கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 4,377 
 

சமீபத்தில் இப்படி ஒரு பெரிய கூட்டத்தை நந்தினி பார்த்ததில்லை. சிலவருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் டிஐஜி ஆக இருந்தபோது பூரம் திருவிழாவில் அடர்த்தியான ஒரு கூட்டத்தைப் பார்த்ததாக நினைவு. கூட்டமிருந்ததே தவிர இவ்வளவு ஆரவாரம் இல்லை. இங்கு வேறு மாதிரியாக இருந்தது. அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருக்க… ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகத் திரண்டிருந்தார்கள்.

தெருவில் இருக்கும் வீடுகளை மறைத்து இரண்டு பக்கமும் ஏராளமானவர்கள் நின்றிருந்தார்கள். மொட்டை மாடிகள் எங்கும் மனிதத் தலைகள். தேர் வடத்திற்கு இரண்டு பக்கமும் ஓர் ஒழுங்கில் பெரும் ஆவலோடு காத்திருந்தார்கள். பாதுகாப்புக்கு நின்றிருந்த ஒரு இன்ஸ்பெக்டர் சட்டென குடை விரிக்க, நந்தினி அவரைப் பார்த்தாள். குடையை மடக்கிக் கொண்டார்.“எஸ்.பி வந்துட்டாரா..?”

நந்தினி கேட்ட அந்த விநாடி அருகில் அந்த குரல் கேட்டது. “குட்மார்னிங் மேடம்… ஐயாம் பிரபாகர் எஸ்.பி..!”நந்தினி திரும்ப அவசரமாக கூலிங்கிளாஸை மடக்கி அருகில் நின்ற டிஎஸ்பியிடம் கொடுத்தபடி உடம்பில் விறைப்பு காட்டினார். “மார்னிங் மிஸ்டர் பிரபாகர். எக்ஸ்பெக்டிங் கிரெளவ்ட் எவ்வளவு?”“டூ லேக்ஸ் மேடம்!” “இப்ப எவ்வளவு பேர் இருக்காங்க?” “கிட்டத்தட்ட அவ்வளவு பேர் இருப்பாங்க மேடம்…”“போலீஸ் ஃபோர்ஸ்?”

“டூ தெளஸண்ட்…”“நாட் எனாஃப்…” “மேடம்…” “லார்ஜ் வால்யூம் கிரெளவ்ட்.. நாம நிக்கிற இந்த இடத்துலேயே பிஃப்டி தெளஸண்ட் பீப்பிள்ஸ் இருப்பாங்க. டிஸ்டர்பன்ஸான ஏரியா. நாலு இடத்துல மாசக்கணக்கா தொடர் போராட்டம் நடந்துகிட்டு இருக்கு. ஸ்டேட் அண்ட் சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஹைலி சென்சிடிவ்னு மார்க் போட்ட டெல்டா ஏரியா. சென்ட்ரல் ரேபிட் ஆக்‌ஷன் ஃபோர்ஸ் வந்திருக்கு. இவ்வளவு புவர் ஃபோர்ஸ் வச்சிருக்கீங்களே… நேத்து ஏன் எனக்கு ரிப்போர்ட் போடல..?”

“கூட்டமும் பாதுகாப்பு ஏற்பாடும் வழக்கமா பண்றதுதான் மேடம்…”நந்தினி அவரைப் பார்த்துச் சிரித்தாள். இந்தச் சூழ்நிலை வழக்கத்துக்கு மாறானது. உன் பாதுகாப்பு ஏற்பாடு மோசம் என்பது அந்தச் சிரிப்பின் அர்த்தம். தேரில் பொருத்தப்பட்டிருந்த மைக்கில் குரல் வழிந்தது. “கலெக்டர் வந்து கொண்டிருக்கிறார். சரியாக ஏழு மணிக்கு வடம் பிடிக்கப்படும். ஆரூரா தியாகேசா!”“நான் தேர் மேல ஏறணும்…” என்றாள் நந்தினி.

“போகலாம் மேடம்…” எஸ்.பி. கண்களைக் காட்ட போலீஸ்காரர்கள் பரபரவென நகர்ந்தார்கள். சட்டென ஒரு பாதுகாப்பு அரண் அங்கே உருவானது. கிழக்கு மண்டல போலீஸ் தலைவி ஐஜி நந்தினி ஐபிஎஸ் பூட்ஸ் கால்கள் சப்திக்க தேர் நோக்கி நடந்தாள். முன்னால் நான்கு இன்ஸ்பெக்டர்கள் கூட்டத்தைப் பிளந்து வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பிறந்த மண்ணில்… உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாட்டில் நந்தினி தியாகராஜர் நோக்கி கம்பீரமாக நடந்தாள். உறவுக்காரர்கள் யாராவது இந்தக் கூட்டத்தில் இருப்பார்களா..?

அவளை உணர்ந்து சுப்ரமணியம் குருக்கள் பெண் என்பார்களா..? ‘ஓடிப்போச்சே அந்தப் பொண்ணா..?’ என்று வேறு யாராவது பதில் தருவார்களா..? தூரத்தில் தேர் கம்பீரமாய் நின்றிருந்தது. ஆசியாவிலேயே பெரிய தேர். குதிரைகள் ஆவேசமாகப் பாய்ந்த நிலையில் நிற்க… நான்கு புறமும் தொம்பைகள் காற்றில் அசைய… தியாகராஜர் அருகே கண்ணாடிக் கூண்டுக்குள் எரிந்துகொண்டிருந்த தீபம் கண்களில் பட்டது. “மேடம்… இப்படி வாங்க….” கீழவீதி பிரிந்து கீழ சன்னதி தெருவுக்குள் எஸ்.பி. நுழைந்தார்.

தேர் மேல் ஏறும் வகையில் படிக்கட்டில் அவர் ஏற… நந்தினி பூட்ஸ் கழற்றினாள். ஊர் விஐபிக்களும் அறங்காவலர் குழுவினரும் வணக்கம் வைக்க, மெல்லிய தலையசைப்பில் அதனை அங்கீகரித்து மெதுவாகப் படியேறினாள். தேரிழுக்கத் தயார் நிலையில் இருந்தது. பின்னால் உறுமிய நிலையில் இரண்டு புல்டோஸர்கள். ரீப்பர் கட்டைகள் ஏற்றிய நான்கு டிராக்டர்கள். முட்டுக்கட்டை ஏற்றப்பட்ட ஜீப்புகள். அதிர்வேட்டுப் போட ஆட்கள். ஒரு ஆம்புலன்ஸ்.

“மேடம், இந்த வருஷம் தேரோட நான்கு வீல்லேயும் டிஸ்க் பிரேக் பொருத்தியிருக்காங்க…”“ம்…” மெல்ல தேர் மேல் ஏறினாள் நந்தினி. பார்வை அவளையுமறியாமல் கீழவீதி நோக்கிப் போயிற்று. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூட்டம். பார்வையைத் திருப்பிக்கொண்டாள். அடி அடியாக நடந்து தியாகராஜர் முன் நின்றாள். மனசுக்குள் அப்பா வந்தார். சுப்ரமணியம் குருக்கள். திருஞானசம்பந்தரின் பதிகம் மனசுக்குள் ஓடியது.

“ம்… அழுத்தமாப் பாடு. சிவன்… உலகத்தில் உள்ள எல்லா கடவுள்களுக்கும் அரசர்… தியாகராஜர்..!” மனசுக்குள் அப்பாவின் அதட்டல் குரல் கேட்டது. கண்களை மூடித் திறந்தாள். ‘அப்பா நந்தினி வந்திருக்கேன். நந்தினி ஐபிஎஸ். கிழக்கு மண்டல காவல்துறைத் தலைவர். வானத்திலிருந்து என்னைப் பார்க்கறீங்களா? முப்பது வருஷங்களுக்கு அப்புறம் தியாகராஜர் முன்னாடி நிக்கறேன்…’“மேடம்… கலெக்டர் பேசினார். பக்கத்துலதான் இருக்காராம். சிஎம் அலுவலகத்தில் இருந்து ஒரு அர்ஜெண்ட் காலாம்.

பேசிவிட்டு பத்து நிமிஷங்கள்ல வந்துடறேன்னு சொன்னார்…”நந்தினி பதில் பேசவில்லை. கீழவீதி கடைசி வரை தேர் வடம் நீண்டு கிடந்தது. கேரளாவிலிருந்து பிரத்யேகமாகத் தயாரித்து வரும் வடம். “நந்தினி…. நைட் கிளம்பிடலாம்…”“எங்க..?”“சென்னை. அங்க இருந்து பெங்களூர்…”“பயமா இருக்கு. அப்பா அம்மா… தங்கச்சி… ரவி வர்மா… நாம ஏன் ஓடணும்? அப்பாகிட்ட பேசிப் பார்க்கலாமே…”“தெரிஞ்சா அவ்வளவுதான்…”

“என்ன சொல்றே..” “சென்ட்டிமென்ட். உன்னை அடிக்க மாட்டாங்க. ரூமுல வச்சு பூட்ட மாட்டாங்க. அழுவாங்க. காலைப் பிடிச்சு கெஞ்சுவாங்க. ‘அவன் என்ன குலம் கோத்திரம்… ஏண்டி உனக்கு இப்படி புத்தி போச்சு… நம்ம சாதி சனம் காறித் துப்பும்டி… எங்கள உசுரோட பார்க்க முடியாது… இப்பவே உன் கண்ணெதிரவே தொங்கிடுவோம்…’ இப்படி…” “நாளைக்கு நாம ஓடிப்போன பிறகு என் அப்பா அம்மா விபரீதமா ஏதாச்சும் முடிவுக்கு வந்தா..?”

“மாட்டாங்க. உன் அப்பா நடுவீட்ல தலைமுழுகுவார். உன் அம்மா தலையில அண்டா தண்ணிய எடுத்து கவுப்பார். ‘உனக்குத் தெரியாதாடி’னு உன் தங்கச்சிய அடிப்பார். கோயில்ல தியாகராஜர் முன்னால அழுவார். உனக்கும் எனக்கும் சாபம் விடுவார்…” “பயமா இருக்கு. ஜெயிக்கணுமே… திரும்ப இங்க வரணுமே…” “ஜெயிக்கலாம். வரலாம். இந்த பாரு… ஊர்ல தேரோட்டம் நடக்குது. ஆள் நடமாட்டம் அதிகமா இருக்கு. நம்ம மேல சந்தேகம் வராது. பதினோரு மணிக்கு கம்பன் எக்ஸ்பிரஸ்ல ஏறிடலாம்…”

தேர் இப்போதுதான் ஒரு நாளில் நிலைக்கு வருகிறது. முப்பது வருடங்களுக்கு முன் மூன்று நாட்கள் ஆகும். அங்குலம் அங்குலமாக அசைந்து நகரும். அப்போது சக்திமிக்க புல்டோசர்கள் கிடையாது. டிராக்டர்கள் கிடையாது. கணக்குப் போட்டு வீதிகள் திருப்ப பொறியாளர்கள் கிடையாது. வடபாதிமங்கலம் சுகர் ஃபேக்டரி ஆட்கள் மற்றும் உள்ளூர் வெளியூர் பக்தர்களும் மட்டுமே தேரை இழுப்பார்கள். மாலை ஆறரை மணிக்கு சற்றே இருட்டியதும் தேர் வடம் விடப்படும். சரியாக சுப்ரமணி குருக்கள் வீட்டு வாசலில் வடக்கு வீதியில் தியாகராஜர் நிற்பார்.

“பார்த்தியாடி… அப்பன் எங்க நிக்கிறான் பாருடி… தேடி வந்திருக்கான்டி. அப்பனே… தியாகேசா…” சுப்ரமணி குருக்கள் பரப்பரப்பாவார். வீட்டைக் கழுவுவார். வாசலில் விளக்கேற்றுவார். குடும்பத்தோடு வாசலில் நின்று அண்ணாந்து பார்த்து தேரில் இருந்த தியாகராஜரை வணங்குவார். நந்தினி அப்பாவைப் பார்த்தபடி இரவு பத்து மணிக்காகக்காத்திருந்தாள். கையில் சிறிய பேக். உள்ளே இரண்டு மாத்துத் துணிகள். உள்ளாடைகள். அவளுடைய சான்றிதழ்கள்.

நந்தினி வீட்டுக் கதவை சப்தமில்லாமல் திறந்தபோது அப்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அம்மா, தங்கை இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மெல்ல கதவைச் சாத்தினாள். வாசலைப் பார்த்தாள். தூரத்தில் பெஞ்சில் இரண்டு காவலர்கள். தெருவை அடைத்துக் கொண்டு தேர். முறுக்கேறிய தேங்காய் நாரிலான மொத்தமான நான்கு வடங்களும் தேரிலிருந்து நீண்டு சாலையில் கிடந்தன. தியாக ராஜர் முன் விளக்கெரிந்து கொண்டிருந்தது.

சாலைக்கு அந்தப்பக்கம் செல்ல வேண்டும். நடுங்கிய கால்களை இறுக்கிப் பிடித்து ஒவ்வொரு அடியாக வைத்தாள். ஒவ்வொரு வடமாகக் கடந்தாள். நினைத்த வாழ்க்கை கிடைத்தது. எதிர்பார்த்தது எல்லாம் நடந்தது. அன்பு காதல் கணவனோடு இனிக்க இனிக்க குடித்தனம் நடத்திக்கொண்டே அவனது வழிகாட்டலில் சிவில் சர்வீஸ் படித்தாள். ‘அன்புள்ள அப்பாவுக்கு, என்னை மன்னித்து விடுங்கள். நீங்க சம்மதிக்க மாட்டீர்கள் என்பதால் இந்த முடிவு…’கார்டில், இன்லாண்ட் லெட்டரில், கவரில் போட்ட எந்த கடிதத்துக்கும் பதில் இல்லை.

‘அம்மா, நான் முழுகாமல் இருக்கிறேன்… அப்பா, உங்களுக்கு பேரன் பிறந்திருக்கிறான்… தியாகு என்று பெயர் வைத்திருக்கிறார்…’தியாகு என்று பெயர் வைத்து இருபதாவது நாள் விமான விபத்தில் ரவிவர்மன் இறந்து போனான். நந்தினி மணி பார்த்தாள். பத்து நிமிடங்கள் என்னையறியாமல் நின்றிருக்கிறேன்… இன்னும் நிற்க வேண்டும் போலிருந்தது. வடம் தாண்டி முப்பது வருடங்கள். வயது எடுத்த முடிவல்ல.. எனது எதிர்காலம் குறித்து நான் எடுத்த முடிவு. இந்தஅளவுக்கு நான் வளர்ந்திருப்பது அவர் கொடுத்த ஊக்கம். ரவிவர்மனைவிட இனியவர் இருக்க மாட்டார் என்கிற நினைவில் வேறொரு துணை தேடவில்லை.

கடந்து சென்ற ஒவ்வொரு நிமிடமும்… அப்பா, அம்மா, தங்கை… ஐபிஎஸ் தேறி இருபது வருடங்களாகி விட்டன. பல மாநிலங்களில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிவிட்டேன். நேர்மையான திறமையான சர்வீஸில் ரிமார்க் இல்லாத அதிகாரி. நான்கு மொழி பேசுவார். எந்தவொரு சிக்கலான சூழ்நிலையையும் சாமர்த்தியமாக சமாளிப்பார்… எல்லாம் இருந்தும் என்ன பயன்..? பிறந்த ஊரில் நடமாட முடியவில்லை. பெற்றோர்கள் ஆசீர்வாதம் இல்லை. ஊரார் அங்கீகாரம் இல்லை.

ஒரு நாள் ஒரு குரல் அம்மா அப்பா இறப்பை போனில் கூறியது. அதுவும் காரியம் முடிந்த பிறகு. ‘அப்பா சொல்லவே கூடாது என்று கட்டளையிட்டும் மீறிச் சொல்கிறேன்’ என்கிற பின்னுரையோடு. தியாகு அமெரிக்காவில். எனக்கு இன்னும் இரண்டே வருடங்கள் சர்வீஸ். “நந்தினி ரவிவர்மன்… உங்கள் பெயர் பிரதமர் அலுவலக செயலாளர் தேர்வு பட்டியலில் இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய அங்கீ காரம். அப்படி கிடைத்தால் தமிழ்நாட்டிலிருந்து பிரதமர் அலுவலக செயலாளராகும் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்கிற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்.

போன முறை உங்கள் பெயர் பரிசீலனையில் இருந்திருக்கிறது. என்ன காரணமோ கைகூடவில்லை. நீங்கள் திருவாரூரில் பிறந்தவராமே… தியாகராஜரை வேண்டிக் கொள்ளுங்கள்..!” சீனியர் ஒருவர் கூறியது நினைவில் வந்து போனது. “மேடம், கலெக்டர் வந்து விட்டார். வடம் பிடித்து விடலாம். நல்ல நேரம் போகிறது…” பரபரப்பு தொற்றிக் கொண்டது. அருகே ஒரு குரல் கேட்டது. வயதான குரல். “மேடம் நீங்கள் இங்கேயே இருங்கள். தேர் நிலை தாண்டியதும் கீழவீதியில் சில மீட்டர்கள் ஓடி நிற்கும். அப்போது இறங்கலாம்.

வடம் பிடிக்கப்போகும் நேரத்தில் தியாகராஜருக்கு அருகே நிற்கிற பாக்கியம் கிடைப்பது அரிது. பலமுறை உங்கள் அப்பாவுக்கு கிடைத்திருக்கிறது…” நந்தினி விருட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அவர் மரியாதையாக வணங்கி நகர்ந்தார். கலெக்டர் கீழிருந்து அவளைப் பார்த்து மரியாதையோடு சையசைத்தார். அதிர்வேட்டு முழங்கியது. தேர் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. புல்டோசர்கள் தடதடவென ஸ்டார்ட் ஆகி பெரிய உறுமலுடன் தேர்ச் சக்கரம் நோக்கி ஆவேசமாக வந்தன.

தேரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கைகளில் கிளவுஸ் அணிந்திருந்த, தேர் ஓட்டுவதில் பல வருடங்கள் பயிற்சி பெற்ற நான்கு பொறியாளர்கள் தேரின் நான்கு சக்கரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். கூட்டம் “ஆரூரா தியாகேசா…” என்று ஆரவாரம் செய்தபடி இருக்க… கலெக்டர் கையை உயர்த்தி கர்ச்சீப்பை அசைக்க… தேருக்கு அருகேயிருந்து பெரிய பச்சைக் கொடி முளைக்க… சட்சட்டென ஆங்காங்கே பச்சைக் கொடி தோன்றியது. பறை ஒலித்தது. எக்காளம் முழங்கியது. அதிர்வேட்டு அதிர்ந்தது.

நந்தினி உடம்பெல்லாம் சிலிர்த்து ஒருவித பரவசத்தில் திளைத்து தியாகராஜரை நோக்கிக் கைகூப்பினாள். தேர் நிலையடியை விட்டு நகர்ந்தது. ‘தியாகேசா… அப்பா நின்ற இடத்தில் நிற்கிறேன். சர்வதோஷ பரிகார நாயகனே… பாவம் களை…’ நந்தினி கர்ச்சீப் எடுத்து முகம் துடைத்தாள். ‘ஆரூரா தியாகேசா…’ ‘ஆரூரா தியாகேசா…’ கீழவீதி எங்கும் பக்த கோஷம் விண்ணைப் பிளந்தது.

“சிகப்புக் கொடி…” வடம் விடப்பட… தேர் நின்றது. “மேடம் கீழே வந்து விடுங்கள்…” கலெக்டர் சைகைகாட்ட, தேருக்குள் இருந்து சிறிய படிக்கட்டு வழியாக நந்தினி கீழே இறங்கி தேரை விட்டு நகர்ந்தாள். அதிகாரிகள் அவசரமாகச் சூழ்ந்தார்கள். “மேடம்… உங்கள் மொபைல் ஆஃப் ஆகியிருக்கிறதா பாருங்கள். லூப் லைனில் இன்டெலிஜென்ஸ் ஏடிஜிபி என்னிடம் பேசினார். உங்கள் மொபைலை அலெர்ட்டில் வைக்கச் சொன்னார். ஏதோ முக்கிய செய்தியாம். தில்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்து உங்களைத் தொடர்பு கொண்டார்களாம்…” கலெக்டர் படபடத்தார்.

நந்தினி அவசரமாக மொபைலை எடுத்துப் பார்த்தாள். மிஸ்டு கால் இருந்தது. தில்லி கால். ஆரவாரத்தில் சத்தம் கேட்கவில்லை. யோசித்தபடி நிற்க… மீண்டும் டிஸ்ப்ளே ஒளிர்ந்து பிரதம மந்திரி அலுவலகம் என்றது. “பச்சைக் கொடி காட்டவும்..!”“ஆரூரா தியாகேசா…”ஆழித்தேர் அசைந்து அசைந்து ஆரவாரமாகக் கீழ
வீதியில் ஓடியது.

– May 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *