அவர்களும் குழந்தைகளே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 7,719 
 
 

வேலூர் காந்தி நகரில் இருக்கும் தன் வீட்டு வாசலில், தன் ஒன்றரை வயது மகன் தேஜஸுடன் விளையாடிக் கொண்டிருந்தான் செந்தில். மழலைப்பேச்சில் மனம் உருகி, முகம் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது செந்திலுக்கு.

“இங்க பாரு தேஜஸ், அப்பா சொல்லு, அப்பா சொல்லு” என்று செந்தில் சொல்ல, அதற்கு அந்த குட்டிப்பாப்பா தேஜஸ், “வா, வா” என்று சொல்லிக்கொண்டிருந்தான். நடுநடுவில் அர்த்தம் புரியாத சில சொற்களும் கலந்து வந்துக்கொண்டிருந்தன.

வெகு நேரம் மன்றாடிக்கொண்டிருந்தான் செந்தில். அனாலும் அவன் எதிர்பார்த்த அப்பா என்ற அந்த ஒரு வார்த்தை மட்டும் வரவேயில்லை.

எப்படியாவது அவன் வாயிலிருந்து அப்பா என்ற வார்த்தையை வரவழைத்துவிட வேண்டுமென்று போராடிக்கொண்டிருந்தான். அவன் என்ன செய்வான் பாவம், ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் தன் குடும்பத்துடன் செலவிட முடிகிறது அவனால்.

செந்திலின் தந்தை மாதவனும், தாய் மீனாவும் அவனுடன்தான் இருந்து வருகின்றனர். மாதவனுக்கு எழுபது வயது ஆகிறது. மீனாவுக்கு அறுபத்தைந்து வயதாகிறது.

மாதவன் தன்னுடைய முப்பத்தி மூன்றாவது வயதில் ஆரம்பித்த இந்த ஜவுளி வியாபாரம், இன்று ஒரு ஜவுளி சாம்ராஜ்யம் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் மாதவனுடைய நேர்மையும், உழைப்பும் என்றாலும், கடந்த எட்டு வருடங்களாக இந்த சாம்ராஜ்யத்தை வழிநடத்தி, சிறப்பாக வளர்த்ததில் செந்திலுக்கும் பங்கு இருப்பதை மறுக்க முடியாது.

செந்திலின் மனைவி ரேவதி. வீட்டு வேலைகளை செய்ய பணியாட்கள் இருந்தாலும், எல்லாவற்றையும் சரிபார்த்து, தேஜஸையும் பாதுகாத்து, தன் மாமனார், மாமியாரையும் கவனித்து வருகிறாள். ஆனால் இந்த எதையுமே அவள் ஒரு பாரமாக நினைக்காமல், விருப்பத்தோடு செய்து வருவதால் குடும்பத்தில் எப்போதுமே அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் கடையை தன் மேனேஜரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது செந்திலின் வழக்கம். அந்த மாதிரிதான் இன்று தன் மகன் தேஜஸுடன் விளையாடிக் கொண்டிருந்தான் செந்தில்.

அரை மணி நேரமாக செந்தில் போராடிக்கொண்டிருந்தாலும், அப்பா என்ற வார்த்தையை மட்டும் தேஜஸ் சொல்லவேயில்லை. “என்னடா தேஜஸ், அப்பான்ற வார்த்தைய மட்டும் சரியா சொல்ல மாட்டேங்கிற? என்ன பண்ணா நீ சரியா பேசுவன்னு தெரியல” என்று தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தான் செந்தில்.

அப்போது மாதவன் அங்கு வந்து செந்திலிடம் “செந்தில், கிரீம் பிஸ்கெட் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு சாப்பிடணும்போல இருக்கு. நீ வெளிய போனா, கொஞ்சம் வாங்கிட்டு வர்றியாப்பா?” என்றார். அதற்கு செந்தில், “சரிப்பா, நான் வெளிய போயிட்டு வரும்போது வாங்கிட்டு வர்றேன்” என்றான்.

வயது முதிர்ச்சியின் காரணமாக மாதவனுக்கு செந்தில் என்ன சொன்னான் என்பது சரியாக கேட்கவில்லை. “என்ன செந்தில், இன்னிக்கு கொஞ்சம் கிரீம் பிஸ்கெட் வாங்கிட்டு வர்றியாப்பா? சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. ஆசையா இருக்கு” என்றார் மாதவன்.

“அதான் சொன்னேனே அப்பா, நான் வாங்கிட்டு வர்றேன்னு. சும்மா ஏன் அதையே திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கீங்க? கொஞ்ச நேரம் நான் என் பையனோட விளையாடும்போது தான் இந்த மாதிரி எல்லாம் உங்களுக்குத் தோணும்” என்று கோபத்துடன் உரத்த குரலில் சொன்னான். இதைக்கேட்ட மாதவனின் முகம் வாடியது.

மாதவன் வருத்தத்துடன் தன் அறைக்குள்ளே நுழையும்போது, அங்கு இருந்த மீனா அவரைப் பார்த்து, “இதுக்குத்தான் செவுட்டு மிஷின் வாங்கிக்கோங்கன்னு நான் அப்பவே சொன்னேங்க, நீங்கதான் அதப் போட்டா ஏதோ உடம்புல ஊனம் இருக்கற மாதிரி இருக்கும், வேணாம்னு சொல்லிட்டீங்க” என்று சொன்னார். அதற்கு மாதவனிடம் இருந்து வந்த பதில் வெறும் மௌனம்தான். மீனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார்.

சிறிது நேரத்தில் ரேவதி வீட்டு வாசலுக்கு வந்தாள். “என்னங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏதோ சத்தம் கேட்டுச்சே. என்னாச்சு? ஏன் கத்தினீங்க?” என்றாள். அதற்கு செந்தில், “எங்க அப்பாதான். கிரீம் பிஸ்கெட் வேணுமாம். அதையே திரும்ப திரும்ப சொல்லி கடுப்பேத்தறாரு” என்றான். குரலில் ஒரு கோபம் கலந்து இருப்பதை உணர முடிந்தது ரேவதியால்.

“இதுல என்னங்க தப்பு இருக்கு? எதனால கடுப்பேத்தறாருன்னு சொல்றீங்க?”

“ஒரு விஷயத்த இத்தன தடவை சொல்லணுமா? முதல் தடவை அவர் சொன்னப்போவே நான் சரின்னு சொல்லிட்டேன். திரும்ப திரும்ப அதையே சொல்லணுமா?”

“ஓ, அதான் கோபிச்சுக்கிட்டீங்களா?”

“ஆமாம், பின்ன கோபம் வராதா? எனக்கு என்ன காது செவுடா?”

“சரி, இப்போ தேஜஸ் கிட்ட எதையோ சொல்லி அலுத்துக்கிட்டு இருந்தீங்களே? என்ன அது?”

“அதை ஏன் கேக்கறே? அரை மணி நேரமா அவனோட போராடிக்கிட்டு இருக்கேன். அப்பான்னு மட்டும் சொல்லவே மாட்டேங்கிறான். அந்த வார்த்தையை விட்டுட்டு மத்த எல்லாத்தையும் உளறிட்டு இருக்கான்”. செந்திலின் குரல் சற்று சகஜ நிலைக்கு மாறியிருந்தது.

“தேஜஸ் கிட்ட பேசும்போது மட்டும் எப்படி இவ்ளோ பொறுமை வந்தது உங்களுக்கு?” என்ற ரேவதியின் கேள்விக்கு செந்திலிடம் பதில் இல்லை. தொடர்ந்து பேசினாள் ரேவதி.

“நீங்க தேஜஸ் கிட்ட பேசின மாதிரி தானே உங்க அப்பாவும் நீங்க குழந்தையா இருந்தப்போ பேசியிருப்பார்” என்றாள் ரேவதி. அதற்கு செந்தில், “ஆமாம், ஏன்னா அப்போ நான் சின்ன குழந்தை. எதுவும் சரியா புரியாது. அதனாலதான் திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருந்திருக்கும்” என்று தன் செயலை நியாயப்படுத்த முயற்சித்தான்.

“அதேமாதிரிதான் வயசான பெரியவங்களுக்கும் எல்லாமே உடனே புரிஞ்சிடாது, சரியா நடக்க முடியாது, பாக்க முடியாது, கேட்க முடியாது. ஏற்கனவே உங்க அப்பாவுக்கு காது சரியா கேட்க மாட்டேங்குது, பாவம். இது உங்களுக்கும் தெரியும். இந்த நேரத்துல நீங்க அவரோட நிலைமையை புரிஞ்சு நடந்துக்க வேணாமா? நம்மள விட்டா அவங்களுக்கு வேற யார் இருக்காங்க?”

தான் செய்த தவறு புரிந்தது செந்திலுக்கு. “ஆமா ரேவதி. நீ சொன்னது சரிதான். நான்தான் புரிஞ்சுக்காம தப்பு பண்ணிட்டேன். நான் போய் முதல்ல கிரீம் பிஸ்கெட் வாங்கிட்டு வர்றேன். நீ தேஜஸைப் பாத்துக்கோ” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்.

முதியவர்கள் உடம்பாலும், மனதாலும் குழந்தைகளே என்பது புரிந்தது செந்திலுக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *