ்சுதோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் நீ சொன்னபடி தான்!”

“நீ பேசறதும் சிரிக்கறதும் வருத்தப்பட்டுக்கறதும் உடனே சந்தோஷப்பட்டுக்கறதும் யாருக்குடிம்மா புரியறது?”

“உனக்கு இப்போ ஒண்ணும் புரிய வேண்டாம்.”

அப்பா பின்னால் கையைக் கட்டிண்டு கூடத்தில் நின்னிண்டிருந்தார்.

“சரி சாப்பிடவா -“

நான் கொண்டுபோன கற்பூரத்தை ஏத்திக் கீழே வெச் சுட்டு சுவாமி பிறைக்கு நமஸ்காரம் பண்ணினேன்.

“ஏதேது கொளுத்தியிருக்கிற கற்பூரத்தைப் பார்த்தால் இன்னும் பத்து மாஸத்துக்கு பக்தி பண்ணவேண்டாம் போலயிருக்கே!”

நான் நெருப்புக் கொழுந்தையே பார்த்துண்டிருந்தேன். உள்ளூர சிரிப்பு வந்தது. நான் சூடக்கட்டியை முழுங்கி யிருந்தால் அப்பாக்கு இது மாதிரி வேடிக்கை பண்ண முடிஞ்சிருக்குமோ? அது எரிய எரிய என் நெஞ்சு ப்ரகாசமடைஞ்சது.

“ஜகதா சாப்பிடவரையா?”

அம்மா முகம் வெளிறிப் போயிருந்தது. அவள் குரலில் மரியாதையிருந்தது.

அப்போத்தான் எனக்கு எவ்வளவு பசி என்கிற நெனப்பு வந்தது. எனக்கு மாத்திரமா பசி , வயத்திலேயிருக்கிறதுக்கும் சேர்த்துன்னா பசி!

பாதி சாப்பிடறப்போ அம்மா குழம்புஞ்சாதத்தை உருட்டி வாயிலே போட்டுண்டு ஜாக்கிரதையா:

“ஜகதா ஒரு விஷயம் வெச்சுக்கோ. நானும் நாலு நாத்தனார், மூணு ஓர்ப்படிகள், மாமியார். மாமனார் கொழுந்தன்மார் எல்லோரோடும் சேர்ந்து குடித்தனம் பண்ணிட்டுத் தான் வந்திருக்கேன். கழுத்திலே தாலி கட்டின கையை உடனே பிடிச்சு இழுத்துண்டு, தனிக்குடித்தனம் போட்டுடல்லே -“

“எதுக்கு இந்தப் பீடிகை?”

நாக்கைக் கொட்டிண்டு அம்மா, “எதுக்கு சொல்ல வந்தேன்னா சம்சாரத்துலே ஒவ்வொண்ணுக்கும் அத்தோட அது போச்சுன்னு இருந்தால் தான், மேல் காரியத்தை ஓட்ட முடியும்! ஏன்னா ஒண்ணு பின்னாலே ஒண்ணு வந்திண்டே தான் இருக்கும்.”

“ஓ – ஹ் – ஹோ ! அப்புறம்?”

அம்மா திருதிருன்னு முழிச்சா.

“அப்புறம்?”

அம்மா திருதிருன்னு முழிச்சா. அவள் முழி சரியாயில்லை.

“ஏம்மா ஒரு மாதிரியாயிருக்கே?”

“வயத்தை -“

வாக்கியத்தை முடிக்கல்லே கலத்துலே கையை உதறிட்டு குடுகுடுன்னு வென்னீருள் பக்கம் ஓடினாள்.

குமட்டல் சப்தம் அங்கிருந்து வந்தது.

நான் சாவதானமா எழுந்து கொல்லைத் தாழ்வாரத் தில் கையலம்பிட்டு வந்து மறுபடியும் சமையலுள்ளே வந்து உட்கார்ந்துண்டேன், வந்தன்னிக்கே சந்தேகப்பட்டேன்.

அம்மா உள்ளே குனிஞ்ச தலையோடு வந்து நின்னா. அவள் முகம் இப்போ அசல் ஸீமாமுகம் மாதிரியே இருந்தது. ஒரு தினுசா வேதனையும், வெட்கமும், மிரட்சியுமா, அவள் கையை இழுத்துப் பிடிச்சு உட்கார வெச்சேன்.

அம்மா என்னை நிமிர்ந்து பார்க்கல்லே. என் கழுத்து வளைவிலே முகத்தைப் புதைச்சுண்டா, ஒருகையால் அம்மாவை அணைச்சுண்டேன்.

இப்போ என் அம்மாவுக்கு நான் குழந்தையா, இல்லே என் அம்மா எனக்குக் குழந்தையா?

என் பக்கத்தில் பித்தளைக் குடலையில் இன்னும் பவழ மல்லி இருந்தது.

ஒரு கையால் அள்ளி அம்மாவின் மேல் தூவினேன். சிதறி அவள் தலைமேலும் தோள் மேலும் உதிர்ந்தது,

மரத்திலிருந்து பூவா? பூவிலிருந்து மரமா?

பூவெல்லாம் அம்மா உடம்பிலிருந்து என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டித்துக்கள். அந்த ரகஸ்யம் அதுகளுக்குத் தான் தெரியும்.

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *