அவள் பெயர் ராணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 7,640 
 

அப்போது தான் ராணி அலுவலக வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருந்தாள். சற்று ஓய்வு எடுக்கலாம் என எண்ணியவளுக்கு வீட்டில் இருந்த வேலைகளை பார்த்து தலையே சுற்றியது. மலை போல குவிந்திருந்த அழுக்கு துணிகள் ஒரு புறம் குவிந்து கிடக்க. மறுபுறம் கழுவாத பாத்திரங்கள்

மகன் டிவியிலும். மகள் செல்போனிலும் மூழ்கி கிடந்தார்கள். எரிச்சலுடன் தனது பிள்ளைகளை திட்டி கொண்டே கொஞ்சம் நேரம் கட்டிலில் சாய்ந்தாள். பிறகு முகம் கழுவி வேலைகளை முடித்து பிள்ளைகளுக்கு மாலை சிற்றுண்டி தயார் செய்து. இரவு உணவுக்கு சப்பாத்தி. குருமா என சமையலில் தீவிரமாக இருந்தபோது வீட்டு காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. “மணி 8:00. அவர் வந்துட்டாரு போல”. என எண்ணியவாறே. “யாராவது போய் கதவை திறங்க உங்க அப்பாவாக தான் இருக்கும்” என தன் பிள்ளைகளிடம் சொல்லும்போதே இரண்டு மூன்று தடவை காலிங் பெல் அலறியது. யாரும் போய் கதவை திறக்கவில்லை. ராணியே சென்று கதவை திறந்தாள்.

“கதவை திறக்க ஏன் இவ்வளவு நேரம்?” என்று திட்டிக்கொண்டே ராணியின் கணவன் சங்கர் உள்ளே செல்கிறான்.

சங்கர் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் உயரதிகாரி. லட்சங்களில் சம்பளம். அதோடு சேர்ந்தே பணிச்சுமையும் மன அழுத்தமும் அதிகமாக இருந்தது. சங்கருக்கு ராணி வேலைக்கு செல்வது பிடிக்கவில்லை எவ்வளவோ சொல்லியும் ராணி வேலையை விடுவதாகவும் இல்லை இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கும்

கை கால்களை கழுவி விட்டு சங்கர் சாப்பிட வந்தான் “என்ன சப்பாத்தி பண்ணியிருக்க? காஞ்சு போயிருக்கு பாரு. இதுக்கு பேரு குருமாவா? உனக்கு வேலை போக நேரம் இருக்கு. பசங்கள பார்க்க தான் நேரம் இல்லை. என்னமோ பண்ணு” என்றவாறே மனமில்லாமல் சாப்பிட்டு முடித்து தூங்க செல்கிறான். ஆனால் அவர் குறை சொன்னதில் ராணிக்கு வருத்தம் இல்லை.கணவர் எப்போதாவது தன் மீது இப்படி வெறுப்பை காட்டினால் வருத்தம் ஏற்படும்.. தினமும் இப்படி தான் என்றால் பழகி விடும் தானே..

ராணி சங்கரின் மாமா மகள். 12ஆம் வகுப்பு படித்து முடித்த கையோடு சென்னையில் பணிபுரிந்து வந்த தன் அத்தை மகன் சங்கருக்கு மணமுடித்து தரப்பட்டாள் ராணி. சங்கர் டிகிரி வரை படித்தவர் நல்ல வேலையில் இருந்தார்.

கிராமத்து பெண்ணான 12வது மட்டும் படித்த 18 வயது ராணிக்கும். டிகிரி முடித்து சென்னையில் நல்ல வேலையில் இருந்த 25 வயது சங்கருக்கும் திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக இல்லை.

19 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனாள். 22வது வயதில் இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது. மழலை செல்வங்கள். எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத கணவர் இவை எல்லாம் இருந்தும் ராணிக்கு மன நிம்மதி இல்லை

வேலை முடிந்து சங்கர் வீட்டிற்குள் நுழையும்போதே “உங்க தங்கச்சி பண்ணது சரியில்லை. வீட்ல கேஸ் தீர போகுது. ஸ்கூல் பீஸ் கட்டனும்” அது இதுனு எதையாவது பேசி நன்றாக வாங்கி கட்டி கொள்வாள் ராணி.

ராணிக்கு. தான் வெறும் 12ஆம் வகுப்பு மட்டும் படித்தவள் என்பதால் தான் கணவர் தன்னை மட்டம் தட்டுகிறார். என்கிற எண்ணம் வர தொலைதூர கல்வி மூலமாக டிகிரி முடித்தாள்.

இப்போதும் ராணியை அவர் திட்டுவது மட்டும் குறையவில்லை. ராணி தானும் தன் கணவருக்கு சமமாக ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். இதற்கு சங்கர் அனுமதி தரவில்லை “பசங்க வளர்ந்துட்டாங்க. அவங்களை பார்க்கிறத தவிர வேலைக்கு போறது அப்படி என்ன முக்கியம்” என கடிந்து கொள்ள கணவன் – மனைவி இருவருக்குள்ளும் மோதல் மேலும் பூதாகரமாக வெடிக்கிறது.

ஒரு ஏற்றுமதி சார்ந்த நிறுவனத்தில் ராணிக்கு வேலை கிடைத்து கணவன் எதிர்ப்பையும் மீறி இரண்டு வருடங்களாக வேலைக்கு சென்று வருகிறாள். இப்போது ராணிக்கு 36 வயது. மகள் 12ஆம் வகுப்பும். மகன் 9ஆம் வகுப்பும் படிக்கிறார்கள்.

மறுநாள் காலை பொழுது விடிந்து. வேலைகளை செய்து முடித்து ராணி அலுவலகம் சென்று சக தோழி மாலாவிடம் பேசி கொண்டிருந்தாள். மாலா”மும்பை ஹெட் ஆபிஸ்ல இருந்து ஒரு சார் நம்ம ஆபிஸ்க்கு மாறுதல் ஆகி வருகிறாராம். அவர் ஏற்கெனவே இங்க வேலை பார்த்தவர் தான் நல்ல மனிதர்” என்று வரப்போகும் அதிகாரியை பற்றி கூற. அந்த குறிப்பிட்ட அதிகாரியும் அலுவலகம் வர நேரம் சரியாக இருந்தது

மாலா “குட் மார்னிங் சார். வெல்கம் டூ சென்னை” என அவரை வரவேற்க பதிலுக்கு“தேங்க் யூ. என் பெயர் ராஜா. என தன்னை அறிமுகப்படுத்துக் கொள்கிறான் ராஜா..

ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொள்கின்றனர். ராணிக்கு நேர் எதிர் இருக்கை தான் ராஜாவின் இருக்கை. ஒரு புன்முறுவல் சிரிப்புடன் “வெல்கம் சார். ஐ ஆம் ராணி” என ராணியும் ராஜாவும் அறிமுகம் ஆகிறார்கள். மதிய உணவு இடைவேளையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து உணவு அருந்துவது வழக்கம்

ராணி தான் சமைத்து எடுத்து வந்த வெண்டைக்காய் பொரியலை ராஜாவுக்கு பரிமாறுகிறாள். “வாவ் செம மேடம். வேற லெவல்ல இருக்கு. உங்கள் கணவர் குடுத்து வைத்தவர்” என ராஜா சொன்னதும் ராணிக்கு அவளது கணவர் திட்டுவது தான் நினைவுக்கு வந்தது அவளை அறியாமல் குபீரென சிரித்து விட்டு “தேங்ஸ் சார். சாப்டுங்க” என அமர்கிறாள். உள்ளுக்குள் “நாம் நன்றாக தான் சமைக்கிறோம். நம் கணவர் தான் எந்நேரமும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார் எப்போது தான் என் அருமை அவருக்கு தெரியுமோ?” என நினைத்து கொண்டு வேலையில் மும்முரமாகிறாள். மாலை தேநீர் இடைவெளியில் மாலாவுடன் அரட்டை ஆரம்பமாகிறது “மாலா. ராஜா சார் நல்ல மனிதராக பண்பாளராக இருக்கிறாரே. அவர் குடும்பம் எங்குள்ளது?”

“இல்லை ராணி அவர் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. வயது 37 ரொம்ப கஷ்டப்பட்டு படித்து வேலைக்கு வந்திருக்கிறார். அக்கா. தங்கைகளுக்கு தன் சொந்த செலவில் இவர் தான் திருமணம் செய்து வைத்தார். உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை நன்றாக பார்த்து வருகிறார்”

“ஓஹோ. அப்படியா மாலா. சரி வயது 37 ஆனால் என்ன? ஆள் பார்க்க சின்ன பையன் போல தானே இருக்கிறார். இப்ப கூட பெண் பார்த்து கல்யாணம் பண்ணலாமே?”

“அவருக்கு ஒரு கொள்கை இருக்கு ராணி. ஒரு விதவை அல்லது மாற்றுத்திறனாளி பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற நல் எண்ணத்தில் இருக்கிறார்”

“ஹேய் மாலா என்னப்பா சொல்ற இந்த காலத்தில் இப்படியும் நல்லவங்க இருக்காங்களா??” என புருவத்தை உயர்த்தி ஆச்சரியம் கொள்கிறாள் ராணி. ராணிக்கு ராஜா மீது ஒரு மரியாதையும் அதே சமயம் 37 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறாரே என்கிற அனுதாபமும் ஒரு சேர ஏற்படுகிறது..

நாட்கள் செல்கின்றன. ஒரு நாள் ராஜா பணிக்கு வரவில்லை. ஏன் வரவில்லை என விசாரிக்கும் போது தான் தெரிந்தது அவருக்கு உடல்நிலை சரியில்லை என. ராணி அவளை அறியாமல் பதறிப்போய் அவருக்கு போன் செய்கிறாள் “ராஜா சார். நான் தான் ராணி பேசுறேன். என்ன ஆச்சு உங்களுக்கு உடம்பு சரியில்லைனு சொன்னாங்க?”

“ஆமாம் மேடம். ஒரு பக்க தலைவலி. இப்ப பரவாயில்லை”

“நல்லா ரெஸ்ட் எடுங்க சார். உடம்பை பார்த்துக்கோங்க”

“ரொம்ப தேங்ஸ் என் மேல இவ்வளவு அக்கறை எடுத்து போன் பண்ணதுக்கு”

“இது தான் சார் என் நம்பர். சேவ் பண்ணி வச்சுக்கங்க”

நாட்கள் செல்ல இருவருக்கும் இடையேயான நட்பு உறுதியாகிறது.

ஏதோ ஒரு வகையில் இருவருமே அன்புக்காக ஒரு ஆதரவுக்காக ஏங்கியிருந்த நிலையில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக பழக துவங்குகிறார்கள்..

மணிக்கணக்கில் போன் பேசும் அளவுக்கு நெருக்கம் அதிகரிக்கிறது.. ராணி அலுவலகத்திற்கு பேருந்தில் தான் சென்று வந்தாள். அந்த பேருந்து பயண நேரம் முழுக்க முழுக்க ராஜாவுடன் உரையாடலில் தான் சென்றது.

தனது மனக்குமுறலை. கணவர். குடும்பம் பற்றியும் ராஜாவிடம் சொல்ல அதற்கு ராஜா சொல்லும் ஆறுதல் இவளது மனவேதனைக்கு அருமருந்தாக அமைந்தது போல இருந்தது.
இப்போதெல்லாம் ராணி ராஜாவுக்காகவே வேலைக்கு வருவது போல வந்தாள். ராஜா விடுப்பு எடுத்தால் இவளும் விடுப்பு எடுத்து விட்டு வீட்டிலேயே இருந்து விடுவாள்..

அப்படி ஒரு நாள் “எனக்கு தியேட்டர் போய் படம் பார்க்கனும்னு ஆசையா இருக்கு ராஜா”

“உன் ஹஸ்பண்ட் கிட்ட சொல்லுப்பா. குடும்பத்தோட போய்ட்டு வாங்க”

“அய்யோ அவரா? அவர் வேஸ்ட் பொண்ணு 10ஆம் வகுப்பு போனதுக்கு அப்புறம் நோ தியேட்டர்”

“சரி இப்ப என்னப்பா? உனக்கு தியேட்டர்ல படம் பார்க்கனும் அவ்வளவு தானே?

“ஆமாம்ப்பா”

“டோன்ட் வொரி ராணி. நான் கூட்டிட்டு போறேன். நம்ம தியேட்டர் போகலாம்”

“ஹேய் சூப்பர் ப்பா’. சரி எப்ப எப்படி போகலாம்?” என ராணி கேட்க

“இந்த வாரம் வியாழக்கிழமை லீவு போட்ருவோம். நீ வேலைக்கு போறது மாதிரி கிளம்பி வா. நான் இரண்டு ஸ்டாப் முன்னாடி வெயிட் பண்ணுவேன் நீ பஸ்ஸ விட்டு இறங்கிடு. நாம அப்படியே தியேட்டர் போயிடலாம்.” என ராஜா திட்டம் தீட்ட

அத்திட்டத்தின் படியே ராணி கிளம்பி ராஜா சொன்ன இடத்தில் இறங்கியதும் ராஜா தனது இருசக்கர வாகனத்தில் பறந்து வருகிறான்”ஏறு ராணி. கிளம்புவோம்”

“பைக்லயா?”

“ஆமாம். ஏன்?. இல்லைனா ஆட்டோல போகலாமா?”

“இல்லை பரவாயில்லை. பைக்லயே போகலாம்” என சொல்லி ராணி ஏறிக்கொள்கிறாள். தயங்கியபடியே ராஜாவின் தோள் மீது கை வைத்து செல்கிறாள். உள்ளுக்குள் ஒரு வித தயக்கம். இருந்தாலும் ஒரு பக்கம் மகிழ்ச்சி”

“இறங்கு ராணி. தியேட்டர் வந்துடுச்சு. இங்கயே வெயிட் பண்ணு நான் போய் டிக்கெட் எடுத்துட்டு வரேன்” என சொல்லி சென்ற ராஜா உடனே திரும்ப வந்து

“ராணி ஷோ 11 மணிக்கு தானாம். மணி இப்ப தான் 10 ஆகுது.பக்கத்தில் ஒரு பார்க் இருக்கு மா. அங்க போய் கொஞ்ச நேரம் டைம் பாஸ் பண்ணலாமா??”

“வாவ். அந்த பார்க் நல்லா இருக்கும். ஓகே போகலாம். நடந்தே போகலாம். அங்க போய் மனம் விட்டு பேசலாம்” என ராணி சிலாகிக்கிறாள். ஆனால் ஒருபுறம் உள்ளுக்குள் இதெல்லாம் சரியா?? என கேள்வியும் அவளுக்குள் எழுகிறது.

இருவரும் அந்த பூங்கா உள் நுழைகிறார்கள் “ஹேய் என்னப்பா யாரையுமே காணோம்?”

“மணி 10 தானே ஆகுது. யாரும் வந்திருக்க மாட்டாங்க.ஆனாலும் பாரு அந்த மூலையில் ஒரு ஜோடி உட்காந்திருக்கு என சிரித்தபடி ராஜா சொல்ல.

அந்த திசையோ நோக்கிய ராணிக்கு பேரதிர்ச்சி. ஒரு கணம் அப்படியே மூர்ச்சையாகி போனாள். அங்கு இருந்தது வேறு யாரும் அல்ல. ராணியின் 12ஆம் வகுப்பு படிக்கும் மகள் தனது தோழனுடன் பள்ளிக்கு செல்லாமல் இங்கு வந்து அமர்ந்திருக்கிறாள்..

“இவளுக்கு என்ன தைரியம். ஸ்கூலுக்கு போறேனு பொய் சொல்லிட்டு இப்படி யாரோ ஒருத்தன் கூட பார்க் வரை வந்துருக்கா. அவளை சும்மா விடக்கூடாது” என உள்ளுக்குள் எண்ணியபடி ஒரு அடி முன் வைக்கிறாள்.

“எங்க போற ராணி?. திருப்பி உன் மகள் ‘இங்க என்ன மா பண்ற? வேலைக்கு போறனு சொல்லிட்டு தானே போன’ அப்படினு கேட்டால். என்ன பண்ணுவ?” என அவளது மனசாட்சி கேட்டதும் அப்படியே சிலையாகி போனாள்

“என்ன ஆச்சு ராணி. அப்படியே நின்னுட்ட??”

“ஒரு போன் பேசிட்டு வரேன். அப்பவே கால் வந்தது நான் எடுக்கல.யாருனு பேசனும்”

“என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லையாம். அவ ஸ்கூல்ல இருந்து கால் வந்தது. நான் உடனே வீட்டுக்கு கிளம்பனும். நாம இன்னொரு நாள் தியேட்டர் போகலாம்” என சொல்லி அங்கிருந்து கிளம்பி ஒரு ஆட்டோவை பிடித்து வீடு வந்து சேர்கிறாள் ராணி

வீட்டுக்கு வந்து ஒரே அழுகை “நான் தடம் மாறி போனதால் தான் மகளை ஒழுங்காக கண்காணிக்காமல் விட்டுவிட்டேன். எப்படி வேறு ஆணுடன் தியேட்டர் வரை செல்ல துணிந்தேன்?” என அழுது புலம்பி தவித்தபொழுது. அவளது உள் மனது “இப்ப என்ன ஆச்சு? ஒன்னும் ஆகல தவறு நடக்கும் முன்பே உனக்கு புத்தி வந்துடுச்சு. உன் பொண்ணுக்கு உடனே கால் பண்ணி. வீட்டுக்கு வரச்சொல். குடும்பம் தான் முக்கியம் அதை மட்டும் எப்போதும் மறந்துடாத”

அந்த நாள் அப்படியே போனது. இரவு கணவரும் வீடு வந்து சேர்ந்தார். அவர் சாப்பிடும்போது “ஏங்க நான் உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லனும்”

“சொல்லு.சொல்லு” என கணவர் கடுப்புடன் கேட்க

“நான் வேலையை விடலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு நீங்க. பசங்க தான் முக்கியம். நீங்கள் வேலைக்கு போங்க. நான் குடும்பத்தை பார்த்துக்கிறேன்”

அவள் கணவனால் நம்ப முடியவில்லை. ஒரு புன்முறுவலுடன் “சட்னி நல்லா இருக்கு மா. இன்னும் கொஞ்சம் ஊத்து” என சொன்னதும்

சிரித்தபடியே பரிமாறினாள் ராணி..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *