பகல் ஒருமணி.
மயிலாப்பூர், சென்னை.
சேஷாத்திரி தன்னுடைய வீட்டில் மதிய உணவு சாப்பிடுவதற்கு முன், ப்ரிட்ஜைத் திறந்து ஜில்லென கிங் பிஷர் பீர் எடுத்து அதைப் பக்கவாட்டில் மெதுவாகச் சரித்து அதற்கான கண்ணாடிக் க்ளாசில் ஊற்றியபோது, யாரோ காலிங்பெல் அடித்தனர்.
சற்று எரிச்சலுடன் எழுந்து சென்று கதவைத் திறந்தார்.
அபார்ட்மென்டின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பத்ரி “உள்ளே வரலாமா?” என்றார்.
“அதான் வந்தாச்சே… வாங்கோ.” கதவைத் திறந்தார்.
பத்ரி உள்ளே வந்ததும் டைனிங் டேபிளின் மேல் நுரை விட்டுக் கொண்டிருந்த பீர் க்ளாசையும், அருகே இருந்த பீர் பாட்டிலையும் பார்த்து சற்று திகைத்தார்.
“நீங்க பீர் குடிப்பேளா?”
“ஓ பகலில் மட்டும் பீர்; சாயங்காலம் அனுதினமும் ஸ்காட்ச் விஸ்கி ரெண்டு பெக்…”
பத்ரி மிரண்டுபோய்ப் பார்த்தார்.
“உங்களுக்கும் கொஞ்சம் ஊத்தட்டுமா?” மரியாதை நிமித்தம் கேட்டார்.
“ஐயோ இந்தக் கண்றாவி எல்லாம் எனக்குப் பழக்கம் கிடையாது.”
“சரி, வந்த விஷயம் என்ன சொல்லுங்கோ?” புன்னகைத்தார்.
“நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்… உங்காத்துப் பிள்ளை முரளி நேத்திக்கி மத்யானம் பதை பதைக்கிற வெயில்ல நம்ம அபார்ட்மென்ட் மொட்டை மாடில வாட்டர் டேங்க் நிழல்ல நின்னுண்டு சிகரெட் பிடிக்கிறான்… நான் போர்வை உலர்த்துவதற்காக அங்க போனேன்… அப்ப அவனைப் பார்த்தேன்.”
“போர்வையை உலர்த்தவா இல்லை பொண்டாட்டி புடவையையா?” சிரித்தார்.
“உங்களுக்கு எல்லாமே விளையாட்டுதான்.. உங்க காதுல போட்டு வச்சேன். நீங்க கன்டினியூ பண்ணுங்கோ நான் வரேன்…”
பத்ரி கிளம்பிச் சென்றதும், கதவுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சேஷாத்ரி டைனிங் டேபிள் முன்பு அமர்ந்தார்.
ஜானகி “ஏன்னா, அவர் உடனே அபார்ட்மென்ட்ல எல்லா ப்ளாக்லையும் போய் நீங்க பீர் குடிப்பதை தண்டோரா போடப் போறார்…” என்றாள்.
“அதனால என்ன ஜானு? அது அவர் சுபாவம்… சில பேருக்கு அடுத்தவாளப் பத்தி வம்பு பேசினா அதுல ஒரு சந்தோஷம்… என் பணம்; என் வீடு; நான் குடிப்பேன்…”
மாலை ஆபீஸிலிருந்து வீட்டிற்கு முரளி வந்தான்.
“டேய் முரள், நீ இனிமே சிகரெட் பிடிச்சேன்னா நம்மாத்துலேயே ஒன் பெட்ரூமிலேயே பிடி.. வெயில்ல நிக்க வேண்டாம்… ஆனா அந்தப் பழக்கத்தை சீக்கிரம் விட்டுடுடா…”
“சரிப்பா. வரப்போறவ சொல்லி சிகரெட்டை நான் விட்டுட்டா, ‘நான் சொல்லி அவர் விட்டுட்டார்னு’ அவளுக்கு அது ஒரு சந்தோஷமா இருக்கட்டுமே…” பெரிதாகச் சிரித்தான்.
“திருட்டு ராஸ்கல்.”
இரண்டு வாரங்கள் சென்றன.
மறுபடியும் பத்ரி வீட்டிற்கு வந்தார்.
“சேஷ், நீங்க பையனை கண்டிச்சு வளர்ப்பதில்லையா?”
“ஏன், என்னாச்சு?”
“போன வாரம் முரளி அவனோட பெட்ரூம் ஜன்னல் வழியா ஜி ப்ளாக் வனிதாகிட்ட சைகை மூலமா பேசிப்பேசி சிரிச்சான். அதுவும் பல்லைக் காட்டிண்டு இவன்கிட்ட வழியறது. ஏ ப்ளாக்கில் இருக்கும் இவனிடம் ஜன்னல் வழியா என்ன வழிசல் வேண்டிகிடக்கு? அதுக்கு முந்தின வாரம் நம்ம அபார்ட்மென்ட் வெளியே இருக்கும் வீனஸ் பார் அண்ட் ரெஸ்டாரண்டுக்கு உள்ளே நாலஞ்சு ப்ரெண்ட்ஸ்கூட முரளி நுழையறதை நான் பார்த்தேன்… அவன் போற போக்கே சரியில்லை… வயசுப் பிள்ளை. கண்டிச்சு வளர்க்கலைன்னா நாளைக்கு நமக்குத்தான் கஷ்டம்…”
“அப்படியா, எப்பவும் நானும் அவனும்தான் சேர்ந்து பெக் போடுவோம்…அன்னிக்கி ஏதோ ப்ரெண்ட்ஸ்கூட போயிட்டான் போல.”
“என்ன இப்படிப் பேசறேள்…”
“பின்னே எப்படிப் பேசச் சொல்றேள்? இத பாருங்கோ, என்னைவிட அவன் கெட்டுப் போய்விட முடியாது என்கிற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கு… அவன் வயசுல நான் ஆடாத ஆட்டமா அவன் ஆடிடப் போறான்?”
“ஓ அப்படியா சங்கதி?” வந்த வேகத்திலேயே வெளியேறினார்.
முரளி ஒரே பையன். கொஞ்சம் ஜாலியான டைப். தப்பு ரைட்டு என்றெல்லாம் எதுவும் அவனுக்கு கிடையாது. ‘எதையும் ஒருமுறை’ என்பது அவன் கொள்கை… அவனுக்கு திருமணம் செய்துவைக்க ஜானகியும் சேஷாத்ரியும் தீவிரமாக ஜாதகப் பரிமாற்றம் செய்தனர்.
ஆறு மாதங்கள் கடந்தன.
பத்ரி பதட்டத்துடன் சேஷாத்ரி வீட்டினுள் நுழைந்தார்.
“நான் உங்க பையனை கண்டிச்சு வைங்கோ, கண்டிச்சு வைங்கோன்னு எத்தனை தடவை படிச்சு படிச்சு சொன்னேன். இப்ப பாத்தேளா, ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு இப்ப எல்லாமே குடி முழுகிப் போயிடுத்து…”
“முதல்ல உட்காருங்கோ… என்ன ஆச்சுன்னு பதட்டப் படாம நிதானமா சொல்லுங்கோ.”
“இன்னும் என்ன ஆகணும்? போன சனிக்கிழமை உங்காத்து முரளி, எங்காத்து கல்யாணியை கூட்டிண்டு போய் மஹாலிபுரம் ஹோட்டல்ல ராத் தங்கியிருக்கான்…”
“சரி, இப்ப என்ன அதுனால?”
“இப்ப என்னவா? ராத்திரி என்ன ரெண்டு பேரும் பைபிளா படிச்சிருப்பா?”
“…………………..”
“என் பொண்ண காதலித்து கெடுத்துப்புட்டான்… அடுத்த முகூர்த்தத்திலேயே ரெண்டு பேருக்கும் கல்யாணம் நாம பண்ணி வைக்கணும்..”
“அப்படியா? முரளி வரட்டும் கேக்கறேன். அவனுக்கு இதில் விருப்பம் இருந்தால் எங்களுக்கும் சந்தோஷம்தான்…”
“என்ன இவ்வளவு அலட்சியமா பேசறேள்? பெண்ணைப் பெத்தவன் நான்.”
“என்னைப் பொறுத்தவரை பெண் ஆண் எல்லாம் ஒன்றுதான்… கல்யாணம் என்பது அவாவா இஷ்டம்…. அவரவர் யோசித்து முடிவு எடுக்க வேண்டிய விஷயம்.”
“அப்ப என் பெண் கல்யாணிக்கு என்ன வழி?”
சேஷாத்திரி கடுப்பாகி குரலை உயர்த்தினார் , “யோவ் எந்தக் காலத்துல நீர் இருக்கீர்? அவர்கள் ரெண்டு பேரும் ஒரு புதிய அனுபவத் தேடலுக்காக மஹாபலிபுரம் போய்த் தங்கியிருக்கலாம். நீர் கல்யாணம் கில்யாணம் என்று அதுகளை கம்பெல் பண்ணாதீரும்..”
பத்ரி கொதித்துப் போனார்.
அப்போது முரளி வீட்டினுள் நுழைந்தான். பத்ரி அவனிடம் கோபத்துடன் “மிஸ்டர் முரளி நீங்க என் பெண்ணுடன் போன சனிக்கிழமை மஹாபலிபுரம் ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கியிருக்கீங்க. உண்டா இல்லையா?”
“எஸ் அங்கிள்… சண்டே ரெண்டு பேருக்குமே ஹாலிடே அதனால சனிக்கிழமை போய்த் தங்கினோம்.”
“பாருங்க சேஷ் இப்ப உண்மை வெளிவருது.”
“சரி இப்ப அதுனால என்ன ஆச்சு அங்கிள்?”
“என்ன ஆச்சா? அவளுடன் ராத் தங்கி அவளை நீ கெடுத்துட்ட… நீதான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்.”
“திஸ் இஸ் ஸ்டுப்பிடிட்டி ரொம்ப நாளாகவே நாங்க ரெண்டு பேரும் செக்ஸ் வச்சுக்க ஆசைப் பட்டோம்… அதை அன்று நிறைவேற்றிக் கொண்டோம். தட்ஸ் ஆல். ஹானஸ்ட்லி ரெண்டு பேருமே கல்யாணத்தைப் பத்தி எதுவுமே பேசவில்லை அங்கிள்…”
அப்போது பக்கத்து வீட்டிலிருந்து புயலென கல்யாணி உள்ளே வந்தாள்.
“அப்பா ப்ளீஸ், எல்லாத்தையும் நான் கேட்டுண்டுதான் இருந்தேன்…இப்ப பெரிசா என்ன ஆயிடுத்து? நாங்க ரெண்டு பேரும் ஒரு புரிதலுடன்தான் எல்லாம் செய்தோம். இதுல கல்யாணம் எங்கே வந்தது அப்பா? ப்ளீஸ் மொதல்ல நீங்க வீட்டுக்கு வாங்க.”
அப்பாவை அங்கிருந்து இழுத்துச் சென்றாள்.
கெட்டழியும் போக்கு. வெஸ்டர்ன் கல்வியின் விளைவு.
புதிய சிந்தனை. தேவை புரட்சி. பாராட்டுக்கள். லென்ஸ்