விக்கித்துப் போயிருந்தான்.
அப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை.
“நீ மட்டும் யோக்கியமா?”
யோக்கியம், அயோக்கியம் வேறுபாடுகள் பார்க்கும் நிலையிலா அப்போதிருந்தான்?
ப்ளாஷ்பேக் ஸ்டார்ட்ஸ்…
வார்த்தைகளுக்கு வாய்ப்பின்றி காலைக் கட்டிக் கொண்டு அழுத மாமா.
”நீங்கதான் எங்க குடும்ப தெய்வம்” – அழுதுகொண்டே அரற்றிய அத்தை.
“மாமா நீங்க இந்த நேரத்துலே உதவலேன்னா குடும்பத்தோடு தூக்குப் போட்டுக்கிட்டு செத்துடுவோம்” – மாமா மகன்.
தன்னை வளர்த்தெடுத்த குடும்பம் ஒப்பாரி வைத்து அழுவதைப் பார்த்து அவனும் அழுதான்.
மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள் ‘அவள்’
உலகமே மகிழ்ச்சியைக் கொண்டாடிய அந்த புத்தாண்டு இரவு அவளுக்கு மட்டும் துயர் தந்ததாய் இருந்தது.
“உங்க மாமா குடும்ப கவுரவம் உங்களுக்கு முக்கியமானதா இருக்கலாம். அதுக்காக நான்?”
“……………..”
இரண்டு நாட்களுக்கு முன்பாக மட்டுமே அவளுக்கு திருவேற்காட்டில் ரகசியத் தாலி காட்டியிருந்தான். இரண்டாண்டு தெய்வீகக் காதல். இன்னும் திருமணமானது ரெண்டு வீட்டுக்கும் தெரியாது.
அழுதான். திரும்ப திரும்ப அழுதான். அழுகையைத் தவிர்த்து அவனிடம் வேறு ஆயுதமில்லை. ஆண் அழுவது அசிங்கம். அதைவிட அசிங்கம் வேறெதுவுமில்லை.
அழுத அவனை வெறுத்தாள். வெறித்தாள், ’போய்த்தொலை’ என்ற மனோபாவத்தோடு.
அழகான ஆண்குழந்தை.
“அப்பனை உரிச்சு வெச்சிருக்கு” சொன்னபோது திடுக்கிடலாய் நிமிர்ந்தாள் ’அவள்’. அவனும் கூட.
அவனுக்கும், அவளுக்கும், அவள் குடும்பத்துக்கும் மட்டும்தானே தெரியும் அப்பன் யாரென்பது.
அவனுக்கு குழந்தை பிறந்தது என்று சுற்றம் கொண்டாடியது. யாரோ ஒருவனின் குழந்தைக்கு இனிஷியல் மட்டுமே தரவேண்டிய தன் விதியை நினைத்து மீண்டும் அழுதான். தனிமையில் அழுதான்.
குடும்பத்தோடு திருவேற்காடு போயிருந்தான். இனிஷியல் மகனை தோளில் சாய்த்திருந்தான்.
ஆயிரம் கல்யாணம் நடத்திவைத்த அர்ச்சகருக்கு இவன் முகம் மட்டும் நினைவில் இருந்து தொலைக்க வேண்டுமா?
“இதுதான் உன் ஆம்படையான்னா, அன்னைக்கு தாலி கட்டினியே? அந்தப் பொண்ணு யாருவோய்?”
உண்மை விளங்கி திரும்பவும் மாமா அழுதார்.
“உன் வாழ்க்கையையும் வீணடிச்சிட்டேனே?” தலையில் அடித்துக் கொண்டு அழுதார். சந்நிதியில் அழுதார். சுற்றி வேடிக்கைப் பார்ப்பவர்கள் குறித்த பிரக்ஞ்சை இன்றி அழுதார்.
ச்சே. இந்த ஆளுக்கு அழமட்டும் தான் தெரியும்.
’அவள்’ இம்முறை பார்த்தாள். வெறுப்போடு பார்த்தாள். கண்களில் தீக்கங்குகளை வைத்துப் பார்த்தாள்.
“யாரு போனுலே?”
“யாரா இருந்தா உனக்கென்ன?” அவள்.
பேருக்கு கணவன் – மனைவியாக இருப்பவர்கள் பேசிக்கொள்வது இப்படித்தானே இருக்கும்? உடலைப் பகிர்ந்துகொள்ள முடியாதவர்களால் உள்ளத்தை மட்டுமா பகிர்ந்துகொள்ள முடியும்?
அடிக்கடி அவளுக்கு போன் வந்தது. குழந்தை அழுவதைக் கூட சட்டை செய்யாமல் போனில் பேசினாள். சிரித்து சிரித்துப் பேசினாள். ஒருவேளை தான் இனிஷியல் கொடுத்த குழந்தையின் உண்மை அப்பனோ?
நேரங்கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்தாள்.
குழந்தையை க்ரெச்சில் சேர்த்திருந்தாள். எதையும் அவன் கேட்டதில்லை.
ஒருநாள் பொறுக்கமாட்டாமல் கேட்டான்.
”எங்கே போயிட்டு வர்றே?”
லேசான வார்த்தைகளில் தொடங்கிய உரையாடல் சூடுபிடித்து உச்சத்தை அடைந்தது.
அப்போதுதான் கேட்டாள் அவள்.
“நீ மட்டும் யோக்கியமா?”
முதல் பத்தியில் தொடங்கிய பிளாஷ்பேக் முடிவுக்கு வந்தது.
விடிந்த பொழுது மோசமான பொழுது.
அவள் ஓடிவிட்டிருந்தால் குழந்தையோடும், கட்டியச் சேலையோடும்.
குழந்தைக்கு உண்மையான இனிஷியல் ஒருவேளை கிடைத்திருக்கக் கூடும்.
மாமா திரும்ப அழுதார். அவர் குடும்பமே சேர்ந்து அழுதது. அழுமூஞ்சிக் குடும்பம்.
ஊரை காலி செய்தான். வீட்டை விற்றான். பணிமாற்றல் வாங்கினான்.
“இன்னொரு கல்யாணத்துக்கு பொண்ணும் வேணும்னா பார்க்கட்டா?” விசும்பியபடியே கேட்ட மாமாவை முறைத்தான்.
உடல் வேட்கையோடு அங்கே போனவனுக்கு உள்ளம் வெடித்தது. சுக்கு நூறாய். சுக்கு ஆயிரமாய். சுக்கு லட்சமாய்.
மூன்றாவது பத்தியில் பார்த்த ‘அவள்’ இவள்.
சினிமா ஆசையில் ஓடிவரும் இளம்பெண்களுக்கும், குடும்பத்தை மறந்து திருட்டு காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் சிலருக்கும் ஏற்படும் அதே கதி.
பாவத்தை மறைக்க, மறுக்க என்ன செய்வதென்று புரியவில்லை.. தான் தோன்றித்தனமாக நடந்துகொண்டான்.
அவளின் நகைகளை இவளுக்கு போட்டு அழகு பார்த்தான்.
“இனிமே நீயே வெச்சுக்கோ” அவனுக்கே கேட்காமல் முணுமுணுத்தான்.
அதன்பின் ஒருவரியும் பேசவில்லை இருவரும். முன்பு மனதால் இணைந்தவர்கள் இன்று உடலாலும் இணைந்தார்கள்.
அவள் முகம் பார்த்தான்.
அழுதான். திரும்ப திரும்ப அழுதான். அழுகையைத் தவிர்த்து அவனிடம் வேறு ஆயுதமில்லை. ஆண் அழுவது அசிங்கம். அதைவிட அசிங்கம் வேறெதுவுமில்லை.
அழுத அவனை வெறுத்தாள். வெறித்தாள், இப்போதும் ’போய்த்தொலை’ என்ற மனோபாவத்தோடு.
– உயிரோடை சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதை! – ஜூன் 2009