மீனாட்சி அத்தை சொல்லும் போதே மெய் சிலிர்த்தது. கல்யாணம் கழிச்ச புதுசில …என தொடங்கி அத்தை பேச ஆரம்பித்தாள். மக்கா எனக்க வீட்டுக்காரங்க தொடுவெட்டி சினிமா தியேட்டருக்கு உண்ணாமலை கடையில இருந்து ஒத்தயடி பாதையில போயி இராத்திரி இரண்டாம் ஆட்டம் படம் பாத்திட்டு நடந்து வரும் போது ஒண்ணரை இரண்டு மணி ஆயிடும் .வந்தவுடனே அடுப்ப பத்த வச்சு ஒரு கட்டன் காப்பி திக்காசன் கூட்டி போட்டு குடுப்பேன். கொஞ்ச நேரத்தில வெள்ளாவி அடுப்புக்க பக்கத்தி போயி ஒவ்வொரு துணிகளையா எடுத்து கட்டி பறக்கிக்கிட்டு அவருக்கு தோதா உள்ள அஞ்சாறு சட்டம்பிகளையும் துணைக்கு அழைத்து கொண்டு ஆத்துக்கடவுல ,நம்ம அம்மன் கோவிலோட ஒட்டி இருக்க கூடிய கடவுல துணி அடிக்க போயிருவாரு. இப்படி வாரத்தில இரண்டு நாளாவது துணி அடிக்க போயிட்டு பொல பொலண்ணு நேரம் விடிஞ்ச பொறவு தான் வருவாரு.
இத போல ஒரு நாளு பாத்துக்கா… நல்ல பெளர்ணமி வெளிச்சத்தில உண்ணான மக்கா.. ஆத்துகடவு அம்மன் தலைய விரிச்சு போட்டுட்டு ,மேலு பூரா குங்குமத்தையும் சந்தனத்தையும் தடவி மஞ்ச பாலு முக்கி ஆத்துல முங்கி குளிச்சிட்டு இருந்தாளாம். இத பாத்தது தான் மிச்சம் அவருக்க கூட போன அவ்வளவு பேரும் துணிகட்டுகள போட்டுக்கிட்டு ஆத்துக்கடவு அம்மா எங்கள காப்பாத்துண்ணு அலறி அடிச்சிட்டு திரும்பி பாக்காம ஓடுனானுவளாம். ஆமாம் அவரு என்ன செய்தாருன்னு அவரும் திரும்பி பாக்காம ஓடுனாரா என்று கேட்டேன். கொஞ்சம் பொறுல ஆத்துல உள்ள மீனுக்கு பயந்து குண்டிகளுவாம வர முடியுமா… கொஞ்ச நேரம் பொறுமையா நின்னாராம். அதுக்க பொறவு ஆத்து கடவு அம்மா எனக்கு நிறைய வேலை இருக்குது பாத்துக்கா… இவளவு அழுக்கு துணியளயும் துவச்சிட்டு வீட்டுக்கு போவேண்டி இருக்கு என் பொண்டாட்டி வேற தேடிக்கிட்டிருப்பா சீக்கிரம் குளிச்சிட்டு கரையேறுண்ணு சத்தம் போட்டு சொன்னாராம். அது அவளுக்க காதுல விழுந்திருக்கும் போல …உடனே அவ குலவ சத்தம் போட்டுக்கிட்டே குளிக்கத நிறுத்திக்கிட்டு நடந்து கோவிலுக்குள்ள போனாளாம்.
ஆத்துக்கடவு அம்மன் ஒனக்க வீட்டுக்காரரு சொன்ன எப்படி கேப்பா… சிரிச்சிக்கிடே கேட்டேன் லேய்.. மக்கா விசயம் தெரியாம சிரிக்காதல நீ கேட்ட இதே கேள்விய அவங்கக்கிட்ட நானும் கேட்டேன். உடனே உக்கிர சுடலை மாடன் பாத்தது மாதிரி பாத்தாரு ஒரு பார்வை… நெஞ்சம்பலய நிமித்திக்கிட்டு பேச தொடங்கினாரு.
ஆத்துக்கடவு அம்மன் கோவிலு உச்ச கொடைக்கு அவ உடுக்கித பட்டு துணியில இருந்து பூசைக்கு உள்ள எல்லா துணிகளையும் நம்ம தானல துவச்சி கொடுக்கோம். ஆயிரக்கணக்கான மக்க அம்மா… ஆத்துக்கடவு அம்மாண்ணு கும்பிடக்கூடிய கோவிலு கொடையில பளபளவென வைரம் போல பட்டுல ஜொலிக்குதாண்ணா.. யாருல காரணம். ஊருல உள்ள எல்லா சாதிக்கார பயக்கள விடவும் எனக்கு மட்டும் தான் அவள செறுத்து விட்டு பதில் சொல்லிட்டு போ.. கேக்க கூடிய உரிமை உண்டு. நான பேசினவுடனே வாய பொத்திட்டு பதில் பேசாம போனா பாத்தியா அதுல இருந்தே புரிஞ்சுக்கா… ..சாலியமாருக்க கோவிலு தான் இராத்திரி வலிய படுக்க முடிஞ்சவுடனே அம்மனுக்க படைச்ச எல்லாத்திலயும் ஒரு பங்கு நமக்கு தந்திருவாவ …முடிஞ்சா அத நிறுத்த சொல்லி பாரு. ஆத்தில ஒரு பயக்கள குளிக்க விட மாட்டா..