அவளா சொன்னாள்?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 10,711 
 

அவள் செல்லமாய்ச் சிணுங்கினாள்.

“என்ன இது நிச்சயதார்த்தம் முடிஞ்சு இரண்டு நாட்கூட ஆகவில்லை இவ்வளவு சீக்கிரம் நீங்க கிளம்பணுமா?” என்றாள்.

“உன் ஆதங்கம் எனக்குப் புரியுது சுபா, நான் என்ன செய்யட்டும் டூபாய் உத்தியோகம் என்றாலே இப்படித்தான்! எந்த நேரமும் வரச்சொல்லி அழைப்பு வரலாம், போனால் திரும்பிவர ஒரு வருடமோ அல்லது அதற்கும் மேலேயோ?”

“என்ன நீங்க? ‘டூபாய் மாப்பிள்ளை’ என்று நொடிக்கொரு தடவை எங்க வீட்டிலே சொல்லிக் காட்டிக் கொண்டே இருக்கிறாங்க, எனக்கு இதைக் கேட்க எரிச்சல் தான் வருது! என்னோட நிலைமையையும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன். நாங்க இன்னமும் நெருங்கிக் கூடப் பழகவில்லை, கொஞ்ச நாளாவது இருந்து என்னோட பழகினால் ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கலாம்தானே, அவசரமாய் திரும்பிப் போகணும் என்று பிடிவாதம் பிடித்தால் நான் என்ன செய்வதாம்”

அவள் கண்களில் ஆசையும் எதிர்பார்ப்பும் நிரம்பி வழிய அவனைப் பார்த்தாள்.

‘உன்னோட தவிப்பு எனக்குப் புரியுது! ஆனால் உத்தியோகம் தான் முக்கியம் என்று உனக்குத் தெரியும் தானே!

‘அதுக்காக அவசரமாய் போகணுமா?’

‘எனக்குப் புரியுது, எங்கே சாக்குப் போக்குச் சொல்லி ஆட்குறைப்புச் செய்து வீட்டிற்கு அனுப்பலாம் என்று எங்க கம்பனியில் காத்திருக்கிறாங்க. இப்படியான சூழ்நிலையில் நான் என்ன செய்ய முடியும்?’

அவளது ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அவன் பரிதவித்தான்.

‘உத்தியோகம் என்ன உத்தியோகம், நீங்க என்னோட இருப்பது போல வருமா?

‘உண்மையாவா?’

‘பின்னே, நீங்க எனக்கருகே இருக்கும்போது நான் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறேன் தெரியுமா?’

சொல்லும் போதே அவள் அழுதுவிடுவாள் போலவும், எங்கே அவளைத் தனியே தவிக்க விட்டுப் போய்விடுவானோ என்று ஏங்குவது போலவும் இருந்தது.

அவன் ஏதாவது சொல்லி அவளைச்; சமாதானப் படுத்த முயற்சி செய்தான்.

‘நீ மட்டுமென்ன நானும் தான் சுபா! உன்கூடவே இருக்கணும் என்று எனக்கு மட்டும் ஆசையில்லையா? அவசரப்படாமல் கொஞ்ச நாட்கழித்து என்னை கூப்பிட்டாங்கன்னா நல்லாயிருக்கும்! உன் கூடக் கொஞ்ச நாள் சேர்ந்திருக்கச் சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா?’

அவன் அவளைப் பிரியமுடியாமல் பிரிந்து வீட்டிற்குப் போனான். வழி எல்லாம் அவள் நினைவாகவே இருந்தது.

ஏதாவது காரணம் சொல்லி கொஞ்ச நாட்களாவது டூபாய்க்கு வேலைக்குப் போகாமல் அவளுடன் என்ஜோய் பண்ண சந்தர்ப்பம் கிடைத்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று ஆசைப்பட்டான்.

அவன் ஆசைப்பட்டது போலவே டூபாயில் இருந்து அவனுக்குக் கடிதமொன்று காத்திருந்தது. புதிதாக ஒப்பந்தம் ஒன்றும் செய்யாததால் ஆட்குறைப்புச் செய்வதாகவும், அவனைத் திரும்பவும் வேலைக்கு வரவேண்டாம் என்றும் டுபாயில் இருந்து அறிவித்திருந்தார்கள்.

“வேலை என்ன வேலை’ என்று சுபா சொன்னது அவனது நெஞ்சில் அலைமோத சந்தோஷமிகுதியால் அந்தச் செய்தியை அவளிடம் சொல்லக் கடிதத்தோடு அவள் வீட்டிற்கு மறுநாள்; சென்றான்.

“சுபா உனக்கொரு நல்ல செய்தி, டூபாயில் இருந்து கடிதம் வந்தது, வேலை ஒன்றும் தற்சமயம் இல்லையாம், அதனாலே திரும்ப வரவேண்டாம் என்று அறிவித்திருக்கிறாங்க, இப்போ உனக்குத் திருப்திதானே?

‘உண்மையாவா?’

‘ஆமாம் சுபா, நீ விரும்பிய மாதிரியே இனி பிரிவு என்ற சொல்லுக்கே இடமில்லை!’

அவன் அந்தக் கடிதத்தை அவளிடம் கொடுக்க அவள் பிரித்துப் பார்த்தாள்.

உன்னருகே நானிருந்தா…..?” என்று அவன் மகிழ்ச்சியில் ஹம்பண்ணி ஆரவாரித்தான்.

கடிதத்தை வாசித்த அவள் முகம் சட்டென்று வாடிப்போக, எழுந்து அறைக்குள் ஓடிப்போனாள்.

‘என்ன சுபா, என்னாச்சு?’

“அப்பா! கொஞ்சம் உள்ளே வர்றீங்களா?” என்று குரல் கொடுத்தாள்.

“என்னம்மா?” ஒன்றும் புரியாமல் சுபாவின் தகப்பன் எழுந்து உள்ளே போனார்.

“எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாமப்பா! டூபாய் வருமானத்தை நம்பி எப்படி எல்லாம் நான் கோட்டை கட்டி வெச்சிருந்தேன். எல்லாவற்றையும் ஒரு நொடியில் உடைச்சிட்டாரே, உத்தியோகம் இல்லாத ஒருவரைக் கட்டிக்கிட்டு காலம் எல்லாம் கஞ்சிக்குத் தவிக்க நான் தயாராயில்லை, எனக்கு இந்தக் கல்யாணத்தில் கொஞ்சமும் இஷ்டம் இல்லை என்று சொல்லிடுங்க அப்பா!’ என்றாள் சுபா.

Print Friendly, PDF & Email

நெகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

கற்பனைக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

1 thought on “அவளா சொன்னாள்?

  1. ஒருபக்கக் கதைத்கான கச்சிதமான கரு.
    சின்ன ட்விஸ்ட் வைத்து, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும், மனித குணத்தை இந்தச் சிறுகதையின்மூலம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளார்.
    வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *