அவருக்கு என்ன ஆச்சு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2023
பார்வையிட்டோர்: 2,251 
 
 

ஆனந்திக்கு இருப்பு கொள்ளவில்லை. எழுந்து வீட்டிற்குள் அங்கும், இங்குமாக நடந்தாள்.

‘ஐந்து மணிக்கு வந்து விடுகிறேன். ரெடியாக இரு. சினிமாவுக்கு போகலாம்’ என்று சொல்லிவிட்டு வெளியில் சென்ற கணவன் ஆனந்தன், மணி ஆறு ஆகியும் இன்னும் வீடு திரும்பாமல் இருப்பது ஆத்திரத்தை வரவழைத்தாலும் ஒரு பக்கம்’ என்னமோ..?ஏதோ…?’ என்ற கவலையும் ஏற்படத்தான் செய்தது.

வெளிநாடுகளைப்போல் வீட்டுப்போனை சிறியதாக்கி பாக்கெட்டில் எடுத்துச்செல்வது போல் இங்கும் இருந்திருந்தால் இத்தனை டென்சனுக்கு வேலையில்லை என நினைத்துக்கொண்டாள்.

அப்போது ஒருவர் வந்து “ஆனந்தி என்பது இங்கே யார்…?” என்று கேட்க, “நான் தான் ஆனந்தி…. ஏன் கேட்கறீங்க…?” என்றாள் பயம் கலந்த அதிர்ச்சியுடன்.

“உங்க கணவர் ஆனந்தன்….”

“என் கணவர் தான் ஆனந்தன்…அவருக்கு என்ன ஆச்சு..?” பதறியபடி கேட்டாள்.

“ஒரு சின்ன விபத்து…”

“விபத்தா…? ஐயையோ ஆண்டவனே…இது என்ன சோதனை..? நேத்து தானே புதுசா ஸ்கூட்டர் வாங்கினார். ஆமாம், அவரு இப்ப எங்கே இருக்கார்? எப்படி இருக்கார்?” வார்த்தைகள் சரியாக வராமல் பிதற்றுவது போல் கேட்டாள்.

“ஸ்கூட்டர் அப்பளமா நொறுங்கியிருக்கிறதைப்பார்த்தா ஆள் முடிஞ்சிருக்கனம். உங்க தாலி வலுவா இருந்ததாலோ என்னவோ அப்படி ஏதும் நடக்கலை. காலில் மட்டும் தான் லேசான அடி. பக்கத்துல இருக்கிற தனியார் மருத்துவமனைல சேர்த்திருக்கோம். உடனே புறப்பட்டு வந்தீங்கன்னா மருத்துவ மனை வரைக்கும் என் வண்டில நானே கொண்டு போய் உங்களை விட்டுட்டு போறேன். என்னால முடிஞ்ச உதவி இவ்வளவு தான்” என்று வந்த நபர் கூற, உடனே வீட்டைக்கூட பூட்ட வேண்டும் என்பதை மறந்து, அந்த நபரின் ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்தாள் ஆனந்தி.

ஆனந்தன் வீட்டுக்கு வந்து பார்த்த போது ஆனந்தியை காணாமல் பதறிப்போனான்.

வீட்டைக்கூட பூட்டாமல் இரவு நேரத்தில் அவ்வளவு அவசரமாக எங்கே போயிருப்பாள்…?

யோசித்து பார்த்ததில் ஒன்றும் விளங்கவில்லை. பக்கத்து வீட்டில் கேட்ட போது யாரோ ஒரு ஆள் வந்து ஸ்கூட்டரில் அழைத்துச்சென்றதாக கூறினார்கள். ஜன்னலில் பார்த்ததால் நம்பர் தெரியவில்லை. ஸ்கூட்டரின் கலர் பச்சை என்று பதில் வந்தது.

‘அவசியமென்றாலும் ஓர் ஆணுடன் பகலிலேயே செல்லத்தயங்குபவள், அதுவும் இந்த இரவு நேரத்தில் எங்கே போயிருப்பாள்…?

ஒரு வேளை ஆனந்தி தனியாக இருப்பதையறிந்து யாராவது மை வைத்து, வசியம் பண்ணி அழைத்துச்சென்று விட்டார்களோ..?’ நினைக்கவே ஆனந்தனுக்கு பயமாக இருந்தது.

உடனே புறப்பட்டுச்சென்று தன் அலுவலக நண்பன் வீட்டிற்குச்சென்று அருணைச்சந்தித்து நடந்ததைக்கூறினான்.

“எனக்கு ஒரு ஆள் மேல சந்தேகமா இருக்கு. ஸ்கூட்டரோட கலர் பச்சைன்னு சொன்னதும் அந்த சந்தேகம் உறுதியாயிடுச்சு.” என்றான் அருண்.

“யார் அந்த ஆள்..?”

“பூபாலன்…”

“பூபாலனா…?”

“ஆமாம். அவனுக்குத்தான் உன் மேல ஒரு கண் இருந்துகிட்டிருக்கு.”

“ஏன்…?”

“பூபாலனுக்கு கிடைக்க வேண்டிய மேனேஜர் பதவி உனக்கு கிடைச்சிட்டதாக நேத்தைக்கு பியூன் செல்வத்து கிட்ட புலம்பிகிட்டிருந்தான்.

சாதாரணமா இருந்த உனக்கு அழகான மனைவி, கம்பெனி சார்புல வீடு, புது ஸ்கூட்டர்னு எல்லாம் இவ்வளவு குறுகிய காலத்துல அமைஞ்சது அவனுக்கு உன் மேல பொறாமைய உண்டு பண்ணியிருக்கு…அதனால…”

“அதனால…?”

“அதனால உனக்கு ஏதாவது ஒரு வகைல இடையூறு பண்ணி, உன் குடும்ப வாழ்க்கைய சிதைச்சு, உன் நிம்மதியக்கெடுக்கனம்னு உன் மனைவியை கடத்திட்டு போயிருப்பான்னு நினைக்கிறேன்…”

“சரி .அப்படியே நடந்திருந்தா இப்ப நான் என்ன பண்ணட்டும்…?” பதறியபடி கேட்டான் ஆனந்தன்.

“உடனே பூபாலன் வீட்டுக்கு போ. அவனோட சட்டைய புடிச்சு உலுக்கு. ஆனந்திய எங்கே அடைச்சு வச்சிருக்கே..? ன்னு கேளு…” என அருண் சொல்லி முடிப்பதற்க்குள் தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான் ஆனந்தன்.

தன் வீட்டிற்கு அதுவும் இரவு நேரத்தில் வந்த ஆனந்தனைக்கண்டு அதிர்ச்சியடைந்தான் பூபாலன்.

சிட்டவுட்டில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்து கொண்டு ஏதோ படித்துக்கொண்டிருந்த பூபாலனை அணுகிய ஆனந்தன், அவன் சட்டையைப்பிடித்து “டேய் துரோகி, என்னோட மனைவி ஆனந்திய எதுக்குடா கடத்தினே…?” என கோபமாக கேட்க, அவனது இறுக்கமான பிடியிலிருந்து சிரமப்பட்டு தன்னை விடுவித்துக்கொண்ட பூபாலன் ,”ஆனந்தா உனக்கு அறிவு மழுங்கிடுச்சா என்ன…? நான் எதுக்காக உன்னோட மனைவியக்கடத்தனம்..?” என கோபமாகக்கேட்டான்.

“உனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு எனக்கு கிடைத்து விட்டது என்ற பொறாமையால்….” என்றான்.

“ச்சீ…நிறுத்து. நான் அவ்வளவு அல்பமானவனா…? உனக்கு உயிர் நண்பன்னு சொல்லிகிட்டு திரியற அருண் இருக்கானே.‌‌.. அவன் உனக்கு எதிரா என்னை தூண்டி விட்டப்பக்கூட நான் மறுத்துட்டேன்” என்றான்.

“என்ன..? அருண் எனக்கெதிரா உன்னைத்தூண்டி விட்டானா..?”அதிர்ச்சியுடன் கேட்டான் ஆனந்தன்.

“ஆமாம். உன்னை ஆள் வைத்து கொன்று விடும்படி சொன்னான்.”

“ஆண்டவனே… என்ன இது நாடகம்…? இப்ப அருண்தானே என்னை இங்கே அனுப்பினான்…”

“அப்ப இதுல ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கு. உடனே புறப்படு அருண் வீட்டுக்கு. நானும் உன் கூட வாரேன்” என்ற பூபாலன் ஆனந்தனுடன் புறப்பட்டான்.

ஆனந்தனையும், பூபாலனையும் ஒன்றாகப்பார்த்த அருணின் உடல் லேசாக நடுங்கியது. பூபாலன் விரைந்து சென்று அருணின் சட்டையைப்பிடித்து உலுக்க உண்மையை ஒப்புக்கொண்டான்.

“பதவி உயர்வு பட்டியல்ல உங்க பெயருக்கு அடுத்தபடியா மூன்றாவதா என்னோட பேரு இருந்தது. உங்களுக்குள்ளே பகையை வளர்த்து விட்டா, ஒருத்தரை கொன்னுட்டு ஒருத்தர் ஜெயிலுக்கு போனா அந்த பதவி எனக்கு எளிதா கெடைக்குமேங்கிற நப்பாசைல தான் ஆனந்தனை கொல்லச்சொல்லி உனக்கு தூபம் போட்டேன். ஆனா நீ என் பேச்ச கேட்க மறுத்துட்டே. ஆனந்தனோட மனைவி ஆனந்திய கடத்தி அந்தப்பழிய உன் மேல போட்டா, ஆனந்தன் ஆத்திரத்துல உன்னைக்கொன்னு போட்டுட்டு ஜெயிலுக்கு போனாலாவது என்னோட திட்டம் நிறைவேறும்னு நினைச்சேன். அதுவும் நிறைவேறல. நாஞ்செஞ்ச இந்த இழிவான செயலுக்காக என்னை வெட்டிப்போட்டிடுங்க” என்ற அருண், அருகே கிடந்த அறிவாளை எடுத்து ஆனந்தன் கையில் கொடுத்த போது, “அவரை ஒன்னும் பண்ணிடாதீங்க. நீங்க அவரை தண்டிச்சா உடனே அரசாங்கம் உங்களைத்தண்டிக்கும்‌. அதனால நம்ம எதிர்காலம் நாசமாயிடும். ஆண்டவன் தண்டிப்பார். அதோட என்னை பொய் சொல்லி கடத்தி வந்து இந்த அறையில் அடைச்சு வச்சாரே தவிர, கெட்ட எண்ணத்தோட எங்கிட்ட நெருங்கி வரலை. அதுக்காகவாவது அவரை நீங்க மன்னிக்கனம்” என்றாள் பூபாலனால் அருண் வீட்டின் அறையின் கதவு திறக்கப்பட்டு வெளியே வந்த ஆனந்தி.

தொடர்ந்து பேசிய ஆனந்தி,

“இந்த சம்பவம் மூலம் நான் ஒரு விசயத்தை நல்லா புரிஞ்சிட்டேன். நமக்கு முன்,பின் அறிமுகமில்லாதவங்க வந்து எந்த ஆபத்தை சொல்லி அழைத்தாலும் தெரிஞ்சவங்க துணையில்லாம போகக்கூடாது.” என்றாள்.

தன்னுடைய இழிவான செயலை சர்வ சாதாரணமாக மன்னித்து விட்ட ஆனந்தன் மனைவி ஆனந்தியைப்பார்த்து கை கூப்பி நன்றி சொன்னான் அருண்.

(1.1.1999 மாலை முரசு இதழில் ‘பரிசு கதை’ பகுதியில் வெளியான எனது சிறுகதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *