கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 6,391 
 

அந்தக் குடிசையின் ஒரு மூலையில் கடுமையான காய்ச்சலில் மாரி நத்தையாய் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான். ஷக்ஷர வேகத்தில் வாய் மட்டும் எதை எதையோ உளரிக் கொண்டிருக்கிறது. கண்களைத் திறக்க முடியாமல் , முகத்தைக் கைகலால் மூடி, கால் வயிறு கஞ்சிக் குடிக்கக் கூட வழியில்லாமல் வக்கத்து நைந்துப் போன இந்த வாழ்க்கையைச் சபிப்பதா, இல்லை தன்னை இந்த கதிக்கு ஆளாக்கிய காலத்தை சபிப்பதா என்று தன் இயலாமையை நினைத்து தன்னையே வெறுத்துக் கொள்கிறான்.

யப்பா…யப்பா…. எழுந்திருப்பா…. இந்தா இந்த கஞ்சிய குடி …. எழுந்திருப்பா என்று அவனைத் தட்டி.. தட்டி.. எழுப்புகிறான் மாரியின் பையன். எழ முடியாமல் எழுந்து உட்கார்ந்த மாரி பள்ளிக் கூடம் போகத் தயாராக இருக்கும் தன் மகனைப் பார்க்கிறான். யப்பா… பரிட்சைக்குப் பணம் கட்ட இன்னிக்குத் தான் கடைசி நாள், கட்டலேன்னா பரிட்சையில் உட்கார வைக்க மாட்டாங்க, யாருகிட்டயாவது கடனா வாங்கிக் குடுப்பா.. என்று கெஞ்சுகிறான்.

பாவம் மாரி எங்குப் போய் கடன் வாங்குவான். வயித்துப் பசிக்கு அங்கும் இங்குமா அலைஞ்சி யார் யார்கிட்டயோ கெஞ்சிக் கூத்தாடி இன்னிக்கோ, நாளைக்கோ தறேன்னு சொல்லி அக்கம் பக்கத்துலே இருக்கிறவங்க கிட்ட அரிசியையோ, கேப்பையையோ கடனா வாங்கிக் கூழையோ, கஞ்சியோ காச்சி தன் வயித்துக்கு இல்லனாக் கூட பள்ளிக்கூடம் போற பையன் பசியா இருக்கக்கூடாதேன்னு கால் வயிறும் அரை வயிறுமா நெரப்பி காலத்த கடத்துறான். வானம் பார்த்த பூமியான அந்த ஊர்ல பருவ மழ தப்பிப் பேஞ்சதால பயிரெல்லாம் வெள்ளத்துல அடிச்சினு போயிடிச்சி, இப்ப கடுமையான கோடையால விவசாய பூமி எல்லாம் பாளம் பாளமா வெடிச்சி வறண்டு கெடக்கு, சொந்த பூமிய வச்சி வௌசாயம் பன்றவங்க ஏரி குளம் குட்ட கெணறு எல்லாம் வறண்டு போனதால வௌசாயம் பன்னமுடியாம நாட்டுல இருக்கிற சம்சாரிங்க எல்லாம் நகரத்துக்குப் போயி அங்கு கெடைக்கிற வேலயச் செய்து காலத்த,தள்றாங்க. இந்த அழகுல மாரிக்கு யாரு வேலகுடுப்பாங்க. பாவம் மாரி என்ற வெட்டியான் வெசனப் படுவதத் தவிற வேறு என்ன பண்ண முடியும்.

மூடிய இமைகளைத் திறக்க முடியாமல் மாரி சிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டான். இந்த ஊர்ல பொணம் விழுந்து ஒரு மாசத்துக்கு மேல ஆவுது, மேல வீதி தெருவில ஒரு பெரியவர் இப்பவோ, அப்பவொன்னு இஸ்த்துக்குனு இருந்தது.

எப்படியும் இந்த வாரத்துல போயிடும்னு நெனச்சினு இருந்தா… அந்த நெனப்பும் ய்யா போயிட்ச்சி. அந்த பெரியவரோட சின்னப் பையன் நல்லா படிச்சி அமெரிக்காவுல வேலயில இருக்கிறானாம். அவன் வந்து பெரியவர பட்டனத்துக்கு கூட்டினு போயி நெரைய பணத்த செலவழிச்சி வைத்தியம் பார்த்து கடைசியிலே பெரியவரோட உயிரு அங்கேயே போயிடிச்சாம். சொந்த ஊருக்கப் பொணத்த எடுத்துனு வந்தாலாவது குழி வெட்ட நம்பல கூப்புட்டு இருப்பாங்க, அதனால நம்ப பொழப்பும் கொஞ்சம் ஓடி இருக்கும், ஆனா பட்டனத்துல இருக்குற சுடு காட்டுல இப்ப எல்லாம் கரண்டுல பொணத்த எரிக்கிறாங்கலாம், ஐஞ்சி நிமிசத்துல வேல முடிஞ்சிடுமாம். அந்தப் பெரியவரையும் அப்படித்தான் பன்னாங்கலாம்.

ஊம்.. என்னப் பன்றது, ஒவ்வொரு நாளும் காலையிலே சாமியக் கும்பிடும்போது எல்லாரும் தாங்கள் செய்ர தொழில் நல்லா நடந்து தொழில் விருத்தி அடையனும்னு வேண்டிக்குவாங்க, நம்ப செய்யிற தொழிலோ வெட்டியான் தொழில், அதுக்காக கடவுளே நான் செய்யிற தொழில் நல்லா நடக்கனும்னு சாமிஸக்கிட்ட வேண்டிக்கவா முடியும், இந்த வெட்டியான் தொழிலால பொழப்பு நல்லா நடக்கனும்னு சாமியக்கூட மனம் திறந்து வேண்டிகக முடியலையே, என்ன பொழப்புடா சாமி இது என்று தன் தலை விதியை நொந்துக் கொண்டு, நம்ப பொழப்புத்தான் இப்படி நாரிப் போச்சி, நம்ப பையனின் தலை எழுத்தாவது நல்லா இருக்கட்டுமேன்னு நாலு எழுத்தப் படிக்க வச்சா, இப்போ பையனின் பரிட்சைக்குப் பணம் கட்ட முடியலையேடூ என்ன செய்வது என்ற யோசனையில் இருந்த மாரிக்குக் குடிசையின் மூலையில் சாத்தி வைக்கப் பட்டிருந்த கடப்பாரையும், மண்வெட்டியும், ஒரு பாண்டும் கண்ணில் பட்டது. வேறு வழி இல்லாததால் அவைகளை விற்றுத்தான் பையனின் பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, எழ மடியாமல் எழுந்து, டேய் நைனா, இப்ப நீ பள்ளிக் கூடம் போ, மத்தியானத்துக்கு நானே அந்தப் பள்ளிக்கூடத்துக்கு வந்து பணத்த குடுக்குறேன்…என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது,…..

மாரி…மாரி.. என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டு , எழுந்து தள்ளாடி நடக்க முடியாமல் நடந்து குடிசைக்கு வெளியே வந்து பார்க்கிறான். கீழ வீதி வெங்கடேசன் நின்றுக் கொண்டிருக்கிறான். மாரி உனக்கு வேல வந்துவந்திருக்கு, நம்ப கீழ வீதியில பரிமளா தெரியிமில்ல…. அதாம்ப்பா.. தயாளனின் பொண்டாட்டி மாசமா இருந்தது இல்லே, பாவம் பிரசவத்துக்கு நம்ப ஊரு மருத்துவச்சியால முடியாததால டவுனு ஆஸ்பத்திரிக்குக் கூட்டினு போற வழியிலே செத்து போயிடிச்சி. நீ காட்டுக்குப்போயி குழிய வெட்டித் தயாரா வை… இன்னும் மத்த காரியத்துக்கு நான் போயி ஏற்பாடு பன்னனும், சுடுகாட்டுல மேற்கு பக்கமா கெணத்துக்குப் பக்கத்துல சரியான அளவோட கச்சிதமா குழிய வெட்டி வை, கருவிலே ஒரு உயிறு செத்துப்போயி, தாயும் போன ரெட்ட உயிருங்க, காரியம் ரொம்ப பன்ன வேண்டியதால குழிய சீக்கிரமா வெட்டி வை… என்று சொல்லி திரும்பும் போது, அய்யா… என்று மாரி பலவீனக் குரலில் அழைக்க, திரும்பிப்பார்த்த வெங்கடேசன், இன்னா மாரி போய் வேலயப் பாரு, என்று கண்டிப்பான குரலில் விரட்டுகிறான். இல்லே… கொஞ்சம் துட்டு ஏதாவது குடுத்தீங்கன்னா.. என்று இழுக்கும் போது, இன்னாடா மாரி இது புதுப் பழக்கம். வேலைக்கு முன்னாடியே துட்டு கேக்கற பழக்கம்டூ கஞ்சி வேனுமுன்னா, எங்க வூட்டுக்குப் போ, பழயத போடுவாஞ்க, குடிச்சிட்டு வேலயப் போயி பாரு.. என்று சொல்லிக் கொண்டே தன் வேலையைப் பார்க்க வேகமாகப் போகிறான். சித்திரை மாதத்து வெயில் அனலாய்க் கொதிக்கிறது, நெருப்புக் குழம்பை உருக்கி ஊத்தின மாதிரி எங்கும் வெக்கை. அதுவும் பொட்டல் சுடு காட்டில் வெக்கை கொஞ்சம் அதிகமாகவே வீசி அனல் காற்றை வாரி வீசிக்கொண்டிருந்தது.

அந்த வெப்பச்சுஜ்ட்டில் மாரி கடப்பாரையால் ஓங்கி…ஓங்கி…குத்தி மண்ணையும் கல்லையும் புரட்டி வெளியே எடுத்துப் போடுகிறான். வெளியே இருக்கும் அனலை விட , ஷக்ஷரத்தால் அவன் உடம்பு கொதிக்கிறது. தன்னை இந்த கதிக்கு ஆளாக்கிய கடவுள் மீதோ இல்லை தன் தலை விதியின் மீதோ இருக்கும் கோபத்தால் மண் வெட்டியால் பூமியின் மீது ஓங்கி…ஓங்கி… வெட்டி மண்ணை வாரி வாரி குழிக்கு வெளியே வீசுகிறான். வியர்வைத் துளிகள் உடம்பில் இருந்து சொட்டுச் சொட்டாக மண்ணில் விழுகிறது. அளவுக் குச்சியை வைத்து குழியின் நீள அகலங்களை சரி பார்த்து மறுபடியும் கடப்பாரையால் மண்ணைக் கிளரி மண் வெட்டியால் மண்ணை வாரி வெளியே வீசுகிறான்.

உடலின் வெப்பத்தால் தொண்டை வரண்டு நாக்கு வற்றி அசதியில் துவண்ட மாரி, குழிக்கு மேலே சொம்பில் இருந்த கஞ்சித் தண்ணியை இரண்டு வாய் குடித்து, கைகள் இரண்டையும் தலைக்கு அண்டங் கொடுத்து அந்த சுடு காட்டு சுஜ்டு மண்ணில் உடல் அசதியில் அப்படியே சாய்கிறான். கண்கள் இருட்டிக் கொண்டு வர மெல்ல…மெல்ல அவனுக்கு நினைவுத் தப்புகிறது.

எவ்வளவு நேரம் தான் அந்தச் சுடுகாட்டு மண்ணில் மாரி விழுந்துக் கிடந்தானோடூ பரிட்சைக்குக் கட்ட பணம் வாங்க வந்த மாரியின் பையன் பதறித் துடித்து, முகத்தில் தண்ணி அடித்து எழுப்ப முயற்சிக்கிறான். வெட்டிய மரமாக மாரி துவண்டு சரிகிறான். அவன் உடல் அனலாய் கொதிக்கிறது, பதட்டத்துடன் பரிதவித்து செய்வதறியாதுஅவன் நிற்கும் போது, இன்னா தம்பி… குழிய வெட்டியாச்சா, நேரம் போவுது பார், இன்னா உங்கப்பன் குடிச்சிட்டு சாஞ்சிட்டானாடூ இதுக்குத் தான் வேலய முடிக்கிறதுக்கு முன்னாடி கூலிய குடுக்கறது இல்லே, அப்படியும் இவனுங்கலுக்கு எல்லாம் தண்ணி அடிக்க துட்டு எங்கிருந்து தான் கெடைக்குதோடூ அவனை இழுத்து அந்த செடிப் பக்கமா படுக்க வச்சிட்டு வெரவா போய் மீதி குழிய வெட்டு என்று விரட்டுகிறான் வெங்கடேசன். அய்யா நான் பள்ளிக்கூடம் போகனும், பரிட்சைக்குப் பணம் கட்டனும்….. என்று சொல்லி முடிப்பதற்குள், அத எல்லாம் அப்புரம் பார்க்கலாம், மொதல்ல குழிய வெட்டு, நீ எல்லாம் பள்ளிக் கூடம் போயிட்டா இந்த வெட்டியான் வேலய யாரு பாக்கறது, போய் வேலையப் பாரு என்று திருப்பிப் பார்க்காமல் வேகமாகப் போகிறான்.

விதியை நோவதாடூ, விதியால் வந்த வினையை நோவதாடூ பாவம் அந்தச் சின்னப் பையன், சீக்கிரமாக குழியைத் தோண்டிவிட்டு கிடைக்கும் பணத்தால் பரிட்சைக்கு பணம் கட்டலாம் என்ற எண்ணத்துடன் வேக வேகமாக மண்ணைக் கொத்தி வெளியே வீசுகிறான். அவன் எண்ணத்தைப் போலவே அவன் உடல் ஒரு இயந்திரமாக இயங்குகிறது, உடம்பில் இருந்து வழியும் வியர்வையை துடைத்தெரிந்து விட்டு புயலாய் இயங்குகிறான். குழி கச்சிதமாக அமைந்து விட்டது, குழியில் இருந்து எம்பி மேலே அவன் வருவதற்குள், பிணம் சுடுகாட்டு வாசலுக்கு வந்து விட்டது.

அரக்கப் பரக்க ஓடிய அவன், வாசலில் அரிச்சந்திரனுக்கு அர்ச்சனை செய்து விட்டு, பிணத்தைப் பாடையில் இருந்து பிரித்து, கடைசியாய் செய்ய வேண்டிய காரியங்களைக் கன கச்சிதமாய் செய்து, உறவினர்களை வாய்க்கரிசி போடவைத்து, பிணத்தைக் குழிக்குள் இறக்கி எல்லோரையும் கடைசி மண் போடவைத்து மேல் இருந்த மண்ணை உள்ளே தள்ளி குழியை மூடி மேடாக்கி, உடன் பால் என்று உரக்கக் கத்தி, பாடையில் இருந்த பூக்களை பிரித்து சமாதிக்கு போட்டு மூங்கில் கழிகளை ஓரமாய் வைத்துவிட்டுக் கூலிக்காக நிற்கிறான்.

இந்தாப்பா… உங்க அப்பன்கிட்ட பேசின கூலி என்று சில ரூபாய் நோட்டுக்களை கொடுக்கின்றனர். ரூபாய் நோட்டுக்களை அவன் கையில் வாங்கியவுடன் பரிட்சையில் இப்பொழுதே பாஸ் பன்னிவிட்டதைப் போன்று அவன் மனம் மகிழ்ச்சியால் துள்ளி குதிக்கிறது. ஓடிப்போய் மாரியை தட்டி எழுப்புகிறான். மாரி அசைவற்றுக் கிடக்கிறான். அவன் உடல் ஷில்லிட்டுப் போய், உயிரற்ற பிணமாகக் கிடக்கிறது. அந்தச் சுடுகாடே அதிரும் வண்ணம் அவன் கத்திய கத்தலைக் கேட்டு ஊருக்குள் போய்க் கொண்டிருந்த எல்லோரும் என்னவோ ஏதோ என்று ஓடிவந்து பார்க்கின்றனர்.

மாரி அந்த சுடு காட்டில் பிணமாகிப் போனான். எத்தனையோ பிணங்களை அடக்கம் செய்தவன், இதோ இன்று அவனே அடங்கிப் போனான். எத்தனையோ பிணங்களைச் சிதையில் அடுக்கி எரித்தவன் இதோ இங்கே பிடி சாம்பலாகிப் போனான். இதோ இந்த வெட்டியான் தொழில் நம்மோடு போகட்டும், நமக்குப் பிறகு நம் சந்ததி தினம் தினம் பொணங்களோடு செத்து செத்து மடிஞ்சி போகாம நல்லபடியா வாழவேண்டுமானால் நாலு எழுத்து படிச்சி இருக்கவேண்டும் என நினைத்து தன் மகனை படிக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற மாரியின் கனவு கருகிப் போனது. ஆம் மாரியின் பையன் ஒரு இளம் வெட்டியானாக அந்தச் சுடுகாட்டில் மண்ணோடும், சாம்பலோடும் தன் வாழ்க்கையைத் தொடங்குகிறான்.

அவனது குடிசையின் ஒரு மூலையில் சாத்தி வைத்திருந்த கடப்பாரை மண்வெட்டியோடு அவனின் புத்தகப் பையும் தொங்கிக் கொண்டிருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *