கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 2,687 
 
 

சுகஜீவனம் செயயுமளவுக்கு அசையா சொத்துக்கள் இல்லைதான். இருந்தாலும் பிறந்த நான்கு குழந்தைகளை, கஞ்சிக்கு அழைய விடாத அளவுக்கு ஒவ்வொரு நாளும் இருந்த வரும்படி, அவனை தற்கொலைவரை கொண்டு செலலவில்லை. சான்றிதழ்கள் வழங்குவதில் கிடைக்கும் வருவாய், போதுமானதாக இருந்ததால் திருப்தி அடைந்திருந்தான்.

உறவினர் திருமணவிழா ஒன்றில் அவனைச் சந்தித்த பெரிய தாயார் மகன் காளைராஜன், ‘போஸ் எபடி இருக்கே, வேலைலாம் எபடி போய்ட்டு இருக்கு’ என்றார்.

‘நெனைச்ச அளவுக்கு இல்லை. கஷ்டமாத்தான் இருக்கு’ என்றான்.

‘சரி, போகப்போகச் சரியாயிடும், உனக்கு குழந்தை, குட்டிகளும் அதிகம்ல, நா ஒரு யோசனை சொல்றேன், நம்ப அசோசியேஷன் பொறுப்பை ரிஷைன் பண்ணலாம்னு இருக்கேன், நீ அந்தப் பொறுப்பை ஏத்துக்கிறியா’

‘அண்ணே நீங்க சொல்றதாலே ஏத்துக்கிறேன், இதுலெ ஏதாவது கெடைக்குமா?’

‘ஒனக்கு வருமான அரிப்பு இருக்குல்ல, சரியா வரும், இன்னோணு மாதம் ரெண்டு தடவை சங்க மீட்டிங், சந்தா வசூலுக்கு, வழிய உருவாக்கிக்கோ’ என்றார் காளைராஜன்.

இரண்டு மாதங்கள் கடந்தன. சங்கத்தின் மாவட்ட தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. முன்னாள் என்ற அடைமொழியை நிரந்தரமாக ஏற்றுக் கொண்ட காளை, தம்பியின் வெற்றிக்கு ஆக வேண்டியதைச் செய்தார். கடுமையான போட்டியில், ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் போஸ் வெற்றி பெற்றான். அரசுப் பதவியில் செய்ய வேண்டிய பணிகளை பொருட்டாக கருதாதவன், சங்க நடவடிக்கையில் மும்முரமாக இருந்தான். இதற்காக நகரம் ஒன்றில் அலுவலகத்தை திறந்து, உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் சதா சந்தித்து வந்தான்.

படிப்படியாக சங்கத்தின் மாநிலப் பொறுப்புவரை உயர்ந்தவன், சங்கத்திற்காக மாதஇதழ் ஒன்றை வெளியிட்டான். தனது அண்ணன், காளைராஜன் செய்த நல்ல காரியங்களை, தாம் செய்ததாக போட்டோவுடன் செய்தி வெளியிட்டான். மாதம் ஒருமுறை பிரபலங்களைச் சந்தித்து, கோரிக்கை வைத்தானோ இல்லையோ, பொன்னாடை போர்த்தும் புகைப் படங்களை மாத இதழ்களில் பதிவேற்றி செய்திகளை வெளியிட்டு வந்தான். ஆனால், சங்கத்தில் உள்ள மற்ற நிர்வாகிகள் தலைமையில், உரிமை மீட்பு போராட்டங்கள் மட்டும் நடந்து கொண்டிருந்தன.

சம்பளத்தை நிகர்த்த சங்கத்தின் சந்தா வருமானம், அவன் மனைவியை தரையில் காலூன்ற விடவில்லை. கணவன் பணி செய்த நகர்ப்புறத்திலேயே, இரண்டு வீடுகளைக் கட்டி, புதுமனை புகுவிழா நடத்தினாள். பிறந்த குழந்தைகள் இருவர் திருமண வயதை எட்டி இருந்தனர். இதில் கணவனின் தலையீட்டை நிர்தாட்சண்யம் செய்த மனைவி, மாப்பிள்ளை ஏலம் என்ற புதிய சிறுவாட்டு உத்தியை, இலைமறை காய்மறையாக செய்து கொண்டிருந்தாள். மூத்தவன் இருபத்தெட்டு வயதைத் தொட்டிருந்த போது, இரண்டாவது மகனை ஏலத்திற்கு கொண்டு வந்தாள்.

போஸ் மனைவி ஜான்சிராணியின் ஊருக்கு அருகாமையிலேயே பெண் எடுக்க முடிவு செய்யப்பட்டது. நல்ல பாரம்பரியமிக்க குடும்பமாக இருந்தாலும், அப்போதைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, பெண் கொடுக்க ஒப்புக் கொண்டார்கள். இதில் மாப்பிள்ளைக்கான விலையை உயர்த்திய ஜான்ஸி, மற்றொரு வீட்டில் விலைபேசத் தொடங்கிவிட்டாள். அவளது அனைத்து நடவடிக்கையும், இலைமறை காய்மறையாகவே இருந்ததால், பெண் வீட்டார் திருமணத்திற்கான பூர்வாங்க வேலையைத் தொடங்கி விட்டார்கள்.

சங்கவேலையைக் கவனித்துக் கொண்டிருந்த கணவனுக்கே தெரியவில்லை. திருமணப் பேச்சுக்கள் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்த வேளையில் சொந்த ஊருக்குத் திரும்பியவன், வரும்வழியில் ஆடானை என்ற ஊரில் டீ கடைக்குச் சென்றான். அப்போது மனைவியின் ஊர்வாசிகள் மூன்று பேர், ‘ச்சீப்பட்ட குடும்பத்திலெ பொண்ணு குடுக்க சம்மதிக்கலாமாங்க, அதான் ஆத்துலெ ஒண்ணு சேத்துலெ ஒண்ணு வச்சிண்டு தித்திரிக்கிறாங்க’ என்றான் ஒருவன்.

‘நல்ல குடும்பத்து வாசல்லெ ஏறி, சேத்தைவாரிப் பூசிட்டாளே ஜான்சி, அப்ப புருசனெ விட வெவரமாத்தான் இருப்பா போல்’ எனறான் இன்னொருவன். பேசிக்கொண்டே டீ கிளாஸை வைப்பதற்காக வந்த அந்த மூன்று பேரும், போஸைப் பார்த்தார்கள். பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போஸைப்பார்த்து ‘ ததூ, த்தூ’ என்று வராத எச்சிலை உமிழுவதுபோல், ‘இதெல்லாம் ஒரு பொழப்பு, இந்த டீயக் குடிக்கிறதுக்கு ததிரத்தை குடிக்கலாம்ல’ என்று சொல்லிக் கொண்டே, பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தார்கள்.

இரவு ஏழுமணி, வீட்டு வாசலில் நின்று, வாயெல்லாம் பல்லாகச் சிரித்த ஜான்ஸி, ‘வாங்க..வாங்க.. உங்களுக்காகத்தான், வர்ற வழியிலே நின்னுட்டிருக்கேன்’ என்றாள். செருப்பை கழற்றிய போஸ், முற்றத்தில் நடந்தபடியே ‘கல்யாண வேலைலாம், எப்டி போய்ட்டிருக்கு’ என்றான்.

‘நாலுநாளைக்கு முன்னெ இருந்த்தை விட, இப்ப நல்லா போகுதுங்க..’

‘அப்டீனா, நாலு நாளுக்குப் பின்னால என்ன நடந்துச்சு’

‘எல்லாம் நல்லா நடந்திட்டிருக்கு.. அவங்க மாப்ளைக்கு அஞ்சு லட்சம் கொடுக்கிறத்துக்கு, எவ்ளோ பேசுனாங்க தெரியுமா ஒங்களுக்கு’

‘தெரியாது, அதானே கேக்குறேன். என்னாச்சு’

‘நம்ப புள்ளைக்கு இன்னோரு பொண்ணு வந்திருக்குங்க, நம்ம அழகம்மா மகளை கொடுக்கிறதா சொல்றாங்க.. ஏழு லட்சம் தர்றதா சொல்றாங்க..’

‘அப்டினா என்ன சொல்ல வர்றே’

‘இதையே முடிச்சிருவோம்ங்க’

‘என்னமோ கல்லாணம் நடந்திரும்ல, இப்ப பாத்திருக்கிற பொண்ணு எப்டி?’

‘நல்ல பொண்ணுங்க, என்னைமாதிரி இல்லெ, உங்களெ மாதிரி செகப்பு நெஞ்செல்லாம் நல்லா வெடைச்ச மாதிரி நிமிந்த ஆளுங்க…, ஆனா என்ன மூக்குத்தான் நம்மளெ குத்திக் கிழிக்கிற மாதிரி நீட்டிக்கிட்டு நிக்கும். அதுகூடப் போகப்போக பழகிரும்ங்க’

‘மூக்கு நாக்குன்னு, குடும்பம்லாம் எப்டீனு கேக்குறேன்?’

‘நமக்கேத்த குடும்பந்தான், நாதாரிக் குடும்பத்திற்கு ஒரு நச்சு வாய்க் குடும்பம் ஆகாதா’

‘எதையோ பண்ணித்தொலை’ என்று சொல்லிய போஸ், அருகிலுந்த ஊருணிககுச் சென்று கரையில் நின்று கொண்டிருந்தான். டீக்கடையில் காறித்துப்பிவிட்டுச் சென்றவர்கள் ஊருணிக்கரையில் வந்து கொண்டிருந்தார்கள். எச்சில் தூறலை ஸ்பரிசித்ததைப் போன்ற அசூயை அடைந்த போஸ், ஊருணிக்குள் இறங்கி குளித்து விட்டான்.

குளித்து முடித்து விட்டு உடம்பைத் துவட்டிக் கொண்டிருந்தபோது, ஜான்ஸியின் படத்துடன் கார் புறப்பட்டுச் சென்றது. அதைப்பார்த்த போஸ் ‘அடுத்த ட்ராமாவா’ என்று முணகியபடி ஜான்ஸிராணி வீட்டுக்குள் நுழைந்தான். ‘நாதியில்லாத நாய்னா இப்டித்தான் போல’ என்றபடி தனது ஆற்றாமையை நினைத்து கொண்டிருக்கிறான். ’பதவியைக் கொடுத்த அண்ணனுக்கு நா பண்ணதைப் போல, அவ பண்றா போல, சரிதான்’ என்று மல்லாக்கப்படுத்தான்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *