வாசலில் அழுது கொண்டிருக்கும் தன் பத்து வயது தம்பியைப் பார்க்க மனசு துடித்தது 28 வயது இளைஞன் சிவாவிற்கு.
வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்.
நாற்காலியில் அமர்ந்து அமைதியாகத் தினசரி புரட்டிக் கொண்டிருக்கும் தந்தை தணிகாசலத்தைப் பார்த்ததும்…இவனுக்குக் கோபம் தலைக்கேறியது.
” எதுக்குப்பா தம்பியை அடிச்சீங்க…? ” கோபம் மாறாமல் கேட்டான்.
” படிக்கல. அடிச்சேன். ! ” தணிகாசலம் பொறுமையாய் ப் பதில் சொன்னார்.
” பிடிக்கலைன்னா அடிக்கிறதா…? ….. இனிமே அடிக்காதீங்க..”
” ஏன்…??…”
” என்னையும் இப்படித்தான் படிப்படின்னு அடிச்சீங்க. வகுப்பில் முதல் மாணவனா வரணும், முதலாவதா தேர்ச்சிப் பெறனும்ன்னு சித்ரவதை பண்ணுனீங்க. உங்க விருப்பப்படியே….. நான் கொஞ்சம் கூட குறை வைக்காம பட்டப் படிப்பு வரைக்கும் முடிச்சேன். பலன்…? அஞ்சு வருசமா வேலைக்கு நாயா பேயா அலையறேன். என் படிப்புக்கு மதிப்புக் கொடுத்து யாரும் வேலைக்குச் சேர்த்துக்கலை. இன்னும் வேலைக்கு கிடைக்கல. ஆனா…. என்னைவிட குறைவா…ஏன்… மட்டமா படிச்சவனெல்லாம் காசு, பணம், செல்வாக்கு, சிபாரிசுன்னு வேலைக்குப் போய்ட்டான். அப்பா ! அதுதான் அப்படின்னு…. எந்த சிபாரிசு, செல்வாக்குமில்லாம அரசாங்க பொதுத்தேர்வு எழுதி வேலைக்குப் போகலாம்னா அந்தத் தேர்விலும் … காசு, பதவி, செல்வாக்கு, சிபாரிசு உள்ளவன்தான் தேர்ச்சிபெறுறான் ! தில்லுமுல்லு…!! படிப்பு செல்லாக்காசாய்ப் போச்சு.
அப்பா ! புள்ளைங்க நல்லா இருக்கனும். எதிர்காலம் சிறப்பா அமையனும்ன்னா புள்ளைங்களுக்குப் படிப்போடு செல்வம்,செல்வாக்கைத் தேடி வையுங்க. படிப்புக்கும், உங்க உழைப்புக்கும் பலன் இருக்கும். முடியலைன்னா எங்க யாரையும், எதுக்காகவும் கட்டாயப் படுத்தாதீங்க. எங்க தலைவிதி எப்படியோ அப்படி நடக்கும் விடுங்க. ” என்ற சிவா…அதற்கு மேல் தாங்க முடியாமல் செருமினான்.
தணிகாசலத்திற்கு உண்மை பொட்டில் அறைந்தது.
மகனின் ஆதங்கம், நியாயம் புரிய…. தலை கவிழ்ந்தார்.