அவளுக்கும் ஒருத்தன்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,356 
 
 

இரண்டு விரல்களை வாயில் வைத்து வாயிலிருந்த வெற்றிலைச் சாற்றை விரலிடுக்கு வழியே ‘ த்தூ’ என்று அருகில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் துப்பினாள் தனம்….

சாக்கடைக்கு நடுவில் தானே அவளது குடித்தனமே…!!!!

முன்னால் குவிந்திருந்த எச்சில் பாத்திரங்களைப் பார்ப்பதற்கே மலைப்பாயிருந்தது..

முன்பெல்லாம் தனத்துக்கு இது ஒரு பொருட்டேயில்லை…
உட்கார்ந்தாளானால் மளமளவென்று பத்தே நிமிடத்தில் புதிய பாத்திரங்களைப் போல துலக்கி போட்டு விடுவாள்….

இப்போதோ உட்காருவதற்கே யோசனையாயிருக்கிறது..

இடுப்பு சொல்வதைக் கேட்க மாட்டேனென்கிறது..வலி உயிர் போகிறது….

இத்தனை பாத்திரங்கள் எங்கிருந்து வந்தது….?? சமைத்ததென்னவோ ஒரு கிலோ அரிசியும், காரக்குழம்பும் மட்டும்தான்… காய் கூட இல்லை…
எல்லாம் சாப்பிட்டுவிட்டு போட்ட தட்டுகள், டம்ளர் டவராக்கள்..

‘ஏழு கழுத வயசாகுது.. ஒத்த கரண்டி கழுவ துப்பில்லாத சன்மங்கள்….
‘ த்தூ’ “
மறுபடியும் துப்பிவிட்டு ‘ அம்மா…மாரியாத்தா…என்ன வாட்டி எடுக்காத தாயி”
என்று முனகிக் கொண்டே இடுப்பைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து பாத்திரங்களைத் துலக்க ஆரம்பித்தாள்….

விரல்களில் முன்போல் பிடிமானமில்லை…சீனிச்சட்டி கையிலியிருந்து நழுவியது… அவள் மனமும் தான்…நழுவி..நழுவி..அவளை எங்கேயோ இழுத்துச் சென்றது….

…………………………………………….

பதினாறு வயது தனம் அவள் கண்முன் வந்தாள்… அப்பாவின் செல்லப் பெண்.. அன்பும் பாசமும் கொட்டிக் கிடந்தது வீடு முழுவதும்…

மூக்கும் முழியும், கட்டான உடலும், கனிவான மொழியும்.. தனம் எல்லோருக்குமே பிடித்துப் போனாள்.

வயசுக்கு வந்தவுடனேயே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் அப்பா…

அம்மா விடுவாளா…???

ஒன்றுக்கு மூன்று முறை மாப்பிள்ளைகள்…
சுந்தர பாண்டி…மூத்த அத்தை பையன்.
மருதாச்சலம்.. இரண்டாவது அத்தை மகன்…
கோவாலு….மாமா முறை…

தனம் விரும்பியது சுந்தரபாண்டியை.ஆனால் தாலி கட்டியதென்னவோ கோவாலு..

கோவாலு ஒரு ரவுடி.. அடாவடி… குடிகாரன்.. வேலை வெட்டி இல்லாதவன்…ஷோக்கு பேர்வழி..

பின் எப்படி……????

எல்லாம் பணம் படுத்தும் பாடு ..

கோவாலு தனத்தின் அம்மா காந்திமதியின் கடைசி தம்பி…காந்திமதிக்கு பெறாத பிள்ளை .. ரொம்பவே செல்லமாக வளர்ந்துவிட்டான்….

காந்திமதியின் அப்பா செல்வாக்கானவர்….அவள் பிறந்த வீட்டு அதிகாரம் புகுந்த வீட்டிலும் ஆதிக்கம் செலுத்தியது…..

” மாப்ள…கோவாலுதான் தனத்துக்குன்னு நான் எப்பவோ முடிவு பண்ணிப்புட்டேன்….ஒத்த காசு செலவில்லாம ‘ கட்டுடா தாலியன்னா’ கட்டிப்புடுவான்…”

” மாமா…பிள்ளை வாழ்க்க விசயம்.. யோசிச்சு…..”

” என்ன யோசிக்க இருக்கு…இப்பவே சொர்ணம் இருவது பவுன் நக செஞ்சு வச்சிருக்கா…

‘ மருமக எப்பம் வரும்..
பூட்டி அழகு பாக்கலாமின்னுட்டு காத்திருக்கா… அந்த பஞ்சப் பரதேசிங்க வீட்டிலேயா பொண்ணெடுக்கப்போற.. உம் பொண்ணு வாழ்க்க முச்சூடும் கண்ண கசக்கிட்டு நிக்கணுமா…??”

ராமசாமிக்கு தனது அக்கா தங்கைகளை மாமனார் இளக்காரமாய் பேசியது அவமானமாயிருந்தது…

” மாமா..பணமில்லாட்டியும் சுந்தரபாண்டி மாதிரி ஒரு புருசன் கெடைக்க குடுத்து வச்சிருக்கணும் எம் பொண்ணு…இத்தோட இந்த பேச்ச விட்டுறதுதான் இரண்டு பேருக்கும் நல்லது….”

விருட்டென்று எழுந்து விட்டார் ராமசாமி..

மாமனாரும் மருமகனும் ஒரு வருசம் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தார்கள்….

காந்திமதி தாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டாள்…

” மனுசனுக்கு தனக்கா தெரியணும்.இல்லையினா சொல்பேச்சு கேக்கணும்.

லட்சுமி வீட்டு வாசல்ல நின்னு கதவத்தட்டினாலும் திறக்காத மனுசன இப்பத்தாம் பாக்குறேன்..பிள்ளைய பாழுங்கிணத்தில தள்ளணும்னு நினக்கிற அப்பனும் உண்டா…??”

எது பாழுங்கிணறு என்று அவருக்குத் தெரியாதா….???

” என்னடி பேசுற…?? உந்தம்பி உனக்கு உசத்தி..உங்கப்பாருக்கு உலக மகா உத்தமன்..ஆனா ஊர்ல போயி விசாரிச்சு பாரு…

ஒத்த பய ஒத்துக்கிடட்டும்…..

இன்னைக்கே பந்தக்கால் ஊனி, நாளைக்கு முகூர்த்தம்…..!!!”

அழுது ஆகாத்தியம் பண்ணி விட்டாள் காந்திமதி.. அரளி விதையை அரைத்து முழுங்கி விட்டு சாகக் கிடந்தாள்….

பாவம் தனம்…. வேறு வழியில்லாமல் கோவாலுவுக்கு கழுத்தை நீட்டினாள்…

சொர்ணம் சொன்னபடியே இருபது பவுன் போட்டு மருமகளை அழைத்துக் கொண்டாள்…

தனத்துக்கு கழுத்தும் மனமும் கனத்தது..

கோவாலுவுடனான வாழ்க்கை மூச்சு முட்டியது..

” அனுசரிச்சு போம்மா.. எல்லாம் நாளாக நாளாக சரியாகப் போகும்..”

கேட்டு கேட்டு தனத்துக்கு காதே புளித்து விட்டது…..

எதை அனுசரிப்பது….??

தினமும் குடித்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் வாசல் கதவைத் தட்டுவதையா….??

போதையில் வாயில் வந்த கெட்ட வார்த்தைகளால் குழந்தைகள் முன்னாலேயே அவளை அர்ச்சிப்பதையா….???

நேரம் காலம் தெரியாமல் பன்னிரண்டு மணி வரை போதை தெளியாமல் , படுக்கையில் புரண்டு கொண்டிருப்பதையா..??

” ஏண்டி… வெளியே போய்ட்டு வர்ர புருசனுக்கு வாய்க்கு ருசியாக கோழிக்குருமா, பிரியாணின்னு செஞ்சு போடாம ஒரு காரக்குழம்பும், கத்திரிக்கா பொரியலும் ..த்த்தூ. தட்டைத் தூக்கி எறிந்து விட்டு அவள் முகத்தில் காரில் துப்பிவிட்டு போவதையா…???

எது எப்படி போனாலும் ராத்திரி அவளை வலுக்கட்டாயமாய் படுக்கையில் பலாத்காரமாய் அனுபவிப்பதையா….??

இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை வயிற்றில் பிள்ளையைக் குடுத்து விட்டு மூன்று நாலு மாசம் கண்காணாமல் கண்ட பெண்களுடன் சகவாசம் வைத்துக் கொண்டு ஊர்திரிவதையா….??

எல்லாவற்றிற்கும் மேலாக அம்மாவிடம் மிரட்டி நூறு, இருநூறு என்று பணத்தை வாங்கிக் கொண்டு போய் சீட்டாடுவதையா….???

எதை அனுசரிப்பது….??
சொர்ணம் போட்டு அழகு பார்ப்பதாய் சொன்ன அத்தனை நகைகளும் சேட்டுக் கடையில்…

அன்றலர்ந்த பூப்போல புகுந்த வீட்டுக்குப் போன பெண் சருகாய் காய்ந்து கிடப்பதைக் காண சகிக்காமல் மனமுடைந்து இரண்டு பேரக்குழந்தைகளைக் கண்குளிரப் பார்த்துவிட்டு பரலோகம் போய்ச்சேர்ந்து விட்டார்கள் காந்திமதியும் ராமசாமியும்…

பாழுங்கிணத்தில் தள்ளியது தான்தான் என்ற குற்ற உணர்ச்சியே காந்திமதிக்கு எமனாக வந்து சேர்ந்தது…

…………………………………………….

பக்கெட்டில் தண்ணீர் காலியாயிருந்தது…
“ம்மா…’ இடுப்பைப் பிடித்துக்கொண்டு எழுந்து பக்கத்தில் இருந்த அடிபம்பில் தண்ணீர் பிடிக்கப் போனாள் தனம்…

” என்ன தனம்.. என்ன ரோசன..????பக்கெட்டி ரொம்பி தண்ணி வழியுது பாரு……”

அடிப்பதை நிறுத்திவிட்டு பக்கெட்டைத் தூக்கிக் கொண்டாள்…தூக்க முடியாத சுமையைக் தானே இத்தனை நாளும் தூக்கிக் கொண்டு திரிகிறாள்…

…………………………………………………

மாமனார் மறைவுக்குப் பின் சொர்ணத்தம்மா கிடப்பில் ஆனாள்..

ஒரு அறையில் படுத்தது படுத்தபடி…

நகைகள், தோட்டம், துரவு, வீடு அடக்கமாக எல்லாமே அடமானத்தில் இருந்து மூழ்கி விட்டது…

தனத்துக்கு மிஞ்சியது அசோக், பாலன், வளர்மதி, தேன் மொழி, கமலக்கண்ணன், குடிகாரப் புருசன், குடிசை வாழ்க்கை, இடுப்பு வலி……..

பிறந்த வீட்டில் செல்வாக்கோடு வளர்ந்து விட்டு புகுந்த வீட்டில் சீரழவதைப்போல துர்பாக்கியம் எந்த பெண்ணுக்கும் நேரக் கூடாது…

முதல் இரண்டு பிள்ளைப்பேறுக்கு அம்மா.. அப்பா.. எல்லாம் செய்து விட்டதால் தனத்துக்கு சிரமம் தெரியவில்லை….

அசோக் வயிற்றில் இருக்கும்போது தீடீரென்று முதன்முதலில் கண் மறைவானான் கோவாலு..

ஒரு வாரம்…இரண்டு வாரம்… ஒரு மாசம்.. ம்ஹும்..ஆள் போனவன் போனவன் தான்..

ஒரு நாள் ராமசாமியைப் பார்க்க முன்னாள் தோட்டத்தில் வேலை பார்த்த மருது வந்திருந்தான்..

” ஐயா.. ஒரு விவரம் கேள்விப்பட்டேனுங்க… எப்படி சொல்றதுன்னு ரொம்ப தயக்கமாயிருக்குது சாமி…..”

” ஏன் மருது…என்னோட அரும மருமவனப்பத்திதானே…!!”

” எப்படிங்க ஐயா கண்டு பிடிச்சீங்க….??”

” எல்லாம் அரசல் புரசலா காதில விழுகுதே..அந்த கண்ராவியப் பத்தி தனத்துக்கு தெரிய வேண்டாமுன்னுதான்…..”

கோவாலு வேறு ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவதாய் கேட்ட நாள் முதல் ராமசாமி தூக்கம் கெட்டது….

ஆனால் சரியாக அசோக் பிறப்பதற்கு ஒரு வாரம் முன்னால் வந்து சேர்ந்தான்..

தங்கத்தில் அரணாக்கொடி, கைக்கு தங்கக் காப்பு, காலுக்கு தண்டை….குழந்தைக்கு செய்ய வேண்டிய சீரை குறைவில்லாமல் செய்தார் தனத்தின் அப்பா…

ஒரு வருசம் சும்மாயிருந்தான்… ஆனால் நகைகள் எல்லாம் ஒவ்வொண்ணாய் காணமல் போனது.

கையில் காசிருக்கும் வரை ஆடிவிட்டு, பாலனை வயிற்றில் கொடுத்துவிட்டு மாயமானான்..

இது வாடிக்கையாய்ப் போனதால் இப்போது தனம் மனதைத் தேற்றிக் கொண்டாள்.

தன் தலையெழுத்தை நொந்து கொண்டு குழந்தைகளை வளர்ப்பதில் துக்கத்தை மறந்தாள்..

பெரியவர்கள் காலம் முடிந்ததும் கோவாலுக்கு குளிர் விட்டுப் போனது..

……………………………………………….

தனத்துக்கு அந்த நாளை நினைத்தால் இன்றைக்கும் ஈரக்குலையெல்லாம் நடுங்கும்…..

……………………………………………

இரவு மணி ஒன்றாகிவிட்டது.. அழுதழுது தூங்காமல் பாலைக் குடித்துவிட்டு அப்போதுதான் தூங்க ஆரம்பித்தாள் மூன்று மாத வளர்மதி பாப்பா…..

அவளைக் கொண்டு தூளியில் போட்டு இரண்டு ஆட்டு ஆட்டிவிட்டு பாலன் பக்கத்தில் படுத்தாள் தனம்… அசோக்கும் பாலனும் ஒன்பது மணிக்கே உறங்கிப் போயிருந்தார்கள்…

வழக்கம்போல கோவாலு காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது…

விட்டது கழுதை என்று தனமும் கவலைப் படுவதை நிறுத்திவிட்டாள்..
அப்போதுதான் கண்ணை மூடினாள்…

தடதடவென்று கதவு இடிக்கும் சத்தம்..

” யாரு.. இந்த வேள கெட்ட வேளயில..??”

தனம் எந்திருக்கும் முன்பே வாசலில் ஒரே சத்தம்..

” தெறடி கதவ..என்ன இருக்கியா…செத்துட்டயா..???”

கோவாலு என்று புரிந்து விட்டது..
ஒவ்வோரு தடவையும் வெளியே சுற்றி விட்டு வரும் அவனுக்கு கதவைத் திறக்கக் கூடாது என்று ஒரு மனம் சொன்னாலும்,

” தொலையுது.பிள்ளைங்களுக்கு அப்பன் வேணுமே….”
என்ற கரிசனத்தால் இன்னொரு மனம் கதவைத் திறக்கச் சொல்லும்…

திறந்தவள் திகைத்து நின்றாள்.. அவனுக்குப் பின்னால் நிழலாடியது..

” வா..சம்பா..இது ஓவ்வீடுதான். உள்ள வா…..”

” யாரு மாமா…இது என்ன வீடா..இல்ல கண்டவுங்க நொழையுற சத்திரமா…??

” யாருடி கணடவ..இவதாண்டி எம்பொண்டாட்டி…இங்கதான் இருக்கப்போறா..அவளோட குடித்தனம் பண்ண முடியும்னா இரு.. இல்லைனா பிள்ளைங்கள தூக்கிட்டு வெளிய நடடி..”

” கால எடுத்து உள்ள வச்சே இந்த தனம் யாருன்னு தெரியும்..போடி வெளியே….!!”

இதுவரை அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாத தனம் பெருங்குரலெடுத்து கத்தினாள்..

கூட்டம் கூடி விட்டது..

” டேய்.கோவாலு.. இத்தன நாளும் உன்னோட கூத்தெல்லாம் வெளியதான்னு நெனச்சு கிட்டு இருந்தோம் இப்ப கூத்தியாள வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வர்ர அளவுக்கு தெகிரியம் வந்திடிச்சா…??”

” டேய் மருவாதியா பொத்திகிட்டு போங்க..உம்பொண்டாட்டியவா இழுத்துகிட்டு வந்தேன்..நீ போடி உள்ள.. எவன் தடுக்கிறான்னு பாக்குறேன்…!!!”

ஒரே ரகளயாகி அடிதடி வரை போய்விட்டது….

என்ன நினைத்தாளோ அந்தப்பெண், ‘ த்த்தூ..’ என்று காறி உமிழ்ந்து விட்டு, ” மச்சான்..நா வரேன்’ ன்னு கூறிவிட்டு நகர்ந்தாள்..

” தனம்..இன்னோரு தபா உமபுருசன் வேலையக்காட்டினான்னு வைய்யு, உங்கூட நாங்கள் போலீசு டேசனுக்கு வர்றோம்…இவன பிடிச்சு லாக்கப்புல வச்சாத்தான் திருந்துவான்..

பட்டென்று கதவைச் சாத்தி தாள் போட்டவன் அவளை வெறி பிடித்தமாதிரி அடித்துவிட்டுத்தான் ஓய்ந்தான்….

……………………………………………..

தனத்துக்கு இப்போது நாற்பத்தைந்து வயது….

ஒரு வழியாக எல்லா குழந்தைகளையும் எழுப்பி, பள்ளிக் கூடத்துக்கு ரெடி பண்ணி, கொண்டுபோய் விட்டு விட்டு வந்து தையல் மிஷின் முன்னால் உட்கார்ந்தாள்….

தைக்க வேண்டிய துணிகள் முன்னால் குவிந்திருந்தது.

அது மலைப்பாகவே தோன்றவில்லை…

சோறு போடும் தெய்வத்தைத் தொட்டு கும்பிட்டுவிட்டு தைக்க ஆரம்பித்தாள்….

தையல் மிஷினின் சக்கரம் முன்னும் பின்னும் சுற்றுவது போல மனமும் முன்னும் பின்னும் அவளை இழுத்துச் சென்றது….
…………………………………………………

அந்த நிகழ்ச்சி நடந்த பின் கோவாலு கொஞ்சம் மாறியிருந்தான்..

” மாமா…போனதெல்லாம் மறந்திடு… நமக்கும் மூணு பிள்ளைங்களாச்சு… ஏதாவது உருப்படியா வேல செஞ்சு பொழைக்கப்பாரு… நாளைக்கு நடுத்தெருவுக்கு வர வச்சிடாத….”

ஏதோ நாலு காசு சம்பாதித்து குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது…

குழந்தைகளும் ‘ அப்பா..அப்பா..’ என்று பாசமாய் அவனைச் சுற்றி வந்ததைப் பார்த்து தனம் நிம்மதி பெருமூச்சு விட்டாள்….

தேன்மொழி பிறந்தாள்…. தனத்தின் மறு வார்ப்பாய்…..!!! குழந்தையைக் கீழேயே விடமாட்டான் கோவாலு….

ஆனால் வளர்மதிமயை மட்டும் ஆரம்பம் முதலே ஏனோ பிடிக்காமல் போனது…..

கோவாலுக்குள் சந்தேகப்பேய் புகுந்துவிட்டது….

” எவனுக்கு பெத்தியோ.. நானு இல்லாதப்போ எவனோட கூத்தடிச்சன்னு யாருக்கு தெரியும்..??”

மறுபடியும் சண்டை….. வாக்குவாதம்..

வேதாளம் முருங்கை மரத்தைத் தேடியது..

கொஞ்ச நாள் குடியை மறந்திருந்தவன் மீண்டும் போதையில்..

மறுபடியும் காணாமல் போனான்..

கமலக்கண்ணன் வயிற்றில்….ஆறு மாசம்…..

தனம் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்..

இனி அவனுக்கு கதவைத் திறப்பதில்லை என்ற உறுதியில் இருந்தாள்…

………………………………………………

ஒரு நாள்…..!!! அந்த நாள்….!!!!
அவள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நாள்… !!!!!அவளைப் புது மனுஷியாக்கிய நாள்…!!!! அவளுக்கு விடிவு காலம் பிறந்த நாள்…!!!!!…..

………………………………..

பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை விட்டு விட்டு வந்தவள் ஒரு நிமிடம் திகைத்து நின்றாள்..

கதவு இறுக மூடியிருந்தது…
வெறுமே தானே சாத்திவைத்து விட்டுப் போயிருந்தாள்..???

கலகலவென்ற சிரிப்பு சத்தம்…

உள்ளே யார்…???

கதவை பலமாய் தட்டினாள்…
சில நிமிடங்களில் கதவு திறந்தது.

கோவாலுதான்…கூடவே ஒரு பெண்…

சிறிய வயதுப் பெண்… வட்டமான குழந்தை முகம்…கருவண்டு கண்கள்…. குள்ளமான உருவம்… கழுத்தில் கருகமணி… முகத்தில் மிரட்சி..!!!!!

நிச்சயம் இந்த ஊர் பெண்ணல்ல…

” பாவா….பயங்கா உந்தி…..”

அவளை இறுக்கி அணைத்துக் கொண்ட கோவாலு….

” ஏய்..இவ சுந்தரவல்லி…. எம் பொண்டாட்டி…இனிமே இங்கதான் இருக்கப்போறா….உன்னால ஆனத பாத்துக்க…..”

அவளால் ஆனது என்னவென்று காட்டத்தானே போகிறாள்…

” வாம்மா சுந்தரவல்லி.!!!!! பிள்ளத்தாச்சி பொண்ணு..வேளா வேளக்கி சாப்பிடத் தாவல. பசியோட வந்திருக்காப்ல இருக்குதே….!!!

மாமா..இதோ ஒரே நிமிசம்.. கறியும் மீனும் ஆக்கிப்போட எம்புட்டு நேரம் ஆவப் போவுது…..சாப்பிட்டு புட்டு ரெஸ்ட் எடுங்க….”

கோவாலுக்கு நம்ப முடியவில்லை. தனமா இது…???

இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் உதறல்..

உள்ளே பாத்திரங்கள் உருளும் சத்தம்.. உண்மையாகவே சமைத்துக் கொண்டுதான் இருக்கிறாள்..

மீன் குழம்பு எட்டூருக்கு மணத்தது…

” மாமா.. எல்லாம் ரெடி.. கடைக்குப் போயி நாலு எல வாங்கிட்டு அப்பிடியே முக்கியமான விருந்தாளி ஒருத்தரையும் கூப்பிட்டு வரப்போறேன்….!!!”

” யாரு தனம் அந்த விருந்தாளி….??”

போலீசாக இருக்குமோ…???

கோவாலு வயிற்றில் புளியைக் கரைத்தது…

” எம்புருசன்தான்….!!!”

” என்னடி பெனாத்துற….???
கட்டின புருசன் நான் இங்க கல்லுகுண்டாட்டம் இருக்கையில …..எவண்டி அது…???”

” மாமா…நீதானே சொன்ன. நான் எவனுக்கோ பிள்ளையப் பெத்துகிட்டேன்னு…..

இப்ப சொல்றேன் கேளு…..நீ சந்தேகப்பட்டது சரிதான்.. நம்ப அஞ்சு பசங்கள்ள ஒண்ணு உன்னுதில்ல….எவனுக்கோதான் பெத்தேன்…!!!! அவன்தான் இன்னைக்கு நம்ப புது விருந்தாளி….

பக்கத்து தெருதான் மாமா…ஒரே ஓட்டமா ஓடியாந்திட மாட்டேன்…

மாமா..நீ சொல்ற ஐடியா கூட நல்லாத்தான் இருக்கு.. அவரும் நம்ம கூட இருக்கட்டும்…

நானும் உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்.. நீயும் என்ன என் வழிக்கு விட்ரு…!!!”

” தனம்.. உனக்கு மூள கலங்கிப் போச்சா…??”

” ஆமா..இத்தன நாளு கலங்கித்தான் போயிருந்திச்சு.இப்ப நல்லா தெளிஞ்சு போச்சு…

இதாண்டா சாக்குன்னு கொழந்தைங்க முன்னாடி நோண்டி நோண்டி ஏதாச்சும் கேட்டன்னு வைய்யு.. அப்புறம் என்னையும் குழந்தைகளையும் உயிரோட பாக்க மாட்ட..

நானு டேசன்ல ஏற்கனவே கம்ளெயின்டு குடுத்துட்டுத்தான் வந்திருக்கேன்… ஏதாச்சும் ஏடாகூடமா நடந்திச்சுன்னா நீதான் காரணம்னு…நீயே தீர்மானம் பண்ணிக்க…!!!!!

கதவை அறைந்து சாத்திவிட்டு தெருவில் இறங்கினாள்….

அவளுக்குத் தெரியும்.. திரும்பி வரும்போது நிச்சயம் அவர்கள் இருக்க மாட்டார்கள்..

ஊர்மேய்ந்துவிட்டு வந்தாலும் வீட்டில் கற்புக்கரசியாக மனைவி காத்திருக்க வேண்டுமென்ற ஆணவ மனப்பான்மை கொண்ட ஆடவர் கூட்டத்தைச் சேர்ந்த கோவாலு இனி நிச்சயமாக வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியாதா….??

தனது மானசீக புருசனுக்கு நன்றி சொன்னாள் தனம்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *