கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 17,358 
 
 

உண்மையில் நானும் என் மனைவியும் விவசாயிகள் இல்லை. என் மனைவி லீரிஸ் கூட விவசாயி இல்லை. நாங்கள் ஜோகன்னஸ்பர்க்கை அடுத்த ஒரு முக்கிய சாலையிலிருந்து பத்து மைல்களுக்கு அப்பாலிருந்த இந்த இடத்தை, அது எங்களுக்குள் ஒரு உள்ளார்ந்த மாற்றத்தை உருவாக்கும் என்ற எண்ணத்தில் வாங்கினோம் என்றே நான் கருதுகிறேன். எங்களுடையதைப் போன்ற ஒரு திருமணத்தைப் பற்றி ஏராளமான பிதற்றல் வார்த்தைகள் சொல்லப்படுவது உண்டு. திருமணம் என்றதும் திருப்தியோடு கூடிய ஒரு ஆழ்ந்த மௌனத்தைத் தவிர, நாம் வேறு எதையும் அறிய விரும்புவதில்லை. இந்தப் பண்ணை எங்களுக்கு நிச்சயமாக அதைத் தரவில்லை என்றாலும் அது எதிர்பாராத, தர்க்கவியலுக்குப் புறம்பான மற்றவற்றைச் சாத்தியப்படுத்தியிருந்தது.

ஒரு செக்கோவியத்தனமான துயரார்ந்த சூழலில் ஓரிரு மாதங்களை ஓய்வாகக் கழித்ததும், அந்த இடத்தைப் பண்ணை ஆட்களிடம் ஒப்படைத்துவிட்டு, மீண்டும் தான் விரும்பிய நாடகப் பாத்திரத்தைப் பெற முயன்றுவிட்டு, அவள் விரும்பியவாறு மறுபடியும் நடிகையாகிவிடுவாள் என்று நான் எந்த லீரிஸைப் பற்றி நினைத்தேனோ அவள், நாடக ஆசிரியரின் மன நிழல்களை உள்வாங்கிக் கொள்ள ஒரு காலத்தில் எவ்விதமான தீவிர முனைப்போடு பாடுபட்டாளோ, அதே முனைப்புடன் பண்ணை விஷயங்களில் ஆழ்ந்துபோய்விட்டாள். அவள் மட்டும் இல்லையென்றால், நான் நீண்ட காலத்திற்கு முன்பாகவே இவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டிருப்பேன். அவள் ஒரு போதும் செவ்வண்ண பூச்சைப் பூசிய நகங்களுடன் வைர மோதிரங்கள் அணிந்தவாறும் இருக்கும் நடிகைகளைப் போன்றதோர் நடிகை அல்ல என்றாலும், சிறியவையாகவும், எளிமையாகவும், நன்கு பராமரிக்கப்பட்டவையாகவும் இருந்த அவளுடைய கைகள் இப்போது ஒரு நாயின் பாதங்களைப் போல முரடுதட்டிப் போய்விட்டிருந்தன.

நான் பயணங்களை ஏற்பாடு செய்யும் ஒரு முகமை நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கிறேன். அந்த நிறுவனம் ஒரு வளம் கொழிக்கும் நிறுவனம். நான் லீரிஸிடம் சொல்வதைப் போல, மாலை வேளைகளிலும், வார இறுதியிலும் மட்டும் பண்ணை வேலைகளைப் பார்ப்பதற்கு நான் அங்கே இருப்பதே போதுமானதாக இருக்கும். இருந்தும், எங்களால் அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை.

லீரிஸ் வளர்க்கும் கோழிகளிடமிருந்து வரும் ஒருவிதமான வாடை எனக்குப் பிடிப்பதில்லை. அதனால் அவற்றை அடைத்து வைத்திருக்கும் இடங்கள் உள்ள பாதை வழியே செல்வதை நான் தவிர்ப்பேன். ஒருவிதத்தில், நான் மறந்துபோய் விட்ட ஏதோ ஒரு பாணியில் பண்ணை அழகாகத்தான் இருந்தது. குறிப்பாக, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், நான் காலையில் எழுந்து குதிரைகள் கட்டி வைக்கும் இடத்திற்குச் செல்லும் பொழுது, பனைமரங்களையும், மீன்கள் விளையாடும் செயற்கைக் குளத்தையும், விலை உயர்ந்த கற்களைப் போலத் தோற்றமளிக்கும் போலிக் கற்களை வைத்துக் கட்டப்பட்ட, பறவைகள் நீந்தும் புறநகர் குளங்களைப் போன்ற இடங்களையும், அணையில் நீந்தும் வெண்ணிற வாத்துக்களையும், ஜன்னல்களை அழகுபடுத்துவதற்காக வளர்க்கப்படும் பசும்புல்லைப் போல பளிச்சென்றிருக்கும் மாட்டுத் தீவனமான மணப்புல் வளர்ந்துகிடக்கும் இடங்களையும், சிறிய, தடித்த கபடம் நிறைந்த கண்களை உடைய எருது காமம் மிகுந்து, ஆனாலும் சலிப்புற்ற பாவனையில் நிற்க, அதன் துணைகளில் ஒன்றான பெண் பசு அதன் முகத்தைப் பாசத்தோடு நக்கிக் கொடுப்பதையும் நான் பார்த்தவாறு இருக்கும்போது, லீரிஸ் தலையைச் சீவாமல் அவளுடைய கைகளில், கால் நடைகளின் பாலுறவு உறுப்புகளிலிருந்து கசியும் திரவம் சொட்டும் குச்சியோடு வெளியே வருவாள். நாடகங்களில் அவள் சில சமயங்களில் நிற்பது போல, கனவில் தோய்ந்து போனவளைப் போன்ற பார்வையுடன் ஒரு கணம் நிற்பாள். `அவை நாளை புணரும்’ என்பாள். `இது அவைகளின் இரண்டாவது நாள்’. `பாருங்கள் அந்தப் பசு என் செல்லக் காளையை, என் குட்டி நெப்போலியனை எவ்வளவு நேசிக்கிறது என்று’ என்பாள்.

ஆகவே, மக்கள் ஞாயிற்றுக்கிழமை பகல் வேளைகளில் எங்களைக் காண வரும் போது, மதுபானங்களை கிண்ணங்களில் ஊற்றியபடி நான் `ஒவ்வொரு நாளும் நகரத்தைவிட்டு, வீடு திரும்பும்போது வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும் அந்தப் புறநகர் இல்லங்களைக் கடக்கும்போது, நாங்கள் எப்படித்தான் இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டோமோ…! நீங்கள் இவற்றைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா?’ என்றெல்லாம் சொல்லுவது என் காதில் விழக்கூடும். பிறகு நான் அந்த அழகிய பெண்ணையும் இளைஞனான அவளுடைய கணவனையும் அழைத்துக்கொண்டு, அவர்கள் ஆற்றின் கரையில் தட்டுத் தடுமாறி நடந்துவர, அந்தப் பெண் தன்னுடைய பாத உறைகளைப் பற்றியபடி, பச்சை வண்ண நகை போல ஜொலிக்கும் ஈக்கள் ரீங்கரிக்கும் மாட்டுச் சாணத்தை மிதித்தவாறு நகர வாழ்வின் வழக்கமான பரபரப்புகள்… `நீங்கள் ஒரு நாடகத்தைக் காண நகரத்துக்குச் செல்லக்கூடிய அளவுக்கு நகரத்துக்கு அருகில் வசிக்கிறீர்கள். இது மிகவும் அற்புதமானது என்று நான் நினைக்கிறேன். அவ்வளவு ஏன்? நீங்கள் இரு விதங்களிலும் சிறந்தவற்றைப் பெறுகிறீர்கள்’ என்பாள்.

அத்தகைய நிலைமையை ஏதோ நானே தோற்றுவித்ததைப் போல நான் ஒரு கணம் அந்த வெற்றியை ஏற்றுக் கொள்வேன். என் வாழ்நாள் முழுதும் சாத்தியமில்லாமல் போய்விட்ட ஒன்று இரு விதத்திலும் வெற்றி காணுதல் என்ற அந்த நிலை. அதற்குப் பதிலாக, இந்த வழியிலும் இல்லாமல், அந்த வழியிலும் இல்லாமல், ஆனால், மூன்றாவதாக எதுவுமே கிடைக்காத ஒரு பாதையில் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

ஆனால், நாங்கள் தெளிவாக இருந்த சமயங்களிலும், லீரிஸின் அளவுக்கு மீறிய உற்சாகத்தைக் காணும் பொழுதெல்லாம் ஒரு காலத்தில் அவளுடைய மிகு உணர்ச்சி நடிப்பைக் கண்டு ஏற்பட்டதைப் போன்ற எரிச்சலே எனக்கு ஏற்படும். அவள் அதை, அவளுடைய உற்சாகப்படும் திறமையைச் சகித்துக் கொள்ளாத என் தன்மையை `பொறாமை’ என்றும், அது, அவளைப் போன்ற ஒருத்திக்குத் துணையாக இருக்க நான் போதுமானவனில்லை என்று நிரூபிப்பதற்கான அடையாளம் என்றும், உண்மையிலேயே அப்படி ஏதோ ஒன்று இருப்பதைப் போலப் பேசுவாள்.

எங்களைக் காண வந்த விருந்தினர்கள் சொல்வது போல, குறைந்தபட்சம் நாங்கள் நகரத்துக்கேயுரிய அந்தப் பரபரப்புகளில் இருந்தாவது தப்பிவிட்டோம் என்று நாங்களும் நம்பினோம். ஜோகன்னஸ்பர்க்கில் இருந்தவர்கள் பரபரப்பு என்பதைப் பற்றிப் பேசும்பொழுது, அவர்கள் மக்கள் கூட்டம் நிரம்பிவழியும் தெருக்களில் வேகமாகச் செல்வதைப் பற்றியோ, பணத்திற்கான போராட்டத்தைப் பற்றியோ, நகர வாழ்வின் போட்டிமயமான பொது குணாம்சத்தைப் பற்றியோ குறிப்பிடுவதில்லை. அவர்கள் வெள்ளையர்களின் தலையணைகளுக்குக் கீழே இருக்கும் துப்பாக்கிகளைப் பற்றியும், வெள்ளையர்களின் ஜன்னல்களில் இருக்கும் கொள்ளையர்களைத் தடுக்கும் குறுக்குச் சட்டங்களைப் பற்றியும்தான் குறிப்பிடுகிறார்கள். நகரத்தின் நடைபாதைகளில் ஒரு கறுப்பு மனிதன் வெள்ளையனுக்காக வழிவிட்டு விலக மறுக்கும் அந்தப் புதிரான கணங்களைக் குறித்துப் பேசுகிறார்கள்.

நாட்டுப் புறங்களில், பத்தே மைல்களுக்கு அப்பால் இருக்கும் இடங்களில்கூட வாழ்க்கை அதைக்காட்டிலும் மாறாக மேம்பட்டதாக இருக்கிறது. நாட்டுப்புறங்களில் மாற்றத்திற்கு முந்தைய காலகட்டத்தின் சாயல் தொக்கி நிற்கிறது. கறுப்பர்களோடான எங்கள் உறவு கிட்டத்தட்ட நிலச்சுவான்தாரிய தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது. அவை தவறு என்றும், காலாவதியாகிப் போனவை என்றும் நான் நினைக்கிறேன். ஆனால், அவையே சௌகரியமானவை என்று அக்கம்பக்கத்தவர்கள் கருதுகிறார்கள். எங்களிடம் கொள்ளையர்களைத் தடுக்கும் குறுக்கு ஜன்னல் கம்பிகளோ, துப்பாக்கிகளோ இல்லை.

லீரிஸின் பண்ணையில் பணிபுரியும் பண்ணையாட்கள் பண்ணை நிலத்திலேயே தங்களுடைய மனைவிகளோடும் குழந்தைகளோடும் வசித்துவருகிறார்கள். அவர்கள் காவல்துறையினரின் சாராயவேட்டை பற்றி எவ்விதமான பயமுமில்லாமல், தங்களுக்குத் தேவையான புளிப்பு பியர் பானத்தைத் தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள். உண்மையைச் சொல்வதென்றால் அந்த பாவப்பட்ட பிசாசுகள் எங்களோடு இருப்பதால், நாங்கள் வேறு எதைக் கண்டும் அதிகமாக அஞ்சவேண்டிய நிலையில் இல்லாமல் இருப்பதைப் பற்றி நாங்கள் எப்போதும் பெருமைகொண்டிருக்கிறோம். லீரிஸ் அவர்களுடைய குழந்தைகளை, தனக்கென ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளாத ஒரு பெண்ணின் சகல திறமைகளோடும் எப்போதும் கண்காணிக்கிறாள். உடல் நலம் குன்றும் காலங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரையும் – குழந்தைகளைக் கவனிப்பது போல கவனித்துக் கொள்ளும் அவள், அவர்களுக்கு மருத்துவராகவும் செயல்படுகிறாள்.

ஆகவே, சென்ற குளிர்காலத்தின்போது, ஓர் இரவு ஆல்பர்ட் என்கிற பையன், நாங்கள் படுக்கைக்குப் போய் வெகுநேரம் ஆனபிறகு, எங்கள் வீட்டு ஜன்னலின் கதவைத் தட்டியபோது, நாங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் அதிர்ச்சியடைந்து விடவில்லை. நான் அன்றைய தினம் என்னுடைய படுக்கையறையில் படுத்துக்கொண்டிருக்கவில்லை. அடுத்து இருந்த ஆடைகள் மாற்றும், மற்றும் துணிகளை வைக்கும் சிறிய அறையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தேன். ஏனென்றால், லீரிஸ் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாள். குளித்துவிட்ட பிறகு அவள் உடலிலிருந்து வரும் டால்கம் மணப் பொடியின் இனிய மணத்தினால் என் மனம் அவள் பால் மென்மைப்பட்டுவிடுவதை நான் விரும்பவில்லை. அவள் வந்து என்னை எழுப்பி, `பையன்களில் ஒருவன் மிகவும் உடல்நலம் இல்லாமல் இருப்பதாக ஆல்பர்ட் சொல்கிறான். நீங்கள் அங்கு போய் பார்ப்பது நல்லது என்று எண்ணுகிறேன். அவன் முக்கியமாக எதுவும் இல்லாத பட்சத்தில் நம்மை இந்த நேரத்தில் எழுப்பக்கூடிய பையன் அல்ல’ என்றாள்.

`மணி என்ன ஆகிறது?’

`அதைப் பற்றி இப்போது என்ன?’ லீரிஸ் பைத்தியம் பிடிக்கிற அளவுக்கு சரியான வாதத்தை எழுப்பினாள்.

அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்க, நான் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தேன். அவளுடைய படுக்கையைவிட்டு விலகிச் சென்று படுக்கும் பொழுதுகளிலெல்லாம் நான் எப்படி இப்படி ஒரு முட்டாளைப் போல உணர்கிறேன்? மறுநாள் காலைச் சிற்றுண்டியின்போது அவள் என்னைப் பொருட்படுத்தாமலும் ஏறெடுத்துப் பார்க்காமலும் பேசும்பொழுது, எனக்கு அவள் தேவைப்படாததனால் அவள் புண்பட்டுவிட்டதாகவும் அவமானத்திற்கு ஆளாகிவிட்டதாகவும் காலைச் சிற்றுண்டி அருந்தும் மேசையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பாள். நான் இன்னும் தூக்கக் கலக்கத்தில் குழப்பத்துடன் வெளியே சென்றேன்.

எனது கைவிளக்கின் ஒளி நடனத்தைத் தொடர்ந்து நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது `எந்தப் பையன் அவன்?’ என்று நான் ஆல்பர்ட்டைக் கேட்டேன்.

`அவன் மிகவும் உடல் நலமில்லாமல் இருக்கிறான். மிகவும்’ என்றான் அவன்.

`யார்? ஃபிரான்ஸா?’ சென்ற வாரத்தில் ஃபிரான்ஸ் மிக மோசமாக இருமிக்கொண்டிருந்தது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.

ஆல்பர்ட் பதில் சொல்லவில்லை. அவன் எனக்கு வழியைக் காட்டினான். உயரமான உயிரற்ற புற்களின் வழியே என் பக்கத்தில் நடந்தபடி வந்தான். என் கையிலிருந்த விளக்கின் வெளிச்சத்தில் நான் அவனைப் பார்த்தேன். அவன் தர்மசங்கடத்திற்கு ஆளாகியிருந்தான். `என்னப்பா இதெல்லாம்?’ என்றேன் நான்.

அவன் தன் தலையை விளக்கின் வெளிச்சத்தில் கவிழ்ந்துகொண்டான். `நான் இல்லை பாஸ். எனக்குத் தெரியாது. பெட்ரஸ் தான் என்னை அனுப்பினான்.’

எரிச்சலடைந்தவனாக நான் குடிசைகளை ஒட்டியபடி அவனை வேகமாக அழைத்துச் சென்றேன். அங்கே பெட்ரஸின் இரும்புக் கட்டிலில் ஒரு இளைஞன் இறந்துகிடந்தான். அவனுடைய நெற்றியில் இன்னமும் லேசான சில்லிட்டுப் போன வியர்வை இருந்தது. அவனுடைய உடல், கதகதப்பாக இருந்தது. பையன்கள், அவர்களில் ஒருவன் ஒரு கிண்ணத்தை உடைத்துவிட்டான் என்றதும் அவனைச் சூழ்ந்து நின்றுகொண்டு ஒத்துழைக்க மறுத்து, மௌனமாக இருப்பதைப் போல நின்றார்கள். நிழலில் யாருடைய மனைவியோ தயங்கித் தயங்கி வந்து, நின்றாள். அவளுடைய கைகளை மாரப்புத் துணியின் கீழே இணைத்தவாறு நின்றாள்.

நான் போருக்குப் பிறகு ஒரு இறந்த மனிதனைப் பார்க்கவில்லை. இது மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் மற்றவர்களைப் போல – தொடர்பற்றவனாக, பயனற்றவனாக உணர்ந்தேன். `என்ன நடந்தது?’ என்று நான் கேட்டேன்.

அந்தப் பெண் நெஞ்சைத் தட்டி, தலையை அசைத்து, மூச்சுவிடுவதற்குச் சிரமப்படும் வேதனையைக் குறிப்பால் காட்டினாள்.

அவன் மார்ச் சளியினால் இறந்து போயிருக்கவேண்டும்.

நான் பெட்ரஸின் பக்கம் திரும்பினேன். `யார் இந்தப் பையன்? அவன் இங்கே என்ன செய்துகொண்டிருந்தான்?’ தரையில் விழுந்த மெழுகுவர்த்தி-யின் ஒளி பெட்ரஸ் அழுதுகொண்டிருந்ததைக் காட்டியது. அவன் என்னைத் தொடர்ந்து கதவுக்கு வெளியே வந்தான்.

நாங்கள் வெளியே, இருண்ட பகுதிக்கு வந்ததும் நான் அவன் பேசுவதற்-காகக் காத்திருந்தேன். ஆனால், அவன் பேசவில்லை. `இப்போது சொல்லு பெட்ரஸ். இந்தப் பையன் யார் என்பதை நீ எனக்குச் சொல்லித்தான் ஆக வேண்டும். அந்தப் பையன் உன்னுடைய நண்பர்களில் ஒருவனா?’

`அவன் என்னுடைய சகோதரன் பாஸ். அவன் வேலை தேடி ரொடீஷியாவில் இருந்து வந்திருந்தான்.’

இந்தத் தகவல் என்னையும் லீரிஸையும் லேசாகத் திகைத்துப் போகச் செய்துவிட்டது. இளைஞன் ரொடீஷியாவில் இருந்து வேலை தேடி ஜோகன்னஸ்பர்க்குக்கு நடந்தே வந்திருக்கிறான். வழியில், வெட்ட வெளியில் படுத்து உறங்கியதில் ஜலதோஷம் பிடித்திருக்கிறது. தன் சகோதரன் பெட்ரஸ் வீட்டுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு வந்தவன், வந்ததிலிருந்து உடல் நிலை சரியில்லாமல் படுத்திருந்திருக்கிறான். அவன் அங்கு தங்கியது எங்களுக்கு எப்போதும் தெரியவந்துவிடக் கூடாது, எங்கள் பையன்கள் அவனுக்காக எங்களிடம் உதவி கேட்பதற்கு பயந்துபோயிருக்கிறார்கள். ரொடீஷிய குடிமக்கள் கடவுச் சீட்டு இருந்தாலொழிய உள்ளே நுழைவது தடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த இளைஞன் ஒரு சட்ட விரோதமான குடியிருப்பாளி. எங்கள் பையன்கள் இதற்கு முன் பல முறை இத்தகைய சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உறவினர்கள் பலர் எழுநூறு அல்லது எண்ணூறு மைல்களை நடந்தே கடந்து வந்திருக்கிறார்கள்.

அவர்களுடைய வறுமையிலிருக்கு சணல் சூட்டுகளினால் ஆன சொர்க்கத்திற்கு ஈகோலிக்குக் காவல் துறையினரின் வேட்டைகளுக்கும் கறுப்பர்களின் சேரிகள் மலிந்த நகரங்களுக்கு – தங்க நகரம் எனும் ஆப்பிரிக்கப் பெயர் கொண்ட – ஜோகன்னஸ்பர்க். அப்படிப்பட்டவனை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் ஒருவரைக் கண்டுபிடிக்கும் வரை, சட்டவிரோதமான ஒரு குடியிருப்பாளியை வேலைக்கு வைத்திருப்பது வெளிப்பட்டு தண்டனையை எதிர் கொள்வதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக இருக்கக்கூடிய அபாயங்களை எதிர்கொண்டு, நகர வாழ்வின் கறைபடியாத ஒருவனின் சேவையைப் பெறும் ஒருவரின் இதைத் தன்னுடைய பண்ணையில் அவனைச் சேர்த்துவிடும் வரைக்கும். அத்தகைய ஒருவனை எங்கள் பண்ணையில் கமுக்கமாக, வைத்திருப்பது என்பது கொஞ்சம் சிரமம்தான்.

ஆனால், இதுவோ இனிமேல் ஒருபோதும் உயிர் வாழ முடியாத ஒருவனைப் பற்றியது.

மறுநாள் காலை லீரிஸ், `அவர்கள் இந்தத் தகவல்களையெல்லாம் நமக்குத் தெரிவித்திருக்கக்கூடும். தெரிவிக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்’ என்று நீங்கள் எண்ணலாம். குறைந்தபட்சம் அந்த ஆளுக்கு உடம்பு சரியில்லாமல் போனதுமாவது சொல்லியிருக்கலாம் என்று நீங்கள் நினைத்திருக்கலாம் என்றாள். அவள் எதுபற்றியாவது தீவிரமான உணர்வுகள் கொண்டால், சற்று நேரத்தில் எங்கோ செல்ல, பயணத்தைத் துவக்குகின்றவர்களைப் போல தங்களுக்குப் பழக்கமான பொருட்களைப் பார்வையிட்டவாறு அவற்றை அதற்கு முன்பு அவள் எப்போதுமே பார்த்ததில்லை என்பது போல அவற்றைப் பார்த்துக்கொண்டு, தனக்குள் தானே எதையோ தேடிக்கொண்டு அறையின் நடுவே ஒரு தினுசாக நிற்பது அவள் வழக்கம். அதற்கு முன்பு சமையலறையில் பெட்ரஸ் இருந்தபோது, அவன் ஏதோ அவளை மிகவும் துன்புறுத்தியது போலவும், தான் ஏதோ அவனால் புண்படுத்தப்-பட்டுவிட்டாற் போன்றதுமான பாவனையுடனும் அவள் இருந்ததை நான் கவனித்தேன்.

எப்படியிருந்தபோதும், எங்கள் வாழ்க்கையில் நான் லீரிஸைப் பற்றித் தெரிந்துகொண்டிருந்த அவ்வளவு விஷயங்களைப் பற்றியும் அவளுடைய அந்த அதிர்ச்சியுற்ற அழுத்தமான பார்வை என்னை எதையெல்லாம் ஆராயச் சொல்லுமோ, அந்த எல்லாவற்றுக்குள்ளும் புகுந்து பார்க்க எனக்கு உண்மையிலேயே நேரமோ, நாட்டமோ இருக்கவில்லை. தான் சாமான்யமாகவோ, விசித்திரமாகவோ காணப்படுவது பற்றிப் பொருட்படுத்தாத ரகத்தைச் சேர்ந்த பெண் அவள். அவசரம் ஏதோ ஒரு நிச்சயமற்ற தன்மையோடு காணப்படும்போது அவள் முகம் எப்படிக் கோணலாகி விசித்திரமாகத் தோற்றமளிக்கிறது என்பதைப் பற்றி அவளுக்குத் தெரிந்தாலும் அவள் அதைப் பற்றி சற்றும் கவலைப்படுவாள் என்று எனக்குப்படவில்லை. `இப்போது எல்லா அசிங்கம்பிடித்த வேலைகளையும் நான் தான் செய்தாக வேண்டும் போலிருக்கிறது’ என்றேன் நான்.

தன்னுடைய அந்தக் கண்களால் என்னைச் சோதித்தவாறு அவள் இன்னமும் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் அவள் அறிந்திருந்தாளானால்…

“நான், நலவாழ்வுத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பவேண்டும் என்று நான் அமைதியாகச் சொன்னேன்”. “அவர்கள் சாதாரணமாக வெறுமனே வண்டியைக்கட்டி, அவனை எடுத்துக்கொண்டு போய் புதைத்துவிட முடியாது. ஏனென்றால், அவன் என்ன காரணத்தால் இறந்தான் என்பது உண்மையில் நமக்குத் தெரியாது என்றேன்.”

அவள் அனைத்தையும் துறந்தவள் போல, என்னைக் காண்பதையே உணராதவள் போல அப்படியே அங்கே நின்றவாறு இருந்தாள்.

எனக்கு எப்போது அவ்வளவு எரிச்சல் வந்தது என்று எனக்கே தெரியவில்லை. `அது ஒருவேளை ஏதாவது தொற்று வியாதியாக இருக்கலாம். ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்’ என்றேன் நான். அதற்கும் அவளிடமிருந்து பதில் ஏதும் இல்லை.

எனக்கு நானே ஒரு உரையாடலை நடத்திக்கொள்வதில் எனக்கு எவ்விதமான ஈர்ப்பும், ஆர்வமும் இருக்கவில்லை. பையன்களில் ஒருவனை நோக்கி, கார் ஷெட்டின் கதவைத் திறந்து வைக்கும்படியும், காலையில் நகரத்துக்குப் போக ஒரு காரைத் தயார் நிலையில் வைக்கும்படியும் கட்டளை இடுவதற்காக நான் வெளியே போனேன்.

நான் எதிர்பார்த்தபடியே அது மிகவும் சிக்கலான வேலையாகத்தான் இருந்தது. நான் நலவாழ்வுத்துறை அதிகாரி-களுக்கும் காவல்-துறையினருக்கும் தெரிவிக்க வேண்டியிருந்தது. சலிப்புத் தரும் ஏராளமான கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியதாக இருந்தது. அந்தப் பையன் அங்கே தங்கியிருந்தது எப்படி எனக்குத் தெரியாமல் போயிற்று? என்னுடைய பண்ணையாட்களின் குடியிருப்புகளை நான் மேற்பார்வை இடாது போய்விட்டால் இத்தகைய விஷயங்கள் எல்லாக் காலங்களிலும் நடைபெறவில்லை என்பதை நான் எவ்வாறு உறுதி செய்துகொள்வேன்? நான் ஆத்திரம் கொண்டு, அவர்களிடம், `என்னுடைய பணியாட்கள் அவர்களுடைய பணியைச் சரியாக செய்துகொண்டிருக்கிற வகையில் என்னுடைய மூக்கை அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் நுழைப்பதில் எனக்கு உரிமையோ, அக்கறையோ இருப்பதாக நான் நினைக்கவில்லை’ என்றேன்.

முரட்டுத்தனமான, முட்டாளான போலீஸ் சார்ஜெண்ட்டிடம் இருந்து எனக்குக் கிடைத்த பார்வை அவருடைய மூளையில் நடைபெற்ற சிந்தனையின் வெளிப்பாடாக அல்லாமல் உயர்குல கருத்தாக்கத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் பொதுவான ஒரு தன்மையில் இருந்து பிறந்த ஒரு கிறுக்குத்தனமான உறுதியான தன்மைகொண்ட பார்வை. அவர் என்னுடைய முட்டாள்தனத்தை அறிந்து மகிழ்ச்சியும் வெறுப்பும் கலந்ததான ஓர் உணர்வை வெளிப்படுத்தும்படி என்னை நோக்கி இளித்தார்.

பிறகு நான் பெட்ரஸிடம் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் ஏன் இறந்தவனின் உடலை கூராய்வு செய்ய எடுத்துச் செல்லவேண்டும் என்றும், `கூர் ஆய்வு’ என்றால் என்ன என்றும் விளக்கினேன். சில தினங்கள் கழித்து, அக்கூராய்வின் முடிவுகளைப் பற்றி விசாரிக்க, நலவாழ்வுத் துறையினரிடம் நான் தொலைபேசியில் பேசியபோது, நாங்கள் எண்ணியபடியே மரணத்துக்குக் காரணம் மார்ச்சளிதான் என்று எனக்குச் சொல்லப்பட்டது. மேலும், சடலம் தக்க முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நான் கோழிகளுக்கான தீவனத்தைப் பிசைந்து கொண்டிருந்த பெட்ரஸிடம் போய், `எல்லாம் சரியாகிவிட்டது, வேறு தொல்லைகள் ஏதும் இருக்காது. அவனுடைய சகோதரன் மார்பில் ஏற்பட்ட வலியின் காரணமாக இறந்துபோய்விட்டான்’ என்று சொன்னேன். பெட்ரஸ் மசகெண்ணெய் டப்பாவைக் கீழே வைத்தான். `நாம் அவனைக் கொண்டுவருவதற்கு எங்கே போகவேண்டும் பாஸ்?’ என்றான்.

`கொண்டுவருவதா?’

`பாஸ்! அவர்களிடம் நாம் எப்போது வரவேண்டும் என்று அவர்களிடம் தயவு செய்து கேட்கிறீர்களா?’

நான் வீட்டிற்குள் போய் லீரிஸை வீடு முழுக்கத் தேடினேன். அவள் உபரிப் படுக்கையறையிலிருந்து படிக்கட்டுகள் வழியாக இறங்கி வந்தாள். நான், இப்போது நான் என்ன செய்வது? நான் பெட்ரஸிடம் விஷயத்தைச் சொல்லியதும், அவன் அவர்கள் எப்போது போய் அந்தப் பையனின் உடலை எடுத்துக்கொண்டு வரலாம் என்று அமைதியாகக் கேட்கிறான். அவர்கள், அதைத் தாங்களே அடக்கம் செய்யப் போகிறார்கள் என்று நினைக்கிறான்’ என்றேன்.

`சரி. போய் அவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் அவர்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும். நீங்கள் ஏன் அதை அப்போதே சொல்லவில்லை?’ என்றாள் லீரிஸ்.

நான் மீண்டும் பெட்ரஸைக் கண்டதும், அவன் மரியாதையோடு என்னை நிமிர்ந்து பார்த்தான். `இங்கே பார் பெட்ரஸ். நீ போய் உன் சகோதரன் உடலைக் கொண்டுவர முடியாது. அவர்கள் ஏற்கெனவே அதைச் செய்துவிட்டார்கள். அவர்கள் அவனை அடக்கம் செய்துவிட்டார்கள். உனக்குப் புரிகிறதா?’ என்றேன்.

அவன் மெதுவாக, சோர்வுடன், தான் ஏதோ தவறாகப் புரிந்துகொண்டுவிட்டது போன்றது போல எண்ணத்தோடு, `எங்கே?’ என்றான்.

`இங்கே பார். அவன் ஊருக்குப் புதுசு. அவன் இந்தப் பக்கத்தைச் சேர்ந்தவனல்ல என்று அவர்களுக்குத் தெரியும். அவனுக்கு இங்கே சில உறவுக்காரர்கள் இருப்பார்கள் என்றோ, அவர்கள் அவனை அடக்கம் செய்யவேண்டும் என்றோ அவர்களுக்குத் தெரியாது’ என்றேன். ஒரு ஏதுமற்ற ஏழையின் கல்லறையை ஏதோ ஓர் அரிய சலுகையைப் போலக் காட்சியளிக்கச் செய்வதில் எனக்குச் சிரமம் இருந்தது.

`தயவு செய்து பாஸ், பாஸ் கட்டாயம் நீங்கள் அவர்களிடம் கேட்டாக வேண்டும்’ என்றான் பெட்ரஸ். அவன் சொன்ன வார்த்தைகளின் பொருள், அவனை அடக்கம் செய்த இடத்தைத் தான் பார்க்க வேண்டும் என்பதல்ல. காலம் சென்ற அவனுடைய சகோதரனைக் குறித்ததான முடிவுகளைச் செய்த, புரிந்துகொள்ள முடியாத சிக்கலான அரசு இயந்திரத்தை அவன் முற்றாகப் புறக்கணித்துவிட்டுப் பேசினான். அவனுக்கு அவனுடைய சகோதரனின் உடல் எப்படியாவது திரும்பக் கிடைக்க வேண்டும்.

`பெட்ரஸ் என்னால் என்ன செய்ய முடியும்? உன்னுடைய சகோதரன் ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்டுவிட்டான். என்னால் இப்போது அவர்களிடம் எதையும் கேட்க முடியாது’ என்றேன் நான்.

தவிட்டுக் கறைபட்ட கைகள் இருபுறமும் வளைவின்றி கட்டைபோலத் தொங்க, வாயின் ஒருபுறம் கோணிக்கொள்ள அங்கு நின்றான். `அய்யோ! பாஸ்!’ என்றான்.

`அடக் கடவுளே! பெட்ரஸ். அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். அவர்களால் கேட்க முடியாது. எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், என்னால் அதைச் செய்ய முடியாது. உனக்குப் புரிகிறது இல்லையா?’

அவன் என்னைப் பார்த்தபடி, நின்றுகொண்டே இருந்தான். அவனுடைய அறிவுக்கு எட்டியவரையில், வெள்ளைக்காரர்கள் எல்லா ஆற்றல்களும் உடையவர்கள், அவர்களால் எதையும் செய்ய முடியும். அவர்கள் எதையாவது செய்யாவிட்டால் அது, அவர்கள் அதைச் செய்யக்கூடாது என்று அவர்களே தீர்மானிப்பதனால்தான் என்ற எண்ணத்துடன் அவன் என்னைப் பார்த்தபடி நின்றான்.

பிறகு இரவு உணவின்போது லீரிஸ் ஆரம்பித்தாள். `நீங்கள் குறைந்தபட்சம் தொலைபேசியிலாவது பேசலாம்’ என்றாள் அவள்.

`அட கிறிஸ்துவே, நீ என்னை என்னவென்று நினைக்கிறாய்? நான் என்ன இறந்தவர்களை மீண்டும் உயிரோடு கொண்டுவரும் ஆற்றல் பெற்றவனா?’

என் மேல் திணிக்கப்பட்ட இந்த விநோதமான, பொறுப்பில் இருந்து வெளியே வருவது எப்படி என்பதைக் குறித்து நான் மிகைப்படுத்தி எதையும் சொல்லவில்லை. `அவர்களிடம் தொலைபேசியில் பேசுங்கள்’ என்று அவள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாள். `குறைந்தபட்சம், நீங்கள் அதைச் செய்துவிட்டீர்கள், அதைச் செய்யவாவது உங்களால் முடிந்தது என்று அவனிடம் நீங்கள் சொல்லலாம். அவர்கள் அது சாத்தியமே இல்லாதது என்று உங்களுக்கு விளக்கியதாகவும் சொல்லலாம்.’ என்றாள்.

காபிக்குப் பிறகு அவள் சமையலறைப் பகுதியில் எங்கோ சென்று மறைந்து போய்விட்டாள். சற்று நேரம் கழித்து, அவள் திரும்பவும் வந்து, அவனுடைய வயதான தந்தை இறுதிச் சடங்குக்காக ரொடீஷியாவில் இருந்து வருவதாகச் சொன்னாள். அவர் அதற்கான கடவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னாள்.

துரதிர்ஷ்டவசமாக உடலைத் திரும்பப் பெறுவது சாத்தியமற்றதாக இருக்கவில்லை. அதிகாரிகள், அவ்வாறு செய்வது சரியான செயல் அல்ல என்றார்கள். ஆனால், சுகாதாரத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருந்தன என்பதனால் அவர்களால் உடலை மீண்டும் தோண்டி எடுப்பதற்கான அனுமதியை மறுக்க முடியவில்லை. சவ அடக்கம் செய்பவனுக்கான கட்டணத்தோடு, அதற்கு இருபது பவுண்டுகள் செலவாகும் என்று நான் விசாரித்து அறிந்துகொண்டேன். சரி, அதுவே எல்லாவற்றையும் சீர் செய்துவிடும் என்று நான் எண்ணினேன். மாதத்திற்கு ஐந்து பவுண்டுகள் வீதம் பெட்ரஸ் இருபது பவுண்டுகளைப் பெறுவதென்பது முடியாது. மேலும் காலமானவனுக்கு அது எந்த நன்மையையும் செய்யாது. அதை நானே தருவதாக நான் நிச்சயமாக முன்வரக்கூடாது. நான் முணுமுணுக்காமல் இருபது பவுண்டுகளோ, அல்லது நியாயமான எந்தத் தொகையுமோ அந்தப் பையன் உயிரோடு இருந்தபோது, மருத்துவச் செலவுகளுக்காகவோ, மருத்துவர்களுக்காகவோ செலவிட்டிருப்பேன். அவன் காலமான பிறகு, வெற்றுச் சடங்கிற்காக பெட்ரஸ் அவன் குடும்பத்திற்கு ஓர் ஆண்டு முழுவதும் வாங்கித் தரக்கூடிய துணிமணிகளுக்குச் செலவிடக்கூடிய அந்தத் தொகையை அவன் இப்படி செலவிடுவதை ஊக்கப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
அன்று இரவு சமையலறையில் நான் அதை அவனிடம் சொன்னபோது, அவன் `இருபது பவுண்டுகளா?’ என்றான்.

`ஆமாம். இருபது பவுண்டுகள்’ என்றேன் நான்.

அவனுடைய முகத்தோற்றத்திலிருந்து அவன் தன் மனதிற்குள் கணக்குப் போட்டுப் பார்க்கிறான் என்ற உணர்வை நான் ஒரு கணம் அடைந்தேன். ஆனால், அவன் மறுபடி பேசியபோது, நான் அப்படிக் கற்பனை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். எந்தக் காலத்திலும் கிட்டாததான ஒன்று என்பதால் அதைப் பற்றிச் சிந்திக்கவே அஞ்சும் ஒருவன், அந்த ஏதோ கிட்டாத ஒன்றைப் பற்றிப் பேசும் தொனியில், `நாம் இருபது பவுண்டுகளைக் கட்டித்தான் ஆகவேண்டும் பாஸ்’ என்றான்.

`சரி பெட்ரஸ்’ என்று சொல்லிவிட்டு நான் வீட்டுக்குள் சென்றேன்.

மறுநாள் காலை நான் நகரத்துக்குப் போவதற்கு முன்பு, என்னைக் காண பெட்ரஸ் அனுமதி கோரினான். ஒரு கட்டு நோட்டுகளை என்னிடம் கொடுத்தபடியே, குழப்பத்துடன், `தயவு செய்யுங்கள் பாஸ்’ என்றான். இந்த, `பாவப்பட்ட பிசாசுகள்’ எப்போதும் வாங்குகின்ற பகுதியில்தான் இருப்பது வழக்கம். அவர்கள் மிக அபூர்வமாகவே தருகின்றவர்களாக இருப்பார்கள். ஒரு வெள்ளைக்காரரிடம் பணத்தை எப்படித் தருவது என்பது உண்மையிலேயே அவர்களுக்குத் தெரியாது. ஒன்றாகவும் அரையாகவும், எண்ணெய்ப் பிசுக்குடனும், பழந்துணிகளைப் போல ஆகும் வரை மடிக்கப்பட்டவையாகவும், சிற்சில நோட்டுகள் சுருக்கங்களற்றும், ஓரளவுக்கு சரியாகவும் என்று அங்கே இருபது பவுண்டுகள் இருந்தன. ஃபிரான்ஸின், ஆல்பர்ட்டின், சமையல்காரரான டோராவின், தோட்டக்காரரான ஜேக்கப்பின், இன்னும் வேறு யார் யாரிடமிருந்தெல்லாம் அவை பெறப்பட்டன என்பது கடவுளுக்கே வெளிச்சம். சுற்றிலுமிருந்த, சிறிய குத்தகைதாரர்களிடமிருந்தும், பண்ணையாட்களிடமிருந்தும் அவை திரட்டப்பட்டிருந்தன என்று எண்ணுகிறேன். நான் அதை வியப்போடு அல்ல எரிச்சலோடு, அவ்வளவு ஏழையான ஜனங்களின் தியாகம் பயனற்று வீணாகிறதே என்ற உண்மையான எரிச்சலுடன் அதைப் பெற்றுக்கொண்டேன். எங்கெங்கும் இருக்கிற ஏழை மக்களைப் போலவே இவர்களும் வாழும் வாழ்க்கையில் கண்ணியத்திற்காக என்று இல்லாமல், மரணத்தில் கண்ணியத்தை உறுதி செய்து கொள்வதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று எண்ணினேன். வாழ்க்கை என்பது ஒரு கொண்டாட்டம் போல ஆடம்பரமாகக் கழிக்கப்படவேண்டும் என்றும், மரணத்தைப் பற்றி எப்போதாவது நினைக்கும்பட்சத்தில் அதை இறுதியான வங்கிக் கையிருப்பு அற்ற நிலை என்றும் கருதும் என்னையும் லீரிஸையும் போன்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு தன்மை இது.

சனிக்கிழமை பிற்பகல்களில் பண்ணையாட்கள் வேலைக்கு வருவதில்லை. எனவே, அது சவ அடக்கத்துக்கு ஒரு நல்ல நாள். பெட்ரஸும் அவனுடைய அப்பாவும் எங்களுடைய கழுதை வண்டியை நகரத்திலிருந்து சவப்பெட்டியைக் கொண்டுவருவதற்காகக் கடனாக வாங்கிப் போயிருந்தார்கள். அங்கிருந்து திரும்பி வந்ததும் பெட்ரஸ், லீரிஸிடம் எல்லாம் `நன்றாக’ இருந்ததாகவும், சவப்பெட்டி அவர்களுக்காகக் காத்திருந்ததாகவும், கிட்டத்தட்ட முத்திரையிடப்பட்டு இரண்டு வாரங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சடலத்தைக் காணக்கூடிய ஒரு பயங்கரமான காட்சியில் இருந்து அவர்களைக் காப்பாற்றிவிட்டதாகவும் சொன்னான். (அதிகாரிகளுக்கும் சவ அடக்கம் செய்பவர்களுக்கும் இறுதி ஏற்பாடுகளைச் செய்து, சவத்தை அங்கிருந்து நகர்த்த ஏராளமான நேரம் பிடித்திருந்தது.) காலை முழுவதும், சவப்பெட்டி பெட்ரஸின் குடிசையில் இருந்தது. எங்கள் பண்ணையின் கிழக்கு வேலிக்கு வெளிப்புறத்தில் இருந்த சிறிய பழைய இடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக அந்த சவப்பெட்டி காத்திருந்தது.

அந்த இடுகாடு இந்த மாவட்டம் நாகரிகமான கிராமிய எஸ்டேட்டாக மாறுவதற்கு முன்பு ஒரு காலத்தில் உண்மையான விவசாய மாவட்டமாக இருந்தது என்பதைக் காட்டுகிற ஒரு பழங்கால நினைவுச் சின்னமாக இருந்தது. ஊர்வலம் அந்த இடத்திற்கு வந்தபோது, நான் அங்கு இருக்கும்படி நேர்ந்தது மிகவும் தற்செயலான விஷயம். மீண்டும் லீரிஸ் எனக்குத் தரப்பட்ட உறுதிமொழியை மறந்து, ஒரு சனிக்கிழமை பிற்பகலில் வீட்டை, வாழத் தகுந்த இடமாக இல்லாமல் இருக்கும்படி செய்து வைத்திருந்தாள். நான் வீட்டுக்கு வந்ததும் அவள் ஒரு அழுக்கான, பழைய சட்டையை அணிந்துகொண்டிருப்பதும், முதல் நாள் இரவிலிருந்து தலையைச் சீவாமலேயே வைத்திருப்பதையும், வீட்டின் தரையிலிருந்து கீறி அகற்றப்பட்ட வார்னிஷ் முழுவதும் அவள் தலையில் அப்பிக்கிடப்பதையும் பார்த்து நான் அளவற்ற கோபம் கொண்டேன். ஆகவே, கோல்ஃப் விளையாட்டில் என்னுடைய பயிற்சியையாவது அதிகரித்துக் கொள்ளலாமென்று என்னுடைய கோல்ஃப் ஆடும் இரும்புக் கழியை எடுத்துக்கொண்டு, வெளியே கிளம்பிவிட்டேன். அந்த எரிச்சலில், நான் சவ அடக்கத்தைப் பற்றி மறந்தே போய்விட்டேன். வேலிக்கு வெளியே இருந்த பாதை வழியே ஊர்வலம் என்னை நோக்கி வருவதைக் கண்டபோதுதான் எனக்கு அது நினைவுக்கு வந்தது. நான் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து கல்லறைகளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. உடைந்துபோன பீங்கான் பானைகளின் மீது சூரியஒளி பட்டுச் சிதறிக்கொண்டிருந்தது வீட்டிலேயே செய்யப்பட்ட சிலுவை, தாறுமாறாகச் சரிந்து கிடந்தது பழுப்பு வண்ணமாகிப்போன ஜாம் ஜாடிகள், மழை நீரால் சருகாகிப்போன மலர்கள் எல்லாம் நன்றாகத் தெரிந்தன.

தொடர்ந்து கோல்ஃப் பந்தை அடித்துக்கொண்டே இருப்பதா, அல்லது அவர்கள் எல்லோரும் எங்களைக் கடந்து செல்லும் வரையிலும் கண்ணியத்தோடு ஆட்டத்தை நிறுத்திவைப்பதா என்ற சிறு குழப்பத்தை நான் உணர்ந்தேன். ஒவ்வொரு முறை சக்கரம் சுழன்றபோதும் கழுதை வண்டி கடகடவென்று கிறீச்சிட்டது. அதை இழுத்து வந்த இரண்டு கழுதைகளின் சிறிய தொப்பைகள் உராய்ந்து, கரடு முரடாகிப் போயிருந்தன. அவற்றின் தலைகள் கவிழ்ந்து, முன்புறம் வளைந்தபடி இருக்க அவற்றின் காதுகள் ஒருவிதமான பணிவோடு பின்னோக்கித் தாழ்த்தப்பட்டிருந்தன. அவற்றைத் தொடர்ந்து மெதுவாக வந்த ஆண்களும், பெண்களும் அடங்கிய கூட்டத்திற்கு ஏற்ற முறையில் அக்கழுதைகளும் மெல்ல நகர்ந்தன. பொறுமை மிகுந்த கழுதைகள். அதைக் கவனித்ததும்தான் நான் இந்தப் பிராணி ஒரு ஏன் விவிலிய அடையாளமாக ஆக்கப்பட்டது என்று நன்றாகத் தெரிகிறது என எண்ணிக் கொண்டேன்.

ஊர்வலம் எனக்குச் சரியாக வந்து நின்றது. நான் கையிலிருந்த கோல்ஃப் கழியைக் கீழே வைக்க வேண்டியதாயிற்று. சவப்பெட்டி வண்டியில் இருந்து கீழே இறக்கப்பட்டது. அது மட்டமான மரச்சாமானைப் போல மஞ்சள் வார்னிஷ் பூசப்பட்ட மரத்தால் ஆன, பளபளக்கும் சவப்பெட்டி. கழுதைகள் ஈக்களைத் துரத்துவதற்காகக் காதுகளை அசைத்தன. பெட்ரஸ், ஃபிரான்ஸ், ஆல்பர்ட், ரொடீஷியாவில் இருந்து வந்திருந்த முதியவரான தந்தை ஆகியோர் தங்கள் தோளின் மீது சவப்பெட்டியை ஏற்றிச் சுமந்தவாறு நடக்க தர்ம சங்கடத்தை ஊர்வலம் சவப்பெட்டி சகிதம் கால்நடையாகவே நகர்ந்தது. உண்மையிலேயே அந்தக் கணம் எனக்குக் குழப்பம் விளைவிப்பதாக இருந்தது. நான் அசைவற்றவனாய் மசமசப்போடு வேலியருகே நின்றிருந்தேன்.

அவர்கள் மெதுவாக, வரிசையாக, தலை நிமிராமல் என்னைக் கடந்து சென்றார்கள். பளபளக்கும் மரத்தாலான சவப்பெட்டியைத் தூக்கிச் சென்ற நால்வரும் அதன் கீழ் வளைந்தபடி ஊர்வலத்தில் வந்த மற்றவர்களுக்கு இணையாகச் செல்ல முடியாமல் தடுமாறியபடி சென்றார்கள். அவர்கள் அனைவரும் பணியாட்களாகவோ அல்லது அக்கம் பக்கத்தில் வசித்தவர்களின் வேலைக்காரர்களாகவோதான் இருக்கவேண்டும். எல்லோரும் சோம்பேறித்தனத்தோடு உட்கார்ந்துகொண்டு எங்கள் நிலங்களைப் பற்றியும் சமையலறையைப் பற்றியும் வம்பளப்பவர்கள் என்பது எனக்குத் தெரியும். கிழவன் மூச்சுவிடும் சத்தம் எனக்குக் கேட்டது.

நான் என்னுடைய கோல்ஃப் கழியை எடுப்பதற்காகக் குனிந்தேன். அவர்களுடைய ஊர்வலம் செல்லும் புனித அமைதியின் இடையே ஒருவிதமான கசமுசப்பு ஏற்பட்டது. அமைதியாக நகரும் நீரோட்டம் கால்களைத் தழுவும் சில்லென்ற வேளையில் சட்டென்று காற்றின் கதகதப்பான ஒரு அலை அதன் ஊடே பரவுவதைப் போல நான் அதை உடனடியாக உணர்ந்தேன். கிழவனின் முணுமுணுப்புக் குரல் கேட்டது. மக்கள் குழப்பம் அடைந்தவர்களாக நின்றார்கள். ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டார்கள். தொடர்ந்து நடந்து செல்லும்படி வலியுறுத்தினார்கள். சிலர் சீற்றத்தோடு அப்படியே நிற்கும்படிச் சொன்னார்கள். அவர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாகியிருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால், அவர்களால் அந்தக் குரலைப் புறக்கணித்துவிட முடியவில்லை. அது ஒரு தீர்க்கதரிசியின் முணுமுணுப்பைப் போல முதலில் தெளிவற்றதாக ஆனால் மனதை சிறைப்பிடிப்பதாகவும் இருந்தது. கிழவர் சுமந்திருந்த சவப்பெட்டியின் மூலைப்பகுதி லேசாக சரிந்து தாழ்ந்தது. அதன் கனத்திலிருந்து வெளியேற முயல்வது போல அவர் காட்சியளித்தார். இப்போது பெட்ரஸ் அவரிடம் பேச முயன்றான்.

கழுதைகளைக் கவனித்துக்கொள்ளும் சிறுவன், கழுதைகளின் கடிவாளத்தைக் கீழே போட்டுவிட்டு, என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக ஓடினான். ஏனென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், திரையரங்கில் மயக்கம் போட்டு விழும் ஒருவரைச் சுற்றிக் கூடும் கூட்டத்தைப் போல, மற்ற ஜனங்களும் அந்தச் சிறுவனைப் போலவே ஓடினார்கள். வேலிக் கம்பிகளைப் பிரித்து வழி செய்து கொண்டு, அவனைத் தொடர்ந்து நானும் சென்றேன்.

பெட்ரஸ் அளவற்ற வேதனையுடனும் கலவரத்துடனும் அவனுடைய பார்வையை என்னை நோக்கியும் மற்றவர்களை நோக்கியும் உயர்த்தினான். ரொடீஷியாவில் இருந்து வந்திருந்த கிழவர் சவப்பெட்டியை முழுவதுமாக சரிசெய்ய இயலாத தடுமாற்றத்துடன் மற்ற மூவரும் நழுவும்படி விட்டுவிட்டார், சவப்பெட்டியை இறக்கி நடைபாதையிலேயே வைத்தார்கள். ஏற்கெனவே அதன் பளபளக்கும் பக்கங்களைச் சுற்றிலும் இருந்து லேசான படலம் போன்ற தூசுப் புகை அலை போல் கிளம்பி மேலெழுந்தது. கிழவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. நான் தலையிடுவதற்குத் தயங்கினேன். ஆத்திரம் கொண்ட கூட்டம் முழுவதும் என்னுடைய மௌனத்தை நோக்கித் திரும்பியது. கிழவரே என்னிடம் வந்தார். தன் கைகளை விரித்து, இப்படியும் அப்படியும் அசைத்தவாறு நேரடியாக என்னிடம் பேசினார். அந்தத் தொனியிலிருந்து வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியாத நிலையிலும் ஏதோ அதிர்ச்சிதரத் தக்கதும், மிக அபூர்வமானதும் நிகழ்ந்துவிட்டதாக என்னால் சொல்ல முடிந்தது.

`என்ன அது பெட்ரஸ்? ஏதும் தவறாகிவிட்டதா?’ என்று நான் கேட்டேன்.

பெட்ரஸ் தன்னுடைய கைகளை உதறிக்கொண்டு, கவிழ்ந்திருந்த அவனுடைய தலை பல தடவைகள் குலுங்கிக் குலுங்கி எழும்ப, என்னை நோக்கி முகத்தை உயர்த்தி, திடீரென்று அவர் `என் மகன் இவ்வளவு கனமாக இருக்க மாட்டான் என்கிறார்’ என்றான்.

அமைதி. கிழவர் மூச்சுவிடுவதை என்னால் கேட்க முடிந்தது. அவர் வயதானவர்கள் எல்லோரும் செய்வதுபோல வாயைச் சற்று லேசாகத் திறந்தபடி வைத்துக்கொண்டிருந்தார்.

`என்னுடைய மகன் இளைஞன், மெலிந்தவன்’ என்று இறுதியில் ஆங்கிலத்தில் சொன்னார்.

மீண்டும் அமைதி. பிறகு கசமுசவென்று சத்தம் எழுந்தது. எல்லோருக்கும் எதிராகக் கிழவர் இடிபோல் முழங்கினார். அவருடைய பற்களில் சிற்சிலதான் இருந்தன. அவையும் மஞ்சளாகியிருந்தன. அவருக்கு அந்த அருமையான வால்ரஸ் போன்ற நரைகலந்த கீழ் நோக்கித் தொங்கியது மீசை. அத்தகைய மீசைகளை இந்தக் காலத்தில் அடிக்கடி பார்க்க முடியாதது. அவர் அந்தக் காலத்தில் சாம்ராஜ்யத்தை நிறுவியவர்களைக் கண்டு அவர் வளர்த்துக்கொண்டதாக இருக்கலாம். அது அவருடைய வார்த்தைகளுக்கெல்லாம் சட்டமிட்டு, அவற்றுக்கு ஒரு சிறப்புத் தகுதியை வழங்கியது போல இருந்தது. அவர் அவையை அதிர்ச்சியடையச் செய்தார். அவர்கள், அவருக்குப் பைத்தியம் என்று நினைத்தார்கள். ஆனாலும் அவர் சொல்வதைக் கவனித்தாக வேண்டியிருந்தது. அவர் தம்முடைய கைகளாலேயே சவப்பெட்டியின் மூடியை உயர்த்தித் திறந்தார். பிறகு மற்ற மூவரும் அவருடைய உதவிக்கு வந்தார்கள். பிறகு அவர் தரையின் மீது உட்கார்ந்தார். மிகவும் வயதாகி, மிகவும் பலகீனமாகி, பேச இயலாதவராக அவர் தம்முடைய நடுங்கும் கரங்களை அங்கே இருந்ததை நோக்கிச் சுட்டினார். எல்லாவற்றையும் துறந்தவர் போல அவர்களிடம் அதை ஒப்படைத்துவிட்டு, இனிமேல் தன்னால் செய்யக்கூடிய நல்லது எதுவும் இல்லை என்பது போல உட்கார்ந்திருந்தார்.

அவர்கள் சவப்பெட்டியைப் பார்ப்பதற்காகக் கூட்டமாகக் குழுமினார்கள் (நானும் தான்). அவர்கள் இப்போது வியப்பின் தன்மையையும் அது எத்தகைய துயரார்ந்த நிகழ்வின்போது நடைபெறுகிறது என்பதையும் மறந்து சில நிமிடங்கள் அந்த ஆச்சரியத்தின் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள். அவர்கள் பெருமூச்சுவிட்டு, சத்தம் போட்டு, தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். கழுதைகளைப் பிடித்துக்கொண்டிருந்த சிறிய பையன், மேலும் கீழும் எம்பிக் குதித்தபடி, உயரமாக வளர்ந்தவர்களின் முதுகுகளெல்லாம் சேர்ந்து உள்ளே என்ன உயரமாக இருந்தது என்று தெரியாதபடி, மறைத்துக்கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாமல் ஆத்திரப்பட்டு அழுததையும் நான் கவனித்தேன்.

சவப்பெட்டியில் இதற்கு முன்பு யாரும் பார்த்திராத ஒருவனின் உடல் இருந்தது. அது கனத்த சரீரமும், வெளுத்த தோலுமுடைய உள்ளூர்க்காரன் ஒருவனின் சடலம். அவன் நெற்றியிலிருந்த காயம் நன்றாகத் தைக்கப்பட்டிருந்தது. ஏதோ ஒரு கைகலப்பில் உண்டாக்கப்பட்டு, சற்று மெதுவாக செயல்பட்ட வேறு ஏதாவது ஒரு உள் காயம் அவனைக் கொன்றிருக்கக்கூடும்.

நான் ஒரு வாரத்திற்கு மேலாக அதிகாரிகளிடம் அந்த சடலத்தைக் குறித்துத் தகராறுகள் செய்தேன். தங்களுடைய சொந்தத் தவறை எண்ணி அவர்களே அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தார்கள் என்பதை நான் உணர்ந்தேன். ஆனால், அடையாளம் தெரியாத ஒருவனின் சடலத்தைக் குறித்த பிரச்னையைச் சரிப்படுத்துவதில் அவர்கள் ஏதும் செய்ய இயலாதவர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னிடம், `நாங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்’ என்றும், `நாங்கள் இன்னமும் விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்றும் சொன்னார்கள்.

எந்த நேரத்திலும் அவர்கள் என்னை அவர்களுடைய சவக் கிடங்கிற்குள் அழைத்துச் சென்று, `அதோ பாருங்கள், அந்தப் போர்வைகளை விலக்குங்கள். உங்கள் கோழிப் பண்ணைக்காரனின் சகோதரன் இருக்கிறானா என்று பாருங்கள். அங்கு நிறைய கறுப்பர் முகங்களாகவே இருப்பதில், குறிப்பாக எங்களால் என்ன செய்ய முடியும்?’ என்பார்கள்.

ஒவ்வொரு மாலையும் நான் வீடு திரும்பியதும் பெட்ரஸ் சமையலறையில் எனக்காகக் காத்திருந்தான். `நல்லது, அவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பாஸ் உனக்காக அந்த விஷயத்தைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் பெட்ரஸ்’ என்று நான் அவனிடம் சொல்வேன். `அடக் கடவுளே! நான் அலுவலகத்தில் செலவழித்திருக்க வேண்டிய நேரத்தில், பாதி நேரத்தை நகரத்தின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு இந்த விஷயத்தைத் துரத்திக் கொண்டு அலைவதில் செலவழித்துக் கொண்டிருக்கிறேன்.’ என்று நான் நினைத்துக் கொண்டேன். ஒரு இரவு நான் இதை லீரிஸிடம் சொன்னேன்.

நான் பேசத் தொடங்கியதும், அவளும் பெட்ரஸும் இருவரும் தங்கள் பார்வையை என் மீது திருப்பியவாறு நின்றார்கள். அந்தக் கணங்கள் வியக்கத்தக்க விதத்தில் ஒரே மாதிரியாக இருந்தன. உயர்ந்த, வெண்ணிற நெற்றியும், ஆங்கிலேயப் பெண்ணுக்குரிய உடலமைப்பையும் கொண்ட என் மனைவியும், செருப்புக்கூட அணியாத ஆணிக்கால்களுடன் காக்கி அரைக்கால்சட்டை, முழங்கால்களருகே ஒரு சணலால் முடிபோடப்பட்டு தொங்க, அந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கே உரியவர்களின் தோலில் இருந்து அச்சத்தின் விளைவாக வெளிப்படும் வியர்வையுடன் நிற்கும் எங்கள் கோழிப் பண்ணைக்காரனான பையனின் தோற்றமும் ஒரேபோல இருப்பது சாத்தியமே இல்லை என்று உங்களுக்குத் தோன்றலாம்.

லீரிஸ் `நீங்கள் திடீரென்று இவ்வளவு கோபத்துடனும் பேசும்படி என்ன நடந்தது?’ என்று கேட்டாள்.

நான் அவளை உற்றுப் பார்த்தேன். `இது ஒரு கோட்பாடு சார்ந்த விஷயம். அவர்கள் எதற்காக இப்படி ஒரு குழப்பத்தைச் செய்த பிறகு அதிலிருந்து தப்பித்துப் போகவேண்டும்? சிரமத்தை மேற்கொள்ளத் தயங்காத யாராவது ஒருவர் இந்த அதிகாரிகளைப் பிடித்து உலுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றேன்.

அவள், `ஓ’ என்றாள். பெட்ரஸ் வெளியே போவதற்காக, சமையலறையின் கதவுகளை மெதுவாகத் திறந்தான். பேச்சு அவனுக்குரிய எல்லையைக் கடந்து செல்வதை அறிந்ததும் அவளும் அங்கிருந்து போவதற்காகத் திரும்பினாள்.

நான் ஒவ்வொரு நாள் மாலையும் பெட்ரஸுக்குத் தொடர்ந்து உறுதிகளை வழங்கியவாறு இருந்தேன். நான் ஒரே விஷயத்தைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன் என்றாலும், நான் சொல்லிக்கொண்டிருந்த என்னுடைய அதே குரல், ஒவ்வொரு மாலையும் பலகீனப்பட்டுக் கொண்டே வந்தது. இறுதியில், எங்களுக்கு பெட்ரஸின் சகோதரன் கிடைக்கவே மாட்டான் என்பது தெளிவாயிற்று. ஏனென்றால், உண்மையிலேயே அவனுடைய சடலம் எங்கே இருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரு வீட்டு வசதித் திட்டத்தின் வீடுகளைப்போல ஒரே மாதிரி இருந்த கல்லறைகளில் எங்கேயோ ஓரிடத்தில், அவனுக்குச் சொந்தமில்லாத ஒரு எண்ணின் கீழ் அல்லது ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் அல்லது நரம்புகளின் தொகுதியாகவோ, தசைகளின் கூட்டமாகவோ சுருக்கப்பட்டு ஏதோ ஓர் இடத்தில் அவன் உடல் கிடந்தது. அது உண்மையில் எங்கேயிருக்கிறது என்று கடவுளுக்குத்தான் தெரியும். எப்படியோ இந்த உலகில் அவனுக்கு என்று எந்த அடையாளமும் கிடையாது என்றாகிவிட்டது.

அந்தச் சமயத்தில்தான் கூச்சம் நிரம்பிய குரலில் பெட்ரஸ் தான் கொடுத்திருந்த பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரும்படி கேட்டான்.

`அவன் கேட்ட விதத்தில், அவன் ஏதோ இறந்துபோன அவனுடைய சகோதரனிடத்தில் இருந்து, அவனுக்குரியதை இவன் திருடப் போவது போல இருந்தது’ என்று நான் பின்னால் லீரிஸிடம் சொன்னேன். ஆனால், நான் சொன்னது போல லீரிஸ் இந்த விஷயத்தில் எவ்வளவு தீவிர உணர்வுகள் உடையவளாக இருந்தாள் என்றால், அவளால் ஒரு சிறிய எகத்தாளமான புன்முறுவலைக்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் பணத்தைப் பெற முயன்றேன். லீரிஸும் முயன்றாள். நாங்கள் இருவரும் தொலைபேசியில் பேசினோம், எழுதினோம், வாதிட்டோம். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. முக்கியமான செலவுகள் சவ அடக்கம் செய்பவனுக்காக செய்யப்பட்டுவிட்டிருந்தன. எப்படி இருந்தபோதிலும், அவன் தன்னுடைய வேலையைச் செய்துதான் இருந்தான். எல்லாம் முழுக்க வீணாயிற்று. பாவப்பட்ட அந்தப் பிசாசுகள் நான் நினைத்ததைக் காட்டிலும் ஏழைப்பட்டதாக இருந்ததினால், அது மிகப் பெரிய விரயமாக ஆகியிருந்தது.

ரொடீஷியாவில் இருந்து வந்திருந்த கிழவரும், லீரிஸின் தகப்பனாரும் ஒரே மாதிரியான உருவத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால், அவள் தன் தந்தையின் பழைய சூட்டுகளில் ஒன்றை அவருக்குக் கொடுத்தாள். அவர் அந்தக் குளிர் காலத்தில் அங்கு வந்தபோது இருந்ததைக் காட்டிலும், சௌகரியமாக தன்னுடைய ஊருக்குத் திரும்பிச் சென்றார்.

நதீன் காடிமெர்

நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான இவர் தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ட்ரான்ஸ்வாலில் பிறந்த ஆங்கிலேயர். தென் ஆப்பிரிக்காவிலேயே வாழ்ந்து வருகிறார். மதிப்புமிகு விருதுகள் பலவற்றை தம் வாழ்நாளில் பெற்றுள்ளார். புக்கர் பரிசு, டபிள்யூ. எச். ஸ்மித் காமன் வெல்த் இலக்கிய விருது, ஸ்காட்டிஷ் கலைக் கவுன்சில் ஃபெலோஷிப், இலக்கியத்துக்கான ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகவும், மற்றும் கலைகள், இலக்கியத்துக்குமான அமெரிக்க அகாடமியின் கௌரவ அங்கத்தினர், மேல ஃபார்த்தே இத்தாலிய விருது, மேற்கு ஷெர்மனியின் எல்லி ஜாட்ஸ் விருது, ஃபிரான்ஸின் அகில உலக விருது, நோபல் பரிசு என்று பலவும் அவற்றிற்குள் அடங்கும்.

அவருடைய சிறுகதைத் தொகுதிகளில் `பாம்பின் மென் குரல்’, `வெள்ளிக்கிழமையின் காலடிச் சுவடுகள்’, `லிவிங்க்ஸ்டனின் தோழர்கள்’, `இந்த இடத்தைப் போல இன்னொன்றில்லை’, `ஒரு போர் வீரனின் அணைப்பு’, `அங்கே வெளியில் ஏதோ ஒன்று’ ஆகியவை புகழ்பெற்றவை.

அவருடைய நாவல்களில் `அந்நியர்கள் நிறைந்த உலகம்’, `மதிப்பிற்குரிய ஒரு விருந்தினர்’, `பழைமைவாதி’, `பர்கரின் மகள்’, `ஷூலையின் மக்கள்’, `இயற்கையின் ஒரு விளையாட்டு’ ஆகியவை இலக்கிய ரசிகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை.

– நதீன் காடிமெர் – தமிழில் திலகவதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *