கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2022
பார்வையிட்டோர்: 2,576 
 

அன்று ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை. காலையில் எழும்போதே அந்த நினைவுதான். சொல்லப் போனால் நேற்றிரவு உறக்கம் வரும் வரை கூட அந்தச் சிந்தனையாகவே இருந்தது. எப்படி இருக்கப் போகிறதோ? என்ன ஆகுமோ? பதற்றமும் எதிர்பார்ப்பும் நேற்றை விட இன்று அதிகம் இருந்தன.

கழிவறைக்கடன்கள் முடித்துக் குளித்துத் தயாரானபோது செய்தித்தாள் வந்திருந்தது. தலைப்புச் செய்திகளைக் கூடப் பார்க்காமல் அதைப் பற்றி என்ன செய்தி வந்திருக்கிறதென்றுதான் முதலில் பார்த்தான். நிருபருக்கும் நேற்று அவனுக்கிருந்த மனநிலைதான் இருந்திருக்கும் போல. எப்படி வேண்டுமானாலும் நடக்கும் என்பது போலத்தான் எழுதியிருந்தது.

அது மதியம் பன்னிரண்டு பத்துக்குத்தான். சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழே முக்கால்தான் ஆகியிருந்தது. கணக்குப் போட்டு இன்னும் நான்கு மணி இருபத்தைந்து நிமிடம் இருப்பதை அறிந்து பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தினான்.

இந்த நாலுமணி இருபத்தைந்து நிமிடமும் ஒரு நொடியில் கடந்து விட்டால்… ருசித்துச் சாப்பிடாமல் அவசரம் அவசரமாகவே காலை உணவை முடித்தான். உள்ளுக்குள் பதற்றம் அதிகரித்தபடியே இருந்தது. தொலைக்காட்சி செய்தியிலும் மனம் ஒன்றவில்லை. ஒவ்வொரு முறை அதை எதிர்கொள்ளும் போதும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. அதை மாற்ற அவனால் முடிவதில்லை.

வாசலுக்குச் சென்று காம்பவுண்டு சுவரில் சாய்ந்தபடி தெருவை நோட்டமிட்டான். ஞாயிற்றுக்கிழமை தெரு வெறிச்சோடிக் கிடந்தது. ஒரேயொரு நாய் மட்டும் எலும்புத்துண்டு ஒன்றைக் கவ்வியபடி ஓடி வந்தது. அவனருகே வந்ததும் சற்று நேரம் பார்த்தது. அவன் அதட்டவோ, சத்தம் போடவோ முயலவில்லை. என்ன நினைத்ததோ சட்டென திரும்பி, வந்த வழியே ஓட ஆரம்பித்தது. அதற்கு மேல் அவனுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை.

உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தவன் செய்தித்தாளை எடுத்து அன்றைய தலைப்புச் செய்தியை வாசிக்க முயன்றான். முதல் நான்கு வரிகளை வாசித்தபின் மனம் செய்தியில் பதிய மறுத்தது. கண்கள் மட்டும் அனிச்சையாக எழுத்துகள் மீது ஊர்ந்தன. “ச்சே” என்றபடி செய்தித்தாளை மறுபடி மேசை மீது எறிந்தான். நாற்காலியில் அமர்ந்தபடியே கண்களை மூடி கைகளை பின்னோக்கி நீட்டிச் சோம்பல் முறித்தான். சற்று நேரம் படுத்தால் என்ன?

மல்லாந்து கட்டிலில் படுத்துக் கண்களை மூடினான். உறக்கம் வருகிறாற்போலத் தெரியவில்லை. கண்முன் காட்சிகள் கற்பனையாக ஓடின. எல்லாம் அதைப்பற்றித்தான். சட்டென அவன் தன் வலது கையை நெஞ்சுக்கு மேல் வைத்துச் சோதித்தான். அது இயல்புக்கு அதிகமாகத் துடித்தது. சுவாசமும் அதிக வேகமாக நடப்பதாகத் தோன்றியது. அவனுக்கு தன் மீதே ஒரு வெறுப்பு உண்டாயிற்று.

“ஏன் இந்த விஷயத்துக்குப் போய் இப்படியெல்லாம் பதற்றப்பட வேண்டும்”. அவன் தன் அறிவைக் கொண்டு தறிகெட்டு ஓடும் சிந்தனையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தான். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. நடப்பது எதுவானாலும் நடக்கத்தான் போகிறது. அதைப்பற்றி ஏன் இத்தனை பரபரப்புக் கொள்ள வேண்டும். இது மிகவும் முதிர்ச்சியில்லாத நடத்தை. வெட்கத்துக்குரிய விஷயம். அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். சற்று நேரத்தில் அவனுக்குள் மனச்சோர்வும் கழிவிரக்கமும் தோன்றின. அவன் தளர்ச்சியடைந்தான்.

சில நிமிடத்திற்கெல்லாம் மீண்டும் அவனுள் பதற்றம் ஏற்பட்டது. அதைப் பற்றிய எண்ணங்கள் மறுபடி நினைவோட்டத்துள் கலந்து ஓட ஆரம்பித்தன. வெடுக்கென அவன் கட்டிலை விட்டெழுந்து நாற்காலியைக் கொண்டுவந்து வாசலில் போட்டு அமர்ந்தான். அருகே நட்டிருந்த, அப்போதுதான் பச்சைக் குருத்துகளை வெளிவிட ஆரம்பித்திருந்த தென்னங்கன்றைப் பார்த்தான். அதிலேயே சிந்தனையைக் குவிக்க முனைந்தான். ஆனாலும் நீண்ட நேரத்துக்கு அது முடியவில்லை. தலையை வலுவாக இரண்டுமுறை உதறிக்கொண்டு மல்லாந்து பார்த்தபடி கண்களை மூடிக்கொண்டான்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இது ஒரு வியாதியோ, மன சம்பந்தமான நோயோ? ஒருவேளை “ஆப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸ் ஆர்டரோ?” அந்த நோய்க் குறியீடு பற்றி அவனுக்குக் கொஞ்சம் தெரிந்திருந்தது. ஆனால் “அதை” எதிர்பார்த்திருக்கும் நேரங்கள் தவிர்த்து இத்தகைய அவஸ்தை ஏற்படுவதில்லை. அதை எதிர்பார்த்துக் காத்திருக்கையில் மட்டும்தான் இப்படி ஆகிவிடுகிறது.

“அதன் மீது எனக்கு இருக்கும் அதீதப் பற்றுதல் மற்றும் என் வாழ்வில் நான் அதற்குத் தரும் முக்கியத்துவம் சார்ந்துதான் இந்தப் பதற்றம் ஏற்படுகிறதோ”?

நாற்காலியை விட்டு எழுந்து வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான். இதை எப்படித் தவிர்ப்பது, இந்த மன இம்சை ஏற்படாமல் தடுப்பது எப்படி?

நடந்து கொண்டிருந்தவன் எதையோ நினைத்துக்கொண்டது போல நின்றான். உள்ளே போய் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டான். செருப்பை அணிந்துகொண்டு தெருவுக்கு வந்து நடக்க ஆரம்பித்தான். முக்கிய சாலைக்கு வந்ததும் நின்றான். சாலையில் கிழக்கே போனால் நாலைந்து தெருக்கள் தாண்டியதும் ஊர் முடிந்து வயல்கள் தொடங்கும். மேற்கே நடந்தால் முதலில் பேருந்து நிலையம். அதன் பின் மார்க்கெட் எனப்படும் சிறிய கடைவீதி. அதன்பின் தெருக்கள் விரிந்து ஊர் நீளும். அவன் மேற்குத் திசையிலேயே நடக்க ஆரம்பித்தான்.

அரசுப் பேருந்து ஒன்று சொற்ப பயணிகளுடன் அவனைக் கடந்து முன் சென்றது. பேருந்து நிலையத்தில் சில பயணிகள் பேருந்துக்காகவும் சில பிச்சைக்காரர்கள் தருமவான்களுக்காகவும் காத்திருந்தனர். சுவர் விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தான். “அதை” நினைவூட்டும் விளம்பரம் ஏதேனும் கண்ணில் பட்டுவிடப்போகிறது என லேசாகக் கிலேசமுறவும் செய்தான். இப்படி யோசித்ததன் புகுத்தி விட்டமைக்காக தன்னைத்தானே கடிந்துகொண்டான். எதிரே தென்பட்ட காலி ஐஸ்க்ரீம் கப் ஒன்றைக் கோபத்துடன் எற்றினான். அது உருண்டு வழியோரம் போய் விழுந்தது.

மக்கள் நடமாட்டம் குறைந்த அல்லது நடமாட்டம் அறவே இல்லாத தெருக்கள் வழியாக நடந்துகொண்டிருந்தான். அவன் மனம் சுயகோபம், கழிவிரக்கம் இன்னும் குறைந்துவிடாத பதற்றம் – இவற்றால் நிறைந்திருந்தது. அவன் கிட்டத்தட்ட ஊரைக் கடந்து எல்லையில் இருந்த மாரியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டிருந்தான். கோயில் யாருமில்லாத அமைதியில் இருந்தது. சிறிய கோயில் ஒற்றை வேப்பமர நிழலில் சாந்தமாக நின்றிருந்தது. வேப்ப மரத்தடியில் சிறுபாறையொன்று கிடந்தது. அவன் பாறைமீது அமர்ந்தான்.

வேப்பமர நிழலும் பாறைக் குளிர்ச்சியும் இதமாக இருந்தன. அவன் மெதுவாக ஆசுவேசம் கொள்ள ஆரம்பித்தான். அப்படியே கைகளை தலைக்குக் கொடுத்து பாறைமீது மல்லாந்தான். பாறையின் குளிர்ச்சி ஒருவித சிலிர்ப்புடன் அவன் உடலெங்கும் பரவத் தொடங்கியது. அவன் தன்னையறியாமலேயே கண்களை மூடினான்.

எவ்வளவு நேரம் அப்படியே படுத்துக்கிடந்தான் என்பதை அவன் அறியவில்லை. எதேச்சையாக கண்களைத் திறந்து கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்று ஐம்பது. எழுந்து செருப்பை அணிந்துகொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இன்னும் இருபது நிமிடங்கள் தான் இருக்கின்றன. அதற்குள் வீடுபோய்ச் சேர்ந்துவிட வேண்டும். அவன் நடையில் வேகம் கூடியது. பழைய பதற்றமும் எதிர்பார்ப்பும் மேலிட அவன் நடையை எட்டிப் போட்டான். அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். விறுவிறு என்ற நடைக்கு ஈடாக இதயத்துடிப்பும் சுவாசமும் அதிகரித்தன.

மார்க்கெட்டைக் கடக்கும்போது பன்னிரண்டு பத்துக்கு ஏழு நிமிடங்களே இருந்தன. நேரத்துக்குள் போய்விடமுடியும் என அவன் நம்பிக்கை கொண்டான். பேருந்து நிலையத்தில் இன்னும் கூடுதலாகப் பயணிகள் காத்திருந்தனர். பிச்சைக்காரர்கள் குறைந்திருந்தார்கள். தன் தெருவுக்குள் நுழைகையில் அவனுக்குள் பதற்றமும் வெகுவாக அதிகரித்து விட்டிருந்தது.

அவனையறியாமலேயே அவனது நடை ஓட்டமாக மாறிவிட்டிருந்தது. வீட்டுக்குள் நுழைந்தபோது மூச்சு ஏகமாக வாங்கியது. நெஞ்சு அடித்துக்கொள்வது அவனுக்கே கேட்கும் போல இருந்தது.

உள்ளே வந்து நாற்காலியில் விழுந்தான். டி.வி. “ஹே” வென்ற கூச்சலின் பின்னணியில் ஓடிக்கொண்டிருந்தது. மணி பன்னிரண்டு பத்து. கிளென் மெக்ரா ஓடிவந்து முதல் ஓவரின் முதல் பந்தை சௌரவ் கங்கூலிக்கு வீசினான். அவன் மூச்சு சீராக வரத் தொடங்கியது. பதட்டம் ஏதும் இல்லாமல் கிரிக்கெட் மேட்சைப் பார்க்கத் துவங்கினான்.

நன்றி: வார்த்தைப்பாடு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *