இணை கோடுகள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2018
பார்வையிட்டோர்: 7,231 
 
 

ஆனந்தியின் வீட்டிற்கு அவளிடம் கூறாமலே திருமண அழைப்பிதழை மதன் கொண்டு செல்கின்றான். வீடு பூட்டியிருந்தது அவனுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. அழைப்பிதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பு எழுதினான்.

மிகக்குறைந்த அளவில் 25 பேருக்குத்தான் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளேன். அதில் நீயும் அடக்கம்.

மணமகள் ஆனந்தி என்ற உனது பெயர் இருக்க வேண்டிய இடத்தில் நந்து.

அழைப்பிதழ் கொடுத்து, அவசியம் வர வேண்டும் என அழைப்பது தான் நமது மரபு

ஆனால் திருமணத்திற்கு வருவது “உனது விருப்பம” .என்று எழுதினான். அழைப்பிதழை கடித பெட்டியில் போட்டுவிட்டு மதன் வீடு திரும்பினான்.

ஆனந்தி அன்று இரவு விருந்து நிகழ்ச்சி முடிந்து வாடகை உந்துவில் (டாக்சியில்) அவளது இருப்பிடம் சென்று கொண்டிருக்கும் போது பழைய நினைவில் மூழ்கினாள்.

தற்போது 26 வயதாகும் ஆனந்தி 3 ஆன்டுகளுக்கு முன்புதான் இங்கு பணியில் சேர்ந்தார். அவள் பணிபுரியும் நிறுவனத்தின் சீனப் புத்தாண்டின் விருந்து நிகழ்ச்சி அன்று மாலை ஆர்சர்ட் சாலையில் உள்ள “உட்கார்டன் ஹோட்டலில்” மிகச் சிறப்புடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

“டிரிபிள்E” என்று தொழில் வட்டாரத்தில் அழைக்கப்படும் அந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பயன்பாட்டாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

குளிர்பான வரவேற்பு விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி களைகட்ட, விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களை சொல்லிய வண்ணம் முக்கிய விருந்து நடக்கும் இடத்தில் வந்து அமர்கின்றனர்.

அந்த ஹாலில் 30 மேசைகள் போடப்பட்டள்ளன. சிறிது நேரத்தில் விருந்தினர் மற்றும் பணியாளர்களால் நிரம்புகின்றது.

மங்கலான ஒளி வெள்ளத்தில் ஜோடிகளின் நடனம், மதுக் கோப்பைகள் நிரம்பி வழிந்தன. பலவகையான அசைவ உணவுகள் “சால்மன் டிக்கா” உட்பட சுற்றுகளாக பரிமாறப்படுகிறது.

நிகழ்ச்சி நெறியாளர் இடை இடையே அறிவிப்புகளைச் செய்த வண்ணம் இருக்கிறார். ஆடல், பாடல் என நிகழ்ச்சி தொடர்கின்றது நிறுவனத்தின் இயக்குனர் திருவாட்டி இவானா லிம் வரவேற்புரை.

திறமையாகச் செயல் பட்டவர்களுக்கு விருதுக்கான சான்றிதழும் வெகுமதியையும் வழங்கினார்.

இவானா பணியாளர்கள் அனைவரையும் மனதாலும், வார்த்தைகளாலும் புகழ்ந்தார்.

சிங்கப்பூரின் கலாச்சாரத் தொடர்புடைய “சிங்கே” நடனம் அதற்கே உரிய ஆரவாரச் சத்தத்துடன் உள்ளே நுழைந்து காதுகளை பதம் பார்த்தது..சிறிது நேரம் அவர்களது சாகசங்களை ஆர்ப்பரித்து அரங்கேற்றினர்..

முடிவில் மேன்டரின் ஆரஞ்சுகளை உரித்து வீசி 5534 என்ற நான்கு இலக்க எண்ணை அறிவித்து அதே ஒலியிடன் வெளியேறியது.

இந்த நிகழ்ச்சிகளை ஆனந்தி முழுமையாக ரசிக்கவில்லை. கடைசி சுற்று அதிர்ஷ்ட குலுக்கலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது

*******

பதின்ம வயதில் ஆனந்தியின் பள்ளிக்கல்வி ஒரு சில தோழிகளுடன் இனிதே முடிந்தது.

கல்லூரி சென்ற போதுதான் மதனுடன் பழக்க மேற்ப்பட்டது. ஆரம்பத்தில் நட்பாகப் பழகினாள். மதன் சராசரியை விட நல்ல சிகப்பு, எப்போதும் அவனைச் சுற்றி மகிழ்வுடனும் சிரிப்புடனும் ஒரு நண்பர்கள் வட்டம் சூழ்ந்திருக்கும். இதனால் மதனிடம் மயங்கினாள் ஆனந்தி.

நாளடைவில் அவன்மேல் அதீத காதலை வளர்த்து கொண்டு மதனை சுற்றி வந்தாள்

அவனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியில் செல்வதில் அலாதி விருப்பம்.

கல்லூரி கலாச்சார விழாக்கள், இளையவர்களுக்கான போட்டிகளில் இவர்களது கல்லூரியின் சார்பாக இருவரும் கலந்து கொண்டு சில நேரங்களில் பரிசுகள் பெற்றுள்ளனர்

மதன் அவனது அம்மாவிடம் ஆனந்தியை விரும்புவதை சொல்லி வேலையில் சேர்ந்தபின் அடுத்த ஆண்டு அவளையே திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான்,

வீட்டில் யாரும் இல்லை, அப்பாவிற்கு திடீரென உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் இருப்பதாக மாமா தொலைபேசியில் பேசினார், உடனடியாக மருத்துவனை விரைந்தான். பெரிய டாக்டர், அப்பாவிற்கு மூளையில் பிரச்சனை என்றும், ஒருவகை “என்சிபாலோபதி`”(Encephalopathy) என்று ஆங்கிலத்தில் கூறினார். செவிலியரிடம் மாமா கேட்டதற்கு

மூளையின் இரத்த குழாயில் கசிவு,

கொஞ்சம் சிக்கலான கேஸ்,

நாங்கள் முடிந்தவரை முயற்சிக்கின்றோம் எனப் பதில் கூறினார்.

மதனின் தந்தை கோமா நிலையில் மருத்துவமனையிலேயே இருக்கின்றார். டாக்டர்கள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் பிழைப்பது ஆண்டவன் செயல் என கைவிரித்து விட்டனர். ஆனந்தி ஒரு சில முறை மருத்துவமனை வந்து மதனுக்கு ஆறுதல் கூறினாள். நாட்கள் நகர்ந்தது. இரண்டு மாதக்களுக்குப்பின் தந்தை இறந்து விட்டதாக மதனிடமிருந்து ஆனந்திக்கு தொலைபேசித் தகவல் வந்தது.

மாமா மகள் நந்து சில நாட்கள் அம்மாவுடன் தங்க நேர்ந்தது. அம்மாவை நந்து நன்கு கவனித்துக் கொண்டாள். அம்மாவிற்கு தேவையானவற்றை செய்து முடித்துவிட்டு பிறகு கல்லூரிக்குச் சென்று விடுவாள். மூன்று மாதம் எங்கள் வீட்டிலிருந்துதான் கல்லூரி சென்று வந்தாள். அம்மாவிற்கு நந்துவை பிடித்து விட்டது. மாமா மகளை திருமணம் செய்ய வேண்டும் அது அம்மாவிற்கு ஒரளவு ஆதரவாக இருக்கும் என்று உறவினர்களால் ஒருமனதாக முடிவானது. திருமணத்திற்கு ஒன்றும் அவசரமில்லை எனச் சொல்லி அப்போதைக்கு இதற்கு முற்றுப் புள்ளியிட்டான்.

அப்பா இறந்த அதிர்ச்சியினால் அம்மா உறைந்து போனார். அப்பாவின் நினைவுகளிலிருந்து அம்மா முழுவதும் மீளவில்லை. சில நேரங்களில் படுத்தே இருப்பார். நந்து ஒருத்தி தான் அம்மாவிற்கு ஆறுதல். தன்னுடன் ஒரு சகோதரி இருந்திருந்தால் அம்மாவிற்கு மிகவும் ஆறுதலாக இருந்திருக்கும், அவரது தேவையறிந்து நடந்து கொள்ளவும் இயலும். ஒரு தாய்க்கு மகனால் எல்லா பணிவிடைகளையும் செய்துவிட இயலாது என்பதை மதன் அறிந்து கொண்டான். அம்மாவா? காதலியா? இச்சூழலில் அம்மாவை விட மனமில்லை, மனதை கல்லாக்கினான்.

*******

மதனின் திருமணம் மாமா மகளுடன் முடிந்தது. அவனது திருமண நாள் இரவுதான் அந்த கேளிக்கை விடுதிக்கு அவளது தோழியுடன் ஆனந்தி சென்றிருந்தாள். நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் அந்த விடுதியில் ஆண்களும் பெண்களும் மதுபானம் அருந்திவிட்டு நடனமாடும் பொழுது போக்கு இடம். வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு மது நண்பனாக ஆரம்பிப்பது இது போன்ற இடங்களில் தான். அவளது தோழி தனது ஆண் நண்பருடன் நடமாடிக்கொண்டு இருமுறை ஆனந்தியை அழைத்தாள். ஆனந்தி நடனமாட விருப்பமில்லாத்தால் அன்று தான் மதுவை வெறுப்புடன் அருந்தினாள். மது மற்ற பானங்களை போன்று நல்ல சுவையில் இருந்தால் அனைவருமே குடிப்பழத்திற்கு அடிமை ஆகியிருப்பார்களோ? குடிப்பதற்கு நல்லாவே இல்லை, எதோ ஒன்று மாதிரி குமட்டுகிறது. இதை எப்படி தொடர்ந்து குடிக்கின்றார்கள்? என்ற கேள்வி எல்லோருக்கும் ஏற்படுவதைப் போன்று அவளும் உணர்ந்தாள். கிமு கிபி என்பது மாதிரி குடிப்பவர்களின் செயல்பாடுகள் மாறுபாடாக உள்ளது. குமு குபி என்றுதான் சொல்ல வேண்டும்.

பணியாளர்களை ஹலோ என்றவர்கள் “டேய் இங்கே வாடா… என்னடா முரைக்கிறே” என்கின்றனர். “நான் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறேன்….. டோன்ட் டிஸ்ட்ரப் மீ”.. என வசனம்.. தள்ளாடிக்கொண்டே நிற்கவும் இயலாமல் “மாப்ளே நான் ஸ்டெடியா இருக்கேன்” என்று கூறுவது,

இன்னும் பல…

பெண்களும் உலகை மறந்து,

தங்கள் நிலை மறந்து உடை நழுவதும் தெரியாமலும் கூத்தடிக்கின்றனர்.

தோழியும் அவளது நண்பனும் நடனமாட அழைத்ததால் அதை விரும்பாமல் மீண்டும் ஒரு கோப்பை மது அருந்தினாள். அதன்பிறகு இருவரும் அவர்களது வீடுவந்து சேர்ந்தனர். உடல் அசதியில் கவலையை மறந்து தூங்கினாள்

.**********

அடுத்த வார இறுதியிலும் மீண்டும் தோழியுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றாள். எல்லோருக்கும் மதுபானம் வழங்கப்பட்டது. தோழி அவளது நண்பருடன் சிறிது நேரத்திற்கு பிறகு நடனமாடினாள். அப்போது இவானா என்பவள் ஆனந்தி அருகில் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.“ஏன் ஒருமாதிரி கவலையாக இருக்கின்றீர்கள்?“ உடல் நலமில்லையா? என வினாவினாள். இங்கு வருவதே கவலை மறந்து ஜாலியாக இருக்கத்தானே? ஆண் நண்பர் வரவில்லையா? எனக் கேட்டாள் அப்போது அவளது தொலைபேசி சினுங்கியது. எதோ அவசர செய்தி, தொலைபேசியில் பேசிக்கொண்டே தனது பெயர் தகவல் அட்டையை (விசிட்டிங் கார்டு) ஆனந்தியிடம் கொடுத்துவிட்டு உதவி தேவையெனில் தொடர்பு கொள்ளவும் எனக்கூறி வெளியேறி விட்டாள். ஆனந்தி நல்லநிறம்… அலைபாயும் விரிந்த கூந்தல்… பார்ப்பவர்கள் மீன்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் வசீகரம்….. ஆனந்தியின் அங்க அமைப்புக்களும், முகத்தோற்றமும் தனது நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுவாள் என தீர்க்கமான முடிவில் அவளது அலுவலகம் நோக்கிச் சென்றாள். ஆனந்தி மது அருந்திவிட்டு அவளது பெயர் அட்டையை பார்த்தாள். இவானா ஒரு நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

ஆனந்தி முன்புபோல் இல்லை, எதிலும் நாட்டமில்லாமல் இருந்தாள். கல்லூரி இறுதியாண்டில் சில பாடங்களில் வெற்றி பெறவில்லை. படிப்பிலும் ஆர்வமில்லை. அன்று மதியம் இவானாவை தொலைபேசியில் அழைத்து தனக்கு எங்கேனும் வேலை வாங்கி தர இயலுமா? எனக் கேட்டாள். அதற்கு அவள் இன்று மாலை கேளிக்கை விடுதிக்கு வருவேன் அங்கு பேசிக் கொள்ளலாமே எனக் கூறினாள்.

சிறிய நேர்முக விசாரணைக்குப்பின் ஆனந்திக்கு இவானாவின் நிறுவனத்திலேயே வேலையும் கிடைத்தது. வேலையில் சேர தயக்கமானலும் இப்போதைக்கு இதில் சேர்ந்துவிட்டாள். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகமல் இருக்க இதுதான் தற்போதைக்கு சரியெனப் பட்டது

இந்த நிறுவனத்தில் சேர்ந்தபின் ஆனந்திக்கு தேவைக்கு அதிகமான ஊதியம், பரிசுகள், வசீகரமாக இருந்த ஆனந்தி டிசைனர் கலெக்ஷன் ஆடைகளை தேர்வு செய்து அணிந்தாள். விலை உயர்ந்த வாசனை திரவியங்கள், கைப்பைகள், விதவிதமான காலணிகள், பலவகை கைக்கடிகாரங்கள் மற்றும் அணிகலண்கள் என மாற்றங்கள்.

*******

மதனின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இல்லை. மாமா மகளை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் விரக்தியுற்றவனாகவும், ஆனந்தியின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். மதன் தொலைபேசியில் அவ்வப்போது அழைக்கும் நேரத்தில் ஆனந்தி உற்சாகமாகப் பேசுவதில்லை, வேலை அதிகம் இருப்பதாக கூறிவிடுவாள் நேரில் பார்ப்பதையும் தவிர்த்து வந்தாள். ஒருமுறை எதோச்சையாக இருவரும் மாலை நேரத்தில் புகீஸ் கடைத்தொகுதியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதும் இருவருக்குமே கட்டிப்பிடித்து தழுவிக் கொள்ள வேண்டும் என உள்மனது துடித்தது. ஆனால் செய்கையில் கைகளை குலுக்கிக் கொள்ள மட்டுமே உடல் அசைந்தது. இருவரது மூளையும் மிக விரைந்து செயல்பட்டு முதல் கட்டளையை இரண்டாவது கட்டளை “ஓவர் ரைடு” செய்து கட்டுப்படுத்தியது.

மதன் சற்று இளைத்திருந்தான், ஆனந்தியின் முகத்தில் சோர்வான தோற்றம் தெரிந்தது. இருவரும் அவர்களது உடல் அமைப்பின் மாற்றத்தை பற்றியே பேச்சு இருந்தது!. அருகில் இருக்கும் உணவகத்தில் தேநீர் அருந்தலாமே!! என மதன் கூறியதும் இருவரும் அங்குச் சென்று தேநீர் கொண்டு வரும்படி கூறி அமர்ந்து பேச்சைத் தொடர்ந்தனர். மதன் நந்துவுடன் ஈடுபாடற்ற வாழ்க்கைதான் வாழ்ந்து கொன்டிருப்பதாகக் கூறினான். அப்போது ஆனந்தி தனது நிலைமை பற்றி கூறுகையில் தடுமாறி தடம் மாறிவிடுவேனோ? அல்லது தடம் மாற தடுமாறுகின்றேனா? என்பதும் வெறுப்பில் செய்வது தப்பா எனப் புரியவும் இல்லை எனக் கூறினாள். இதுவரை மன உறுதியுடன் இருக்கின்றேன், தற்போதைய கணினி பயிற்சி முடிந்தபின் முதலில் வேறு நல்ல வேலையில் சேர வேண்டும் எனவும் கூறினாள்.

நாம காதலித்தது உண்மை, இன்று இணைகோடுகளாக தனித் தனியாய் சென்று விட்டோம். என்று மதன் கூறி முடிக்கவும் இருவரும் அங்கிருந்து எழுந்து வெளியே நடந்தனர்.

***********

ஆனந்தி பணிபுரியும் நிறுவனமான “டிரிபிள்E” என்பதின் விரிவாக்கம் இவானா எஸ்கார்ட்ஸ் எண்டர்பிரைஸ் (Evanaa Escorts Enterprise). இது ஒரு வாடிக்கையாளர் சேவை நிறுவனம். வளர்ந்த நாடுகளில் வேறுன்றிய இத்தொழில் வளரும் நாடுகளில் பரவி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து தனியாக சுற்றுலாவரும் ஆண் வாடிக்கையாளருக்கு இங்குள்ள முக்கிய இடங்களை அழைத்துச் சென்று காண்பிப்பது, கடைத் தொகுதிகளுக்கு அழைத்துச் செல்வது அவர்களது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதுமான சேவை.

இவர்களது சேவைகளுக்கு ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியே குறியீட்டு வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பலவகை சேவைகள்.

மதனின் நண்பன் பிரதீபன் அமெரிக்காவிலிருந்து இங்கு அலுவலக வேலையாக வருவதாகக் தொலைபேசியில் கூறியிருந்தான்.அலுவலக வேலை முடிந்து வார இறுதியில் அவசியம் சந்திப்போம் என இங்கு வந்ததும் பேசினான். மதன் இந்தியா சென்று அங்குள்ள பள்ளியில் படித்தபோது அவனது வகுப்புத் தோழன், குறும்புத்தனம் அவன் கூடவே பிறந்தது.

பிரதீபன் தற்போது வந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டதென்றும் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு வரும்படி கூறினான். வேலை முடிந்து பிரதீபனை பார்த்து இருவரும் பலவற்றை பற்றி பேசிக் கொண்டிருந்தனர் நேற்று வெளியில் முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்க உடன் ஒருத்தியை கூட்டிச் சென்றதாகக் கூறினான்..அவளைக் கூட்டிசென்றதற்கு உன்னையே கூப்பிட்டு போயிருந்திருக்கலாம் எனப் புலம்பினாள். புகைப்படத்தில் பார்க்க குடும்பப் பொண்ணு மாதிரி யிருந்தா..…தொட்டதுக்கே. சத்தம் போட்டுட்டா…ஒரே நிமிடத்தில் நோகடிச்சுட்டா.

வேனும்னா நீயும் பாரு என கைத்தொலைபேசியில் இருந்த அவளது புகைப்படத்தை காண்பித்தான்.

புகைப்படத்தை பார்க்கும் முன் மதன் கூறியது, பொதுவாக மனிதர்களை இரண்டு வகைப்படுத்தலாம்.

சந்தர்ப்பங்களையும் சூழ்நிலையையும் “வலுவான காரணமாக்கி தப்பு செய்பவர்கள்” ஒரு வகை.

எந்த சூழலிலும் “மன உறுதியுடன் இருந்து தப்பே செய்யாதவர்கள்” இன்னொரு வகை, அவர்கள் “எங்கேயும் எப்போதும் நெருப்புடா.”.என விளக்கம் கூறினான்.

புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ச்சி..

அதில் கன்னத்தில் குழி விழும் அதே சிரிப்புடன்..ஆனந்தி,.

– சிங்கப்பூர் தமிழ்முரசு தினசரி – ஜூன் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *